அப்போதெல்லாம் ஐந்து வயது முடிந்து ஆறு வயது தொடங்கிய பின்னரே ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பர். நான் 1960 ஆம் ஆண்டில் எங்கள் ஊரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன்.
சிலுவை முத்து வாத்தியார் தமிழ் நீருக்கு வைத்த பாத்திதான் இன்னும் என்னுள் நேர்த்தியாய்த் தமிழை வாழச் செய்கிறது!
நாற்காலியில் அமர்ந்தபடி என் பேரை நீட்டிச் சொல்லி அழைத்து அருகில் நிறுத்திச் சேர்த்தணைத்து , கசங்கி நிற்கும் சட்டையை நீவி விட்டு, உள்மடிந்து கிடக்கும் காலரை வெளியே எடுத்து விட்டுச் செல்லமாய்த் தலை முடியை ஒதுக்கி விட்டு ஆனா ஆவன்னா சொல்லித் தந்து அன்பாய்த் தமிழமுது ஊட்டிய என் முதல் ஆசான். கற்பலகையும் கற்குச்சியும் கொண்டு தமிழை எழுதக் கற்றுத் தந்தார்.
இரண்டாம் வகுப்பு 'கஞ்சிப்புர'யில்.
கல்விக் கண் திறந்த கர்ம வீரர் தர்மமாய் ஏழைகளுக்கீந்த மதிய உணவு உருவாகும் கட்டிடம்தான் எங்கள் நாஞ்சில் தமிழில் 'கஞ்சிப்புர'!
வலப்புறம் "ஆம்பள ஒண்ணுப்புர"
இடப்புறம் " பொம்பள ஒண்ணுப்புர"
இரண்டிற்கும் நடுவே தனித் தீவாய்க் கஞ்சிப்புர.
அதன் முன்னும் பின்னும் வாசல் உண்டு. சுற்றிலும் வெற்றிடம்.
முன்வாசல் மாணவர்க்கும் பின் வாசல் உணவு சமைக்கும் கிழவிக்குமாம்.
அப்புரயில் ஒப்புற அமர்ந்து தப்பற வளர்ந்தது என் தமிழ்.
"கேட்டெழுத்து" என நீட்டி முழக்குவார் நாயுடு வாத்தியார்.
அவர் சொல்லும் சொற்களை நின்ற படியே கேட்டு எழுத வேண்டும்.
அணில், ஆடு, இலை , ஈக்கள், உரல்.........
"எழுதியாச்சாலே? சிலேட்டைக் கீழே போடு"
"டமார் டமார்" என ஒலி எழப் படார் படார் எனக் கீழே விழும் சிலேட்டுப் பலகை.
அதன் பெயர்தான் கற்பலகையே தவிர அது கல்லன்றல்லோ?
உடைந்து விடும். வீட்டில் அடி விழும். மாற்றாகப் புது "தகர சிலேட்டு"க் கிடைக்கும் -- உடைக்காமல் இருப்பதற்காக!
அது விழுந்து விழுந்து பெயின்ட் உதிர்ந்து எழுதவே முடியாமல் போவது தனிக்கதை.
வசதி உள்ளோர் பிள்ளைகளுக்கு மணி வைத்த சிலேட்டு.- கலர்க்குச்சி! இன்னும் பணக்காரப் பிள்ளைகளுக்குப் பொம்மைக் குச்சி.!அதைப் பார்த்து வீட்டில் போய் அழுது அரற்றிக் கொண்டு வருவோம் கலர்க்குச்சி.
முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனை போய்க் கடலில் இருந்து கொண்டு வருவோம் கடற்குச்சி.
கடற்பஞ்சு எனும் ஒரு பொருளும் எடுத்து வருவோம்.
சிலேட்டில் தண்ணீர் ஊற்றிக் கடற்பஞ்சால் தேய் தேய் எனத் தேய்த்துக் கழுவுவோம் எழுத்து "பளிச்"செனத் தெரிவதற்காக!
" நல்லா பத்துதா பாத்துக்கடே"
அந்த இனிய வாய்ப்பு என் மக்களுக்கு இல்லாமலே ஆகிவிட்டது.
மூன்றாம் வகுப்பு எனக்கு இரட்டை வரி நோட்புக்கும் மொட்டைப் பென்சிலும் தந்தது-- தமிழை அழகிய வடிவில் எழுதிப் பழக! அவ்வகுப்பில் தமிழ் உரைநடை/ பாடல் கற்றேன்.
அப்போது இந்தியாவைச் செஞ்சீனா போரால் வளைத்திருந்தது. மீசை சுப்பிரமணியம் வாத்தியார் சின்னச் சின்ன மழலைப் பாடல்களை அச்சிட்டுப் புத்தகமாகத் தருவார். ஐந்து பைசா விலையில்.
" சிங்க நாதம் கேட்குது சீன நாகம் ஓடுது
சுதந்திரத்தின் சக்தி மிக்க சங்க நாதம் கேட்குது"
எனப்பாடுவோம்.
பாடல்/ கவிதை வடிவில் தமிழ் என்னுள் நுழைந்தது.
ஆனந்த விகடன் இதழில் "சிறுவர் வண்ண மலர்" என்று , கட்டியான தாளில் குழந்தைகள் பக்கம் அச்சடித்து வரும். என் தாயார் அதையெல்லாம் பிய்த்தெடுத்துத் தைத்துத் தருவார் சிறு தொகுப்பாக!
அதைப் படித்துக் கதை வடிவிலும் தமிழை உள்வாங்கினேன்.
நான்காம் வகுப்பில் தமிழாசிரியர் ஒரு முற்றிய பழம். அவர் பெயர் தெரியாது - "பாட்டா" எனக் கூறுவோம். நல்ல தமிழ் சொல்லித் தந்தார்.
ஐந்தாம் வகுப்புப் பல புதுமைகளைத் தந்தது பேனாவும் நான்கு வரி நோட்புக்கும்.
காரணம் ஆங்கிலம் அறிமுகம்.
A B C D
எழுத -- படிக்கக் கற்றுத் தந்த நாகம்மை டீச்சர்.
எங்கள் பகுதித் கடிதக்கார (POST MAN) ஐயர் மகளானதால் எங்களுக்கெல்லாம் "கடிதக்காரி".
ஆம்பள வாத்தியார்" மட்டுமே பாடம் எடுத்ததுபோய் அழகாய் வந்த "பொம்பள டீச்சர்".
அதனால் இன்றுவரை நெஞ்சில் நிலைத்திருக்கும் உருவம்
நேர்த்தியாய் உடை,
நிமிர்ந்த நடை!
சிவப்பாய் அழகாய்
வட்ட முகத்தில் நெற்றிப் பொட்டு.
"பூச்சை"க் கண்கள்!
நீண்ட மூக்கில் சின்ன மூக்குத்தி,
சிவந்த உதடுகள்; சிரித்தால் ஒளிரும் பல்வரிசை.
இங்கிலீஸ் டீச்சர்!
வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.
வர்ணனை எல்லாம் இந்த வயதில் வந்தது. அந்த வயதில் பாடம் சொல்லித் தந்த"ஒரே பொம்பளடீச்சர்"
"பொம்பள டீச்சருக்கு மட்டும்தானே இங்கிலீஷ் தெரியும்."
A B C D தப்பாய்ச் சொன்னால் அருகே அழைத்து, மேற்கையின் உட்புறம் இரு விரல்களால் கிள்ளுவார்.
"கடிதக்காரி பிச்சிட்டாடே" என அடுத்த மாணவனிடம் மெதுவாய்ப் புலம்புவோம்.
டீச்சரைப்போல் அழகாயில்லை ஆங்கிலம், அதனால் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது; ஆனாலும் படிக்காமல்; விட்டதில்லை-- பரீட்சையாயிற்றே?
இன்று நான்காம் வகுப்பில் படிக்கும் என் மகன் "
can anybody help to solve this problem" என்று கேட்கிறான். அன்று அதன் ஒரு சொல் கூட எனக்குத் தெரியாது.
ஐந்தாம் வகுப்பில் தமிழ் சொல்லித் தந்தவர் வரீது வாத்தியார்.
ஆறும் இப்படியே கடந்தது.
ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது.
'தமிழ் வாழ்க! இந்தி ஒழிக" என நான் முழக்கமிட்டேன் -- எல்லோருடனும்.
ஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் 'பாண்டை"ஆறுமுகம்.
பாண்டை என்பது மதுக்கஷாயம் ! அவர் அதைக் குடிப்பதால் அவர் 'பாண்டை வாத்தியார்."
அடிப்பார் ; ஆனால் அடுக்குத் தமிழில் பாடம் சொல்வார். தமிழின் ஓசையும் ஒலியும் என்னை ஈர்த்தது இங்கேதான்.
எட்டாம் வகுப்பில் உதுமான் வாத்தியார். இனிமையாய்த் தமிழ் சொல்லித் தந்தார்.
எட்டாம் வகுப்பில் நான் நடுநிலை இலக்கிய மன்றத் துணைச் செயலாளர். மன்ற விழாவில் இலக்கிய உரையாற்றுவதற்காகப் பேராசிரியர் பெருமாளை அழைக்க அவரில்லம் சென்றேன். மாலை நேரம். வயிற்றுக்குச் சிற்றுண்டி தந்தார். ஆனால் அதைவிடப் பேருண்டி அங்கிருந்து கொண்டு வந்த "அபிதானசிந்தாமணி"தான்.
அதைப் படித்தேன்; படித்தேன்; அப்படிப் படித்தேன்.
தேனிழ் மூழ்கிய வண்டானேன். தமிழ் என்னுள் தழைத்தது; வளர்ந்தது; ஒளிர்ந்தது.
ஒன்பதாம் வகுப்பில் சாகுலமீது வாத்தியார் தமிழாசிரிய்ர்.
வந்த முதல் நாளே
"யாரெல்லாம் கைடு கொண்டு வந்திருக்கா"
நான்! நான்! நான்!
"எல்லாரும் கொண்டாங்கலே " என அனைத்தையும் வாங்கி ஜன்னலூடே வெளியே வீசி எறிந்தார்.
"இனி நாஞ்சொல்றதுதாம் பாடம்; நான் தர்ரதுதான் நோட்ஸ்; புரிஞ்சுதா?"
நிமிர்ந்து உட்கார்ந்தேன் வகுப்பில்.
யாப்பிலக்கணத்தை--
சீர், தளை. அடி, தொடை எனச் சிக்கலின்றி என்னுள்ளத்தில் ஏற்றி வைத்தார். தமிழ் என்னுள்ளே ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்ந்தது.
பத்திலும் பதினொன்றிலும் ஆரோக்கியமுத்து வாத்தியார். தமிழ்ப் பாடத்தில் நான் ஒன்றாம் நிலை. மனப்பாடப் பகுதியெல்லாம் முதலாவதாக ஒப்புவிப்பேன்.
புகுமுகவகுப்பு நாகர்கோவில் கிருத்துவக் கல்லூரியில்.சிறப்புத் தமிழை நான் தேர்வு செய்ததால் தமிழாசிரியர் ஆறுபேர்.
எனக்குள் ஆறிலும் தேறியது ஒருவர் மட்டுமே. இயேசுதாஸ்.!
அவரால் தமிழ் என்னை மேலும் நெருங்கியது.
இளங்கலை இந்துக்கல்லூரியில். முதல் இரண்டாண்டுகள் மொழிப்பாடத்திற்கு எத்தனையோ "போராசிரியர்கள்" ஆனால் மகாலிங்கம்பிள்ளை மட்டுமே "பேராசிரியர்" .
மலையாளம் வகுப்பைப் புறக்கணித்துத் தமிழ் வகுப்பில் மலையாள மாணவர்களையும் அமரச் செய்யும் அற்புத ஆசிரியர்.
கண்ணதாசன், பாரதிதாசன் தொகுதிகள், அப்துல்ரகுமானின் 'பால்வீதி', அபியின் 'மெளனத்தின் நாவுகள்' , கமராசனின் 'கறுப்புமலர்கள்' , மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' , மீராவின் 'ஊசிகள்' , வானம்பாடிக் கவிஞர்கள் எனத் தேடிப் படித்தேன்.
தமிழ் என்னோடு இரண்டறக் கலந்ததால் முதுகலையில் தமிழ் படிக்கச் சென்றது நெல்லை இந்துக்கல்லூரிக்கு.
பேராசிரியர் பாலு.
இலக்கணம் என்றால் வேம்பாகும் மாணவர்க்கு. ஆயின் தொல்காப்பியத்தைத் தேனாகப் புகட்டியவர் பேராசிரியர் பாலு.
தமிழாய்வு கேரளப் பல்கலைக் கழகத்தில். என் ஆய்வு நெறிகாட்டி , கவிமணி தே.வி.யின் பேரர் டாக்டர் குற்றாலம்பிள்ளை.
என் தமிழில் இருந்த சின்னச் சின்ன பிசிறுகளை நேர்த்தியாய்ச் செதுக்கி மிளிர வைத்த பண்பாளர். அவரில்லத்தில் என்னை அழைத்து வைத்து எனக்கில்லா அக்கறையையும் சேர்த்துக் காட்டி என் ஆய்வேட்டை என்னிடமிருந்து பிறப்பித்த பொறுமையின் சிகரம்.
நினைவுகள் நீந்திக் கொண்டிருக்கும்வரை என் தமிழாசான்களும் என்னுள் நிற்பர்.
நாஞ்சிலன்
-இது ஒரு மீள்பதிவு
துபை வானலை வளர்தமிழ் மன்றம் சார்பாக , துபையிலிருந்து வெளியாகும் "தமிழ்த்தேர்" -2010 அக்டோபர் மாத இதழில் வெளியானது.
7 Responses So Far:
நாஞ்சிற்றமிழ் ஊஞ்சலாடுகின்றது. டாக்டர், இன்னும், இன்னும் தொடரலாமே. பழம் பழையதானாலும், இன்னும் இனிக்கத்தான் செய்கிறது.
அது சரி,,,,, 'டாக்டர்' என்ற சொல்லுக்கு எவன் 'முனைவர்' என்று மொழிபெயர்த்தான் என்று சொல்வீர்களா? என்னிடமுள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிகண்டில் 'முனைவர்' என்ற சொல்லுக்கு, 'கடவுள்' என்றும், 'பகைவன்' என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது! ஒருவேளை, 'க்ரியா'வில் சேர்த்திருப்பார்களோ?
நேற்றைய முன் அன்று எனது 'நல்ல தமிழ் எழுதுவோம்' எனும் நூல் 'இலக்கியச் சோலை' பதிப்பகம் வழியாக அதிரையில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்தீர்களா?
படித்தேன்;
படித்தேன் குடித்ததுபோல் களித்தேன்
துளித்தேன் சிந்தாமல் சுவைத்தேன்
அழகு தமிழில் பேரழகு நடையில் பெற்றம்பெரு நினைவுகள்!
படித்தவன் எழுத்தாளன் எவனாக இருந்தாலும் பண்பும் முதிர்ச்சியும் எழுத்தில் வேண்டும். கற்றது(மார்க்க அறிவும் சேர்த்துத் தான்) கை மண்ணளவே. எனவே பணிவும் வேண்டும்.
அழகிய தமிழ் நடை
வேரில் பழுத்த பலாப்போல் இனித்தது நாஞ்சில் தமிழ்.
//படித்தவன் எழுத்தாளன் எவனாக இருந்தாலும் பண்பும் முதிர்ச்சியும் எழுத்தில் வேண்டும். கற்றது(மார்க்க அறிவும் சேர்த்துத் தான்) கை மண்ணளவே. எனவே பணிவும் வேண்டும்.// புரியலெ!
அஸ்ஸலாமுஅலைக்கும்.த.மி.ழ்=அமிழ்தம்(கற்பனை சொல் பதம்)ஆனால் அளவான சுவையில் கிண்டிய அதிரை ஹல்வா சுவையில் இருந்தது இந்த ஆக்கம்!
Post a Comment