Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பட்டோலை.. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2016 | , , ,

குற்றப்பத்திரிக்கை, பதிவேடு, குறிப்பேடு, கையேடு என்று பலஏடுகள் என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம். இவைகளெல்லாம் மனிதர்களால் இவ்வுலகில் எழுத்தபடுபவைகள்.
வகையான

பதிவேடு - தகவல்கள் மற்றும் விடயங்களைப் பற்றிய விவரமான குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும் ஏடுகள் / புத்தகங்கள். இதில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு, நில உரிமைப் பதிவேடு, நிலப் பதிவேடு, மருத்துவமனையில் பதிவேடு, பற்று வரவு கணக்குப் பதிவேடு என்று பல வகையான ஏடுகள் அதன் துறை சார்ந்து ஏகப்பட்டது உள்ளன.

கையேடு – ஒரு பொருள் அல்லது ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் நூல். உதராணமாக – வாகனக் கையேடு, அலைபேசி கையேடு, கல்லூரி கையேடு, அரசு கையேடு.

குறிப்பேடு - குறிப்புகளை எழுதுவதற்கென உள்ள வெற்றுப் பக்கங்களை கொண்ட புத்தகம்.

குற்றப்பத்திரிகை – குற்றம் செய்தவர்களை பற்றி காவல்துறை தயாரிக்கும் ஒரு ஆவணம், குற்ற பத்திரிக்கையில் புகார் மனுதார், மற்றும் நடந்த சம்பவத்தை விவரிக்கும் சாட்சிகள் ஆகியோரின் வாக்கு மூலங்கள் இருக்கும். விசாரணை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரி அனைவரது வாக்கு மூலம் இருக்கும். இந்த ஆவணம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

இப்படி நிறைய பெயர் கொண்ட ஏடுகளை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இவைகள் எல்லாம் இவ்வுலகில் நாம் காணுபவைகளே.

ஆனால் இங்கு உங்களிடம் பகிரப்போகும் ஏடு பற்றிய தகவல்கள், நாளை மறுமையில் நீதி விசாரனையின் போது நம்மை படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்பு நம்மீது கொடுக்கப்படும் பட்டோலை புத்தகம் பற்றியதே.

அல்லாஹ் தன் அருள்மறை அல்குர்ஆனில் கூறுகிறான்.

“இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.”   (18:49)

இந்த அல்குர்ஆன் வசனத்திற்கான விளக்க உரையை கேட்க நேரிட்டது. உண்மையில் மெய் சிலிர்த்து போய்விட்டேன். நாளை மறுமையில் நம்முடைய பட்டோலையில் என்னவல்லாம் வரப்போகிறதோ என்ற பயத்தோடு என் தேடலை ஆரம்பித்தேன்..

அல்லாஹ் தன் அருள்மறை அல்குர்ஆனில் மேலும் கூறுகிறான்.

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது (83:7)

நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது. (83:18)

நம்முடையை பெயர் `இல்லிய்யீன்` பதிவேட்டிலா? அல்லது `ஸிஜ்ஜீன்` பதிவேட்டிலா? என்ற கவலை நமக்கு இந்த அல்குர்ஆன் வசனங்களை வாசித்த பின்பு எழாமல் இருக்காது..

நாளை மறுமையில் மனிதர்களின் நன்மை தீமைகள் எடைபோடப்படுவது மட்டுமின்றி அவர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான விபரங்கள் உள்ளடக்கிய பதிவேடுகளும் அவர்களின் கைகளில் வழங்கப்படும். இதை அல்குர்ஆன் பல்வேறு இடங்களில் விரிவாகக் குறிப்பிடுகின்றது.

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயமும் முழந்தாளிட்டிருப்பதைக் காண்பீர். ஒவ்வொரு சமுதாயத்தவரும் தத்தமது பதிவேட்டின் பால் அழைக்கப்படுவர். 'நீங்கள் செய்ததற்குரிய கூலி இன்று வழங்கப்படும். இது உங்களைப் பற்றிய நன்மைகளைக் கூறும் பதிவேடாகும். நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்ததை நாங்கள் பதிவு செய்து கொண்டிருந்தோம்' (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 45:28-29)

பதிவேடுகள் வழங்கப்படாத எந்தச் சமுதாயமும், எந்த மனிதனும் இருக்க மாட்டார்கள் என்பதை இவ்வசனம் நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. 

இருப்பினும், அர்ஷின் அதிபதியான அல்லாஹ் இது போன்ற பதிவேடுகளை காட்டாமல் யாரையும் தண்டிக்கலாம். அல்லாஹ் மட்டுமே நீதியாளன், யாருக்கும் அநீதி இழைக்காதவன் என்பதை மனிதர்கள் சந்தேகத்துக்கிடமின்றி புரிந்து கொள்ளவே பதிவேடுகள் மனிதர்களிடம் காட்டப்பட்டு பின் விசாரனை செய்யப்படுகிறது என்பதை பின் வரும் இறை வசனம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

'மேலும் உண்மையைப் பேசும் பதிவுப்புத்தகம் நம்மிடம் உள்ளது. அவர்களுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது' (அல்குர்ஆன் 23:62)

இவ்வுலகில் காவல்துறை விசாரனைக்கு பின்பே குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று மனிதன் எழுதிய சட்டத்தின் சாரமாக உள்ளது. ஆனால் விசாரனை என்ற பெயரில் அடியும், உதையும், துன்புறுத்தலும் கொடுத்து, பொய் சாட்சியங்கள் தயாரித்து அப்பாவிகளின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அதன் அடிப்படையில் அந்த அப்பாவிக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது. ஆனால் நாளை மறுமையில், மனிதன் தான் செய்தவைகளைக் கொண்ட பதிவேட்டை காட்டி அந்த மனிதனிடம் அவைகளை வாசிக்க அவகாசம் கொடுத்த பிறகே அல்லாஹ்வின்  விசாரனை தொடங்கும். இதுவே ஏக இறைவன் எந்த மனிதனுக்கும் அநியாயம் செய்யமாட்டான் என்பதற்கு மிகப்பெரிய சான்று.

இந்தப் பதிவேடு வழங்கப்பட்டு அதன் பின்னர் விசாரிக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றாலும் அந்தப் பதிவேடு வழங்கப்படும் முறையிலிருந்து ஒவ்வொருவனும் தனக்குரிய தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்வான்.

வலது கையில் பதிவேடு வழங்கப்பட்டால் விசாரணை எளிதாக இருக்கும். இடது கையில் பதிவேடு வழங்கப்பட்டால் அவரது நிலை மிக மோசமாக இருக்கும். வலது கையில் வழங்கப்பட்டவர்கள் தமது பதிவேடுகளைப் படிப்பார்கள். தமக்குத் தெரிந்தவர்களையெல்லாம் அழைத்துப் படித்துப் பார்க்கச் சொல்வார்கள். இடது கையில் வழங்கப்பட்டவர்கள், தமது பதிவேட்டைப் படிக்கவும் தயங்குவார்கள். இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

எவருடைய பதிவேடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுமோ அவர் (மகிழ்வுடன்) 'வாருங்கள்! எனது பதிவேட்டைப் படியுங்கள், நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை திட்டமாகச் சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்' என்று கூறுவார். ஆகவே அவர் திருப்தியான வாழ்க்கையில் உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார். (அல்குர்ஆன் 69:19-22)

ஆனால் எவருடைய பதிவேடு இடக்கையில் கொடுக்கப்பட்டதோ அவன் 'எனது பதிவேடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாமே! எனது கேள்விகணக்கு எதுவென்பதை நான் அறியவில்லையே! (நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே என்று கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)

அந்தப் பதிவேட்டில் சிறிய விஷயம் பெரிய விஷயம் என்ற பேதமில்லாமல் அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.  இதோ தெளிவான அல்குர்ஆன் வசனம்.

பதிவேடு வைக்கப்படும். அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர். மேலும் அவர்கள் 'எங்கள் கேடே! இந்த ஏட்டுக்கு என்ன நேர்ந்தது? சிறியவையோ, பெரியவையோ எதையும் வரையறுக்காமல் இந்த ஏடு விட்டுவைக்க வில்லையே' என்று கூறுவார்கள். இன்னும் அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பீர்கள். ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். (அல்குர்ஆன் 18:49)

அந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டவை ஏதோ திடீரென பொய் சாட்சிகள் வைத்து தயாரிக்கப் பட்டவையல்ல. மாறாக மனிதன் இவ்வுலகில் வாழும் போதே அவனுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்வைகள். அதுதான் மனிதனிடம் வழங்கப்படும். இதோ அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இருவர் எழுதிக் கொண்டிருப்பார்கள். கண்காணித்து எழுதக் கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்தச் செயலையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் 50:17-18)

மனிதனின் ஒவ்வொரு அசைவுகளும், சிறிய செயல்களும், பேசிய சொற்களும், கண் சிமிட்டல்களும், காதில் கேட்டவைகளும், மனதில் தோன்றியவைகளும் என்று ஏகப்பட்டவைகளை பதிவு செய்யப்பட வேண்டுமானால் ஏடுகள் எவ்வளவு பிரமாண்டமானதாக இருக்க வேண்டும். அது எப்படி வலது கையால் பார்க்குமளவுக்கு இருக்க முடியும் என்று விதண்டாவாதம் புரிவோர் கேட்கக் கூடும். ஆனால் ஒரு கிடங்கு (warehouse) நிறையை உள்ள ஆவணங்களை  சின்ன ஞாபகப் தொகுப்பு தகடில் (mini memory card) சேமித்து வைக்க முடியும் என்றால், இவ்வுலகை படைத்து, நியாயதீர்ப்பு நாளின் அதிபதி, ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வால் அதை விட மேலும் எளிய வழியில் நிச்சயமாக வைத்திருக்க இயலும். இதுவே நம்முடைய ஈமான். 

நாளை மறுமையின் விசாரனை முதன் விசாரனை அவனுடைய தொழுகை பற்றியே இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பின் வரும் ஹதீஸ் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அடியான் முதன் முதலில் தொழுகை பற்றியே விசாரிக்கப்படுவான். அது சரியாக இருந்தால் வெற்றியடைந்து விட்டான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விட்டான். கடமையான தொழுகைகளில் ஏதும் குறைவு இருந்தால், என் அடியானிடம் உபரியான தொழுகை ஏதுமுள்ளதா? என்று கவனியுங்கள் என்று இறைவன் கூறுவான். அந்த உபரியான தொழுகை மூலம் கடமையான தொழுகையில் ஏற்பட்ட குறை நிவர்த்திக்கப்படும். ஏனைய நல்லறங்களும் இவ்வாறே என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதி, நஸயி)

இன்னும் நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள், அல்குர்ஆன் வசனங்கள் மறுமை விசாரனை பற்றி உள்ளன. சிலவற்றையே இங்கு எடுத்துக்காட்டியுள்ளேன். இந்த பதிவில் தவறுகள் இருந்தால் உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள்.

நாம் என்னவெல்லாம் பேசுகிறோம், வாசிக்கிறோம், யோசிக்கிறோம், எழுதுகிறோம் ஆனால், நாளை மறுமையில் நம்முடைய ஏடு வலது கரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நமக்கு எழ வேண்டும். கையேடு, குறிப்பேடு என்று ஏகப்பட்ட ஏடுகளை நாம் இவ்வுலகில் பார்க்கிறோம். நாம் செய்யும் எல்லா செயல்களும் நம்முடைய ஏட்டில் உடனுக்குடன் எழுத்தப்பட்டுக் கொண்டே உள்ளது என்பதை நாம் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

நாளை மறுமையில்,
நம் தொழுகை. 
இறைக்கட்டளையை மறந்து வாழ்ந்தது.
மனிதர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
பிறருடைய மானத்தில் விளையாடியது.
பெற்றோரை துன்புறுத்தியது.
சொந்தங்களை பேணாதது.
வட்டி வாங்கியது, கொடுத்தது.
சொத்து அபகரிப்பு.
தொழிளாளர்களுக்கு முதலாளி செய்த அநீதம், 
முதலாளிக்கு தொழிளாளி செய்த அநீதம் 

என்று நம் ஏட்டில் பதியப்பட்டவைகளில் அனைத்து செயல்களைப் பற்றியும் அல்லாஹ்வின் விசாரனையில் நிச்சயம் உண்டு. 

இவ்வுலகில் ஓர் சிறிய குற்றம் செய்தவன்கூட பலகட்ட விசாரனை, நீதிமன்ற வாயிதா என்று, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்று நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும் போது, தன் முகத்தை மூடிக்கொண்டே செல்லுகிறான். நாளை மறுமையில் நம்முடைய மனதில் தோன்றிய கேடுகெட்ட தவறான சிந்தனைகள் பற்றியெல்லாம் நம்மிடம் கொடுக்கப்படும் அந்த ஏட்டில் பதியப்பட்டு, நாளை மறுமையில் விசாரிக்கப்பட்டால், தலைக்குனிவு ஏற்பட்டு முகத்தை மூடிக்கொள்ள ஒரு துணிகூட அந்த மறுமை நாளில் நமக்கு கிடைக்காது. அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

நம்முடைய பிறந்த தேதியை நாம் அறிந்திருக்கிறோம். நம்முடைய இறப்பு நாளை யாராலும் அறிய முடியாது. நமக்கு  மரணம் எந்த நிலையிலும் வரும். அந்த மரணம் நம்மை வந்தடைவதற்கு முன், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோமாக. நாளை மறுமையில் நம்முடைய அந்த ஏடு நம் வலது கரத்தில் கிடைக்கபெற்று, நபிமார்கள், நல்லோர்கள், சாலிஹீன்களோடு சொர்க்கத்தில் பிரவேசிக்கும் பாக்கியத்தை வல்லவன் ரஹ்மான் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.

மீண்டும் மற்றொரு பதிலில் சந்திக்கலாம்.

தாஜுதீன்

8 Responses So Far:

Abu Easa said...

மா ஷா அல்லாஹ்!

அவசியமான பதிவு

அல்லாஹும்ம இன்னக அ'ஃபுவ்வன் துஹிப்புல் அ'ஃப்வ ஃபஃ'ஃபு அ'ன்னீ

Shameed said...

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வெல்கம் பேக், தம்பி தாஜுதீன்.

பட்டோலை என்றொரு நற்செய்தியோடு மீண்டும் எழுத வந்திருப்பது மகிழ்வளிக்கிறது.

ஆராய்ச்சி தோரணையிலான உங்கள் பதிவுகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை.

வாழ்த்துகள்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வெல்கம் பேக், தம்பி தாஜுதீன்.

நடுங்கச் செய்யும் பதிவு மட்டுமல்ல சிந்திக்கச் செய்யும் பதிவு மட்டுமல்ல மிகவும் கவலைப்படவும் வைக்கிறது.

வாழ்த்துக்க்கள். மீண்டும் அனைவரும் வரவேற்கிறோம். இன்னும் காத்திருக்கிறோம்.

ZAKIR HUSSAIN said...

Welcome Brother Tajudeen....We are meeting in this web after a long silence.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதிய இந்த பதிவை வாசித்து வருத்திட்ட பாசமிகு சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

உண்மையில் உள்ளத்தை நடுங்க வைத்து சிந்திக்கத் தூண்டியது இந்த வசனம் (அல்குர் ஆன் 18:49)

இன்ஷா அல்லாஹ் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கலாம்.

Unknown said...

'பட்டோலை' என்று காலங்காலமாக மொழிபெயர்க்கப்பட்டுவந்தாலும், அது சரியான மொழிபெயர்ப்பாகாது! பட்டோலை = பட்டு+ ஓலை (பட்டினால் ஆன ஓலை). சுவனவாசிகளுக்கு வேண்டுமானால், இது பொருந்தி வரலாம். ஆனால், பொதுவாகச் சொல்லவேண்டுமாயின், 'வினைகளின் பதிவேடு' என்றோ, 'நீட்டோலை' என்று ஒரே சொல்லாகவோ இருந்தால் - மொழிபெயர்க்கப்பட்டால் பொருத்தமாகும் என்பது என் கருத்து.

ஒரே சிரிப்பும் கிண்டலும் மிகைப் பாராட்டுகளும் நக்கல்களும் விளையாட்டும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் தாஜின் இப்பதிவு, நம்மைச் சிந்தித்துத் திருந்த வைக்கும் என்று கருதுகின்றேன்.

ஜஸாக்கல்லாஹ்!

இப்னு அப்துல் ரஜாக் said...

அவசியமான நினைவூட்டல்
நன்றி சகோ தாஜ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு