Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள்? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 12, 2016 | , , ,

போலி ஆலிம். 

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் நான் இருந்தபோது இரவு ஏழுமணிக்கு என் டெலிபோன் மணி கிணுகிணுத்தது. எடுத்துக் கேட்டேன். பேசியது நம்ம ஊர்காரர்தான்.

haji’ பாரூக், “பாரூக்! நம்மூரிலிருந்து… ஒரு ஆலிம் வந்திருக்கிறார்கள். அவருக்கு இன்று இரவு என் வீட்டில் விருந்து கொடுக்கிறேன். நீயும் வந்து கலந்து கொள்’’என்றார்.

ஆலிம் என்று மட்டும் விவரம் இல்லாமல் மொட்டை மொழுகட்டையாய் சொன்னால் யாருக்கு புரியும்? நம்மூரில் எத்தனையோஆலிம்கள் இருக்கிறார்கள். விவரம் முழுதும் தெரியாமல் இந்த நபரின் அழைப்புக்கு போய்விட்டால் அதன்பின் விளைவுகள் பெரும் தொல்லைகளை உண்டாக்கும்.

“வந்த விருந்தாளியை அழைத்துக் கொண்டு அங்கேபோ! இங்கே போ!” என்று சொல்வார்.

அவரை நாடி வந்த விருந்தாளியின். தேவைகளை பூர்த்தி செய்யும் பாரத்தை என் தலையில் கட்டி விட்டு நைஸாக அவர் ஒதுங்கிக் கொள்வார், இது அவரின் பாணி. 

“நம்மூரில் எனக்கு பெயர் தெரிந்த ஒரே ஆலிம்சா. ‘அப்துல் காதர் ஆலிம்சா’ மட்டுமே  அவர்களா வந்திருக்கிறார்கள்?’’ என்று கேட்டேன்.

’’இல்லை’’, வேறு ஒரு ஆலிம்சா வின் பெயரை சொன்னார் எனக்கு அவர் யாரென்று விளங்கவில்லை.

“இங்கே அவருக்கு தெரிந்த ஒரு பெரும் புள்ளி தன் காரில் அவரை இங்கேஅனுப்பி வைத்திருக்கிறார்.’’என்றார்.

ஆலிம்சாக்களும், மௌலானாக்களும் வெளிநாட்டிலும் சரி ,வெளியூரிலும் சரி, உள்ளூரிலும் சரி, பசையுள்ள பெரும்-பெரும் புள்ளிகளோடுதான் தொடர்பில் இருப்பார்கள். அவர்கள் முதலாளிகளின் சதுர சுகத்துக்கும் செல்வச் செழிப்புக்கும் புள்ளே குட்டிகளின் நல்வாழ்விற்கும் அல்லாஹ் இடத்தில் சதா மன்றாடி-மன்றாடி துவா கேட்பார்கள். இவர்கள் கை ஏந்தி வேண்டி கேட்ட துவா’ அல்லாஹ் இடத்தில் ‘கபூல்’ ஆகும். இந்த மௌலானாக்கள், ஆலிம்சாக்களின் கடைக்கண் கருணைப் பார்வை சாதாரண ஏழை எளிய மக்கள் மீதும் அன்றாடங் காய்ச்சிகள் மீதும் படுவதேயில்லை. இவர்களின் பார்வையின் நேர் கோட்டில் இந்த அப்பாவி ஏழைகள் வருவதில்லைபோலும். நம்ம ஊரு ஆலிம்சா வேறு ஒரு பெரிய புள்ளியின் காரில் வந்தது வரை சந்தோசம் இது யார் செய்த புண்ணியமோ என் தலைக்கு வந்த ஆபத்து தலப்பாவோடு போச்சு தொல்லை விட்டது.

அங்கே போய் பார்த்தபோது அவரை நான் தெரிந்து கொண்டேன். அவரை  எனக்கு  தெரியும். என்னை அவருக்கு தெரியாது, அவர் என்னை யாரென விசாரித்தார் பெயரைச் சொன்னேன், தெருவை சொன்னேன்  தந்தையின் பெயரை சொன்னேன், அவருக்கு என்னை யாரென்று விளங்கவில்லை. அவருக்கு விளங்காதுதான். அது அவரின் தப்பு அல்ல, காரணம் என் ‘தந்தை ஊரில் தோப்பு தொறவு’ தேங்காவாடி,சென்னையில் ஏற்றுமதி  இறக்குமதி பிஸினெஸ் ஏதுமில்லாமல் இருந்தவர். இவை எல்லாம் இருந்தால்தான் மனிதருக்கு உலகில் அரியாசனத்தோடு ஒரு சரியாசனம் கிடைக்கும். அது  ஒரு சறியாசனமாகவும் இருக்கும்.!

//கல்லானே யானாலும் 
கைப்பொருள் ஒன்று உண்டாயின் 
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர்-
இல்லானை இல்லாளும் வேண்டாள்-
மற்று ஈன்றுரெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாய் சொல்//

[சங்க கால தமிழ் பாட்டி அவ்வையார் பாடியது] இந்தப் பாடல் பாடி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் கூட இக்கருத்துக்களுக்கு எதிர் கருத்து பாடும் புலவனை இன்னும் எந்த தாயும் தன் கருவறையில் சுமக்கவில்லை]                                   அவருக்கு என்னை ஒரே வரியில் அறிமுகம் செய்து அவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு என்னிடம் எந்த அடையாளமும் இல்லை. ஆனால் அவரை எனக்கு தெரியும். செக்கடிப் பள்ளியில்  நடந்த ஒரு திருமணத்தின் போது ‘’புதுமணத் தம்பதிகள் இஸ்லாமிய நெறிமுறைப்படி தாம்பத்திய வாழ்க்கை நடத்துவது எப்படி?’’ என்று நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் திருக்குர்ஆன் ஹதிஸ் வசனங்களையும் எடுத்துக்கூறி சுமார் முக்கால் மணி நேரம் பயான் செய்தார். அடுத்து அவர் கம்பன் எக்ஸ்பிரஸில்அடிக்கடி சென்னைக்கு செல்லும்போது ரயிலடியில் கண்டதுண்டு; பேசியதில்லை அவ்வளவே. 

ஒருமுறை நான் மலேசியாவிலிருந்து ஊர் வரும்போது பலவண்ணங்கள் கொண்ட அழகான இரண்டு முசலாக்கள் வாங்கி வந்தேன். விலை ரொம்பக்கூட. விற்றவரோ மலாய்காரர். மலாய்காரர்கள் எந்த வியாபாரம் செய்தாலும் மூன்று தலைமுறை வாரிசுகள் சும்மா உக்காந்து சாப்பிடுவதற்கான சொத்துக்களை வாங்கி போடும்அளவுக்கு ஆதாயம் வைத்து வியாபாரம் செய்ய மாட்டார்கள். 120 ருபாய் ஹதியா போட்ட தமிழ்மொழி பெயர்ப்பு திருக்குரானுக்கு 2,500 மலேசியன் ரிங்கிட் விலை சொன்னார் தாடியும் வைத்து தொப்பியும் போட்ட தமிழ் முஸ்லிம் [அதிரைகாரர்தான்] மலாய்காரர்கள் அப்படியெல்லாம் பூனைக்கு யானை விலை போட்டு பிழைக்க விரும்ப மாட்டார்கள். இன்றைய சாப்பாட்டிற்கு அல்லாஹ் கொடுத்தால் போதும்.என்பார்கள். “நாளைய சோத்துக்கு என்ன செய்வாய்?”என்று கேட்டால் nasi besok ada di thangan Allah. நாளைய சோறு அல்லாஹ்வின் கையில். nasi dan jodol tetap kan oleh Allah, ஒருவரின் ஜோடியையும் உணவையும் அல்லாஹ்வே நிர்ணயம் செய்கிறான்’’ என்பார்கள்.

நம்மூரில் ஆணுக்கு பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் ஜோடி சேர்ப்பது பணம், உயர் குலத்து ஆண்மகனை தாழ்குலத்து பெண்ணுக்கு நிக்காஹ் செய்ய வேண்டுமானால் மாப்பிள்ளையின் விலையோ  கிடுகிடுவென இமையத்தை எட்டும்.

முசலா விற்ற மலாய்காரரிடம் “மற்றதைவிட இந்தமுசலா விலை ரெம்பக் கூடுதலாக இருக்கிறதே!” என்றேன்.

ஏதோ ஒரு மத்திய கிழக்கிலுள்ள ஒரு அரபு நாட்டின் பெயரை சொல்லி “இது அங்கே தயாரிக்கப்பட்டது. இந்த நாடு தரமான கம்பளத்துக்கு பெயர்போனது நீண்ட நாள் உழைக்க கூடியது, சாயம் வெளுக்காது, விலை கூடத்தான் இருக்கும். தரத்தில் உயர்வு, விலை பற்றி கவலை படாதே தைரியமாக வாங்கு நான் உன்னை ஏமாற்றவில்லை” என்றார். 

அவர்கள் பொய் பித்தலாட்டம் செய்து யாவாரம் செய்ய மாட்டார்கள், நம்பி நான் இரண்டு கம்பளம் வாங்கினேன். ஒன்றை வீட்டுக்கு வைத்துக் கொண்டேன். அது இன்னும் எங்கள் வீட்டில் இருக்கிறது இன்னொன்றை நம்மூரில் ஒரு பள்ளிவாசலுக்கு ஹதியா கொடுத்து விட்டேன். மீண்டும் சில மாதங்களுக்கு பின் ஒருநாள் அந்தப்  பள்ளிவாசலுக்கு நான் சென்றபோது கம்பளத்திற்கு கனத்த வெள்ளை துணியில் உறைபோட்டு. அதன் அழகிய பல வர்ணங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த மோதினிடம் “ஏன் இந்த அழகான முசலாவை உறை போட்டு மூடி இருக்கிறீர்கள்?”  என்றுகேட்டேன்.
மேலே சொன்ன ஆலிம்ஸா ஒருநாள் இந்தப் பள்ளியில் இமாமாக நின்று தொழ வைத்த பின் “இந்த முசலாவில் நின்று தொழுகையில் ருக்குஹுக்கு போகும் போதும்’ சுஜுதுக்கு போகும் போதும், முசலாவின் கலர் கண்ணைக் கவர்ந்து அது தொழவைக்கும் இமாமின் நிய்யத்தை அல்லாஹ்வின் நாட்டத்தில் நின்றும் திருப்பி செய்தானின் வழிகேட்டில் கொண்டு போகிறது. ஆதலால், உடனே இந்த முசலாவுக்கு ஒருகனத்த வெள்ளை உறை போட்டுஅந்த கலரை தொழ வைக்கும் இம்மாமின் கண்ணில் படாமல் மறைத்து விடுங்கள்! என்று சொன்னார். அதனால் அதற்கு உறை போட்டு கலர் யார் கண்ணிலும் படாமல் மறைத்து விட்டோம்” என்றார்.

“அப்படியென்றால் வானவில்லின் வர்ண ஜாலங்களை படைத்தவன் அல்லாஹ்வா? இல்லை செய்தானா’?” என்று கேள்வி கேட்டால் வம்பு வரும். இந்த முசலாவின் கலர் உறுதியான ஈமான் கொண்ட ஒரு இமாமை செய்தானின் வழிகேட்டில் திருப்புமென்றால் இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான மத்திய கிழக்கு அரபு நாடு ஒன்றில் ‘இதை தயாரிக்க அனுமதிப்பார்களா? அப்படியே அது அங்கிருந்து எல்லோருடைய கண்களையும் குத்திவிட்டு தப்பித்து வந்தாலும் வேலூர் மதர்சாவிலும் எகிப்பது அல் அஸ்ஹார் இஸ்லாமிய பல்கலை கழகத்திலும் மார்க்கம் கற்று வந்த மேதைகள் நிறைந்த இஸ்லாமிய நாடான மலேசிய நாட்டுக்குள்ளே இவர்கள் எல்லோருடைய கண்ணையும் குத்திவிட்டு இது இங்கே காலெடுத்து வைக்கமுடியுமா?’ என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது* [மலேசியா தனிக்கை  இலாக்கா இஸ்லாமிய பகுதி இறக்குமதியாகும் சாமான்களின் மீது கழுகுக் கண்பார்வை பதித்து இருக்கும்].

“ஒரு அரசியல்வாதி தன் ஆரம்ப காலத்தில் எந்த கொள்கையை அல்லது ஒரு சித்தாந்தத்தை தீவிரமாக எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ பேசி வந்தாரென்றால் இறுதி சுற்றில் அவன் முதலில் பேசிய கொள்கைக்கு மாறாகவோ அல்லது எதிராகவோ திரும்புவான்” என்று நம்நாட்டு ஒருஅரசியல் கட்சி பற்றி ஆராய்ச்சி செய்து கனடா பல்கலை கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெற்ற மலேசிய தமிழ் முஸ்லிம் ஒருவர் என்னிடம் சொன்னார். இந்தக் கோட்பாட்டின் கண்ணோடு கார்பெட் ஆலிம்ஸாவை நோட்டமிடும் போது அவர் சொல்லு எதிரான ஏதோ செயல் இருப்பதுபோல் ஒரு உணர்வு என்னுள் எழுந்தது. நான் ஹாஜி பாரூக் வீட்டுக்குள் நுழைந்த போது அந்த ‘கார்பெட் ஆலிம்சாவை அங்கே கண்டேன். என்னைப் பற்றி பலகேள்விகள் விசாரணைகள் நடந்தது. 

இஷா தொழுகை நேரம்வந்தது. ஒளு செய்ய ஆலிம்சா பாத்ரூம் போனார். அது ஒருசிக்கென அடுக்குமாடி வீடு, குளியல் அறையோடு கழிவறையும் ஒன்றாக இணைந்தே இருக்கும். ஒளு செய்து முடித்து வெளியே வந்த ஆலிம்ஸா “இந்த பாத்ரூமில் ஒளு செய்து விட்டு தொழுவது கூடாது!” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஒருவரையொருவர் முகத்தை பார்த்தார்கள். வொவ்வொருவர் முகத்திலும் “ஏன்?” என்ற கேள்விக் குறி ஊஞ்சலாடியது. ஆனால் யாரும் ஏதும் கேட்கத் துணியவில்லை. ஏன்? என்ற கேள்வி கேட்டதால் எத்தனையோ உண்மைகள் வெளிவந்து உலகம் செழித்திருக்கிறது. இங்கே கேட்க விரும்பினார்கள். ஆனால் யாரும் கேட்க துணியவில்லை. பூனைக்கு மணி கட்டுவது யார்’ என்ற Dilemma நிலவியது.

கொஞ்ச நேர அமைதிக்குப் பின் நான் வாய் திறந்தேன்.

“ஏன் கூடாது?” என்று  கேட்டேன்.

என்னை வெறித்து  ஒரு பார்வை பார்த்தது விட்டு ஆலிம் சொன்னார்.

“குளியல் அறையோடு சேர்ந்து கழிவறையும் இருக்கிறது. கழிவறை நஜிஸ், அது  செய்த்தான் தங்குமிடம் அவன்அங்கே நிற்பான், நாம் தொழும்போது நம்மை அல்லாவின் நிய்யத்தி நின்றும் திருப்புவான்” என்றார். அவர் இதை சொன்னதும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் “ஏன் கூடாது ?” என்ற கேள்விக் குறி ஊஞ்சல் கட்டி ஆடியது. ஆனால்  விளக்கம் கேட்பார் யாருமில்லை. கேள்வி கேட்க பயந்தார்கள். ’I Wanted to ask a question but afraid to ask’ என்ற தலைப்பில் ஒரு ஆங்கில புத்தகம் வெளியானது. நல்ல விற்பனை கேள்வி கேட்பதனால் விளையும் நன்மைகளை இந்நூல் பட்டியளிடுகிறது. 

மலேசியாவில் உள்ள எல்லா வீடுகளும்… வீடு கட்டும் ஒப்பந்ததாரர்களால்  மட்டுமே கட்டப்படுகிறது. நம் ஊரைப் போல அவரவர் விருப்பம் வசதிக்கு ஏற்ப மடல் மாடலாக சொந்தமாக கட்டமுடியாது.பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே சொந்த பிளான் போட்டு விருப்பமான மாடலில் விதவிதமான வீடு கட்டமுடியும். அதுவும் நகராட்சி வீட்டு பிளானுக்கு ஒப்புதல் கொடுத்த பின்னே வேலைகள் தொடங்க வேண்டும். கோடி கோடியாய் கொட்டி கட்டும் அதுபோன்ற வீடுகளில் வேண்டுமானால் குளியல் அறை தனியாகவும் செய்த்தான் தங்குவதற்கு வசதியாக கழிவறையும் கட்டலாம். கழிவறையில் செய்த்தான் தங்குவான் என்றால் வீட்டுக்கொரு செய்த்தான் உண்டு.

“ஏன் ஆலிம்சா? கழிவறையில் செய்த்தான் தங்குவான் என்றால் மலாய்கார [இஸ்லாமிய] பெண்கள் பெரும்பாலும் வேலை முடிந்து வந்து வீட்டிலேயே தொழுகிறார்கள். அப்படி இருக்க இஸ்லாமிய அரசான மலேசிய அரசும், ஆலிம்கள்சபையும் குளியல்அறையும் செய்த்தான் நிற்கும் கழிவறையும் இணைத்துக் கட்டி மூமீன்களின் தொழுகையில் இடைஞ்சல்கள் செய்ய செய்த்தானுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா?” என்ற கேள்வியை ஆலிம்ஷாவிடம் கேட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொன்னால் விளங்காது, கித்தாபில் இருக்கிறது காட்டுகிறேன்” என்றார்கள்.

அங்குள்ளவர்கள் எல்லோருக்கும் இரவு சாப்பாடு வந்து விட்டது. காடை பிரட்டல், கோழி பொரியல், Bread இடியப்ப சோறு கடப்பாசி சேமியா அன்னாசிப் பழம், ஆப்பிள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை எல்லோருமே மஜாவா ஒரு வெட்டு வெட்டினோம். ‘உண்டகளைப்பு தொண்டர்க்கும்’ உண்டல்லவா? கொஞ்ச நேரம் ஓய்வு.

ஓய்வுக்குப் பின் மலேசியா பற்றிய பொலிடிக் பேச்சு! திடீரெனஅலிம்சா தனக்கு handbag தூக்கி வந்த ஒரு பையனை காட்டி “இவனை யாரென்று தெரிகிறதா?” என்று கேட்டார்.

“ஒ! தெரிகிறதே... நம்மூர் பையன் தான் மலையன் மன்சியன் சோத்துக் கடையில் வேலை பார்த்தான்” என்றார் பாரூக்.

“இவன் வாப்பாவின் மையத்தை நான்தான் எடுத்தேன்” என்று விருந்துக்கு வந்த எல்லோரையும் பார்த்து சொன்னார். அங்கு இருந்தவர்கள் முகமெல்லாம் அந்தப் பையனின்  பக்கம் திரும்பியது. அவன் சபை நடுவே அவனுக்குஏற்பட்ட அவமானத்தால் தலை குனிந்து முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்த்தான். அவன் கூனிக் குறுகி நின்றான். அவனைஅவமானப் பிசாசு பிடுங்கி-பிடுங்கி தின்றது. அவன் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. இதைக் கண்ட மற்றவர்கள் அவனை காணாதது போல் பாவனை செய்து வேறு வேறு திசை நோக்கி முகம் திரும்பினார்கள். தான் செய்த இந்த ‘மையத்து எடுப்பு’ தர்மத்தை ஊறார் அறிய சபை நடுவே ஊளை இட்ட அந்த ஆலிமின் சாயம் வெளுத்து விட்டது. எது எப்படியானாலும் கைதவறிய கண்ணாடி பாத்திரமும் வாய் தவறிய சொல்லும் மீண்டு வரபோவதில்லை. வந்தவர்கள் எல்லாம் நொந்தமனதோடும் வெந்த மனதோடும் வெளியேறினார்கள்.

ஆலிம்சாவை விருந்துக்குஅழைத்து வந்த பையனை எனக்கு நன்றாக தெரியும் மலேயன் மன்சியன் சோத்து கடையில் அதிக நாள் தொடர்ந்து வேலை பார்த்தான். சாப்பாட்டு நேரங்களில் அங்கு போக நேர்ந்தால் இவன் வேலை செய்த அந்த கடைக்குத்தான் போவேன். நல்லகவனிப்போடு நாக்குக்கு ருசியான உணவு கிடைக்கும் அவ்வளவு சுவை. இருந்தும்கூட அல்லாஹ்வுக்கு அஞ்சிய குறைவான விலை. “அல்லாவுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று ஊருக்கு உபதேசித்து விட்டு வெளியூருக்கு சென்று வட்டிக்கி கொடுத்து வாங்குகிறார்களே அவர்களைப்போல் இவர்கள் இல்லை. நளபாகம் என்று சொல்வார்களே அதை இங்கேதான் காணலாம். “இன்று நளமஹாராஜா மீண்டு வந்தால் இங்கே வந்து மீண்டும் சமையல் கலை கற்று செல்வார்” என்றால். அது மிகையாகாது.

ஒருநாள் நான் அந்த சோத்து கடைக்கு சென்றபோது அந்தப் பயனை கூப்பிட்டு சொன்னேன்’ ’கையும் காலும் ஒழுங்காகவும் உழைக்க சக்தியும் அல்லாஹ் உனக்கு கொடுத்திருக்கிறான். நீ என்ன நொண்டியா முடமா!? உன்னை பெற்று வளர்த்த தகப்பனின் மையத்தை எடுக்கும் பாக்கியத்தை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டாயே?’’ என்றேன்.

‘என் வாப்பா சிலகாலம் என்னுடனும் என்தாயாருடனும் மனஸ்தாபமாக இருந்தார்கள். வீட்டில் சாப்பிடுவதில்லை, ஏதாவது சிறுசிறு யாவாரங்கள் செய்து அந்த வருவாயில் தன் வவுத்தை கழுவிக் கொண்டிருந்தார். யார் சொல்லியும் கேட்க்காமல் ’தான் பிடித்த முயலுக்கு மூணுகால்’ என்று உடும்பு பிடித்து கொண்டு வம்பு பண்ணிக் கொண்டிருந்தார். ஒருவருஷம் சொச்சம் அவர் பொழப்பு இப்படி ஓடியது.

நான் மலேசியாவிலிருந்து ஊர் போனதும் அவருக்கு வேண்டிய நாலு பெரிய மனிதர்களிடம் நடந்த நடப்பை சொன்னேன். அவர்கள் எங்களையும் என் வாப்பவையும் சமாதானம் படுத்தி விட்டார்கள். என் வாப்பாவும் இந்த ஆலிம்சாவும் ரெம்ப நெருங்கிய கூட்டாளிகள்  நகமும் சதையும்போல ஒட்டியே இருந்தார்கள். நாங்கள் உறவாகிபோன இரண்டுஆண்டுகளுக்குப் பின் என் வாப்பாவின் உடல்நிலை சரி இல்லாமல் போய் மூன்று மாதம் சொச்சம் பாயோடு கிடந்து மௌத்தாகிபோனார்.

மூனு மாதம் தொண்ணூறு நாள் பாயோடு கிடந்த என் வாப்பாவை   ஒரு நாள் கூட ஊட்டுக்கு வந்து எட்டிபாத்து “என்ன சேதி? சொவமா ஈக்கிரியா?” என்று வாய் திறந்து ஒரு வார்த்தை கூட இந்த ஆலிம்ஷா கேட்டதில்லை. என் வாப்பா மௌத்தாப் போன செய்தி காதில் பட்டு வேகு வேகு என்று ஓடிவந்து ‘’உன் வாப்பாவின் மையத்தை நான்தான் எடுப்பேன். அவன் மூணுவருசத்துக்கு முன்னே “நான் மௌத்தாப் போனதும் என்னுடைய மையத்தை நீதான் எடுக்க வேண்டும்.” என்று என்னிடம் ஒசியத்து சொல்லி விட்டான். நானும் சரியென்று சொல்லி விட்டேன். நான் கொடுத்த என் வாக்கை நிறைவேற்ற வேண்டும். தவறினால் நாளை ஆஹ்ரத்தில் அல்லாஹ்வுக்கு வாக்கு தவறியதற்கு நான் பதில் சொல்லி ஆகவேண்டும். அந்த வாக்கை இப்போது நிறை வேற்றாவிட்டால் ஆஹிரத்தில் என் கழுத்தில் முடிச்சு போட்டு தொங்க விடும் பாவச்சுமையை என்னால் தூக்கி சுமக்க முடியாது” என்று வம்படி வழக்கு செய்தார் ஆலிம்சா.

மத்தியஸ்தம் பன்ன வந்தவர்கள் எல்லாம் அங்குட்டும் பேசினார்கள், இங்குட்டும் பேசினார்கள், இவர்கள் முள் இல்லா தராசுகள். முடிவில் வலுத்தவன் பக்கமே சாய்ந்து விடுவார்கள். இங்கேயும் அதுதான் நடந்தது “காவிரிக் கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோக மடி” என்ற பார்முலாவை தெரிந்து வைத்திருந்த மத்தியஸ்த்தர்கள் வழக்கம் போல் கனத்த கைக்கு வழக்கை சாதகமாக முடித்துக் கொடுத்து  ஆலிம்சாவுக்கு வேண்டியப்பட்டவர்கள் ஆனார்கள். அதாவது மகன் எடுக்க வேண்டிய வாப்பாவின் மையத்தை ஆளிம்சாவே எடுக்கலாம். ‘வாப்பா உயுரோடு இருக்கும்போது சொன்னஒசியத்து படிஇது சரி.’

ஆக, கடைசியில் ஆலிம்சா ‘ஒசியத்’ என்ற ஒரு அரப் மொழி சொல்லை மூலதனமாக போட்டு ஒரு மனிதனை இல்லை, இல்லை ஒரு குடும்பத்தையை அடிமையாக்கினர். ஒருதலை பஞ்சாயத்துக்கு செவிசாய்த்த மகனின் சுயமரியாதை இனி ‘நன்றிகடன்’’என்ற பெயரில் காற்றோடு காற்றாக கலந்து கரையும். இரவென்றும் பகலென்றும் நேரங்காலம் பார்க்காமல் ஆலிம்சாவின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிப்போய் கூனிக்குறுகி கைகட்டி நிற்க வேண்டும் .இரவெல்லாம் ‘’லொக்- லொக்’ என்று ஆலிம்சா இருமி துப்பிய எச்சில் படிக்கனை கொண்டு போய் குப்பை மேட்டில் கொட்டிவிட்டு குளத்தில் புளி போட்டு கழுவி கொண்டு வரவேண்டும்.

“எம்மவளுக்கு பொறக்கிற பொறை மாஷம். ’தாத்தாக்கா- புத்தக்கா’என்று இருக்கிறாள். புள்ளே பொறக்கிற வரை ராத்திரிக்கி ராத்திரி ஊட்டுலே வந்து ஒன்பொண்டாடியை துணைக்கு படுக்கச்சொல்லு”. நாளக்கி ராத்திரி மெயுளுக்கு மதராஸ் போறேன். செத்தே எனேடே ஹேன்டு பேகை ரயில் டேஷன் வரை தூக்கிட்டுவந்து கொடு /=/ பொறந்த பச்ச புள்ளயோட அனையார துண்டுகளை எல்லாம் ஒன்பொண்டாட்டிடே சொல்லி கொளத்துலே போட்டு கழுவி கொடுக்க சொல்லு/-/ இதுபோன்ற கட்டளைகளுக்கு எல்லாம் அவனும் அவன் குடும்பமும் தலைசாய்த்தே ஆக வேண்டும். காரணம் வாப்பாடே ‘ஒசியத்து.’[இதை இத்தோடு முடிப்போம்.அடுத்து ஆலிம்சாவின் Integrity பற்றி நாம் சற்று ஆராய்வோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஹாஜி பாரூக் வீட்டில் ஆலிம்சா இரவு உணவு உண்ட சுமார் எட்டு பத்து மாதங்களுக்கு பிறகு ஒருநாள் ஹாஜி பாரூக்கிடமிருந்து எனக்கொரு டெலிபோன் கால் வந்தது, எடுத்துக் கேட்டபோது.

‘’செய்தி தெரியுமா?’’ என்றார்.

“என்ன செய்தி?” என்றேன்.

“ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு நம்மூர் ஆலிம்சா ஒருவருக்கு வீட்டில் விருந்து கொடுத்தோமே! நினைவிருக்கா?”என்றார். 

“ஏன்னில்லை? மறக்கமுடியாத என்றும் பசுமையான நினைவுகளை நெஞ்சில் பதித்து சென்ற ஆலிம்ஸா அல்லவா அவர்? ‘இந்த பையனின் வாப்பாவின் மையத்தை ‘நான்தான்’ எடுத்தேன்’ என்று சபை நடுவே சொன்னவர் அவரல்லவா? அவரையா ‘நெஞ்சம் மறக்கும்?!’’ என்றேன்.

“இப்போ ஒரு செய்தி வந்திருக்கு”என்றார்.

“ஏழு லட்ச ரூவா ஒருவரிடம் வட்டிக்கு, கொடுத்த வகையில் வட்டியும் வராமல் கைமுதலும் வராமல் கலங்கி நிற்கிறார்” என்று பாரூக் சொன்னார்.

வாங்கியவர் நாணயமானவர்தான், சென்னையில் பல பிசினஸ். இதற்கு முன்னர் பலஆண்டுகள் வாங்கல் கொடுக்கல் நடந்த வகையில் அரிச்சந்திரன் போல சொன்னால் சொன்னபடி நடந்திருக்கிறார். யாருடை போறாத காலமோ யாவாரத்தில் சறுக்கல் ஏற்பட்டுவிட்டது. அல்லது ஒசியத்தை கருவியாக வைத்து ஆலிம்சா ஒரு குடும்பத்தையே தனக்கு அடிமையாக்கி ஆட்டிப் படைத்தது “இவன்வாப்பாவின் மையத்தை நான்தான் எடுத்தேன்” என்று போகுமிடமெல்லாம் தண்டோரா அடித்து அந்த அப்பாவி பையனை நாலு பேருக்கு முன்னால்  அவமானப்படுத்திய பிரதிபலிப்போ என்னவோ அல்லாஹ் இவரை பிடிக்க வேண்டிய நேரத்தில், பிடிக்கவேண்டிய இடத்தில் பிடித்து விட்டான் இப்போ ஆலிம்சாவின் குட்டு வெளிப்பட்டு விட்டது. ஆலிம்சா / ஹாஜியார் / என்ற வேஷங்கள் கட்டி ஆடியபோலி நாடகம் பலபேர் அறிய அம்பலத்துக்கு வந்தது. ஊர் சிரித்த்து.

இன்ஸா அல்லா அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்.

S. முஹம்மது பாரூக்

6 Responses So Far:

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

செம ஸ்டோரி. ஆலிம்ஷா ஒரு சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு கலக்கி இருக்கார்.

ஒரு சேதி அடிக்கடி காதில் விழும். க்ளியர் பண்ணுங்களேன்:

"இந்த மாதிரி ஆட்களிடம் அதிகம் எமாறுவது மலேசிய நம்மாட்கள்தான்" என்பது உண்மையா?

sabeer.abushahruk said...

அப்புறம் அந்த உதாரணம் அருமை:

//காவிரிக் கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோக மடி” //

sheikdawoodmohamedfarook said...

//இந்த மாதிரி ஆட்களிடம் அதிகம் ஏமாறுவதுமலேசிய நம் ஆட்கள்என்பது உண்மையா//மருமகன் ஷபீர்கேட்டது.சத்தியமாக உண்மை.

sheikdawoodmohamedfarook said...

நம்மூரில் கட்டிய இரண்டு பள்ளிகளுக்கு பலரிடம் நிறையவசூல் செய்துகொடுத்திருக்கிறேன்.பள்ளித்திறப்பு திறப்புவிழாவில் எனக்கோவசூல்கொடுத்தவர்களுக்கே கேவலம் ஒருஅழைப்பிதழ்கூடஇல்லை.இதுவும்ஏமாற்றமே.பள்ளிதிறப்புவிழா என்பது v.i.p.களை v.i.pகள் மக்களிடம் அறிமுகம் செய்து கொள்வதுபோல் தோன்றியது

Unknown said...

ஒருவரைப்பற்றி குறை கூறும்போது ஆதாரத்துடன் கூறுவது நல்லது. இல்லையேல் அது அவதூறாகிவிடும்.முதலில் அதை உரிய நபரிடம் தெரிவிக்க வேண்டும்.நாம் அல்லாஹ்விற்கு பயந்து கொள்வோம்.

Unknown said...

ஒருவரைப்பற்றி குறை கூறும்போது ஆதாரத்துடன் கூறுவது நல்லது. இல்லையேல் அது அவதூறாகிவிடும்.முதலில் அதை உரிய நபரிடம் தெரிவிக்க வேண்டும்.நாம் அல்லாஹ்விற்கு பயந்து கொள்வோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.