Thursday, January 09, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 20 . 9

அதிரைநிருபர் | April 09, 2016 | ,

அழைப்புப் பணி தொடர்பாக சில பொதுவான கருத்துக்களை சுருக்கமாக சுட்டிக் காட்டி  இந்தத் தொடரை  நிறைவு செய்யவிரும்புகிறேன்.

அதற்கு முன் , இன்னும் சில கேள்விகளுக்கு பதில் கூறாமல் நிறைவு செய்வதாக சில அன்பான நண்பர்கள்  அலைபேசியில் அழைத்துக் கேட்டார்கள். குறிப்பாக,  அடிமைகள் மற்றும் அடிமை வணிகம்  தொடர்பாக எழுப்பப்படும்  கேள்விகளுக்கு விளக்கம்  வேண்டும் என்று கேட்டார்கள். இன்ஷா அல்லாஹ்,  இன்னொரு வாய்ப்பில் அவைகளைப் பற்றியும் எழுதலாம் என்ற எண்ணத்திலும் உறுதியிலும் இந்த முதல் பாகத்தை நிறைவு செய்துவிடவே  நாடுகிறேன்.

நபிமார்களும் , நபித்தோழர்களும்,  நல்லடியார்களும் நாடெங்கும் சுற்றி எல்லோருக்கும் எடுத்துரைத்த பணியே அழைப்புப் பணி.
நல்லவர்களை எல்லாம் வணங்கத்தக்க சிலைகளாக வடித்து வணங்கிய தன்னுடைய சமுதாயத்தை தடுத்து நிறுத்த தாங்கொணாத முயற்சிகளை மேற்கொண்ட மனித குலத்தின் இரண்டாம் தந்தை என்று வரலாறு சுட்டிக் காட்டும் நபி நூஹ் ( அலை) அவர்களும்,  
சிலைசெய்யும் தந்தைக்கு எதிராக அவர் செய்துவைத்த சிலைகளை உடைத்துக் காட்டி,  இவை சக்தி பெற்று இருந்தால் நான் உடைக்கும்போதே தடுத்திருக்குமே என்று பகுத்தறிவுச் சிந்தனையை  புதிய பரிமாணத்துக்கு எடுத்துச்சென்று உணர்த்திய  நபி இப்ராஹீம் ( அலை) அவர்களும் ,   
ஆக்கவும் அழிக்கவும் ஆற்றல் பெற்ற நானே இறைவன் என்று நாட்டுமக்களை அடிமையாக்கி வைத்திருந்த இராணுவ ஆற்றல் மிகுந்திருந்த பிர்-அவுனை அவனது அரசவையிலேயே நின்று அஞ்சாமல் அறிமுகப்படுத்திய நபி மூஸா ( அலை) அவர்களும்,
சிக்கிக் கொண்டது சிறையாக இருந்தாலும் இதயத்தில் ஏந்திக் கொண்டது ஓரிறைக் கொள்கை என்பதால் உடன் இருந்தோருக்கு எடுத்துரைத்த அழகிய வரலாறு படைத்த  நபி யூசுப் ( அலை) அவர்களும்,
அவர்கள் எடுத்துரைத்த ஏகத்துவக் கொள்கைகளுக்காக அந்த சமுதாய மக்களால் வாரி அணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதை வரலாற்று வரிகள் வரைந்து வைத்திருக்கின்றன. மாறாக அவர்கள் அனைவரும் தூற்றப்பட்டதையும் துயருக்கு ஆளாக்கப்பட்டதையும் நெருப்புக் குண்டத்தில் இறக்கப்பட்டதையும் சொந்த ஊர்களைவிட்டு சொந்த மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டதையும் வரலாற்றின் வழி நெடுகிலும் காண்கிறோம். அதே போலத்தான் நல்லதை எடுத்துரைக்கும் அழைப்பாளர்களும் பல அவதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். இத்தகைய அவதிகள் அரசியல் சட்ட  விதிமுறைகளாலும் இருக்கலாம்; ஆட்சி அதிகாரத்தின் பெயரிலும் இருக்கலாம்; சொந்த இன மத  மக்களாலும் கூட  இருக்கலாம். இறைவனின் பெயரால் இவைகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை முதலில் அழைப்புப் பணியாளர்கள் தங்களது இதயங்களில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அழைப்பாளர்கள் சில நேரங்களில் சிறைப் படுத்தப் படுகிறார்கள்; சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; விமானநிலையங்களில் வீண் பழி சுமத்தித் தடுத்துவைக்கப்படுகிறார்கள்; தீவிரவாதிகள் என்று கூட குற்றப்படுத்தப்பட்டு  முத்திரை குத்தப்படுகிறார்கள். 
இவ்வளவு துயரையும் ஏற்றுக் கொள்ளும்   அழைப்ப்ப்பாளர்களுக்கு என்ன நன்மை இருக்கிறது?
அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் “ மக்களை நல்வழிக்கு அழைத்தவருக்கு அவரைப் பின் தொடர்ந்தவர்களின் நன்மையையும் உண்டு . அது பின் தொடர்ந்தவர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது “ என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறியதாக (ஸஹீஹ் முஸ்லிம் 5194) அறிவிக்கிறார்கள்.
திருமறை குர் ஆன் , அழைப்பாளர்கள் பயணிக்கத் தக்க  ஒரு அழகிய பாதையைப் போட்டுத்தருகிறது.   
அத்தியாயம் அந்நஹ்ல் ( 16: 125)  கூறுகிறது.
“ அறிவார்ந்த மெய்ப் பொருளாலும் அழகான அறிவுரையாலும் உம்முடைய இறைவழிக்கு மக்களை அழைப்பீராக! மேலும் தேவைப்பட்டால் மிகச் சிறந்த முறையில் அவர்களுடன் விவாதம் புரிவீராக! நிச்சயமாக உம்முடைய இறைவன், தன  வழியிலிருந்து பிறழ்ந்தவர்களை நன்கறிந்தவன் ஆவான்; நல்வழி பெற்றவர்களையும் நன்கறிந்தவன் ஆவான். “
இந்த வசனத்துக்கான விளக்கம் தப்சீர் இப்னு கஸீரில் மிக அழகாக விவரிக்கப்பட்டு இருக்கிறது. திருமறையின் மேற்காணும் அந்த வரிகள் அழைப்பாளர்கள் அனைவரும் தங்களது மனங்களில் இருத்திக் கொள்ள வேண்டிய  வரிகளும் முறைகளும் ஆகும். அந்தக் கருத்துக்களைத் தழுவி இங்கே குறிப்பிடுவதில் பெருமையுறுகிறேன்.
( 16: 125) ல் இறைவன் குறிப்பிடுகிற இந்த வசனம் அழைப்புப் பணியில் இருப்போருக்கு சிறந்ததொரு அடிப்படையான வழிகாட்டியாகும். இறைவழிக்கு மக்களை அழைப்போர், மூன்று வழிகளைக் கையாள வேண்டும் என்பதை இந்த வசனம் எடுத்துச் சொல்கிறது.
1.      தெளிவான விளக்கம் ( அல் ஹிக்மத் ) சொல்வதை திருந்தவும் தெளிவாகவும் ஆதாரத்தோடும் சொல்லவேண்டும். அவ்வாறு பேசும்போது சிந்தனையாளர்கள் உண்மைக்கு முன்னால் தலைசாய்ப்பர். இறைவாக்குக்கு முன்னால் வேறு எந்த வாக்கும் தத்துவமும் எடுபடாமல் போய்விடும். மனதில் பதியுமாறு சொல்வதுதான் முக்கியம்.
2.      அழகான அறிவுரை ( அல்மவ்இழத்துல்  ஹசனா) மனத்தைக் கவர்ந்து இளகச்செய்யும் அறிவுரைகளை பக்குவமாக  எடுத்துரைக்க வேண்டும். உளத்தூய்மை, பச்சாதாபம், பரிவு, மனிதநேயம் ஆகியவற்றுடன் நிதானத்தோடு சொல்லப்படும் எந்த அறிவுரையும் கல்லையும் கரைத்துவிடும் ; செத்துக் கிடக்கும் உள்ளத்தையும் உயிர் கொடுத்து எழுப்பிவிடும்.
3.      அழகிய  முறையிலான விவாதம். ( அல் முஜாதலத்துள் ஹசனா) . மக்களில் சிலர் உள்ளனர். அவர்கள் எதையும் அடிப்படையிலேயே ஏற்றுக் கொள்வார்கள். கேள்வி கேட்டு பதில் தெரிந்து, பதிலிலும் ஆட்சேபம் எழுப்பி, விளக்கம் அறிந்து மனம் அமைதி அடைந்தால்தான் ஒப்புக் கொள்வார்கள். இத்தகையோரிடம் மல்லுக் கட்டாமல் நாகரிகமாகவும் நாசுக்காகவும் விவாதம் செய்து இறைவழிக்கு அவர்களை அழைக்க வேண்டும். விவாதத்தில் மனம் புண்படும்படியான சொற்களைப் பயன்படுத்துவதோ ஆவேசம் அடைந்து கோபத்தில் வார்த்திகளைக் கொட்டுவதோ அழைப்பாளியின் நோக்கத்தைத் தகர்த்துவிடும். எதிரில் இருப்பவர் உண்மையை உணர்வதற்கு பதிலாக, அந்த உண்மைக்கு எதிராக மாறிவிட வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.


இதையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
“ நபியே! நல்லதையே கூறுமாறு என் அடியார்களிடம் சொல்வீராக!          ( ஏனெனில் ) நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையே குழப்பம் விளைவிப்பான். “ ( 17:53)  
அல்லாஹ்வின் இந்த வசனம் காட்டும் எல்லா வழிமுறைகளையும் கையாண்டும் கூட மக்கள் இஸ்லாத்தின் வழிக்கு வராவிட்டால்     அழைப்பாளிகள் மனம் சோர்ந்துவிடக்கூடாது  என்பது மிகவும்           முக்கியமானதாகும். ஏனென்றால், நல்வழி காட்டுவதுதான் அழைப்பாளர்களின் பணியே தவிர, நல்வழியில் அவர்களை கொண்டு சேர்ப்பது அவர்களின் கடமை  அல்ல. மக்களை நல்வழிக்கு கொண்டு போய் சேர்ப்பது இறைவனின் அதிகாரத்துக்குட்ப்பட்ட ஒன்றாகும்.
அத்தியாயம் அல் இஸ்ராவில் இறைவன் கூறுகிறான்.
“ மனிதர்களே! உங்கள் இறைவன் உங்களைப் பற்றி நன்கறிந்தவன் ஆவான். அவன் நினைத்தால் உங்களுக்கு கருணை காட்டுவான். அல்லது அவன் நினைத்தால் உங்களுக்கு வேதனை அளிப்பான். ( நபியே!) அவர்களுக்குப் பொறுப்பாளராக உம்மை நாம் அனுப்பவில்லை. ( 17: 54)  
இஸ்லாத்தை நோக்கி மக்களுக்கு அழைப்பு விடுவது, அதற்காக  பணியாற்றுவது மதமாற்றத்தை நோக்கி மக்களைத்தூண்டிவிடுவது ஆகுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கேட்டுப் பார்த்தோமானால் இல்லை!. இல்லை! இல்லை!  என்றுதான் சொல்லவேண்டிவரும். 
அழைப்புப்பணி, தொடக்கமாக இஸ்லாத்தின் அடிப்படையில்  தனிமனித ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது. அடுத்தவருக்கு ஒரு நல்லதை எடுத்துச் சொல்லும் முன் தான் அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்கிற சொல்லும் செயலும் ஒன்றே என்கிற தாரக மந்திரத்தை தனி மனிதர்களிடம்  தாங்கி நிற்கச் செய்கிறது. அதே  போல்  நல்லவைகளை, நான்குபேருக்கு எடுத்துச்  சொல்லும் முன்பு நாம்  கற்றுக் கொள்ளவும்  தூண்டுகிறது.    
தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்று இலக்கணம் பேசும் இயல்பினோர் கூறுவார்கள். சிந்தித்துப் பார்த்தால், அழைப்புப் பணி என்பது ஒரு தன்னிலையான சுயப் புரிந்துணர்வாகும்.
தான்  புரிந்து கொண்டதை தான் புரிந்து கொண்டது நல்லது என்று மனதார நம்பும் சூழலில் அதை அடுத்தவருக்கும் எடுத்துச் சொல்லும்போது அது முன்னிலை என்கிற நிலை பெறுகிறது.
இவ்வாறே  பலருக்கும் அந்தக் கருத்துக்கள் விரவியும் பரவியும்  செல்லும்போது அது படர்க்கையாகிறது.
இந்தப் பணி ஒரு சமூகப் பொறுப்பு ; தார்மீக கடமை. “யாம் பெற்ற  இன்பம் பெருக இவ்வையகம்!”  என்கிற பரந்த நோக்கத்தின்பால்பட்டதாகும். தான் உணர்ந்த உண்மைகளை,  தனக்குள் மட்டும் பூட்டிக்கொண்டு  சித்த வைத்தியமாகவும் சிதம்பர ரகசியமாகவும் வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் எடுத்துரைக்கும் பணியே இறைவனுக்கும் விருப்பமான அழைப்புப் பணி. ஒரு உண்மை முஸ்லிம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் இந்த அழைப்பின் அடையாளம் மிளிர வேண்டும். அந்த அடையாளம் பார்ப்போருக்கு பாடமாகவும் படிப்பினை தருவதாகவும் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் உயர்வினை எடுத்து இயம்புவதாக வெளிப்படையாகத் தெரியவேண்டும். “ ஊருக்கு மட்டும் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை “ என்ற அடிப்படையில் இருக்கக் கூடாது.
ஆகவே அழைப்புப்பணி என்பது ஒரு வளரும் நாகரிக சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் வழிமுறையாகும். அதை மதமாற்றம் என்ற  சின்னக் குடுவையில் போட்டு அடைத்துவிட அனுமதிக்கக் கூடாது.
இவைகளைப் பற்றி இன்னும் பலபடவும் நாம் பலம் பெறவும்  பேசவேண்டி இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் காலம் கனிந்தால் மீண்டும் சந்திப்போமா?!!!!.

முதல் பாகம் நிறைவுற்றது. 

9 Responses So Far:

Unknown said...

//தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்று இலக்கணம் பேசும் இயல்பினோர் கூறுவார்கள். சிந்தித்துப் பார்த்தால், அழைப்புப் பணி என்பது ஒரு தன்னிலையான சுய புரிந்துணர்வாகும்.
தான் புரிந்து கொண்டதை தான் புரிந்து கொண்டது நல்லது என்று மனதார நம்பும் சூழலில் அதை அடுத்தவருக்கும் எடுத்துச் சொல்லும்போது அது முன்னிலை என்கிற நிலை பெறுகிறது.
இவ்வாறே பலருக்கும் அந்தக் கருத்துக்கள் விரவியும் பரவியும் செல்லும்போது அது படர்க்கையாகிறது.//

// “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!” என்கிற பரந்த நோக்கத்தின்பால் பட்டதாகும்.//

அப்போ, இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு, இலக்கணமும் இலக்கியமும் பயன்படுகின்றன! இல்லையா?

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

அழைப்புபணி முதல் பகுதியின்முடிவு நெஞ்சை நெகிழ வைத்தது.அன்பானபண்பான பணிக்குநன்றியும்பாராட்டும்.

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லாஹ்!

அன்பிற்குரிய காக்கா.

அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் ஆரோக்கியத்தையும் வக்தில் பரக்கத்தையும் மார்க்க அறிவில் தெளிவையும் தந்து அதிகமதிகம் நூல்களை எழுத நாடுவானாகவும்

ஆமீன்.

அதிரை.மெய்சா said...

பணி நிமித்தம் தொடர்ந்து தாங்களது பதிவுக்கு கருத்திட முடியாவி.டாலும் நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன். அழைப்புப்பணி முதல் பகுதி நிறைவு எங்களது அறிவுப்பசிக்கு வயிறு நிறையாத நிறைவுதான்.

இருந்தாலும் எண்ணிலடங்கா நிறைய வினாக்களுக்கு விடயம் தந்திருக்கிறீர்கள். உங்களது விடாமுயற்சிக்கும் வெவ்வேறு கோணத்தில் ஆராய்ந்து விளக்கம் தந்து அறியத்தந்தமைக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் காக்கா.

Ebrahim Ansari said...

அதிரை அறிஞர் அஹமது காக்கா அவர்கள் சொன்னது

//அப்போ, இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு, இலக்கணமும் இலக்கியமும் பயன்படுகின்றன! இல்லையா?//

அதில் உங்களைப் போன்ற மேதைகளுக்கெல்லாம் சந்தேகம் வராது காக்கா.

"எந்த மக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோமோ அவர்களுடைய மொழியில் அந்தத் தூதை எடுத்து வைப்பது அவசியம். மேலும், அந்தக் கால கட்டத்தின் மொழி மரபுகளை கையாளவேண்டும். அழைப்புக்காக இதுவே சரியான பொருத்தமான முறையாகும். "

என்று மெளலானா எம் ஏ ஜெமீல் அஹமத் அவர்கள் தனது "அழைப்புப்பணி ஏன்? எப்படி ?" என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இந்த நூல் நீங்கள் என்னிடம் தந்து படிக்கச் சொன்னதுதான்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,

இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து தங்கள் ஆர்வமூட்டும் கருத்துக்களை தொடர்ந்து தந்ததற்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஒரு பம்பரமாகச் சுழன்று பணியாற்றுகின்ற நீங்கள் உங்களது பணிச்சுமைகளுக்கு இடையிலும் தாங்கள் ஊட்டிய ஆர்வமும் காட்டிய அன்பும் என்றும் மறக்கத்தக்கதல்ல. மிக்க நன்றி.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் மற்றொரு பாகத்தில் சந்திக்கலாம்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர் மெய்ஷா அவர்களுக்கு,

தங்களின் அன்பான கருத்திடலுக்கும் தொடர்ந்த வாசிப்புக்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஜசக்க்கல்லாஹ் ஹைரன்.

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

உங்களது இந்த ஆக்கமும் ஒரு சிறந்த பணி. இனிமேல் வரும் அழைப்பு பணியாளர்களிக்கு ஒரு மேன்வல் கைடு. பல விசயங்களை இதில் ரெஃபரன்ஷாக எடுத்து உபயோகப்படுத்தலாம்.


இன்னும் பல தலைப்புகளில் நீங்கள் எழுத இறைவன் அருளட்டும்.

ஊருக்கு வந்து இன்னும் பல விசயங்களை உங்களுடனும் முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுடன் பேச வேண்டும் என்று இருந்தேன். பெற்றோர்களின் முதுமையில் நான் தூரம் பயணிப்பதை இப்போது தவிர்க்க வேண்டிய சூழ்நிலை.

காலம் ஒருநாள் மாறும் , நம் கவலைகள் யாவும் தீரும்



உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.