இறைநம்பிக்கையுடன் இருப்போர் எவருக்கும் எவரையும் அனாதைகளாகக் காணும் அடைபட்ட மனநிலை இருக்காது. இந்த அழகிய கருணை மனத்தின் கண்கொண்டு அடையாறு பாலத்தின் அருகிலும் மறைமலையார் பாலத்தின் தூண்களுக்கிடையேயும் கடலூரின் விசூரிலும் வீராணம் கரைகளிலும் இன்னும் எஞ்சிக் கிடக்கும் குப்பைக்காடுகளுக்கிடையேயும் ஆற்றுப் படுகை மேடுகளுக்கிடையும் தேடிப்பார்த்தால் உடல் கருத்து, உடைகள் கசங்கி, கண்ணீரின் கரைகள் காயாத கன்னங்களோடும், ஒட்டிய வயிற்றோடும் ஓராயிரம் நடமாடக்கூட இயலாமல் நகர்ந்து கொண்டிருக்கும் உயிர்களைக் காண முடியும். அவர்களில் ஆண்களும் இருப்பார்; பெண்களும் இருப்பர். குறிப்பாக இருபால் சிறார்களும் இருப்பார்கள்.
அவர்கள்தான் இயற்கைப் பேரிடரில் அன்னை தந்தையை பறிகொடுத்தவர்கள். உற்றார் உறவினர் இருந்தும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அறியாத அபலைகள். அரவணைக்க ஆட்கள் இல்லாமல் உலகப்பல்கலைக்கழகம் தரும் , அனாதைகள் என்ற பட்டத்தை சுமந்து நிற்கும் பரிதாபத்துக்குரியவர்கள். தங்களின் சாதி எது? மதம் எது? இனம் எது ? என்று அறியாத இளம் பிஞ்சுகள் இவர்களில் அதிகம்.
எச்சில் இலையில் என் வயிறு நிறைகின்றது
காலத்தின் தாலாட்டில் என் கவலை கரைகின்றது
உறவுகள் யாருமில்லை உரிமைகொண்டாட!
உள்ளத்தில் யாருமில்லை நானும் கொண்டாட!.
உலகத்தில் யாரும் அநாதை இல்லை
இரு உயிர்கள் இல்லாமல் எவரும் இல்லை!
என்று ஒரு கவிதைக் குறிப்பு அனாதைகளின் உள்ளத்தின் ஓலங்களைச் சொல்கிறது.
அரசின் சார்பாக இன்னும் அரைகுறையாகவே தரப்படும் இழப்புக் கணக்குகள் கூட வெள்ளச் சேதக் களத்தில் பலர் அனாதைகளாக்கப்பட்ட கதைகளைச் காட்டுகின்றன. வாலிப வயது நிரம்பிய பலரும் தங்களின் தாயையோ தந்தையையோ அல்லது இருவரையும் சேர்த்தோ இழந்து இருக்கிறார்கள். வயதுக்கு வந்தவர்கள் அனாதைகளாக விடப்பட்டிருந்தால் அவர்களால் கூட தங்களால் சமாளித்து வாழ்ந்து கொள்ள இயலும். ஆனால் ஐந்து வயது ஆறு வயது கூட நிரம்பாத பல குழந்தைகள் இந்த வெள்ளத்தால் அனாதைகளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே நமது அனைவரின் முன்னால் இருக்கும் கேள்வி.
பெற்றால்தான் பிள்ளையா? நமது சமுதாயத்தில் பிள்ளைகள் இல்லாதவர்கள் ஒரு கணிசமான அளவுக்கு இருக்கவே செய்கிறார்கள். சுனாமி ஏற்பட்டபோது இவ்வாறு பல அனாதைக் குழந்தைகளை நாம் அரவணைத்த வரலாறும் நமக்கு இருக்கிறது. இன்றைக்கு அநாதரவாக விடப்பட்டு இருக்கிற எதிர்காலத்துக்கு எதுதான் வழி என்று தெரியாத குழந்தைகளையும் நாம் தேடித்தேடிப்பார்த்து ஆதரிக்க சமுதாயம் தயாராக வேண்டும்; அத்தகையோரைத் தேடிக் கொண்டுவது சேர்ப்பதற்கு அழைப்பாளர்கள் களம் இறங்க வேண்டும். ..
குழந்தைகளைத் தத்து எடுத்தல் என்ற முறையில் நமது குடும்பத்துடன் கூடவே வைத்து வளர்ப்புப் பிள்ளைகளாக வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று நாம் அறிவோம். அதே நேரம் அவ்வாறு தத்து எடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் நாமே பெற்று வளர்க்கும் பிள்ளைகளுக்கு மார்க்க சட்டத்தின்படியான வாரிசுரிமை அடிப்படையில் சமம் ஆகமாட்டார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
நாம் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவென்றால் ஒரு பகல் நேர சோற்றுக்கு எச்சில் இலைகளைத் தேடிப்பார்த்துக் கொண்டு நாய்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் ஏனென்று கேட்க ஆள் இல்லாத அனாதைக் குழந்தைகளை அவர்களுக்குரிய சட்டபூர்வ முறையில் ஆதரித்து நமது வீட்டில் வளர்ப்பதையோ அல்லது அவர்களுக்கான அநாதை விடுதிகள் எனப்படுகிற எதீம் கானாவிலோ சேர்த்து விடப்படுவதையோ மார்க்கம் தடுக்கவில்லையே என்பதுதான்.
ஆகவே நம்மால் அவர்களை நமது சொந்தப் பிள்ளைகளுடன் சேர்த்து வளர்க்க நமது சூழல்கள் இடம் தராவிட்டால் அனாதைக் குழந்தைகளை அனைத்து ஆதரிக்கும் அறப்பணியைச் செய்யும் நிறுவனங்கள் , அமைப்புகள், இயக்கங்கள் நாடெங்கும் நிரம்பவே இருக்கின்றன . அவற்றில் இப்படிப்பட்ட அனாதைக் குழந்தைகளை சேர்த்துவிட்டு அந்த நிறுவனங்களுக்கு நாம் சேர்த்துவிடும் குழந்தையால் ஏற்படும் செலவுகளை நாமே கொடுத்து நன்மைகளைத் தேடிக் கொள்ளலாம். அல்லது நம்மால் இயன்ற நன்கொடைகளை அவர்களுக்கு சதகா அல்லது ஜகாத் அடிப்படையில் கொடுக்கலாம்,.
குழந்தைகளை நமக்காகவும், நம் குடும்பத்திற்காகவும், இந்த சமுதாயத்திற்காகவும் பெற்று நல்லபடியாக வளர்ப்பது எப்படி நமக்கு ஒரு நன்மையாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறதோ .அதே போல அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்கும் பிள்ளைகளை ஆதரிப்பதும் நமக்கு நன்மையே தரும்.
தெருவிடையே பெருநாளில்
தேம்பியழும் அனாதையினை
அருமையுடன் அணைத்தேடுத்தே
ஆதரித்தீர் நாயகமே!
என்று பேராசியர் ( மர்ஹூம்) அப்துல் கபூர் சாகிப் அவர்களின் கவிதை வரிகள் பெருமானார் ( ஸல்) அவர்கள் வாரி அணைத்த அனாதைகளை அடையாளப்படுத்துகின்றன.
அல்லாஹ் படைத்த மனிதனின் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த அணுக்களில் வெள்ளை அணுக்களுடனும் சிகப்பு அணுக்களுடனும் அன்பின் அணுக்களும் ஒன்றிணைந்து , அனாதைகளை அரவணைப்பது படைத்த அல்லாஹ்வுக்குப் பொருத்தமானது என்று திருமறையின் பல்வேறு வசனங்களும் நபி ( ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் அடுக்கடுக்காகத் தெளிவு படுத்துகின்றன.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அருள் தூதரை நோக்கி இப்படிக் கேட்கிறான், “நபியே! நியாயத் தீர்ப்பைப் பொய்ப்ப்பிக்கிறானே அவனை நீர் பார்த்தீரா? அவன்தான், அனாதையை விரட்டுகிறான். மேலும் ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதுமில்லை “ ( அத்தியாயம் :107 : 1-3. ) . இறைவனின் இந்த கேள்விக்குப் பின்னால் இருப்பது அனாதைகளை ஆதரிக்காதவன் மீதுள்ள அளப்பரிய கோபம்தான். அனாதைகளை ஆதரிக்காத தன்மை உடையவர்கள் மார்க்கத்தையே பொய்ப்பிப்பவர்கள் என்ற கடுமையான வார்த்தைகளை இறைவன் பயன்படுத்துவதிலிருந்தே அந்த அறப்பணியின் முக்கியத்துவத்தைப் புரியலாம். ஆகவே தன்னை வணங்குபவர்கள் அனாதைகளை ஆதரிப்பதையும் அல்லாஹ் மிகவும் எதிர்பார்க்கிறான் என்பதை நாம் உணரவேண்டும்.
மேலும் அல்- பஜ்ர் அத்தியாயத்தில் “நீங்கள் அனாதையை கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை இன்னும் பிறருடைய சொத்துக்களையும் சேர்த்து நீங்களே உண்டு வருகிறீர்கள். இன்னும் அளவுகடந்து செல்வத்தை நேசிக்கிறீர்கள். அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும்போது இன்னும் வானவர்கள் அணியணியாக நிற்க, உமது இறைவன் வந்துவிட்டால் அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும்போது மனிதன் ( அல்லாஹ்வுக்கு மாற்றமாக தான் நடந்ததை ) நினைவுகூர்வான்.” ( 89: 17- 23 ).என்று மனிதர்கள், தங்களுக்கு வாய்ப்புள்ளபோதே தங்களை வகைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கிறான். இறைவனின் எச்சரிக்கைகளை கட்டளையாக ஏற்றுக் கொண்டு அனாதைகளுக்காக தங்களால் இயன்றவைகளைச செய்ய இயற்கை இடர்பாடு ஏற்பட்டுள்ள இந்த நேரமே ஏற்ற காலமாகும்; மனிதனை சோதிப்பதற்காக . இறைவன் அளித்த வாய்ப்புமாகும்.
இன்னும் கூட சூரா அல்- பாகராவில், “நபியே! எதை யாருக்கு செலவு செய்யவேண்டுமென்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் (நன்மையை நாடி) எதனை நீங்கள் செலவு செய்தாலும் அதை தாய் தந்தையருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் , அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் வழிப் போக்கருக்கும் கொடுங்கள். மேலும் நீங்கள் நன்மையிலிருந்து எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து ( தக்க கூலி ) தருபவனாக இருக்கிறான்.” ( 2: 215) என்று எடுத்து இயம்புகிறான்.
நிறைய உண்டும் வயிறு நிரம்பாதவனை நாம் சந்தித்து இருக்கிறோமா? செல்வம் படைத்த ஒருவனுக்கு அவனது செல்வமே மறுமைநாளில் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும் ஒருவனை நாம் பார்க்க வேண்டுமா? இதோ! பெருமானார் ( ஸல் ) அவர்கள் மொழிந்ததாக , அபு ஸயீத் அழ குத்ரி( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ ஒரு முஸ்லிம் தனது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப் போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அந்த செல்வம் அவனுக்கு சிறந்ததே ஆகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவன் ஆவான். மேலும் மறுமை நாளில் அந்த செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும். “ ( புஹாரி 1405 )
பெருமானார் ( ஸல்) அவர்களுடன் சுவனபதியில் ஒன்றாக சேர்ந்து இருக்க விரும்பாதவர்கள் உலகில் இருக்க இயலாது. ஆனால் அதற்குரிய வழி என்ன? இதோ ! பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் சவுத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி நபி ( ஸல்) அவர்கள் தனது சுட்டு விரலால் நடு விரலுக்கு சற்றே இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்” ( புஹாரி 6005) .
இதேபோல் எண்ணற்ற அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருள்மொழிகளையும் மற்றும் சொல்லிக் கொண்டே போகலாம். நமக்குத் தரப்பட்ட செல்வங்களும் வாழ்க்கை வசதிகளும் நாம் மட்டும் துய்ப்பதர்க்கல்ல என்பதையே இஸ்லாம் இவ்வாறு பலவாறு வற்புறுத்தி உணர்த்துகிறது.
ஆனால் இவ்வாறெல்லாம் எங்களது இறைமறையில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றோ எங்களது இறுதித் தூதர் சொல்லி இருக்கிறார்கள் என்றோமட்டும் நாம் மார்தட்டிக் கொள்வதில் மட்டும் பெருமை இல்லை. அத்தகைய போதனைகளின்படி நாம் செயல்படுகிறோமா என்பதும் மிகவும் முக்கியம். சொல்லில் மட்டும் சுவைகாண இயலாது. அவற்றை செயலிலும் கொண்டுவருபவதே உண்மையான மூமின்களின் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும்.
சென்னை மற்றும் மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கைவிடப்பட்ட நாய், பூனை , மாடு, ஆடு போன்ற விலங்கினங்களைக் கூட தங்களின் வீடுகளுக்கு கொண்டு போய் வளர்க்க மக்கள் கூட்டம் அலைமோதுவதை ஊடகங்களில் காணமுடிகிறது. மிருகங்களும் கருணை காட்டப்பட வேண்டியவைதான். அதே போல அனாதைகளை ஆதரிக்கும் விஷயங்களிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும்.
அனாதைகளை ஆதரிப்பது ஒரு மார்க்கக் கடமை மட்டுமல்ல; நாம் வாழும் நாட்டிற்கான ஒரு சமூகக் கடமையும்கூட. உலகில் குற்றங்கள் கூடிக் கொண்டு போவதற்கு, இளம் வயதில் கவனிக்க ஆளின்றி கைவிடப்பட்ட அனாதைகளின் பெருக்கமும் ஒரு காரணி என்று சமூக நல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அனாதைகளுக்கு உணவும் உடையும்தான் தர ஆளில்லை என்று வெளிப்படையாக நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு கல்வி தரவும் ஆள் இல்லை; நல்வழிப் படுத்த மற்றும் தீயவற்றை எச்சரிக்கை செய்யவும் ஆளில்லை. தானே முளைக்கும் காட்டுக் கருவைச் செடிகள் போல பெருகிவிடும் அனாதைக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானால் அவர்களுக்கு ஏற்படும் மனத்தளவிலான பாதிப்புகள் பிச்சை எடுத்தல், திருட்டு, கொலை, வழிப்பறி, விபச்சாரம் , போதைக்கடிமையாதல் போன்ற சமூகக் கேடுகளை நோக்கி அவர்களை இழுத்துச் செல்கின்றன. இதனால் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து சிறுவர் சீர்திருத்த சிறைச் சாலைகளிலும் நெருக்கடி அதிகரிக்கிறது.
ஒரு சிறந்த முஸ்லிமைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவரும் தனிமனிதன் என்ற வகையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து கடமைகளை மட்டும் நிறைவேற்றினால் போதுமானது - சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனது பொறுப்பில் இல்லை- பிறருக்கு விதியால் அவரவர் செயல்களால் அல்லது இயற்கையால் ஏற்படும் இடையூறுகள் அல்லது மற்றவர் செய்யும் தவறுகள், பாவங்கள், அநீதிகள் ஆகியவை தன்னைத் தீண்டாது - அதில் தனக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக் கழித்தானால் படைத்த இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உனக்கு நான் தந்த செல்வம் நீ மட்டும் அனுபவிக்கத்தானா என்று இறைவன் கேட்டால் சொல்வதற்கு பதில் வைத்திருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்.
தானாகவே முன்வந்து தன்னார்வ உணர்வில் நன்மைக்காக உழைப்பதும்- சமூகத்தில் கருணையை வளர்ப்பதும் - அநீதிகளையும் அக்கிரமங்களையும் உண்டாக்கும் காரணிகளைக் களைவதும் - ஒரு உண்மை முஸ்லிமின், குறிப்பாக அழைப்பாளனின் அழகிய கடமையாகும். அவ்வாறு கருதாத உயர்ந்த மனநிலை மலராதபோது அவன், தனது மார்க்கம் விதித்த கோட்பாடுகளில் இருந்து விலகி அவற்றை பொய்ப்பிப்பவனாகக் கருதப்படுவான். இதனால் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவனாக மாறுவான். பதைப்பவர்களைப் பார்த்துவிட்டு அவர்களைப் பாதையிலேயே விட்டு விலகிச்சென்று ஒருவன் நிறைவேற்றும் தொழுகையும் வணக்கவழிபாடுகளும் கூட அவனுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக அவையே அவனுக்குப் பெரும் சாபமாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது.
அனாதைகளை ஆதரிப்பது- எடுத்து வளர்ப்பது- அல்லது அவர்களை நல்லவர்களாக வளர்க்கும் இடங்களில் கொண்டு போய் சேர்ப்பது- அதற்காக பொருளாதாரம் உட்பட்ட பொறுப்புக்களை ஏற்பது – அல்லது அவைகளுக்காக வளம் படைத்தோரை அணுகி பொறுப்பேற்கச் செய்வது – இந்தக் காரியங்களில் சாதி, இன, மத, பேதம் கருதாமலிருப்பது ஒரு அழைப்பாளனின் அழகிய கடமையாகும். ஒரு எதிர்பாராத இயற்கை இடர்பாடு இத்தகைய சூழலை ஒரு அழைப்பாளனுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது.
“அண்ணன் என்னடா! தம்பி என்னடா!
அவசரமான உலகத்திலே!”
என்று அலட்சியமாகத் தொடங்கும் ஒரு கவிஞனின் பாடல்தான்
“பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள்தானடா! “
என்று தீர்வு கூறி நிறைவுறுகிறது. இன்ஷா அல்லாஹ் தொடரும்.
இபுராஹிம் அன்சாரி
9 Responses So Far:
//அனாதைகளைஆதரிப்பதுமார்க்க கடமைமட்டுமல்ல,வாழும்நாட்டுக்கு செய்யும் சமூக கடமையாகும்/// நல்லபோதனை.அனாதைகளின்சொத்தில்உண்டுகளித்திருப்போர்க்கு இந்தவரிகளின்பொருள்புரியாது.எந்தவிளக்காலும்அங்கேஒளிவீசமுடியாது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
பேரிடர் செய்திகளைவிட நெஞ்சை நெகிழ வைக்கிறது தாங்கள் இவ்வார அத்தியாயத்திற்கு எடுத்துள்ள பேசுபொருளும் அதனை வலிக்க வலிக்க படிக்கத்தந்திருக்கும் விதமும்.
துவக்கம் முதல் தொடரும் வரை உள்ளத்தை உலுக்கிவிட்டீர்கள்.
தங்கள் எண்ணம்போல் அநாதைகள் இல்லாமல் செய்வோம்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!
(வருட கடைசி வேலைகளை இன்னும் முடித்தபாடில்லை. எனவே வாசிக்கத் தாமதம்)
அன்புள்ள தம்பி சபீர்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
இவ்வாறெல்லாம் எங்களது இறைமறையில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றோ எங்களது இறுதித் தூதர் சொல்லி இருக்கிறார்கள் என்றோமட்டும் நாம் மார்தட்டிக் கொள்வதில் மட்டும் பெருமை இல்லை. அத்தகைய போதனைகளின்படி நாம் செயல்படுகிறோமா என்பதும் மிகவும் முக்கியம். சொல்லில் மட்டும் சுவைகாண இயலாது. அவற்றை செயலிலும் கொண்டுவருபவதே உண்மையான மூமின்களின் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும்.
-----------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையாக சொல்லபட்ட கருத்து!
அனாதைகளை ஆதரிப்பது ஒரு மார்க்கக் கடமை மட்டுமல்ல; நாம் வாழும் நாட்டிற்கான ஒரு சமூகக் கடமையும்கூட. உலகில் குற்றங்கள் கூடிக் கொண்டு போவதற்கு, இளம் வயதில் கவனிக்க ஆளின்றி கைவிடப்பட்ட அனாதைகளின் பெருக்கமும் ஒரு காரணி என்று சமூக நல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அனாதைகளுக்கு உணவும் உடையும்தான் தர ஆளில்லை என்று வெளிப்படையாக நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு கல்வி தரவும் ஆள் இல்லை; நல்வழிப் படுத்த மற்றும் தீயவற்றை எச்சரிக்கை செய்யவும் ஆளில்லை. தானே முளைக்கும் காட்டுக் கருவைச் செடிகள் போல பெருகிவிடும் அனாதைக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானால் அவர்களுக்கு ஏற்படும் மனத்தளவிலான பாதிப்புகள் பிச்சை எடுத்தல், திருட்டு, கொலை, வழிப்பறி, விபச்சாரம் , போதைக்கடிமையாதல் போன்ற சமூகக் கேடுகளை நோக்கி அவர்களை இழுத்துச் செல்கின்றன. இதனால் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து சிறுவர் சீர்திருத்த சிறைச் சாலைகளிலும் நெருக்கடி அதிகரிக்கிறது.
--------------------------------
எதார்த்தமான,மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஆய்வும் ,விளக்கமும்!உங்கள் ஈடுபாடு உழைப்பு இதிலும் அதிகம் வெளிப்படுகிறது.சமூகத்தை பற்றிய அக்கறையும், கவலையும் தெரிகிறது.உங்கள் எண்ணத்திற்கும் தூண்டுதளுக்கும் அல்லாஹ் நற்கூலித்தருவானாக ஆமீன்.!
ஒரு சிறந்த முஸ்லிமைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவரும் தனிமனிதன் என்ற வகையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து கடமைகளை மட்டும் நிறைவேற்றினால் போதுமானது - சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனது பொறுப்பில் இல்லை- பிறருக்கு விதியால் அவரவர் செயல்களால் அல்லது இயற்கையால் ஏற்படும் இடையூறுகள் அல்லது மற்றவர் செய்யும் தவறுகள், பாவங்கள், அநீதிகள் ஆகியவை தன்னைத் தீண்டாது - அதில் தனக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக் கழித்தானால் படைத்த இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உனக்கு நான் தந்த செல்வம் நீ மட்டும் அனுபவிக்கத்தானா என்று இறைவன் கேட்டால் சொல்வதற்கு பதில் வைத்திருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்.
----------------------------------
தன் இனத்திலேயே தாவா செய்து சரிசெய்யும் மகத்தான பணியும், நன்மையை நினைவுப்படுத்தியும்,தீமை ஏற்படாமல் அதை சொல்லிவிளங்கவைப்பதும் மிகச்சிறந்த தாவா!இதில் செய்துள்ளீர்கள்!வாழ்த்துக்கள்!
தானாகவே முன்வந்து தன்னார்வ உணர்வில் நன்மைக்காக உழைப்பதும்- சமூகத்தில் கருணையை வளர்ப்பதும் - அநீதிகளையும் அக்கிரமங்களையும் உண்டாக்கும் காரணிகளைக் களைவதும் - ஒரு உண்மை முஸ்லிமின், குறிப்பாக அழைப்பாளனின் அழகிய கடமையாகும். அவ்வாறு கருதாத உயர்ந்த மனநிலை மலராதபோது அவன், தனது மார்க்கம் விதித்த கோட்பாடுகளில் இருந்து விலகி அவற்றை பொய்ப்பிப்பவனாகக் கருதப்படுவான். இதனால் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவனாக மாறுவான். பதைப்பவர்களைப் பார்த்துவிட்டு அவர்களைப் பாதையிலேயே விட்டு விலகிச்சென்று ஒருவன் நிறைவேற்றும் தொழுகையும் வணக்கவழிபாடுகளும் கூட அவனுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக அவையே அவனுக்குப் பெரும் சாபமாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது.
அனாதைகளை ஆதரிப்பது- எடுத்து வளர்ப்பது- அல்லது அவர்களை நல்லவர்களாக வளர்க்கும் இடங்களில் கொண்டு போய் சேர்ப்பது- அதற்காக பொருளாதாரம் உட்பட்ட பொறுப்புக்களை ஏற்பது – அல்லது அவைகளுக்காக வளம் படைத்தோரை அணுகி பொறுப்பேற்கச் செய்வது – இந்தக் காரியங்களில் சாதி, இன, மத, பேதம் கருதாமலிருப்பது ஒரு அழைப்பாளனின் அழகிய கடமையாகும். ஒரு எதிர்பாராத இயற்கை இடர்பாடு இத்தகைய சூழலை ஒரு அழைப்பாளனுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது.
---------------------------------------------------------
உள்ளங்கை நெல்லிக்கனி!''உங்களிடம் பாடம் பயிலும் மாணவியர்கள் கொடுப்பினை உள்ளவர்கள்!எல்லா புகழும் அல்லாஹுக்கே!
தம்பி கிரவுன்
வ அலைக்குமுஸ் சலாம். ஆய்வை ஆராய்ந்து இட்டுள்ள கருத்து மழைக்காக நன்றி.
அன்பு இ.அ.காக்கா:
முதலில் மன்னியுங்கள்...
கருத்துரைக்க இங்கே ஏன் வரவில்லை என்று கேட்டும் விடாதீர்கள், அனைத்தும் என் பார்வைகளில் பட்டுத்தான் படர்கிறது, இணைய வலைக்குப் பின்னால் இருக்கும் சிக்கல்களின் வெளிக்காட்ட இயலா காரணங்களால் உடணுக்குடன் கருத்திட இயலவில்லை.
மாறாக, தங்களின் இந்த அற்புதமான அழைப்புப் பணி ஏன் பதிவு பதிக்க வேண்டிய இடங்களில் அதற்குரிய தடங்களை அவ்வப்போத் பதிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறேன், அங்கெல்லாம் வரவேற்பும் அரவணைப்பும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது.
உங்களின் அற்புதமான இரண்டு தொடர்கள் அதிரைநிருபரில் கருவுற்று அங்கேயே வளர்ந்து நிறைவுக்கு வந்தும் நிறைமாதத்தில் அங்கேயே பிரசவிக்கும் நேரம் குறிப்பதில் ஏற்பட்ட தாமதமும் இடமும் சற்று தாமதப்படுத்தியதால் இன்னொரு பிரபல பதிப்பகம் தத்தெடுத்திருக்கிறது அவை இரண்டையும் அல்லாஹ் அதனை சுகப் பிரசவமாக ஆக்கி பெயர் சொல்லும் நூல்களாக வாழ பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
இனி, நிலமையை சரிசெய்து கொண்டு அடுத்த நூல் பதிப்புகளின் பிரசவ அறையை கட்டமைக்க தீவிர முயற்சி எடுக்க அனைத்து வகையில் ஈடுபட வேண்டும் இன்ஷா அல்லாஹ்...
Post a Comment