நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

9

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, செப்டம்பர் 27, 2014 | , , ,

தொடர் பகுதி - பத்து

ஒரு புறம் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த சிலுவைப் போர்வீரர்கள். மறுபுறம் மதத்தைக்காக்க ஒன்று திரண்ட ஜெர்மன், பிரான்சு மற்றும் ஆங்கிலப் படைகள் என பல திசைகளிலிருந்தும் திரண்டு வந்த கிருத்துவப் படையினர் சலாஹுதீன் அவர்களைத் தோற்கடித்து பாலஸ்தீனத்தையும் ஜெருசலத்தையும் கைப்பற்ற பார் சிறுத்ததால் படை பெருத்ததோ! படை பெருத்ததால் பார் சிறுத்ததோ! என்று பரணி பாடினர்; ஒன்றுகூடினர்.

ஜெர்மன் சக்கரவர்த்தி ஃபிரடரிக் பார்பரொஸ்ஸா, பிரான்ஸ் மன்னன் பிலிப் அகஸ்டஸ், அரிமா இதயம் (LION HEART) படைத்த ஆங்கில மன்னன் ரிச்சர்ட் ஆகியோர் இந்த கிருத்துவ இன எழுச்சிக்கு தலைமை தாங்கினர். இப்படி உலகின் பல பாகங்களில் இருந்தும் சலாஹுதீன் அவர்களுக்கெதிராக இந்த மூன்று ‘பாண்டவர்’கள் ஒன்றிணைந்தனர். இந்தப் ‘பாண்டவர்’களை கச்சை கட்டி இறங்க வைத்தது அன்றைய போப்’பாண்டவர்’தான். மதத்தின் பெயரால் மத உணர்வைத் தூண்டி, இந்த இணைப்பை ஏற்படுத்துவது போப்பாண்டவருக்கு இலகுவாக இயன்றது. 

இந்தப் போரின் அரிச்சுவடி சிரியாவின் பகுதியிலிருந்த ஏக்ர் (Acre) என்ற நகரின் கோட்டையில் தொடங்கியது. கடல் மூலமாகவும் தரைவழியாகவும் ஐரோப்பியப் படை மற்றும் சிலுவைப் போர்ப்படை கோட்டையை சுற்றி வளைத்து உட்புகுந்தது. தரைவழித் தாக்குதலை மட்டுமே எதிர் நோக்கி இருந்த சலாஹுதீன் அவர்கள் சற்று தடுமாறித்தான் போனார். ஆனால் அல்லாஹ்வின் பார்வை அவர் பக்கம்தான் இருந்தது. ஆனால் அதற்குமுன் சலாஹுதீன் தான் வெற்றி பெற்ற நேரத்தில் , இறைவழியையும் நபி மொழியையும் பின் பற்றி பகைவர்களை பண்புடன் நடத்தி பத்திரமாக வெளியேற்றிய சலாஹுதீன் அவர்கள் படித்துக் கொடுத்த பாடம் மனிதப் பதர்களுக்கு முன், பயனில்லாமல் போனது. 

ஆம்! கோட்டைக்குள் புகுந்த கிருத்தவ வீரர்கள் பழிவாங்கும் போக்கில் கோட்டைக்குள் இருந்த முஸ்லிம்களை வரிசையாக நிற்கவைத்து தலைகளை சீவி குவியல் குவியலாகக் கொன்று குவித்தார்கள் படுகளத்தில் ஒப்பாரி இல்லை! ஆனால் அது படுகளம் அல்ல; கொடியவர்கள் கோலேச்சியக் கொலைக் களம். சரணடைந்த முஸ்லிம்களைக் கொல்வது கடைந்தெடுத்த கோழைத்தனம். நேருக்கு நேர் வாளெடுத்துப் போரிட்டு, தனது வீரத்தால் முஸ்லிம்களை வென்று, கொன்று இருந்தால் அதை வரலாறு கூட வரவேற்று இருக்கலாம். இவ்விதம் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 3000 க்கு மேல் இருக்குமென்று Baha- ad- Din என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

முஸ்லிம்களைக் கொல்வதில் கூட பணக்காரன் ஏழை என்று பாகுபாடு வைத்துக் கொன்று குவித்தார்கள். பல வசதி படைத்த முஸ்லிம்கள் கிருத்துவர்களில் குத்தீட்டியிளிருந்து குனிந்து தப்பித்தார்கள் காரணம் அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் அவர்களின் உயிருக்குப் பகரமாக பறித்துக் கொள்ளப்பட்டன. இந்த சம்பவங்களை மிஷுதீன் என்கிற வரலாற்றாசியர் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல , ஏக்ர் (Acre) வில் இவ்வளவு அட்டூழியம் நடத்தி, அவர்கள் அந்தக் கோட்டையைக் கைப்பற்றி முஸ்லிம்களை கூட்டுக் கொலை செய்த வெற்றியை வெளிநாடுகளிலிருந்து விலைமாதர்களை வரவழைத்து அவர்களுடன் மது விருந்து படைத்துக் கொண்டாடினார்கள் என்ற வெட்ககரமான செய்தியையும் மிஷுதீன் குறிப்பிடுகிறார். 

இந்த ஆக்கிரமிப்பையும் அநியாயத்தையும் அழித்தொழிக்க சலாஹுதீன் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்த அதே வேளை, ஏற்கனவே உயிரைப் பணயமாக வைத்து தான் பிடித்து வைத்திருக்கும் ஜெருசலத்தை நோக்கியும் கிருத்துவப்படைகள் செல்ல எத்தனிக்கும் என்று கணக்குப் போட்ட சலாஹுதீன் அவர்கள் ஜெருசலத்துக்கான பாதுகாப்பையும் அதிகரித்து இருந்தார். இருந்தாலும் துணைக்கு ஒரு கரம் இருந்தால் நல்லது என்று எண்ணினார். அதனால் மொராக்கோவுக்கு தனக்கு உதவும்படி தூது அனுப்பினார். ஆனால் அங்கிருந்து அவருக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. 

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சலாஹுதீன் அவர்கள் இப்படி சண்டைச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த அந்த நேரம், மொராக்கோவிலிருந்தும் உதவி கிடைக்காத நேரம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமான பாக்தாத் இருந்தது. ஆனால் சலாஹுதீன் அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் ஏனோ கலிபாவுக்கு உண்டாகவில்ல. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியின் சுல்தானாகிய சலாஹுதீன் அவர்கள், ஒரு புறத்தில் எதிரிகளுடன் போராடிக் கொண்டு இருக்கிற நிலையில் பொறுப்பான கலிபா பொடுபோக்காக இருந்தார். ஆக, தலைமையின் தலையீடு இல்லாமலேயே ஒரு சிலுவைப் போரை தனியாக நின்று சலாஹுதீன் அவர்கள் சமாளித்தார்கள் என்பது சரித்திரத்தின் வியப்பான குறியீடு.

தான் நினைத்தபடியே பாலஸ்தீனத்தை நோக்கி ஜெருசலத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஒரு மிகப் பெரிய ஜெர்மானியப் படை, ஜெருசலத்தை நோக்கி முன்னேறுவதையும் அதைத் தலைமைதாங்கி நடத்தி வருபவர் ஜெர்மானிய சக்கரவர்த்தியாகிய ஃபிரடரிக் பார்பரொஸ்ஸாவே என்பதை அறிந்த சலாஹுதீன் அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அதன் பின் நடந்த நடப்புகள் அல்லாஹ் அவரை நைல் நதியின் நட்டாற்றில் விட்டுவிடவில்லை என்று பாரோர்க்குப் பறை சாற்றியது. ஜெருசலமும் பாலஸ்தீனமும் அர்ப்பணிப்புகளின் நாயகன் சலாஹுதீனுக்கே என்று அல்லாஹ் விதி வகுத்து இருந்ததை ஜெர்மானிய சக்கரவர்த்தியல்ல அவரது பாட்டனே வந்தாலும் மாற்ற முடியவில்லை. 

படைகளை வழி நடத்திக் கொண்டிருந்த ஜெர்மானிய சக்கரவர்த்தி ‘பதறிய காரியம் சிதறும்’ என்ற பழமொழியின் இலக்கணத்துக்கு இலக்காகி நடு ஆற்றில் தலை குப்புற விழுந்தார். சலீஃப் என்ற ஆற்றில் விழுந்தவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவரது படையும் நிலை குலைந்து போய், இறந்து போன சக்கரவர்த்தியின் மகன் தலைமையில் லெபனானின் டயர் நகரம் அடைந்தனர். எதிர்பாராத விதமாக மன்னனின் மகனும் இறந்துவிட எஞ்சிய சிறுபடை மட்டும் (Acre) ஏக்ர் வந்தடைந்தது. ஒரு வேளை திட்டமிட்ட படி முழு ஜெர்மானியப் படை பாலஸ்தீனம் வந்திருந்தால் சரித்திரம் அன்றே மாறி இருக்க வாய்ப்பிருந்தது. சூழ்ச்சிக்காரர்களிளெல்லாம் இறைவனே பெரிய சூழ்ச்சிக்காரன் என்று அறியாத போப்பாண்டவர் இன்னொருவரின் தலைமையில் பெரிய படையை அனுப்பினார். ஆனால் எந்தத் தண்ணீரிலும் அவர்களது பருப்பு வேகவில்லை. 

புதிதாக வந்த கிருத்தவ வீரர்களுடன் கூடவே போர் மிகவும் தீவிரமாக நடைபெற்றது; ஓராண்டு ஓடியும் போனது ஆனால் வெற்றி யாருக்கு என்று இன்னும் தீர்மானமாகாத போர் அது. இருதரப்பு வீரர்களும் சலிப்புற்ற நிலையில் ஒரு இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. காலத்துக்கும் கரங்களில் வாளேந்தி ஓடிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருந்த சலாஹுதீன் அவர்களுக்கும் உடல் நலம் இல்லாமல் போனதால் சற்று ஓய்வும் தேவைப் பட்டது. மருத்துவர்கள் சொல்லியபோதேல்லாம் படுத்துப் பழகாத சலாஹுதீன் அவர்கள் தனது உடலே ஒய்வு தேவை என்று சொல்லியதால் , இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதித்து சற்று ஓய்வெடுத்தார். ஆனால் இந்த இடைக்காலம் எதிர்களுக்கு தங்களை சீர்படுத்திக் கொள்ளவும் புதிய வியூகங்கள் அமைப்பதற்கும் அவகாசம் அளித்தது. அதையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இப்போதும் கூட சலாஹுதீன் அவர்களின் இரக்க குணத்தை வரலாறு பதிவு செய்து இருக்கிறது. மீண்டும் போர் நடத்த இங்கிலாந்து மற்றும் பிரான்சு மன்னர்கள் முஸ்தீபுகள் செய்து கொண்டிருக்கும்போது அவர்கள் இருவருக்கும் விஷக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களின் விஷக் காய்ச்சலை முறிக்கும் மூலிகை மருந்துகள் லெபனானில் கிடைப்பதை அறிந்த சலாஹுதீன் அவர்கள் அந்த மூலிகைகளைப் பறித்து வரச் செய்து பகைவர்களுக்கு தனது அன்பளிப்பாக அனுப்பினர். போரின்போது தனது குதிரையை இழந்த இங்கிலாந்து மன்னர் ரிச்சர்டுக்கு இழந்த குதிரைக்கு பதிலாக வைத்துக் கொள்ளும்படி குதிரையும் அனுப்பினார். இப்படி ஒருவரை நாம் எங்காவது கண்டிருக்கிறோமா? மன்னர்கள் மருந்துகளை குடித்து மறுமலர்ச்சி பெற்றனர். அடுத்த நொடி சலாஹுதீனை அழிக்க ஆர்ப்பரித்துக் கிளம்பினர். நன்றியுணர்வும் போர்நிறுத்தமும் ஒன்றாக விடைபெற்றன.

புதிய பலத்துடன் சிலுவைப் போர் வீரர்கள் அவர்களுக்குத் துணையாக சில ஜெர்மானிய ஆங்கில பிரான்சுப் படைகள் ஆகியவர்களுடன் தொடர்ந்து போர்களையே சந்தித்துவந்த சலாஹுதீன் அவர்களின் வீரர்கள் மோதிய போது, தனது வீரர்களுக்கிடையே ஒருவித முணுமுணுப்புக் கேட்டதை சலாஹுதீன் அவர்களின் காதுகள் கவனித்தன. மேலும் கோட்டைக்குள் இருக்கும் எஞ்சிய முஸ்லிம்களையாவது காப்பாற்றி விட வேண்டுமென்ற போராட்டத்திலும் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போரை நிறுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டிய நிலைமை சலாஹுதீன் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே இனி யாரும் கொல்லப்பட மாட்டார்கள் என்கிற வாக்குறுதியின் பேரில் ஏக்ர் கோட்டையை மட்டும் கிருத்துவப்படைகளுக்கு விட்டுத்தர சலாஹுதீன் அவர்கள் சம்மதித்தார்கள். கொலை முதலியவற்றில் இனி ஈடுபடமாட்டோமென்று உறுதிகூறி கிருத்துவர்களும் இதற்கு உடன்பட்டார்கள். ஆனால் நடந்தது வேறு. முஸ்லிம்களின் சிகப்பு ரத்தம் சீறிக் கொண்டு பாய்ந்து வெள்ளமாக ஓடும்படி ஒரு படுபாதகத்தை சிலுவைப் போர் வீரர்கள் உடன்பாட்டுக்கு எதிராக அரங்கேற்றினார்கள். பெண்களை மானபங்கப் படுத்தினார்கள். இரக்கம் காட்டியதற்குப் பரிசு என்றுமே மறக்க முடியாத இரத்த வடுக்கள். 

ஆங்கில மன்னன் ரிச்சர்டு தலைமையில் முஸ்லிம்களுக்கு எழுத முடியாத இன்னல்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நாட்டுக் கிறித்துவபடைகள் ஒன்று திரண்டிருந்தாலும் அவர்களின் ஒழுக்ககேடும் கட்டுக் கோப்பு இல்லாத அமைப்பும் அரசர்களுக்கிடையான சுமுகமான உறவின்மையும் பிரான்சு முதலிய நாட்டின் அரசர்கள் நாடு திரும்பியதாலும் சிலுவைப் போர் வீரர்கள் நினைத்துத்திருந்தபடி ஜெருசலம் உட்பட அவர்கள் இழந்த எந்தப் பகுதியையும் அவர்களால் மீட்க முடியவில்லை. ‘எலிக்கு ஒரு மஞ்சள் துண்டு கிடைத்தால் அதை வைத்து மளிகைக் கடை வைக்க நினைத்தது போல்’ ஏக்ர் கோட்டையுடன்தான் அவர்கள் திருப்தி அடைய வேண்டி இருந்தது. ஜெருசல வெற்றி கிருத்தவர்களுக்கு பகல்கனவாகவே மாறிப் போனது. இதற்குக் காரணம் அவர்கள் எதிர்த்துத் திரண்டது இறைவனின் அருள்பார்வையை நிறையவே பெற்றிருந்த சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களை என்பதை நாம் உணரவேண்டும்.

ஆகவே மூன்றாம் சிலுவைப் போரிலும் கிருத்தவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு ரம்லாஹ் என்ற நகரில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ( இந்த ரம்லாஹ் நகரில்தான் பாலஸ்தீனத்தின் போராளிகளின் தலைவர் யாசர் அரபாத்தின் அடக்கஸ்தலம் இருக்கிறது – இன்ஷா அல்லாஹ் பிறகு இவைகளைப் பார்க்கலாம்) 
  • சிலுவைப் போராளிகள் டயர் நகரத்திலிருந்து ஹைஃபா வரை கடற்கரை பகுதியில் தங்கி இருப்பார்கள்.
  • கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்கு வரி ஏதும் செலுத்தாமல் சென்று கட்டுப்பாடுகளின்றி வழிபாட்டுக்காக வருவார்கள்.
  • இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளும், எட்டு மாதங்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும். 
முஸ்லிம்களும் கிருத்தவர்களும் யார் வேண்டுமானாலும் ஜெருசலத்துக்கும் ஏக்ருக்கும் தாராளமாக போய்வரவும் – தாராளமாக வணிகம் செய்துகொள்ளவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். பாலஸ்தீனத்திலும் மீண்டும் மக்கள் அமைதியாக வாழ்வைத் தொடர்ந்தனர். அங்கு நிலைமை சுமூகமாகி மக்கள் நிலையான தன்மையும், பாதுகாப்பும் பெற்றவர்களாக மகிழ்ச்சி அடைந்தனர். சலாஹுதீன் அவர்கள், ஜெருசலத்துக்கு கிறிஸ்தவர்கள் வந்து போவதற்கு வசதியாக எல்லைக் கதவுகளை திறந்து வைத்தார். மேலும், புனித யாத்திரை மேற்கொள்ளும் கிருத்தவர்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் நல்லுறவுடன் பேசினார். இது மேற்கத்திய, கிழக்கத்திய ஐரோப்பிய மன்னர்களுக்கு சகிப்புத்தன்மைக்கும், மன்னிப்பை நாடுவோருக்கும் , நல்லுறவை விரும்புவோருக்கும் இஸ்லாம் கற்றுத்தரும் பாடமாக அமையுமென்றும் இதுவே இஸ்லாமியர்களின் சிறந்த பண்பு என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்கும் என்று மீண்டும் மீண்டும் நினைத்தார் ; செய்தார்.

ரம்லாஹ் ஒப்பந்தத்திற்கு பிறகு, சுல்தான் சலாஹுதீன் அவர்கள் ஜெருசலம் வந்து தொழுதுவிட்டு போருக்குப்பின் அந்தப் புனித பூமியின் நிலவரம் மக்களின் வாழ்க்கை ஆகியன குறித்து ஆராய்ந்தார். கடற்கரை நகரங்களுக்கும் பயணித்து போரின்போது சேதமடைந்த அரண்மனைகளையும், கோட்டைகளையும் பார்வையிட்டார். அங்கெல்லாம் நகரின் மறுசீரமைப்பு மக்களின் மறுவாழ்வு மற்றும் கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் செப்பனிட்டு , அக்குவேறு ஆணி வேராகக் கிடந்த அரசு நிர்வாகத்தையும் நேராக்கி சீராக்கினார்.

அதன்பிறகு, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால், சலாஹுதீன் அவர்களின் மகன்கள் அதைத் தடுத்தனர். காரணம், வழியில் எதிரிகளால் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என அச்சம் தெரிவித்தனர். புனிதப்பயணத்தில் போர் நிகழக்கூடிய வாய்ப்புத் தரவேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் இந்த யோசனையை ஏற்கவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

டமாஸ்கஸில் மறுசீரமைப்பை தொடங்கி, தேவையானவர்களுக்கு வசதி செய்து கொடுத்தும், படைவீரர்களுக்கு சொந்த ஊர் செல்ல விடுப்பு கொடுத்தும், மக்களின் குறைகளை அறிந்தும் நிவர்த்தியும் செய்தார். அழகிய டமாஸ்கஸ் அவருக்குப் பிடித்த நகரமாக இருந்தது. நீண்ட நாட்களாக போரினால் ஏற்பட்ட களைப்பைப் போக்கி புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டார். அந்த நேரம் தான் போக நினைத்துப் போகமுடியாமல் விட்ட ஹஜ் பயணத்தை நிறைவு செய்துவிட்டு மற்ற ஹஜ்ஜாஜிகள் திரும்பிவரத் தொடங்கி இருந்தார்கள். 

புனிதப் பயணம் முடித்து திரும்பும் ஹஜ்ஜாஜிகளை வரவேற்று அவர்களைத் தழுவச் சென்றார். ஆனால், திடீரென்று அவரால் நகரக்கூட முடியவில்லை. அங்கிருந்து திரும்பியவுடன் அவரை மஞ்சள் ஜுரம் தாக்கியிருந்தது. மருத்துவர்கள் கவனித்தாலும் நோய் தீவிரமடைந்தது. இறைவனின் நாட்குறிப்பின் நாட்டத்துக்குமுன் மருத்துவம் மண்டியிட்டது.

மக்களின் நேசத்துக்கு ஆளான அவரின் உடல்நிலையின் நிலவரம் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போது, எங்கும் கவலையும், பயமும் படர்ந்து பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக டமாஸ்கஸின் அரண்மனை முன் கூடி எந்நேரமும் சலாஹுதீன் அவர்களின் உடல் நலத்துக்காக இறைவனிடம் கையேந்தி கண்ணீர் சிந்தி பிரார்த்தித்தனர். பத்தாம் நாள், ஊசி மூலம் இரண்டு முறை மருந்து செலுத்திய பிறகு, சிறிது முன்னேற்றமடைந்து புன்முறுவலுடன் கொஞ்சம் பார்லி நீர் அருந்தினார். 

ஆனாலும் சலாஹுதீன் அவர்களின் மூத்த மகன் அல் மாலிக் அல் அஃப்தல் நூருத்தீன் அலி, மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தன் தந்தை அதிலிருந்து குணமாகப் போவதில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டார். அதனால் அமைச்சர்களின் ஆலோசனைப்படி, கூடியிருந்த மக்கள் முன்னிலையில், தன் தந்தை சலாஹுதீன் அவர்கள் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கிறாரோ அதுவரை அவரே சுல்தானாக இருப்பாரென்றும், அவருக்குப் பிறகு, தான் சுல்தானாக பொறுப்பேற்பதாகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்த சம்பவத்தை அல் கதி இப்னு ஷத்தாத் “ அந் நவாதிர் அஸ் ஸுல்தானியா” என்ற நூலில் கண்களில் நீர் மல்க குறிப்பிடுகிறார். 

அவர் நோய்வாய்ப் பட்ட பனிரெண்டாம் நாள் இரவு மேலும் உடல் நலம் சீர் கெட்டு நினைவு இழக்கும் நிலைக்கு சென்றார். மரணப்படுக்கையின் அருகே அமர்ந்து மகத்தான இறைவனின் திருக்குர்ஆன் வாசகங்களை ஓதச் செய்தனர். “அல்லாஹ்வை தவிர இறைவன் வேறு இல்லை”. எனும் வரிகள் ஓதப்படும்போது நினைவிழந்த நிலையிலிருந்த சலாஹுதீன் அவர்களின் முகம் சற்று பிரகாசமானது. அன்றைய ஃபஜர் தொழுகைக்குப் பின் அவரின் உயிர் பிரிந்து சென்றது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

சலாஹுதீன் அவர்களின் மரணம் உலக முஸ்லீம் சமுதாயத்திற்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அந்த நாள், உலக வரலாற்றில் வருத்தத்தின் நாளாக இருந்தது. மக்கள் யாவரும் தங்களை நேர்வழியில் ஆட்சி செய்த சுல்தானை இழந்த சோகத்தில் இருந்தனர். துக்கமும், இருளும், அரண்மனையிலும், நாட்டிலும், உலகம் முழுவதும் பரவி இருந்தது. அவரின் ஐந்து மகன்களும் , இளவரசர்கள் என்றும் பாராமல் அரண்மனையைவிட்டுத் தெருவுக்குச் சென்று மக்களோடு நின்று அழுதனர். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ இம்மாநிலத்தில் ? 

இஸ்லாமிய தேசங்களின் சரித்திர நாயகனை இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான். இறக்கும் போது அவருக்கு 57 வயதுதான் ஆகி இருந்தது. சுல்தானின் உடல் ஊர்வலமாக சென்ற போது, ஊரெங்கும் அமைதி! அமைதி !அப்படியொரு அமைதி! இந்த சோகத்தில் சுல்தான் சலாஹுதீன் அவர்களின் எதிரிகளும் உளமார பங்கெடுத்தனர். அவரின் உடல் அஸர் தொழுகைக்கு முன் டமாஸ்கஸின் அரண்மனையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூன்று வருடங்கள் கழித்து அவர் மகன் அல் மாலிக் அல் ஃபத்ல் அவர்கள், அல் உமய்யாத் மசூதியை அடுத்துள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான ஒரு இடத்தை வாங்கி சமாதி எழுப்பி உடலை மாற்றி அடக்கம் செய்தார். 

 ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட சுல்தான் விட்டுச் சென்றவை என்ன? இன்றைய ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து , லெபனானின் திரிபோலி வரை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் எல்லையைப் பரப்பிய இந்த தன்னிகரற்ற சாம்ராஜ்ஜிய மன்னனுக்கு சொந்தமாக ஒரு சதுர அடி நிலமில்லை; தோட்டமில்லை; பண்ணை வீடுகள் இல்லை. அவர் வசித்த இடத்தில் தேடிப் பார்த்தபோது அங்கு கிடைத்தது ஐம்பத்து ஏழு திர்ஹம் ஒரு தினார் மதிப்பிலான அளவில் சில நாணயங்கள் மட்டுமே. In Saladin’s possession at the time of his death were valued as one piece of gold and forty pieces of silver. He had given away his great wealth to his poor subjects, leaving nothing to pay for his funeral. என்ற வரலாற்றின் வரிகள் சலாஹுதீன் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் முடிவை உலகுக்குச் சொல்கிறது. நமது விழியோரமோ கண்ணீரால் கசிகிறது. 

பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். “உங்களது சொத்து என்பது நீங்கள் உண்டு கழித்த உணவு, உடுத்திக் கழித்த உடைகள் , நீங்கள் செய்த தர்மம் மட்டும்தான். மற்றவை நீங்கள் மற்றவர்களுக்காக விட்டுச்செல்பவையாகும்“ (முஸ்லிம் 7422) என்ற ஹதீசுக்கு ஒப்ப வாழ்ந்துகாட்டி மறைந்த மன்னர் சலாஹுதீன் அவர்கள் விட்டுச் சென்றது ஐம்பத்தி ஏழு திர்ஹம் மட்டுமே . ஆனால் உலகம் உள்ளளவும் அவரை உலகம் நினைவில் கொள்ளும் வகையில் வாழ்வாங்கு வாழ்ந்த வெற்றி வீரராகவும் வள்ளலாகவும் சரித்திரம் அவரை சந்திக்கிறது. 

தனது ஆயுட்காலம் முழுதையும் சிலுவைப் போராளிகளை எதிர்க்கவும் எதிரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு துரோகம் செய்து காட்டிக் கொடுத்துக் கொண்டிருத்த முஸ்லீம்களை சமாளித்துக் கொண்டும் தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டும் இஸ்லாம் கூறும் ஈகை மற்றும் இரக்கத்தை இன்னாருக்கும் இனியோருக்கும் செய்துகாட்டிய ஒரு சுல்தான் உலகில் இருந்தார் என்றால் சலாஹுதீன் அவர்கள் ஒருவர் தான் என்று உலகம் அவரைப் பதிவு செய்துகொண்டது. இஸ்லாமிய சரித்திர உலகில் கலிஃபாக்களுக்குப் பிறகு தனித்தன்மையுடன் விளங்கிய மாமன்னர் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) ஒருவர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. இறைநம்பிக்கையும் இரக்கமும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பட்ட சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

சலாஹுதீன் அவர்கள் மறைந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர் இல்லாத துணிச்சலில் நான்காவது சிலுவைப் போரை நடத்த ஐரோப்பியக் கிருத்துவ உலகம் மீண்டும் ஒன்று திரண்டது. 

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம்.

இபுராஹீம் அன்சாரி

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

செப்டம்பர் 27 'சனி'க்கிழமை...

'அம்மா' நினைவும்
'ஐஃபோன்' வரவும்...

இங்கு வருபவர்களை அமைதியாக்கிவிட்டதோ ?

Shameed சொன்னது…

//ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட சுல்தான் விட்டுச் சென்றவை என்ன? இன்றைய ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து , லெபனானின் திரிபோலி வரை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் எல்லையைப் பரப்பிய இந்த தன்னிகரற்ற சாம்ராஜ்ஜிய மன்னனுக்கு சொந்தமாக ஒரு சதுர அடி நிலமில்லை; தோட்டமில்லை; பண்ணை வீடுகள் இல்லை. அவர் வசித்த இடத்தில் தேடிப் பார்த்தபோது அங்கு கிடைத்தது ஐம்பத்து ஏழு திர்ஹம் ஒரு தினார் மதிப்பிலான அளவில் சில நாணயங்கள் மட்டுமே. //

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாதம் ரூ.1 சம்பளம் பெற்றார். ரூ.1 மட்டும் சம்பளம் பெற்றவர் ரூ.பல கோடி மதிப்பு சொத்து சேர்த்தார் என குற்றம் சாட்டப்பட்டது. ஜெயா பப்ளிகேஷன் சார்பாக ரூ.20 கோடி வங்கியில் டெபாசிட் செய்தார் என்று புகார் அளிக்கப்பட்டது. நெல்லையில் 1,000 ஏக்கர், சென்னை அருகே 200 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. கொடநாட்டில் ஜெயலலிதா பெயரில் தேயிலை தோட்டம், சென்னை சிறுதாவூரில் பங்களா என குற்றசாட்டு

Ebrahim Ansari சொன்னது…

சலாஹுதீன் அய்யூபி அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பலர் வரவில்லையே! எல்லோரும் பெங்களூர் போய்விட்டீர்களா?

sabeer.abushahruk சொன்னது…

மன்னிக்கவும் காக்கா,

இன்று சென்னையிலிருந்து துபை வரும் மகளார் குரோம்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வர இயலாமல் சிரமப்பட்டு ஏர்போர்ட் வந்து சேரும்வரை ஒரே டென்ஷன். நண்பிகளின் குடும்பத்தார் உதவியுடன் ஏர்போர்ட் வந்த பிறகுதான் மூச்சு விட முடிந்தது.

செய்திகளில் கேள்விப்படுவதைவிட போக்குவரத்து கடும் மோஷமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

கட்டுரையைப் படித்துவிட்டு கருத்திடும்வரை ரசிகனை பொறுக்கவும்.

mahaboob Ali சொன்னது…

சுவாசங்களை வேகப்படுத்திய
சலாஹுதீன்(ரஹ்) வாழ்கிறார்கள்
வரலாறாக வாழ்வார்கள்
வடிக்கப்பட்ட ரெத்தம் நம்
உள்ளத்தில் ஒரு அங்கமாக
உறைந்து போயுள்ளது.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நம் தலைவர் மற்றும் அவர்களின் அடியொற்றி வந்தவர்களின் வாழ்க்கை முறை,எளிமை,பணிவு இரக்க குணம்,பொது சொத்தை தொடாமல் - தங்கள் கைகளால் உழைத்து வாழ்ந்தமை எல்லாவற்றையும் கருணாநிதியும்,ஜெயலலிதாவும் ,அனைவரும் பின்பற்றி நடந்தால்.ஊழலற்ற உலகை காணலாம்,இன்ஷா அல்லாஹ்.

சலாஹுதீன் அயூபி ரஹ் அவர்களின் வரலாறு மெய் சிலிர்க்கிறது.உங்கள் வர்ணனை கவர்கிறது.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். “உங்களது சொத்து என்பது நீங்கள் உண்டு கழித்த உணவு, உடுத்திக் கழித்த உடைகள் , நீங்கள் செய்த தர்மம் மட்டும்தான். மற்றவை நீங்கள் மற்றவர்களுக்காக விட்டுச்செல்பவையாகும்“ (முஸ்லிம் 7422) என்ற ஹதீசுக்கு ஒப்ப வாழ்ந்துகாட்டி மறைந்த மன்னர் சலாஹுதீன் அவர்கள் விட்டுச் சென்றது ஐம்பத்தி ஏழு திர்ஹம் மட்டுமே . ஆனால் உலகம் உள்ளளவும் அவரை உலகம் நினைவில் கொள்ளும் வகையில் வாழ்வாங்கு வாழ்ந்த வெற்றி வீரராகவும் வள்ளலாகவும் சரித்திரம் அவரை சந்திக்கிறது.

ALLAHU AKBAR

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பாலஸ்தீன யுத்தத்தின் பின்னணியைக் கோடிட்டுக்காட்ட, அதை விரிவாகச் சொல்லுங்களேன் என்கிற சேண்டுகோலுக்கொப்ப தொடராக எழுத, அது சலாஹுதீன் அய்யுபி அவர்களின் வீரதீர ஈமானிய வரலாற்றைச் சொல்ல அதோடு சிலுவைப் போர்களின் பகுதியையும் தொட்டு பிரமாண்டத் தொடராக மாறிவிட்டது காக்கா.

இனி நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முழுப்பாடமும் நடத்தியே தீரவேண்டிய நிர்பந்தத்தைக் காக்கா உணர்கிறீர்களா?

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk சொன்னது…

//உலகின் பல பாகங்களில் இருந்தும் சலாஹுதீன் அவர்களுக்கெதிராக இந்த மூன்று ‘பாண்டவர்’கள் ஒன்றிணைந்தனர். இந்தப் ‘பாண்டவர்’களை கச்சை கட்டி இறங்க வைத்தது அன்றைய போப்’பாண்டவர்’தான்.//

கிரவுன், கவனித்தீர்ளா?

//எலிக்கு ஒரு மஞ்சள் துண்டு கிடைத்தால் அதை வைத்து மளிகைக் கடை வைக்க நினைத்தது போல்’ //

வெரி வெல் செட்!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+