மரணம் !?


மரணம் !?
உடலோடு உறவாடி
உயிரோடு விளையாடி
உலகாளும் மரணமன்றோ
உயிரை
உணவாக்கிச் சுவைத்திடுமே

நிகழ்வாகிக் கனவாகி
நினைவுகளை நிழலாக்கி
நிம்மதியை கொடுத்திடுமோ
நிற்கதியாய் ஆக்கிடுமோ

கண்ணுக்கு விருந்தாகி
காணும் பல காட்சியாகி
மண்ணுக்கு உரமாகி - உடல்
மக்கியதோ மரணமாகி

மரணத்தின் பிடியினிலே
மறைந்திருக்கும் நம்வாழ்வு- தக்க
தருணத்தில் வந்தணைக்கும்
தரணியெங்கும் நிலைத்திருக்கும்

ஜெகத்தினை அழித்திடவே
அகத்தினில் மறைந்து வாழும்
யுகத்தினில் நாம் காணும்
மகத்துவம் நிறைந்ததாகும்

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
உயிரறுக்கக் காத்திருக்கும்
கல்லுக்குள் தேரையாய்
காலம் முழுதும்
கடமையைச் செய்யும்

சாதியில்லை பேதமில்லை
சமத்துவமே மரணத்தின் கொள்கை
நாழிகையில் நசுக்கிவிடும்
நம்முயிரைப் பறித்துவிடும்

தோற்றத்தில் துயர் நிகழவாய்
மாற்றத்தை ஏற்படுத்தும்
தோள்சுமந்து செல்பவரும்
நாள் சுமந்து செல்வாரே

மண்ணறையில் இடமளித்து
மறுவாழ்வுக்கு வழிவகுக்கும்
மாறுபட்டு மரணிக்கும்
மனிதனை அங்கே சபித்துவிடும்

ஊராரும் உறவாரும்
உறங்காமல் பாதுகாத்தும்
உயிர்பிரிக்க நேரம் காத்து
உடல் பிரித்து மரணம் வெல்லும்

மரணத்தின் பிடியினிலே
மனிதனவன் சிக்குமுன்னே
தருணத்தில் செய்யும் அமல்
தாங்கிவரும் சுவனம் வரை

அதிரை மெய்சா

4 கருத்துகள்

crown சொன்னது…

மரணத்தின் பிடியினிலே
மனிதனவன் சிக்குமுன்னே
தருணத்தில் செய்யும் அமல்
தாங்கிவரும் சுவனம் வரை
---------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். இறவா உண்மை!

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மரண சிந்தனை ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.

//
தோள்சுமந்து செல்பவரும்
நாள் சுமந்து செல்வாரே//

எல்லோருடைய நாட்களும் குறிக்கப்பட்டுவிட்டநிலையில் பிறருக்காக தூக்கிச் செல்ல தோள் கொடுப்பவரும் தமக்கான நாட்களை சுமக்கிறார்.

அருமை!

நல்ல கவிதை மெய்சா.

Ebrahim Ansari சொன்னது…

நேற்றே சொன்னேன். இங்கே கவிதை மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

பெரும் மழை ஓய்ந்துவிட்டது கவிதை மழை பொழிந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் தம்பி மெய்ஷா வின் இந்தக் கவிதை அச்சமூட்டும் கவிதை. அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய அம்சங்களைப் பற்றிய கவிதை.

பாராட்டுக்கள்.

அதிரை.மெய்சா சொன்னது…

வருகைதந்து வாசித்து நற்கருத்திட்ட சகோ.கிரவுன், நண்பன் சபீர், இப்ராஹிம் அன்சாரி காக்கா அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.