Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விட்டுக் கொடுக்க வேண்டுமா? 1

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2015 | ,

:::: தொடர் - 15 ::::

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரத்தைத் துவக்கியபோது, அவர்களுக்கு முன்னால் இருந்த நிலைபாடுகள் மூன்று.  அவை:

  • குறைஷிகளால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அரச பதவி.  அதை ஏற்றுக்கொண்டு,  தமது இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கலாம்.
  • எதிரணிச் சிலை வணங்கிகளால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்குப் பணிந்துபோய், தமது தூதுச் செய்தியைப் படிப்படியாகப் பரப்பியிருக்கலாம்.
  • மக்கத்து மக்களின் ஆதரவைப் பெற்ற பின்னர்,  அங்கிருந்த பாவச் செயல்களைக் கண்டித்து,  தமது கொள்கைகளைச் சிறிது சிறிதாக எடுத்துரைத்திருக்கலாம்.
இவற்றுள் ஒன்றைக்கூட நபியவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை!  மாறாக, தமக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவ்வாறு தமக்குக் கிடைத்த இறைக் கட்டளைகளைப் பரப்பினார்களோ, அந்த முன்மாதிரியையே செயல்படுத்தினார்கள்.  சுற்றி வலைத்துப் பேசாமல், நேரடியாகத் தமது தூதை எடுத்தோதினார்கள்.  இறையுதவியை நாடி, அல்லாஹ் என்ற ஒப்பற்ற இறைவனின் மீது பொறுப்பை ஒப்படைத்துப் பிரச்சாரக் களத்தில் இறங்கினார்கள்.  முழுமையாக அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து, அவனுக்குக் கட்டுப்படுவதன் மூலம் இறையுதவியைப் பெற்று, அவன் இட்ட கட்டளைகளை எடுத்தோதும்  தகுதியைப் பெற்ற ஒருவரால் அன்றி, வேறு எவரால் இப்பணியைச் செய்ய முடியும்?

இறைச் செய்தியைப் பரப்புவதில் விட்டுக்கொடுத்தல் என்பது இல்லை என்ற நிலைபாடு, நபியின் வாழ்க்கை முழுவதிலும் நீடித்து இருந்தது என்ற உண்மையை யாரால் மறுக்க முடியும்?

தாயிஃப் நகரத்து ‘பனூ தகீஃப்’ கோத்திரத்தார், நிபந்தனையுடன் இஸ்லாத்தை ஏற்க முன்வந்தனர். அதாவது, முஹம்மத் (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டனர்; அவர்கள் காட்டித் தந்த இறைவணக்கத்தை ஏற்றுக்கொண்டனர்;  ஆனால், ‘ஜக்காத்’ மட்டும் கொடுக்க மாட்டோம் என்று அடம் பிடித்தனர். அந்த நேரத்தில், நபியவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவைப்பட்டது.  அதற்காகவேனும், நிபந்தனையுடன் இஸ்லாத்தை ஏற்க முன்வந்ததை ஏற்றுக்கொண்டார்களா?  இல்லை!   

அந்த நேரத்தில், ‘பனூ தகீஃப்’ கோத்திரத்தின் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படியும், எதிர்காலத்தில் அம்மக்கள் தமது நிலைபாட்டில் மாறுதல் செய்யக்கூடும் என்றும் முஸ்லிம்களுள் சிலர் பரிந்துரைத்தபோது, விட்டுக் கொடுத்தார்களா பெருமானார் (ஸல்) அவர்கள்?  “இஸ்லாத்தில் தொழுகையையும் ஜக்காத்தையும் பிரிக்கும் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது” என்று உரத்துக் கூறினார்கள்!

இதே நிலைபாட்டைத்தான், நபியவர்களின் இறப்பிற்குப் பின் இஸ்லாமிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலீஃபா அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் எடுத்தார்கள்.  அப்படிக் கூறும் மக்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார்கள்!  “அது எப்படி?” என்று எதிர்வாதம் புரிந்த தோழர்களிடத்தில், அபூபக்ர் (ரலி), “இஸ்லாத்தில் தொழுகையையும் ஜக்காத்தையும் பிரிக்கும் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது” என்ற நபிமொழியைச் சான்றாக எடுத்துக் காட்டினார்கள்.

நேரிய கொள்கைகளில், நல்லெண்ணத்துடன் ஆகிலும், தமது நிலைபாட்டில் சற்றேனும் தளர்வு காட்டும் மக்களால்தான், இஸ்லாத்திற்குப் பின்னடைவும் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்று வரலாறு மெய்ப்படுத்துகின்றது!   அத்தகைய மாற்று நிலை ஏற்படும்போதுதான், இஸ்லாமியக் கொள்கைகளில் தெளிவின்மை ஏற்பட்டு, இஸ்லாம் ஒப்பீட்டளவில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிடுவதை நம்மால் பார்க்க முடிகின்றது!

யாரையேனும் திருப்திப் படுத்துவதற்காக உண்மைச் செய்தியில் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல், முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்புப் பணியின் தன்மை வேறுபட்டுத் தனித்து நிற்கின்றது.  முஹம்மத் (ஸல்) அவர்களின் இந்த இறைச் செய்தியானது, வல்ல இறைவன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்ற நிலையால், தம்மால் மாற்ற முடியாத ஒன்று என்ற நபியவர்களின் கொள்கையால், அதில் மாற்றம் செய்வது, அவர்களின் ஆளுகைக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடுகின்றது.  தம் குடும்பத்தினர் மற்றும் மக்கா வாசிகளின் சிலை வணக்கம் பற்றிய விடாப்பிடிக் கொள்கையினால், அவர்களுக்கு இது ஒரு மனோதத்துவப் போராட்டமாக அமைந்துவிட்டிருந்தது.   அதனால், நபியவர்கள் பெரும்பாலான மக்களை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

குறைஷிப் பரிந்துரையாளர்கள் தம்மால் இயன்ற எல்லா வழிகளையும் நபியவர்களிடம் கூறிப் பார்த்தார்கள்.  பொன், பெண், ஆட்சித் தலைமை, அதிகாரம் போன்ற அனைத்தின் மீதும் ஆசை வார்த்தை கூறினார்கள்.  அவர்களால் சம்மதிக்கச் செய்ய முடிந்ததா?  இல்லையே.  இறுதியாக அம்மக்கள் எடுத்த ஆயுதம்தான், கொலை முயற்சி!  அசைந்து கொடுக்கவில்லை அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.  பின்னர், மக்கத்துக் குறைஷிகள் தம் நிலைபாட்டிலிருந்து இப்படியும் இறங்கிவந்தார்கள்:  “முஹம்மதே!  உமது கடவுளாகிய அல்லாவை ஒரு நாளன்று வணங்குவோம்;  அடுத்த நாள் நீர் எங்கள் கடவுள்களை வணங்கவேண்டும்.  இதையாவது ஏற்றுக்கொள்கிறீரா?” என்றனர்.  இணக்கம் காட்டினார்களா இறைத்தூதர் (ஸல்) அவர்கள்?  இல்லையே!

“சரி, எம் கடவுள்களான சிலைகளைப் பற்றி விமரிசனம் செய்யாமலாவது இரும்;  அப்போது நாங்கள் உமது ஏகத்துவப் பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்கிறோம்” என்றார்கள்.  அண்ணலார் (ஸல்) அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை!  

இறுதியாக, நபியவர்களை ஆதரவளித்துப் பாதுகாத்து வந்த அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள் மக்கத்துத் தலைவர்கள்.  அவர் தம்மருமைப் புதல்வரைப் பார்த்து, கொள்கைப் பிரச்சாரத்தில் சற்றேனும் விட்டுக் கொடுக்கலாமே என்று பரிந்துரைத்தபோது,  “என்னருமைத் தந்தையே!  இக்கொள்கை எனது விருப்பப்படி அமைந்ததன்று.  என் இரட்சகனான அல்லாஹ்வின் கட்டளை.  இதில் எப்படி என்னால் தளர்வு ஏற்படுத்த முடியும்?  முடியாது!  என் வலக்கையில் சூரியனையும் இடக்கையில் சந்திரனையும் தந்தாலும், என்னால் கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது” என்றார்கள்.  தம்பி மகனின் தளரா உறுதியைக் கண்டு, “மகனே!  நீ உன் கொள்கையில் தளர்வு காட்டாதே.  உனக்கு இடப்பட்ட கட்டளையைத் தொடர்ந்து செய்” என்றல்லவா கூறினார் அபூதாலிப்!

இன்று நமது நிலையைச் சிறிது எடுத்து எடை போட்டுப் பார்ப்போம்.  மார்க்கத்தை ஏற்று நடப்பதிலோ, அதனைப் பரப்புவதிலோ, எதிர்ப்புச் சூழலைச் சந்திக்கும்போது, பல காரணங்களைக் கற்பித்து, கொள்கையை விட்டுக் கொடுத்துவிடுகிறோம்.  அதற்காகக் காரணத்தைக் கண்டுபிடித்து, நியாயம் கற்பிக்கிறோம்.  அந்தோ!  ‘பித்அத்’துகள் எனும் வழிகேடுகளை வலிந்து செயல்படுத்துகின்றோம்.   

இதோ, உங்கள் சிந்தனைக்கு ஒரு சோதனை:  இன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுடன் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  மக்காவில் அவர்கள் எடுத்த தீர்மானத்தை உங்கள் அருகிலும் எடுத்தார்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள்.  அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?  உங்களில் எத்தனை பேர் அவர்களுடன் ஒத்துழைப்பீர்கள்?  உங்கள் இதயங்களைத் தொட்டுச் சொல்லுங்கள்?  நான் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான காரணம், முஸ்லிம் உம்மத்தின் பெரும் பகுதி, நபியவர்களின் ‘சுன்னா’ எனும் தூய நேர்வழியை விட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டது!  அதனால்தான்.  அருள் தூதர் (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு அஞ்சுகின்றோம்!  தயங்குகின்றோம்!  ‘முஸ்லிம்கள்’ என்று சொல்லிக்கொண்டு, இஸ்லாத்தை விட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டோம்!  இல்லையா?  வல்ல இறைவன் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!  நம் பாவங்களை மன்னிப்பானாக!

தலைவர் ஒருவருக்கு, அதாவது தலைமைக்கு, இக்கட்டான நேரம் எது தெரியுமா?  அவர் வகுக்கும் திட்டங்களை வேறு பலவற்றை விட்டுப் பிரித்தறியும்போதும், அதனைப் பின்பற்றுமாறு தன்  கூட்டத்தாரைக் கேட்டுக்கொள்ளும்போதும்தான்.  தலைவர் என்ற புகழைப் பெறுவதற்காகவும், உலகச் செல்வத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகவும், தன்னைப் பின்பற்றும் கூட்டத்தைப் பெருக்குவதற்காகவும், தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்தால், அந்தத் தலைமை, படிப்படியாகச் சரிந்து, அதல பாதாளத்தில் விழுந்துவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்!   பின்னர், செயலாற்றுவதற்கு ஒரு முன்மாதிரி இல்லாமல் போய்விடும்.  நல்ல முன்மாதிரிதான் நடைமுறைக்குச் சிறந்ததாகும்.  அதுவே தலைவரை மற்றவர்களிடமிருந்து பிரித்தறிய உதவும்.

ஒரு கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடி ஒரு சாதாரணத் துணித் துண்டுதான்.  ஆனால் அது கம்பத்தின் உச்சிக்கு ஏற்றப்பட்டு, விரிந்து காற்றில் ஆடிப் பறக்கத் தொடங்கும்போது, மக்கள்  அதற்கு ‘சல்யூட்’ அடித்து மதிப்பளிப்பதைப் பார்க்கிறோம் அல்லவா?  அது சாதாரணத் துணியாக இருக்கும்போது யாரும் இந்த அளவுக்கு அதற்கு மதிப்பளிப்பதில்லை.  ஆனால், அது ஒரு கொடிக்  கம்பத்தின் உச்சிக்கு உயர்த்தப்பட்டுக் காற்றில் அசைந்தாடும்போது, அது எந்த நாட்டின் கொடியோ, அந்த நாட்டு மக்கள் அதற்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்துகின்றார்கள்.  கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கொடி ஓர் அடையாளம் மட்டுமே.  அது கம்பத்தின் மேலே உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும்போதுதான் அக்கொடி தன் முழு மதிப்பைப் பெறுகின்றது.

தலைவர் ஒருவரை மக்கள் பின்பற்றுவது, அவருடைய தனித்தன்மையாலும்,  அவர் கொண்டிருக்கும் கொள்கையினாலும், அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் பெறும் சிறப்பினாலும், அத்தலைவர் தொண்டர்களை இயக்கும் திறமையினாலும் நிலைபெறும்.  

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமிய அழைப்பாளரைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில், நெஞ்சத்தில் வஞ்சகத்தைத் தேக்கி வைத்துள்ள சிலரைக் கவர்வதற்காக, அவர் தனது பிரச்சார முறையை மாற்றவேண்டும் என்று பரிந்துரை செய்வார்கள்.  தாம் விரும்பும் முறைப்படியே அழைப்புப் பணியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை இடுபவர்கள், அந்தப் பிரச்சாரகர் அதே முறையில் செல்லும்வரைதான் அந்தப் பிரச்சாரகருடன் இணைந்திருப்பர்.  முறையில் மாற்றம் ஏற்படும்போது தம்மை அவரிடமிருந்து விடுவித்துக் கொள்வர்.  அப்போது ‘தஅவா’ என்பது ஒரு கடைச் சரக்காக ஆகிவிடுகின்றது.  

தாம் வகுத்த நெறிப்படி அழைப்புப் பணி செய்பவரைப் போற்றிப் பாராட்டுகின்றனர்.  இறைவன் வகுத்தளித்த முறைப்படி, எவருக்கும் அஞ்சாமல் உண்மையை எடுத்துக் கூறும் அறிஞர், எதிர்ப்புச் சக்திகளால் எடுத்தெறியப் படுகின்றார்.

பிரச்சார உத்தியை மாற்றி இயங்கினால், அவருக்கு நிறையப்பேர் சீடர்களாக வருவர் என்றும், மக்களைக் கவருமாறு மார்க்கத்தை வளைத்துச் செய்தால், இஸ்லாத்தைக் கவர்ச்சியாகச் செய்தால், மாற்று மதத்தவர்கள் பலர் இஸ்லாத்தின் பக்கம் திருந்தி / திரும்பி வருவார்கள் என்றும் ஆசை வார்த்தை கூறுவார்கள்.  அப்படி ஒருவர் இணங்கி வளைந்து கொடுத்தால், அப்போது அந்த அழைப்பாளர் தனது தனித் தன்மையையும் மரியாதையையும் இழந்துவிடுவது திண்ணம்.

மற்றவர்களை மட்டும் வழி நடத்தும் விதத்தில் மார்க்கப் பிரச்சாரம் செய்பவர், முழு மந்தையில் ஓர் ஆடு மட்டும் கிடைத்தது போதும் என்று ஆறுதல் பட்டுக்கொள்பவர் போன்று ஆகிவிடுவார்.  இப்படித் தன்னை ஆறுதல் படுத்திக்கொள்பவர் தலைமைப் பதவிக்கே தகுதியற்றவர்.  

ஒருவர் தலைவராகப் பின்பற்றப்பட வேண்டுமாயின், அவருடைய அடையாளம், அவர் எதற்காகப் பாடுபடுகின்றார் என்ற அவருடைய நோக்கம், அவருடைய இலக்கு, அவரைப் பின்பற்றுவதால் அவருடைய சீடர்களுக்குக் கிடைக்கும் வெகுமதிகள் அனைத்தும் தெளிவாக இருக்கவேண்டும்.  தெளிவான ஒரு நோக்கத்தை முன்வைத்து வழி நடத்திச் செல்லும் தலைவர், சில வேளைகளில் அவர் மட்டும் கடுமையான ஒரு முடிவை எடுக்கவேண்டி வரும்.   பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்சாத இதுவே தலைவரின் தனித் தன்மையாகும்.

அதிரை அஹ்மது

1 Responses So Far:

Iqbal M. Salih said...

//ஒரு கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடி ஒரு சாதாரணத் துணித் துண்டுதான். ஆனால் அது கம்பத்தின் உச்சிக்கு ஏற்றப்பட்டு, விரிந்து காற்றில் ஆடிப் பறக்கத் தொடங்கும்போது, மக்கள் அதற்கு ‘சல்யூட்’ அடித்து மதிப்பளிப்பதைப் பார்க்கிறோம் அல்லவா? அது சாதாரணத் துணியாக இருக்கும்போது யாரும் இந்த அளவுக்கு அதற்கு மதிப்பளிப்பதில்லை. ஆனால், அது ஒரு கொடிக் கம்பத்தின் உச்சிக்கு உயர்த்தப்பட்டுக் காற்றில் அசைந்தாடும்போது, அது எந்த நாட்டின் கொடியோ, அந்த நாட்டு மக்கள் அதற்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்துகின்றார்கள். கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கொடி ஓர் அடையாளம் மட்டுமே. அது கம்பத்தின் மேலே உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும்போதுதான் அக்கொடி தன் முழு மதிப்பைப் பெறுகின்றது//

மிகவும் அருமையான ஓர் உதாரணம்!
தாங்க் யூ காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு