Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கசையடி - 01 3

அதிரைநிருபர் பதிப்பகம் | January 18, 2016 | , , ,

சையடி தண்டனை அறிவிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்கள். ஒரே நாளில் தொடர்ந்து அடித்தால் உடலின் சதை பிய்ந்து போய்விடும் என்ற காரணத்தால், ஒவ்வொரு நாளும் முறைவைத்து அடித்தார்கள். அதனால் ஏற்பட்ட

வலியையும் வேதனையையும் அவர் தாங்கிக்கொண்டாரே தவிர, அவர்களுக்கு இணங்குவதாய் இல்லை.

ஹிஜ்ரீ 130 ஆம் ஆண்டு. அது உமய்யாக்களின் ஆட்சிக் காலம். மர்வான் என்பவர் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார். ஈராக் நாட்டில் அவருடைய ஆளுநராக இருந்தார் யஸீத் இப்னு உமர் இப்னு ஹுபைரா. அப்போது அரசுக்கு எதிரான அதிருப்தி கடுமையாக இருந்தது. அப்பாஸி புரட்சிக்காரர்களின் கிளர்ச்சி ஈராக், குரஸான், பாரசீகப் பகுதிகளில் அதிகமாகப் பரவியிருந்தது. பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி பரவி அது புரட்சியாளர்களுக்கு ஆதரவாய் மாறிவிடுமோ என்ற அச்சத்தில் புரட்சியைத் தடுக்கவும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை அரசுக்குச் சாதகமாகத் தக்க வைத்துக் கொள்ளவும் இப்னு ஹுபைரா ஒரு திட்டம் வகுத்தார்.

ஈராக்கில் உள்ள மார்க்க அறிஞர்களையெல்லாம் வரச் சொல்லுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். உடனடியாக அவரது அரண்மனை வாசலில் ஞானவான்கள் குவிந்தனர். அவர்களுள் இப்னு அபீலைலா, இப்னு ஷிப்ரமா, தாவூத் இப்னு அபீஹிந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் இருந்தனர்.

இன்றிலிருந்து உங்களுக்கு இன்னின்ன பதவிகள் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசில் உயர்ந்த பதவிகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்டது என்று சொல்வதைவிட திணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்போதைய அரசியல் கொந்தளிப்பையும் ஆளுநர் இப்னு ஹுபைராவின் உள் நோக்கத்தையும் அந்த அறிஞர்கள் அறிந்திருந்தாலும் ‘வேறு வழியே இல்லை, நிர்ப்பந்தம்’ என்ற அடிப்படையில் அவர்கள் அந்தப் பதவிகளை ஏற்றுக்கொண்டார்கள்.

பிறகு, புகழ்பெற்ற முக்கிய அறிஞர் எனக் கருதப்பட்டவரை வரச்சொல்லி உத்தரவு சென்றது. அவரும் வந்தார். மக்கள் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையையும் வைத்திருந்தனர். அவரது மார்க்கத் தீர்ப்புகளை மக்கள் செவிசாய்த்து, மனமுவந்து ஏற்றுக்கொண்டிருந்தனர். அவரது ஞானத்தின் வீச்சு பாரெங்கும் பரந்து விரிந்திருந்தது. அவரிடம் அரசு முத்திரையை அளிப்பதற்குத் திட்டமிட்டிருந்தார் ஆளுநர். அதற்கும் காரணம் இருந்தது.

அரசு பிறப்பிக்கும் ஆணைகளை அந்த அறிஞர் முத்திரையிட்டு அளித்துவிட்டால் போதும். தீர்ந்தது பிரச்சினை. அதனை யாரும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்டு அவரை மடக்க ஒருவருக்கும் துணிவிருக்காது. அரசு தன் இஷ்டத்திற்கு பிறப்பிக்கும் ஆணைகளை மார்க்க அடிப்படையில் தர்க்க ரீதியாக எதிர்க்கக் கூடிய வல்லவர் ஒருவர் உண்டென்றால் அது அவர்தாம். அவரே நீதித்துறையில் ஓர் அங்கமாய் ஆகி, அரசின் ஆணைகளை அவரே தம் கைப்பட எழுதி ஒப்புதல் அளித்துவிட்டால் எதிர்ப்புக்கு ஏது வழி? ஒரு கல்லில் பல மாங்காய்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் செயல்பாடுகளை, மார்க்க அறிஞர் என்ற நிலையில் அந்த அறிஞரேகூட கேள்வி கேட்க முடியாது.

வருகை தந்த மார்க்க அறிஞரிடம், தாம் அவருக்கு அளிக்க இருக்கும் அரசுப் பொறுப்பைக் குறித்து விளக்கினார் இப்னு ஹுபைரா. தன்னைத் தேடி வந்த அந்த அரசுப் பதவியை, அந்தஸ்தை அப்பட்டமாய் நிராகரித்தார் அவர். அவர் நிராகரிக்கின்றார் என்பதால் ஏற்பட்ட கோபத்தைவிட, தம்முடைய உள்நோக்கமும் திட்டமும் நிறைவேறாது போகுமே என்ற கோபத்தில் ஆணையிட்டு உரைத்தார் இப்னுஹுபைரா, ‘நீர் இப்பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உமக்குக் கசையடி வழங்கப்படும்!’

அங்கு குழுமியிருந்த இதர அறிஞர் பெருமக்கள் அவரிடம் சென்று, “அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறோம், உம்மை நீரே அழித்துக்கொள்ளாதீர். நாங்கள் உம்முடைய சகோதரர்கள். அவர்களுடைய விருப்பம் நிறைவேற எங்களை வற்புறுத்தி இணங்க வைத்துள்ளார்கள். இதைத் தவிர்க்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே, நீரும் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்” என வேண்டிக் கொண்டனர்.

அதற்கு அவர், “அவருடைய விருப்பத்திற்காக பெரிய பள்ளிவாசலின் கதவுகளைச் செப்பனிடச் சொன்னால்கூட நான் இணங்க மாட்டேன். ஒருவருடைய தலையைக் கொய்யும்படி நான் எழுதி அதற்கு அரசு முத்திரையிட வேண்டும் என்றால், நான் ஏற்றுக் கொள்வேனா? அல்லாஹ்வின்மீது ஆணையாக, நான் இவ்விஷயத்தில் உடன்பட மாட்டேன்” என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்துவிட்டார்.

“உங்களுடைய தோழரைத் தனியே விடுங்கள். அவர் சொல்வதே சரி; மற்றவர்கள்தாம் தவறாய்ச் சொல்கிறீர்கள்” என்றார் இப்னு அபீலைலா. அந்த மார்க்க அறிஞருக்கு சிறைத் தண்டனையும் கசையடியும் வழங்கப்படும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடித்தார்கள். ஒரே நாளில் தொடர்ந்து அடித்தால் அவரது உடலின் சதை பிய்ந்துபோய்விடும் என்பதால், ஒவ்வொரு நாளும் முறை வைத்து அடித்தார்கள். வலியையும் வேதனையையும் அவர் தாங்கிக் கொண்டாரே தவிர, அவர்களுக்கு இணங்குவதாய் இல்லை.

சவுக்கை வீசியவனுக்கே அலுத்துப் போனது. இப்னு ஹுபைராவிடம் சென்று, “அந்த மனிதர் இறந்து விடுவார் போலிருக்கிறது” என்றான்.

அதற்கு இப்னு ஹுபைரா, “அவரிடம் சொல்லுங்கள்! நம்மிடம் பொய்யுரைப்பவர்களை நாம் நாடு கடத்துவோம் என்று!” எனச் சொல்லி அனுப்பினார். ஏதாவது பொய் சொல்லியாவது அவர் நாடு தாண்டிப் போகட்டும் என்று நினைத்திருப்பார் போலும். அதற்கும் அந்த மார்க்க அறிஞர், “பள்ளிவாசலின் கதவுகளை செப்பனிடச் சொன்னால்கூட நான் அவருக்காகச் செய்ய மாட்டேன்” என்று அலுக்காமல் அதே பதிலைச் சொன்னார்.

மீண்டும் இப்னு ஹுபைராவிடம் வந்த அந்தக் காவலாளி விஷயத்தைக் கூற, இப்னு ஹுபைரா, “இந்த மனிதருக்கு உண்மையான ஆலோசகர்கள் யாருமில்லையா? அவரிடம் எடுத்துச் சொல்லி, எனது தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரினால் நாம் அதை அனுமதிப்போமே” என்றார். அடிமேல் அடித்தும் அவர் இம்மியும் நகரவில்லை. இப்போது அவரை விடுதலை செய்யத்தான் இப்னு ஹுபைராவுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அச்செய்தியும் அம்மார்க்க அறிஞரிடம் தெரிவிக்கப்பட்டது. “நான் என் சகோதரர்களிடம் ஆலோசிக்கிறேன்” என்றார் அவர்.

அதன்பிறகு இப்னு ஹுபைரா அவரை விடுவிக்க, மக்காவுக்குச் சென்று குடியேறினார் அவர்.

அரசுக்கு எதிரான கிளர்ச்சியோ நாளுக்கு நாள் உக்கிரமடைந்து ஒருவாறாக உமய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்து, அப்பாஸிய கிலாஃபத் ஏற்பட்டு அல்-மன்ஸுர் ஆட்சி செலுத்தியபோதுதான், ஹிஜ்ரீ 136ஆம் ஆண்டு, அவர் மீண்டும் கூஃபாவுக்குத் திரும்பினார். வேறு சில குறிப்புகள், தண்டனையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது தலை வீங்கி, மூச்சு விடுவதே சிரமமாக ஆகிவிட்டபோதும் அவர் தம்முடைய உறுதியைக் கைவிடவில்லை எனத் தெரிவிக்கின்றன. ஆனால், அவரது நிலையைக் கேள்விப்பட்டு அவருடைய தாயார் கடும் வேதனையில் இருக்கிறார் என்ற செய்தி அவருக்கு எட்டியபோதுதான், தம் தாயின் மீதிருந்த பாசத்தால் தாயை நினைத்து அழுதிருக்கிறார், கவலைப்பட்டிருக்கிறார்.

ஓர் அரசு தம் கட்டுப்பாட்டுக்குள் அவரை வளைத்துப்போட நினைத்தும் ‘அடித்தாலும் சரி; கொன்றாலும் சரி, இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை செய்யச் சொல்லும் உங்களின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மாட்டேன்' என உறுதியாக நிலைத்து நின்றார் அந்த மார்க்க அறிஞர். அந்த மார்க்க மேதை வேறு யாருமல்லர். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள்தாம்.

மக்காவுக்குச் சென்றவர், பிறகு அப்பாஸிய கிலாஃபத்தின்போது திரும்பினார் அல்லவா? சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற வேட்கை ஒரு முக்கியக் காரணம். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்கள் என்ற முறையில் அப்பாஸிய ஆட்சியின் மீது இமாம் அபூஹனீஃபாவுக்குப் பாசமும் நேசமும் இருந்திருக்கிறது. அந்த வகையில் அதுவும் அவர் கூஃபாவுக்குத் திரும்ப மற்றொரு காரணமாகும்.

ஆனால், அவருடைய ஆழ்ந்த இஸ்லாமிய ஞானத்தின் விளைவாய், பிற்காலத்தில் அந்த அப்பாஸிய கிலாஃபத்துடனும் பிணக்கு ஏற்பட்டு, அது அவர்களிடமும் கசையடி தண்டனை பெறுவதில் முடிந்திருக்கிறது என்பது அவரது வரலாற்றில் நிகழ்ந்த வியப்பான நிகழ்வு.

(தொடரும்)

நூருத்தீன்
 Darul Islam Family
சமரசம் பத்திரிகையில் நவம்பர் 16-30, 2015 இதழில் வெளியானது

3 Responses So Far:

N. Fath huddeen said...

அநீதிக்கு விலைப் போகாத அறிஞர்கள்.
நமது சலபுகள்.
இன்றைய இஸ்லாமிய தலைவர்கள் என்று சொல்பவர்கள் பாடம் படிக்க வேண்டிய வரலாறு.
இஸ்லாத்திற்காக தன் வாழ்வையே தியாகம் செய்தவர்கள் அவர்கள். இவர்களுக்கு முன் நாம் எங்கே?

sabeer.abushahruk said...

இன்றைய இஸ்லாமிய தலைவர்கள் என்று சொல்பவர்கள் பாடம் படிக்க வேண்டிய வரலாறு.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அநீதிக்கு விலைப் போகாத அறிஞர்கள்.
நமது சலபுகள்.
இன்றைய இஸ்லாமிய தலைவர்கள் என்று சொல்பவர்கள் பாடம் படிக்க வேண்டிய வரலாறு.
இஸ்லாத்திற்காக தன் வாழ்வையே தியாகம் செய்தவர்கள் அவர்கள். இவர்களுக்கு முன் நாம் எங்கே?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு