சென்னையிலும் கடலூர், காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக பல்வேறு தரப்பினரும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் அரசும் நிவாரணப் பணிகளில் தங்களையும் தங்களின் தொண்டர்களையும் ஈடுபடுத்தி வருகிறார்கள். வரவேற்க வேண்டிய அறப்பணிதான். .
"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப் பெருமைக்காரர், ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான் “ (அல் குர் ஆன் 31:18)
என்று அல்லாஹ்வின் அருள்மறை எச்சரிப்பதை ஏற்று, உயிர்களை மீட்கவும், அகப்பெருமையின்றி அனைவரின் வீடுகளை ஆக்கிரமித்து இருக்கும் குப்பை கூளங்களை கரங்களால் அள்ளி அவர்கள் வாழும் இடமாக வகைப்படுத்திக் கொடுக்கவும் அல்லலுறுகிற மக்களை நோக்கி நாம் எடுத்துவைக்கும் அடிகள், நமது முகத்தை மனிதர்களை நோக்கிப் பயணிக்க வைக்கிறது.
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அத்தனை மனிதர்களும் எலும்பாலும் சதையாலும் ஆன ஈடிணையற்ற உயிர்கள். அவை கசக்கி எறியப்படும் காகிதப் பொட்டலங்கள் அல்ல. கருணை மழை பொழியப்பட்டு காப்பாற்றப்படவேண்டியவைகளாகும். ‘ இடது விழியில் தூசு விழுந்தால் வலது விழியும் கலங்கிவிடுமே’ என்று ஒரு கவிஞர் குறிப்பிட்டதைப் போல் சாதி இன மத பேதமின்றி மனிதர்கள் அனைவரும் கை கோர்த்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது ஒரு வரலாற்றுப் புதுமை; என்றும் வளர்ந்து செழிக்க வேண்டிய நன்மை. ஆனால் நாம் எவ்வளவு பேர் திரண்டு இவைகளைச் செய்தாலும் இந்த உதவிகள் அனைத்தும் தற்காலிகமானதே! பாதிக்கப்பட்டோர் அனைவரும் தற்சார்பு உடையவர்களாக மாறும் மறுமலர்ச்சி ஏற்படும்வரை உணவுப் பொட்டல உதவிகள் மட்டும் ஒரு நிரந்தர மாறுதலையும் ஏற்படுத்திவிடாது.
நாம் கடந்த அத்தியாயத்திலும் குறிப்பிட்டு இருப்பது போல் தடம்புரண்ட வாழ்க்கையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்களுக்கு தற்காலிகமாக நாம் செய்யும் உதவிகள் அவர்களது இன்றைய பசியை நீக்கலாம்; ஆனால் நாளைய பசியைப் போக்க அவர்கள் என்ன செய்வார்கள்? எந்த இயக்கத்தின் வண்டி, சோற்றுப் பொட்டலங்களை சுமந்து கொண்டு வரும் என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டும் எதிர்பார்த்தும் எந்நாளும் நின்றுகொண்டிருக்க இயலுமா? அல்லது இயக்கங்களுக்குத்தான் அன்றாடம் இந்தபணிகளை செய்து கொண்டிருப்பதையே தங்களுடை அஜெண்டாவில் வைத்துக் கொண்டிருக்க இயலுமா? இன்றைய தேவை ஒரு நிரந்தரத் தீர்வும் மக்கள் அனைவருக்குமான மறு வாழ்வும். கண்ணீர் துடைக்கும் விரல்கள் மட்டும் போதாது ; கை கொடுக்கும் கைகளும்தான் காலத்தின் கட்டாயம்.
அல்லாஹ் தனது அருள் மறையில் கூறுவது போல்
“புண்ணியம் என்பது உங்கள் முகங்களை கிழக்கிலோ மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால். புண்ணியம் உடையவர்கள் அல்லாஹ்வின் மீதும் , இறுதிநாள் மீதும் வானவர்கள் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொண்டு தங்களது செல்வத்தை தம் விருப்பத்தின் மீது உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும் அடிமைகளின் மீட்புக்காவும் மேலும் தொழுகையைக் கடைப்பிடித்து , ஜகாத்தையும் கொடுத்து , வாக்களித்தால் அந்த வாக்குகளையும் நிறைவேற்றுவோரும் (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும் (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், போர்க்காலங்களிலும் பொறுமையுடன் இருந்தவர்களுமாவர். அத்தகையோர்தான் உண்மையாளர்கள் ; இன்னும் அவர்கள்தான் இறைவனை அஞ்சியவர்கள்" (அல்குர்ஆன் 2:177)
இறைவன் வகுத்து இருக்கிற இந்த தீர்க்கமான வரைமுறைகளின்படி, இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் நமது பணிகளை கைமாறு கருதாமல் மேற்கொள்ள அந்த இறைவனே நமக்குத் துணை இருப்பானாக! ஆமீன் .
மறுவாழ்வுத்திட்டங்கள் என்று பேசுகிற போது மாநில அரசும் மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை முன் வைக்கின்றன. அந்தத் திட்டங்கள் பெரும்பாலனவற்றின் நோக்கம் மக்களின் கரங்களில் இருக்கும் ஐந்தாண்டுகள் ஆயுள் உள்ள வாக்குச்சீட்டை வாங்கி வாயில் போட்டுக் கொள்வதுதான். அந்தத் திட்டங்களில் பெருமளவு அரசுப் பணம் செலவாகும் என்பதுமட்டுமல்ல செலவாகும் பணத்தில் அல்லது கணக்குக் காட்டப்படும் பணத்தில் எத்தனை சதவீதம் உண்மையான பயனாளிகளுக்குப் போய்ச் சேரும் என்பதும் கேள்விக்குறி. உலைமூடி போல ஓட்டைகள்தான் அரசுத்திட்டங்களின் அவலமும். இவ்விதம் தவறு செய்பவர்களையும் நியாயப்படுத்தும் முறையில் நாம் , ‘ தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா ? ‘ என்ற ஒரு பழமொழியையும் நம்மிடையே உலவவிட்டு வைத்திருக்கிறோம். இதைப் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசினால் நமது வாயும் எழுதும் கரங்களும்தான் நாற்றமெடுக்கும் . நமது வேலையை நாம் பார்க்கலாம்.
ஆகவேதான் அழைப்புப் பணி என்கிற அல்லாஹ்விதித்த கடமையைச் சுமந்து வாழும் புனிதப் பணியாளர்கள் அரசுத் திட்டங்கள் போன்ற நீர்க்குமிழிகளில் கவனம் செலுத்தாமல் நிரந்தர நன்மையான மறுமையையும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் கருதி, தங்களால் இயன்ற ஆற்ற வேண்டிய பணிகள் அநேகம் இருக்கின்றன. பார்த்துக் கொண்டே இருங்கள்! அரசின் திட்டங்களுக்கான பெயரில் கோடிக்கணக்கான பணம் கஜானாவிலிருந்து வெளியேறும்போது, திட்டங்கள் நிறைவேறுகிறதோ இல்லையோ ஊர்களில் பல புதிய பணக்காரர்கள் உருவாகி இருப்பார்கள்.
அனைத்து அரசியல் அத்துமீறல்களையும் மீறி அன்பு கொண்ட நெஞ்சங்களுடன் ஆதரவற்றவர்களை அரவணைக்க, உள்ள சுத்தியோடு செயல்படும் அழைப்பாளர்களால் தான் இயலும். எந்த ஒரு காரியத்துக்கும் ஒரு தளமும் களமும் தேவைப்படும். குறிப்பாக அழைப்புப் பணிக்காக நாம் தேடித்தேடிப் போகவேண்டிய களங்கள் பல இருக்கின்றன. இவற்றுள் சிலவற்றை முன்னர் எழுதப்பட்ட அத்தியாயங்களில் நாம் குறிப்பிட்டோம். குறிப்பாக மருத்துவமனை, சிறைச்சாலை, இயற்கை இடர்பாடுகள் பாதித்த பகுதிகள் போன்றவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
இப்போது தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளமும் இடர்பாடுகளும் அழைப்புப் பணியாளருக்கு ஒரு தளத்தையும் களத்தையும் தானே தேடித்தந்து இருக்கிறது. முன்னூறு நாட்கள் மூலை முடுக்குக்கெல்லாம் சென்று நாம் செய்யும் உபதேசங்களை எல்லாம் மிஞ்சி இரண்டுவாரங்களாக செய்த சேவை நம்மை நோக்கிப் பல நடுநிலையாளர்களையும் நன்நெஞ்சுடையோர்களையும் திரும்பிப்பார்க்க வைத்து இருக்கிறது. ‘உள்ளங்களைப் புரட்டக் கூடியவன்’ என்று நாம் குறிப்பிடும் எல்லாம் வல்ல இறைவன் மழையின் மூலம் பல உள்ளங்களைப் பாடம் படிக்க வைத்து உண்மைகளை உணரவைத்து புரட்சி செய்ததுபோல புரட்டிப் போட்டுவிட்டான். இதுவரை சீ! என்று விரட்டப்பட்டவர்களை வா! என்று வரவேற்க வைத்துவிட்டான். மழையும் வெள்ளமும் மனித நேயத்துக்கு மட்டும் சாட்சி பகரவில்லை இனி இறைவழியையும் நபி மொழியையும் சேவைகளின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக்கு பாதையையும் போட்டுத் தந்திருக்கிறது.
அந்தப் பாதையில் பயணிக்க வேண்டியதுதான் இனி அழைப்புப் பணியாளர்களின் அன்றாடக் கடமை. இதனால் இருவழிப்பயன்கள் ஏற்பட வழி திறக்கும். ஒரு வழி, அல்லலுற்ற மக்களுக்கான இம்மைப் பயனாகவும் இன்னொருவழி, உதவும் கரங்களுக்கான மறுமைப் பயனாகவும் இருக்கும்.
அரசு அள்ளி இறைக்கிறது என்கிறார்கள்; இப்படி இறைப்பதில் நிறைக்கபோவது எவ்வளவு? குறைக்கபோவது எவ்வளவு என்று தெரியாது. அரசியல் கட்சிகள் கிள்ளிக் கொடுக்கின்றன என்கிறார்கள் ; இப்படிக் கிள்ளிக் கொடுப்பதன் பின்னணியில் வரவிருக்கும் தேர்தல் இருக்கிறது. இயக்கங்கள் சொல்லி சொல்லிக் கொடுக்கின்றன என்கிறார்கள்; இதன் நோக்கத்தில் சமுதாயத்தின் முன் நான் செய்தேனே நீ செய்தாயா சவால்விடும் சங்கல்பம் இருக்கிறது. இதய சுத்தத்தோடு இயன்றதைச் செய்ய அல்லாஹ்வின் அச்சத்தை மட்டுமே அச்சாணியாகப் பெற்ற அழைப்புப் பணியாளனால்தான் இயலும்.
நிரந்தரத் தீர்வுகளுக்காக கடந்த அத்தியாயத்தில்நாம் மேற்கொள்ள வேண்டிய சில செயல்களை பட்டியலிட்டு இருந்தோம். அவற்றை மீண்டும் நினைவுபடுத்தி ஒவ்வொன்றின் தலைப்பாக நம்மால் இயன்ற, இயலாத, இடையூறாக உள்ள விஷயங்களை விவாதிக்கலாம்.
“ 1. . அனாதைக் குழந்தைகளை ஆதரித்தல்
2. ஆதரவற்ற முதியோர்களை அரவணைத்தல்
3. விதவைகளாகிவிட்ட பெண்களை மணமுடித்தல்
4. நிராதரவான பெண் குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தல்
5. வட்டி இல்லாக் கடன் வழங்குதல்
6. வேலையற்றோருக்கு வேலை தேடிக் கொடுத்தல் அல்லது நாமே வேலைக்கு அமர்த்திக் கொள்ளல்
இவை போன்ற நிரந்தரத் தீர்வுகாணும் மறுவாழ்வு முயற்சிகளை முஸ்லிம்கள் மார்க்க நெறிமுறைகளுக்குட்பட்டு முன்னெடுக்க வேண்டும். “
என்பதே நாம் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்த சில மறுவாழ்வுக்கான திட்டங்களின் தலைப்புகளாகும். இயற்கையின் எந்த ஒரு பேயாட்டத்துக்குப் பின்னும் நாம் பட்டியலிட்டிருக்கிற மறுவாழ்வுத்தலைப்புகள் சமுதாயம் சந்திக்கும் சவால்களாகும். இன்றும் கூட செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி – என்று தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களின் விளைவுகளை கனவில் கூட முனங்கிக் கொண்டு பலர் தங்களின் வாழ்வாதரங்களை இழந்து தவிக்கிறார்கள். எண்ணற்றோர் இழந்த வாழ்வாதரங்களை எல்லாம் மீட்டெடுத்துக் கொடுக்க ஒரு அழைப்புப் பணியாளானால் இயலாதுதான். ஆனால் சின்னஞ்சிறிய உதவிகளை அவனால் ஒருங்கிணைக்க இயலும். அந்த உதவிகள், வாழ்வை இழந்தோருக்கு இருளில் வழிகாட்டும் சிறிய சிமிழி விளக்காகக் கூட இருக்கக் கூடும். .
மரணமடைந்தவர்கள் என்று அரசாங்கத்தால் காட்டப்படும் எண்ணிக்கைக்கும் உண்மையிலேயே மரணமடைந்தவர்களின் எண்ணிக்கைக்கும் எட்ட இயலாத, தொட்டுவிட இயலாத இடைவெளி இருக்கிறது. உதாரணமாக , கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் ஒரே வீட்டினுள்ளிலிருந்து பத்து பிணங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பெய்த பெருமழைக்குமுன்பு பெய்த மழையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 42 பேர் மரணமடைந்ததாக தினமலர் செய்தி வெளியிட்டது. அதன்பிறகு இப்போது பெய்த மழையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மரணமடைந்த மக்களுக்கு இதுவரை ஒழுங்கான கணக்கு வரவில்லை. இவ்வாறு வெளியிடப்பட்ட கணக்கில் கூட அரசியல் விளையாடுகிறது. இந்தக் கணக்குகளைப் பற்றி நம்முடைய பார்வையில் கவலை இல்லை.
ஆனால் நடப்புகளை வைத்துப் பார்க்கும்போது , தெருக்களில் ஊர்களில் நடந்து செல்லும்போது காதுகளில் ஒலிக்கும் ஒப்பாரிகளையும் கண்ணீர்க் கதைகளையும் பார்க்கும்போது, அழிந்துபோன வீடுகளின் காலி மனைகளின் கரைகளில் அமர்ந்துகொண்டு கண்ணீர்விட்டுக் கதறும் குரல்களைக் கேட்கும்போது இறப்பின் எண்ணிக்கை அதிகம் என்பது மட்டுமல்லாமல் அந்தக் கணக்குகள் குறைக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன என்பது மறுக்க இயலாத உணமை .
இயற்கைப் பேரிடர்களின் காரணமாக இறப்பின் எண்ணிக்கை இவ்வாறு அதிகமாகும் போது அனாதைகள், கைவிடப்பட்டோர், கவனிக்க ஆளில்லாமல் தனிமையாக்கப்பட்ட முதியவர்களும், நோயாளிகளும் அதிகமாகி விடுவார்கள். இவ்வாறே , இத்தகைய வெள்ளத்தின் காரணமாக பொருட்சேதமானாலும் உயிர்சேதமானாலும் அவை துல்லியமாக கணக்கிடப்பட இயலாததே.
ஆனால் ஒரு அழைப்பாளன் தனது பரிவாரங்களுடன் அதே குறிக்கோளுடன், தெருவிடையே தேம்பியழும் அநாதைகளைத் தேடிப்பார்த்து , அவர்களைக் கண்ணால் கண்டு கணக்கெடுத்து அத்தகைய கையறு நிலையில் விடப்பட்டவர்களை அருமையுடன் அணைத்தெடுத்து ஆதரிக்கலாம்.
அந்த வகையில் முதலாவதாக, அனாதைகளை ஆதரிப்போம் என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து பேசலாம். இன்ஷா அல்லாஹ். .
இபுராஹிம் அன்சாரி
11 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
மானுட சேவையே அழைப்புபணியின் செறிவான முயற்சி என்பதை படிப்படியாக ஆணித்தரமாகச் சொல்லிவரும் இந்த கட்டுரையும்கூட ஒரு தாவா தான்.
இதற்கான கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவானாக, ஆமீன்
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
ஒரு அபிப்ராயம் சொல்ல வேண்டும், காக்கா. நீங்கள்தான் சாதக பாதகங்களைச் சொல்லி தெளிவிக்க வேண்டும்.
பலதரப்பட்ட ஊடகங்களின் வாயிலாக ஆதாரங்களோடு அறியக்கிடைப்பது என்னவென்றால், rescue, relief, rehabilitation என்னும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் முதல் இரண்டாகிய காப்பாற்றுதல், நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றில் இஸ்லாமிய இயக்கங்களும் தன்னார்வ குழக்களும் தொண்டு நிருவனங்களும்தானே முன்னணியில் நின்றன!
அப்படியிருக்க, மூன்றாவது நிலையான புணரமைக்கான கோடிக்கணக்கான தொகையை பல வள்ளல்கள்/தயாளர்கள் ஏன் அரசிடம் தர வேண்டும்? உழைத்த இயக்கங்கங்களிடமே ஒப்படைத்து புணரமைக்கச் செய்யலாமே.
மத்திய மாநில அரசுகள் நம் வரிப்பணத்தைக் கொண்டு அவர்களாகச் செய்யட்டும்.
தனியார் நிதியை ஆர்வமுள்ள/நிரூபித்த இயக்கங்களிடமே கொடுத்தால் என்ன?
காக்கா, நான் சரியா பேசுறேனா?
வ அலைக்குமுஸ் சலாம்.
//காக்கா, நான் சரியா பேசுறேனா?// மிகச் சரியாக பேசுகிறீர்கள்.
// பல வள்ளல்கள்/தயாளர்கள் ஏன் அரசிடம் தர வேண்டும்? //மிகவும் இலகுவாக நாம் யூகிக்க இயலும்.
இயக்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் தந்தால் அரசை அவமானபடுத்தியது போலாகும். இதனை முன்னிட்டு அந்த நிறுவனங்களுக்கு அரசால் பல தொந்தரவுகள் தரப்படலாம். ஒரு வகையில் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இது வியாபார தந்திரமே. தாங்கள் கொடுக்கும் நிதி பெரும்பாலும் ஆளும் கட்சியின் விருப்பபடி திசைமாற்றப்படலாம் அல்லது தேர்தல் நிதியாகவே போய்விடலாம் என்பது உதவி நிதியைக் கொடுக்கும் நிறுவனங்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அவர்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்ற உதவிட வேண்டுமென்ற குறிக்கோளை விட அரசிடம் நல்ல பெயர் வாங்கவேண்டுமென்பதே (அதைவிட) முக்கியம்.
என்ன காக்கா,
எல்லாம் இப்படி மெக்கானிக்கலா இருக்கே. இந்த பூமிப்பந்தில் மனிதாபிமானத்திற்கு மதிப்பே இல்லையா?
ஏனெனில், நிச்சயமாக, நீங்கள் கட்டுரையில் கேட்டிருப்பதுபோல, நிவாரணத்திற்கும் புணரமைக்கவும் வழங்கப்படும் தொகையில் எத்தனை விகிதம் பாதிக்கப்பட்டவனுக்குப் போய் சேரப்போகிறதோ.
மழைநீர் வடியத்தான் வடிகால்கள் இல்லை; நிவாரண தொகை வழிநெடுக வடிய அரசியல்வாதி, அமைச்சன், அதிகாரி, கட்சிக்காரன் என்று எத்தனையோ வடிகால்கள்...
இல்லையா காக்கா?
அழைப்புப்பணி மதமாற்றம் ஆகுமா.? தலைப்பில் நல்லபல ஆக்கபூர்வமான பயனுள்ள சமுதாயச்செய்திகளை பகிர்வதோடு உங்களுக்கே உரித்தான கருத்தான எழுத்துக்கயிற்றில் கட்டிப்போட்டு அறிஅறிவுரையை வயிறுபுடைக்கத் தந்துள்ளீர்கள் அருமை. வாழ்த்துக்கள் காக்கா.
தம்பி, கவிஞர் சபீர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விக்குரிய மேற்கண்ட பதிலைத் தொடர்ந்து இன்னும் சில எண்ணங்கள் :-
இதற்காகத்தான் , CSR என்கிற CORPORATE SOCIAL RESPONSIBILITY என்கிற முறையை மத்திய அரசு காங்கிரஸ் அரசின் காலத்திலேயே ( 2013 ) ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் அறிமுகப் படுத்தியது.
இதனை பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு என்று கல்லூரிகளில் பாடமும் நடத்தப் படுகிறது.
இதன்படி பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் வருட நிகர இலாபத்தில் இரண்டு சதவீதத்தை மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கி செலவிடவேண்டும் .
அமீரக அரசு கூட இந்தத் திட்டத்தை அழகாக செயலில் வைத்திருக்கிறது. நான் மனித வள மேம்பாட்டுத்துறையில் பணியாற்றியபோது இது தொடர்பான பயிற்சிகளுக்கு சென்று இருக்கிறேன். HRM – ல் இதற்கான களங்களைக் கண்டறிவதும் ஒரு பணியாகும். எங்கள் கம்பெனியில் இந்தத்திட்டத்தின் மூலம் பல பணிகளைச் செய்தோம். பல விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் லேபர் கேம்பில் நலஉதவிகள் செய்து இருக்கிறோம். பணியில் இருக்கும் போது விபத்திலோ அல்லது இயற்கையாகவோ மரணமடையும் ஊழியரின் குடும்பத்துக்கு மிக தாராளமான உதவிகளை செய்து இருக்கிறோம். இப்போதும் இத்தகைய நற்பணிகள் செய்து வருகிறார்கள் என்று அறிந்து ஆனந்தம் கொள்கிறேன்.
அமீரகத்தில்இதை மிக வெற்றிகரமாக செய்பவர்கள் ETA நிறுவனத்தினர் ஆவர். வருடாவருடம் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு எங்களுக்கும் அழைப்பு வரும்.
இந்தியாவில் இந்த முறை சரிவர அமுல்படுத்தபட்டால் நாட்டில் சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் பொறுப்பில் தத்து எடுத்து உள்ளூருக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை செய்து கொடுக்கலாம். ஆனால் இங்கு நடப்பது எல்லாமே கணக்குக் காட்டத்தான். மற்றபடி கிணத்தைக் காணோம் கதைதான்.
இதையும் மீறியும் சில சாலைகளில் பயணிக்கும் போது இந்த கிராமம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவால் தத்தெடுக்கப்பட்டது என்ற அறிவிப்பையும் காணமுடியும்.
குறிப்பிட்ட வெள்ள மறு வாழ்வுத்திட்டங்களைப் பொறுத்தவரை, அரசும் வள்ளல் நிறுவனங்களும் உண்மையான நல்ல நோக்கோடு இணைந்து செயல்பட்டால் அரசே முன்னின்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தத்தெடுத்து முன்னேற்றும் பணிகளை சில பெரிய நிறுவனங்களிடம் வகைப்படுத்தி, பிரித்து, ஒதுக்கி ஒப்படைக்கலாம். நேரடியாக இந்தப் பணிகளில் பங்கு கொள்ள இயலாத சிறிய நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பெரிய கம்பெனிகளில் தங்களின் உதவிகளை அளிக்கலாம். ஆனால் இப்படி நடந்துவிட்டால் ஊர் உருப்பட்டுவிடுமே!
அப்படி ஒப்படைத்துவிட்டால் அந்தப் பெருமைகள் நிறுவனங்களுக்குப் போய் விடுமே! . ஸ்டிக்கர் ஒட்ட இயலாதே!. தேர்தலுக்குப் பயன்படுத்த இயலாதே! பீலா விட இயலாதே! .
இவற்றையும் மீறியே பல தொண்டு நிறுவனங்கள், இஸ்லாமிய, கிருத்தவ, ஜெயின் , சீக்கிய இயக்கங்கள் பல நிவாரணப்பணிகளை மேற்கொள்கின்றன.
நேரம் ஒதுக்கி விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி, காக்கா
(இப்ப என் கேள்வி சின்னப்பிள்ளைத்தனமா எனக்கே படுது )
தம்பி சபீர்!
இல்லை.
பலரின் மனதில் எழுந்த கேள்வி உங்கள் மூலம் வெளிப்பட்டது.
கேள்விக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும்.
தம்பி மெய்ஷா அவர்களுக்கு
தங்களின் அன்பான கருத்திடலுக்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
நம்முடைய சமூகத்துக்கு நிரந்தர தீர்வுக்காக தாங்கள் பட்டியல் இட்டுள்ள 6 செயலாற்றலில் ”ஆதரவற்ற முதியோர்களை அரவனைத்தல்” தவிர மற்றவைகள் எதீம் கானா, பைத்துல் மால்” போன்ற அமைப்புக்கள் மூலம் நம் ஊரில் செயலாக்கத்தில் உள்ளது அறிந்ததே, “ஆதரவற்ற / கைவிடப்பட்ட முதியோர் அரவணைப்பு மற்றும் புணர் வாழ்விற்கு ஆதரவு கரம் நீட்டி பதிவு தாருங்கள்.
“ 1. . அனாதைக் குழந்தைகளை ஆதரித்தல்
2. ஆதரவற்ற முதியோர்களை அரவணைத்தல்
3. விதவைகளாகிவிட்ட பெண்களை மணமுடித்தல்
4. நிராதரவான பெண் குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தல்
5. வட்டி இல்லாக் கடன் வழங்குதல்
6. வேலையற்றோருக்கு வேலை தேடிக் கொடுத்தல் அல்லது நாமே வேலைக்கு அமர்த்திக் கொள்ளல்
இவை போன்ற நிரந்தரத் தீர்வுகாணும் மறுவாழ்வு முயற்சிகளை முஸ்லிம்கள் மார்க்க நெறிமுறைகளுக்குட்பட்டு முன்னெடுக்க வேண்டும். “#
அப்துல் கலாம். பஹ்ரைன்.
வ அலைக்குமுஸ் சலாம்.
அன்பின் தம்பி கலாம் அவர்களுக்கு,
தங்களின் அன்பான கருத்திடலுக்கு ஜசாக்கல்லாஹ் ஹைர்.
தங்களின் அன்பான குறிப்பை கவனத்தில் கொண்டேன்.
நமது ஊர் பைத்துல் மால் செய்துவரும் பணிகள் அனைத்துக்கும் நாம் மிகவும் பெருமைப்படுவோம். மாஷா அல்லாஹ். ஆனாலும் நமது ஊர் பைத்துல்மாலின் எல்லைகள் வரையறுக்கப்பட்டவை. நான் பொதுவாக எழுதுகிறேன்.
ஆதரவற்ற முதியோர்களை அரவணைப்பது தொடர்பாகவும் இன்ஷா அல்லாஹ் எழுதலாம். து ஆச செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment