நானெல்லாம் சிறுவனாக இருந்து பள்ளி, பள்ளிக்கூட (வெள்ளி, சனி) விடுமுறை காலங்களில் சைக்கிள் டயரும், அதை விரட்ட கையில் ஒரு கம்பும் வைத்துக் கொண்டு தெருவைச் சுற்றி நண்பர்களுடன் விளையாடி வந்த காலம் அது. அப்பொழுதெல்லாம் ஊரிலிருந்து பறாக்கப்பலில் (விமானத்தில்) ஹஜ் செல்வது ரொம்ப, ரொம்ப அரிது. எங்கோ, யாரோ அதில் ஏறி பயணிப்பதாக கேள்விப்படுவதுண்டு. அக்காலத்தில் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது கப்பல் பயணம் தான். ஹஜ்ஜை இனிதே முடித்து அவர்கள் வீடு திரும்ப குறைந்தது மூன்று, நான்கு மாதங்கள் ஆகும். இன்று போல் நொடிப்பொழுதில் கையில் தவளும் நவீன அலைபேசி சாதனங்களும், உலகச் செய்திகளெல்லாம் கனவில் கூட தவளாத, விஞ்ஞான முன்னேற்றங்கள் அத்துனை சாத்தியப்படாத காலம் அது.
மூன்று, நான்கு மாத கால ஹஜ்ஜுப் பயணத்திற்காக சாமான், சட்டிகளுடன் மூட்டை,முடிச்சுகளுடன்,மருந்து மாத்திரைகளுடனும் சென்னை வரை அல்லது மும்பை வரை ரயிலில் பயணம் மேற்கொள்வர் நம் முன்னோர்கள்.அவர்கள் திரும்பி வரும் வரை அவர்களுக்கு ஏதேனும், எங்கேனும் சம்பவித்தாலும் அல்லது வீட்டிலுள்ளவர்களுக்கு ஏதேனும் நடந்தேறி விட்டாலும் அவரவர் நேருக்கு நேர் முகத்தை பார்க்கும் வரை ஒன்றுமே தெரிய வாய்ப்புகள் இல்லாத காலம் அது. திரும்பும் பயணமா? அது ஒரு திரும்பா பயணமா? என்பதை யார்தான் துல்லியமாக கூறிவிட முடியும் படைத்தவனைத்தவிர? அதனால் அவர்களை சீரும், சிறப்புடன் வாழ்த்தி கண்களின் ஓரம் கண்ணீர் ததும்ப வழியனுப்பி வைக்க நமதூர் ரயில் நிலையம் வரை அவர்களை பைத்து சொல்லி அழைத்துச் சென்று கழுத்தில் மல்லிகைப் பூமாலையெல்லாம் அணிவித்து (பைத்தும், பூமாலையும் இங்கு ஒரு விவாதப்பொருளாக மாறி விட வேண்டாம். நடந்தவைகளை நினைவு படுத்துவதே இப்பதிவின் நோக்கமேயன்றி இங்கு கருத்துமோதலை ஏற்படுத்துவது நோக்கமல்ல) சங்கை செய்து, கூச்சிக்கு,சிக்கு,சிக்கென்று ஊரின் எல்லையிலிருந்து உற்சாக சங்கூதி ஒய்யாரமாய் கரும்புகையை கக்கிக்கொண்டு நமதூர் வழியே சென்னை எழும்பூர் வரை செல்லும் கம்பன் ரயிலில் அவர்களுக்காக து'ஆச்செய்து, அவர்களையும் து'ஆச்செய்யச் சொல்லி அனுப்பி வைக்கும் காலம் அது. குதிரை வண்டி, மாட்டு வண்டி, பால்காரன் என சலங்கை,மணி ஒலி அங்குமிங்கும் ஊரில் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.
பிறகு காலம் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி விமானப் பயணங்கள் மூலம் ஹஜ்ஜுக் கடமைகள் நிறைவேற துவங்கி ஹஜ்ஜுக்குக்கு செல்பவர்கள் நமதூர் புஹாரி ஷரீஃப் (ஜாவியா) முடிவதற்கு முன்னரே ஹஜ்ஜை முடித்து காலை ஊர் திரும்பி செல்லும் வழியில் நமதூர் ஜாவியாவில் வீடு சேரும் முன் அவர்களை பரக்கத்திற்காக, ஊர், ஈருலக நலன்களுக்காக து'ஆச்செய்யச்சொல்லி சிறப்பு படுத்தும் நமதூர். (ஜாவியா மேட்டரும் இன்று நமதூர் வலைதளங்களில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டுள்ளதை காண முடிகிறது. இது கூடுமா? கூடாதா? பித்'அத்தா? இல்லையா? என்றெல்லாம் விவாத மேடைகளில் இதுபற்றி இன்று அனல் பறந்தாலும் ஊரில் பல ஏழைக் குடும்பங்களின் காலை வேளை உணவு அந்த 40 நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரளவுக்கேனுமோ பூர்த்தியாகிறது என்பது மட்டும் உண்மை என்பதை உணர முடிகிறது). சரி நம் நினைவுகளுக்குள் பயணிப்போம்.
எங்கோ பிறந்து வளர்ந்த செம்மறியாடுகள் தன் குடும்பம், பிள்ளை குட்டிகள் சகிதம் ஊர்த்தெருக்களில் கீதாரிகள் மூலம் பெரும் பேரணி போல் செல்லும். சில ஆடுகளின் மேல் விலாசங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அது ஆட்டின் விலாசமா? அல்லது அதை வாங்கியவரின் விலாசமா? அந்த கீதாரிக்கே விளங்கும்.
துணிக்கடைகள் இந்த ஹஜ் மாதத்தில் மட்டும் துணிக்கடலாக உருமாறும். அதற்கான விளம்பர வாகனங்களின் சப்தமும் காதை பிளக்கும். நோட்டீஸும் ஆங்காங்கே கலியாண பத்திரிக்கை போல் வீடு வீடாக கொடுத்து செல்லப்படும்.
முடிவெட்டும் கடைகளும் கூட்டமாய், குதூகலமாய் தான் இருக்கும். ஹிப்பி, கிராப்பு, என்று அக்கால ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து அந்நேர இளமை மகிழும்.
டைலர் கடைகளில் கூட்டம் அலைமோதும். இளைஞர்களின் மத்தியில் தெரு டைலரிடம் தைக்க கொடுப்பதா? எக்ஸ்போ டைலரிடம் கொடுப்பதா? எக்ஸ்பர்ட் டைலரிடம் கொடுப்பதா? அஹ்லன் டைலரிடம் கொடுப்பதா? பட்டுக்கோட்டை ரஹ்மான் டைலரிடம் கொண்டுபோய் தைக்க கொடுப்பதா? அல்லது சென்னையிலிருந்து கிரேஸி ஹார்ஸிலிருந்து ரெடிமேடாக வாங்கி வரச்சொல்வதா? அல்லது மாமா தந்த மார்டின் சட்டையை வைத்து வரும் ஹஜ்ஜுப் பெருநாளை சமாளிப்பதா? என்பதில் அதிகம் கன்ஃபூஸ் இருக்கும்.
தலையில் தொப்பியின்றி யாரும் காணப்பட மாட்டார். அதனால் கடைத்தெரு இலியாஸ், அன்சார் கேப்மார்ட்களில் வகை,வகையான, கலர்,கலரான தொப்பிகள் குவிந்து கிடக்கும். தலைக்கேற்ற தொப்பிகளை போட்டு பார்த்து வாங்கி மகிழ்வோம். மாப்ள தொப்பி, வெள்ளை தொப்பி, பின்னல் தொப்பி, ஓமன் தொப்பி, பங்களாதேஷ் தொப்பி என பலவகைகளில் விற்கப்படும். கடைசியில் இன்று அந்த கப்பல் போன்ற ஊதா தொப்பியே தலைமையிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அந்த பெரிய கப்பல் போன்ற ஊதா தொப்பியின் இருபக்க இடுக்கில் அப்பாமார்கள் ஏதாவது எழுதி வைத்த கடுதாசியும், காசு, பணமும் செருகி வைத்திருப்பர். பேரப்பிள்ளைகளுக்கு உடனே கொடுக்க அக்காலத்தின் ஏ.டி.எம். மெஷின் போல் அது அவர்களுக்கு பயன்பட்டது.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெருநாளைக்கு எல்லாமே புதுசா இரிக்கணும்ண்டுதான் எல்லோரும் அன்று நினைப்போம். தெருவில் நடக்கும் பொழுது சரட், சரட் சப்தம் தந்து பிறரின் கவனத்தை சட்டென ஈர்க்கும் சிகப்பு பூ வைத்த அந்த சோலப்புரி செருப்பும் நம் கம்பீரத்தை கொஞ்சம் கூட்டியே காண்பிக்கும் காலம் அது. அப்பொழுதெல்லாம் சிக்ஸ்பேக் கலாச்சாரமும், அதன் மோகமும் இளைஞர் பட்டாளத்திடம் இருந்ததில்லை. மொத்தியா இருந்தாலும், ஒல்லிக்குச்சி போல் இருந்தாலும் கொஞ்சம் செவந்த தோலுக்கு மதிப்பு அதிகம் தான் அன்று. தோல் செக்கச்செவேண்டு இருந்தாலும், கன்னங்கரேண்டு இருந்தாலும் புத்திக்கூர்மையும், இறைவன் தந்த நல்அறிவும், ஆற்றலும், நேரான வழியில் கடின முயற்சியும் இருந்தால் எவருக்கும் ஏமாற்றமில்லா ஏற்றமே இருக்கும் இறைவனின் நாட்டத்தில்.
அப்பொழுதெல்லாம் அரஃபா ஒன்பதாம் நாள் சிறுவர்களாய் இருந்த நமக்கு அன்று நோன்பு வைக்க வேண்டும் என்ற மார்க்க விழிப்புணர்வு அத்துனை இருந்ததில்லை. அதனால் கண்டதையும் திண்டு திரிந்து வந்தோம்.
பெருநாள் இரவு ஆடவர், பெண்டிர் என ஊரே ஒரு விழாக்கோலம் பூண்டிருக்கும். சென்னையிலிருந்து பள்ளி, கம்பெனி விடுமுறையில் நிறைய பேர் குடும்பத்துடன் ஊர் வந்திருப்பர். அவர்களுக்கு என்னதான் சிங்கார சென்னையில் மெரீனா கடற்கரையும், நுனி நாக்கு இங்லீஸும் பரவசம் தரும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்மூர் கலாச்சாரம் ரொம்பவே அவர்களுக்கு பிடித்திருக்கும். எங்கு சென்றாலும் வேட்டி உடுத்திக்கொண்டு காற்றோட்டமாய், மரங்கள் சூழ்ந்த இடம், புளியமரங்கள் இருபக்கமும் அரண் போல் நின்று நிழல் தரும் சாலைகள்,சப்தமில்லாமல் சிற்றோடை போல் ஓடிக்கொண்டிருக்கும் ராஜாமட பாலம், செல்லும் வழியில் பசுமை போர்த்திய வயல்வெளிகளும், அதில் கூட்டமாய் வந்தமரும் வெண்கொக்கு, மடையான்களும், தென்னந் தோப்புகள், அதில் ஓடும் மோட்டர் பம்பு செட்டுகள், அதன் தொட்டியில் இறங்கி குளித்து கும்மாளமிடும் சுகம், இருபுறமும் கருவேல மரங்கள் வரவேற்கும் ரயில் ரோடு தாண்டிய குண்டும், குழியுமாய் உப்புக்காற்று வீசும் நமதூர் கடற்கரை சாலை, தெரு ஆச்சிகளின் பொட்டிக்குள் மறைந்திருக்கும் நா ஊறும் விலை/விளை பொருட்கள், கடைத்தெரு நொறுக்குத் தீணிகள், மெயின் ரோடு சூப்பு கடைகள், நீர் நிறம்பி குளிர்காற்றை கொஞ்சம், கொஞ்சமாய் தவணை முறையில் தந்து மகிழும் தெரு குளங்கள், இராக்கால நிலவு கார் மேகப்போர்வைக்குள் புகுந்து,புகுந்து உலகோடு கண்டு விளையாட்டு விளையாடுவதும், அதை அப்படியே தெருக்குளங்கள் தன் மேனியில் அழகுற படம் பிடித்து ஊருக்கு காட்டி மகிழ்வதும், அதை குளக்கரையில் நின்று நண்பர்களுடன் ரசிப்பதும் என இன்னும் தொலைந்து போன எத்தனையோ இன்பங்களை இலவசமாய் அனுபவிக்க எவருக்குத்தான் பிடிக்காது......
ஹஜ்ஜுப் பெருநாள் வரும் முன்னரே சொந்த, பந்தங்களின் சிறுவர், சிறுமியர்களுக்காக பெருநாள் காசு என்று சொல்லி குடும்பங்களில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலவை/புது நோட்டுகள் சந்தோசமாய் கொடுத்து மகிழ்ந்து கொள்வர். அதை வைத்து வீட்டின் சிறுவர்களாய் இருந்த நாம் பாதி பணத்தை வீட்டில் கொடுத்தும் மீதி பணத்தில் நமக்கு விருப்பப்பட்ட விளையாட்டு சாமான்களையும், திண்பண்டங்களையும் வாங்கி மகிழ்வோம்.
பெருநாள் இரவு இறைச்சிக்கடை பெட்ரமாஸ் லைட்டு மேன்டிலின் வெளிச்சம் அதை காணும் நம் உள்ளத்திற்குள் ஊடுவி உற்சாக ஒளியேற்றி ஒரு பரபரப்பான பரவசத்தை நமக்கெல்லாம் தந்து மகிழும்.
ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஒளிஹாவுக்காக ஊரெங்கும் ஆடுகளும், மதரஸா, பைத்துல்மால் போன்ற தொண்டு நிறுவனங்களில் அறுக்கப்பட்டு பகிரப்படும் மாட்டு கறிகளும் பரவலாக எல்லோர் வீடுகளிலும் குவிந்து குளிர்சாதனப் பெட்டி வசதியில்லா பெரும்பான்மையான வீடுகளில் அதை உடனே சுத்தம் செய்து கெட்டுப்போகாமல் இருக்க மசாலா தடவி உடனே சனலில் சாக்கு தைக்கும் ஊசி மூலம் ஒவ்வொன்றாக கோர்த்து மாலை போல் ஆக்கி அதை வெயிலில் துணிக் காயப்போடுவது போல் போட்டு வைப்பர். நன்கு காய்ந்ததும் அதை அப்படியே அடுப்பில் சுட்டோ, அம்மியில் தட்டியோ அல்லது எண்ணெய் ஊற்றி பொறித்தோ அதில் கூடுதலாக வெங்காயம், கேரட், மல்லி இலை, எலுமிச்சை போன்றவற்றை வேட்டிப்போட்டு கூடுதல் ருசியுடன் உண்டு மகிழ்வோம். அன்றெல்லாம் 80, 90 வயது அப்பாக்களை எல்லாத் தெருக்களிலும், வீடுகளிலும் பார்க்க முடிந்தது. கொலஸ்ட்ரால் பிரச்சினையில்லை, நடக்க முடியா முடக்கு வாதம் அதிகமில்லை, குழிக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேன்சரும் இல்லை, ஊரை பவனி வரும் லேன்சரும் இல்லை. ஆனால் இன்றோ நவீனங்கள் ஊரை நாலாப்புறமும் சூழ்ந்திருந்தாலும் 30 வயதை தாண்டியதும் உடல் கோளாறுகளும் மருத்துவ அறிவுரைகளும், மருந்து மாத்திரைகளும் நினைத்த எதையும் கவலையின்றி உண்டு மகிழ முடியாமல் ஸ்பீட் ப்ரேக் போட்டு ஏகத்துக்கும் வாயின் முன்புறம் செல்லும் முன் வேகத்தடை விதிக்கிறது.
நோன்பு பெருநாள் போல் ஹஜ்ஜுப்பெருநாளுக்காக பெருநாள் இரவு தெருப்பள்ளிகளில் நகரா அடிக்க மாட்டார்கள். குர்பானி கிடா அறுக்கும் முன்னர் பெருநாள் காலை பசியாற தேவையான கறிகளை வாங்க கறிக்கடை முன் கச்சல்கட்டியோ, கட்டாமலோ காத்துக்கிடப்பர்.
வெள்ளிக்கிழமை கூட கறி வாங்கி உண்டு மகிழ முடியா எத்தனையோ பல ஏழை,எளிய குடும்பங்களின் வீடுகளில் ஆடு,மாடு குர்பானி கறிகள் போதும், போதும் என்று சொல்லுமளவுக்கு பல வீடுகளிலிருந்து வந்து குமியும். அவர்கள் மனமும் குளிரும். வயிறும் நிறையும்.
அக்காலத்தில் கவாபுக்கும், நம் கல்புக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. நாமும் வீடுகளில் சக வயது சிறுவர்களுடன் சேர்ந்து நான்கு செங்கல்லை எடுத்து சதுரமாய் அடுக்கி அதன் நடுவில் அடுப்புக்கரியை கொஞ்சம் போட்டு நெருப்பூட்டி அதன் நடுவில் குடைக்கம்பியில் மசாலா தடவிய கறியை வைத்து விசிறியில் வீசி அதை நன்கு வேகும் வரை சூடு காட்டி பிறகு தட்டையில் சூட்டோடு திண்டு மகிழ்வோம்.
கறிக்கடைகளிலும், டைலர் கடைகளிலும், இன்ன பிற பெருநாள் இரவு வேலைவெட்டிகளிலும் இரவின் பெரும் பகுதி கழிந்திருப்பதால் அசதியில் மீதி இரவில் நன்கு உறங்கி பெருநாள் காலை சுபுஹ் தொழுகை பள்ளியில் இமாம் ஜமாத்தோடு தொழுது விட்டால் அது ஒரு பெரும் சாதனை தான் அன்று. வீட்டில் எல்லோரும் ஒரே நேரத்தில் குளிக்க வேண்டி இருப்பதால் சுபுஹ் தொழுகை முடிந்ததிலிருந்து ஒவ்வொருவராய் குளிக்க ஆரம்பித்து ஒரு வழியாய் மெல்ல, மெல்ல எல்லோரும் பெருநாள் தொழுகைக்கு தயாராகி விடுவர். அதே சமயம் அடுப்பில் பசியாறவும் ரெடியாகிக் கொண்டிருக்கும்.
பள்ளியில் முன்னரே வந்தமரும் பெரியவர்களும், சிறியவர்களும் மைக்கில் தக்பீர் சொல்லிக்கொண்டிருப்பர். நாமும் இறைவனைப் புகழ்ந்தவர்களாய் மெல்ல, மெல்ல தக்பீரை முணு, முணுப்போம். சந்தோசம் ஊரெங்கும் காற்றில் கரைந்து கொண்டும், அந்த தியாகத்திருநாள் பெரும் ஆர்ப்பாட்டமும், ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாய் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் அந்த அல்லாஹ்வே அவற்றை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பான்....
பசியாற காரியங்களும், குடும்ப, நட்பு நல விசாரிப்புகளும் என பெருநாள் தினமும் நம்மை விட்டு அந்த நாள் சூரியன் போல் மெல்ல, மெல்ல மறைந்து கொண்டிருக்கும். தக்பீர் முழக்கம் மட்டும் மார்க்கம் கூறும் நல்வழியில் நம் பள்ளிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும்.
ஹஜ்ஜுக்கு சென்று வந்தவர்கள் வீடுகளில் களரி என்னும் பசியாற,விருந்து உபசரிப்புகள் நடந்தேறும். "ஹஜ்ஜுக்கு போய்ட்டு வந்தவ்வோ" வீட்டுக்கு சென்று அவர்களை முசாபஹா செய்து வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜம்ஜம் தண்ணீர், பேரிச்சம் பழமும், கொஞ்சம் நெருங்கியவர்களுக்கு அத்தரு, தொப்பி, தசுமணி, மக்கத்து மோதிரம் எல்லாம் கொடுத்துபசரிக்கப்படும். இந்த விஞ்ஞான முன்னேற்றம் அம்மி,குழவி,கொடக்கல்லை மட்டுமல்ல தசுமணியையும் விட்டு வைக்கவில்லை. காணாக்கி தொலைத்து விட்டது. எல்லாம் டிஜிட்டல் மயம். இப்படியே பலவிசயங்களை இங்கு எழுதிக் கொண்டிருப்பதால் கணிப்பொறியின் மை கறைகிறதோ? இல்லையோ? ஆனால் நம் காலம் கறைந்து கொண்டே இருக்கிறது.
ஹஜ்ஜுக்கு சென்று வந்தவர்கள் வீடுகளில் களரி என்னும் பசியாற,விருந்து உபசரிப்புகள் நடந்தேறும். "ஹஜ்ஜுக்கு போய்ட்டு வந்தவ்வோ" வீட்டுக்கு சென்று அவர்களை முசாபஹா செய்து வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜம்ஜம் தண்ணீர், பேரிச்சம் பழமும், கொஞ்சம் நெருங்கியவர்களுக்கு அத்தரு, தொப்பி, தசுமணி, மக்கத்து மோதிரம் எல்லாம் கொடுத்துபசரிக்கப்படும். இந்த விஞ்ஞான முன்னேற்றம் அம்மி,குழவி,கொடக்கல்லை மட்டுமல்ல தசுமணியையும் விட்டு வைக்கவில்லை. காணாக்கி தொலைத்து விட்டது. எல்லாம் டிஜிட்டல் மயம். இப்படியே பலவிசயங்களை இங்கு எழுதிக் கொண்டிருப்பதால் கணிப்பொறியின் மை கறைகிறதோ? இல்லையோ? ஆனால் நம் காலம் கறைந்து கொண்டே இருக்கிறது.
காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இவ்வுலகில் அவன் நாட்டத்தில் அந்த,அந்த நேரத்தில் வர வேண்டியது வந்து கொண்டும் போக வேண்டியது போய்க்கொண்டும் தான் இருக்கின்றன......
இந்த வருடம் பல சிரமங்கள்,உடல் நலக்குறைவுகள்,பிரச்சினைகள் என எல்லாவற்றையும் தாண்டி புனித ஹஜ் கடமையாற்ற மக்கமாநகரம், மதீனமாநகரம் வந்தடைந்துள்ள லட்சோப லட்ச ஹாஜிமார்களின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து அவர்களின் ஹஜ்ஜை மப்ரூரான ஹஜ்ஜாக்கி அவர்களின் ஹாஜ்ஜத்துக்களுடன் அகில உலக முஸ்லீம்களின் ஹாஜத்துக்களும், ஈருலக நலவுகளும் இனிதே நிறைவேறி அகிலமெங்கும் அமைதி நிலவ து'ஆச்செய்வோம்....
இந்த நல் நினைவுகளுடன் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என் இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் இனிதாய், கனிவாய் சென்றடையட்டுமாக.....
மு.செ.மு. நெய்னா முஹம்மது