Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மெளனம் பேசியதே.... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2015 | , , , , , ,

இது எல்லோர் மனதிலும் புகுந்திருக்கும் வலி. நிவாரணத் தைலம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் குறுக்கில் படுத்திருக்கும் குழந்தையை தாண்டாத மெளனப்போராட்டம்.

பிறந்து பின் பள்ளி செல்லும் வரை பெற்றோருடைய விலங்கு, பின் பள்ளிப் பருவத்தில் கற்பனையில் வாழும் காலங்களில் கனவுகளின் விலங்கு, பின் மாயம் கலையும் முன் வாழ்க்கையின் அடிவாரத்தில் மனைவியின் விலங்கு... காலம் ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் தொடங்க பிள்ளைகள் பின் தொடர உறவுகளின் விலங்கு... என்றாவது ஒருநாள் வானம் வெளுக்குமா, அதன் திசை நோக்கி நடந்து எழுத மை வாங்கும் திராணி வாங்கி   விட்டுப்போன வாழ்க்கையை நிரப்புவோமா?

இத்தனை பயணங்களிலும் காரை நிறுத்தி வேப்பமரக் காற்றில் பாய் விரித்து படுக்கும் தனிமையை எங்கு தொலைத்தோம். 

மலை மீது ஏறி நுனிப்பாறையின் விளிம்பில் நின்று அகன்ற பள்ளத்தாக்கை முகத்துக்கு முன் நிறுத்தி எப்போது கத்தித்தீர்த்தோம். 

காற்றின் சீற்றத்தில் ஏரியில் வரும் தொடர் அலைகளை எப்போது கால் நனைக்க கடைசியாக நின்றோம்.

பூமியில் காய்த்த பிரச்சினைகளால் வானத்து மேகங்களும் நம் வாழ்க்கையை விட்டே கண்காணா தூரம் போய் விட்டதா?.

மீண்டும் ஒரு நாள் மறுபடியும் பிறந்து வந்தா கரும்பலகை பார்த்து பள்ளியில் உட்காரப்போகிறோம்.

கொட்டும் அருவியில் குளிக்கும்போது அருவியை மீறி சத்தம் போட்டதுண்டா?

எப்போதாவது ஒரு நாள் கண்ணுக்கு கரை எட்டா தூரம் கடலுக்கு போய் அசையாத படகில் படுத்துக் கொண்டு மாலை நேரத்தில் மங்கும் வெளிச்சத்தில் மின்னல் நடனம் பார்த்து தூரமாய் கொட்டும் மழை பார்த்ததுண்டா?


விளையாத நிலத்துக்காக மழை வேண்டி இறைவனிடம் மண்றாடியது எப்போது?.  

மருந்தை யாசிக்கும் நோயாளிக்கு பணம் தந்து பிணி போக்கி மகிழ்ந்தது எப்போது.?

இரவின் மங்கிய வெளிச்சத்தில் விரும்பி பாடிய பாடல்கள் எப்போது.

வாழ்க்கையின் விசை தொலைபேசியைக்கூட அதன் விருப்பத்துக்கும் அழைப்புக்கும்தான் தொட வைக்கிறது. என் விருப்பம் மெளனிக்க நித்தம் அழைத்து அடிமையாக்கும் தொலைபேசியின் சத்தம் அற்ற நட்ட நடுக்காட்டில் என் கால்கள் மற்றும் கற்பனையில் நடக்க வழக்கம்போல், “வரும்போது பிரட் வாங்கிட்டு வாங்க வில் கற்பனை சுகம் அனைத்தும் சரிந்து விழும் சீட்டுக் கட்டாய்.

எப்போதாவது ஒரு முறை கேட்கும் பழைய பாடலிலும், சின்ன வயதில் பயன்படுத்திய சென்ட்டின் வாசனையில்  தொலைந்து போன இளமையும் , பிள்ளைகளின் கனவை சுமக்க நாம் பொதிகழுதை ஆகிப்போன சூழ்நிலையும் கனவுகளில் மட்டும் வாழசொல்கிறது. விடுமுறையின் விடிகாலை போல் உற்சாகம் தருகிறது. 

உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் பார்ப்பது தர்மம் போடும் மக்களின் கால்களைத்தான், முடி வெட்டுபவர் பார்ப்பது என்னவோ நடப்பவர்களின் தலையை மட்டும் தான்...எல்லோருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பின்னப்பட்ட வலையில் நாம் மட்டும்தான் வாழ மறந்து நமக்காக வாழ்கிறோமா? இலக்கு இல்லாமல்..
 
தேர்வு முடிந்தும் பள்ளிக்குப்போகும் மாணவனாய் மனிதனை மாற்றியது எது?, பின்னப்பட்டது  எதுவும் பிரியாமல் இருக்கிறது, மனிதன் மட்டும் கலைத்து போடப்பட்டானா?.

இனிமேலாவது நம் மனதுக்கு உணவளிப்போம், வயிற்றை நிரப்பியது நாட்களை நகர்த்தவல்ல.நாம் நகராமல் நங்கூரம் போட்டவர்களை அடையாளம் காண்போம்.

மழையில் ஒருமுறையேனும் மொத்தமாக நனைந்து பார்ப்போம்.

சுதந்திர உணர்வுகளை எதில் எல்லாம் தொலைத்தோம்?...
யாரோ ஒருவன் வானத்திலிருந்து குதிப்பதை வேடிக்கை பார்த்து..
யாரோ ஒருவனின் பயணக்கட்டுரை படித்து
யாரோ ஒருவன் ஆழ்கடல் அமிழ்ந்து பார்த்த வர்ண ஜாலங்களில்
யாரோ ஒருவன் சைக்கிளில் உலகம் சுற்றிய செய்தி படித்து...
யாரோ ஒருவனின் பனிமலை ஏற்றத்தை பார்த்து
யாரோ ஒருவனின் பச்சைக்கம்பள வயல் பார்த்து.
யாரோ ஒருவனின் செயல் பார்த்து சொக்கும் நாம் எப்போது நமக்காக வாழப்போகிறோம்.

இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம்  சுவாசிப்போம்...


நாளை இதுவே பூமிப்பரப்பை உயரத்திலிருந்து பார்க்கும் சுகந்த  காலங்களுக்கு ஆரம்பமாய்..

உழைத்து களைத்தவர்களின்  வியர்வை துடைக்க துண்டு எடுத்த தரவும் பழைய லெட்ஜர் பார்த்து சேவை செய்யும் இந்த நவீன உலகில் நாம் ஒரு நாள் வாழ்வோம் என்று காத்திருந்தே காலத்தை போக்கிவிடக் கூடாதென்றே இதை எழுதினேன்.

மனசு முழுக்க டன் கணக்கில் கோபத்தையும், வெறுப்பையும் சுமந்து கொண்டு நாம் வாழ முடியாது.

செத்தவனின் கதையை ஒரு வாரத்துக்கு மேல் பேசினாலே 'அலவு வலிக்குதப்பா' என்று ஆதங்கப்படும் உலகம் இது. இது தெரியாமல் உயிரோடு இருக்கும்போது மட்டும் ஏன் நமக்கு ஒரு நூற்றாண்டு பிடிவாதம்.

உங்கள் நடை பாதையெல்லாம் முள்ளை கொட்டியவர்களை மொத்தமாக மன்னித்து விடுங்கள்.  

உங்கள் முதுகுக்கு பின்னால் மண்வாரி வீசி முகத்துக்கு முன்னால் மலர் தூவியவர்களை புன்னகையோடு கைகுலுக்குங்கள். 

குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.

தூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.

தனிமையும் மெளனமும் உங்களுக்கு மட்டும் உரிய பங்கு போட முடியாது சொத்து.  

இன்றையிலிருந்து உங்களுக்காக வாழுங்கள்.

ZAKIR HUSSAIN

7 Responses So Far:

Iqbal M. Salih said...

எளிமையான எழுத்தில், நண்பனின் அருமையான கருத்து!
புத்துணர்வு தரும் புகைப்படம்!

Ebrahim Ansari said...

ஒவ்வொருவர் இதயத்திலும் ஒரு சிறு துளை போட்டாவது செலுத்தப்படவேண்டிய கருத்துக்கள்.

பாராட்ட வார்த்தைகளை தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் வருகிறேன். அல்லது கிடைத்தால் வருகிறேன். இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

எந்த வரிகளை தொடுவது எந்த வரிகளை விடுவது என்று தெரியாமல் வாசகனை தவிக்கவைக்கும் வளமான தத்துவம் சொல்லும் முத்தானவரிகள்.சிந்தனைகோணம் சிந்தையைக்கிள்ளுகிறது.வாழ்த்துகள்

sheikdawoodmohamedfarook said...

//காற்றின் சீற்றத்தில் ஏரியில்வரும் தொடர் அலைகளை கால்நனைக்க எப்போது கடைசியாக நின்றோம்.//ஒருபோதும் இல்லை; எரிதான் பட்டாபோட்டு அடுக்குமாடிவீடா போச்சே!

sabeer.abushahruk said...

//குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.//

//தூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.//

அமைதியான ஆனந்தமான வாழ்க்கைக்கான ஆத்திச்சூடி

Unknown said...

இக்கட்டுரையின் சொற்றொடர்களை உடைத்து உடைத்து (புதுக் கவிகள் எழுதுவது போல்) எழுதினால், இதுவும் புதுக்கவிதை தான்.

Riyaz Ahamed said...

சலாம் இதெல்லாம் எப்படி ஜாகிரு,ஒங்கிட்டே மாத்திரம் நடு இரவுலெ கதவை தட்டி மோகினி ஏதும் சொல்லிட்டு போகிறதா?இந்த மாதிரி கட்டுரை பார்த்ததே இல்லை சூப்பர்னு எல்லோரும் சொல்லவது போல் சொல்ல தோனலெ ம்ம் அதைவிட மேலெ மேலெ...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு