அல்லாஹ்வின் திருப்பெயரால்...!
அகிலத்தின் அருட்கொடை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஜைனப்(ரலி) அவர்களின் தியாகம் பற்றி நாம் அறிந்திடாத வரலாற்றுச் செய்திகளையும், அதன் மூலம் நமக்கிருக்கும் படிப்பினைகளையும் பற்றி இந்த மீள்பதிவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் !.
உயிரினும் மேலான உத்தம இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுடைய நான்கு மகள்களில் மூத்த மகள்தான் ஜைனப்(ரலி) அவர்கள். உம்மு குல்தும்(ரலி), ருகைய்யா (ரலி) பாத்திமா(ரலி) ஆகியோர் மற்ற மூன்று பெண்மக்கள். இவர்கள் நால்வரும் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு பிறந்தவர்கள்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே தம் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களை அபுல் ஆஸ் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள். அபுல் ஆஸ் அவர்கள் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் சகோதரியின் மகனாவார். ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் பண்பானவர், நல்லொழுக்கமானவர் என்று வரலாற்றில் அறியப்பட்டவர். இஸ்லாத்தில் ஒருவர் எவ்விதமான துன்பங்களையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் வாழ்ந்து அந்த துன்பங்களிலுருந்து மீண்டு, தான் தழுவிய தூய இஸ்லாம் தன்னுடைய சொந்தத்திற்கும், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் உள்ளவர்களுக்கு அண்ணலாரின் அருமை மகளார் ஜைனப் (ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த பின் வரும் உருக்கமான சம்பவங்கள் நல்லதொரு படிப்பினை.
தன் மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் அபுல் ஆஸுக்கும் திருமணம் முடிந்த சில வருடங்களில் நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அபுல் ஆஸ் அவர்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட இஸ்லாத்தை எத்தி வைக்கிறார்கள், முதலில் மனைவி ஹதீஜா(ரலி), பின்னர் மகள்கள் ஜைனப்(ரலி), உம்மு குல்தும்(ரலி) ருகைய்யா(ரலி) ஃபாத்திமா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்கிறார்கள். இதில் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக உம்மு குல்தும்(ரலி) ருக்கையா(ரலி) ஆகியோரை அவர்களின் கணவன்மார்கள் விவாகரத்து செய்தனர். அது ஒரு மிக உருக்கமான வரலாற்றுச் சம்பவம். இந்த தருணத்தில் நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தார்.
வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்புகிறார் அபுல் ஆஸ். வீட்டில் தன் மனைவி இஸ்லாத்தை ஏற்ற செய்தியை அறிந்து கொள்கிறார். ஜைனப்(ரலி) அவர்கள் தன் கணவனைப் பார்த்து “என்னுடைய தந்தை இறைத்தூதராகி விட்டார்கள், அல்லாஹ்விடமிருந்து வஹி அருளப்பட்டது, என்னுடைய தந்தையின் மூலம் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன், நீங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அன்பாக ஒரு கோரிக்கையை வைத்தார். அதற்கு அபுல் ஆஸ் “ஒரு பெண்ணுடைய பேச்சைக் கேட்டு நான் இஸ்லாத்தை ஏற்றால் என்னை என் சமூகம் கேவலமாக பேசும் என்பதற்காக நான் அஞ்சுகிறேன், நான் இஸ்லாத்தை ஏற்க மாட்டேன், அதே நேரம் உங்கள் தந்தை உண்மையாளர்” என்று சொன்னார். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று மிக ஆவலுடன் எதிர்ப்பாத்திருந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பாசம் நிறைந்த அருமை மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு மிகுந்த வேதனையளித்தது. இவர்கள் இருவரின் வாழ்வும் சிறிது காலம் மக்காவில் சென்றது. பின்னர் தான் காஃபிர்களோடு திருமண உறவு இல்லை என்ற சட்டம் மதினாவில் இறங்கியது.
மக்காவில் மார்க்க பிரச்சாரம் செய்ய பல இன்னல்கள் துன்பங்களைச் சகித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் குடும்பத்தோடு மதீனாவுக்கு செல்லத் தயாராகிறார்கள், நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்கள் “என் அருமைத் தந்தையே நான் என்ன செய்ய, நானும் உங்களோடு வருகிறேனே” என்று மிகுந்த ஏக்கத்துடன் சொந்தங்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் தந்தையோடு செல்வதா? கணவனோடு இருப்பதா? என்ற குழப்ப எண்ணத்துடன் தன் தந்தையிடம் வினவினார். அபுல் ஆஸ் நல்லவர் என்பதாலோ என்னவோ நபி(ஸல்) தன் அருமை மகளிடம் “நீ உன் கணவனோடு இருந்துவிடு மகளே” என்று கட்டளையிட்டார்கள். தன் தந்தையின் கட்டளையைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டார்கள் ஜைனப்(ரலி). தாயில்லாத ஜைனப்(ரலி) அவர்களுக்கு தாய்க்கு தாயாக பாசம் காட்டி கொண்டிருந்த தந்தையான இறைத்தூதர், உடன் பிறந்த சகோதரிகள், இன்னும் பிற சொந்தங்கள் தன்னை விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்கிறார்களே என்ற பரிதவிப்பு, பிரிவின் துயரம் தியாகத் திருமகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற ஒரே கரணத்திற்காகவும், தன் தந்தை நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஒன்று சொன்னால் அது நிச்சயம் தனக்கு நன்மை தருவதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் மக்காவில் தன் கணவனோடு வாழ்ந்து வந்தார்கள்.
பின்னர் சில காலம் கழித்து பத்ரு யுத்தம் நடைபெறுகிறது. அதில் காஃபிர்களுடைய அணியில் ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் அபுல் ஆஸ் உள்ளார். பத்ருப் போரின் வெற்றியின் போது அபுல் ஆஸ் கைது செய்யப்படுகிறார். அபுல் ஆஸ் கைது செய்யப்படுள்ளார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்கும், ஜைனப்(ரலி) அவர்களுக்கும் வந்தடைகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலை நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய மகளின் கணவர் தன்னை எதிர்த்து போரிட வந்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று. இது போல் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் ஓர் தர்ம சங்கடமான நிலை, இறைத்தூதர் தன் தந்தை நபி(ஸல்) அவர்களை எதிர்த்து போரிட தன் கணவர் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்களே என்ற வேதனை. போரில் கைது செய்யப்பட்டவர்களை நபி(ஸல்) அவர்கள் பரிகாரம் பெற்று விடுதலைச் செய்கிறார்கள் என்ற செய்தி ஜைனப்(ரலி) அவர்களுக்கு வருகிறது. உடனே தன் தாய் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் தனக்காக விட்டுச் சென்ற அழகிய மணிமாலையை கழுத்தில் இருந்து கழட்டி, அபுல் ஆஸ் அவர்கள் சகோதரர் ஒருவரிடம் கொடுத்து, “இதை பரிகாரமாக என் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்து என் கணவரை மீட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அபுல் ஆஸ் அவர்களின் சகோதரர் சகீக் இப்னு ரபிஹ் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அந்த மணிமாலையைக் கொடுத்து ஜைனப்(ரலி) இதை கொடுத்து அவரின் கணவர் அபுல் ஆஸை விடுதலை செய்ய கோரினார் என்று சொன்னார். அந்த மணிமாலையைப் பார்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள், “இது என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு என் மனைவி ஹதீஜா(ரலி) கொடுத்த மாலை” என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்கள். என்ன தான் மிகப்பெரிய தலைவராக இருந்தாலும், நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மகளின் கணவரை உடனே விடுதலை செய்யவில்லை.
தன் தோழர்களிடம் அபுல் ஆஸின் விடுதலை தொடர்பாக கேட்கிறார்கள், “நாம் ஒரு சிலரை பரிகாரம் இல்லாமல் விடுதலை செய்கிறோம், இந்த அபுல் ஆஸை அது போல் விடுதலை செய்யலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி தோழர்கள் சம்மதித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபுல் ஆஸை வரவழைத்து “இந்த மாலை ஹதீஜா(ரலி) அவர்களுடையது, என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களிடம் இருக்க வேண்டியது, எனக்கு என் மகளைத் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறி அபுல் ஆஸை விடுதலை செய்தார்கள்.
தன் தந்தையின் கட்டளை தன் கணவனை விட்டு விட்டு வர வேண்டும் என்று. மிகுந்த மன பாரத்துடன் மக்காவைவிட்டு தன்னுடைய பெண் குழந்தை உமாமா(ரலி) அவர்களைச் சுமந்து கொண்டு மதீனா வந்தடைந்தார்கள். சில காலம் சென்றதும், நபி(ஸல்) அவர்களிடம் ஜைனப்(ரலி) அவர்களைத் திருமணம் செய்ய ஒரு சில நபித் தோழர்கள் விருப்பம் தெரிவித்தனர், ஆனால் ஜைனப்(ரலி) அவர்கள் விரும்பவில்லை. காஃபிராக உள்ள தன் கணவர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஒரு நாள் ஒரு காஃபிர் வியாபாரக் கூட்டம் மதினாவை கடந்து செல்கிறது, அவர்கள் இஸ்லாமிய எதிரிகள் என்பதால், அப்போது பொருட்களுடன் அவர்களைச் சிறைப்பிடிக்கிறார்கள் நபித்தோழர்கள், அவர்கள் அனைவரும் கைது செய்து மதீனா அழைத்து வருகிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அவர்களிடமிருந்து தப்பியோடிய அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் அடைக்கலம் தேடுகிறார். “மக்காவில் உள்ள நிறைய மக்களுடைய சொத்துக்கள் அதில் உள்ளது, எப்படியாவது என்னுடைய பொருளாதாரத்தை காப்பாற்றித் தந்து விடுங்கள்” என்று அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.
உடனே தன் பாசம் நிறைந்த தந்தை நபி(ஸல்) அவர்களிடம் “என் கணவரின் சொத்தை நீங்கள் திருப்பி கொடுக்க முடியுமா” என்று தயக்கத்துடன் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ அந்த விவகாரத்தில் முடிவு செய்ய எனக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டு” நபித் தோழர்களிடம் கேட்கிறார்கள் “ஜைனப்(ரலி) தன் கணவரின் சொத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ ஜைனப்(ரலி) அவர்கள் யாருக்கு பாதுகாப்பு கொடுத்தார்களோ அவர்களுக்கு நாமும் பாதுபாப்புக் கொடுப்போம்” என்று நபித்தோழர்கள் பதில் சொல்ல, அபுல் ஆஸை விடுதலை செய்து சொத்துக்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜைனப்(ரலி) அவர்கள் அபுல் ஆஸை அழைத்து “இன்னும் நீங்கள் இஸ்லாத்திற்கு வர மாட்டீர்களா?” என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டார்கள். “இல்லை” என்ற பதில் மட்டும் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார் அபுல் ஆஸ். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார் ஜைனப்(ரலி) அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமும் மன வருத்தமும் ஏற்பட்டது.
மக்காவில் உள்ளவர்களின் பொருட்களையும் சொத்துக்களையும் ஒப்படைத்து விட்டு, சில நாட்களுக்கு பிறகு அபுல் ஆஸ் அவர்கள் மதீனா திரும்பி வந்து, “வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, நபி முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் என்று சாட்சி கூறுகிறேன்” என்று கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இதனை வாசிக்கும் நம் கண்கள் கலங்குகிறதே, ஆனால் காஃபிராக இருந்த கணவர் இஸ்லாத்தை ஏற்ற அந்த தருணத்தில், பல வருடங்கள் அந்த சந்தர்பத்திற்காக காத்திருந்த அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்களின் மகிழ்ச்சி நிச்சயம் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்திருந்தது. சில மாதங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள், அபுல் ஆஸ்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரு வருடத்திற்குள் ஜைனப்(ரலி) அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால். இறைத்தூதரின் மகளாக இருந்து, இஸ்லாத்தை ஏற்று, பல இன்னல்களை சந்தித்து, தன் தந்தை படும் கஷ்டங்களை சகித்துக் கொண்டு, இறைத்தூதரான தன் தந்தைக்கு தன் கணவனால் சங்கடங்கள் ஏற்பட்டுள்ள சூழலிலும், தன்னோடு வாழ்ந்து வரும் கணவரும் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு இருந்தார்களே அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்கள். அவர்களிடம் இருந்ததைப் போன்று நம் குடும்பத்தவர், தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், சொந்தங்கள் ஆகியோர் ‘இணைவைப்பு’, ‘பித்அத்’தான (இஸ்லாத்தில் இல்லாத புதிய) காரியங்களிலிருந்து விடுபட்டு நேர் வழிக்கு வர வேண்டும் என்று என்றைக்காவது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்போமா? அதற்கான கவலை ஏக்கம், நம்மிடம் உள்ளதா?
மார்க்க விசயத்தில் சிறிய தவறிழைக்கும் நம் சொந்தங்களிடம் நம்மில் பலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தோனியில், மார்க்க மாமேதைகள் போல் பொருமை இழந்து வார்த்தைகளை விட்டு, பத்வாக்கள் (மார்க்க தீர்ப்பு) கொடுத்து நம் சொந்தங்களிடம் வெருப்புணர்வை அல்லவா தூண்டுகிறோம், நிதானத்தை எப்போது கையாளாக போகிறோம்? சிந்திக்க வேண்டாமா?
மார்க்க விசயத்தில் சிறிய தவறிழைக்கும் நம் சொந்தங்களிடம் நம்மில் பலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தோனியில், மார்க்க மாமேதைகள் போல் பொருமை இழந்து வார்த்தைகளை விட்டு, பத்வாக்கள் (மார்க்க தீர்ப்பு) கொடுத்து நம் சொந்தங்களிடம் வெருப்புணர்வை அல்லவா தூண்டுகிறோம், நிதானத்தை எப்போது கையாளாக போகிறோம்? சிந்திக்க வேண்டாமா?
தன் கணவர் தொழுகை இன்னும் ஏனைய இபாத்துக்கள் ஏதும் இல்லாதவராக உள்ளாரே என்று கவலைப்படாத மனைவிமார்கள், ஜைனப்(ரலி) அவர்களின் இந்த சம்பவங்களை நிச்சயம் அறிய வேண்டும். தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தேவை பொருளாதாரம், அவர் சம்பாத்தியம் ஹலாலோ ஹராமோ, அது எனக்கு தேவையில்லை, என்றில்லாமல், அப்படிப்பட்டவர்கள் தொழுகை மற்றும் இபாதத்துக்களை பேணுபவராக இருக்க வேண்டும், அவருடைய சம்பாத்தியம் ஹலாலாகமட்டுமே இருக்க வேண்டும் என்று து ஆ செய்யும் மனைவிமார்கள் எத்தனைப் பேர் நம்மிடையா இருக்கின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் விளங்கி வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
M தாஜுதீன்
இது ஒரு மீள்பதிவு
2 Responses So Far:
தலைப்புக்கு மேல் உள்ள தலைப்பில் திருத்தம் செய்யவும்.
'ஜைனப்' என்பதற்கு மாற்றமாக 'ஹைனப்' என்றுள்ளது!
ஜஸக்கல்லாஹ் ஹைர் மாமா..
Post a Comment