கடந்த வாரப் பதிவை...!
“மனிதநேயத்தின் அடிப்படையிலான அழைப்புப் பணி பற்றிய பல வரலாறுகள், சிந்தனைகள் ஏராளம் உள்ளன. “ என்று சொல்லி நிறைவு செய்து இருந்தோம்.
இந்த மனித நேய சிந்தனைகளுக்கு இரை போடுவது போல் இயற்கையின் விளையாட்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் புரட்டிப் போட்டு விட்டன என்பவை நாம் அறிந்தவையே. இந்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் அடைந்த துயரங்கள் எழுத்தால் வடிக்க இயலாதவை. அதே போல் மக்களின் இந்தத் துயரக் கண்ணீரைத் துடைக்க பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தொண்டர்கள் முன்வந்து தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் துயருற்ற மக்களுக்கு உதவினார்கள்.
இந்தத் துயர் துடைக்கும் பணியில் இஸ்லாமிய இயக்கங்களின் இறையச்சத்தோடு கூடிய ஈடுபாடும் பாராட்டுதலுக்குரியது. முதலாவது மழையால் வீடிழந்து இருக்க இடமில்லாமல் தவித்த மக்களுக்கு இன மத பேதமின்றி அழைப்புவிடப்பட்டு தலைநகரின் அனைத்துப் பள்ளிவாசல்களின் கதவுகளும் திறக்கப்பட்டன. அவ்வாறு வந்து தங்கிய மக்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டது. கோயில்களில் தங்கியவர்களுக்கூட சைவ உணவு தயாரித்து வழங்கப்பட்ட செய்தி, மற்றவர்களை மதிக்கும் இஸ்லாத்தின் மாண்பின் உச்சத்தைப் பறைசாற்றியது.
இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் தொட்டதற்கெல்லாம் நீயா? நானா ? என்று கச்சை கட்டும் பல்வேறு இயக்கங்களின் தொண்டர்கள் இந்த துயர் துடைக்கும் பணியில் இணைந்தகரங்களுடன் பணியாற்றினார்கள் என்பதுதான். முஸ்லிம் தாய்மார்கள் தங்களால் இயன்றவரை தங்களின் இல்லங்களில் உணவு தயாரித்து அல்லலுறும் அண்டை அயலாருக்கு அளித்தார்கள் என்கிற செய்திகளும் படங்களும் சமூக வளத் தளங்களிலும் பகிரப்பட்டன. இப்படிப்பட்ட மனித நேயம் மிக்க செயல்கள்தான் அழைப்புப் பணியின் ஆணிவேர் என்பதை நாம் பலமுறை குறிப்பிட்டு வற்புறுத்தி வருகிறோம்.
முஸ்லிம்கள் செய்துவரும் மட்டற்ற மனித நேய சேவைகளை தமிழக முதல்வர் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எண்ணற்ற பிற மத சகோதர சகோதரிகள் முஸ்லிம்களின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டி சமூக வலைதலங்களில் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் பதிவுமழைகளை பொழிந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியான நேரங்களில் மனங்களை வெல்லும் வகையில் இரவு பகலாக இணைந்து பணியாற்றுவதுதான் இறைவனுக்குப் பிடித்தமான அழைப்புப் பணியின் அரிச்சுவடியாகும். இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் இறைவன் தனது அருள்மழையைப் பொழிவானாக!
அவரவருக்கு இயன்ற அளவு தங்களது சொந்தப் பணத்தைத் திரட்டி பலருக்கு சாதி மத பேதமின்றி சோறு போட்டு இருக்கிறார்கள். ஒரு பெயர் சொல்ல விரும்பாத பெரியமேட்டைச் சேர்ந்த முஸ்லிம் செல்வந்தர், நூறு மூட்டை அரிசியைக் கொடுத்து இந்த மக்களுக்கு இன பேதம் இல்லாமல் உணவுதயாரித்துக் கொடுக்க ஆகும் செலவையும் கொடுத்து இருக்கிறார். அரசும் இராணுவமும் தரவேண்டிய படகுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிக்க தங்களது கரங்களாலேயே மூங்கில் கம்புகளால் மிதவைகளைத் தயாரித்து அதில் உணவுப் பொட்டலங்களை ஏற்றி இடுப்பளவு நீரில் நின்று விநியோகம் செய்த சகோதரர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்
முஸ்லிம்களை நோக்கி, மாட்டுக்கறி சாப்பிடுபவன் என்றும் பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள் என்றும் பலவாறு பழிதூற்றியவர்களுக்கும் முஸ்லிம்களைப் பார்த்து உயிர்களைக் கொல்லும் தீவிரவாதிகள் என்று பழிச்சொல்லையும் இழிச்சொல்லையும் பங்கீடு செய்து கொண்டிருந்தவர்களுக்கும் வாடகைக்குக் கூட முஸ்லிம்களுக்கு வீடுதரத் தயங்கியவர்களுக்கும் தங்களது சேவைகளால் அமைதியாக பதில் அளித்து இருக்கிறார்கள் தமிழக முஸ்லிம்கள்.
முஸ்லிம்கள் விதைத்த இத்தகையத் தொண்டுகள், சமூக வலைத்தளங்களில் இதயபூர்வ அன்பின் அறுவடைகளை அள்ளித் தந்து இருக்கிறது . இந்தப் பதிவுகள் உணர்வுகளின் ஓடை!. அவைகளில் சிலவற்றை எடுத்துப் பதிவதில் அளவற்ற ஆனந்தமும் பெருமிதமும் அடைகிறேன்.
இதோ இந்த சகோதரர் இப்படி எழுதுகிறார். அவர் பெயர் அய்யா சாமி.
Ayya Samy
“இதுவரை எதிரிகளாகப் பார்த்த இஸ்லாமியர்களை என் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்க வைத்தது சென்னையில் அவர்கள் ஆற்றிய தொண்டு.
எங்கு திரும்பினாலும் இஸ்லாமியத் தொண்டர்கள்,
ச்சீ! இவர்களையா இத்தனை நாள் நான் திட்டித்தீர்த்தேன்? நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது.
தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தவ்ஹீத் பனியன் போட்டிருந்த ஒரு இருபது வயது மதிக்கத்தக்க சிறுவனை அழைத்துக் கேட்டேன்.
இதற்கெல்லாம் உங்கள் அமைப்பு பணம் தருகிறதா?
என்னை அடிக்காத குறையாக அவர் முறைத்துப் பார்த்துவிட்டு அல்லாஹ்வுக்காக செய்கிறோம். எங்கள் சம்பளப் பணத்தைக் கூட இந்த நிவாரணத்துக்காக கொடுத்துவிட்டோம் என்றார்.
அவருக்கு அருகில் இணைந்து இருந்த ம ம க தொண்டரிடமும் இதே கேள்வி கேட்டேன். போய் வேலையைப் பாருய்யா! தேவையில்லாத கேள்வி கேட்காதே என்று சினந்தார். “
அரக்கோணம் சாமியப்பன் என்பவர் இப்படி எழுதி இருந்தார்.
“இந்த முஸ்லிம்கள் செய்கின்ற பணிகளுக்கிடையே அவர்களிடம் இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தால் நானும் ஒரு பனியனை மாட்டிக் கொண்டு அவர்களுடன் பணியாற்றுவதுடன் அவர்களின் செயலால் முகமதிய மதத்துக்கே மாறி இருப்பேன் போல.
உங்கள் எல்லோருக்கும் ஒரு மிலிடரி சல்யூட் முஸ்லிம் பாய்ஸ்.”
Renold Robinson Roy
“ஐயா முஸ்லிம் தம்பிகளா! எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாட்களாய்... உங்களையும் உங்கள் அன்பு நெஞ்சங்களையும் இந்த உலகிற்கு காட்டுவதற்காகவே இந்த வெள்ளம் சென்னை இல் வந்தது போல...
நன்றிகள் கோடி !! “
Prakash Muthusamy
சென்னையில் காணும் இடங்களிலெல்லாம் இஸ்லாமியத் தோழர்கள் . மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். இவர்களையா இந்த பத்திரிகைகள், மீடியாக்கள் தீவிரவாதிகள் என்று எங்களை நம்ப வைத்தது? வருந்துகிறேன். எந்த ஜாதி எந்த மதம் என்று கூட பார்க்காமல் இறந்தவர்களின் பிணத்தைக் கூட எடுத்து வருகிறார்கள். ராணுவம் நுழையத் தயங்கிய இடங்களில் எல்லாம் அனைத்து இஸ்லாமிய இயக்கத் தோழர்கள் களப்பணி செய்தது உண்மையில் என்னை ஆச்சரியப்படவைத்தது. நிச்சயம் இவர்களுக்குப் பின்னால் ஒரு ரோல்மாடல் இருக்க வேண்டும் . அது அவர்கள் உயிரினும் மேலாக நினைக்கக் கூடிய நபிகள் நாயகமாகத்தான் இருக்க வேண்டும். சல்யூட் என் இஸ்லாமியத் தோழர்களுக்கு. “
Radha Radha
“ இவர்கள்தான் தீவிரவாதிகள்.
தன் சொந்த நாட்டு மக்களுக்கு கஷ்டம் என்ற உடன் தனது உடலை, தனது பொருளை ஓடி வந்து தியாகம் செய்கிறார்களே இவர்கள்தான் தீவிரவாதிகள்.
வாருங்கள்! எங்களிடம் தீட்டு இல்லை! ஜாதி இல்லை! மதவெறி இல்லை !. உங்களுக்காக எங்களுடைய மசூதிகள் உணவுடனும் உடையுடனும் காத்திருக்கிறது வாருங்கள் என்றார்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள் .
...................................................................................................................................................................
ஒரு இந்துவாக நான் இன்று இஸ்லாமிய சகோதரர்கள் முன் தலைகுனிகிறேன்.
.....................................! இனியும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்காதீர்கள். அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே! உங்கள் பணிகளைக் கண்டு நான் கண்ணீர் வடிக்கிறேன். அல்லாஹ் நாடினால் நான் இஸ்லாத்தை ஏற்கவும் தயங்க மாட்டேன். “
இன்னும் ஏராளம் ஆனால் இடம் போதாது. சிலவற்றை மட்டும் இந்த பேசுபொருளுடன் தொடர்புடையது என்பதால் இங்கு அடையாளப்படுத்தி இருக்கிறேன்.
நமது நாடு ஒரு மத சார்பற்ற நாடு. இங்கு பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மதச் சடங்குகள், பல்வேறு வழிபாட்டு முறைகள் , பல்வேறு வாழ்க்கை நடைமுறைகள் வழக்கத்தில் இருக்கின்றன. பல நேரங்களில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய இறை வழிபாட்டு முறைகளை நிறைவேற்றும்போது மற்ற மதத்தவர்கள் அதை சகித்துக் கொள்ளாமல் எதிர்ப்பதும் இங்கு அடிக்கடி பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது.
இதற்குக் காரணம் , மனித நேயப் பண்பாடுகளின் குறைபாடே. இந்தியாவின் ஆன்மீக சாரம், பல தலைமைதாங்கும் பெரியோரின் சகிப்புத் தன்மையில்தான் ஊடுருவி இருக்கிறது. இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை இங்கு சுட்டினால் பொருத்தமாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியை மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர், அபுல் கலாம் தனது Limited Minds என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அதை தமிழில் திரு. மு. சிவலிங்கம் அவர்கள் மொழியாக்கம் செய்து இருக்கிறார். இதோ சகிப்புத் தன்மைக்கு சான்றான அந்த அருமையான சம்பவம் அபுல் கலாம் அவர்களின் வார்த்தைகளிலேயே.
“ காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வெகு அருகில் 300 வருட பாரம்பரியம் கொண்ட மசூதி உள்ளது. இந்த மசூதி தொடர்பான ஒரு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் என்னிடம் சொல்லி இருந்தார். .
இந்த மசூதியின் ஜமாஅத் அமைப்பினரும் மாவட்ட அதிகாரிகளும் மசூதியை வேறு ஒரு பொருத்தமான இடத்துக்கு மாற்றியமைப்பது என முடிவெடுத்தார்கள். இப்போதைய இடம் மடத்துக்கும் மசூதிக்கும் அசவுகரியமாக இருப்பதால் இந்த முடிவுக்கு வந்திருந்தார்கள்.
வரலாற்றுப் புகழ்பெற்றுள்ள மசூதிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருப்பதாலும் அது போலவே மடத்திலும் பெருந்திரளானோர் கூடுவதாலும் போக்குவரத்தைப் பராமரிப்பது சிரமமான வேலையாகிவிட்டது.
எனவே புதிய இடத்தில், மசூதியை மறுபடியும் நிர்மாணித்துக் கொடுப்பது மடத்தின் பொறுப்பு எனவும் முடிவு செய்து இருந்தார்கள். எப்படியோ இந்த விஷயம் பரமாச்சாரிய சுவாமிகளுக்கு எட்டியது. இந்த யோசனையை சுவாமிகள் மிகக்கடுமையாக எதிர்த்தார்கள்.
காலை நாலரை மணி ஆனதும் மசூதியிலிருந்து வரும் தொழுகைக்கான அழைப்புதான் தமது தெய்வீகக் கடமைகளுக்காகத தம்மை துயிலெழச் செய்யும் ஒலியாக அமைந்திருக்கிறது என்று சுவாமிகள் சொன்னார்கள். வேறு பல காரணங்களுக்காகவும் இந்த மசூதியை வேறொரு இடத்தில் நிர்மாணம் செய்வதை சுவாமிகள் எதிர்த்தார்கள்.
மாவட்ட அதிகாரிகளிடமும் மடத்து நிர்வாகிகளிடமும் தமது கருத்தைத திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டு பரமாச்சாரிய சுவாமிகள் மவுனத்தில் ஆழ்ந்தார்கள். கடைசியில் மசூதியை இடம் மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது.
சுவாமிகளை சந்திப்பதற்காக நான் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது அந்தப் பழமையான மசூதியில் தொழுகை நடத்தினேன். சுமார் ஐம்பது மாணவர்கள் புனித குர் ஆனைக் கற்றுக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் அமர்ந்து குர் ஆனில் இடம்பெற்றுள்ள சூராவான அல்ஹம்தை ஓதச்சொன்னேன்.
காஞ்சிபுரத்தில் , வேத பாராணயமும் குர் ஆன் ஓதுவதும் அருகருகே தொடர்ந்து கொண்டிருக்கும் காட்சியைக் காணும் பேறு பெற்றேன். இதில்தான் இந்திய சாரத்தின் மகிமை அடங்கியுள்ளது “
என்று அபுல்கலாம் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பு நமது சிந்தனைக்கு இரை போடும் ஒரு சிறு செய்தியாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் நிலவ வேண்டிய சகிப்புத் தன்மைக்கும் ஒத்துப் போகும் தன்மைக்கும் இணைந்து வாழும் தன்மைக்கும் எடுத்துக் காட்டாகவும் சான்றாகவும் திகழ்கிறது.
முஸ்லிம்களின் மீது அநியாயமாக பழி சுமத்தும் பலருக்கு நாம் தியாகங்களிலும் நேசங்களிலும் தேவையான நேரத்துக்கு கை கொடுத்து காப்பாற்றும் தன்மையிலும் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதை நிருபித்து இதயங்களை வெல்லும் நிலைமையில் இருக்கிறோம்.
மனித நேயம், ஒற்றுமை, உதவும் மனப்பான்மை , இன்றைக்கு இஸ்லாத்துக்கு வானளாவிய புகழ்மொழிகளை வரவழைத்துத்தந்து இருக்கிறது. இஸ்லாத்தை நோக்கிப் பல இதயங்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இத்தகைய மனித நேயப்பணிகளும் புரிந்துணர்வும்தான் அழைப்புப் பணிக்கு நாம் அமைக்கும் வரவேற்பு வளைவுகள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
இபுராஹீம் அன்சாரி
11 Responses So Far:
முஸ்லீம்களின் தார்மீகக் கடமையான 'அழைப்புப் பணி' குறித்து மரியாதைக்குரிய அன்சாரி காக்கா அவர்கள் எழுதத் துவங்கியதிலிருந்தே, இந்த அருமையான தொடருக்கு வலுசேர்க்கும் விதமாக, பொருத்தமாகவே அமைந்துவிட்ட நம் சமுதாய இளைஞர்களின் களப்பணிகள் குறித்தும் இப்பேரிடரின்போது தாய்மார்களின் தியாகங்கள் பற்றியும் நிகழ்ந்த சம்பவங்களைப் படிக்கப் படிக்க பெருமிதமாக இருக்கின்றது! என்னைப்போன்ற வெளிநாட்டுவாசியால் 'களத்தில் நேரில் இறங்கி இயன்ற சேவைகளைச் செய்து நன்மைகளை வாரிக்கொள்ளமுடியவில்லையே!' என்ற ஆதங்கம் பெருமளவில் இருக்க, களப்பணியாற்றிய இன்னும் களப்பணியில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு கோடானுகோடி நன்மைகளை வாரி வழங்குமாறு வல்ல இறைவனிடம் துஆச்செய்து கொள்கின்றேன்!
எல்லாம் வல்ல இறைவன் மனித சமுதாயத்திற்கு தன் அருட்கொடையால், நேர்வழி அளிக்கப் போதுமானவன்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
தங்கள் ஆய்விற்கான ஆதாரமாக, பேசுபொருளில் உள்ள உண்மையை எடுத்துச் சொல்ல ஏதுவாக, இந்தப் பேரிடர் மீட்புப் பணியில் நம் சகோதரர்கலின் பங்கு அமைந்துள்ளது.
இந்த சேவையும் இதைத் தொடர்ந்து நாம் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை முறையும்தான் அழைப்புப் பணிக்கு வலு சேர்ப்பவை.
எதையுமே எதிர்பார்க்காமல் இறை பொருத்தத்தை மட்டுமே வேண்டும் நம் சமூகத்திற்கு மாற்றுமத சகோதரர்களின் கருத்துகள் மிகவும் மகிழ்ச்சியைத் தருவது என்னவோ உன்மைதான்.
நன்றி
அல்லாஹ் ஆத்திக் ஆந்பியா காக்கா.
கட்டுரை மிக அருமை காக்கா!
காலத்துக்கு ஏற்றப் பதிவு.
அன்று சுனாமியின் போது, ஒரு யூனுஸ் பாய் (பரங்கிப்பேட்டை) பேசப்பட்டார்.
இன்று ஒரு யூனுஸ் (சென்னையில் கல்லூரி மாணவர்) பேசப்படுகிறார். அல்ஹம்து லில்லாஹ்.
வாழ்க நமது பணி, வளர்க நமது சேவை.
வ அலைக்குமுஸ் சலாம்.
அன்புடன் கருத்திட்ட தம்பிகள் இக்பால், கவிஞர் சபீர் N. Fath huddeen ஆகிய அனைவருக்கும் எனது நன்றி.
பரங்கிப் பேட்டை யூனுஸ் பாயை நினைவு படுத்தி விட்டீர்கள். அவர் ஒரு சிறந்த மனிதர். தனிப்பட்ட முறையில் அவர் டில்லியில் எனக்கு சில உதவிகள் செய்துள்ளார். அவற்றை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.முஸ்லீம்களின் தார்மீகக் கடமையான 'அழைப்புப் பணி' குறித்து மரியாதைக்குரிய அன்சாரி காக்கா அவர்கள் எழுதத் துவங்கியதிலிருந்தே, இந்த அருமையான தொடருக்கு வலுசேர்க்கும் விதமாக, பொருத்தமாகவே அமைந்துவிட்ட நம் சமுதாய இளைஞர்களின் களப்பணிகள் குறித்தும் இப்பேரிடரின்போது தாய்மார்களின் தியாகங்கள் பற்றியும் நிகழ்ந்த சம்பவங்களைப் படிக்கப் படிக்க பெருமிதமாக இருக்கின்றது! என்னைப்போன்ற வெளிநாட்டுவாசியால் 'களத்தில் நேரில் இறங்கி இயன்ற சேவைகளைச் செய்து நன்மைகளை வாரிக்கொள்ளமுடியவில்லையே!' என்ற ஆதங்கம் பெருமளவில் இருக்க, களப்பணியாற்றிய இன்னும் களப்பணியில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு கோடானுகோடி நன்மைகளை வாரி வழங்குமாறு வல்ல இறைவனிடம் துஆச்செய்து கொள்கின்றேன்!
எல்லாம் வல்ல இறைவன் மனித சமுதாயத்திற்கு தன் அருட்கொடையால், நேர்வழி அளிக்கப் போதுமானவன்!
முஸ்லிம்களின் மீது அநியாயமாக பழி சுமத்தும் பலருக்கு நாம் தியாகங்களிலும் நேசங்களிலும் தேவையான நேரத்துக்கு கை கொடுத்து காப்பாற்றும் தன்மையிலும் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதை நிருபித்து இதயங்களை வெல்லும் நிலைமையில் இருக்கிறோம்.
மனித நேயம், ஒற்றுமை, உதவும் மனப்பான்மை , இன்றைக்கு இஸ்லாத்துக்கு வானளாவிய புகழ்மொழிகளை வரவழைத்துத்தந்து இருக்கிறது. இஸ்லாத்தை நோக்கிப் பல இதயங்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இத்தகைய மனித நேயப்பணிகளும் புரிந்துணர்வும்தான் அழைப்புப் பணிக்கு நாம் அமைக்கும் வரவேற்பு வளைவுகள்.
-----------------------------------------------------
சரியா சொன்னீங்க!இன்சா அல்லாஹ் இந்தியா,உலகம் முழுமைக்கே நம் இஸ்லாம் பற்றிய தாக்கம் தாக்கும்,அம்மக்களையும் நம்முடன் சேர்க்கும்,ஆமீன்.
சென்னையில் நடந்ததை கானும் போது நம் சகோதர,சகோதரிகளின் கைவிரல்களில் எல்லாம் பால் சுரந்து அது அங்கே இருந்தவர்களுக்கு கருனையுடன் புகட்டியது!
நம் முஸ்லீம் சகோதரர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கழுத்தளவு தண்ணீரில் சாப்பாட்டு சட்டியை தூக்கிக்கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நமது ஹிந்து சகோதரர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வேலையில் .....
'நாங்கள் மாம்பலம் ஷங்கர மடத்துகிட்டே இருக்க பாலத்துகிட்டே நிற்கிறோம்.ஜலம் கரை புரண்டு ஒடுது.
இதை நான் என் சொந்த ஷெல்லில் அப்லோட் பண்ரேன்....மத்தவா அனுப்பியது இல்லே' என்று சொல்லிக்கொண்டது இல்லாமல் ஆசீர்வாதம் செய்த இரண்டு பிராமண காமெடி பீஸ்கள்....
வெள்ளத்தின் டாப் காமெடி.
வ அலைக்குமுஸ் சலாம்.
தம்பி கிரவுன் அவர்களின் கருத்திடலுக்கு நன்றி. உண்மையிலேயே எந்தத் தொலைக் காட்சி விவாதங்களைக் கேட்டாலும் ஏதாவது ஒரு முஸ்லிம்களின் இயக்கத்தை பற்றிய நெகிழ்வான புகழ் மொழிகளைக் கேட்க முடிகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கூட எல்லோரும் இணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக நாம் பணியாற்றி இருக்க இயலும் என்கிற நமது " வழக்கமான/ பாரம்பரிய " முனகளை நாம் முனகாமல் இருக்க இயலவில்லை.
எப்படியானாலும் நமது பிள்ளைகள் மார்க்கத்துக்கு ஒரு நல்ல இமேஜை பொதுச்சமுதாயத்தில் உருவாக்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தம்பி ஜாகிர் !
இவ்வளவு தூரம்
குபேர பட்டினம் கொள்ளை போன நிலையிலும் -
மக்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவித்த நிலையிலும்- நாலுநாள் பட்டினி என்று முடங்கிய நிலையிலும்
உதவும் கரங்களைத் தட்டி விட்ட ஒரு சில உதவாக்கரைகள் நடந்து கொண்ட முறைகள் மிகவும் புண்படவைத்தன. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது பகுதி ரவுடிகள் நிவாரணப் பொருட்களை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு போனார்கள். தன்னார்வு இயக்கங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பங்கீடு செய்து கொண்டபோது தாங்கள் சார்ந்த கட்சிக் கொடிகளுடன் வந்து புகைப்படம் எடுத்தார்கள். உணவு தயாரித்துக் கொண்டிருந்தவர்களிடம் வந்து தங்களுக்கு இரண்டாயிரம் பொட்டலங்களைத் தந்துவிட்டே இங்கு சமைக்கவேண்டும் என்று பேரம் பேசினார்கள் ( முகநூலில் இதைப் பதிந்து இருக்கிறேன். ) அம்மாவின் ஸ்டிக்கர் பிரச்னை எல்லாம் மிகவும் உயர்ந்த பட்ச நெருக்கடி.
இவ்வளவுக்கும் இடையில் கல்யாண ராமன் என்கிற ஒரு தீவிர பிஜேபி ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் போட்ட பதிவுகள் பல நல்ல மனங்களை காயப்படுத்திவிட்டன. பாராட்டாவிட்டாலும் பரவாஇல்லை. ஆனால் இழி சொற்களால் முஸ்லிம்களை குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை அவர் இப்போது சாடவேண்டிய அவசியம் என்ன என்பது அவரைப் பெற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த பதிவில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது அனைவரும் கல்யாண ராமனுக்காக துஆச் செய்ய வேண்டும். தான் எழுதுவது தவறு என்று தெரியாமலேயே அவர் எழுதுகிறார். அவருக்கு நல்ல சிந்தனைகளைக் கொடுத்து இறைவன் அவருக்கு அருள் புரிய வேண்டும். இதற்காக அனைவரும் து ஆச் செய்யவேண்டும்.
நெஞ்சு நெகிழ்ந்தது!
உள்ளம் உருகிற்று!
جاءالحق و زهق ألباطل
கல்யாணராமனைப் போன்றுதான்
(இது historical anachronism)
அன்று அபூஜஹ்ல்
அணிச் சகோதரன்
அபுல் பக்தரியைக்
கன்னத்தில் அறைந்தான் -
உயிர் பிழைக்க முஸ்லிம்களுக்கு
உதவப் போனான் என்பதற்காக!
இன்றைக்கும் வேண்டாமா, அபூஜஹ்ல்கள்?
அவர்கள்தாமே, ஆரெஸ்செஸ்காரர்கள்.
உண்மையை உணரும்
ராதாவைப் போன்ற
ஒருவர் போதுமே
நம்மைப் புரிந்துகொள்ள!
அதிரையின் அறிஞர் அஹமது காக்கா அவர்களின் கருத்துப் பதிவு இந்த ஆக்கத்துக்குக் கிடைக்கும் அழகான முத்திரை. ஜசாக்கல்லாஹ் காக்கா.
ராதாவைப் போன்ற ஒருவர் அல்ல ஓராயிரம் பேர் சொல்லத் தகாத வார்த்தைகளால் கல்யாண ராமனைப் போற்றிப் புகழ்ந்து சமூக வலை தளங்களில் பதிந்து வருகிறார்கள்.
அவர்களின் கோபத்தின் உச்சம் அவர்களை BATA மற்றும் VKC PRIDE நிறுவனங்களின் தயாரிப்பு பற்றியெல்லாம் பேச வைக்கிறது. நாம் பேச விரும்பவில்லை. மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
Post a Comment