Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 11 16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 16, 2016 | ,


கடந்த சில அத்தியாயங்களுக்கு முன்பாக அழைப்பாளர்களின்  முக்கியப் பணியாக நாம் குறிப்பிட்டது இஸ்லாத்தைப் பற்றிய தவறான பல புரிந்துணர்வுகளை நீக்க அவர்கள் கருத்துப் பெட்டகங்களுடன் அறிவுபூர்வமாக பணியாற்றவேண்டும் என்பதுதான். அவற்றைப் பற்றிய விளக்கங்களை எழுதும் போதே வெள்ளம் முதலிய   இயற்கைப் பேரிடர்  குறுக்கிட்டுவிட்டது. எனவே பேரிடர்கள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆற்றவேண்டிய அரும்பணிகளைப் பற்றி சுட்டிக் காட்டி எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் புரிந்துணர்வுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தித் தொடர இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

உலகில் இருக்கும் அனைத்து மதங்களைப் பற்றியும்  பெரிய அறிஞர்களின் கருத்துக்களைத் திரட்டிச் சொல்வதானால் அவைகளைத தாங்கி நிற்கும்  தூண்கள்  யாவும்   அன்பு, அமைதி அரவணைப்பு, சமாதானம்,  சகோதரத்துவம் என்கிற அடிப்படையில்தான் எழுப்பப்பட்டு இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ஆனால் வழிபாட்டு முறைகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும் கொள்கைகளின் ஆணிவேர் ஒன்றில்தான் போய் முடிகிறது. 

இராமன் என்பது கங்கை நதி;
அல்லாஹ் என்பது சிந்து நதி;
இயேசு என்பது பொன்னி நதி;
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்

என்ற ஒரு கவிஞரின் வரிகள் இந்தக் கருத்தின் பரிமாணத்தை விளக்கும். 

முதல் மனிதரான ஆதம் ( அலை) அவர்களின் படைப்புக்குப் பிறகு, இறைவன் உருவாக்கி, தனது தூதர்கள் மூலம்   வழங்கி வழிகாட்டிய மதக் கோட்பாடுகளிலும் சட்டங்களிலும்  மனிதர்கள்  கைவைத்து தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்காதவரை மதங்கள்  ஒரே பாதையில்தான் பயணித்தன. . 

நாடு விட்டு நாடு சென்று தாங்களும் தங்களின் இனமும் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக மண்ணின் மைந்தர்களை ஆண்டவனின் பெயரால் அடிமைப்படுத்தி, இழிவுபடுத்தி,  தாழ்மைப் படுத்தி தங்களுக்கு பணியாட்களாக வைத்துக் கொள்ள இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  கற்பனைகளையும் கதைகளையும்  புனையத் தொடங்கி அவற்றை ஆதிக்கசக்திகள் எளியோரிடம் திணிக்கும் வரை மதங்கள் யாவும் ஒரே பாதையில்தான் பயணித்தன.  

படைத்தவனுக்கும் படைக்கப்பட்டவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை மறந்து  படைக்கப்பட்டவைகளையே இறைவனாக்கி,   இணைவைத்து,  மனிதன் தனது        வசதிக்கேற்ப வணங்கத் தொடங்கும்வரை மதங்கள் யாவும் ஒரே பாதையில்தான் பயணித்தன.  

இறைவன் ஒருவனே என்று நம்பியவர்கள், அவனது தூதர்களை தொடக்கத்தில் ஏற்றவர்கள் பின்னால் வந்த ஆண்டுகளில் இறைக்கட்டளைகளுக்கு மாறுபாடுகள் செய்து,  இறைவனின் தூதர்களை கொலை செய்யத் துணியும் வரையும்  தொடர்ந்துவந்த தூதர்களை மறுக்கத் தொடங்கும்வரையும்  மதங்கள் யாவும் ஒரே பாதையில்தான் பயணித்தன. 

உதாரணமாக, “ ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நாம் தூதரை அனுப்பி இருந்தோம் “ ( Al-Quran. 16:36 )  என்ற அடிப்படையில்  இறைவன் அனுப்பிய தூதர்களின் பட்டியலில் ஒரு அற்புதமான இடத்தைப் பெற்ற நபி ஈசா        ( அலை) அவர்கள் உலகுக்கு வழங்கிய ஏகத்துவ செய்திகள் எவ்வாறெல்லாம் மனிதர்களால் திரிக்கப்பட்டன என்பதை நாமல்ல பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்  உலகுக்கு அறிவிக்கிறது. அந்தச் செய்தி இதுதான்.  

அதாவது,  கிருத்தவ திருச்சபைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் கூடி கடவுள் பற்றிய கொள்கையை அறிவித்தன. 
  • கி .பி 381-ல் கூடிய முதலாவது கான்ஸ்டான்டினோபில் ஆலோசனை சபை ( இரண்டாவது பன்னாட்டு கிருத்தவ சபை) மும்மை ( திரித்தவ -  TRINITY ) கொள்கையான பிதா, சுதன், ஆவி சமத்துவத்தை அறிவித்தது. 
  • 553- ல் நடந்த இரண்டாவது கான்ஸ்டான்டினோபில் ஆலோசனைசபை கிறிஸ்துவுக்கு மனிதத்தன்மையும் தெய்வீகத்தன்மையும் ஒன்றாகக் கலந்த ஒரே இயல்புதான் உண்டு என்று அறிவித்தது. இந்தக் கொள்கைக்கு மானோபிசிடிஸம் ( MONOPHYSITISM ) என்று பெயர் சூட்டப்பட்டது. 
  • 680 –ல் நடந்த மூன்றாவது ஆலோசனை சபை தனது இரு குணங்களுக்கு அப்பால் ஒரே  விருப்பத்தை கொண்டிருந்தது என அறிவித்தது.   ( தப்சீர் இப்னு கஸீர் பாகம் ஐந்து - ரஹ்மத் பதிப்பகம் ) .
இவ்வாறு இறைக் கொள்கைகள் அவரவர் இஷ்டத்துக்கு மாற்றியமைக்கப்பட்டன.  

அதேபோல்,  ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்றும் “ காக்கை குருவி எங்கள் ஜாதி கடலும் மலையும் எங்கள் கூட்டம் “ என்றும் , “ யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்றெல்லாம்  பெருந்தன்மையாக பின்பற்றிச் சொல்லிய  தமிழக  ஆன்மீகக்  கோட்பாடுகள்  ,   “ உங்களை ஒரே ஆன்மாவிலிருந்துதான் படைத்தோம் !”      ( 4:1 ) என்றும், “ உங்களின் இந்த சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே ( 21: 92)   என்கிற அல்லாஹ்வின் வார்த்தைகளை ஒப்புக்கொண்ட  நேரத்தில் எங்கிருந்தோ வந்து நுழைந்த  மனுநீதி, உபநிஷத்துகள், ஆகம விதிகள் போன்றவற்றின் போதனைகளால் இறைவழிபாடும் மதக் கோட்பாடும் கலப்படமாகிப் போயின.

மற்ற மதங்களில் பரவலாக இருக்கும் உருவ வழிபாட்டை இஸ்லாம் தடுத்து இருக்கிறது. உலகையும் மனிதனையும்  படைத்த சக்தியுக்க இறைவனுக்கு ஒரு உருவத்தைப் படைக்க அவனால் படைக்கப்பட்ட மனிதன் சக்தியற்றவன்  என்பதே இதன் அடிப்படை. 

அதேபோல் எந்த உருவத்தை வடிவமைத்து  கடவுள் என்று வணங்குகிறார்களோ  அந்த உருவத்தை உண்மையில் கண்டவர் யார்? கண்டு வந்து சொன்னவர் யார் ? என்பதைத்தான், “ கண்டவர் விண்டிலர்,  விண்டவர் கண்டிலர் “ என்று சித்தர்கள் உண்மையாகப் பாடுகிறார்கள்.

மதத்தில் புரட்சி செய்த மகான் என்று போற்றப்படும் புத்தர் கூட இறைவனுக்கு உருவமில்லை என்று வாதாடியவர்தான். “நட்டகல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து மொனமொநேன்று சொல்லும் மந்திரம் ஏனடா? நட்டகல்லும் பேசுமோ? நாதன்  உள்ளிருக்கையில் ? “ என்று கேட்ட பகுத்தறிவாளர்களும் உருவவழிபாட்டை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.  

ஆகவே இறைவன் ஒருவன் என்பதும் அவன் உருவமற்றவன் என்பதும் தாய் தந்தையோ  மனைவி மக்களோ இல்லாதவன் என்பதும் அவன் பெறவும் இல்லை பெறப்படவும் இல்லை என்பதுதான்  அடிப்படையான இறைதத்துவம். இதை இஸ்லாம் வெளிப்படையாக வலியுறுத்தி உறுதியாக நிற்கிறது. மற்ற சகோதர மதங்கள்,  இந்தக் கொள்கையை  உள்ளீடாகக் கொண்டிருந்தாலும் அந்த ஓரிறைக் கொள்கைக்கு பல பரிமாணங்களையும் கதைகளையும் உருவாக்கிப் பரப்பிவிட்டன. இயல்பாகவே கதைகளைக் கேட்பதில் – நம்புவதில் நாட்டமுள்ள மனிதர்கள் இந்தப் பழக்கத்துக்கும் பலியாகிப் போனார்கள். 

ஆகவே நாம் சொல்ல வருவது என்னவென்றால் , உலகின் அனைத்து மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளும் ஒன்றே. இஸ்லாம் அவற்றை வெளிப்படையாக வலியுறுத்துகிறது. தவறுவோருக்கு மறுமை வாழ்வில் தண்டனை என்கிறது.  மற்ற மதங்களும் நற்செயல்களை தங்களின் கொள்கையில்  வைத்துத்தான்  இருக்கின்றன. உதாரணமாக தர்மத்தைக் கடமைகளில் ஒன்றாக ஆக்கியது இஸ்லாம். மற்ற சகோதர மதங்கள் அதே தர்மத்தை கொள்கையாக  வரவேற்று, விரும்பி, போதித்தே வருகின்றன என்பதை மறுக்க இயலாது. நன்மையான செயலை செய்பவர்களுக்கு சுவனம் பரிசாகத்தரப்படும் என்று இஸ்லாம் சொல்கிறதென்றால் அதே நல்ல காரியங்களை செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சகோதர மதங்களும்  சொல்கின்றன. இதே போல் வேறு எந்த மதமாக இருந்தாலும் தீமையான காரியங்களையைச் செய்  என்று போதிப்பதே   கிடையாது. 

எனவேதான் 

வேதம் இதிகாசம் வேண்டுவது எல்லாமே 
நாதன் ஒருவனென்ற நாமந்தான் மோதல்கள் 
தீரா மதங்கள் தெளிவுற்று ஒன்றாகச் 
சேராதோ நெஞ்சமே  சொல்! ” 

என்று ஒரு மதநல்லிணக்கம் வேண்டும் நண்பர் கவிதை வடிக்கிறார்.  

இதோ இன்னொரு மத நல்லுணர்வாளர் இப்படிச் சொல்கிறார். 

வேதம் இதிகாசம் எல்லாம் மனிதருக்குள்
மோதும் வழக்கினையே மூட்டியது - போதும், இனி
ஒன்றாய் இருப்போம் ஒருவனால் - பலர்
நன்றாய் இருக்கவழி நாடு.” 

எனவே அடிப்படையில் அனைத்து மதங்களும் நன்மையானவற்றையே போதிக்கின்றன. போகுமிடம் ஒன்று போகிற வழிதான் வேறு வேறு என்பதுதான் மத நல்லிணக்கத்தை வரவேற்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டியதாகும். 

ஆறுகளில் மிகவும் அழுக்கானது-
அந்த டிசம்பர் ஆறு“ என்றார்  ஆலங்குடிக் கவிஞர் ரமா.ராமநாதன்.

ஒரு அழைப்புப் பணியாளனின் முதல் தகுதியே அவன் மதநல்லிணக்கமும் அடுத்தவரின் கருத்தையும் மதிக்கும் அன்புடைய நெஞ்சமும் கொண்டிருப்பதுதான்.  பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் நாட்டில் எவ்வாறு மற்றவர்கள் நம்மையும் நமது மத உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோமோ அதேபோல் நாமும் மற்றவர்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். 

“தீயினைக் கும்பிடும் பார்ப்பான் – தினம் 
திக்கை வணங்கும் துருக்கர் 
கோயில் சிலுவையின் முன்னே நின்று 
கும்பிடும் இயேசு மதத்தார் 
யாவரும் பணிந்திடும் தெய்வம் – பொருள் 
யாவினும் நின்றிடும் தெய்வம் 
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில் 
பற்பல சண்டைகள் வேண்டாம்! “ 

- என்று பாரதியார்  பா வடித்தார். 

ஆயிரம் உண்டிங்கு சாதி – இதில் 
அந்நியர் வந்து புகல் என்ன நீதி? 
தாயின் வயிற்றில் பிறந்தோம் – ஒரு 
தாயின் வயிற்றில் பிறந்தோம் – நாம் 
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? 

என்று பாடியதும் பாரதியார்தான். 

பத்தாம் வகுப்பில் படித்த ஒரு  செய்யுள் நினைவுக்கு வருகிறது.

அல்லா என்பார் சிலபேர்கள், 
அரன் அரி என்பார் சிலபேர்கள்
வல்லான் அவன் பரமண்டலத்தே 
வாழும் தந்தை  என்பார்கள் சொல்லால் 
விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லாம் இப்படிப் பலபேசும் ஏதோ ஒரு பொருள் இருக்கின்றதே
அந்தப் பொருளை நாம் நினைந்து அதனையே என்றும் வணங்கிடுவோம். 

- என்பதே அந்த சமத்துவம் பறைசாற்றும்  செய்யுள். 

இப்படியெல்லாம் எத்தனையோ நல்லவர்கள் , பெரியவர்கள் சொன்னாலும் பொதுத்தளங்களிலும், பொதுக் கூட்டங்களிலும், சமூக ஊடகங்களிலும் மக்களைப் பிரித்தாள  துவேஷத்தைப் பரப்பும் சிலர்  தவறு என்று தெரியாமலேயே தவறு செய்பவர்களும்  இருக்கவே செய்கிறார்கள். அவர்களுள் ஒருவரின் தீவிரமான துவேஷக் கருத்துக்காக அரசு அவரைக் கைது செய்து சிறையிலடைத்து இருக்கிறது. அவரது பெயர் திரு. கல்யாண ராமன். இந்த சகோதரர் பலரது மனங்களைப் புண் படுத்தியவர்.  அவர் கைது செய்யப்பட்டதை ஆதரித்து பல சமூக வலைதளங்களிலும் பலர் பதிவுகளைத் தந்தனர். ஆனால் நானும் ஒரு பதிவைத் தந்தேன். பலராலும் விரும்பப்பட்டு பகிரப்பட்ட எனது அந்தக் கருத்துக்களை  இங்கும் பதிய விரும்புகிறேன்.  இதோ!

“கல்யாணராமனை கைது செய்த காரணத்துக்காக மகிழ்ந்து பதிவுகளைத் தருவதைவிட அவருக்கு கிடைத்துள்ள தனிமையில் - சிறையில் நல்ல எண்ணங்களைக் கொடுக்கும்படி இறைவனிடம் துஆச் செய்வது சிறந்தது.

அதைவிட அவர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாம் இந்தியாவில் பரவிய முறைகள் பற்றியும் கொண்டிருக்கும் தவறான புரிந்துணர்வுகளை நீக்கும் விதத்தில் அவரை சிறைக்குச் சென்று பார்த்து தாவா செய்வது நல்லது.

அதற்கான நூல்களை வழங்குவதும் நல்லது.

விரோதங்களை வளர்க்காமல் துவேஷக் கருத்துக்களைப் பதியாமல் வாய்ப்புள்ளோர் - அதாவது சென்னை தாவாக் குழுவினர் - இந்தப்பணிகளை மேற்கொண்டால் மிகவும் நல்லது.

இன்னா செய்தோருக்கும் இனியவையே செய்வதே இஸ்லாம்.” 

ஒரு அழைப்பாளன் இந்த ரீதியில் இன்முகத்தோடு வெறுப்போரையும் மறுப்போரையும் சந்தித்து புரிந்துணர்வுகளை வளர்ப்பது  காலத்தின் கட்டாயம். முஸ்லிம்களுக்கு எதிரான முனைப்புகள் வளர்ந்தோங்கி இருக்கும் இந்நாட்களில் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தின் சான்றுகள் நம்மிடமிருந்து தொடங்கப்படவேண்டும். வழி தவறியோருடன் வார்த்தைகளால் மல்லுக்கு நிற்காமல் வழிகாட்டும் நெறிமுறைகளை அவர்களுக்கு இன்முகத்துடன் எடுத்துரைக்க வேண்டும். முஸ்லிம்களின் மீது எடுத்துவைக்கும் தவறான வாதங்களுக்கு தன்மையாக பதில் சொல்லப் பழக  வேண்டும். சரித்திரச் சான்றுகளுடன் சன்மார்க்கம் பரப்ப வேண்டும். 

இந்தியாவில் இஸ்லாத்தை  எதிர்ப்போர்கள் எடுத்துவைக்கும் முதல்விவாதம் என்னவென்றால்  இஸ்லாம் ஒரு அந்நிய மதம் – முஸ்லிம்கள் அராபிய அடிமைகள் – இஸ்லாம் கலாச்சாரத்தால் , மொழியால் வேறுபட்டது என்று குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அன்பான அவர்களது இந்தக் குற்றப்பத்திரிக்கைக்கு  நமது பண்பான -  அறிவுபூர்வமான, ஆதாரபூர்வமான  பதில்கள் யாவை? 

பார்க்கலாம் . இன்ஷா அல்லாஹ்.

இபுராஹிம் அன்சாரி

16 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வாரம் ஒருமுறை ஆவலுடன் எதிர்பார்க்கும் வாரப் பத்திரிகை, பேரறிவாளர் ஒருவரின் அறிவார்ந்த மேடைப்பேச்சு, விருப்பப்பட்ட வாத்தியாரின் வகுப்பு ஆகியவற்றின் மீதான பிரியங்களுக்குச் சற்றும் குறைவில்லாதது தங்களின் இத்தொடர்மீதான எதிர்பார்ப்பு!

அந்த எதிர்பார்ப்பைத் துளியளவேனும் ஏமாற்றாத எழுத்து, சில சமயம் கேசத்தில் கரித்துகள்கள் வந்தேற கம்பி பிடித்து வாசலில் நின்று ஊர் ஸ்டேஷனை எட்டிப்பார்க்கும் ரயில் பயணம்போல் சுகமளித்தாலும் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது எதார்த்தம்.

மாஷா அல்லாஹ்!
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

(எனக்கு இவ்வொன்றாக எடுத்துச் சொல்லி சிலாகிக்க வேண்டும்போல் உள்ளது. நேரம் வாய்த்தால் வருவேன்)

sabeer.abushahruk said...

//...வரை மதங்கள் யாவும் ஒரே பாதையில்தான் பயணித்தன. //

என்று முடிக்கும் ஒவ்வொரு பத்தியும் மறைமுகமாக பகுத்தறிவுக்கு கேட்கப்படும் ஊசிப்பட்டாசு கேள்விகள்.

அறிவிப்புகளுக்குள் "ஏன்" என்ற கேள்வி ரவைகளை உட்செலுத்தி வைக்கும் லாவண்யம் உங்கள் எழுத்துத் துப்பாக்கிக்கே வரும் திறன். சுடும்வரை காத்திராமல் மனிதர்கள் சுயமாக சிந்தித்தால் தங்கள் அழைப்புப்பணி இலகுவாகும்.

sabeer.abushahruk said...

கவிதைகளும் மேற்கோல்களும் பாடல்களும் நிகழ்வுகளும் ஆங்காங்கே மிகச்சரியான இடத்தில் எடுத்தாண்டிருப்பதுவும் அவற்றை மார்க்கக் கோட்பாடுகளோடு ஒப்பிட்டு வித்தியாசப்படுத்திக் காட்டுவதும் சகோதர மதத்தவரின் மனம் நோகாமல் அழைத்தாலும் ஏறத்தாழ 'வாருங்கள்' என்று மல்லுக்கட்டுகின்றன. இந்த யுக்தி வெற்றியின் அடையாளம்.

அல்லாஹ் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்து வக்தில் பரக்கத் செய்ய என் ஆத்மார்த்த துஆ.

sheikdawoodmohamedfarook said...

//ஒருஅழைப்பாளன்இந்தரீதியில்இன்முகத்தோடு....................................தண்மையாக பதில் சொல்ல பழகவேண்டும்// இதுஒருநல்லஆலோசனை.பெரும்பாலான அழைப்பாளர்களிடம் சில விசயங்களை தெளிவுபடுத்த விபரம் கேட்டால் மூக்கின் மேல்கோபம் வருகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இன்னா செய்தோருக்கும் இனியவையே செய்வதே இஸ்லாம்.” //

இன்று காலை முகநூல் பதிப்பு ஒன்றில், இஸ்லாமியர்களுக்கு வீடுகள் வாடகைக்கு கொடுப்பதில் இன்னும் சில்லக் நீடிக்கிறது. பிறமதத்தவர்களின் சொந்த வீடுகளை முஸ்லீம்களுக்கு வாடகைக்கு கொடுக்க மறுக்கின்றனர் என்று அறிய முடிந்தது.

பேரிடரில் உதவிய அனைத்து முஸ்லீம்களும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றித்தான் களத்தில் இறங்கினார்கள். அடுத்து என்ன செய்யவேண்டுமென்றுதான் இந்த தொடர் கோட்டிட்டு காட்டுகிறது...

இந்த தொடர் பரவலாக்கப்பட வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

abdul said...

#ஒரு அழைப்புப் பணியாளனின் முதல் தகுதியே அவன் மதநல்லிணக்கமும் அடுத்தவரின் கருத்தையும் மதிக்கும் அன்புடைய நெஞ்சமும் கொண்டிருப்பதுதான். பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் நாட்டில் எவ்வாறு மற்றவர்கள் நம்மையும் நமது மத உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோமோ அதேபோல் நாமும் மற்றவர்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். # படைத்தவனின் பண்புகளை சொல்லியதுடன் அவனின் ”வழிகாட்டலை” பறப்புபவனின், பண்புகளை வெகு நேர்தியுடன் சொல்லி வழி நடத்துவது பல வகையான சமூக அமைப்பை பெற்ற நம் தேசத்திற்கு மிகவும் பொருத்தமான அனுகுமுறை. நன்றியுடனும் உவகையுடனும் - அப்துல் கலாம்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிதைகளும் மேற்கோல்களும் பாடல்களும் நிகழ்வுகளும் ஆங்காங்கே மிகச்சரியான இடத்தில் எடுத்தாண்டிருப்பதுவும் அவற்றை மார்க்கக் கோட்பாடுகளோடு ஒப்பிட்டு வித்தியாசப்படுத்திக் காட்டுவதும் சகோதர மதத்தவரின் மனம் நோகாமல் அழைத்தாலும் ஏறத்தாழ 'வாருங்கள்' என்று மல்லுக்கட்டுகின்றன. இந்த யுக்தி வெற்றியின் அடையாளம்.

அல்லாஹ் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்து வக்தில் பரக்கத் செய்ய என் ஆத்மார்த்த துஆ.

crown said...

இன்னா செய்தோருக்கும் இனியவையே செய்வதே இஸ்லாம்.”

ஒரு அழைப்பாளன் இந்த ரீதியில் இன்முகத்தோடு வெறுப்போரையும் மறுப்போரையும் சந்தித்து புரிந்துணர்வுகளை வளர்ப்பது காலத்தின் கட்டாயம். முஸ்லிம்களுக்கு எதிரான முனைப்புகள் வளர்ந்தோங்கி இருக்கும் இந்நாட்களில் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தின் சான்றுகள் நம்மிடமிருந்து தொடங்கப்படவேண்டும். வழி தவறியோருடன் வார்த்தைகளால் மல்லுக்கு நிற்காமல் வழிகாட்டும் நெறிமுறைகளை அவர்களுக்கு இன்முகத்துடன் எடுத்துரைக்க வேண்டும். முஸ்லிம்களின் மீது எடுத்துவைக்கும் தவறான வாதங்களுக்கு தன்மையாக பதில் சொல்லப் பழக வேண்டும். சரித்திரச் சான்றுகளுடன் சன்மார்க்கம் பரப்ப வேண்டும்.
----------------------------------------------
தாவாவின் தாரக மந்திரம்!பாடம் நடத்தியிருக்கீங்க!அல்ஹம்துலில்லாஹ்!
வரும் காலம் மதரசாக்களில் இந்த நூலை சிறப்பு பாடமாக வைக்க பரிந்துரைக்கலாம்.

Ebrahim Ansari said...

அன்புடைய தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம். தங்களின் அன்பான கருத்துரைகளுக்கும் தொடர் நெடுகிலும் தாங்கள் தரும் தொடர் ஊக்கத்துக்கும் என்றும் கடமைப் பட்டவனாக இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக!

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அபு இப்ராஹீம், மரியாதைக்குரிய மச்சான் அவர்களுக்கும் அன்பான சலாம் . நன்றி.

Ebrahim Ansari said...

நன்றியுடனும் உவகையுடனும் கருத்திட்ட சகோதரர் கலாம் அவர்களுக்கு ஜசக்கல்லாஹ் ஹைரா. நான் அறிந்தவரை முதன்முதலாக கருத்திட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வரவேற்கிறேன்.

தங்களுடைய கருத்துக்கள் எங்களுக்கு உற்சாகம் தருபவையாகும்.

Ebrahim Ansari said...

பாசத்துக்குரிய தம்பி கிரவுன்

வ அலைக்குமுஸ் சலாம். தூரங்கள் நம்மைப் பிரித்துவிடாது என்று அடிக்கடி அல்ல அன்றாடம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். நன்றி.

வஸ்ஸலாம்.

Yasir said...

Masha Allah...தங்களின் இறுக்கமான வேலைகளுக்கு மத்தியில்...மத நல்லிணக்கம் பேணும் இப்போதைக்கு அவசியமான இந்த மாதிரி பதிவுகளை அழகான வரலாற்று உதாரணங்களுடன் தந்திருப்பது தங்களின் ஆழ்ந்த அறிவை பறைச் சான்றுகின்றது. துவாக்கள்

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

This episode is shining with more secular and showing universality of religions of the world. The thoughts and relevant poems are helping to unit the people with universal understanding of humanity and the Creator God Almighty. This understanding is vital for the nation of maturity.

The highlighting of tendencies of human to create his own way of religious interpretations and following have been from beginning of the times. Still its continues...

May God Almighty is sufficient.

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

அன்பின் மருமகனார் யாசிர் மற்றும் அன்புத் தம்பி அஹமத் அமீன் ஆகிய இருவருக்கும் தங்களின் அன்பான கருத்துக்களுக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், காக்கா,

ஜஸக்கல்லாஹ் ஹைர், நல்லதொரு அலசல். பிற மதத்தவர்கள் அல்லாஹ் யார் என்பதனை அறியாததால் மற்றவர்களோடு அல்லாஹ்வை இணைத்து சமூக நல்லிணக்கம் என்று எழுதுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் என்றால் யார் என்பதை அறிமுகப்படுத்த வேண்டியது நம் கடமை.

இந்த பதிவை வாசிக்கும் முன்பு
ஆயத்துல் குர்ஷி தரும் படிப்பினை என்ற பயானை கேட்டுக்கொண்டிருந்தேன்..
அல்லாஹ் என்றால் யார்? என்பதை பெரும்பாலான முஸ்லீம்கள் அறியதவர்களாக. உள்ளார்கள்.

ஆயத்துல் குர்ஷி தரும் படிப்பினை என்ற இந்த பயான் நம் அனைவருக்கும் இன்ஷா அல்லாஹ் பயனளிக்கும்.

https://www.youtube.com/watch?v=UgPzTDDaUKs

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு