Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 7 26

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2015 | ,


இறைவனின் அளப்பரிய அருளால் கடந்த ஆறு வாரங்களாக இந்தத் தலைப்பில் எழுதி வருகிறோம். இதுவரை நாம் எழுதிய அத்தியாயங்களை ஒரு ஒரு பழமாகக் கருதி , அதை சாறு பிழிந்து பார்த்தால் அந்த சாற்றில் இரு வகை சுவைகள் இருப்பதைக் காணலாம். ஒன்று,  முஸ்லிம்கள் பொதுவாழ்வில் ஒழுக்கம் பேணவேண்டும்- அந்த ஒழுக்கம்,  மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பின்பற்ற வழி வகுக்கும் என்பது. இரண்டாவதாக முஸ்லிம்கள் இன மத வேறுபாடு இன்றி மனித நேயம் பேணவேண்டும்- அனைவரும் அல்லாஹ்வால்  படைக்கப்பட்டவர்களே- ஒரே தாய்  தந்தையின் பிள்ளைகளே என்ற எண்ணம் கொண்டு துவேஷம் காட்டாமல் செயலாற்ற வேண்டும் என்பதே. இவ்விரு நல்ல குணங்களும் நம்மிடம் அமைந்துவிட்டால் இஸ்லாமிய அழைப்புப் பணி எளிதாகிவிடும் என்பதே  நாம் இதுவரை வற்புறுத்தி வந்த கருத்துக்களின் அடிநாதம் ஆகும்.  

நாம் இதுவரை வற்புறுத்திய  அவ்விரண்டு அம்சங்களுக்கும் நாம் எந்த அளவுக்கு நடைமுறை சாட்சியாக இருக்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்யவோ என்னவோ  தமிழகத் தலை நகர் சென்னை,  அதைச் சுற்றியுள்ள  மாவட்டங்களான காஞ்சி, திருவள்ளூர்   மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவில் முஸ்லிம்கள் நடந்து கொண்ட   முறைகளும் , மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளும் சான்றாக நிற்கின்றன.  இன மத பேதமின்றி மக்களைக் காப்பாற்றி கரை சேர்க்க பல முஸ்லிம் அமைப்புகளும் , மற்றும் தனிப்பட்ட முஸ்லிம்களும் பெருந்தொண்டாற்றி ,  இறைவனின் பொருத்தத்தை இந்த வெள்ள நீரில் தேடிப்பார்த்து நன்மைகளை வெற்றி கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

உலகெங்கும் இந்தியாவின் மதசார்பற்ற தன்மையைப்பற்றிய சந்தேக மேகங்கள் சூழுந்து இருக்கும் இந்த நேரத்தில் சென்னையின் இந்தப் பேரழிவு சூழலில்  சாதி,  மத பேதமின்றி அனைவரும் கை கொடுத்து களத்தில் இறங்கி இருப்பதும் உலகத்தின்  கவனத்தைக் கவர்ந்து இருக்கிறது. 

ஒரு சம்பவத்தை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது. சேவைக் களத்தில் திருவல்லிக்கேணியில் நின்று தொண்டாற்றும் நேரத்தில், முஸ்லிம்களால் உணவு தயாரிக்கப்பட்டு  வழங்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக  தண்ணீர்   பாட்டில்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் புரசைவாக்கம் சென்று ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் சேவா சங்கத்திடம் உதவி கேட்டு ஐந்தாயிரம் தண்ணீர் பாட்டில்களைப் பெற்று வந்து மக்களுக்கு அளித்த சம்பவம் மனதைப் புல்லரிக்க வைத்த நிகழ்வாகும். முஸ்லிம்கள் தயாரித்த பிரியாணியை தொண்டைக்குள் செல்ல வைத்ததும், வயிற்றில் செரிக்க வைத்ததும்  ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்  அளித்த தண்ணீர் என்ற      நிதர்சனம்  இதுதான் இந்தியா!  என்று உரக்க சொல்ல வைக்கிறது. யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல. களத்தில் நின்ற இந்து சகோதரர்களும்  யாருக்கு உதவுகிறோம் என்று மீனம்,  மேஷம் பார்க்காமல் ,  “பரோபகார்த்தம் இதம் சரீரம்” என்ற சம்ஸ்கிருத ஸ்லோகத்தின்    அடிப்படையில்  உதவினார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த ஸ்லோகத்தின் பொருள் : “ உயிர்களுக்கு உதவவே உயிர்ப் பிறவி எடுத்தோம்”  என்பதாகும்.    

பல உலகநாடுகள்,  இந்திய மக்களின் இந்த மனப்போக்கை  அடையாளம் கண்டு பாராட்டுவதற்கு பல பக்கங்களைத் திறந்து வைத்துப் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக , சவூதி   அரேபியாவின் முன்னணி பத்திரிக்கையான ‪ ( SAUDI GAZETTE ) சவூதிகெஜட்‬ பத்திரிகையின்  தலைமை நெறியாளர் கீழ்க்கண்டவாறு தலையங்கம் எழுதிப் பாராட்டியதை குறிப்பிடலாம்.    இந்தியாவின்  மதச்சார்பின்மையும் , வேற்றுமையில் ஒற்றுமைகாணும்  தன்மையும்   உலகை எட்டியுள்ளது. மாஷாஅல்லாஹ்.

“Temples, mosques and churches welcomed people of all faiths. Houses, offices and any safe place of refuge received with open hearts and arms those escaping the raging waters. People shared their limited resources with strangers. 

No names were asked; whether you were a Ram, Rahman, Joseph or Singh you were accepted. This is the beauty of India, a vast country of various languages and ethnic groups.

As Chennai has shown, unity, compassion and empathy are the need of the hour. The real challenges of India are poverty, disease, corruption and the deteriorating environment. That is what the focus should be on.

Overcoming these challenges can only be done when everyone feels that they are part of this great nation, forged together as a unit and proud of the heritage of centuries. ”

ஒரு நாளைப் பற்றியும் அந்த குறிப்பிட்ட நாளில் எனது இளைஞர்கள் செய்த ஒரு அரும்பணியையும் பற்றி நாம் பெருமைப்பட வேண்டி இருக்கிறது. அந்த நாள்தான் டிசம்பர் ஆறு!  இதே டிசம்பர் ஆறாம் தேதி இந்தியாவின் வரலாற்றில் ஒரு வடுவை ஏற்படுத்திய நாள் என்பதை நாம் மறக்க இயலாது. அந்த நாளில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டது. ஆனால் இறைவனின் நாட்டம்,  இந்த வருடம் அதே டிசம்பர்  ஆறு அன்று கோயிலில் தங்க வைக்கப்பட்டிருந்த பிற மத சகோதரர்களைத் தேடிப்  போய் உணவளித்தனர் முஸ்லிம்கள்.  பிரிவினை மனம் படைத்த சிலரால் ஒரு டிசம்பர் 6 மக்களைப் பிரிக்கவும் வழிபாட்டுத்தலத்தை இடிக்கவும் பயன்பட்டது. ஒற்றுமை சகோதரத்துவம் வேண்டிய சில நல்ல உள்ளங்களால் இன்னொரு டிசம்பர்   6 இணைத்து வைத்ததது; ஒருவருக்கொருவர் உதவ வைத்தது.  

அதுமட்டுமல்லாமல் வெள்ளத்தின் காரணமாக தூய்மை கெட்டு அழுக்கடைந்து துடைக்கவும் தூய்மைப்படுத்தவும் ஆளின்றிக் கிடந்த கோயில்களை எல்லாம்  அதே டிசம்பர் 6- ல் முஸ்லிம்கள் கூட்டிப் பெருக்கி தூய்மைப்படுத்திக் கொடுத்தார்கள் என்கிற செய்தியும்,  கோயில்களை சுத்தம் செய்யும் சில புகைப்படங்களை முகநூல் போன்ற சமூக வலைதலங்களில் உலகமே காண நேரிட்டதும்  நம்மை உண்மையிலேயே பெருமைப்பட வைத்துள்ளது. இனி டிசம்பர் ஆறு பாபர் மசூதி என்ற பள்ளியின் இடிப்பின் தினமாக அல்ல கோயில்களைத் துடைக்கும் தினமாக நாம் அனுசரித்து அழைப்புப் பணிக்கான அடையாளத்தூதை அமைதியாக விடுப்பதுடன் ‘இன்னா செய்தார்க்கும் இனியவையே செய்யும்’ இஸ்லாத்தின் இயல்பையும் பறைசாற்றலாம்  அல்லவா?    

இந்த செய்தியை நாம் பெருமையுடன் குறிப்பிடும் அதேநேரத்தில், ஒரு விஷயத்தை  நமது தோழர்களுக்கு கவனப்படுத்த வேண்டிய கடமையையும் கட்டாயத்தையும் உணர்கிறோம். சேவை செய்கிறோம் என்கிற ஆர்வத்தில் தோழர்கள். கோயில் வளாகங்களை சுத்தம் செய்வது தவறல்ல; ஏற்கத்தக்கது. ஆனால் சில  தொப்பி அணிந்த சகோதரர்கள் கோயில்களின் கருவறைக்குள் சென்று அங்குள்ள கடவுள்கள் என்று கருதப்படும் சிலைகளையும் தொட்டுத் துடைப்பது என்ற சேவையின் தீவிரவாதத்தில் ஈடுபடுவது எந்த அளவு மார்க்கத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாகும் என்பதை மார்க்க அறிஞர்கள்தான் விளக்க வேண்டும். நமது பணிகளின் வரையறை , கோயிலாக இருந்தாலும் துயருறும் மக்களின் இருப்பிடம்தேடிப் போகும் அளவோடு மட்டும் நின்று கொண்டால் நல்லது என்பது எனது பணிவான கருத்து. 

இதைக் குறிப்பிட இரண்டு காரணங்களை நான்  முன் வைக்கிறேன்.

ஒன்று,  இந்து சமய சகோதரர்கள் வணங்கும் கடவுள் சிலைகளை அந்த மதத்தைச் சேர்ந்த சில பிரிவினரே  தொடக் கூடாது என்று அவர்கள் சில ஆகம ஐதீக விதிகளை வகுத்து வைத்து இருக்கிறார்கள். அவ்வாறான  நிலையில் நாம் தொடுவது கூட அவர்களைப் புண்படுத்தலாம். உதவி செய்யப் போன இடத்தில் அவர்களுடைய  நெருக்கடியான நிலைமைகளைப் பயன்படுத்தி  அவர்களுடைய மத நம்பிக்கையை நாம் பதம் பார்க்க வேண்டாம் என்பதாகும். 

இரண்டாவதாக, இவ்வாறு செய்கின்ற உதவிகள் நமது ஓரிறைக் கொள்கைக்கு சோதனையாக அமைந்துவிட நாமே இடம் கொடுத்துவிட வேண்டாம் என்பதுமாகும். அத்தகைய பணிகளையெல்லாம் அவர்களிடமே விட்டுவிடலாமே!  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்    நஞ்சாகுமல்லாவா? இராமயணக் கதையில்  இலட்சுமணன் போட்ட கோட்டை மீறிய சீதையால்தானே அவளை இராவணன்  தூக்கிச்சென்றான்? 

அதே நேரம் இறந்து போன ஒரு இந்துப் பெண்ணின் சடலத்தை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய அந்த உடலை நான்கு புறமும் தோள் கொடுத்துத் தூக்கிச்சென்ற முஸ்லிம் சகோதரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இதைப் படம் போட்டுப்  பாராட்டாத ஊடகங்கள் இல்லை. அதே நேரம்  எங்களுக்குப் பிணங்களைத் தொடுவதால் தீட்டு கிடையாது; ஒருவருடைய மரணம் என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுடைய      மரணத்துக்கான  நினைவூட்டல் மட்டுமல்லாமல் நிரந்தர மறுமைக்கான  நினைவூட்டலுமாகும். இவ்வுலக வாழ்வில் செய்யும் தவறுகளை இந்தப் பிணங்களின்  மூலமாக நம்மை உணரவைத்து தவறுகளில் இருந்து நம்மைத் தடுக்கும் சுவர்களே பிணங்கள். பிறருக்குத்தான் பிணங்கள்; நமக்கு அவை பாடங்கள். ஆகவே அவைகளைத் தொடுவதோ தூக்குவதோ ஒரு முஸ்லிமுக்கு சுமையல்ல அவை சுகமான சுமைகள். இவை போன்ற செயல்களெல்லாம் மனிதாபிமானத்தின் அடிப்படையிலானது என்று  உலகுக்கு நம்மால் உரக்கச் சொல்ல முடியும். இவையும் அழைப்புப்பணியின் ஒரு அடையாளமே.  

சென்னை மற்றும் கடலூர் ஆகிய நகரங்கள் சந்தித்த தாங்கமுடியாத துயரங்களிலிருந்து  ஓரளவு மக்களை மீட்டெடுத்தாகிவிட்டது. காலம் அவர்களது மனப்புண்களை ஆற்றும் வலிமை உடையது. மீண்டும் இந்த நகரங்கள்  எழுந்து நிற்கும் இன்ஷா அல்லாஹ். இப்படி மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு உணவும், உடையும்  மருந்தும் கொடுத்து உயிருடன் உலவவிட்டால் மட்டும் போதுமா? இதற்குப் பிறகு என்னவெல்லாம் இந்த மக்களுக்குத் தேவைப் படும் என்று இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்பட வேண்டும். 

பேரிடர் மேலாண்மை என்பது அதன் அறிவுபூர்வமான  செயல்பாடுகளை மூன்று வகைகளாகத் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது.

மீட்டெடுப்பு- RESCUE

நிவாரணம்- RELIEF 

மறுவாழ்வு REHABILITATION 

இம்மூன்று செயல்திட்டங்களைப் பற்றி பல்வேறு ஊடகங்களிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. நாம் இந்தத் தலைப்பில் விவாதிக்கும் , ஒரு முஸ்லிமின் தார்மீகக் கடமையான அழைப்புப்பணியின் அடிப்படையில்  நாம் எதிர்காலத்தில் செய்யவேண்டியவை யாவை என்று விவாதிக்கலாம். 

குறிப்பாக மீட்டெடுப்பு எடுப்பு என்பது கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்ட பணியாகும். இயல்பு நிலை திரும்பிக் கொண்டு இருக்கிறது. முகாம்களில் இருந்து  பெரும்பான்மையான மக்கள் தங்களின் வீடுகளுக்கு வந்துவிட்டார்கள். இன்னும் வர இயலாதவர்கள் கூட நடந்துவிட்ட பேரழிவின் யதார்த்தைத்தைப் புரிந்து கொண்டு மனத்தளவில் எஞ்சிய  வாழ்வை எதிர்கொள்வதற்குத்  தயாராகி விட்டார்கள். 

இரண்டாம் நிலையான நிவாரணம் என்பதும் பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இவற்றில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் நிவாரணம் என்பது மக்களின் இழப்பை முழுமையாக ஈடு செய்துவிட இயலாது. ஒவ்வொரு இயற்கைப் பேரிடருக்குப் பின்னும்  பல பணக்காரர்களாக இருந்தவர்கள்  ஒட்டாண்டிகளாவதும் ஏழைகளாக இருந்த பால் விலை லிட்டருக்கு நூறு ரூபாய் என்று விற்ற சில அடாதடி அநியாயக்காரர்கள்- பதுக்கல்காரர்கள்  , அரசியல்வாதிகள் , ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர்  கோடீஸ்வரர்களாவதும் காலம்காலமாக நடைபெறும் அட்டூழியம்தான். நிவாரணம் என்பது நிரந்தரமானத் தீர்வு  அல்ல. தலைவலிக்கு கொஞ்சம் டைகர்பாம் தடவிக் கொள்வது போன்றதுதான்    நிவாரணம் என்பதாகும். நிவாரணமாகத் தரும் எதுவும் மக்களுக்குப் போதாது; அவர்களது  அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யாது. ஆகவே ,  நிரந்தரத் தீர்வு என்பது மூன்றாம்  நிலையான மறுவாழ்வில்தான் இருக்கிறது. இந்த மறு வாழ்வுத்திட்டங்களில்நாம் அதிகமதிகம் மனதை செலுத்தவேண்டிய தேவை அதிகமாக  இருக்கிறது.    

இன்று சென்னை இருக்கும் நிலையில் மக்களின் மறுவாழ்வுத் திட்டங்கள் என்பது ஒரு மலைக்கவைக்கும்  மலையாக நமது கண்முன் நிற்கிறது. பிரம்மாண்டமான,  மக்களின் மறுவாழ்வுத்திட்டத்தை நாம் முழுதும் மேற்கொள்ள இயலாது. ஆனாலும், கருணையுள்ள  இதயத்துக்குப் பழக்கப்பட்ட  முஸ்லிம்கள் கைக்கொள்ள வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. அந்தக் காரியங்களை அவரவர் சக்திக்கு ஏற்ப மேற்கொண்டால் அல்லாஹ்வின் பொருத்ததத்துக்கு நாம் ஆளாகலாம். இந்த பேரிடரை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் வற்புறுத்திய தர்மங்களைச் செய்வதற்காக இறைவன் நமக்கு வழங்கிய வாய்ப்பு என்று கருதும் மனப்பாங்கு வேண்டும். ஏதோ வெள்ளத்திலிருந்து காப்பாற்றினோம்; உணவு கொடுத்தோம் என்பதோடு விட்டுவிடாமல் இன்னும் செய்யவேண்டிய காரியங்களிலும் நாம் ஈடுபடவேண்டும்.   அவைகளில் சில:-
  • 1. . அனாதைக் குழந்தைகளை ஆதரித்தல் 
  • 2.  ஆதரவற்ற முதியோர்களை அரவணைத்தல் 
  • 3.  விதவைகளாகிவிட்ட  பெண்களை மணமுடித்தல் 
  • 4.  நிராதரவான பெண் குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தல்  
  • 5.  வட்டி இல்லாக் கடன் வழங்குதல் 
  • 6. வேலையற்றோருக்கு வேலை தேடிக் கொடுத்தல் அல்லது நாமே வேலைக்கு அமர்த்திக் கொள்ளல் 

இவை போன்ற நிரந்தரத் தீர்வுகாணும் மறுவாழ்வு முயற்சிகளை முஸ்லிம்கள் மார்க்க நெறிமுறைகளுக்குட்பட்டு  முன்னெடுக்க வேண்டும். 

உடுத்திய உடைகளோடு மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்துவந்த எண்ணற்ற முஹாஜிர்களை அரவணைத்து அவர்களோடு சகோதர ஒப்பந்தம் செய்த மதினத்து அன்சாரிகளின் வாழ்வும் வரலாறும் நமது கண்முன் விரித்து  வைக்கப்பட்டிருக்கிறது. 

முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், பெருமானார்  (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.

அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல்,  இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒய்வதில்லை; இஸ்லாத்தின் பயணங்கள் நிற்பதில்லை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 
இபுராஹீம் அன்சாரி

26 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வாசித்துப் பழக்கப்பட்ட வார இதழ் நேரத்திற்கு வராவிட்டால் ஏற்படும் பதட்டம் இவ்வாரப் பதிவின் தாமதத்தால் எனக்கு ஏற்பட்டது. அ.நியைத் தொடர்பு கொண்டு கேட்டபோதுதான் தாமதம் தங்களிடமிருந்தல்ல என்று அறிந்தேன்.

ஹைர்!

அழைப்புப்பணி என்பதே சேவைசார்ந்ததுதான் என்பதை மேலும் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதுபோல் தெள்ளத்தெளிவாக சொல்கிறீர்கள்.

மாஷா அல்லாஹ்!

தொடரட்டும் இத் தொண்டு.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

Unknown said...

//அபூ மூஸப் அல் அஷ்அரி//

அபூமூஸா அல் அஷ்அரி.

Ebrahim Ansari said...

வ அலைக்குமுஸ் சலாம்.
அன்புள்ள தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,
இன்றைய பதிவு வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் என்னையும் பதட்டப்பட வைத்தது. காரணம், இன்று சனிக்கிழமை வகுப்பில் எங்களது மாணவிகளுக்கு பதிவைப் படித்துக் காட்டுவது பழக்கம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்க வைத்துக் கேட்பார்கள். ஆனால் இன்று வகுப்புகள் நிறைவுறும்வரை அ. நி. யில் பதியப்படவில்லை.
மின் அஞ்சலுக்கும் பதில் இல்லை. அது வேறு பதட்டம். தம்பியின் உடல்நலம் பற்றிய பதட்டம்.
நிறைவாக, எனது கணினியில் இருந்த கட்டுரையின் படிகளைப் படித்துக் காட்டச் செய்தேன். வீட்டுக்கு வந்த பிறகே பதிவைக் காண முடிந்தது.

Ebrahim Ansari said...

//அபூ மூஸப் அல் அஷ்அரி//

அபூமூஸா அல் அஷ்அரி.

தம்பி அபு இபு அவர்களுக்கு

காக்கா அவர்கள் சுட்டியுள்ள திருத்தத்தை உடனே செய்துவிடக் கோருகிறேன்.

ஜசாக்அல்லாஹ் காக்கா.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மன்னிக்கவும், எதிர்பாராத டெக்னிகல் ப்ராப்ளம் நேர அட்டவணைப்படி பதிவு பளிச்சிட காலதாமதமாகிவிட்டது...

இனி இவ்வாறு நிகழாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம்...

ஜஸாக்காஹ் ஹைரன் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் காக்கா...

திருத்தம் பதிவுக்குள் செய்யப்பட்டு விட்டது !

இன்று காலை தான் கிரவ்ன் ` இந்த பதிவுக்கான நேரத்தை நீட்டிக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்தார்(ன்). காரணம் இந்த பதிவின் முக்கியத்துவம் அதோடு அதற்கான உழைப்பு இவைகளைக் கருத்தில் கொண்டு இந்த பதிவு மட்டும் 48 மணி நேரம் தனித்து இருக்கும்படி ஆசைப்பட்டார், அவ்வாறே செய்ய ஆவண செய்யப்படும் என்றும் சொல்லியிருந்தேன்... ஆனால் அந்த நேரத்தில் கூட கவனிக்கவில்லை பதிவுக்குள் இந்த அத்தியாயம் வரவில்லை என்று, கவிக் காக்கா அவர்கள் சுட்டிக்காட்டிய பின்னர்தான் காலதாமதத்திறாக காரணி கண்டறியப்பட்டது உடணடியாக சரிசெய்யவும் பட்டது.

Ebrahim Ansari said...

தம்பி! வ அலைக்குமுஸ் சலாம்.
பதிவை விட உங்களிடமிருந்து பதில் இல்லை என்றுதான் எனக்குப் பதட்டம் அதிகம். மாஷா அல்லாஹ்.

அதிரை.மெய்சா said...

இப்ராஹிம் அன்சாரி காக்காவின் இத்தொடர் பதிவை ஒவ்வொருமுறையும் எதிர்பார்த்து காத்திருந்து காலையில் எப்படியும் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவேன். இன்று வெகுநேரமாகியும் பதியாமல் உள்ளதால் காக்காவிற்கு நேரமின்மையால் இந்தவாம் விடுப்பு எடுத்துக் கொண்டார்கள் போலும் என நினைத்து ஏமாற்றத்துடன் இருந்தேன்.

மீண்டுமாய் தளத்தில் வந்து பார்த்தபோது தனக்கே உரித்தான எழுத்து நடையில் தரமாக சாறு பிழிந்து சுவையான செய்திகளை எங்களுக்கு சுவைக்க தந்திருந்தீர்கள். அருமை. வாழ்த்துக்கள் காக்கா.

sabeer.abushahruk said...

//உணவு கொடுத்தோம் என்பதோடு விட்டுவிடாமல் இன்னும் செய்யவேண்டிய காரியங்களிலும் நாம் ஈடுபடவேண்டும். அவைகளில் சில:-
1. . அனாதைக் குழந்தைகளை ஆதரித்தல்
2. ஆதரவற்ற முதியோர்களை அரவணைத்தல்
3. விதவைகளாகிவிட்ட பெண்களை மணமுடித்தல்
4. நிராதரவான பெண் குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தல்
5. வட்டி இல்லாக் கடன் வழங்குதல்
6. வேலையற்றோருக்கு வேலை தேடிக் கொடுத்தல் அல்லது நாமே வேலைக்கு அமர்த்திக் கொள்ளல் //

காக்கா,

நீங்கள் அரசின் அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர்கள் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல.

யார் காக்கா, இப்படி ஆக்கபூர்வமாக ஆலோசனை சொல்கிறார்கள்?

மாஷா அல்லாஹ்.

sabeer.abushahruk said...

சேவை மனப்பான்மையில் நம் சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டு மார்க்கம் தடுத்த / தவிர்த்க சொன்னவற்றை செய்துவிடக்கூடாது என்பதையும்; மாற்று மத சகோதரர்களின் மனம் கோணிவிடக்கூடாது என்னும் எச்சரிக்கையையும் கோடிட்டுக் காட்டிய விதம் துல்லியமானது என்பதோடு பாராட்டத்தக்கது.

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர் அவர்களின் மைக்ரோஸ்கோப் ஆய்வுப் பார்வையில் பட்டது

//மாற்று மத சகோதரர்களின் மனம் கோணிவிடக்கூடாது என்னும் எச்சரிக்கையையும் கோடிட்டுக் காட்டிய விதம் துல்லியமானது என்பதோடு பாராட்டத்தக்கது.//

ஆம். கம்பி மேல் நடப்பது போல கருதி எழுதப்பட்ட வரிகள்.

Ebrahim Ansari said...

தம்பி மெய்ஷா அவர்களுக்கு,

காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு - காக்க வைப்பதில் சுகம் உண்டு .

நானும் பதட்டப்பட்டேன். காரணம் நெறியாளரின் நலம் அறிய வேண்டி.

மற்றபடி வியாழன் இரவே பதிவை அனுப்பிக் கொடுத்துவிட்டேன்.

உங்களுடைய ஆவலுக்கு நன்றி.

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,
Yes. As I watched videos of Chennai people, most of the non-muslim brothers and sisters are inspired by our brothers' efforts in Chennai flood disaster. And they are willing to become muslims, even ready to vote for our muslim parties, because the wrong perceptions about muslims have been erased from their minds.

I would like to suggest that we need to keep in touch and maintain good relationship with them, and we may have to further educate(Dawa) them about principles of Islam without bit of hesitation.

Please brothers take steps as per my suggestion as it seems to be feasible and profitable. Allah The Kareem.

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர் சபீர் அவர்களின் கருத்து
//காக்கா,

நீங்கள் அரசின் அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர்கள் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல.

யார் காக்கா, இப்படி ஆக்கபூர்வமாக ஆலோசனை சொல்கிறார்கள்?//

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில் குரூப் இரண்டில் தேர்வு பெற்று கூட்டுறவுத்துறையில் எட்டு மாதம் பணியாற்றி விட்டு ராஜினாமா செய்ததை அவ்வப்போது எண்ணி வருத்தப்படுவதுண்டு. அதன் பிறகு பத்து வருடங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள பட்ட பாடுகளை பட்டியலிட இயலாது. என்னோடு அப்போது பணியில் சேர்ந்த நண்பர்கள் இணை ஆணையாளராகி ஒய்வு பெற்றார்கள். ஆனாலும் அல்லாஹ் கைவிட்டுவிடவில்லை.

அடுத்து, அரசு அதிகாரிகள் சொல்லும் ஆலோசனைகளை யார் கேட்கிறார்கள்? கேட்டிருந்தால் செம்பாரம்பாக்கம் ஏரி தாமதமாகத் திறக்கப்பட்டு அழிவுக்கு காரணமாகி இருக்குமா? உயர் நீதி மன்றம் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து இருக்குமா?

இப்போதெல்லாம் அரசுப்பணி என்பது கூஜா , ஜால்ரா, சிங்கி, சொம்பு என்றாகிவிட்டது.
ஆகவே, அரசு அதிகாரியாக இருப்பதைவிட அல்லாஹ்வின் அதிகாரியாக இருந்து நமக்குத் தெரிந்த நாலு நல்லதை சொல்லிக் கொண்டிருக்க்கலாமே !
எழுத்துப் பணி மூலம் – அழைப்புப்பணி.

அரசுப்பணியில் நாம் நினைப்பதை சொல்ல இயலாது. மாறிக் கொண்டிருக்கும் அரசுகளின் ஊது குழலாகவே இருக்க இயலும்.

ஊடகத்துறையில் ஊடலாம்! கூடலாம்!

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி அஹமது அமீன் ,

வ அலைக்குமுஸ் சலாம்.

ஜசக்கலாஹ்.

இந்தத் தொடர் பதிவின் நோக்கத்தைத் தாங்கள் தங்களின் கருத்தில் வற்புறுத்தி இருக்கிறீர்கள்.

//wrong perceptions about muslims have been erased from their minds.//

Yes. This is I want to insist. Youngsters may take this concept and exhibit on all the activities of their daily life.

நான் இந்தத் தொடரில் வற்புறுத்த நினைப்பது இந்தக் கருத்தைதான். இளைஞர்கள் தங்கள் வாழ்வின் நெடுகிலும் இந்தக் குறிக்கோளுடன் இயங்கினால் இந்தப் புனித நோக்கத்தில் வெற்றி கிட்டலாம்.

//we need to keep in touch and maintain good relationship with them, //

YES. This practice to be considered as vital to achieve this sacred goal.

மேலும் தாங்கள் முகநூலில் பதிந்த ஒரு பதிவிலிருந்துதான் சவூதி கெஜட் பத்திரிகையின் நெறியாளரின் தலையங்கக் கருத்தை எடுத்து இங்கு சேர்த்து இருக்கிறேன்.

So, I have to thank you for this as well.

Ebrahim Ansari said...

கொஞ்ச காலத்திற்கு முன் ஜெயாவின் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இனைத்துக் கொண்டவரும், முன்னாள் சென்னை மாநகர கமிஷனருமான நடராஜ் IPS அவர்களை இன்று காலை தந்தி டீவியில் அச்சு அ(ல)சல் நிகழ்ச்சியில் அவர் சொன்னதில் சில முக்கிய செய்திகள்

⚫ இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.

⚫ கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிடத்தான் தலைமை செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்தது இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.

⚫ முன்பெல்லாம் அணையை பொதுப் பணிதுறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள். இப்பொழுது ”மான்புமிகு தமிழகமுதல்வர் புரட்சிதலைவி அம்மாவின் ஆணைகினங்க”ன்னு யார் யாரோ திறங்குறாங்க. அவர்களுக்காக காத்திருந்ததும் இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.

⚫ மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே இந்த பெரும் சேதத்துக்கு காரணம்

Courtesy : Abu Rayan.

அரசு அதிகாரிகளின் அவல நிலை.

Ebrahim Ansari said...

நடராஜ் IPS அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டார் என்று செய்தி வந்துள்ளது.

sheikdawoodmohamedfarook said...

//பிறருக்குத்தான்அவை பிணங்கள்;நமக்குஅவை பாடங்கள்//இந்த ஒருவரியே போதும் மனிதன்வேற்றுமையை மறந்து ஒற்றுமையில் நல்வழி காண!

Unknown said...

//அல்லாஹ்வின் அதிகாரியாக//

No! அல்லாஹ்வின் அடியானாக.

Ebrahim Ansari said...

அல்லாஹ்வின் அடியானாக என்பதே சரி.

எண்ணத்தில் குற்றம் இல்லை. ஆனால் சொல்லில் குற்றம். எனினும் எனது குற்றம் குற்றமே!

தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன்.

crown said...

இந்த செய்தியை நாம் பெருமையுடன் குறிப்பிடும் அதேநேரத்தில், ஒரு விஷயத்தை நமது தோழர்களுக்கு கவனப்படுத்த வேண்டிய கடமையையும் கட்டாயத்தையும் உணர்கிறோம். சேவை செய்கிறோம் என்கிற ஆர்வத்தில் தோழர்கள். கோயில் வளாகங்களை சுத்தம் செய்வது தவறல்ல; ஏற்கத்தக்கது. ஆனால் சில தொப்பி அணிந்த சகோதரர்கள் கோயில்களின் கருவறைக்குள் சென்று அங்குள்ள கடவுள்கள் என்று கருதப்படும் சிலைகளையும் தொட்டுத் துடைப்பது என்ற சேவையின் தீவிரவாதத்தில் ஈடுபடுவது எந்த அளவு மார்க்கத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாகும் என்பதை மார்க்க அறிஞர்கள்தான் விளக்க வேண்டும். நமது பணிகளின் வரையறை , கோயிலாக இருந்தாலும் துயருறும் மக்களின் இருப்பிடம்தேடிப் போகும் அளவோடு மட்டும் நின்று கொண்டால் நல்லது என்பது எனது பணிவான கருத்து.

இதைக் குறிப்பிட இரண்டு காரணங்களை நான் முன் வைக்கிறேன்.

ஒன்று, இந்து சமய சகோதரர்கள் வணங்கும் கடவுள் சிலைகளை அந்த மதத்தைச் சேர்ந்த சில பிரிவினரே தொடக் கூடாது என்று அவர்கள் சில ஆகம ஐதீக விதிகளை வகுத்து வைத்து இருக்கிறார்கள். அவ்வாறான நிலையில் நாம் தொடுவது கூட அவர்களைப் புண்படுத்தலாம். உதவி செய்யப் போன இடத்தில் அவர்களுடைய நெருக்கடியான நிலைமைகளைப் பயன்படுத்தி அவர்களுடைய மத நம்பிக்கையை நாம் பதம் பார்க்க வேண்டாம் என்பதாகும்.

இரண்டாவதாக, இவ்வாறு செய்கின்ற உதவிகள் நமது ஓரிறைக் கொள்கைக்கு சோதனையாக அமைந்துவிட நாமே இடம் கொடுத்துவிட வேண்டாம் என்பதுமாகும். அத்தகைய பணிகளையெல்லாம் அவர்களிடமே விட்டுவிடலாமே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமல்லாவா? இராமயணக் கதையில் இலட்சுமணன் போட்ட கோட்டை மீறிய சீதையால்தானே அவளை இராவணன் தூக்கிச்சென்றான்?
-----------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான அலசல், நண்மை செய்யும் போதும் கவணமாய் இருபக்கமும் பார்க்கவேண்டும்!எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்யாமல் இருப்பது ஒருவகை ஞானம்! ஆய்வுக்கு உரித்தான் அலசல்.அருமை!

crown said...

அதே நேரம் இறந்து போன ஒரு இந்துப் பெண்ணின் சடலத்தை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய அந்த உடலை நான்கு புறமும் தோள் கொடுத்துத் தூக்கிச்சென்ற முஸ்லிம் சகோதரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இதைப் படம் போட்டுப் பாராட்டாத ஊடகங்கள் இல்லை. அதே நேரம் எங்களுக்குப் பிணங்களைத் தொடுவதால் தீட்டு கிடையாது; ஒருவருடைய மரணம் என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுடைய மரணத்துக்கான நினைவூட்டல் மட்டுமல்லாமல் நிரந்தர மறுமைக்கான நினைவூட்டலுமாகும். இவ்வுலக வாழ்வில் செய்யும் தவறுகளை இந்தப் பிணங்களின் மூலமாக நம்மை உணரவைத்து தவறுகளில் இருந்து நம்மைத் தடுக்கும் சுவர்களே பிணங்கள். பிறருக்குத்தான் பிணங்கள்; நமக்கு அவை பாடங்கள். ஆகவே அவைகளைத் தொடுவதோ தூக்குவதோ ஒரு முஸ்லிமுக்கு சுமையல்ல அவை சுகமான சுமைகள். இவை போன்ற செயல்களெல்லாம் மனிதாபிமானத்தின் அடிப்படையிலானது என்று உலகுக்கு நம்மால் உரக்கச் சொல்ல முடியும். இவையும் அழைப்புப்பணியின் ஒரு அடையாளமே.
-------------------------------------------------
இந்த உதவி வார்தையில் சொல்லவியலா உணர்வினை உணர்த்தியது. நம் சகோதரர்களின் சேவை மனப்பான்மையை கோலாச்சியது.

crown said...

நிவாரணம் என்பது நிரந்தரமானத் தீர்வு அல்ல. தலைவலிக்கு கொஞ்சம் டைகர்பாம் தடவிக் கொள்வது போன்றதுதான் நிவாரணம் என்பதாகும். நிவாரணமாகத் தரும் எதுவும் மக்களுக்குப் போதாது; அவர்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யாது. ஆகவே , நிரந்தரத் தீர்வு என்பது மூன்றாம் நிலையான மறுவாழ்வில்தான் இருக்கிறது. இந்த மறு வாழ்வுத்திட்டங்களில்நாம் அதிகமதிகம் மனதை செலுத்தவேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது.
----------------------------------------------
ஹைலைட் கோரிக்கை! (டைகர்பாம்)" நிவாரணம் வெடித்து சிதறிவிடாமல் ஆறுதல் தரும் படி இருக்கணும்!

crown said...

இந்த பேரிடரை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் வற்புறுத்திய தர்மங்களைச் செய்வதற்காக இறைவன் நமக்கு வழங்கிய வாய்ப்பு என்று கருதும் மனப்பாங்கு வேண்டும். ஏதோ வெள்ளத்திலிருந்து காப்பாற்றினோம்; உணவு கொடுத்தோம் என்பதோடு விட்டுவிடாமல் இன்னும் செய்யவேண்டிய காரியங்களிலும் நாம் ஈடுபடவேண்டும். அவைகளில் சில:-

1. . அனாதைக் குழந்தைகளை ஆதரித்தல்

2. ஆதரவற்ற முதியோர்களை அரவணைத்தல்

3. விதவைகளாகிவிட்ட பெண்களை மணமுடித்தல்

4. நிராதரவான பெண் குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தல்

5. வட்டி இல்லாக் கடன் வழங்குதல்

6. வேலையற்றோருக்கு வேலை தேடிக் கொடுத்தல் அல்லது நாமே வேலைக்கு அமர்த்திக் கொள்ளல்


இவை போன்ற நிரந்தரத் தீர்வுகாணும் மறுவாழ்வு முயற்சிகளை முஸ்லிம்கள் மார்க்க நெறிமுறைகளுக்குட்பட்டு முன்னெடுக்க வேண்டும்.
----------------------------------------
தர்மத்தின் சூத்திரம் சுட்டிக்காட்டபட்டுள்ளது!இதுதான் அட்டவனை!இயற்கை கைவிட்டவனை! இதயம் தொடவும் அவன் இறைவன் பால் ஈர்க்கவும் செய்யும் திட்டவினை!

crown said...

அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒய்வதில்லை; இஸ்லாத்தின் பயணங்கள் நிற்பதில்லை.
-----------------------------------------
ஆய்வுக்கு ஆயத்தமாகும் அணைத்து மாணவர்களும் இந்த ஆய்வு கட்டுரையை எடுத்து செயல் பட்டால் ஆய்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். மற்றவர்களுக்கு தானத்தின் நினைவூட்டல், இந்த கட்டுரை!ஆசிரியருக்கு நன்றி!

Ebrahim Ansari said...

வ அலைக்குமுஸ் சலாம்.

பதிவை வரிவரியாக ஆய்ந்து கருத்திட்ட தம்பி கிரவுன் தஸ்தகீர் அவர்களுக்கு கருத்திட்டதற்காகவும் பதிவின் காலத்தை நீடிக்கும்படி நெறியாளருக்கு கோரிக்கைவைத்தற்காகவும் அந்தக் கோரிக்கையை அந்த இடத்திலேயே அமுலுகுக் கொண்டுவந்த நெறியாளருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரன்.

அன்புக்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு