Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முஹர்ரம் 15

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2016 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலி) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1433 வருடங்கள் சென்றுவிட்டது. 

1434-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம், ''நமது மார்க்கத்தை'' தூய்மையான வழியில் நாமும் பின்பற்றி, ''பிற மக்களுக்கும்'' எடுத்துச் சொல்வதற்கு (அழைப்பு பணியில் ஈடுபட)  திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணாக உள்ள காரியங்கள் அனைத்தையும் தவிர்த்து விட்டுத் தூய்மையாக  வாழ்வதற்கு, ''தியாக மனப்பான்மையை'' வளர்த்துக் கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்!.

புதிய ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளும், இரவும், புதிய ஆண்டின் துவக்க நாளும் இந்த உலகத்தில் உள்ளவர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், வரவேற்கும் முறைகளைப்பார்த்தால் பகுத்தறிவுக்கு பொருந்தாமல் இருப்பதை நன்கு அறிய முடியும். கேளிக்கையும், வான வேடிக்கையும், அநாச்சாரமான காரியங்களும், மூட நம்பிக்கைகளும் சேர்ந்த கலவையாக இவர்களின் புத்தாண்டு வரவேற்பு இருக்கும். இந்த நாளில் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதுபோன்ற பலவிதமான மூட பழக்கங்களை காணலாம். மேலும் இந்நாளில் இவர்கள் பயன்படுத்தும் பொருள்களால் காற்று மாசுபடுவதோடு பயன்படுத்தும் தண்ணீரையும் மாசுபடுத்தி தெருவெங்கும் குப்பைக்காடாக மாற்றிவிடுவார்கள்.

வல்ல அல்லாஹ்வின் தூய மார்க்கமான இஸ்லாத்தில் எந்தவிதமான அநாச்சாரங்கள், ஆராவாரம், மூட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் அழகான முறையில் ஹிஜ்ரி ஆரம்பிப்பதே தனிச்சிறப்பாகவே இருக்கிறது. (முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்யும் பழக்கங்களை கணக்கில் சேர்க்க வேண்டாம். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை தரட்டும்). ஆங்கில மாதங்களின் பெயர்கள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் நமது இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் அதிகம் பேருக்கு ஞாபகத்தில் இருக்காது.

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:
முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா, துல்-ஹஜ்.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். (அல்குர்ஆன் 9:36)

நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது - புனிதமிக்கது என்று பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் நபிமொழிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்ளான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபுஹூரைரா(ரலி), நூல்: முஸ்லிம், அஹமது)

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா(பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேட்டார்கள். யூதர்கள் : இது ஒரு புனிதமான நாள். இன்றுதான் மூஸா(அலை) அவர்களையும், அவரது சமூகத்தினரையும் காப்பாற்றி (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரையும் அல்லாஹ் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம். அதற்கு நபி(ஸல்)அவர்கள் மூஸா(அலை) அவர்களின் விஷயத்தில் உங்களைவிட நானே அதிகம் உரிமையும், கடமையுணர்வும், தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்).

இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷுரா(பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டயாக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டயாக் கடமையல்ல. காரணம் நபி(ஸல்)அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் ரமலானின் கட்டாய (ஃபர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது நிகழ்ந்த நிகழ்ச்சியாகும் இது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்காணும் நபிமொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின், விரும்பியவர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆவியா(ரலி) மற்றும் ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத்-அஹ்மத்).

ஆஷுரா (பத்தாம்)தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போது, அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மது).

இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹரம் மாதம் 9,10 நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி(சுன்னத்) என்பதை அறியலாம். இவையன்றி வேறு ஏதும் விஷேச வணக்கங்களிலிருப்பதாக நாம் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காண முடியவில்லை. திருக்குர்ஆனின் ஆணைப்படி நோன்பு நோற்பதே நாம் ஹிஜ்ரி வருடத்தை வரவேற்கும் விதமாகும். முஹர்ரம் மாதத்தின் வணக்கங்களாகும்.

ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

முஹர்ரம் ஆஷுரா(பத்தாம்) நாளன்று தான் நபி(ஸல்)அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு சோகமான சரித்திர நிகழ்ச்சியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களில் ஒரு சாரர் முஹர்ரம் முதல் பத்து நாட்களோ அல்லது (ஆஷுரா) பத்தாம் நாளோ ஹுஸைன்(ரலி) அவர்களின் மரணத்தை நினைவுப்படுத்தி ஒப்பாரி வைப்பது, மாரடித்துக் கொள்வது, பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, ஊர்வலங்கள் நடத்துவது, மௌலூது ஓதுவது போன்ற அநாச்சாரங்களைச் செய்து வருகின்றனர். இது நபி(ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ செய்யாத அநாச்சாரங்களாகும். இஸ்லாம் அங்கீகரிக்காத செயலாகும்.

கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளக் கிழித்துக் கொண்டு, அறியாமைக் காலத்து (ஒப்பாரி)க் கூப்பாடு போடுபவன் என்னைச் சார்ந்தவனல்லன். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரலி), நூல்: புகாரி,முஸ்லிம்,திர்மிதி,இப்னுமாஜா,அஹ்மத்).

(நமது)சோகத்தைக் கண்களாலும், உள்ளத்தாலும் வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். அல்லாஹ்வின் அருளுக்குரியதாகும். கையாலும், நாவினாலும் வெளிப்படுத்துவது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: முஸ்னத்- அஹ்மத்).

(துன்பம்,துக்கம் ஏற்படும் போது) தலையை மழித்துக் கொள்பவனையும், ஒப்பாரி வைப்பவனையும், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டும் நான் விலகிக் கொண்டேன். (அறிவிப்பாளர்: அபூமூஸா அல் அஷ்அரி(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

எனவே கர்பலா நிகழ்ச்சியை ஆதாரமாகக்கொண்டு ஹுஸைன்(ரலி) அவர்களின் மரணத்திற்காக ஒப்பாரி, மாரடித்தல், தீ மிதித்தல், பஞ்சா எடுத்தல், ஊர்வலம் நடத்துதல், மௌலூது ஓதுதல் போன்ற செயல்கள் இஸ்லாத்தில் இல்லாத செயல்களாகும்.

வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலி) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1433 வருடங்கள் சென்றுவிட்டது. 1434-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் நமது மார்க்கத்தை நாமும் தூய்மையான வழியில் பின்பற்றி பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்வதற்கு (அழைப்பு பணியில் ஈடுபட) திறமையை வளர்த்துக்கொள்ளவும், நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை எதிர்கொள்ளவும் தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்.

அலாவுதீன்.S

15 Responses So Far:

Ebrahim Ansari said...

நல்ல சிந்தனைகள் நல்ல தொடக்கமாக அமையட்டும்.

Unknown said...

சிந்திக்க தூண்டும் சிறப்பான கட்டுரை.மூட பழக்கவழக்கங்களை முத்திரையிட்டு மூட வேண்டிய காலம் என்பதை இக்கட்டுரை மூலம் உணர முடிகிறது அல்ஹம்துலில்லாஹ். அதிரை நிருபரின் ஆக்கங்கள் சமுதாயத்தின் தாக்கம். பதிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி ..... இதுபோன்ற பதிப்புகள் தொடர வேண்டும்.
,,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முஹர்ரம் பற்றிய நற்பதிவு!
அது போல இம்மாத பிறை 27 ல் மார்க்கத்துக்கு விரோதமான நிகழ்வுகள் ஏதும் கடற்கரைதெரு பள்ளி ஒட்டிய வளாகத்தில் துவங்காமல் இருக்க இன்றிலிருந்தே கமிட்டியார் என்று சொல்லக்கூடியவரை நல்லபடி அணுகி அவரை ஒரு நல்வழிக்கு கொண்டு வர வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பித் அத்கள் மண்மூடிப் போகட்டும்
இன்ஷா அல்லாஹ்

Ebrahim Ansari said...

ஹிஜ்ரி -

ஒரு

வரலாற்று அதிசயம்!

இருளில் பிறந்து

வெளிச்சத்தில் வளரும்

ஆச்சரியம்!

ஹிஜ்ரி -

கருவான இடம்

அக்கினிக் கூடு

கரை சேர்ந்த இடம்

குளிர் நீர்க்காடு!

ஜனனம் -

இறப்புக்கு எழுதும்

முன்னுரை!

ஹிஜ்ரிக்கு மட்டும் அது

வரவேற்புரை!

மதினா வழங்கிய

வரவேற்புரையின்

ஆயுள் ரேகை

மறுமைநாள் வரை நீள்கிறது!

எரிந்தாலும்

வெளிச்சத்தோடு எழுகின்ற

சூரியனைப்போல்

உலகை

வெளிச்சப்படுத்துகின்ற தத்துவம்

ஹிஜ்ரி!

பிறப்பதைவிட

பெற்றெடுப்பது

சிறப்பு!

பாலைப் பெருவெளியில்

பெருமானார் - தன்

பயண வரிகளை

எழுதாதிருந்தால்

ஹிஜ்ரிக்கு

முகவரியே இருந்திருக்காது!

ஹிஜ்ரி -

பெருமானார் கொண்டு வந்த

வசந்தம்!

உலகத்தை ஆளும்

கால சுகந்தம்!

ஹிஜ்ரியின் கருவறை

மதீனாவில்தான் இருக்கிறது!

மதீனா .....

சொர்க்கத்தை சுமக்கிறது!

- அபூ ஹஷிமா

Iqbal M. Salih said...


அறிவார்ந்த கட்டுரைக்குப் பொருத்தமாக
அருமையான அபுஹஷிமாவின் வரிகள்!

Ebrahim Ansari said...

ஆரம்ப வெளிச்சமும் அபூ ஜஹல் வீட்டு ஜன்னலும்

********************

ஹிஜ்ரத்தின் ஜனனத்திற்கு

அதன் தலை வாசலிலேயே

தகனத்தை நடத்திவிட

மூடர்கள் பட்டாளம்

முண்டாசு கட்டிக் கொண்டு

புறப்பட்டது!


நிலவுகூட

நிழலைத்தேடி ஓடிவிட்ட

அந்த நடுநிசி நேரத்தில்

நபிகளாரைக் கொல்ல

நஞ்சூட்டி வார்க்கப்பட்ட

அபூ ஜஹலின் நெடிய வாள்

நஞ்சு தலைக்கேறி

நடு வழியிலேயே

மாண்டு விட்டது!

வெளிச்சத்தின் வேர்மீது

வெஞ்சினத்தை உமிழ வந்த

அபூ லஹபின் வெறுப்பு விழிகளும்

வேதத் தீயின் வேக வீச்சில்

வெந்து விழுந்தன!

சத்தியத்தை

சத்தமில்லாமல்

சாகடிக்க வந்த

குருட்டு பூதங்களால்

மக்கா

இருட்டுத் திரைக்குள்

இறந்து கிடந்தது!

அந்த இரவில்தான்....

அஞ்சான தேசத்தின்

மெஞ்சான விடியலுக்கான

தீர்ப்புநாளை

எழுதி வைத்துவிட்டு

வேதத்தின் வெளிச்சம்

வெளிநடப்புச் செய்தது!

அறியாமை இடுகாட்டின்

சாம்பல் குழியிலிருந்து

பிறந்து வந்த ஹிஜ்ரி

தாய் நிலவாம்

நூரே முஹம்மதியாவோடு

இணைந்து நடந்தது!

ஹிராக் குகையின்

தொப்புள்கொடி உறவொன்று

தவ்ர் குகை எனும் பெயரோடு

ஊரின் எல்லையில் வாழ்ந்தது!

நேசமிக்க அதன் நெற்றியில்

ஞானச் சிலந்தியொன்று

வேத நூலாய்

வாழும் நூலுக்கு

வாழ்த்து நூல் ஒன்றை

எழுதி வைத்து

வரலாறாய் ஆனது!

மருள் எரிக்க வந்த

அருள் சூரியன்

தவ்ர் ஹவுளில்

ஒளுவெடுத்து

மதீனத்து முஸல்லாவில்

தக்பீர் கட்டியது!

சொந்தங்களே இல்லாத

சுத்த இறைவனின்

தூதுத்துவ சொர்க்கம்

மதீனத்து மண்ணில்

ஈமானின் சுவாசத்தை

இறக்குமதி செய்தது!

உலகெங்கும் இஸ்லாத்தை

ஏற்றுமதி செய்தது!

தோற்றுப்போன வலியை விட

இஸ்லாத்தின்

வெற்றி தந்த வேதனை

கிழவன் அபூஜஹலின்

குருதியோட்டத்தை

கொதிப்படைய

வைத்திருக்க வேண்டும்!

ஜார்ஜ் புஷ்

ஒபாமா

நதன் யாஹு

நரேந்திர மோடி என

விசித்திர

அவதாரங்களாக வந்து

நபிகளாரின் கூட்டத்தோடு

யுத்தம் நடத்துகிறான்!

ஆனாலும் என்ன?

விழுகின்ற நட்சத்திரங்கள்

ஒவ்வொன்றும்

அபாபீல் பறவைகள் வீசிய

கற்களைப்போல்

எரி நட்சத்திரங்களாகி

எதிரிகளையே

எரித்து விடுகின்றன!

புத்தம் புது

நட்சத்திரங்கள்

புவியெங்கும்

பூத்துக் கொண்டே இருக்கின்றன!

அன்றொரு நாள்

கஹ்பாவின்

கருவறை மண்ணில்

கண்ணுதித்த

ஆதி இறை வெளிச்சத்தின்

ஆரம்ப வெளிச்சம்

அகிலத்தின் அருட்கொடையாகி

உலகத்தின்

அத்தனை அணுக்களையும்

நனைத்துக் கொண்டே இருக்கிறது!

அபூஜஹல் வீட்டு

ஜன்னல்களும்

திறந்தே கிடக்கின்றன

கதவுகளின்றி!

- அபு ஹஷிமா. ( திருவிதாங்கோடு)இன்ஷா அல்லாஹ் எனது மனுநீதி நூல் வெளியீட்டில் விருந்தினராக கலந்து கொள்வார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//- அபு ஹஷிமா. ( திருவிதாங்கோடு)இன்ஷா அல்லாஹ் எனது மனுநீதி நூல் வெளியீட்டில் விருந்தினராக கலந்து கொள்வார்.//

ஆஹா ! நல்வரவு ! வரவேற்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அறியாமை இடுகாட்டின்
சாம்பல் குழியிலிருந்து //

இதனை...

கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது...

ஹிஜ்ரத் சம்பவங்களை அழகுற சொல்லும் கவிதை !

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம் அவர்கள் சொல்வது

//அறியாமை இடுகாட்டின்
சாம்பல் குழியிலிருந்து //

இதனை...

கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது...

உண்மைதான் ஜனாப். அபூ ஹஷிமா அவர்களுக்கு கவனப் படுத்துகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், அலாவுதீன் காக்கா,

நல்ல நினைவூட்டல்..

//இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹரம் மாதம் 9,10 நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி(சுன்னத்) என்பதை அறியலாம்.//

ஜஸக்கல்லாஹ் ஹைர்..

KALAM SHAICK ABDUL KADER said...

அறிவார்ந்த கட்டுரைக்குப் பொருத்தமாக
அருமையான அபுஹஷிமாவின் வரிகள்!

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

இன்று தம்மாம் போர்டிலும் முஹர்ரம் பற்றிய பயான் அலாவுதீன் காக்காவின் ஆக்கத்தை படித்து விட்டு போனதால் பயான் நன்கு புரிந்தது

sheikdawoodmohamedfarook said...

''முஹ்ஹர்ரம்''என்றதும் அன்று தைக்காலுக்கு சுட்டுக்கொண்டு போன கொலக்கட்டை நினைவுகள் நெஞ்சிலும் சுவை நாவிலும் ஊறுகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு