Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்று பெய்தது மழை ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2015 | , ,


ஏன்தான்  அன்று
அப்படிப் பொழிந்ததோ ?

நீர் நிலையால் பள்ளமெல்லாம் வழிந்ததோ?
நிலை குழைந்து
மக்கள் வாழ்வின் ஒரு பகுதி அழித்ததோ?

பருவம் தப்பிய நேரமல்லவே அன்றும்!

பருவத்தில் பிழை செய்யும்
மனித பிள்ளையல்லவே மழை!

இருந்தும் எல்லா இயல்பின் உருவம்
சிதைக்கும் கோபம்

ஈவு இரக்கம் இன்றி
ஒரு இனத்தின் மேல்
இத்தனை சினம்?

பணம் இருந்தவரும்
இல்லாதவரும்
பெரும் அவதிக்கும் ஆளாகி
ஆங்காங்கே பிணம்!

மானிடா!
நீர்  நிலையில்
நீ குடிபுகுந்ததால் -அது
உன்குடியில் புகுந்தது

நீர் அடித்து நீர் விலகாது - ஆதலால்
நீரில் உன் வாழ்வாதரம்
அடித்து போகப்பட்டது!

கைவிடப்பட்ட நிலையில்
கை கொடுத்தது மனிதாபிமானம்!
அன்றுதான் தெரிந்தது
பாய்'அன்னியன் அல்ல
அன்பில் பினைந்தவன் என்று!

மேல் புறத்தில் மாட்டிய மனிதருக்கு
கீழ் இறங்கி தப்ப
தன் தோள் கொடுத்தான்!

பள்ளத்தில் படும் வெள்ளத்தில் மாட்டியவர்களை
படகில் ஏற்றிவிட்டான்!

அன்று மீட்பு படகெல்லாம்
பாய்"மரக்கப்பலாய் காட்சி அளித்தது!

துயரம் சிறிது சிறிதாய்
வடிய வடிகாலாய் இருந்தான்
என் சகோதரன்!

ஆனால்
கைபர் போலான் கனவாய் வழியே
 நாட்டில் புகுந்தவர்கள்
கைகட்டி மட்டுமே இருந்தனர்.

இயற்கை பாடம் நடத்திவிட்டது
இனியேனும் நிலம் அப"கரிப்பை"
துறப்போம்!
மனிதாபத்தை மதிப்போம்!

CROWN

6 Responses So Far:

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய க்ரவ்ன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மழை எப்போதும் நன்மையே பயக்கும்; அது கன மழையோ தூறலோ, நன்மையே.

ஆனால், பெய்த மழையை வடிய விடாமல் பிடித்து நிருத்தி வெள்ளமாக்கிய பாவம் மனிதர்களையே சேரும் என்பதை நல்ல தமிழில் வடித்துத் தந்திருக்கிறீர்கள்.

நன்றி, வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

//அன்று மீட்பு படகெல்லாம்
பாய்"மரக்கப்பலாய் காட்சி அளித்தது!
//

க்ளாஸ் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு !...

உன் காட்டில் மழை(டா)ப்பா !

ZAKIR HUSSAIN said...

கிரவுன்.....எப்போதும் உங்களின் தமிழ் மீது மிகுந்த விருப்பம் எனக்கு.

வெள்ளம் சோகம் தந்தாலும் உங்கள் தமிழில் உண்மையை கொண்டுவந்து கொட்டியிருக்கிறது.

முஸ்லீம்கள் செய்த உதவியை முகநூல்கள் அதிகம் பகிர்ந்தாலும்....இன்னும் முஸ்லீம்கள் மீது வெறுப்பை கொட்டுபவர்கள் எப்படியாவது வழி கண்டுபிடித்து குற்றம் சொல்கிறார்கள். கட்சி வேட்டிகள் அனைத்தும் முஸ்லீம்களின் தியாகத்தில் ஒழிந்து கொண்டது.

ஹெச் ராஜா போன்றவர்கள் அயன் கலையாமல் மண்வெட்டி பிடித்து போஸ் கொடுக்கிறார்கள்.

இந்த வெள்ளத்தில் பல விசயங்கள் ஒரு முடிவுக்கு வரும் என நினைக்கிறேன்.

1. இனிமேல் எந்த ஹீரோவும் நடந்து வரும் சீனில் மக்கள் காத்து நின்று உதவி கேட்பது.

2. கட்சிகள் நாங்கள் இருக்கிறோம் உங்களை காப்பாற்ற என்று மேடை போட்டு பேசுவது.

3. முஸ்லீம்கள் தீவிரவாதியாக இருப்பதாக காண்பிப்பது

4. நான் மக்களுக்காகத்தான் உயிரோஉ இருக்கிறேன் என்று "பீலா" விடுவது

5. நாங்கள் 'மக்கள் சேவகன்/தொண்டன்" என்று வால் போஸ்டர் அடிப்பது



இப்படி பல விசயங்கள் வழக்கொழிந்து போகும்....

மீறி செய்தாலும் , மக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிட மாட்டார்கள் என நினைக்கிறேன்....
அப்படியும் நம்பினால் தமிழ்நாட்டை இனிமேல் யாரும் காப்பாற்ற முடியாது.

Ebrahim Ansari said...


//பருவத்தில் பிழை செய்யும்
மனித பிள்ளையல்லவே மழை!// பிழை செய்யும் பிள்ளையை கண்டிக்க இயலும். மழையை மனிதனால் தண்டிக்க இயலாதே!
ஒரு வரத்தை சாபமாக மாற்றிய மனிதர்களும் அரசும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! இனி இவர்கள் படிக்க வேண்டியது பாடம். அனுபவப் பாடம். தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

//இருந்தும் எல்லா இயல்பின் உருவம்
சிதைக்கும் கோபம்// மழை வாங்கியது பழிக்குப் பழி. பொறுமைக்கும் அளவுண்டல்லவா?

//ஈவு இரக்கம் இன்றி
ஒரு இனத்தின் மேல்
இத்தனை சினம்?// ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்தது இந்த இனம். ஏரி குளங்களை 'டாப்' ஆக பட்டாப் போட்டு கோடிகளைக் குவித்தது இந்த இனம். தூர்வாராமல் தூங்கிக் கொண்டிருந்தது இந்த இனம். அதனால்தான் இந்த சினம்.

//பணம் இருந்தவரும்
இல்லாதவரும்
பெரும் அவதிக்கும் ஆளாகி
ஆங்காங்கே பிணம்!// மரணம், வருமானவரிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வருவதில்லை . இது இயற்கை நடத்திய வேட்டை. ஏற்றதாழ்வு பாராத வேட்டை.

//மானிடா!
நீர் நிலையில்
நீ குடிபுகுந்ததால் -அது
உன்குடியில் புகுந்தது// உன் குடியில் தடிகொண்டு புகுந்து தண்டித்தது. இனியாவது சொல் கேட்பாயா?

//நீர் அடித்து நீர் விலகாது - ஆதலால்
நீரில் உன் வாழ்வாதரம்
அடித்து போகப்பட்டது! // ஆம். நீர் அடித்து மனிதன் சுக்குநூறாகிப் போனான்.

//கைவிடப்பட்ட நிலையில்
கை கொடுத்தது மனிதாபிமானம்!
அன்றுதான் தெரிந்தது
பாய்'அன்னியன் அல்ல
அன்பில் பினைந்தவன் என்று!

மேல் புறத்தில் மாட்டிய மனிதருக்கு
கீழ் இறங்கி தப்ப
தன் தோள் கொடுத்தான்!

பள்ளத்தில் படும் வெள்ளத்தில் மாட்டியவர்களை
படகில் ஏற்றிவிட்டான்!

அன்று மீட்பு படகெல்லாம்
பாய்"மரக்கப்பலாய் காட்சி அளித்தது!

துயரம் சிறிது சிறிதாய்
வடிய வடிகாலாய் இருந்தான்
என் சகோதரன்!// கவியரங்கத்தில் வாசிக்கப்பட்டால் கைதட்டல் வானைப் பிளக்கவைக்கும் வார்த்தை ஜாலம்.

//ஆனால்
கைபர் போலான் கனவாய் வழியே
நாட்டில் புகுந்தவர்கள்
கைகட்டி மட்டுமே இருந்தனர்.// ஆனால் வாய் கிழியப் பேசினர்.

//இயற்கை பாடம் நடத்திவிட்டது
இனியேனும் நிலம் அப"கரிப்பை"
துறப்போம்!
மனிதாபத்தை மதிப்போம்!// வழி மொழிகிறேன்.

Unknown said...

Everything get balanced !!!

சென்னையில் வெள்ளப்பாதிப்படைந்த இடத்திலிருந்து மீண்டு துபைக்கு வந்திருக்கும் என் எதிர்வீட்டைச்சேர்ந்த வயதான கணவன் மனைவி இருவரையும் இன்று சற்றுமுன் சந்தித்தேன்.

மனதளவில் சென்னை வெள்ளத்தில் பாதிப்படைந்த ஒவ்வொருவரும் மறுபடி பிறந்ததாக நினைக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் பக்கத்துவீட்டில்கூட சென்று உதவமுடியாத நிலை.

எல்லா தொலைதொடர்பு இணைப்புகளும் மின் இணைப்புகளும் அறுபட்ட நிலை.

வீட்டில் மறு வேலை சாப்பாட்டிற்கே வழியில்லா நிலை.

இன்னும் ஒருசில நாள் மழை நீடித்திருந்தால் மொத்த சென்னையும் தணணீரில் மூழ்கும் அபாயத்திலிருந்ததாம்.!!!

மனிதனிடம்(தனிமனிதன், எழை, பணக்காரன், அரசியல்வாதி) எவ்வளவோ தொழில்நுட்பம், பணம், பலம், திமிர், ஆணவம் எல்லாமிருந்தும் ஒரு மழைத்தண்ணீருக்கு முன்னால் மண்டியிட வேண்டிய நிலை...

எங்கே மனிதனின் சொல் செயல் அத்துமீறியதாக உள்ளதோ அங்கே இதே போல் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியைத்தரும் விளைவுகள் நடக்கலாம்.

Yes... Everything get balanced for correction.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.