தொடர் - ஒன்பதுலிருந்து...
ஜனவரி-மே, 1857 இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எனக் கூறப்படுகின்றது. இதனை வரலாற்று நூல்களிலும் மேற்கு நாடுகளின் எண்ணங்களிலும் "இந்திய சிப்பாய்க் கலகம்" எனக் கூறி இருப்பதனால், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் 1757 லேயே வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற பிலாசிப் போரே முதல் சுதந்திர போர் ஆகும். ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் அரசுமுறையான ஆக்கிரமிப்புக் கல்லை இந்திய மண்ணில் நட்டது. இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது என்பதுதான் வரலாறு ஏற்றுக் கொண்ட உண்மை. ஆகவே மேற்கில் போர்த்துகீசியரை எதிர்த்து சிந்தப் பட்ட முதல் ரத்தத்துளியும் கிழக்கில் ஆங்கிலேயரை எதிர்த்து சிந்தப்பட்ட முதல் ரத்தத்துளியும் முஸ்லிம்களுடையதுதான் என்பது வரலாற்றில் மதச்சாயம் பூசி மறைக்க முயல்வோரின் முகத்திலும் முதுகிலும் எழுதப் பட வேண்டிய உண்மை வரலாறு ஆகும்.
The First War of Indian Independence is a term predominantly used in India to describe the Indian Rebillion of 1857 It is also known by a number of other names such as the Great Rebellion, the Indian Mutiny, the Sepoy Rebellion, the Sepoy Mutiny the Revolt of 1857, and the Uprising of 1857.
என்பதுதான் உண்மைக்கு மாறாக நாம் மனப்பாடமாக படித்து எழுதிய பாடம். ஆங்கிலேயர் இந்தியாவை கபளீகரம் செய்யத் தொடங்கக் காரணமாக இருந்தது ஆங்கிலேயர் வர்த்தக முக்காடு போட்டுத் தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி என்பதாகும். இந்தியாவின் கிழக்கே இருந்தது வங்காளம் அதன் தலை நகரம் கல்கத்தா. இந்த மறைக்க முடியாத உண்மையை மனதில் வைத்துக் கொண்டு கேளுங்கள் மாவீரன் சிராஜ்- உத் – தெளலாவின் கதையை.
வரலாற்றுச் சந்தையில் ஒரு சுற்று சுற்றி வருவோம் வாருங்கள்.
Trade Follows Flag அதாவது வணிகம் என்கிற பசுத்தோலை போர்த்திக் கொண்டே நாடுகளை காலணி ஆதிக்கத்துக்குக் கொண்டு வரும் புலிதான் ஆங்கிலேயரின் கொள்கை என்பதை பறைசாற்றும் வரலாற்றுக் கலைச்சொல்லே Trade Follows Flag என்பதாகும். அதன்படி தனது ஆக்கிரமிப்பு அரசியலுக்கு போட்டுக் கொண்ட முகமூடியே ஆங்கிலேயருடைய வணிகக் கொள்கையாகும். இந்த வகையில் இவர்கள் சுட்ட, சுருட்டிய, ஏப்பம் விட்ட நாடுகள் ஏராளம். எங்கே போனால் எதை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்பது சாதாரணமான வணிக நடைமுறை . ஆனால் வெள்ளைக்காரர்கள் என்று சொல்லப் பட்ட கொள்ளைக் காரர்கள் எங்கே போனால் எதைச் சுருட்டலாம் - புரட்டலாம் - எதை எடுத்து இடுப்பில் சொருகலாம் - யாரைப் பிரிக்கலாம் - எங்கே கலகமூட்டலாம் - எந்த அப்பத்தைப் பிரித்துக் கொடுப்பதில் குரங்காக செயல்படலாம் -எந்தக் குளத்தை குழப்பிவிட்டு மீன் பிடிக்கலாம் – என்பதே ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆப்ரிக்க மக்களை அடிமைகளாக்கினார்கள்- அங்கிருந்த தங்க சுரங்கங்களை தங்களுடையதாக ஆக்கினார்கள்- அமெரிக்காவை அடிமைப் படுத்தினார்கள் தூரக் கிழக்கு நாடுகள் முதல் ஆசியாவின் அனைத்து நாடுகளையும் சுரண்டினார்கள்- சூர்யன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அந்த வகையில் அவர்களின் கண்ணில் பட்ட அப்பாவிகள் வாழும் வளம் மிக்க நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை.
ஆனால் வரலாறு, ஒரு உண்மையை ஒப்புக் கொள்ளும். ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் பேராசையின் ஆக்டோபஸ் கரங்கள் இந்தியாவின் மீது படரத் தொடங்கியது அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்துவிடத் தொடங்கிய மொகலாயப் பேரரசுக்குப் பிறகே. அதுவரை இவர்களால் இந்தியாவை நோக்கி வாலாட்ட முடியவில்லை. காட்டு மல்லி பூத்து இருந்தாலும் காவல்காரனாக மொகலாயர் காத்து இருந்ததால் ஆங்கிலேயன் என்கிற ஆட்டம் போட்ட மயிலை காளை தோட்டம் மேயப் பார்க்க முடியவில்லை. மொகலாய அரசின் வீழ்ச்சியின் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஒட்டு மொத்த இந்தியாவை கட்டி ஆளும் தகுதியும் தன்மையும் படைத்த வேறு எந்த அரசும் ஏற்படவில்லை. கீரைப் பாத்தி நாடுகள் தங்களுக்குள் அதிகாரத்துக்காக அடித்துக் கொண்டது ஆங்கிலேயருக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆனது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உண்மை ஆயிற்று. இந்தியா வேலி இல்லாத தோட்டமானது. அதனால் ஆங்கில மயிலக்காளை இப்போது ஆட்டம் போட்டுத் தோட்டம் மேயப் பார்த்தது.
ஆக, இந்த சூழ்நிலைகலைப் பயன்படுத்தி ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி, இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கதையாக, ஆட்சியின் மேலும் குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. “ கம்பெனி என்பது வாங்கவும் விற்கவும் வந்த வர்த்தக ஸ்தாபனம். அதற்குள் அடங்க வேண்டியது பொருள்கள் ; புருஷர்கள் அல்ல” என்கிற வசனங்கள் ஒலிக்காத காதுகளே ஒரு காலத்தில் இல்லை. கிழக்கிந்தியக் கம்பெனி என்று மெல்லத் தொடங்கி பொருள்களை வாங்கி விற்பதில் தொடங்கி இந்திய நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக ஏப்பம் விடத்தொடங்கினார்கள்.
தங்களின் ஆதிக்கப் பசிக்கு இரையாக்கிக் கொள்ளும் செயலுக்கு ஆரம்பமாக கடற்கரைப்பட்டினங்களையே நோக்கி கண் வைக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் ஆளும் திராணியற்ற அரசர்களை விலைக்கு வாங்கி தங்களின் ஆதிக்கக் கணக்கைத் தொடங்கினர். தங்களின் வர்த்தகக் குடியேற்றங்களை கடற்கரைப் பட்டினங்களில் ஏற்படுத்திக் கொண்டனர். 1612 ஆம் வருடம் சூரத்திலும் 1616- ல் மசூலிப் பட்டினத்திலும் 1633 –ல் ஹர்ஹர்பூரிலும் 1640 ல் சென்னையிலும் 1669- ல் மும்பையிலும் 1686- ல் கல்கத்தாவிலும் தங்களின் வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினார்கள்.
உலகெங்கிலும் அந்நிய நாட்டின் மூலதனம் இப்போதும் வரவேற்கப் படுகிறது. அப்படி மூலதனம் இடும் எவரும் தங்களின் முதலீடுகளைத்தான் பணமாகவோ அல்லது பொருளாகவோ அந்தந்த நாடுகளில் முதலீடு செய்வார்கள். இத்தகைய முதலீடுகளுக்குரிய தேவையான அனுமதி மற்றும் உரிமைகளைத்தான் தாங்கள் பிறந்த மற்றும் வணிகம் செய்யும் நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலேயன் கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கும்போதே தங்களுக்காக ஒரு கப்பற்படையை வைத்துக் கொள்ளவும் , தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடமிருந்து உரிமை பெற்று இருந்தார்கள். இதன் விளைவாக முதலில் வங்காளத்தில் (அன்றைய வங்காளம் என்பது இன்றைய பங்களா தேசமும் சேர்ந்தது) இருந்த சிட்டாகாங்க் துறைமுகத்தைத் தாக்கி அதில் தோல்வி கண்டார்கள்.
1686- ல் கல்கத்தாவில் கால்பதித்த வெள்ளையர்கள் 1690 –ல் கல்கத்தாவின் ஹூக்ளி நதியின் கரையில் தங்களின் பண்டங்களை பாதுகாக ஒரு கிடங்கும் அத்துடன் ஒரு கோட்டையும் கட்டினார்கள். இந்தக் கோட்டையின் வரலாற்றுப் பெயர் வில்லியம் கோட்டை என்பதாகும். மொகலாய மன்னராக இருந்த பாருஷியாவுக்கு மருத்துவம் பார்த்த ஆங்கிலேயரான அமில்ரன் வில்லியத்தின் நினைவாக இந்தக் கோட்டை கட்டப் பட்டதாக சொல்லிக்கொண்டார்கள். ஆங்கிலேயரின் சூழ்ச்சியின் அடையாளமாக இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு சிறைச்சாலையைக் கட்டினார்கள். அந்த சிறைச்சாலை 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் உள்ள சிறிய அறைகளைக் கொண்டது. இப்படி ஒரு சிறையை அவர்கள் கட்டியதன் நோக்கம் தங்களை எதிர்ப்பவர்களைப் பிடித்து இந்த சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தத்தான். ஆனால் இறைவன் போட்ட கணக்கு வேறாக இருந்தது. வங்காளத்தின் வீரன் சிராஜ் - உத் -தெளலா இந்த சிறைச்சாலையில் தங்களையே அடைக்கப் போகிறார் என்பதை ஆங்கிலேயர்கள் அறியவில்லை. அதைப் பற்றி பின்னர் காணலாம். இப்போது இப்படியெல்லாம் ஆங்கில ஆதிக்கம் விரிவடைந்து கொண்டே சென்றது என்பதை மட்டும் விளங்கிக் கொள்ளலாம்.
சென்னையிலும் மும்பையிலும் இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி காலூன்றத்தொடங்கினார்கள். ஆனால் கல்கத்தாவில் அவர்களது ‘பாச்சா’ பலிக்கவில்லை; பருப்பு வேகவில்லை. இதற்குக் காரணம், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்ப்பந்தங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் எதிராய் இந்த மண்ணில் முதுகெலும்புடன் முதலில் நிமிர்ந்து நின்றவர்தான் சிராஜ் - உத் –தெளலா.
ஆப்கானியப் படை வீரர் அலிவர்த்திகான் 1726 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து இந்தியா வந்து வங்காளத்தின் படையில் சேர்ந்தார். காலம் அவரை வங்காளத்தின் நவாப் ஆக்கியது. அலிவர்த்திகானின் மறைவுக்குப் பிறகு அவரது பேரர் ஆன சிராஜ் - உத் -தெளலா 1740-ல் தனது 24 ஆம் வயதில் இள ரத்தத்தின் துடிப்போடு வங்காளத்தின் நவாப் நாற்காலியின் அதிபதி ஆனார். இவர் நவாப் ஆனதும், எதிர்ப்பே இல்லாமல் எங்கும் சுருட்டிக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்திய ஆவலுக்கு பல வகைகளில் இடிகளை இனாமாக இறக்க ஆரம்பித்தார். ஆங்கில ஏகாதிபத்தியம் கலக்கம் அடைந்தது.
சிராஜ் - உத் –தெளலா வங்காளத்தின் நவாப் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. ஆகவே அவரது அரசவையில் இருந்த சிலரை இரகசியமாக சந்தித்து , ஆசைகாட்டி சிராஜ் - உத் –தெளலாவை பதவியில் இருந்து கவிழ்த்துவிட திட்டம் தீட்டினார்கள். இந்த விபரம் சிராஜ் - உத் –தெளலாவுக்குத் தெரியவந்தது. அவரது கோபத்தைக் கிளப்பியது. அத்துடன் பிரிட்டிஷாரின் மூன்று முக்கியமான செயல்கள் சிராஜ் - உத் –தெளலா உடைய ஆத்திரத்தை அதிகமாக்கியது.
முதலாவதாக, வில்லியம் கோட்டையில் அவர்கள் செய்த மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவர்கள் போர்க் கைதிகளை அடைக்கும் விதமாக செய்தார்கள். இந்தச்செயல் சிராஜ் - உத் –தெளலாவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் நவாப் ஆன தன்னிடம் - இப்படி தனது ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கட்டிட மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசின் அனுமதியை பிரிட்டிஷார் கேட்காதது ஏன் என்று சிராஜ் - உத் –தெளலா கேள்வி எழுப்பினார். தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் வளர்ந்த பிரிட்டிஷாருக்கு இது அதிசயமாக இருந்தது. இந்த இந்திய மண்ணிலும் தங்களை எதிர்க்க ஒருவனா என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முளையிலேயே கிள்ளி எறியும் திட்டம் முளைவிட்டது.
இரண்டாவதாக பிரிட்டிஷாருக்கு அனுமதிக்கப் பட்ட வர்த்தக சலுகைகளை அவர்கள் மீறி செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தினார் நவாப் சிராஜ் - உத் –தெளலா. பிரிட்டிஷாரின் அத்துமீறலான செயல்களால் அரசுக்கு சுங்கம் மூலம் வரவேண்டிய வரிகள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப் பட்டன என்கிற குற்றமும் பிரிட்டிஷார் மீது சுமத்தப் பட்டது.
மூன்றாவதாக, சிராஜ் - உத் –தெளலா உடைய அரசுக்கு துரோகம் இழைத்து அரசுப் பணத்தைக் களவாடி கையாடல் செய்த கிருஷ்ணதாஸ் மற்றும் ராஜிவ்பல்லவ் ஆகிய சிலருக்கு தங்க இடமும் பொருளும் கொடுத்து அவர்களை நவாப்புக்கு எதிராக தூண்டிவிட்டு தங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொண்ட செயல் நவாபின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.
இத்தகைய காரணங்களால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவுக்கும் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் உறவு சீர்கெட ஆரம்பித்தது. இந்நிலையில் தங்களின் ஆரம்ப கால அனுமதியை வைத்து ஆங்கிலக் கடற்படையை கல்கத்தாவில் குவிக்க ஆரம்பித்தனர் . படைக் குவிப்பை நிறுத்தும்படி நவாப் சிராஜ் - உத் –தெளலா விடமிருந்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த எச்சரிக்கைக்கும் கிழக்கு இந்தியக் கம்பெனியினர் கேளாக்காதினர் ஆயினர். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற ஆணவம் மிக்க மனோநிலை நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் கோபத்தைத் தூண்டியது . உடனே ஆங்கிலேயர் கட்டிய நாம் மேலே குறிப்பிட்ட வில்லியம் கோட்டையை தனது படைகளைவிட்டு ஆக்ரமிக்க உத்தரவிட்டார். ஆங்கிலேயர் கதிகலங்கினர். இந்த முற்றுகையில் இருந்து தான் மட்டும் ஹூக்ளி நதியில் நின்ற ஒரு கப்பலில் ஏறி தப்பித்து சென்றான் அட்மிரல் வாட்சன் என்கிற தளபதி.
அதற்குப் பின்தான் வரலாற்றில் Calcutta’s Black Hole என்று குறிப்பிடப்படும் “கல்கத்தா இருட்டறைத் துயர் நிகழ்ச்சி “ என்பது நடந்தது. எந்த ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்க்கும் இந்தியர்களை அடைத்துவைத்து சித்தரவதை செய்ய சின்னஞ்சிறு அறை வைத்து சிறைச்சாலை காட்டினார்களோ அந்த சிறைச்சாலை அறைக்குள் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் உத்தரவின் பேரில் வில்லியம் கோட்டைக்குப் பொறுப்பாளராக இருந்த ஹால்வேல் உட்பட 146 ஆங்கிலேயர்களும் கைது செய்யப்பட்டு கடும் கோடை இரவில் 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் இருந்த சிறிய அறையில் அடைக்கப்பட்டு வினை விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்கிற இலக்கணத்துக்கு இலக்கியமாக அடைபட்ட 146 ல் 22 பேர்களைத் தவிர அனைவரும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி எத்தனை இந்திய உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் காவு வாங்கப் பட்ட கணக்கு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்தக் கணக்கைத் தொடங்கி வைத்தவர் நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆவார்.
அடுத்த நாட்டினரை அடுக்கடுக்காய்க் கொன்று குவிப்பவன், தன் நாட்டினர் செத்தால் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்கிற நிலைக்கு ஆளானான் ஆங்கிலேயன். ராபர்ட் கிளைவ், அட்மிரல் வாட்சன் போன்றோர் சென்னையில் இருந்து கல்கத்தாவுக்கு விரைந்தனர். ஆங்கிலேயரின் போர்ப் படை ஒன்றும் அணி வகுத்தது.
அடுத்துக் கெடுத்தலிலும் ஆசைகாட்டி மோசம் செய்வதிலும் ஆங்கிலேயருக்கு நிகரில்லை என்பது வரலாறு நிரூபணம். அந்த வகையில் நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் உறவினர் மற்றும் ஆலோசகர் மீர் ஜாபர் என்பவர் ஆங்கிலேயர் விரித்த சதிவலையில் சிக்கினார். நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் கவனத்துக்கு உளவாக சொல்லப் பட்டது. ஆங்கிலேயர் வஞ்சகமாக நவாப் சிராஜ் - உத் –தெளலா வுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டே படை திரட்டினர். உடன்படிக்கைக்கு எதிராக, ஆங்கிலேயப் படை திரட்டப்பட்டதால் வீரன் நவாப் சிராஜ் - உத் –தெளலா 1757 – ல் வெள்ளையர் முகாமிட்டு இருந்த கல்கத்தா துறைமுகத்தை ஆவேசத்துடன் தாக்கினார்.
நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆங்கிலேயருடன் பொருதிய இந்தப் போர் பிளாசிப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. மேலும் ஆங்கிலேயரை எதிர்த்து இந்த மண்ணில் நடந்த முதலாவது மிகப் பெரும் போரும் பிளாசிப் போர்தான். இந்தப் போரில் ராபர்ட் கிளைவின் மூவாயிரம் பேர்களை மட்டுமே கொண்ட ஆங்கில மற்றும் அடிவருடிகளின் படை , நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் பதினெட்டு ஆயிரம் குதிரைப் படையையும் ஐம்பது ஆயிரம் காலாட்படையையும் தோற்கடித்தது. இதற்குக் காரணம் மீர் ஜாபரின் துரோகம் ஒரு பக்கம் ஆனாலும் இயற்கையும் சதி செய்தது. பிளாசிப் போரில் நான்கு மணிநேரம் பெய்த இடைவிடாத மழையால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் படையின் வெடி மருந்துகள் நனைந்து போய் வெடிக்க மறுத்தன. நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் வீரம் இயற்கைக்கு முன் மண்டியிட்டது. அன்று பெய்த மழை இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றியது. இல்லாவிட்டால் ஆங்கிலேயர்கள் அன்றே அழிக்கப் பட்டு இருப்பார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.
போர்க்களத்தில் துரோகிகள் செய்த சதியால் தோல்வியைத்தழுவிய சிராஜ் - உத் –தெளலா அங்கிருந்து தப்பித்து முர்ஷிதாபாத் சென்று பின் ஒரு படகில் பாட்னா சென்றார். அங்கு கைது செய்யப்பட்டார். இறுதியில் மீர் ஜாபரின் மகன் மீரான் ஜாபர் என்கிற ஆங்கில அடிவருடியின் உத்தரவு பெற்ற அலி பேக் என்பவனால் நவாப் சிராஜ் - உத் –தெளலா என்கிற வங்கத்தின் சிங்கம் July 2, 1757 அன்று கொல்லப்பட்டது.
வங்காளத்தில் நவாப் சிராஜ் - உத் –தெளலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது முதல் அடிக்கல்லை இந்தியாவில் நட்டது. இந்தியாவில் முதல் பிரிட்டிஷ் ஆட்சி நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆண்டு மாண்ட வங்காளத்தில்தான் நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் தங்களின் ஆதிக்கம் நிலைபெற்ற நாள் என்று ஆங்கிலேயரும் ஆணவத்துடன் குறிப்பிடுகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் சந்திக்கலாம்.
இபுராஹீம் அன்சாரி
===============================================
எழுத உதவிய குறிப்புகள் :-
Is the Black Hole of Calcutta a myth?
The Parliamentary history of England from the earliest period to the year 1803.
Akhsaykumar Moitrayo, Sirajuddaula, Calcutta 1898.
===============================================
1 Responses So Far:
//அன்று பெய்தமழைஇந்தியாவின் சரித்திரத்தையை மாற்றியது// சமிபத்தில் சென்னையில்பெய்தமழையும் ஆட்சியை மாற்றும் போல்போல் தெரிகிறதே!
Post a Comment