ஹாரிதாவுக்கு, அன்று வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டிய கட்டாயம். வீட்டில் தன் இளவயது மகனும் அவரின் மனைவியும் மட்டுமே இருந்தனர். வெகு நேரம் சென்ற பின்னும், வெளியில் சென்ற ஹாரிதா வீடு திரும்பவில்லை!
‘என்னவாயிற்றோ?’ என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த ஹாரிதாவின் மனைவி, தன் வீட்டைச் சூழ இருந்த வட்டாரத்தில் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழவே, மகன் ஜெய்தைத் தூக்கிக்கொண்டு வெளியில் கிளம்பினாள்.
தான் தேடவேண்டிய இலக்கு எதுவென்று தெரியாத அளவுக்குத் தன் வீட்டை விட்டு வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டாள்! பாலை வெளியில் எவ்வளவு தொலைவுக்கு வந்துவிட்டோம் என்று அத்தாய் அறிய முடியாத நிலை!
அப்போதுதான், எதிர்பார்க்காத அந்த நிகழ்ச்சி நடந்தது! வீட்டுக்கு வெளியில் விளையாடும் சிறார்களைப் பிடித்துச் சென்று, அடிமைச் சந்தையில் விற்றுவிடும் கள்வர் கூட்டம் அவ்வப்போது அந்தப் பாலைவனத்துச் சிற்றூருக்கு வந்து செல்லும்! சிறுவர் ஜெய்தைக் கண்டுவிட்டான் கள்வன் ஒருவன். குதிரையில் ஏறிவந்த அக்கள்வன், விரைந்து ஜெய்தின் தாயிடம் நெருங்கி, சிறுவன் ஜெய்தைக் கவர்ந்து சென்றான்! ஆண்டு தோறும் மக்காவின் புறநகர்ப் பகுதியான ‘உக்காஸ்’ எனும் சந்தையில் சிறுவனை நல்ல விலைக்கு விற்றுவிட்டுத் தன் அடுத்த முயற்சிக்கு விரைந்தான் அக்கள்வன்.
வீடு திரும்பிய ஹாரிதா, தன் மகன் ஜெய்து பாலைவனத்துக் கொள்ளைக் கூட்டத்தாரால் பிடித்துச் செல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ந்தார்! உக்காஸின் அடிமைச் சந்தையில் சிறுவன் விற்கப்பட்டிருப்பானோ என்ற ஐயத்தில், தன் தம்பியுடன் அங்கு வந்து சேர்ந்தார் ஹாரிதா. உக்காஸின் குறுக்கு நெடுக்கில் தேடியும், ஜெய்தைக் காணவில்லை. ஒவ்வோர் ஆண்டும் இந்த முயற்சியில் ஈடுபட்டு ஏமாறிப் போவதுதான் ஹாரிதாவின் வழக்கமாகிப் போயிருந்தது.
இதற்கிடையில் ஜெய்து காணாமல் போய் பல்லாண்டுகள் கழிந்துவிட்டிருந்தன. தந்தை தனது முயற்சியில் வெற்றி பெறுவாரோ தோல்வி அடைவாரோ, அவருக்குத் தெரியாது. ஒவ்வோர் ஆண்டும் ‘உக்காஸ்’ சந்தைக்கு வந்து மகனைத் தேடிவிட்டு வெற்றுக் கையோடு திரும்புவார் ஹாரிதா. மக்காவாசிகள் யாரிடமாவது மடல் எழுதிக் கொடுத்தனுப்பலாமே என்று கருதி, எழுதத் தொடுத்தார் ஹாரிதா. பாலைவனத்து மக்களின் வழக்கமான ஆற்றாமைக் கவிதை, கவிஞரான ஹாரிதாவின் வாய்மொழியாக வெளிப்பட்டது:
அழுதேன் ஜெய்தின் நினைவால் யானோ
அறியேன்! செய்வதை அறியேனே!
வழுவே யின்றி உயிரோ டிங்கே
வருதல் உண்டோ என்றறியேன்!
சத்திய மாகத் தெரியா தெனக்குச்
சங்கதி யைநீ கேட்டாலும்
நித்திய வாழ்வோ? நிலையறு வாழ்வோ?
சங்கதி யைநீ கேட்டாலும்
நித்திய வாழ்வோ? நிலையறு வாழ்வோ?
நினைத்துப் பார்க்க நேரமிலை!
கவியால் உணர்த்த முடியா நிலையில்
கதியற் றுள்ளேன் என்செய்வேன்?
புவியோ டெனது வாழ்க்கை முழுதும்
புலம்பல் தானோ? யானறியேன்!
பேரொளி யோடு சூரியன் எழுந்த
பெற்றியில் அவனின் புகழ்வாழ்வை
நேரடி யாகக் கண்டு மகிழ்ந்தேன்
நினைவில் பசுமை யாகிறது!
பறந்து சென்ற சுகந்த மணமும்
பரிந்து மேன்மை யுற்றதுவே.
சிறந்த நினைவோ மறந்து போகச்
சிதைந்து விட்டதை உணர்கின்றேன்.
மகனைத் தேடி அலைந்து வந்தேன்
மண்ணும் மலையும் நீண்டிடவே
பகலும் இரவும் மாறிப் போகப்
‘பாலைக் கப்பல்’ அழுகிறதே!
இதுதான் எனது வாழ்வின் கதியோ?
எவர்க்கும் என்கதி வேண்டாமே!
எதுதான் நினைவில் வந்து புகுந்தே
இயலாய் நின்று முடிகிறது?
உன்னைப் பிரிந்த தோழரும் உன்றன்
உடன்பிறப் புகளும் என்மகனே!
‘என்னே செய்வோம்’ என்றே ஏங்கி
இளைத்துப் போனார் அறியாயோ?
ஹாரிதா தமது ஆற்றாமையினைக் கவிதையாக மடல் எழுதி, தன் மகன் மக்காவில்தான் இருக்கக் கூடும் என்ற கணிப்பில், அம்மடலை மக்காவாசி ஒருவரிடம் கொடுத்தனுப்பி, ஜெய்திடம் சேர்த்துவிடுமாறு கூறினார். மக்காவின் அன்றாட நிகழ்வுகளை அறிந்திருந்த அவர், அன்னை கதீஜாவின்(ரலி) வீட்டில் இருந்த ஜெய்திடமே நேரில் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
கண்களிலிருந்து நீர்த் திவலைகள் ஒழுக, அக்கவிதை மடலைப் படிக்கத் தொடங்கினார் ஜெய்து. அதே வேளை, தான் வளரும் இல்லமோ புனிதத்தின் பிறப்பிடம். அதை விட்டு வேற்றிடத்திற்குச் செல்ல அவருக்கு மனமில்லை. அதுவே அவரது முடிவு. தனக்கு வந்த தந்தையின் கவிமடலுக்கு, ஜெய்தும் தம் மறுமொழியாகக் கவிதையிலேயே மறுமடல் எழுதினார்:
விந்தையா யிறையின் வீட்டினை யடுத்த
பள்ளத் தாக்கில் பதிந்துவாழ் கின்றேன்.
உள்ளக் கவலை ஒதுக்குக! என்பால்
ஓடிக் களைத்தும் ஒட்டகை ஏறித்
தேடியும் வாரேல்! செல்வச் செழிப்புடன்
கோத்திரச் சிறப்பும் குலத்தின் உயர்வும்
காத்திடும் வீட்டில் களிப்புடன் உள்ளேன்.
மக்காவின் ‘உக்காஸ்’ சந்தையில் அழகுச் சிறுவர் ஜெய்தை, ஹக்கீம் இப்னு ஹிஸாம் விலைக்கு வாங்கினார். நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார் ஹக்கீம். தம் சகோதரிக்குத் திருமணப் பரிசாக ஜெய்தை அன்பளிப்புச் செய்திருந்தார் ஹக்கீம்.
அன்னை கதீஜா(ரலி) – அண்ணல் முஹம்மது(ஸல்) தம்பதியரின் அன்பும் பரிவும் ஜெய்தின் உள்ளத்தைக் கவர்ந்து, ‘ஜெய்து என் மகன்’ என்று அண்ணல் நபி (ஸல்) அறிவிப்புச் செய்யும் அளவுக்கு, ஜெய்து அக்குடும்பத்தில் ஒருவரானார். அந்த நிலையில்தான் ஜெய்தின் தந்தை ஹாரிதாவும் அவரின் தம்பியும் நபியவர்களின் வீட்டைத் தேடி வந்தனர்.
அவர்களின் நோக்கம், ஜெய்தை அழைத்துச் செல்லலாம் என்பதே. ஆனால், அக்குடும்பத் தலைவியும் தலைவரும் தன் மீது பொழியும் பாசமும் பரிவும் அச்சிறுவரின் இதயத்தில் ஆழப் பதிந்து, அறிவைப் பெருக்கிற்று. அதனால், பாசமிகு தாய்-தந்தையரை விடுத்து, நேசமிகு கதீஜா(ரலி)-முஹம்மத்(ஸல்) தம்பதியரைத் தேர்வு செய்து, நபித்தோழர்களுள் ஒருவரானார் ஜெய்து பின் ஹாரிதா (ரலி).
அதிரை அஹ்மது
12 Responses So Far:
//அன்னை கதீஜா – அண்ணல் முஹம்மது//
//நேசமிகு கதீஜா-முஹம்மத்//
இது சரியல்ல,
ரலி எனவும்,ஸல் எனவும் பதியுங்கள்.
மாற்றுக.
சத்திய மாகத் தெரியா தெனக்குச்
சங்கதி யைநீ கேட்டாலும் நித்திய வாழ்வோ? நிலையறு வாழ்வோ?
நினைத்துப் பார்க்க நேரமிலை!
முதல் வாசகரின் பரிந்துரையையும் ஏற்கவும்.
சத்திய
சங்கதி
நித்திய
நினைத்துப்
"கவிதை"க்குள் அதை எழுதும் 'கவி'யும் சொல்ல வந்த உண்மைக் 'கதை'யும் கருவாக 'விதை'யும் உள்ள்டங்கி இருக்கின்றன என்பதை இந்தப் பதிவு உறுதி படுத்துகின்றது.
அஹ்மது காக்கா அவர்களின் சுண்டியிழுக்கும் எழுத்தாற்றல் இதை ஒரே மூச்சில் படிக்க வைக்கின்றது.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
காக்கா,
இதே உணர்வில் முன்பொருமுறை எழுதியது:
என் செய்வேன் என் இறைவா
என்னருமை ஸைதுக்காக
கண்ணழுது ஓயவில்லை
கைசேதம் இக்கொடுமை
மறைந்திருக்கும் செல்ல மகன்
மலைகளில் திரிகின்றானா
மண்ணுக்குள் புதைந்தவன்
விண்ணுக்கே ஏகினானா
மீட்டுத்தா என்னிறைவா அவனை
மீண்டும்தா எனக்கு
மண்ணுலகையே தந்ததுபோல்
மனமுருகிப் போற்றிடுவேன்
கதிரவன் எழும் காலையும்
முதிர்ந் தவன் விழும் மாலையும்
புதிர்போலத் தெரியுமென்
புதல்வனின் முகம் காண்கிறேன்
உச்சிப் பொழிதினிலே அவன்
உச்சிமுகர மனம் விழையும்
கடுங்காற்று அடிக்கும்போதும்
திடுக்கெனவே மகன் நினைவு
துக்கம் உயிர் துளைத்திடவே
தூக்கம் வராக் கணங்களினால்
பொங்கிபொங்கி அடங்குகிறேன்
போன இடம் புரியவில்லை
புதல்வா உனைத்தேடி
புயலாய் அலைந்திடுவேன்
புதிதாய் திசையிருப்பின்
அதிலும் நுழைந்திடுவேன்
கால்குழம்பு உளியாக
பூமியையே துளையிட்டு
சல்லடையாகத் துளையிட்டுத்
தேடும் என் ஒட்டகை, சாகாது!
அஸ்ஸலாமுஅலைக்கும்.அன்பின் பண்பின் வழியைத்தேர்ந்தெடுத்து ஜெயித்துவிட்டார்ஜெய்து பின் ஹாரிதா (ரலி
ராஜா கவி! கம்பீரமாய் மொழி ஆட்சி செய்கிறது!சாட்சா இதுபோல் நிறைய தாருங்கள்!
//இதே உணர்வில் முன்பொருமுறை எழுதியது://
பையப் பைய மரபுக்குள் நுழைகின்றீர்கள், சபீர்!
//பகலும் இரவும் மாறிப் போகப்
‘பாலைக் கப்பல்’ அழுகிறதே!//
என்னே ஒரு அருமையான யுக்தி!
மரபைச் சார்ந்து நிற்க வேண்டி ஒட்டகத்தின் சிறப்புப் பெயரை எடுத்தாண்ட விதம் !!!!
There you are! Thank you!
/பகலும் இரவும் மாறிப் போகப்
‘பாலைக் கப்பல்’ அழுகிறதே!//
என்னே ஒரு அருமையான யுக்தி!
மரபைச் சார்ந்து நிற்க வேண்டி ஒட்டகத்தின் சிறப்புப் பெயரை எடுத்தாண்ட விதம் !!!!
---------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிகாக்கா நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!இப்படி கவிதை எழுதினால் இதயத்தில் கவிதை ஒட்ட"கம்"(gum)தேவை இல்லைதான் அதுவாகவே ஒட்டும்!
வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்,
//இப்படி கவிதை எழுதினால் இதயத்தில் கவிதை ஒட்ட"கம்"(gum)தேவை இல்லைதான் அதுவாகவே ஒட்டும்!//
ஒட்ட(க)ட்டும் !!!
Post a Comment