நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

13

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, செப்டம்பர் 06, 2014 | , , ,

தொடர் பகுதி - ஏழு

உலகம் போற்றுகிற 
புனித மேவுகிற 
உயர்வு  ஓங்கும் இறை இல்லம்
ஆலம் வாழுகின்ற தீனோர் யாவர்க்கும்
ஆரம்பக் கிப்லா அதுதான்
நபிமார் எல்லோரும் தொழுகின்ற 
அபிமானம் உள்ள இறை இல்லம்

- என்றெல்லாம் புகழப்படும் பைத்துல் முகத்தஸ்ஸும் அல்- அக்ஸா பள்ளியும் அடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜெரூசலத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தனது படைகளுடன் வந்து நின்றார் இந்த அத்தியாயத்தின் கதாநாயகன் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்கள்.  சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களையும் அவர்களது படை வீரர்களையும் பற்றி குறிப்பிடுகிற வரலாறு determined army  என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. 

புனித ஜெருசலத்தை மீட்பது என்கிற மாற்றப்படமுடியாத உத்வேகமிக்க தீர்மானம் அவர்களது இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருந்தது என்பதுதான் அந்த வார்த்தைகளின் உண்மையான உணர்வு பூர்வமான அர்த்தம். 1187 ஜூலை மாதம் ஜெருசலத்தின் பெரும்பகுதிகளில் சலாஹுதீன் அய்யூபி அவர்களின் வெற்றிக் கொடி பட்டொளிவீசிப் பறந்தது.  

 Battle of Hattin என்று வரலாறு குறிக்கிற Hattin  என்கிற  இடத்தில்  Guy of Lusingan King Consort என்பவரும்  Raymond III என்கிற திரிபோலியின் சிலுவைப்படை மன்னரும் இணைந்து கூட்டணி வைத்து வாளெடுத்தும் சலாஹுதீன் அய்யூபி அவர்களின் ஆக்ரோஷம்,  அவைகளை தவிடு பொடியாக்கி    தாளித்துப் போட்டுவிட்டு முன்னேறியது.  

சிலுவைப்படையினருக்கு இந்தப் போர் பேரழிவைப் பரிசாக அளித்தது என்றும் இந்தப் போரே மீண்டும் ஜெருசலத்தை  முஸ்லிம்களின் கைகளுக்குச் செல்ல வைத்த திருப்பு முனை என்றும் வரலாறு வர்ணிக்கிறது. இந்தப் போரின் முடிவில் Guy of Lusingan King Consort  என்ற ஜெருசலத்தின் மன்னரும் Raynold de Chatillion  என்கிற அவரது அமைச்சரும் சிறைப் பிடிக்கப்பட்டு பிணையக் கைதிகளாயினர்.

 ஜெருசலத்தைச்  சுற்றிவளைத்த  சலாஹுதீன் அவர்களின் தீர்க்கமான படை; அரசரும் அமைச்சரும் கைவிலங்கு பூட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டு  கட்டிவைக்கப்பட்ட நிலை; ஜெருசலத்தின் உள்ளே சிலுவைப் போர் வீரர்களின் நிலைகுலைந்த நிலை. இதுதான் அன்றைய நிலை. 

இந்த இடத்தில் Raynold de Chatillion என்பவனைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.  சென்ற வாரத்தில் நாம் எழுதிய  அத்தியாயத்தில் சிரியா வழியாகச் சென்ற  ஒரு அராபிய வணிகக் கூட்டம் அநியாயமாகக் கொல்லப்பட்டது என்று குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா? அந்த  கூட்டுக் கொலையைத் தூண்டியவன்  இந்த Raynold de Chatillion  தான். 

அதுமட்டுமல்ல இன்று இந்தியாவில் சிலர் ‘அகண்ட பாரதம்’ அமைப்போம் என்று பிதற்றுகிறார்களே  அதே போல் சவூதி அரேபியாவையும் இணைத்து  அகண்ட  இஸ்ரேலை அமைப்போம் என்று நாடங்கும் பிதற்றித்திரிந்த பேமானி இந்த Raynold de Chatillion ஆவான். அதாவது இன்றைய இஸ்ரேலுடன் புனித மெக்கா மதினா ஆகிய நகரங்களையும் சேர்த்து அவைகளையும் இஸ்ரேல் ஆக்குவோம் என்று முழங்கியவன். 

அது மட்டுமா? 

எழுதவே  நெஞ்சு பதைக்கிறது. உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான பெருமானார் அவர்களைப் பற்றி பல அவதூறான செய்திகளை கிருத்துவ உலகெங்கும் பரப்பிய பாவிகளின் தலைமகன்  இந்த Raynold de Chatillion ஆவான். அவன் பேசிய பேச்சுக்களில் உன்மத்தத்தின் உச்சகட்டமாக, மதினாவில் இருக்கும் பெருமானார் ( ஸல்) அவர்களின் கல்லறையைத் தோண்டி அவர்களின் எலும்புகளைத் தோண்டி எடுத்து வந்து தோரணமாகக் கட்டுவேன் என்றும் பேசியவன் . இப்படிப்பட்டவனுக்குத் தகுந்த பரிசு வழங்கப்பட வேண்டாமா? அவனை மண்டியிடவைத்து அவனுக்கு மரணப்பரிசை வழங்க சலாஹுதீன் அய்யூபி சபதமேற்கொண்டார். 

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! என்ற சொல்லுக்கும் ‘இன்னா செய்தார்க்கும் இனியவையே செய்யும் இயல்பு’க்கும் சொந்தக்காரர்தான் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை நாம் காண இருக்கிறோம். ஆனால் பெருமானார்        ( ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய Raynold de Chatillion – ஐ மட்டும் மனத்தால் கூட  மன்னிக்க மனித சமுதாயமே தயாரில்லாத போது  மன்னர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? 

இதோ!  நாம் கைதட்டிப் பாராட்ட வேண்டிய அந்தக் கவின்மிகுக் காட்சி. 

கைகளில் விலங்கு பூட்டி காலில்  இரும்புச் சங்கிலிகள் இறுக்கமாக அணிவிக்கப்பட்டு சண்டமாருதம் சலாஹுதீன் அய்யூபி அவர்களின் முன்னால் ஜெருசலத்தின் அரசர் Guy of Lusingan King Consort அவர்களும் உலக மகா பாவியான Raynold de Chatillion நிறுத்தப்படுகிறார்கள். 

அந்த நேரம் , அரசர் Guy of Lusingan King Consort க்கு தாகம் எடுக்கிறது. அதனால் விக்கல் ஏற்படுகிறது. ஜெருசலத்தின் மன்னருக்கு தண்ணீர் வேண்டுமென்று  கேட்கத் தயக்கம். இதைக் குறிப்பால் உணந்த கருணை மிகுந்த சலாஹுதீன் அய்யூபி அவர்கள்,  ஜெருசலத்தின் மன்னரின்  தாகத்தைத் தீர்க்க தண்ணீர்  அல்ல பழ ரசம் கொடுக்கும்படி உத்தரவிடுகிறார். 

அந்தக் கால நடைமுறைப்படி ஒரு போர்க் கைதிக்கு பழரசம் கொடுத்தால் அந்தப் போர்க் கைதியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் எற்படுத்தப்படாது என்று அர்த்தம் . அந்த அர்த்தத்தை அந்தப் போர்க் கைதி உணர்ந்துகொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பழரசம் கொடுப்பது  ஒரு அரச நிர்வாகத்தின் அடையாளம். அவ்விதம் கொடுக்கப்பட்ட பழரசத்தை ஜெருசலத்தின் மன்னர்  பருகிக் கொண்டிருக்கும் போது அருகில் நின்ற  பச்சைத் துரோகி    Raynold de Chatillion- யும் தனது நாக்கால் தனது உதடுகளை ஈரப்படுத்தி  தனக்கும் தாகம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பால் உணர்த்துகிறான். இவனது இதே உதடுகள்தான்  எம்பெருமானார் ( ஸல்) அவர்களுக்கு எதிராக அசைந்த வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய உதடுகள்.  இப்போது அந்த உதடுகள் தாகத்தால் தவிக்கின்றன. 

ஜெருசலத்தின் மன்னர், தனக்குத் தரப்பட்ட    பழரசத்தின் கோப்பையில் இருந்த பழரசத்தில் பாதியை குடித்துவிட்டு மீதியை,  தனக்கு அருகிலேயே விலங்கு போட்டு நிறுத்தப் பட்டு இருக்கும்   பாவங்களின் மொத்த உருவமான Raynold de Chatillion உடைய கரங்களில் தருவதற்காக தனது விலங்கு பூட்டியக் கைகளால் கோப்பையை நீட்டுகிறார். 

அப்போது, 

சிங்கம் ஒன்று சீறி எழுந்தது. அந்த சிங்கத்தின் கரங்களில் தீட்டப்பட்ட வாள் பளபளவென்று மின்னியது. அந்த சிங்கத்தின் பெயர் சலாஹுதீன் அய்யூபி . விரைவாக Raynold de Chatillion ஐ நோக்கி விரைந்த சலாஹுதீன் அய்யூபி அவர்கள் Raynold de Chatillion உடைய கையில் இருந்த பழரசக் கோப்பையை கோபத்துடன்  தட்டிவிடுகிறார். அந்த கண்ணாடிக் கோப்பை தரையில்  விழும் முன்பே அதையும் முந்திக் கொண்டு சொட்டும் ரத்தத்துடன் ஒரு தலையும்  தரையில்  விழுந்தது . அப்படி விழுந்தது Raynold de Chatillion உடைய தலை.  அதை வெட்டி வீழச்செய்தவர் சாட்சாத்  சலாஹுதீன் அய்யூபி அவர்களே. 

"தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன்" என்று ஒரு முழக்கம் ஒருகாலத்தில் நமது காதுகளில் ஒலித்ததுண்டு. அதே போல் பெருமானார்      ( ஸல்) அவர்களை இழுவு படுத்திப் பேசிய கிருத்துவத் தளபதி Raynold de Chatillion உடைய தலையை வீழ்த்துவேன் என்று வீர சபதம் பூண்ட சலாஹுதீன் அய்யூபி அவர்களின் சொந்தக் கைகளாலேயே வெட்டி வீழ்த்தப்பட்ட அந்த பஞ்சமாபாதகனின் தலை  தரையில் உருண்டு ஓடிச் சென்று ஒரு ஓரத்தில் போய் நின்றது. இந்தக் காட்சியை கண்டுகொண்டு இருந்தவர்களின் “அல்லாஹு அக்பர் “  என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட ஜெருசலத்தின் மன்னர் பயத்தால் உறைந்து போய் நின்றார். அடுத்து சலாஹுதீனின் வாள் தனது கழுத்தைப் பதம் பார்க்க நாள் நட்சத்திரம் பார்க்காது என்பதை அவர் அறிந்து நடுங்கிக் கொண்டிருந்தார்.  ஆனால் அவரைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பை மட்டும் இதழோரமாக எடுத்து வீசிவிட்டு வெற்றிவேந்தர் சலாஹுதீன் அய்யூபி         (ரஹ்) அவர்கள்   தனது சிம்மாசானத்துக்கு  சென்று ஒன்றுமே நடக்காதது போல்  அமர்ந்தார். 

பயத்தால் உறைந்து போயிருந்த ஜெருசலத்தின் மன்னரை நோக்கி  “ It is not the want of kings, to kill kings; but this man had transgressed all bounds, and therefore did I treat him thus “ என்று கூறினார். பிறகு ஜெருசலத்தின் மன்னர் மன்னிக்கப்பட்டதும்  இங்கிலாந்துக்கு பத்திரமாக அனுப்பப்பட்டதும் சலாஹுதீன் என்ற மனிதப் புனிதரின் மறுபக்கத்தின் கருணையான பக்கங்கள். அவரது கருணையான இதயத்தின் வலிமையான சுவர்கள்,  வரலாற்றின்  பல பக்கங்களை நிரப்பி இருக்கின்றன. எந்த மன்னரை மன்னித்து அவரை வீதியில் நிறுத்தாமல் வீடுவரை விட்டாரோ,  அதே மன்னர் பின்னர் படை திரட்டி சலாஹுதீனை எதிர்த்ததும் இன்னும் நாம் பார்க்க இருக்கும் எஞ்சியுள்ள பாலஸ்தீனத்தின்  பரிதாபமான  பக்கங்களே. 

அவைகளை அடுத்து பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.         

இபுராஹீம் அன்சாரி

13 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெற்றிவேந்தர் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் வீரத்தையும் கருணையையும் உணர்ச்சிபூர்வமான வர்ணனையின் மூலம் விவரித்திருப்பது நெஞ்சை அள்ளுகிறது.

பாலஸ்தீனில் புனித தளங்கள் அமையப் பெற்றது வரமாக இருப்பதற்குப் பதிலாக சாபமாகவல்லவா அமைந்து போனது.!

ஒரு முழுநீளச் சித்திரம்போல சகல அம்சங்களோடும் வளர்கிறது தொடர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk சொன்னது…

//"தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன்" //

காக்கா, இதெல்லாம் ச்சும்மா சொல்றாய்ங்களே தவிர ஒன்னுஞ்ஜெய்ய மாட்டாய்ங்க.

சமஸ்கிருதத்தை நைஸா முன்னிருத்தப்பார்க்கும் மோடி அரசை எதிர்த்து கடுசா ஒன்னும் போராட்டமெல்லாம் செய்யல இவிங்க.

கண்டனம் மட்டும்தான். ஹூ கேர்ஸ்!

sabeer.abushahruk சொன்னது…

//“ It is not the want of kings, to kill kings; but this man had transgressed all bounds, and therefore did I treat him thus “ //

காக்கா,

what an excellent way of writing!!!
I felt like 'english language also wonderful' when i read the above dialogue.

//therefore did I treat him thus//

if written by MalayaLi:

"அதுகொண்டுதன்னெ ஞான் ஆயால்ண்ட தலய கட் ச்செய்ததா. அல்லாத்தெ ஓஃபிஸியலா ஜூஸ் குடிக்கிந்ந நிங்ஙல ஒரு ச்சுக்கும் செய்யாதே விடும். சாயிபு ப்பேடிக்கண்டா"

if written by madrasi:

i cutting his heading for what he was doing. all wrong wrong things doing. therefore cutting.

sheikdawoodmohamedfarook சொன்னது…

Raynold de Chatillion தலையை ஒரே வீச்சில் கொய்து எறிந்தது போல் ஜெருசலத்தின் மன்னரின் தலையையும் கொய்திருந்தால் இன்றைய ஜெருசலத்தின்தலைவிதியைவேறுமாதிரியாகமாறிஇருக்கும்என்பதுயூகம். சலாஹுதீன்போர்க்களத்தில் பிடித்தவாளை புல்லாங்குழலாக மாற்றியதைபார்த்தல் குழந்தையைதாலாட்டுபாடியதுபோல்இருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

வீரம் செறிந்த வரலாறு சொல்லும்போது அந்த களத்தின் தளபதியின் வீர உரைபோன்று இருக்க வேண்டும் என்று சொல்லும் அருமையான எழுத்து நடை !

Ebrahim Ansari சொன்னது…

தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம் .

Honestly, நீங்கள் குறிப்பிட்டு பாராட்டி இருக்கும் ஆங்கில வசனங்கள் என்னால் எழுதபப்ட்டதல்ல. வரலாற்று நூல்களில் இருந்த வசனங்களையே எடுத்து பரிமாறி இருக்கிறேன்.

எனக்கு தமிழில் ஏதோ எழுதுவேனே தவிர ஆங்கிலத்தில் இவ்வாறெல்லாம் இலக்கிய நடையில் எழுதும் அளவுக்குப் பாண்டித்துவம் இல்லை என்பதே உண்மை.

Ebrahim Ansari சொன்னது…

//"தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன்" என்று ஒரு முழக்கம் ஒருகாலத்தில் நமது காதுகளில் ஒலித்ததுண்டு//

இது பற்றி தம்பி சபீர் அவர்களின் கருத்து ஏற்புடையது.

நமது நாட்டில் சில கோஷங்கள் வெறும் வார்த்தை அலங்காரங்கள் மட்டுமே.

சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்பது போல் நடிக்கும் நிலைதான் இன்று தமிழகத்தின் பெரும் கட்சிகளுக்கு- காரணம் இவற்றை எல்ல்லாம் மீறி அவர்களுக்கு சொந்தபபிரச்னைகளில் இருந்து தப்பிக்க வேண்டி தாஜா செய்து கூஜா தூக்கும் நிலை.

உதாரணத்துக்கு ஒன்று . இது ரணமான உதாரணம். ஹெச் . ராஜா பாரதீய ஜனதாவின் அகில இந்திய செயலாளராக ஆனதை தமிழத் தானைத்தலைவர் பாராட்டி அறிக்கைவிடுகிறார்.

ஆனால்

அடுத்த வாரமே ஹெச் ராஜா திமுகவில் இருக்கும் இந்துக்கள் அந்தக் கட்சியை விட்டு விலகி பிஜேபியில் சேர வேண்டுமென்று அழைப்புவிடுக்கிறார். தானைத்தலைவர் இதை எதிர்த்து தனது வீல் சேரைக் கூட நகர்த்தவில்லை.

இதோ இன்ஷா அல்லாஹ் இவைகளை எல்லாம் போட்டு உடைக்க மீண்டும் நேற்று இன்று நாளை வர இருக்கிறது.

நண்பர் பகுருதீன் தனது பேனாமுனையைத் தீட்டிக் கொண்டு இருக்கிறார்.

Ebrahim Ansari சொன்னது…

//if written by madrasi:

i cutting his heading for what he was doing. all wrong wrong things doing. therefore cutting//

If written by a Telungan
.
i cuttingu his headinglu for what he was doing. all wrong wrong thingslu doing. therefore cuttingu//

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//இதோ இன்ஷா அல்லாஹ் இவைகளை எல்லாம் போட்டு உடைக்க மீண்டும் நேற்று இன்று நாளை வர இருக்கிறது.

நண்பர் பகுருதீன் தனது பேனாமுனையைத் தீட்டிக் கொண்டு இருக்கிறார்.///

வாங்க வாங்க நலமுடன் நல்வரவு ! - காத்திருக்கிறோம்... இன்ஷா அல்லாஹ் !

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெற்றிவேந்தர் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் வீரத்தையும் கருணையையும் உணர்ச்சிபூர்வமான வர்ணனையின் மூலம் விவரித்திருப்பது நெஞ்சை அள்ளுகிறது.

Ebrahim Ansari சொன்னது…

அன்பான தம்பி இபனு அப்துல் ரஜாக் அவர்களுக்கு

வ அலைக்குமுஸ் சலாம். ஜசாக் அல்லா ஹைரன்.

Yasir சொன்னது…

வெற்றிவேந்தர் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் வீரத்தையும் கருணையையும் உணர்ச்சிபூர்வமான வர்ணனையின் மூலம் விவரித்திருப்பது நெஞ்சை அள்ளுகிறது.

அப்துல்மாலிக் சொன்னது…

ஒரு வரலாற்றை கண்முன்னே நடந்ததுபோல் வர்ணித்த விதம் அருமை காக்கா

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+