அன்னையவள் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
இன்பமெனும் செல்வமென எந்நாளும் காத்திருந்து,
தன்னலமே தான்மறந்து தரணியிலே வாழ்ந்திருக்கும்!
தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!
தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ?
முழுமைபெற்ற இலக்கியத்தை, முற்றுமுணர் மாந்தர்களை,
பழுதறவே தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவகன்ற வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்தெங்கும் தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!
தந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனயனையே
முந்திவந்து காத்திடத்தான் முனைந்தாலும்; வீழ்ந்தெழுகும்
தந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்
சிந்தனையைக் கூராக்கிச் செப்பலிடும் சீர்மையன்றோ!
அன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?
நாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து,
நாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து,
நாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து,
நாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து
தளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல்
வளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவென
களம்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற
உளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ!
அத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை
முத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?
8 Responses So Far:
Assalamu Alaikkum
Dear brother Mr. Kaviyanban Kalam,
First of all my heartfelt condolences for the loss of your beloved father.
I have lost my father-Mr. Bahurudeen(Allah yarham) in the year of 2009. I have known the pain of losing a father. I deeply sorry for you brother.
The memories with our fathers will rewind and going back to those moments with them.
May God Almighty provide you and your family with beautiful patience.
I like your poem of which my father had explicitly mentioned his wish similar to the one below and he believed me.
//தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே//
Hope I have been progressing as per his wish. Alhamdulillah.
Jazakkallah khair brother,
B. Ahamed Ameen from Dubai
அன்பிற்குரிய கவியன்பன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்!
வலி சுமக்கும் வரிகளால் கவி படைத்துத் தந்துள்ளீர்கள்.
அடிக்கு அடி அப்பா புகழ் பாடும் செய்யுள் அடி மனத்தில் அடிக்கிறது.
அனுபவித்த உணர்வுகளை அறிவிக்கும் கவிதைகளே ஏனைய புனைவுகளையெல்லாம் விஞ்சி நிற்கும் என்ற வகையில் இந்தக் கவிதையைத் தங்களின் மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுகிறேன்.
தங்களை நேரில் சந்தித்துத் தழுவிய தருணத்தில் இவ்வலியைத் தங்கள் நரம்புகளின் நடுக்கத்தில் உணர்ந்தேன்; இப்போது தமிழின் உருக்கத்தில் உணர்கிறேன்.
ஒரே பதில்:
அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்!
B. Sabeer Ahmed abuShahruk
//தன்மகனை ஊர்போற்றும்
சான்றோனாய் ஆவதற்கே
முன்னிருத்தும் தந்தையவர்
முகமூடி கண்டிப்போ?//
அற்புதமான அனுமானம்!
எதார்த்தத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சும் எழுத்து!
கண்டிப்பும் கடுஞ்சொல்லும்
கையெடுக்கும் தடியடியும்
தந்தையர் தனைமறைத்து
தரித்துக்கொள்ளும் முகமூடி
தற்போதுகூட அதே முகமூடிகளோடுதான் அப்பாக்கள் நாம் இருக்கிறோம்.
இந்த முகமூடியை நிசம் என்று பயப்பட்டுவிடாமல் முகமூடிக்குள் மறைந்திருக்கும் அன்பை அடையாளம் கண்டதனால்தான் இந்த பாமாலை தந்தைக்கு, அல்லவா?
//தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?//
அழகான ஆரம் தந்தையர்க்கு!
அல்லாஹ் தங்களுக்கு இவ்விழப்பிலிருந்து மீள இதய உறுதியையும் பொறுமையையும் தந்தருள்வானாக ஆமீன்!
தந்தையின் தகுதிகளையும் தரத்தையும் சொல்லும் இந்தக் கவிதையை சாதாரண நாட்களில் புரிந்து கொண்டு பாராட்டுவதானால் அது எழுத்தால் இந்தக் கவிதையின் ஏற்றத்தை சொல்வதாக இருந்து இருக்கும்.
ஆனால்
இந்தக் கவிதை , அவரது தந்தையின் இழப்புக்குப் பின் இரண்டே நாட்களில் வடிக்கபட்டிருப்பதால் இதனுள்ளே இழந்து ஓடுவது ஒரு கவிஞரின் வார்த்தைகள் மட்டுமல்ல அந்தக் கவிஞனின் இதயம் வடிக்கும் கண்ணீரும்தான்.
வரிக்கு வரி தந்தையின் புகழ்பாடும் இந்தக் கவிதை ஒரு தனயனின் உண்மையான கதறலாகவும் இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதற்கு அனைவரும் வருந்துகிறோம்.
அல்லாஹ் கவியன்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தரப் போதுமானவன்.
(நினைவுகூரத்தக்கது!)
அந்த முடிச்சு!
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது
அருகிலிருந்து
அவதானித்துக் கொண்டிருந்தேன்
உடல்
கிடத்தி வைக்கப்பட்டு
உயிர்
கொஞ்சம் கொஞ்சமாக
பிடியை இழக்க
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது
அது
சம்பவித்து முடிவதில்
ஏதோ ஓர்
எதிர்ப்பு இருப்பதாக
என்னால்
உணர முடிந்தது
எனினும்
அது
கால்களின் விரல்களில் துவங்கி
மேல்நோக்கி
கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான
அடையாளங்களைக்
காண முடிந்தது
அது
கடந்து சென்ற வழியெல்லாம்
நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க
உஷ்ணம்
குறையத் தொடங்குவதைக்
குறிக்கத் தவறவில்லை நான்.
மரணப் படுக்கையில்
பார்வை
பிரத்தியேகமானது என்று
கேள்விப்பட்டிருந்தும்
அந்த வகையான பார்வையை
நான் என்
வாழ்நாளில் கண்டதில்லை
வெற்றான இலக்கில் குத்தி நின்றாலும்
அடையாளம் காண முடியாத பயமும்
அளப்பதற்கரிய ஆசைகளும்
அது
சம்பவித்துக் கொண்டிருப்பதை
அறியாததோர் அப்பாவித்தனமும்
உச்சகட்ட வலியை
அனுபவித்துக்கொண்டிருக்கும்
சுரணையோ இல்லாத நிலையும்
இன்னும்
அலைகளற்ற கடலை
அடிவானம் வரை பார்ப்பது போலும்
ஒரு பார்வை
மூச்சு இழுத்து விடுவதில்
முடிச்சு ஒன்று
விழுவதும் அவிழ்வதுமாகவே
எனக்குப் பட்டது.
ஒரு சில சமயங்களில்
அவிழ்ந்து முடிகிறதோவென
நினைக்க
சட்டென மீண்டும்
முடிச்சு விழ
அது
எதிர்ப்பை விஞ்சி
சம்பவிக்க முயல்வதைக்
காண முடிந்தது
நான்
வெளியேற எத்தனிக்கயில்
என் முகம் நோக்கியப் பார்வையில்
பிரியாவிடையின் சாயல் தெரிய
சன்னமான சப்தத்தோடு
அவிழ்ந்த முடிச்சில்
இரத்த வாடை வீசியதாக ஞாபகம்.
வாயிலைக் கடக்கும்போது
கோஷம் போன்றதொரு
அதிக ஓசையுடனான
அழுகுரலால்
அது
சம்பவித்து முடிந்திருக்கலாம்
என
யூகிக்க முடிந்தது.
தந்தையை இழந்த தனையனின் வலி என்னவென்று நானும் அறிவேன். கவியன்பரின் மனவேதனையில் வடித்தகவியில் நானும் கண்கலங்கிப்போனேன். கவலையுறாதீர். அன்பரே. சபூர் செய்யுங்கள். உங்கள் தகப்பனாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ்ஸை அல்லாஹ் வழங்குவானாக.!
அன்புமிகு கிளைகட்கும், கேண்மைகட்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்
என் வாப்பா அவர்களின் இறப்புச் சேதி கேட்டு, அன்னாரின் மறுமை வெற்றிக்காக “துஆ” செய்தும், எங்கட்கு நேரிலும், மின்மடலிலும், முகநூலிலும், அலைபேசியிலும், இந்தத் தளத்தின் பின்னூட்டத்திலும் சொல்லிக் கொண்டிருக்கும் உங்கட்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறேன்.
நீண்ட நாட்களாக இத்தளத்தில் உங்களைச் சந்திக்க இயலாமற் போனதற்கு மன்னிப்பையும் கோருகின்றேன்.
அன்புச் சகோதரர் அஹ்மத் அமீன் அவர்களின் தந்தையை இழந்த வலியை என் வரிகளுடன் ஒப்பிட்டமைக்கு மிக்க நன்றி.
அன்பின் கவிவேந்தர் சபீர்
அடிக்கடி வாப்பாவை நினைவு கூர்வதால் அடிக்கு அடி வரிகளும் நினைவுகளாயின; அடிவாங்காமலே வளர்ந்தவன் ஆதலால் செய்யுள் அடிகளால் நன்றி பகர்கிறேன் அன்னாரின் நிழலடிகளைப் பின்பற்றியவனாகவே....
ஆம். உண்மையான முகமூடியன்று; உள்ளத்தில் உவப்பை மறைத்து உதட்டில் மட்டும் உத்தரவுகளை உரக்கச் சொல்லும் ஓர் உணர்வு.
என் “தரவு கொச்சகக் கலிப்பாவை” படித்து, தரமிகுப் புதுக்கவிதையில் பெய்த கவிமழையில் நனைந்தேன்; மரபுக் கடலில் முத்துக் குளித்து விட்டு, புதுநதியிலும் நீந்தி நீராடினேன்.
அன்பின் அறிஞர் இப்றாஹிம் அன்சாரி காக்கா,
உங்களின் பேரவாவும் துஆவும் என்னை மீண்டும் இத்தளத்தில் கொணர்ந்து நிறுத்தியதற்கும் அதிலும் எந்தையை இழந்துத் தவிக்கும் இந்தச் சோகத்தில் இழையோடியதாற்றான் இத்துணை ஆழமாய் நீங்களும் இரசித்திருக்கின்றீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டியமைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.
கவி வரிகளால் கல்புகளைக் கவர்ந்த நண்பர் மெய்சா,
என் கல்பின் வலிகள் கவிவரிகளாய் அமைந்தன என்ற வாழ்த்தினுக்கும்; எந்தையின் மறுமை வெற்றிக்காக “துஆ” செய்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment