Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பட்டப் பெயர்கள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - 13

வல்லமையும் மாண்பும் மிக்க ‘அல்லாஹுத்தஆலாவின் பெயர்’ கொண்டே நாம் அனைத்தையும் துவங்க வேண்டும் எனக் கட்டளையிடப் பட்டிருக்கின்றோம். அவனே, மனித இனத்தின் தந்தையை அழகிய உருவத்தில் படைத்து அவருக்கு “ஆதம்” (மனிதன்) எனப் ‘பெயர்’ வைத்து அழைத்தான்.(1) மற்றும், அவன்தான் ஆதம் நபியவர்களுக்கு  அனைத்துப் பொருட்களின் ‘பெயர்களையும்’ கற்றுக் கொடுத்தான். (2) 

பொதுவாக, பெயர் என்பது ஒருவரை ஒருவர் அடையாளப்படுத்திக் கொள்ள அவசியமாகிறது. அதில் சிலருக்கோ, இட்ட பெயரைவிட ‘பட்டப் பெயரே’ நிலைத்தும் போய்விடுகிறது.

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையான தன் அன்புத் தூதரை "நற்செய்தி சொல்பவர்" என்றும்  "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" என்றும்  தன் அருள்மறையிலே அளவற்ற அருளாளன் அல்லாஹ் (ஜல்) அழைக்கின்றான்.

உத்தமத் தூதரின் ஊர்க்காரர்கள், "அல்-அமீன்” (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர். முஃமீன்களின் அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம்” (காசிமின் தந்தையே) என்று பிரியமுடன் அழைத்தார். "என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய ஸஹாபாக்கள் போற்றி அழைத்து மகிழ்ந்தனர்.
                              
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன். நான் ‘அஹ்மது’ (அல்லாஹ்வை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்), என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ‘ஹாஷிர்’ (ஒன்று திரட்டுபவர்), மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப் படுவார்கள். நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன் என்று ஏந்தல் நபியவர்கள் இனிதாய்  இயம்பினார்கள். (3) 

கெட்ட செயலால் கெட்ட பெயரும்  நற்செயலால் நற்பெயரும் பெற்றுக் கொண்ட இரு நபர்களை இப்போது காண்போம்:

ஹிமார்: காத்தமுன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார்.  அவர் நாயகம்  (ஸல்) அவர்களைத் தம் நகைச்சுவைப் பேச்சால் சிரிக்க வைப்பார். வஹீ மூலம் மது அருந்துவது முற்றிலும் தடை செய்யப் பட்ட பிறகும், தொடர்ந்து மது அருந்தியதால் அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற ‘புனைப்பெயரில்’ மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். பலமுறை, மது அருந்திய குற்றத்தை ஒப்புக் கொண்டு, அதற்கான தண்டனையும் பெற்றுள்ளார். ஒருநாள், போதையிலிருந்த அவர், நடுநிலை பேணும் நாயகம் (ஸல்) அவர்களின் சபைக்குக் கொண்டு வரப்பட்டார். திருந்தாத அவரை அடிக்கும்படி நீதி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் உண்டாகட்டும்! மது குடித்த குற்றத்திற்காக, இவர் எத்தனை முறைதான்  இச்சபைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது, அருள்வடிவேயான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'இவரைச்  சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று இரக்கத்துடன் இயம்பினார்கள்.(4)

தாத்துந் நிதாக்கைன்: உலக வரலாற்றில், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய உன்னத நிகழ்வான ‘ஹிஜ்ரா’வின்போது, இம்மாநிலம் தனக்கொரு மணி விளக்காய் வந்த மாண்பு நபி (ஸல்) அவர்களும் அவர்தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு (ரலி) அவர்களும் மதீனா செல்ல முடிவெடுத்த சமயம், நான் அவர்கள் இருவருக்கும் பயண உணவை தயாரித்தேன். ஆனால், உணவுப் பாத்திரத்தைக் கட்டிக் கொடுப்பதற்குக் கயிறு எனக்குக் கிட்டவில்லை! என் தந்தை அபூபக்ரு  (ரலி) யிடம், 'இதைக் கட்டுவதற்கு என்னிடம் என் இடுப்புக் கச்சுத் தவிர வேறெதுவும் இல்லையே" என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் அதை இரண்டாகக் கிழி" என்றார்கள். அவ்வாறே, என் இடுப்புக் கச்சை இரண்டாகக் கிழித்துப் பயண உணவை நான் கட்டி முடித்தேன். இதனால் நான், 'இரண்டு கச்சுடையாள்’ (தாத்துந் நிதாக்கைன்) என்று ‘புனைப் பெயர்’  சூட்டப்பட்டேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி, அஸ்மா பின்த் அபூபக்ரு (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.(5)

சிந்தனைச் சிற்பி செம்மல் நபியவர்கள் ஒரு சில பெயர்களை மாற்றி அமைத்த சம்பவங்களைக் காண்போம்:

ஜமீலா: நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது; என் தந்தை உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களுக்கு “ஆஸியா” (பாவி) என்ற பெயருடைய  ஒரு புதல்வி இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜமீலா” (அழகி) என்று ‘மாற்றுப் பெயர்’ சூட்டினார்கள். (6)

ஜைனப்: முதலில் எனக்கு “பர்ரா” (நல்லவள்) என்ற பெயரே  இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு “ஜைனப்” (அழகிய தோற்றமுள்ள நறுமணச் செடி) எனப் பெயர் மாற்றினார்கள்.

முஃமின்களின் அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கும் “பர்ரா” என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கும் ‘ஜைனப்’ என்றே பெயர் சூட்டினார்கள்.

(‘பர்ரா’ என்ற பெயர் பற்றிய பிறிதொரு அறிவிப்பாவது; ‘உங்களை நீங்களே பரிசுத்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்).(7)  

தம்  அருமைத் தோழர்கள் சிலரை நபி (ஸல்) அவர்கள் சில செல்லப் பெயர்களிட்டு அழைத்தார்கள். அந்த செல்லப் பெயர்களால் அழைக்கப்படுவதால் பூரிப்பும் புளகாங்கிதமும் ஸஹாபாக்களுக்கு ஏற்பட்டதே தவிர, ஒருபோதும் அந்தப் பெயர்கள் தோழர்களுக்கு வருத்தமேற்படுத்தியதேயில்லை!

அபூ துராப்: ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் பாத்திமாவின் வீட்டுக்குக்கு வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறி விட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவியில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீய் (ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.  அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர் மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே,  "எழுந்திரும்!  அபூதுராப் (மண்ணின் தந்தையே). எழுந்திரும்!" என்றார்கள். அவர் உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்தச்  செல்லப்பெயர் நிலைத்துப்போனது. அவருக்கும் அது மிகப் பிடித்துப்போனது.(8)

ஒருவர் மிக விரும்பும் ஒன்றின் பெயரோடு 'அபூ' சேர்த்துச் செல்லப் பெயராக்கி விளிப்பது அரபியர் வழக்கம். ஆடுகளை அதிகம் நேசிப்பவர் 'அபுல்கனம்' என்றும் வல்லூறுகளை நேசிப்பவர் 'அபூஸகர்' என்றும் விளிக்கப்படுவது அரபுகளின்  மரபு. ஐக்கிய அமீரகங்களின் தலைநகர், மானின் தந்தை (அபூதபி) என்பவரின் பெயரால் விளங்குகிறது. தற்போது இணையத்தில் உலவும் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூட 'அபூ' எனும் சொல்லோடு, தாம் அதிகம் நேசிக்கும் மகன்/மகளின் பெயரைப் புனைந்துகொண்டு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. (உதாரணமாக, அபுஇப்ராஹீம், அபுஷாஹ்ருக், அபுபிலால்).

அபூபக்ரு (ரலி): இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல் கஅபா.  அன்பு நபி  (ஸல்) அவர்கள், தம் அருமைத் தோழருக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயரிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லத் துவங்கியபோது, வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு சத்தியத் தூதர்  (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால், அல்-சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற காரணப் பெயரும் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அபூபக்ரு என்பதும் அவர்களின் காரணப் பெயராகும். இல்லறத்தை நல்லறமாய்க் காட்டிய நபியவர்கள், முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மணந்த பின்னர், அபூபக்ரு (கன்னியின் தந்தை) என கண்ணியமாக அழைக்கப்பட்டார்கள்; அப்பெயரே நிலைத்துப் போனது.(9)

அபூஹுரைரா (ரலி): கைபர் யுத்தம் நிகழ்ந்த சமயத்தில் பனீ-தவ்ஸ் கிளையிலிருந்து வந்து நபிமணி (ஸல்) அவர்களைச்  சந்தித்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதும், ‘அப்துஷ் ஷம்ஸு’ என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த அவர் ‘அப்துர்ரஹ்மான்’ என அழைக்கப்பட்டார். அபாரமான நினைவாற்றல் கொண்டிருந்த அவர், திண்ணைத் தோழர்களுள் ஒருவராகத் தம்மையும் இணைத்துக்கொண்டார். அல்லாஹ்வின் தூதரை அதிகம் அண்மியிருந்ததால், அண்ணலின் அங்க அசைவுகளையும் அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் உள்வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் இவர் அறிவித்த ஹதீஸ்கள் ஆயிரக் கணக்கானவை  என்று வரலாற்றுக் குறிப்பேடுகள் கூறுகின்றன.

பூனைகள் மீது அவர் அதிகம் விருப்பங்கொண்டிருந்ததால், புவி போற்றும் பெருமானார் (ஸல்), அவரைப் "பூனைத் தோழன்" (அபூஹிர்!) எனச் செல்லமாய் அழைத்தார்கள். அப்துஷ்ஷம்ஸு அத்தவ்ஸீ, அப்துர்ரஹ்மான் அத்தவ்ஸீ என்றெல்லாம் குறிப்பிட்டால் நாமெல்லாம் விளங்காமல் விழிப்போம். "அபூஹுரைரா" என்றாலோ... 'அட, நம்ம அபூஹுரைரா' என்று சட்டெனப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அண்ணலின் அழைப்பு, உலகப்புகழ் வாய்ந்ததாக அமைந்துபோனது. 

இருசெவிச் சிறுவன்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) சிறு பிராயத்திலிருந்தே நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இருந்தார். ஓர் இனிய நாளில் அவரை “யா தல் உதுனைன்!” ("ஓ! இரண்டு காதுகள் கொண்டவரே!") என அண்ணலார் அவரை அன்புடன் அழைத்தார்கள் என நபி மொழிக் குறிப்புகள் கூறுகின்றன.(10)

அபூருகத்: அந்த அன்சார் சிறுவனுக்கு வெறும் பதினாறு வயது! பெயர் ‘ஸைத் இப்னு  ஸாபித்’. ஆர்வத்தில் அவரும் அறப்போரில் கலந்து கொண்டார். கடின வேலைகளுக்கு மத்தியில் போர்க் களத்திலேயே சிறிது கண்ணயர்ந்து போனார். அவர் நண்பரான ‘உமரா’ என்பவர் விளையாட்டாக ஸைத் உடைய மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்து ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்தபோது தன்  உபகரணங்கள் காணாதது அறிந்து சங்கடத்தில் நின்றார் ஸைத்! சஹாபாக்களில் சிலர் சற்று நேரம் அவரைத் தேடிஅலையவைத்து சிறிது நேரம் கழித்து, ஸைதின் பொருட்களை எடுத்துக் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவருடன் விளையாட்டாகச் சிரித்து மகிழ்ந்தனர்!

அப்போது அங்கு வந்து, அவருக்கு நிகழ்ந்ததை  அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அன்புடன் ஸைதை நோக்கி  "யா அபூருகத்" (தூக்கத்தின் தலைவனே!) என்று அழகாக அழைத்தார்கள்! இதே ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்தாம், அருள்மறை ஏந்திவந்த அண்ணல் நபிக்கு அருளப்படும் 'வஹீ''யை உடனுக்குடன் பதிவு செய்துகொள்ளும் பெரும் பேற்றைப் பிற்காலத்தில் பெற்றவர்! அருள்மறை பற்றிய ஆழ்ந்த ஞானமும் அது அருளப்பட்ட காலமும் அறிந்திருப்பதில் முதலிடம் வகித்த முக்கியமானவர் என்பதால், அருள்மறையை ஒன்று திரட்டித்  தொகுத்து அளிக்கும் அரிய பொறுப்பை அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள், இவர் வசமே ஒப்படைத்தார்கள்!

நிற்க, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள்மறையாம் குர்ஆனிலே பட்டப்பெயர் குறித்துக் கூறுவதைக் காண்போம்.
بسم الله الرحمن الرحيم

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَِ

முஃமின்களே! ஒரு சமூகத்தார்  இன்னொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்.  (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் அவர்கள் இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.(11)

அறிக; கெட்ட பெயர் வைத்து அதனைப்  ‘பட்டப் பெயர்’ என அழைக்கும் அசிங்கமும் அவலமும் குறிப்பாக, வாய் கிழிய மார்க்கம் பேசும் நம் சமூகத்தில்தான் அதிகம் என்பது  ஒரு வெட்கக் கேடான, வேதனை நிறைந்த விஷயமாகும். இந்த கணத்திலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்ட பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை  உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை அஞ்சிய அடிமை. நபிபெருமானை நேசிக்கும் நல்லதொரு முஸ்லிம். அடையாளம் சொன்னால்தான் விளங்குமென்றால் நபியவர்கள் சூட்டியது போல் நல்ல பெயர் சூட்டலாம் அல்லது ‘அவருடைய  தந்தையின் மகன் (தாஜுத்தீன் இப்னு மஹ்மூத்)’ அல்லது ‘அவருடைய மகனின் தந்தை (தாஜுத்தீன் அபுஅஹ்மத்)’ என்பவை போல எழுதலாம்.

oooooo 000 oooooo
ஆதாரங்கள்:
(1) அல்குர்ஆன் 95:4
(2) அல் குர்ஆன் 2:31
(3) புஹாரி 3532 : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி)
(4) புஹாரி 6780 : உமர் இப்னு அல்கத்தாப் (ரலி)
(5) புஹாரி 3907 : இப்னு அப்பாஸ் (ரலி)
(6) முஸ்லிம் 4333 : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
(7) முஸ்லிம் 4336 : ஜைனப் பின்த் உம்மு ஸலமா (ரலி)
(8) புஹாரி 6280 : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
(9) அல்இஸாபாஹ் 2/188 
(10)அபுதாவூத் 4984 : அனஸ் இப்னு மாலிக் (ரலி)  
(11)அல்குர்ஆன் 49:11
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

8 Responses So Far:

Unknown said...

நண்பா

இக்காலத்தில் ( அதிலும் குறிப்பாக நம் ஊரில் ) உள்ள அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு. பட்டப்பெயர் சொன்னால்தான் ஒரு குடும்பத்தைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு இன்றைய நிலையில் ஒருவரைப்பற்றிய மற்றொருவரிடம் அவர் நம் முன்னிலையில் இருக்கும்போதோ அல்லது அவர் இல்லாமலோ அறிமுகப்படுத்தவேண்டிய சூழ்நிலையில் பட்டப்பெயர் ஒரு தவிர்க்கமுடியாத ஒன்றாகிப்போய் இருக்கின்றது.

அதிலும் தாம் குறிப்பிட்டபடி, சொன்னால் மனம் நோகும் என்றிருக்கும்போது அந்தப்பெயர்தான் நிலைத்து விட்டது எனும்போது (அது போன்ற பெயர்களை யார் வைத்தார்களோ அவர்களை அல்லஹ் மன்னிக்கணும்) இன்றளவும் அது
மனம் கனக்கத்தான் செய்கின்றது.

நம் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் இதில் நான் சொல்வது என்னவென்றால் நம் ஊரில் உள்ள பட்டப்பெயர்களில் பெரும்பாலும்
மனம் நோகக்கூடியதாகவோ அல்லது சொல்வதற்கு நா கூசும் வகையிலோதான் இருக்கின்றன. இப்பேர்ப்பட்ட பெயர்களை சூட்டி அழைப்பதின் பாவத்தை குறித்து ஒரு விழிப்புணர்வு பதிவு தம்மிடமிருந்து எதிர் பார்க்கின்றேன்.

மேலும் அண்ணல் நபி (ஸல்) எவ்வளவு அழகாக பெயர் சூட்டி அழைக்கபடுபவர் மனம் நோகாமல் அழைத்திருக்கின்றார்கள் என்று பார்க்கும்போது (நகைச்சுவையுடனும் அதேநேரம் அழைக்கப்படுபவர் மனம் நோகாமலும்) ஒவ்வொரு விஷயத்திலும் நான் சிறந்த வழிகாட்டி என்பதை ஒரு நேர்கோட்டுப்பாதையில் நின்று அறிவுறுத்தி சென்றிருக்கின்றார்கள் என்பதை பார்க்கும் எவரும் இவ்வாழ்க்கைப்பாதையை எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது.

ஆதலால் இனியாவது பட்டப்பெயர்கள் சூட்டி அழைப்பவர்கள் ஒரு விழிப்புணர்வோடு செயல்பட்டு மனம் நோகாத அதே நேரம் , சூட்டுபவ்ரும் சூட்டப்படுபவரும் மனம் ( வருத்தப்படாமல் )விட்டு சிரிக்கும் வகையில்
உரையாடிக்கொள்வோம். இறை நபியின் பொருத்தத்தைப்பெருவோம்.

அபு ஆசிப்.
sabeer.abushahruk said...

எல்லா இயக்கவியாதிகளும் ஒரே வகையான மார்க்க விஷயங்களில் விவாதித்துக் கொண்ட கிடக்க, இத்தொடர் வித்தியாசமான பல விஷயங்களைப் பற்றி பேசுவது பிடித்திருக்கிறது.

பட்டப்பெயர் பற்றிய தற்கால நிலைபாட்டில் காதரின் கருத்து செறிவானதாகப் படுகிறது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோஸ்...

மிக அருமையான மிக மிக அவசியமான விழிப்புணர்வூட்டும் காலத்திற்கேற்ற கட்டுரை. ஜசாக்கல்லாஹு க்ஹைரன்.

அப்புறம்...

இக்கட்டுரையில் வரும்... ஒரு ஹதீஸில் "ஆஸியா" என்ற பெயரை நபி ஸல் அவர்கள் மாற்றியுள்ளார்கள். அது பற்றிய ஒரு சிறு விளக்கம்.

நம்மில் பலர் பெண் குழந்தைகளுக்கு ‪#‎ஆஸியா_மர்யம்‬ என்று பெயர் வைக்கிறோம். அப்படியான பெயரில் நிறைய பேர் இருப்பதையும் கண்டிருப்பீர்கள். காரணம்... அல்லாஹ்வால் சிறப்புப்படுத்தி உயர்வாக நன்மாறாயம் கூறப்பட்ட இரு பெண்களின் பெயர்கள் என்பதால் அப்பெயர்கள் சிறப்புக்கு உரியன.

ஆஸியா = ஃபிர்அவ்னின் மனைவி.
மர்யம் = நபி ஈஸா அலை... அவர்களின் தாயார் என்பதை நாம் அறிவோம்.

(குர்ஆன் 66:11. & 66:12.)


ஆனால்...
அடுத்து பதிவில் வரும் "ஆஸியா" பற்றிய பெயர் மாற்ற ஹதீஸில்
உள்ள ஆஸியா = عَاصِيَةَ (கவனிக்கவும் : ஐன் & ஸாத் வருகிறது) என்ற பெயர் அந்தக்கால அரபியர் உலகில் "பாவி" என்ற அரபி பொருள் படும்படியான பெயராக இருந்திருக்கிறது. அதனால்தான்... அதனால்தான் நபி ஸல் அவர்கள் மாற்றியுள்ளார்கள்.

ஃபிர்அவ்ன்னின் மனைவிக்கு வைக்கப்பட்ட ஆஸியா என்ற பெயர் அரபிய பெயர் என்பதற்கு ஆதாரமில்லை. மூஸா நபி அலை... அவர்களின் காலத்து மொழி... ஹீப்ரு என்றுதான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது.

குர்ஆனில் அவர்கள் காலத்தில் வருவோரின் எந்த பெயர்களும் அரபி பெயர்கள் என்பதற்கோ அவர்களின் மொழி அரபி என்பதற்கும் நான் கண்ட வரையில் ஆதாரமில்லை.

அப்புறம்...

பாவி என்ற பொருள் படும் பெயராக அவர் வாழ்ந்த நாட்டு மன்னன் ஃபிர்அவ்ன் தன் நாட்டு அரசிக்கு வைத்திருக்கவும் மாட்டான். கணவனுக்கு தெரியாமல் இரகசியமாகவே இஸ்லாமை பின்பற்றியவர் ஆஸியா அவர்கள்.

இதெல்லாம் விட....

குர்ஆனில் வராத
அப்பெயரை உலகுக்கு அறிவிப்பது யார்..?
அல்லாஹ் தான்..!
நபியின் வாயிலாக ஹதீஸ் மூலமாக...!
அப்புறம் நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்து தாராமல் அப்பெயர் எப்படி தெரிந்திருக்கும்..?

(புஃஹாரி 3411, 3433, 3769)

இந்த ஹதீஸில் வரும் "ஆஸியா" விற்கு அரபி ஸ்பெல்லிங்...
آسِيَةُ = ஆஸியா (கவனிக்கவும் : அலீஃப் & ஸீன் வருகிறது)

எனவே... மூஸா நபி காலத்து ஆஸியா...
அந்த ஹதீஸில் நபியால் மாற்றப்படும் அரபி மொழிப்பெயர் அல்ல.

"மூஸா நபி காலத்து மொழியின் ஆஸியா"வுக்கு "பாவி" என்ற முஹம்மத் நபியின் ஏரியா அரபிப்பொருள் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை..! ஸ்பெல்லிங்கும் மாறுகிறது. நன்மாறாயம் கூறப்பட்ட பெண்ணிற்கு அல்லாஹ் "பாவி" என்ற பொருளில் பெயர் இருந்தால் அதை அல்லாஹ்வே அதை மாற்றியும் அறிவித்திருந்திருப்பான்.

(அதுதான்... நபி ஸல் அவர்களே தவறான பெயர்களை முஸ்லிம்களுக்கு இம்மையில் மாற்றும்போது... அல்லாஹ் மாற்றமாட்டானா..?)

எனவே... இந்த ஹதீசை வைத்து அரபிப்பொருள் புழக்கத்தில் இல்லாத தமிழ் நாட்டில் "ஆஸியா" என்ற பெயரை வைக்காமல் தவிர்க்க வேண்டும் என சொல்வதற்கில்லை.

‪தாளாரமாக ஆஸியா என்று பெயர் வைக்கலாம்‬.

ஏனெனில்...
நாம் வைக்கக்கூடிய பெயர்...
அல்லாஹ்வும் ரசூல்லாஹ்வும் சிலாகித்த பெண்மணியான மூஸா நபி காலத்து (அலிஃப்-சீன் வரக்கூடிய...) ஆஸியா அவர்களின் பெயரைத்தான்...!

அன்றி... உமர் ரலி... அவர்களின் மகளின் மாற்றப்பட்ட (ஐன் - சாத் வரக்கூடிய) பெயரை அல்ல...!

sheikdawoodmohamedfarook said...

பட்டப்பெயர்பற்றிய அருமையான கட்டுரை! இதை யெல்லாம் படித்து நம் ஊர்திருந்த இன்னும் நூறு ஆண்டுகள் செல்லவேண்டும் .

sheikdawoodmohamedfarook said...

இதுவரையில்எல்லோரும்அரைத்தமாவையேஅறைதுக்கொண்டிருக்கதம்பிஇக்பாலின்புதியசிந்தனைஇட்லிக்குசட்டினிசாம்பார்வைக்காமல்எறச்சிகறி தால்ச்சா போட்டமாதிரி இருக்கு! 'இனிபிரியாணிக்குபரங்கிக்காய்சாம்ப்பார்போடலாமா?''என்றுமாற்றியோசிப்போமா?

Unknown said...

அவசியமான பதிவு மற்றும் முஹம்மத் ஆஷிக் அவர்களின் விளக்கமும் அருமை.

Iqbal M. Salih said...

கருத்துகள் அளித்த நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் என் அன்பான நன்றியும் ஸலாமும் உரித்தாகட்டும்.

sheikdawoodmohamedfarook said...

கடன் கேட்டு கொடுக்கா விட்டாலோ அல்லது கொடுத்தகடனை திருப்பி கேட்டாலோ இழிவான பட்ட பெயரை சொல்லி திட்டவும் பட்டப்பெயர்கள் பயன் பட்டது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு