Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முன் மாதிரி பெண் சமூகம் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 16, 2015 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுவாக முன்மாதிரி பெண்மணிகள் என்றால் நாம் அறிந்தவைகளில்
அன்னை ஹதீஜா (ரலி), அன்னை ஆயிசா (ரலி), அன்னை பாத்திமா (ரலி) அவர்களை பற்றியே நம் இஸ்லாமிய பெண்கள் அறிந்திருப்பார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வீரத்தாலும், அறிவாலும், வணக்க வழிபாடுகளிலும் முன்மாதிரியாக இருந்தவர்கள் இன்னும் பல ஸஹாபியப் பெண்மணிகள் என்பது வரலாற்று சான்றாக உள்ளது.

ஸஹாபியப் பெண்மணிகள் மார்கத்திற்காக பல்வேறுபட்ட யுத்தங்களில் தாங்களும் களமிறங்கி போராடியது மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையில் இறையச்சத்துடன் வாழ மேற்கொண்ட முயற்சிகள் பொடுபோக்கான நம் பெண்களின், சாக்கு போக்கான வார்த்தைகளுக்கு முற்றுப் முற்றுப்புள்ளி வைக்கின்றன. பின் வரும் அந்த முன்மாதிரி சமூகத்தின் வாழ்கை வரலாற்றிலிருந்து ஒரு சிரிய தொகுப்பாக உங்கள் சிந்தனைக்கு தருகிறோம்.

குர்ஆனைப் பற்றி கேள்வியெழுப்பிய உம்மு ஸலமா (ரலி).

ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?” என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது பின் வரும் திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)

33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

குர்ஆனில் அதிகமான கட்டளைகள் ஆண்பாலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் பெண்களுக்கு எவ்வித கட்டளைகளையும் இறைவன் இடமாட்டானா? என்று அல்லாஹ்வின் தூதரிடம் ஆர்வமாக கேட்ட செய்தியை மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அல்லாஹ் 33:35 வது வசனத்தையே இறக்கினான். தனக்கு குர்ஆன், சுன்னா (நபிவழி) என்னவென்று தெரிய வந்தால் தானும் அது போல் வாழ வேண்டுமே என்பதற்காக மார்க்க பிரசங்கங்களில் கூட கலந்து கொள்ளாத நம் பெண்மணிகளின் மத்தியில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் கேள்வி வியப்பை ஏற்படுத்துகின்றது. மார்க்கத்தில் கேள்வி கேட்டு அறிந்து பின்பற்ற வேண்டும் என்று ஸஹாபியப் பெண்மணிகள் கொண்ட கொள்கையின் உறுதி பறைசாற்றுகின்றது.

இன்று நம்முடைய பெண்கள் எத்தனை பேர் குர் ஆனிலிருந்து விளக்கம் கேட்கும் பெண்மணிகளாக இருக்கின்றார்கள்?

வஹி நின்றதற்காக அழுத உம்மு அய்மன் (ரலி) அவர்கள்.

வாராம் ஒரு முறை வீட்டில் யாசீன் சூராவை மாத்திரம் ஓதி, குர்ஆனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனக் கருதும் பெண்களுக்கு இதோ உம்மு அய்மன் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் படிப்பினையிருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ‘நம்மை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்’ என்று கூறினார்கள். அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாம் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும் ‘ஏன் அழுகின்றீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாயிற்றே’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்விடம் இருப்பதே அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹி) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகின்றேன்)’ என்று கூறி அவர்கள் இருவரையும் அழச் செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள். நூல் : (முஸ்லிம் – 4839)

அல்லாஹ்வின் தூதரின் தோழர்களையே அழ வைத்த சிறப்பு உம்மு அய்மன் (ரலி) அவர்களையே சாறுகின்றது. ஆகவே குர்ஆனை ஓதி அதன்படி செயல்பட நாமும் உறுதியெடுப்போமாக!

இன்று நம் சமூகத்துப் பெண்கள் டிவி சீரியல்களுக்கல்லவா அழுகிறார்கள். சிந்திக்க வேண்டாமா!!?

நபியின் கட்டளையை மீறாத ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்.

பிரிவு எனும் துன்பத்தை மனிதனால் தாங்கிக் கொள்வது கடினம். அதிலும் குறிப்பாக பெண்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு நெடுங்காலம் தேவை. மரண வீட்டில் கூட மூன்று நாள் பிந்தியும் ஒப்பாரி வைத்து அழுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். மையத்தின் உறவுக்கார ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் குறைந்தது மூன்றிலிருந்து பத்து நாட்களுக்காவது தாங்கள் புத்தாடை அணிவதையோ, நறுமணம் பூசுவதையோ அபத்தமாக கருதுகின்றார்கள்.

தமது சகோதரனை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர் நறுமணம் பூசிக் கொண்டு ‘இது எனக்குத் தேவையில்லை. ஆயினும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக் கூடிய பெண் தமது கணவரைத் தவிர வேறு எவரது மரணத்திற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. தனது கணவன் இழந்து விட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் கூற நான் கேட்டுள்ளேன்’. அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி) (புகாரி – 1282)

தன் சகோதரனை இழந்துவிட்ட கவலை தன் மனதை ஆக்ரோஷித்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் கணவனைத் தவிர எந்த உறவுக்கும் துக்கம் அனுஷ்டிக்கக் தகாது என்ற நபியின் கட்டளைக்கு தான் மாற்றமாக நடக்கக் கூடாது என்ற காரணத்திற்காக ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் நறுமணம் பூசிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் முக்கியம் என்ற காரணத்தினால் தன் உறவின் மரணத்தைக் கூட பொறுமையுடன் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்.

இது போன்ற தூய்மையான பொறுமையை இன்றைய பெண்களிடம் நம்மால் பார்க்கத்தான் முடிகிறதா?

கொள்கைக்காக நாடு துறந்த பெண்மணிகள்.

அபூ ஸலமா (ரலி) அவர்கள் மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவினார்கள். எனவே எதிரிகளின் பல்வேறு தொல்லைகளினால் அல்லாஹ்வை நிம்மதியாக திருப்தியோடு வணங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளத்பட்ட உம்மு ஸலமா (ரலி) மற்றும் அவருடைய கணவரும் இஸ்லாத்திற்காகவே சொந்த ஊர், உறவு, செல்வம் அனைத்தையும் விட்டுவிட்டு ஆரம்பத்தில் அபீசீனியாவுக்கும், பின்னர் மதினாவுக்கும் ஹிஜ்ரத் செய்தார்கள். (அல் இஸாபா – 12061)

அதே போல் அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் தன் கொள்கையை காப்பாற்றிக் கொள்ள இரண்டாவதாக அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற குழுவினருடன் அவர்களும் நாடு துறந்து சென்றார்கள். பிறந்து வளர்ந்த சொந்த பூமியை விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்யக் காரணம் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மாத்திரம் முழுமையாக செய்ய வேண்டும் என்பதேயாகும்.

அடுத்தவர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற பேராசையினால் தன் கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி சீரழிவுக்குள்ளாகும் பெண்களுக்கு இந்த நபித் தோழியர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது.

நஃபிலான வணக்கங்களுக்கு ஆர்வம் காட்டிய பெண்மணிகள்.

அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை ஜானுக்கு ஜான் பின்பற்றக் கூடிய பெண்மணியாக அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்துக்கள் (உபரியான தொழுகை) தொழுவாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டதிலிருந்து அதை நான் ஒரு போதும் விட்டதில்லை. அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், நூல் : முஸ்லிம் – 1319

மேலும் ஸைனப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அதிக கரிசனை காட்டக் கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது இரண்டு தூண்களுக்கு இடையே நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது. ‘இந்த கயிறு எதற்கு?’ எனறு நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் இது ஸைனபுக்கு உரியதாகும். அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்த கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் உட்சாகத்துடன் இருக்கும் பொது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விட வேண்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள். நூல் : புகாரி 1150

சுன்னத்தான தொழுகைகளை மட்டுமல்லாது, சுன்னத்தான நோன்புகளையும் சாஹ்பியப் பெண்கள் நோற்றுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்த போது நபியவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நீ நோன்பு வைத்திருந்தாயா?’ என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். ‘நாளை நோன்பு நோற்க விரும்புகின்றாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு இல்லை என்றேன். இதை கேட்ட நபியவர்கள், ‘அப்படியானால் நோன்பை முறித்து விடு’ என்று சொன்னார்கள். நபியவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்துவிட்டேன். அறிவிப்பவர் : ஜுவைரிய்யா (ரலி) அவர்கள். நூல் : புகாரி 1986

ஹப்ஸா (ரலி) அவர்கள் நோன்பை விட்ட நிலையில் இறக்கவில்லை. (அதாவது கடைசி காலத்திலும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்). அறிவிப்பவர் : நாபிவு. நூல் : தபகாத் இப்னு ஸஅத் : பாகம் 02 பக்கம் 86

நபீலான இபாதத்களைப் பேணுகின்ற விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டி, அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுவதில் கரிசனை காட்டிய ஸஹாபியப் பெண்மணிகளின் வாழ்க்கையில் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் அதிகமாகவே இருக்கின்றன. இன்று நம்முடைய நிலைகளை அந்த தியாகப் பெண்மணிகளின் இபாத்துகளுடன் கொஞ்சம் நம்முடைய இபாத்தத்துக்களையும் ஒப்பிட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதிகம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்த அன்னை ஜுவைரிய்யா (ரலி)

ஆண்கள் உட்பட பெண்கள் பெரும்பாலானவர்கள் சுப்ஹுத் தொழுகையை அலட்சியம் செய்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். இரவெல்லாம் வீனாக நேரத்தைக் கழிப்பதினால் பெண்களுக்கு விடியும் நேரம் காலை 10 மணியையும் தாண்டுகின்றது. காலை நேரத்தில் தன் உம்மத்திற்கு பரக்கத்தை ஏற்படுத்து என பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை காலைப் பொழுதின் சிறப்பைப் காட்டுகின்றது. அந்த நேரத்தை பயனுள்ள விதமாக கழித்த ஒரு பெண்மணிதான் அன்னை ஜுவைரிய்யா (ரலி) அவர்கள்.

நான் தொழும் பாயில் இருந்த போது நபியவர்கள் வெளியே சென்றார்கள். திரும்ப வந்த போது நான் அங்கேயே இருந்தததைப் பார்த்த நபியவர்கள் ‘நான் வெளியேறியதில் இருந்து இங்கேயே இருக்கின்றாயா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘நான்கு வார்த்தைகளை மூன்று முறை கூறினால் அது அந்த நன்மையைப் பெற்றுத் தரும்’. அவை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத கல்க்கிஹி வரிழா நப்சிஹி வ ஸினத அர்ஷிஹி வ மிதாத கலிமாதிஹி (பொருள் : அல்லாஹ் தூய்மையானவன், அவனது படைப்புகளின் எண்ணிக்கையளவு, அவன் பொருந்திக் கொண்ட அளவு, அவனது அர்ஷின் தராசு அளவு, அவனது வார்த்தைகளின் அளவுக்கு அவனைப் புகழ்கின்றேன்). என்றார்கள். அறிவிப்பவர் : ஜுவைரிய்யா (ரலி) அவர்கள். நூல் : ஸஹீஹ் இப்னு ஹுஸைமா. – 753

அன்னை ஜுவைரிய்யா (ரலி) அவர்களின் வாழ்வில் கிடைக்கும் இந்தப் படிப்பினையை நமது பெண்களும் கடைப்பிடிக்குமிடத்து அதில் அதிக நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

மார்க்கமுள்ள பெண்ணே தனது கணவனின் வெற்றிக்கு காரணமாக இருப்பாள்.

இதை நபியவர்களின் ஹதீஸில் இருந்து நாம் அறிய முடியும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (புகாரி –5090)

மேற்கண்ட நபி மொழியில் திருமணம் முடிக்கத் தகுதியான பெண்ணைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது மார்க்கம் உள்ள பெண்ணை மணமுடிக்கும் படி ஏவுகின்றார்கள். காரணம் மார்க்கத்துடன் வாழும் ஒரு பெண்மணிதான் சுவர்க்க வாழ்வை நேசித்து அதற்காக தனது வாழ்வை அமைத்துக் கொள்வாள். அப்படிப் பட்ட பெண்களாக நம்முடைய பெண்கள் வாழ்வதுடன், அது போன்று பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். அவள் தான் ஆணின் உண்மை வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். ஆதலால் இஸ்லாத்தை தெளிவாகவும் பிடிப்பாகவும் பின்பற்றும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

தொகுப்புக்கு உதவிய தளங்கள்: http://www.tamililquran.com 

அதிரைநிருபர் பதிப்பகம்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு