‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரது தோழிகள் இன்னும் வளர்ப்பு மகன் ஆகியோர் மீது கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மாநிலம் விட்டு மாநிலம் மாறி மாறி நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தரப்பட்டிருக்கிற தீர்ப்பு, தாமதிக்கப்பட்ட நீதிதான் ஆனால் மறுக்கப்பட்ட நீதியல்ல என்ற முடிவுக்கு நம்மை எண்ணத் தூண்டியுள்ளது.
இப்போது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் அடைக்கபட்டிருப்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வரை தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி மக்களுக்கு எல்லாம் அவராகத் தெரிந்தவர்- அனைத்து அதிகாரங்களையும் தனது கரங்களில் வைத்திருந்தவர்- யாரை வேண்டுமானாலும் நடு இரவில் பதவி மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் படைத்தவராக இருந்தவர்- எவ்வளவு பெரிய படிப்புப் படித்தவரும் அவரது காலில் விழுந்து எழுந்தனர்- அவரிடம் பேசும்போது பேசப் பயன்படும் உதடுகளைக் கூட கைகள் கொண்டு மறைத்துக் கொண்டு பேசும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள்- நல்ல நிமிந்த முதுகுத் தண்டுகள் கூட அவரைக் கண்டதும் நாணல் குச்சிகள் போல வளைந்தன. எள் என்றதும் எண்ணெயாக மாற அவரைச் சுற்றி எண்ணற்றக் கூட்டம் எந்நேரமும் கூடி நின்றன.
இந்த வழக்கின் காலகட்டத்தை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுவது இயல்பு. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இரண்டு முறைகள் இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் தலைவிதியை எழுதிய அவரது விதியை பெங்களூர் நீதிமன்றம் மாற்றி எழுதிவிட்டது.
வழக்கு- வழக்கின் போக்கு- வழக்கின் தீர்ப்பு – தீர்ப்பின் விளைவு ஆகியவைகளைப் பற்றி நமது பாணியில் சற்று அலசலாம்.
1991 – ஆம் ஆண்டு நமது நினைவுகளிலிருந்து மாறாது! நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையின் பழி திமுகவின் மேல் விழுந்ததன் காரணமாக அண்ணா திமுக அமோக வெற்றி பெற்றது. அதன் விளைவாக செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். அந்த 1991-96 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு ஆட்சிகாலத்தில் முதல்வர் பதவிக்கு சம்பளமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்வேன் என்று அதிரடியாக அறிவித்து அனைவர் மனதிலும் ஒரு தேவதையாக எழுந்து நின்றார் ஜெயலலிதா.
ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் சில கூடா நட்பு அவருக்கு கேடாய் முடிந்தது. ஜெயலிதாவின் பதவியைப் பயன்படுத்தி பலர் பல வழிகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர். அவர்களது கரங்களில் கருவியாக செயல்பட்டார் ஜெயலலிதா. அதனால் பல அரசியல் நோக்கர்களும் அன்றைய செயல்பாடுகளை அருவருப்புடன் நோக்கினர். அத்துமீறிய செயல்பாடுகளுக்கு ஒரு பரிகாரம் காணவேண்டுமென்று சட்ட பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கினர்.
அதன் ஆரம்பமாக ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த வழக்குக்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு திமுக ஆட்சியிடம் வந்தது. திமுக புகுந்து விளையாடி பல விஷயங்களையும் ஆதாரங்களையும் வெளிக் கொண்டுவந்தது. இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். பல ஆவணங்கள் ஆதாரங்கள் இணைக்கப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது. எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்து கூட்டுசதி செய்துள்ளனர் என்பதே வழக்கின் அடிப்படை.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் . 2001 ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானார். தானே மீண்டும் முதலமைச்சரானதும் இந்த சொத்துக் குவிப்பு வழக்க்கு சாவுமணி அடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் உச்ச கட்டமாக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சிகள் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், 2001 ஆம் ஆண்டில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வந்ததையடுத்து ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 77 சாட்சிகளை மறுவிசாரணை என்ற பெயரில் நீதிமன்றத்திற்கு அழைத்து பிறழ் சாட்சியம் அளிக்க வைத்த நிகழ்வு அரங்கேறியது. அந்த காலகட்டத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்றவை விசாரணைகளல்ல . பல ஓரங்க நாடகங்கள். ஆட்சியில் இருப்போர் வளைக்க நினைத்தால் நிமிர்ந்து நிற்கும் நீதியும் வீதியில் கிடைக்கும் வேடிக்கைப் பொருளாகிவிடுமென்பதற்கு ஏற்ப நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்தன. 2003-ம் ஆண்டு வரை இந்த விசாரணைகள் நடைபெற்றன.
அப்போது ஒரு திடீர் திருப்பமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். மனுவின் சாராம்சம் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் அவர் மேல் சாட்டப்பட்ட வழக்கை விசாரிப்பதனால் நேர்மையான - நியாயமான நீதி கிடைக்காது என்று அஞ்சுவதாகவும் எனவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதுதான்.
மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை கர்னாடக மாநிலத்தின் பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இதற்கிடையில் இந்த வழக்கை இழுத்தடிக்க எவ்வளவு முயற்சிகள் செய்ய முடியுமோ அவ்வளவு அவ்வளவு முயற்சிகளையும் ஜெயலலிதாவும் அவருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும் செய்தார்கள். அவைகளைப் பட்டியலிட்டால் ஐம்பது அத்தியாயங்கள் எழுத வேண்டி வரும், உதாரணத்துக்கு சில மட்டும் ,
‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையே நடைபெறாததால், நீதிமன்றத்தில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட கைதி போல அமர்ந்திருக்கிறேன்’’ என்று இவ்வழக்கை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முதல் நீதிபதியான பச்சாபுரே நீதிமன்றத்திலேயே வேதனையுடன் கூறினார். ‘‘மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் ஒருவரால் 5 ஆண்டுகளில் ரூ.66 கோடிக்கு எவ்வாறு சொத்து சேர்க்க முடிந்தது என்ற எளிமையான இவ்வழக்கை ஜெயலலிதாவால் 16 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடிகிறது என்றால் அது இந்தியாவின் சாபக்கேடு’’ என்று இவ்வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நியமிக்கப்பட்ட ஆச்சாரியா கூறினார். இதிலிருந்தே இவ்வழக்கை சிதைக்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதை அறியலாம்.
அதுமட்டுமின்றி இவ்வழக்கின் நீதிபதியையும், அரசு வழக்கறிஞரையும் தமது விருப்பப்படி தான் நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிசயமும் நடந்தது. இவ்வழக்கை மிகவும் நேர்மையாக நடத்திச் செல்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா மீது அவதூறுகளை சுமத்தி, அவரைப் பதவி விலக வைத்த கொடுமையும் நடந்தது. ஆனாலும் வழக்கின் ஆதாரங்களைப் பார்த்து அதிர்ந்து போன உச்சநீதி மன்றம் உறுதியாக நின்றது.
தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று அடிக்கடி அறிவிப்புகள் வந்தாலும் எல்லாவிதத் தடைகளையும் மீறி அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார். அதன் பிறகும் கூட விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்ற காரணம் சொல்லி தீர்ப்பின் இடத்தை மாற்றச் சொல்லி தீர்ப்பை தாமதப் படுத்த ஜெயலலிதா மற்றொரு இறுதி நேர முயற்சியும் செய்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவைச் சார்ந்த சிலர் உச்ச நீதிமன்றத்திலும் அதே வகையில் மனு தாக்கல் செய்தனர். ஆனாலும் நீதிமன்றம் பரப்பன அக்ரகாரம் என்கிற பெங்களூரின் சிறை வளாகத்துக்கு மட்டுமே தீர்ப்புக் கூறும் இடத்தை மட்டும் மாற்ற சம்மதித்து ஒரே ஒருவாரம் மட்டும் தீர்ப்பைத் தள்ளிவைத்தது. அதன்படி நேற்று 27/09/2014 அன்று தீர்ப்பை வழங்கியது.
குஜராத்தில் கொடுமைகளை நிகழ்த்திய அமீத் ஷாவை வழக்கிலிருந்து விடுவித்த சிவம் போல அல்லாமல்-பெஸ்ட் பேக்கரி வழக்கை விசாரித்த நீதிபதியைப் போலவும் அல்லாமல்- பால் தாக்கரேயை விசாரிக்கவே செய்யாத நீதியரசர் போலவும் அல்லாமல்- பாபர் மசூதி வழக்கை விசாரித்தவர்கள் போலவும் அல்லாமல்- அப்சல் குருவைத் தூக்குக் மேடைக்குஅனுப்பிய நீதிபதியைப் போலவும் அல்லாமல்- நீதிபதி குன்ஹா அவர்கள் இந்திய சரித்திரத்தில் இதுவரை யாரும் வழங்காத தீர்ப்பை எவருக்கும் அஞ்சாமலும் அதேநேரம் சட்டவிதிகளை மிஞ்சாமலும் வழங்கினார். இந்தியாவே அதிர்ந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அதனால் அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். அவரது அமைச்சரவையில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் உடனே பதவிகளை இழக்கின்றார்கள். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தீர்ப்பைக் கேட்க நீதிமன்ற வளாகத்துக்கு வந்த ஜெயலலிதா தனது காரில் தேசியக் கோடியை பறக்கவிட்டுக் கொண்டு வந்த “தெனாவெட்டை” அகில இந்தியாவும் தொலைக் காட்சிகளில் பார்த்து வியந்தது வேறு விஷயம்.
செல்வி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் பரப்பன அக்ரஹாரத்தின் மத்திய சிறையில் உடனே அடைக்கப்பட்டனர். தீர்ப்பின் எதிரொலியாக ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட போட்டியிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது தமிழ்நாட்டை இந்தியாவின் முதல்நிலை மாநிலமாக மாற்றுவேன் என்று சப்தமிட்டு பதவியேற்ற செல்வி ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து சிறப்பு கவனம் பெற்றுள்ளார் என்பதை ஒரு தமிழன் என்கிற முறையில் வேதனயுடன் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. ஊழல் மூலம் சொத்துக்குவிக்க நினைப்பவர்களுக்கு இந்த தண்டனையை அவர்கள் பாடமாக எடுத்துக் கொண்டால் சரியான பாடமாக அமையும். மாறாக, இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு செய்திருந்த கவனக் குறைவான அம்சங்களை சரிசெய்து ஊழல் மூலம் சொத்து சேர்க்க ஆரம்பித்தால் இந்திய மக்களை யாராலும் காப்பாற்ற இயலாது.
சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி வெற்றி பெற்ற அமமையாரால் நீதிமன்றத்திலும் வெற்றிபெற்று வர முடியுமென்று அதிமுக தொண்டர்கள் மிகவும் நம்பிக்கையொரு இருந்தார்கள். இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு; இதற்கு முன் சில வழக்குகுகளில் தன்னை நிரபராதி என்று நிருபித்ததுபோல் இந்த வழக்கிலும் மீண்டு வருவார் என்று அதிமுகவின் உயிர்த் தொண்டர்கள் பட்டாசுக் கட்டுகளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. தங்களின் இதய தெய்வம் என்று அவர்கள் கொண்டாடிய அவர்களின் பெற்ற அம்மாவின் இடத்தில் இருந்த அம்மையாருக்கு சிறை என்றதும் அவர்களால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பலர் அழுதனர். பல பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுதனர். உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெறியாட்டங்களைத் தொடங்கினார்கள். பல இடங்களில் பேரூந்துகள் அடித்து உடைக்கப்பட்டிருப்பதுடன், பல பேரூந்துகள் தீ வைக்கப் பட்டன. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன. கடைகளை அடைக்கச் சொல்லி அப்படி அடைக்காதவர்களை அடித்து உதைத்து பொருள்களை நொறுக்கினார்கள். அச்சப்பட்ட பொதுமக்கள் அலறி ஓடிய காட்சிகள் தொலைக் காட்சிகளில் காட்டப்பட்டன. பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள் பாதிவழியில் வீடு திரும்ப முடியாமல் நின்ற பரிதாபங்களைக் காண முடிந்தது. ஆனால், இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. . நகரங்களின் முக்கிய இடங்களில் கூட பாதுகாப்பிற்காக காவலர்களை காண முடியாமலிருந்தது.
காவல்துறையையும் ஒரேயடியாக குற்றமும் சொல்லிவிட இயலாது. காரணம் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தவர்களிடமிருந்து அவர்களுக்கு முறையான உத்தரவுகள் முன்கூட்டியே வழங்கபப்டவில்லை என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் பதற்றம் நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பிளசன்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட போது தருமபுரியில் வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் உயிருடன் கொளுத்தப்பட்டது போன்ற வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
நீதிமன்ற வளாகத்துக்கு வரமுன்பே காவல்துறையை கையில் வைத்திருந்த முதலமைச்சர் ஜெயலலிதா , இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு வந்திருக்க வேண்டும். அல்லது தீர்ப்பு வழங்கப்பட்ட உடனாவது தமிழக ஆளுனரும், தலைமைச்செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். என்ன செய்வது தீர்ப்பு வழங்கப்பட்ட நேரம் ஆளுநர் உண்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்த நேரம். தமிழகம் தீப்பற்றி எரிந்த போது ஆளுநர் மாளிகையில் குறட்டை சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று மாலைதான் சாவகாசமாக காபி எல்லாம் குடித்துவிட்டு ஆளுநர் உயர் காவல்துறை அதிகாரிகளை சந்தித்தார் என்று செய்தி வந்தது.
அதற்குள் துக்கம் தாளாமல் காஞ்சீபுரத்தில் ஒரு பேருந்து தீக்குளித்துக் கொண்டது. சாலையில் கிடந்த கற்கள் எல்லாம் அம்மா என்று கதறிக் கொண்டு போவோர் வருவோர் மீது பூச் சொரிய ஆரம்பித்தன. கந்துவட்டிக்கு வாங்கி சிறு கடை நடத்தியவர்கள் எல்லாம் தங்களின் உடைக்கபட்ட கடைகளைப் பார்த்து கண்ணீரை பூமாலையாக சூட்டினார்கள்.
இந்தத்தீர்ப்பு செல்வி ஜெயலிதாவின் அரசியல் வாழ்வை அஸ்தமிக்கச் செய்துவிடுமா என்றால் செய்யாது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மாபெரும் வெற்றிகளைப் பெற்ற அவரது கட்சி, அவரது கட்டுப் பாட்டில்தான் இருக்கிறது; இருக்கும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கரங்களில் ஒரு ரிமோட் ஆகத்தான் செயல்படுவார் என்று கூறலாம். இதனால் அதிமுக அழியாது. ஆனால் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடடைவை தம்பி எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிஜேபி போன்ற இதுவரை காலூன்ற முடியாத கட்சிகள் தமது மத்திய செல்வாக்கை வைத்து அதிமுக கட்சியினர் சிலரைத் தன்பக்கம் இழுக்க முயலலாம்.
இன்னொன்றையும் இந்த நேரத்தில் நாம் கூறியே ஆகவேண்டும். “அரசியல் பிழைத் தோர்க்கு ஆறாம் கூற்றாகும் “ என்ற சிலப்பதிகார வரிகளுக்கொப்ப அரசியல் பதவிகளைப் பயன்படுத்தி சொத்து சேர்த்தவர்களின் வரிசையில் நேற்று லாலு பிரசாத் – இன்று ஜெயலலிதா- நாளை இன்னும் சிலரும் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான வழக்குகளும் நல்ல முறையில் நடத்தப்பட்டு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைப் போல வழங்கப்பட்டு அவர்களது சொத்துக்களும் “நிதி”களும் நீதியாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
இன்று உலகத்தின் கண் முன் ஜெயலலிதாவின் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கும் அப்பீல் இருக்கிறது. ஜாமீன் இருக்கிறது.
“வெறும் வேடிக்கை மனிதரென நினைத்தாயோ “ என்று பாடிக் கொண்டும்
“நான்தாண்டி காத்தி !
நல்ல முத்து பேத்தி !” என்றும்,
“வாடியம்மா வாடி!
வண்டாட்டம் வாடி!
ஆத்தங்கரைப் பக்கத்திலே
காத்திருக்கேன் வாடி! “ என்றும்
மூச்சடக்கி ஜெயலலிதா அரசியல் அரங்கில் கபடி ஆட மீண்டும் வருவார்.
ஜெயலலிதாவின் பலம் எம்ஜியார் என்ற தமிழக மக்கள் மனதிலிருந்து மாற்ற முடியாத முகவரி. அந்த முகவரிக்காக மக்கள் ஜெயலலிதாவை மன்னிக்கத் தயாராக இருப்பார்கள். அண்மையில் இதேபோல் ஊழல் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வந்து சட்டமன்றத் தொகுதிகளில் அவரது கட்சியை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பதை நாம் உதாரணமாக எடுக்கலாம்.
ஜெயலலிதா ஒரு போராடும் குணமுள்ள துணிச்சலான பெண்மணி. அவர் இன்னும் போராடுவார். இத்தோடு ஓய்ந்தார் என்று யாரும் கணக்குப் போட்டுவிடக் கூடாத ஒரு பெண் வேங்கைதான் அவர் என்பதையும் உணர வேண்டும். ஆனால் இதே முறையில் இன்னும் தீர்ப்பு வழங்கப் படவேண்டிய ராஜாதிராஜாக்களும் ராஜாத்திகளும் இனிய மொழி பேசும் கண்மணிகளும் கலாக்களும் தயாக்களும் வழக்கு மன்றங்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. சட்டம் அனைவருக்கும் தன் கடமையை இதே ரீதியில் செய்ய வேண்டும். ஊரை அடித்து உலையில் போட்ட ஒருவர்கூட தப்பித்து விடக் கூடாது.
இந்த அலசல் கட்டுரையை நிறைவு செய்யும் முன்பு ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். செல்வி ஜெயலலிதா அவர்களைப் பொறுத்தவை தனிப்பட்ட முறையில் ஒரு புத்திசாலி; எட்டு இந்திய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர். தோற்றாலும் துவண்டுவிடாமல் எழுந்து நிற்கும் ஆற்றலுடையவர். எவரையும் வசீகரம் செய்யும் இயல்புடையவர். இவ்வளவு நல்ல தன்மைகள் கொண்ட ஜெயலலிதா கூடா நட்பால் தனக்குத் தானே வழிகேட்டைத் தேடிக் கொண்டாரோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. காரணம், தனிப்பட்ட வாழ்வில் தாய் தந்தை அண்ணன் தம்பி குடும்பம் குழந்தை என்று யாருமே இல்லாதவர், இத்தனை கோடிகளை யாருக்காக சேர்த்துவைக்க, செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டுத் தேடினார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
ஜெயலலிதா மட்டும் இப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் சேவை மனப்பான்மையில் தொண்டாற்றி இருந்தால் அன்னை தெரசா போன்றவர்களுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு அவர் உயர்ந்து இருக்க முடியும். உண்மைத் தொண்டாற்றுகிற ஒரு தலைவியாக அவர் வாழ்ந்து இருந்தால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் அவர் தங்கினாலே அவருக்குப் போதுமானதாக இருந்து இருக்கும். ஆனால் ‘மேய்கிற மாட்டை நக்குக்கிற மாடு கெடுத்தது போல்’ அதிகார போதையை அவருக்கு ஊட்டி இன்று ஒரு நல்ல சேவைத் தலைவியாகவும் உண்மையான புரட்சித் தலைவியாகவும் உருவெடுக்க வேண்டியவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியது விதியா அல்லது வீணர்களின் கைப்பாவையாக செயல்பட்ட சதியா? காலம் பதில் சொல்லும்.
இபுராஹீம் அன்சாரி
21 Responses So Far:
பொறுப்பான நடுநிலையான அலசல்.
அருமை காக்கா.
//துக்கம் தாளாமல் காஞ்சீபுரத்தில் ஒரு பேருந்து தீக்குளித்துக் கொண்டது. சாலையில் கிடந்த கற்கள் எல்லாம் அம்மா என்று கதறிக் கொண்டு போவோர் வருவோர் மீது பூச் சொரிய ஆரம்பித்தன. கந்துவட்டிக்கு வாங்கி சிறு கடை நடத்தியவர்கள் எல்லாம் தங்களின் உடைக்கபட்ட கடைகளைப் பார்த்து கண்ணீரை பூமாலையாக சூட்டினார்கள்//
கச்சிதமான நேரலையைப்போன்ற வர்ணனை.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
வசீகரமான உங்கள் செல்லத் தமிழில் நன்றாகவே குட்டி இருக்கிறீர்கள்.கூடா நட்பாள் விளைந்த பயன் இது.உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்,ஜெயா ஒரு தைரியசாலி.மற்ற ஆட்சியாளர்கள் போல் அல்லாமல்,அதிரடி முடிவெடுக்க கூடியவர்.
செய்த தவருக்கு,தண்டனையை அனுபவித்துவிட்டு,அவர் மீண்டு வரவேண்டும் என்பதே என் அவா.
சீரியசாகவே சொல்கிறேன்.யாருக்கும் வாய்ப்பிருந்தால்.திருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை,உமர் ரலி அவர்களின் ஆட்சி முறை பற்றி புத்தகங்களை அந்த சகோதரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.(தனிப்பட்ட வகையிலோ அல்லது இஸ்லாமிய புத்தக நிறுவனங்களை தொடர்பு கொண்டோ )அல்லாஹ் நேர்வழி கொடுக்க போதுமானவன்.இன்ஷா அல்லாஹ் மீண்டு வந்து நல்லாட்சி தரட்டும்.
now lady,
when modi?
http://peacetrain1.blogspot.com/2014/09/blog-post_28.html
திருமறையின் மொழி பெயர்ப்புகள் ஜெயலலிதாவுக்குப் பலமுறை சகோதரர் பிஜே அவர்களாலும் எஸ். எம். பாக்கர் அவர்களாலும் பரிசளிக்கப் பட்டிருக்கின்றன. என்பதை பலமுறை ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின் வாயிலாக தெரிந்து கொண்டோம்.
ஹஜரத் உமர் ( ரலி ) அவர்களது ஆட்சிதான் இந்தியாவுக்கு வரவேண்டுமென்று மகாத்மா காந்தியடிகள் சொன்ன வார்த்தைகளையும் ஜெயலலிதா தெரிந்தே இருப்பார்.
காந்தியடிகள் ஏன் அப்படி சொன்னார் என்பததையும் அவர் அறிந்து அல்லது கேட்டறிந்து இருப்பார். ஆனால் எல்லாவற்றையும்விட மனித உருவில் உறவாடிய ஷைத்தான்களின் ஊசலாட்டம் கூடவே இருந்ததால் அவரை அநீதிகளில் இருந்தும் ஆசைகளில் இருந்து காப்பாற்ற இயலவில்லை.
இந்து மத தத்துவங்களிலும் ஆசையை துறக்கவேண்டும் என்றும் “
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” என்ற திருக்குறள் கருத்தையும் ஜெயலலிதா அறியாமலா இருந்து இருப்பார்?
அல்லது திருக்குறளுக்கு உரை எழுதிய வேறு யாரும் அறியாத கருத்தா அது? எல்லாவற்றையும்விட அதிகார போதை- பணத்தின் மீதான ஆசை மனிதர்களை மடையர்களாக்குகிறது.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் கூட தவறு செய்துகொண்டு தவறுகளை நியாயபடுத்திக் கொண்டுதான் தான் இருக்கிறார்கள் அதனால் பதினெட்டு ஆண்டுகள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு தண்டனை வழங்கப் பட்டு இருக்கிறது என்று நினைக்கும் மக்களைவிட , அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலுக்கு முன் அறுபத்தாறு கோடி என்பது சாதாரணம்தானே என்று பேசும் மக்கள் நிறைந்து இருக்கிறார்கள்.
இன்று ஜாமீன் கிடைத்துவிட்டால் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்தின் பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொள்வார் என்று ஒரு செய்தி உலவுகிறது. ஆனால் ஜாமீன் இலகுவாகக் கிடைக்காது என்றும் சொல்கிறார்கள்.
அருமையான அரசியல் அலசல்...ஆனாலும் தண்டனை கொஞ்சம் அதிகம்தான்....இன அழிப்பில் ஈடுபட்டவரகளையும்,மதக்கலவரங்களை தூண்டுபவர்களையும்,குடும்பத்தொடு கொள்ளை அடிப்பவர்களையும் எங்கள் இந்திய சட்டம் இதனைவிட கடுமையாக தண்டிக்க வேண்டும்
நூறு கோடி அபதாரம் என்பது கூடுதல் என்பது என் கருத்து காரணம் இந்த நூறு கோடி அபதாரம் கட்ட ஆட்சியில் உள்ளவர்கள் மறு ஊழல் செய்துவிட வழி வகுத்துவிடும்
நூறு கோடி அபராதம் அதிகம் என்று சிலர் சொல்கிறார்கள்.
நூறு கோடி அபராதம் என்பது நடை முறைக்கு சாத்தியமற்றது என்ற அடிப்படை வாதத்தை வைத்து தீர்ப்புக்குத் தடை கோரி மனுவும் செய்து இருக்கிறார்கள்.
இந்த வழக்கின் சூத்திரதாரியான சுப்பிரமணியன் சுவாமி நூறு கோடி என்பது ஜெயலலிதாவுக்கு நத்திங்க் என்று சொல்கிறார்.
ராம் ஜெத்மலானி என்ற வாடகை வழக்கறிஞர் கூட தீர்ப்பை தவறு என்று சொல்லவில்லை. அபராதம்தான் தவறு என்கிறார். ராம் ஜெத்மலாநிதான் ஜாமீன் வழக்கிலும் ஆஜராகிறார். இவரேதான் கனி மொழி வழக்குக்காகவும் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர். இவர் ஒரு பக்கர் வாய்ஸ் ஒலிபெருக்கி மாதிரி கல்யாண வீட்டிலும் கட்டலாம் கருமாதி வீட்டிலும் கட்டலாம்.
இந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய மக்கள் மன்றத்தின் கருத்து இந்தவழக்கின் வரலாறு தெரியாமல் இருக்கிறது. கருணாநிதி போட்ட பொய் வழக்கு என்றே நினைத்துக் கொண்டு பல வழக்கறிஞர்களும் பேசுகிறார்கள். இதற்கு ஒரே காரணம் அரசியல் உள்நோக்கம்தான்.
தீர்ப்பு வரும் அன்று கருணாநிதி தனது கட்சித் தொண்டர்களுக்கு விடுத்த அறிக்கை ஒரு பண்பாடு மிக்க அரசியல் தலைவர் செய்தது. யாரும் பட்டாசு வெடிக்கக் கூடாது. இனிப்பு வழங்கக் கூடாது என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அதிமுகவி ன் அமைச்சர்களே
அம்மாவின் பாசத்தை எண்ணி கண் கலங்கிய நேரத்தில் மற்றவர்கள் தீர்ப்பைக் கொண்டாடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்பும் சட்டப்படி தனக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சலுகைகளையும் பெற்றபின்பே இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. மேலும் இன்னும் மிச்ச நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றங்களையும் அணுகி இந்த வழக்கு உண்மையில் பொய் வழக்குத்தான் என்பதை நிருபிக்கும் வாய்ப்பு அம்மையாருக்கு நிறையவே இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் சட்டப்படி அவர் இறங்கவேண்டுமே தவிர அடுத்தவர்களை குறை சொல்லி அரசியல் ஆதாயம் தேட முயல்வது இன்னும் அம்மையாரின் புகழுக்கு இரக்கத்துக்கு பதில் இறக்கத்தையே கொடுக்கும்.
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. புதிதாக கருத்திட்டவர்களுக்கும் நன்றி.
//இவர் ஒரு பக்கர் வாய்ஸ் ஒலிபெருக்கி மாதிரி கல்யாண வீட்டிலும் கட்டலாம் கருமாதி வீட்டிலும் கட்டலாம். //
'ராம்'ஜெத்'மாலினி'க்கு நல்ல அடைமொழிப் போர்வை ! :)
இந்து பத்திரிக்கையும் தனது பங்கிற்கு கொண்டாடுகிறது....
அவாள் மேல கைய வச்சதலா...
இவாள் உள்ளே போக வெடிக்குதாமே
பட்டாசு !?
உள்ளே வெளியே என்பது சகஜம்தானே அரசியலில்...
இந்த நேரத்தில் ராகுல் காந்தி கிழித்தெரிந்த அந்த சட்ட வரையரை நகல் கிளப்பிய அலைவேறு நினைவுக்கு வருகிறது.
ஊடகங்கள் வெளியிடும் ஒருதலைபட்சமான செய்திகளுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டி இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தொடரும் போராட்டங்கள் என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. இந்த வார்த்தைகளில் ஊடகத் திரிபு ஒளிந்து கொண்டு இருக்கிறது.
போராட்டங்கள் என்கிற வார்த்தைக்கு பதிலாக வன்முறைகள் என்றுதான் இருக்க வேண்டும்.
காரணம், பஸ்களை தீ வைத்துக் கொளுத்துவது , கடைகளின் மேல் கல்லெறிவது என்பனவற்றை எல்லாம் ஊடகங்கள் போராட்டம் என்று பார்க்கின்றவா? அல்லது வன்முறைகள் என்று பார்க்கின்றனவா?
இதில் ஒழித்து மறைக்க ஒன்றும் இல்லை.
கட்சிகள் கோடி கோடியாக இறைக்க எங்கிருந்து வருகிறது பணம்? " மக்கள் சேவை " யை மட்டுமே ஒரே வேலையாகச் செய்து கொண்டிருக்கும் நம்முடைய அரசியல் தலைவர்கள் குடும்பம் நடத்த எங்கிருந்து வருகிறது பணம்?
இந்தப் "பணப் புழக்கப் பாதை " வெளியில் உள்ளவர்களைவிடவும் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும்.
- தி இந்து தமிழ் பத்திரிகையில் இன்றைய கட்டுரையில் ஒரு பகுதி
எழுதியவர்: சமஸ்.
சபாஷ் சமஸ்.
நேர்மையான ஆட்சிக்கு உதாரணமாக காமராஜர் ஆட்சியைப் பற்றி யும் எளிமையான அரசியல்வாதிக்கு உதாரணமாக கக்கனைப் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கிறோம்.
இந்த இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளில் நேர்மையான , எளிமையான ஒரு அரசியல்வாதிகூட நமக்குக் கிடைக்கவில்லையா?
கண்ணெதிரே உள்ள சாட்சியம் நல்லக்கண்ணு. இந்திய அளவில் கொண்டாடத் தக்க அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளில் ஒருவர். இன்றைக்கும் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஆட்டோவில் வந்திறங்கும் ஒருவர்.
வாழ்நாள் பணியைப் பாராட்டி அளிக்கப்பட்ட நிதியைக் கூட மனைவிக்கு ஓய்வூதியம் வருகிறது எனக்கு என்ன செலவு ? என்று கேட்டு கட்சியிடம் நிதியை ஒப்படைத்தவர். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பரப்பில் நல்லக்கண்ணு அவர்களுக்கு இடம் என்ன?
- தி இந்து தமிழ் பத்திரிகையில் இன்றைய கட்டுரையில் ஒரு பகுதி
எழுதியவர்: சமஸ்.
நட்புக்கு பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா? தி ஹிந்து கட்டுரை.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article6457405.ece?widget-art=four-rel
யாருக்கும் வாய்ப்பிருந்தால்.திருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை,உமர் ரலி அவர்களின் ஆட்சி முறை பற்றி புத்தகங்களை அந்த சகோதரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.(தனிப்பட்ட வகையிலோ அல்லது இஸ்லாமிய புத்தக நிறுவனங்களை தொடர்பு கொண்டோ )அல்லாஹ் நேர்வழி கொடுக்க போதுமானவன்.இன்ஷா அல்லாஹ் மீண்டு வந்து நல்லாட்சி தரட்டும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது செல்வி ஜெயலலிதா அம்மையார் ஒரு எம்ஜியார் பாடிய பாடலைப் பாடி /சொல்லி வாக்கு சேகரித்தார். அந்தப் பாடல்
அச்சமென்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா - என்ற பாடல். இது மன்னாதி மன்னன் திரைப் படத்தில் வரும் பாடலாகும்.
அதற்கு முன் திருடாதே என்கிற திரைப் படத்தில் எம்ஜியார் ஒரு பாட்டுக்கு நடித்து இருப்பார். அந்தப் பாடலில் உள்ள வரிகளை வாழ்வில் ஜெயலலிதா அவர்கள் கடைப் பிடித்து இருந்தால் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகளை தவிர்த்து தொடர்ந்து தன்னிகரற்ற தலைவியாக விளங்கி இருக்கலாம்.
அந்தப் பாடல் வரிகள் இவை:
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ - தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா - அது
திரும்பவும் வராம பாத்துக்கோ
- என்கிற பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகள்தான் அவை.
( அவரவரிடம் அவரவர் மொழியில்தான் பேசவேண்டும்)
//இந்த நேரத்தில் ராகுல் காந்தி கிழித்தெரிந்த அந்த சட்ட வரையரை நகல் கிளப்பிய அலைவேறு நினைவுக்கு வருகிறது.//
அடுத்த குறி சோனியாவும் ராகுலும்தான் என்று சுப்பிரமணியம் சுவாமி சொல்கிறார்.
இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் பரிந்துரையை ஏற்று வாய்ப்புள்ளவர்கள் அந்த நூல்களை அம்மையாருக்கு பெங்களூர் சென்று சிறையில் மனுப் போட்டு கொடுக்க முயற்சி செய்யலாம்.
சிறைக்குள் சிறந்த நூல்களைப் படிப்பது பலருடைய வாழ்வையே மாற்றிவிடும் என்று சொல்வார்கள்.
உதாரணமாக முரசொலி அடியார் என்ற ஒரு எழுத்தாளர் அவசரநிலைப் பிரகடன் நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு வழ்ங்கபப்ட்ட திருமறையின் மொழிபெயர்ப்பு அவரை சிறையிலிருந்து வெளியே வரும்போது அப்துல்லாஹ் வாக மாற்றிக் கொண்டு வந்தது.
அதன்பின் அப்துல்லாஹ் என்று பெயர் தாங்கியே அவரது படைப்புக்கள் வெளிவந்தன. அவரும் முஸ்லிமாகவே வாழ்ந்து மறைந்தார்.
ஹிதாயத்தை அல்லாஹ் நினைத்தால் யாருக்கும் எங்கும் வழங்குவான்.
இன்ஷா அல்லாஹ்.
//அடுத்த குறி சோனியாவும் ராகுலும்தான் என்று சுப்பிரமணியம் சுவாமி சொல்கிறார். //
காங்கிராஸார் கரை கண்டவர்கள்!
சகோ இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் ஊக்க மிகு கருத்துக்கு மிக்க நன்றி.அப்துல்லாஹ் அடியார் அவர்களின் மேற்கோளும் அருமை.குரான் ஒரு காந்தம்.எங்கு அது ஓட்ட வேண்டும் என அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ - இன்ஷா அல்லாஹ் அது அங்கு(இதயம்) போய் ஓட்டிக் கொள்ளும்.நாம் செய்ய வேண்டிய வேலை,அந்த காந்தத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியது மட்டுமே.நேரில்,சிறையில்,ஹோட்டல் களில்,லைப்ரரிகளில் இப்படி.அமெரிக்காவில் அதுதான் நடக்கிறது.
ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை தழுவிக் கொள்கிறார்கள்,அதனால் பாவம் கழுவிக் கொள்கிறார்கள்.அல் ஹம்து ளில்லாஹ்.
அதன் அடிப்படையில்,செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் நாம் எத்தி வைப்பது நம் கடமை.சிறையில் இருப்பதால்,மனு போட்டு சந்திப்பது இயலாத காரியம்.அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டால்,போயஸ் தோட்டத்துக்கும்,ஜாமீன் கிடைக்க வில்லை என்றால்,அந்த சிறைக்கும் பதிவு தபாலில் அனுப்பலாம்.
உதாரணமாக,ift போன்ற அமைப்புக்களில் சென்று,என்ன புத்தகம் என்று சொல்லி,பணம் கொடுத்து,முகவரி சொல்லிவிட்டால்,அவர்கள் gift ஆக அனுப்பி விடுவார்கள்.
யார் அந்த நன்மையை அள்ளப் போவது?
இது போல் ஏனைய not yet muslims களுக்கு கொடுத்துக் கொண்டே,அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.இது போன்ற ஒரு முயற்சியை = அதிரை நிருபர் ஆரம்பித்து வைக்குமா?
Post a Comment