Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று ! 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2016 | , , , , ,


தொடர்ந்து ஒரு கறியுடன் சோறு ஆக்கித் தந்து போரடிப்பதால் பல வகை கறிகளைப்போட்டு ஒரு தாலிச்சா வைத்துத்தரலாம் என்று இந்த பதிவு. தாலிச்சா என்ற பெயர் எப்படி வந்ததாம் தெரியுமா? தால் (DHALL)  என்றால் பருப்பு. “அச்சா” என்றால் சிறப்பு. பருப்பை சிறப்புடன் சமைப்பதுதான் தால்+அச்சா(உருது) தாலிச்சா.  (இது நான் கேட்டது).

கை கழுவி வாருங்கள் விருந்துக்குப் (விஷயத்துக்கு) போகலாம்.

வாழ்க்கையையும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களையும் ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பிட்டால் எப்படி அந்த பழத்தின் சுளைகளைச் சுவைத்துவிட்டு சக்கைகளையும், நெட்டிகளையும் தூரகளைந்து விடுகிறோமோ அதேபோல் வாழ்வில் கெட்டவைகளை ஒதுக்கிவிட்டு நல்லவைகளை மட்டும் நினைத்து ஏற்று நடந்தால்தான் வாழ்வு இனிக்கும். அதேபோல் நாம் சந்திக்கும் நண்பர்கள் ஆனாலும், குடும்ப உறுப்பினர்கள் ஆனாலும் அவர்களின் குணம் நாடி, குற்றம் நாடி அவற்றுள் குணமுள்ளவர்களை ஏற்று குற்றமுள்ளவர்களைத் தள்ளிவிட்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். 

சகோதரர்கள் இருவர் இருந்தார்கள். அதில் ஒருவன் மொடாக்குடியன். உதவாக்கரை. தனது வாழ்வில் அவன் எந்தக்காரியத்தையும் உருப்படியாக செய்ததில்லை. ஆனால் இன்னொரு சகோதரனோ ஒரு பெரிய படிப்பாளியாகவும், வெற்றியாளனாகவும் விளங்கினான். பெரிய பதவியில் அமர்ந்திருந்தான். 

ஒரே பெற்றோருக்கு –ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இந்த இருவரிடமும் காணப்பட்ட வித்தியாசங்கள் ஊராருக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது ஒருவர் இதை அந்த சகோதரர்களிடம் தனித்தனியே கேட்டார். குடிகாரன் சொன்னான். "என் வாழ்க்கை இப்படி கெட்டுப்போனதற்கு என தந்தைதான் காரணம். அவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பார். ஒரு வேலையும் செய்யமாட்டார் அவருக்குப் பிறந்த நான் மட்டும் எப்படி இருப்பேன். அவரைப் பார்த்தே அப்படி வாழ பழகிக்கொண்டேன்” என்று சொன்னான். 

அடுத்தவனைக் கேட்டபோது அவனும் தனது வெற்றிக்கு தனது தந்தையே காரணம் என்று சொன்னான். “என தந்தை மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்தார். அவரைப்பார்த்து அவர் மாதிரி வாழக்கூடாது என்று நான் கவனமாக வளர்ந்தேன் சின்ன வயதிலேயே அப்படி முடிவு செய்ததால் இப்படி வெற்றியாளனாக என்னால் வர முடிந்தது. அவரது தவறுகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை உயர்த்தி இருக்கிறது” என்று சொன்னான்.  

வாழ்க்கை தரும் பாடங்களில் இருந்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  

நம் கண் முன்னே காணும் சிலருடைய வாழ்க்கை சம்பவங்கள் நமக்கு படிப்பினைகளையும் அனுபவத்தையும் தருகின்றன. அடுத்தவர்கள் எடுத்துவைக்கும் அடிகளைப்பார்த்து நல்லவற்றை பின்பற்றவேண்டும் . 

சிலர் தாம் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்வார்கள். அந்த தவறுக்கு கற்பனை காரணங்களைச் சாதகமாகக் காட்டுவார்கள். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் . ஆளுக்கு ஆள் பார்க்கும் பார்வை மாறுபடும் . காகிதத்தைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை எழுத தோன்றுகிறது. கழுதைக்கோ சாப்பிடத்தோன்றுகிறது. 

ஒரு பணக்காரத்தந்தை இருந்தார். தனது மகனுக்கு ஏழ்மையை புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக தனது மகனின் வயதை ஒத்த ஒரு ஏழைச்சிறுவனை ஒரு குப்பத்திலிருந்து கூட்டிவந்தார். மகனோடு பழகவிட்டு அந்த குப்பத்தின் வாழ்க்கையை மகனிடம் பேசச்சொன்னார். ஒரு நாள் இருந்துவிட்டு குப்பத்து சிறுவன் போய்விட்டான். பணக்காரத்தந்தையின் மகன் பெற்றவரிடம் வந்தான்,

“என்னப்பா எல்லாம் தெரிந்து கொண்டாயா?” என்று தந்தை கேட்டார். 

மகன் சொன்னான், “அப்பா அவனை ஏழை என்றீர்கள். நாம்தான் ஏழையாக இருக்கிறோம். நம் வீட்டில் ஒரு நாய்தான் இருக்கிறது அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் பத்து பதினைந்து நாய்கள் ஓடி வருமாம். நாம் இந்த அறையில் படுக்கிறோம். அவர்கள் படுக்கும் இடம் வெட்டவெளியாம்: வானம் ரோடு எல்லாம் பார்த்துக்கொண்டே படுத்து தூங்குவார்களாம்: நம்வீட்டில் டியூப் லைட்டும் டேபிள லைட்டும்தான் இருக்கின்றன. அவர்களுக்கு நிலவு, நட்சத்திரம் எல்லாம் வெளிச்சம் தருமாம். நாம் ஏசி போட்டால்தான் தூங்க முடியும் அவர்களுக்கு காற்று கடலில் இருந்து வருமாம்.  நம்மைவிட அவர்கள் நல்ல வசதியாக வாழ்கிறார்களே! “ என்றான் பையன். தந்தை பதில் பேசவில்லை.

இப்படி பார்வைகளும்,  உணர்ந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்  வித்தியாசப்படுகின்றன. ஒரே காலகட்டத்தில் அரசியல் செய்யும் ஒரு தலைவர் ஒருவருடைய பார்வையில்  தானைத்தலைவராகவும் அதே தலைவர் அடுத்தவருக்கு கொள்ளைக்கூட்டத்தின் தலைவராகவும் தென்படுகிறார். ஆனாலும் இரண்டுக்கும் மத்தியில் உண்மை என்ற ஒன்று இருக்கவே செய்கிறது . அதை உணர்ந்து அறிந்து கொள்வதே வெற்றிக்கு அடிகோலும். ஆராயாமல், சிந்திக்காமல் பொத்தாம்பொதுவிலும், சாய்ந்தால் சாயுற பக்கம் சாய்வதாக இருந்தாலும் அது வெற்றிக்கு வழியை திறந்து விடாது.  

ஒரு பட்டப்பகலில் ஒரு மரத்தடியில் ஒருவன் படுத்து நன்றாக தூங்கி கொண்டு இருந்தான். அந்த வழியாகப் போன ஒரு விவசாயி பாவம் வேலை அதிகம் போலிருக்கிறது- அதனால் தூங்குகிறான் என்று நினைத்தான். அடுத்து ஒரு குடிகாரன் அதைப்பார்த்துவிட்டு பாவம் நன்றாக குடித்திருப்பான் போலிருக்கிறது மயங்கி தூங்குகிறான் என்று நினைத்தான். அதன்பின் ஒரு திருடன் அதைப்பார்த்துவிட்டு இரவு முழுதும் கண்விழித்து திருடப்போய் இருப்பான் போலிருக்கிறது அதுதான் தூங்குகிறான் என்று எண்ணினான். ஒரு சாமியார் அதைப்பார்த்துவிட்டு சரிதான் வாழ்க்கையை வெறுத்து வந்துவிட்டான் போல இருக்கிறது – அதனால் நிம்மதியாக தூங்குகிறான் என்று எண்ணினார். இப்படி நாம் யாராக இருக்கிறோமோ அப்படியே மற்றவர்களையும் நினைக்கs சொல்லும் மனது. உண்மையை அறிந்து கொள்ள முயலும் மனப்பக்குவம் வளரவேண்டும். பார்த்த உடனே ஆராயாமல் ஒரு முடிவுக்கு வருவது பரவலான மனப்பான்மையாக இருக்கிறது. 

ஆனால் எதையுமே பாசிடிவ் அப்ரோச் என்கிற உடன்பாடு கொள்கையில் பார்த்தால் பாதி  வெற்றிபெற்றுவிட்டதாக அர்த்தம்.   பாசிடிவ் அப்ரோச் என்பது முதலில் நம் மனதை நாம் பெறப்போகும் வெற்றிக்கு  தயாராக்கி வைப்பதும் அந்த வெற்றியை நோக்கி நமது ஓட்டத்தை துவக்குவதும் ஆகும். நமக்குள் தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழப்பச்சோறு ஆக்கிக்கொண்டிருந்தால் ஒரு முடிவும் எடுக்க முடியாது.

"எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்-" 

என்றார் கவிஞர் அதிரை அப்துல் கலாம்.  

எல்லாவற்றையுமே எதிர்மறையாக சிந்திப்பது பலருக்கு கூடப்பிறந்த இயல்பு. பேருந்து நிற்கும் இடத்தில் காத்து இருக்கும்போது ஐந்து நிமிடம் பேருந்து வர தாமதமாகிவிட்டால் கூட வீணாப்போன மனதில் அந்த பஸ் ஏதும் மரத்தில் மோதிவிட்டதோ என்று எதிரான சிந்தனை வரும். நம்பிக்கை என்பது வாழ்வின் அடிப்படை. அதனால்தான் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஈமான் முதல் கடமையாக இருக்கிறது. நாம் எவ்வளவுதான் நம்பிக்கையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி சிலர் வருவார்கள். நம்முடைய முயற்சிகளையும், நம்பிக்கைகளையும் எதிர்மறை கருத்துக்கூறி தகர்ப்பதற்கேன்றே சிலர் வருவார்கள். 

“என்னப்பா சவூதி போறியாமே அந்த வெயில் ஒத்துக்குமா?” என்றும் , “லண்டன் போறியாமே அந்த குளிர் ஒத்துக்குமா?” என்றும், 

"மகளுக்கு இன்னார் வீட்டில் பேசி நிச்சயம் செய்துவிட்டாயாமே பையனைப்பற்றி விசாரிச்சியா அமெரிக்காவிலிருந்து வந்தவன் என்று சொல்றாங்களே!” 

“இந்த இடத்திலா மனைக்கட்டு வாங்கினே அங்கு பேய் நடமாடுதாமே!” “அவனுக்கா கடன் கொடுத்தே வந்தமாதிரிதான்!” 

“இந்த பைக் ஏன் வாங்குனே உழைக்காதே!” 

“இவரை வச்சா வீடு கட்டுறே உருப்பட்டாப்போலத்தான்.!” 

இப்படி நம்மை நோக்கி எதிர்மறை எண்ண அம்புகளை விடுவோர் அதிகம் பேர் சுருட்டு குடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருககிறார்கள். அவ்வப்போது வந்து அவர்களின் பிரடியையும் முழங்கையையும் சொரிவார்கள். நம்மிடம் ஒரு சமூசா வங்கி தின்பதற்காக நம்மை சாக்கடையில் தள்ளும் யோசனைகளைக் கூறி நம்மை குழப்பி விடுவார்கள். 

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்குத் தயாராகின, அவை மலையேற ஆரம்பிக்கும்போது பார்வையாளராக இருந்த ஒருவர் “இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவுதான்” என்று கூறினார். 

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்திவிட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ” மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப்போகின்றன “என்றார், உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கி விட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர்“உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது”என்று கேட்டார்.

அதற்கு அந்தத்தவளை கூறிய பதில் ” எனக்கு காது கேட்காது“ என்பதாகும்.

முயற்சிகளை முறியடித்துப்போடும் ஆலோசனைகளை கேட்பதைவிட கேளாமை நல்லது. சில இடங்களில் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் இருப்பது கூட நல்லதுதான். மூளை சலவை செய்யும் தன்னலம் மிக்கவர்கள் - நமது எண்ணங்களின் இடுப்பை ஒடித்துப்போடுபவர்கள்- வளரும் பயிர்களை முளையிலேய கிள்ளிவிடுபவர்கள் – நிறைய இருககிறார்கள். 

ஆடு கழுதையான கதை அறிந்த நமக்கு இதுபற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை. 

பலூன்காரரிடம் ஒரு சிறுமி வந்தாள்.

‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள்.

‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’

‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

‘‘ஏம்மா கேக்குற?’’

‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.

‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா.உள்ள இருக்கிற காற்றுத்தான். .

என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தால், யார் வேண்டுமானாலும் உயரப்பறக்கலாம் ’’ என்றார். 

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. நமது உள்ளத்தின் – அறிவின்- சட்டியில் உள்ளதுதான் நமது அன்றாட வாழ்வின் அகப்பையில் வரும். நமது எண்ணமே வாழ்வு. நமது நினைப்புத்தான் நமக்கு பிழைப்பை கொடுக்கிறது அல்லது கெடுக்கிறது. ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கலக்கம்? கண்களில் ஏன் இந்த மயக்கம்?   மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு நல்ல  குறிக்கோள் – அதை நிறைவேற்ற ஒரு திட்டம்- அதற்கான உழைப்பு, முயற்சி இவைகள் இருந்தால் வெற்றி நமதே! இன்ஷாஅல்லாஹ். 

இபுராஹீம் அன்சாரி

40 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

வாழ்த்துகள் சகோ. இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு,

நல்ல “தத்துவ”ங்களுடன் கூடிய பாடம் !

சேக்கனா M. நிஜாம் said...

// "எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்-"


என்றார் கவிஞர் அதிரை அப்துல் கலாம். //


கவிக்குறளின் உணர்வுப்பூர்வமான வரிகள் !

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன். அன்புச் சகோதரர்கள் ,”பொருளாதார வல்லுநர்” இப்றாஹீம் அன்சாரி காக்கா மற்றும் “விழிப்புணர்வு வித்தகர்” சேக்கனா நிஜாம். அடியேனின் குறள் வெண்செந்துறை அடிகளை கோடிட்டுக் காட்டியும் அவ்வரிகள் உணர்ச்சிப் பூர்வமானவைகள் என்றும் எடுத்தியம்பிய உங்கள் இருவரின் நல்லுள்ளங்களைப் பார்த்து என் மனம் கூறும் வாழ்த்து!

உண்மையில் ஒரு கவியுள்ளத்தின் ஆழமான எண்ணம் இதுதான்:

“நாம் எழுதும் வரிகள் சமுதாயப் புரட்சிக்கு ஒரு வித்தாக அமைய வேண்டும்; சமுதாயப் பிரச்னைகள் எனும் சமுத்திரப் பிரளயங்களை சிரட்டை அளவேனும் சிரத்தை எடுத்துத் தடுக்க வேண்டும்”

எனது இனிய சகோதரர் கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதை ஓர் இந்து சகோதரரின் குடும்பம் இஸ்லாத்தை அறிய முயற்சி செய்ய வைப்பதும் கூட “கவிதையின் தாக்கம்” என்பதை புரிந்துணர்வில் குறைபாடு உடையோர் புரிந்து கொள்வார்களாக!

இக்கட்டுரை நமது நடைமுறை வாழ்க்கையின் உதாரணங்களுடன் ஒட்டி வனையப்பட்டிருப்பதும் ஒரு “தால்+அச்சா” தான்!

அன்புச் சகோதரர் நிஜாம்:

தாங்கள் வேண்டிக் கொண்டபடி வாரம் ஒரு முறை விழிப்புணர்வு கவிதை அனுப்பி வைக்கத் தற்பொழுது எனது பணி பளுத் தடையாக உள்ளது (2011ம் ஆண்டின் கணக்குத் தணிக்கைக்கான எனது பங்கு ஆயத்த நிலைக்குக் கொண்டுவர வேண்டிய பணி பளு). இருப்பினும், தேர்வு எழுதும் மாணாக்கரின் புத்துணர்ச்சிக்காக “முயற்சி” பற்றிய ஒரு கவிதை அனுப்பி விட்டேன். மேலும், அதே தலைப்ப்பில் மற்றுமொரு கவிதை வரிகள் இத்தருணம் என் எண்ணத்தில் வருடிக்கொண்டிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைப்பேன்.

அன்புச் சகோதரர் இப்றாஹீம் அன்சாரி:

என் பெயர் “அபுல் கலாம்” (அபு+அல்+கலாம்= புணர்ச்சி இலக்கணத்தால் , அபு+அல் என்பது அபுல் என்றாகும்) அப்துல் என்றால் “அடிமை” என்று பொருள்படும். அல்லாஹ்வுக்குரிய பெயர்க்கு முன்னால் அப்து என்று போடலாம் (உ-ம்: அப்து+அல்லாஹ்=அப்துல்லாஹ், அப்து+அல்+ரஹ்மான்=அப்துற்றஹ்மான்) என் பெயரில் அப்துல் கலாம் என்றால் “பேச்சின் அடிமை” என்று பொருள் உண்டாகும். இதனைத் தவிர்க்க வேண்டும்; அபுல் கலாம் என்றால் = பேச்சின் தந்தை என்று பொருள்.

இங்கு என் “சுய புராணம்” எழுதுவதாக எவரேனும் எண்ணினால் என்னை மன்னித்து விடுக

Noor Mohamed said...

இறை நம்பிக்கையும் உள்ளத்தில் உறுதியும் இருந்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை இக்கட்டுரையில் காட்டுகிறார் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள்.

//"எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்-"//

என்ற என் நண்பர் உறவினர் கவியன்பன் கலாம் அவர்களின் வரிகள்தான் இக்கட்டுரையின் கருவாய் அமைந்துள்ளது.

With God I am Hero
Without God I am Zero.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாலிச்சா சுப்பர் காக்கா.அடுத்தது கறியை ரெடி பண்ணுங்க.

// கை கழுவி வாருங்கள் விருந்துக்குப் (விஷயத்துக்கு) போகலாம்.//

விருந்துக்கு போறவங்க கையை கழுவாம இடம் கிடைத்தால் போதுமென்று உட்கார்ந்து விடுகிறார்கள்.கையை கழுவ சொன்னால் இப்பத்தானே தொழுதுட்டு வந்தோம் என்கிறார்கள்.

ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்க.மனதில் ஃபேசன் வாழ்க்கை வாழ்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொல் படி நடந்தால்.உலகத்தில் மட்டுமில்லை. மறுமையிலும் வெற்றி நிச்சயம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// நல்லவைகளை மட்டும் நினைத்து ஏற்று நடந்தால்தான் வாழ்வு இனிக்கும். அதேபோல் நாம் சந்திக்கும் நண்பர்கள் ஆனாலும், குடும்ப உறுப்பினர்கள் ஆனாலும் அவர்களின் குணம் நாடி, குற்றம் நாடி அவற்றுள் குணமுள்ளவர்களை ஏற்று குற்றமுள்ளவர்களைத் தள்ளிவிட்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். /////

///// வாழ்க்கை தரும் பாடங்களில் இருந்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். /////

//// உணர்ந்து அறிந்து கொள்வதே வெற்றிக்கு அடிகோலும். ஆராயாமல், சிந்திக்காமல் பொத்தாம்பொதுவிலும், சாய்ந்தால் சாயுற பக்கம் சாய்வதாக இருந்தாலும் அது வெற்றிக்கு வழியை திறந்து விடாது./////

//// நமக்குள் தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழப்பச்சோறு ஆக்கிக்கொண்டிருந்தால் ஒரு முடிவும் எடுக்க முடியாது. ////

//// நமது உள்ளத்தின் – அறிவின்- சட்டியில் உள்ளதுதான் நமது அன்றாட வாழ்வின் அகப்பையில் வரும். நமது எண்ணமே வாழ்வு. ////
***************************************************************************************************

மாஷா அல்லாஹ்! நல்லதொரு படிப்பினை அனுபவ அறிவுரை மக்கள் மனங்களில் பதியும்படி உள்ளது. வாழ்த்துக்கள்! சகோதரரே!

சேக்கனா M. நிஜாம் said...

// தொடர்ந்து ஒரு கறியுடன் சோறு ஆக்கித் தந்து போரடிப்பதால் பல வகை கறிகளைப்போட்டு ஒரு தாலிச்சா வைத்துத்தரலாம் என்று இந்த பதிவு. தாலிச்சா என்ற பெயர் எப்படி வந்ததாம் தெரியுமா? தால் (DHALL) என்றால் பருப்பு. “அச்சா” என்றால் சிறப்பு. பருப்பை சிறப்புடன் சமைப்பதுதான் தால்+அச்சா(உருது) தாலிச்சா. (இது நான் கேட்டது).//

“தாலிச்சா” வைப் பற்றி அதிரை வரலாற்றில் பதியப்பட வேண்டிய நல்ல குறிப்புகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனம் மட்டும் நல்லா இருந்தால் எப்படியும் சாதிக்கலாம்.

நல்ல தத்துவங்கள்.

சேக்கனா M. நிஜாம் said...

// அன்புச் சகோதரர் நிஜாம்:

தாங்கள் வேண்டிக் கொண்டபடி வாரம் ஒரு முறை விழிப்புணர்வு கவிதை அனுப்பி வைக்கத் தற்பொழுது எனது பணி பளுத் தடையாக உள்ளது (2011ம் ஆண்டின் கணக்குத் தணிக்கைக்கான எனது பங்கு ஆயத்த நிலைக்குக் கொண்டுவர வேண்டிய பணி பளு). இருப்பினும், தேர்வு எழுதும் மாணாக்கரின் புத்துணர்ச்சிக்காக “முயற்சி” பற்றிய ஒரு கவிதை அனுப்பி விட்டேன். மேலும், அதே தலைப்ப்பில் மற்றுமொரு கவிதை வரிகள் இத்தருணம் என் எண்ணத்தில் வருடிக்கொண்டிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைப்பேன்.//

“கவிக்குறள்” சகோ. அபுல் கலாம் அவர்களே,

பொதுத்தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்கு “கல்வி விழிப்புணர்வு கவிதைகள்” மற்ற நேரங்களில் “சமுதாய விழிப்புணர்வு கவிதைகள்” போன்றவைகளை நமது சகோதர வலைதளங்களில் பதிந்து உங்களின் சேவைகளைத் தொடருங்கள்.......................

Anonymous said...

அன்புநிறை கவிஞர் அபுல் கலாம் அவர்களுக்கு,

அலைக்குமுஸ்ஸலாம்.

தங்கள் பெயர் குறித்த எழுத்து விளக்கத்தை அறிந்துகொண்டேன். இனி வரும் நிகழ்வுகளில் தவறு ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வேனாகவும். இன்ஷா அல்லாஹ்.

தம்பி நூர் முகமது அவர்களே!

நீங்கள் உண்மையிலேயே பேராசிரியர் அப்து காதிர் அவர்கள் கூறுவதுபோல் ஒரு அதிரையின் கலைக்களஞ்சியம் தான். ஒப்புக்கொள்கிறேன்.

கவிஞர் அபுல் கலாம் அவர்களுடைய கவிதையை படித்தபோது ஏற்பட்ட பொறிதான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
கவிதைகளுக்கு இப்படி கருத்தை தூண்டும் சக்தி உள்ளது.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கை கழுவிட்டு வாங்கன்னு கூப்பிட்டதும் சரி சூப்பர் தாலிச்சா சப்பாட்டு பதிவுதான்னு நினைத்திருந்தேன்... ஆனால், சமையல்ல நடந்திருக்கு !

ஆளாலுக்கு அள்ளுகிறார்களே "கட்டுரையிலிருந்து அதன் சுத்தமான சுவை கொடுத்த ருசியில்"

அன்று
//காகிதத்தைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை எழுத தோன்றுகிறது. கழுதைக்கோ சாப்பிடத்தோன்றுகிறது. //

இன்று
கணினியின் எழுத்துப் பலகையை பார்த்தால் கவிஞனுக்கு கவிதையை தட்டிப் பார்க்கத் தோன்றுகிறது..... தமிழே இல்லாவிடினும் தங்கிளீஸில்

அடிமேல் அடியெடுத்து வைக்க பயம், அதனை போக்கிட என்ன செய்யனும் ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//மனம் மட்டும் நல்லா இருந்தால் எப்படியும் சாதிக்கலாம்.//

ம‌னமும், ப‌ண‌மும் பெருக‌ இருந்தால் இன்னும் நெறையா சாதிக்க‌லாம் என்ப‌தே இன்றைய‌ உல‌க‌ நிய‌தியாகிவிட்ட‌து.

அன்சாரி காக்கா, தாலிச்சாவுக்கு த‌குந்த‌ விள‌க்கம் த‌ந்து விட்டீர்க‌ள் அருமை. 'கொல‌க‌றி' என்றும் ஒன்று ந‌ம் ஊரில் உண்டே? அது ப‌ற்றி ஏதேனும் விள‌க்க‌ம் உண்டா? (தாலிச்சாவின் ம‌றுபெய‌ர் தான் கொல‌க‌றியா? தெரிய‌வில்லையே...)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் மூத்த சகோதரர் இபுறாஹிம் அன்சாரி காக்கா... ஜஸாக்கல்லாஹ்...

//சிலர் தாம் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்வார்கள். அந்த தவறுக்கு கற்பனை காரணங்களைச் சாதகமாகக் காட்டுவார்கள். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் . ஆளுக்கு ஆள் பார்க்கும் பார்வை மாறுபடும் //

யதார்த்தம் இதுதான் காக்கா,, அடுத்தவரின் தவறை சுட்டிக்காட்டுவதற்கு நான் தகுதியானவனா என்பதை சுயபரிசோதனை செய்யும் நிலையில் எத்தனை நபர்கள் உள்ளார்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் கேள்வி குறியே.. இன்று நம்மவர்கள் அநேகர் ஒருவன் செய்த ஒரு தவறை வைத்தே அவனின் அனைத்து நற்செயல்களையும் குற்றமுடையதாக சித்தரிப்பது அன்றாட காட்சியாகிவிட்டது எவ்வகையான நியாயம் என்பது தான் புரியாத புதிர்.

ZAKIR HUSSAIN said...

//“இந்த பைக் ஏன் வாங்குனே உழைக்காதே!” //

இது நம்மூர் பாஷை....ஒரு முறை
நண்பர் முஹம்மத் அலி [ அல்நூர் ] யிடம் ஒரு நண்பர் ' இந்த செருப்பு உழைக்குமா?" என கேட்டார், அதற்கு முஹம்மத் அலி சொன்னது ' ம் உழைக்கும்...சவூதிக்கு போய் உழைச்சி டிராஃப்ட் எல்லாம் அனுப்பி வைக்கும்"

ZAKIR HUSSAIN said...

இந்த கட்டுரைக்கும் இதில் உள்ள 2 பெங்குயின் நிற்கும் படத்தை தேர்வு செய்த காரணத்தை கண்டு பிடிப்பவர்களுக்கு 1 பச்சை வார் , 1 கோடாலிசாப் தைலம் , மிதிரிக்கட்டை, முன்டா பெனியன், மீசைக்காரர்தைலம் [ வீசக்காரதைலம் ]/ டைகர்பாம் பரிசளிக்கப்படும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது நம்மூர் பாஷை....ஒரு முறை
நண்பர் முஹம்மத் அலி [ அல்நூர் ] யிடம் ஒரு நண்பர் ' இந்த செருப்பு உழைக்குமா?" என கேட்டார், அதற்கு முஹம்மத் அலி சொன்னது ' ம் உழைக்கும்...சவூதிக்கு போய் உழைச்சி டிராஃப்ட் எல்லாம் அனுப்பி வைக்கும்"//

ஹா ஹா...

ஆமா காக்கா, செலவே வைக்காது இந்த செருப்பு :)

Anonymous said...

//இந்த கட்டுரைக்கும் இதில் உள்ள 2 பெங்குயின் நிற்கும் படத்தை தேர்வு செய்த காரணத்தை கண்டு பிடிப்பவர்களுக்கு 1 பச்சை வார் , 1 கோடாலிசாப் தைலம் , மிதிரிக்கட்டை, முன்டா பெனியன், மீசைக்காரர்தைலம் [ வீசக்காரதைலம் ]/ டைகர்பாம் பரிசளிக்கப்படும். //

இதற்கான பதிலை ஜிம் கெர்ரி நடித்து சமீபத்தில் பிரபளமான “மிஸ்டர் பாப்பெர்ஸ் பெங்குயின்” எனும் ஹாலிவுட் படத்தில் மறைத்து வைத்திருக்கிறோம் என்பதை பத்தாயக் கைலியும் டெட்ரக்ஸ் சட்டையும் போடுற பினாங்குகாரவுகளுக்கு சொல்லிக்கொள்கிறோம்.

Sabeer Ahmed

Anonymous said...

தம்பி ஜாகிர்! மற்றும் நெறியாளர் அபு இபுராஹீம் அவர்களே!

நம்மூர் பாஷையே ஒரு தினுசுதான்.

" என்னா கெப்பரு?"

" தடுமளுக்கு இஞ்சி சாரை உச்சந்தலையில் தேய் கண்டிக்கும்"- பள்ளிவாசலில் பஞ்சாயத்து வச்சு கண்டிக்குமா?

" பித்தத்துக்கு கொத்தமல்லியை அவிச்சுக்குடு கேட்கும்!"- கொத்தமல்லி போய் பித்தத்தை ஏன் எப்படி என்று கேட்குமா?

" அவ ஒரு ராங்கி புடிச்சவ"

இதேமாதிரி அழிச்சாட்டியம், அடந்தருசு, பொச்சரிப்பு, வலுப்பம், வலந்து, சள்ளை , சடப்புடம் - ஆகிய வார்த்தைகளுக்கு ஏதாவது மொழி அகராதி அடிப்படை இருக்கிறதா? கவிஞர்கள்தான் சொல்லவேண்டும்.

வஸ்ஸலாம்.

இப்ராஹீம் அன்சாரி

Shameed said...

பல காய்கறிகளை (கதை )போட்டு தாளிச்ச வச்சாலும் வச்சிங்க மனம் தாங்க முடியலே
மாமா வின் தாளிச்சாவிற்கு பரோட்டாகாரர் வந்து பரோட்டா (பின்னுட்டம்)போட்டா இன்னும் துக்கலா இருக்கும் (பரோட்டாகாரர் யார் என்று யாருக்காவது வெளங்குதா)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// (பரோட்டாகாரர் யார் என்று யாருக்காவது வெளங்குதா) //

சகோ.யாசிர் என்று நினைக்கிறேன்.

Shameed said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.

// (பரோட்டாகாரர் யார் என்று யாருக்காவது வெளங்குதா) //

//சகோ.யாசிர் என்று நினைக்கிறேன்//

வலைக்கும் முஸ்ஸலாம்
என்ன இப்புடி தவ்வா கல்லை போட்டு நொறுக்கி புட்டியளே!

Anonymous said...

@Janab. MSM Naina. //அன்சாரி காக்கா, தாலிச்சாவுக்கு த‌குந்த‌ விள‌க்கம் த‌ந்து விட்டீர்க‌ள் அருமை. 'கொல‌க‌றி' என்றும் ஒன்று ந‌ம் ஊரில் உண்டே? அது ப‌ற்றி ஏதேனும் விள‌க்க‌ம் உண்டா? (தாலிச்சாவின் ம‌றுபெய‌ர் தான் கொல‌க‌றியா? தெரிய‌வில்லையே...)//

எனக்கு தெரியவில்லை. ஆனாலும் விசாரித்த வரையில் "கொலகறி " என்பது இறைச்சி போடாமல்- பருப்பு சேர்க்காமல் சாம்பாராகவும் இல்லாமல்- இறால கூட போடாமல் - வெறும் காய்கறிகளை மட்டும் போட்டு அவசரத்துக்கு வைக்கும் கறி என்று சொல்கிறார்கள்.
இந்த அடிப்படையில் இன்னொருவர் ( மகளிர் அணியில் உள்ளவர்) கருதுகிறார் அவசரத்துக்கு நம் வீட்டு கொல்லையில் விளையும் காய்கறிகளைப்போட்டு ஒரு கறி சமைப்பதாம் அது. அதாவது "கொல்லைகறி" என்பது " கொலகறி"யாக மாறி இருக்கலாம் என்று கருதுகிறார்.

ஏற்றுக்கொண்டு பைலை மூடிவிடலாமா?

இந்த தாலிச்சாவுடைய விளக்கம் சொன்ன மறைந்த பெருமகனார் யார் என்பதை இன்ஷா அல்லாஹ் ஏற்புரையில் சொல்கிறேன்.

வஸ்ஸலாம்.

இப்ராஹீம் அன்சாரி.

Muhammad abubacker ( LMS ) said...

ஹமீது காக்கா சொன்னது.

// வலைக்கும் முஸ்ஸலாம்
என்ன இப்புடி தவ்வா கல்லை போட்டு நொறுக்கி புட்டியளே! //

அதிரை நிருபரில் மொரு மொரென்று பரோட்டா தந்தவங்களை மறக்க முடியுமா?

sabeer.abushahruk said...

காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாசித்து முடித்ததும் ஏதோ வகுப்பு முடிந்ததுபோல ஒரு உணர்வு வியாபிக்கிறதே, நீங்கள் பதிவு எழுதுனீர்களா பாடம் நடத்துனீர்களா?

தங்களின் நண்பர் அவர்களுடான பழக்கம் ஒட்டிக்கொண்டதா?

"வைகள்" என்று கைவைத்துவிட்டீர்கள் இனி எங்களுக்கு வாரம் ஒரு நாள் விருந்துபசரிப்புதான்.

தொடர து ஆ!

Anonymous said...

அன்பு தம்பி கவி சபீர் அவர்களே!

ஜசக்கல்ல்லாஹ். மிக்க மகிழ்ச்சி.

வார்த்தைகளால் வலை விரிப்பது கவிஞர்களின் இயல்பு. அந்த வகையில்

//"வைகள்" என்று கைவைத்துவிட்டீர்கள் இனி எங்களுக்கு வாரம் ஒரு நாள் விருந்துபசரிப்புதான்.//

வாராவாரம் எழுதவேண்டுமென்று அன்புக்கட்டளை இட்டு இருப்பதாக கருதுகிறேன்.

இந்த விருந்து உங்களின் இனிப்பு கவிதைகள் இல்லாமல் பூர்த்தியாகாது.

இன்ஷா அல்லாஹ் .

அது சரி இரவு நேரம் வந்துவிட்டது எல்லா மக்களும் புரோட்டா புரோட்டா என்கிறார்களே.

எங்கே மாஸ்டர். ? இரவுப்பசியாற்ற அழைத்துவிட்டேன். இதோ வருகிறாராம். காத்து இருங்கள்.

வஸ்ஸலாம்.

இப்ராகிம் அன்சாரி.

Thameem said...

மாமா உங்கள் எழுதிலயே எங்களுக்கு தாலிச்சா மனம் வீசுது.

Thameem said...

மாமா உங்கள் எழுதிலயே எங்களுக்கு தாலிச்சா மனம் வீசுது.

KALAM SHAICK ABDUL KADER said...

நாவலர் -”அதிரைக் கலைக்களஞ்சியம்” நூர் முஹம்மத்:

//With God I am Hero
Without God I am Zero.//

I was in the corner
Allah Has Blessed me with honor

’’விழிப்புணர்வு வித்தகர்” சேக்கனா நிஜாம்:

உங்கள் அன்புக் கட்டளைகள் இனஷா அல்லாஹ் நிறைவேறும்!

“பொருளாதார வல்லுநர்” இப்றாஹிம் அன்சாரி காக்கா:

உண்மையில் உங்கள் விருந்துக்கு உதவுவது இணைப்பாய்-இனிப்பாய் வரும் கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதை யெனும் “ப்ரிணி” என்பதை நினைவு படுத்தி விட்டீர்கள். இன்ஷா அல்லாஹ் வலிமா விருந்தழைப்பிதழ் இல்லாமலே வாரா வாரம் விருந்துண்ண வருவோம்!

அப்துல்மாலிக் said...

//பார்த்த உடனே ஆராயாமல் ஒரு முடிவுக்கு வருவது பரவலான மனப்பான்மையாக இருக்கிறது. //

இது மட்டுமே நாம் எடுக்கும் எந்த முடிவானாலும் அதாள பாதாளத்துக்கு தள்ளிக்கிட்டுப்போகுது

அருமையான கலவை காக்கா, சிறு சிறு உதாரணம், கதைகள் சொல்லி எளிமையா புரியவெச்சிட்டீங்க

Yasir said...

மிக இயல்பாக,வாழ்க்கையில் நாம் அவசியமாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை அழகாக எழுத்தில் கொண்டுவந்து இருக்கீறீர்கள் மாமா...

//நம்பிக்கையாக இருந்தாலும் நம்மைs சுற்றி சிலர் வருவார்கள். நம்முடைய முயற்சிகளையும், நம்பிக்கைகளையும் எதிர்மறை கருத்துக்கூறி தகர்ப்பதற்கேன்றே // ரூம் போட்டு யோசிப்பானுங்களோ !!!!

Yasir said...

//எங்கே மாஸ்டர். ? இரவுப்பசியாற்ற அழைத்துவிட்டேன். இதோ வருகிறாராம். காத்து இருங்கள்.//பசியோடு காக்க வைத்தமைக்கு சாரி எல்லாம் மைதா சார்டேஜ்தான்....

பரோட்டாவை பற்றி அவ்வளவு எழுதியும் இன்னுமாக சாப்பிட ஆசைப்படுறீங்க சாவன்னா காக்கா...ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிறதால....கடப்பாசி,வட்லப்பபம் எல்லாம் வஞ்சு பரிமாறிடுவோம் கூடிய விரைவில்

Anonymous said...

அன்புடை சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்.

தலைப்பிட்ட பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர்.

நீங்கள் தரும் ஊக்கம் எழுதும் அனைவரையும் உற்சாகப்படுத்த உதவிடும்.

நண்பர். சேக்கனா.நிஜாம், கவிஞர்கள் அபுல் கலாம், சபீர், மற்றும் ஜனாப்கள். நூர் முகமது, L.M.S.. அபூபக்கர், எஸ். அலாவுதீன், MH-J, அபுஇப்ராஹிம், MSM-NAINA, தாஜுதீன், ஜாகிர், ஷாகுல் ஹமீது & தமீம் சகோதரர்கள், அப்துல் மாலிக், மருமகன் யாசிர். அனைவருக்கும் எனது மகிழ்வை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாளிச்சா என்ற சொல்லுக்கு விளக்கம் கூறியவர் யார்? என்று நீங்கள் அறிந்து கொள்ள விரும்பலாம்.

அதைக்கூறியவர்கள் மர்ஹூம். எஸ். அப்துல் கரீம் காக்கா அவர்கள். இவர்கள் சேதுரோட்டில் “பிஸ்மிலேண்ட்” இல்லம் கட்டி வசித்தவர்கள். சென்னையில் புகழ் பெற்ற EDUCATIONAL EMPORIUM என்ற நிறுவனத்தின் உரிமையாளர். எனது வகுப்புத்தோழர் அகமது கமால் ( எங்கேயடா இருக்கிறாய்?) மற்றும் அகமது கபீர் காக்கா அவர்களின் தந்தை. MAJFA அஷ்ரப் அலியின் மாமனார். வயது வித்தியாசம் பாராமல் பழகக்கூடியவர். பல உலக மார்க்க விஷயங்களை இவர்களுடன் பழகி சிறு வயது முதல் அறிந்து இருக்கிறேன். இவர்கள் கூறிய பல செய்திகள் வியப்பிலிடும். முதுமையிலும் இளமை மனம் கொண்டவர். நகைச்சுவை உணர்வுடையவர். அவர்களின் நற்பதவிக்கு நான் இருகரம் ஏந்தி கண்கள் கசிய இறைஞ்சுகிறேன்.

அவர்களுடன் ஒருமுறை எனது மறைந்த அண்ணன் அக்பர் அவர்கள் வீட்டில் பகல் உணவு உண்ணும்போது “ தாலிச்சா போட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறியபோது தெறித்து விழுந்த முத்து அது. இது போல் பல முத்துக்களை அவர்கள் மூலம் நான் சேகரித்து வைத்திருக்கிறேன். தேவைப்படும்போதெல்லாம் எடுத்து பகிரப்படும் . இன்ஷா அல்லாஹ்.

புளிக்கு TAMARIND என்று எப்படி பெயர் வந்தது? கேட்டால் சொல்வேன். கேட்டதைத்தான் சொல்கிறேன். பலர் ஏற்கனவே கேட்டும் இருக்கலாம். யார் கேட்டில்லாவிட்டாலும் கலைக்களஞ்சியம் கேட்டு இருக்கும்.

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

Shameed said...

புளியப்பத்தி சொல்லுறப்போ புலி வாலை புடித்த கதையும் வருமா? மாமா

KALAM SHAICK ABDUL KADER said...

TAMAR AL HIND (இன்ந்திய பேரிச்சை) என்ற பொருள்படும் அறபுச் சொல் மருவி TAMARIND ஆனது.

“மிராயா” என்ற அறபுச் சொல் MIRROR ஆனது
“ஜமல்” என்ற அறபுச் சொல் CAMEL ஆனது
“ஹப்ல்” என்ற அறபுச் சொல் CABLE ஆனது
“பேண்டலொன்” என்ற அறபுச் சொல PANT ஆனது
“தவீல்” என்ற அறபுச் சொல் TOWEL ஆனது

Unknown said...

'அதிரை நிருபரில்' இது புதுசு" என்று பின்னூட்டம் இடப் போனேன். ஆனால் தேதியைப் பார்த்தால், 2012 !

sheikdawoodmohamedfarook said...

நேத்து காச்சுன தாலுச்சாவை சூடுகாட்டாமே அப்புடியே சட்டியோட கொடுத்திட்டியோலே!நாக்குலே வச்சா நல்லாத்தான் ஈக்கிது!

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

நினைவூட்டலுக்கு ஜசக்கல்லாஹ் ஹைர். யாரும் இதற்கும் போலித் தொப்பி போட்டுவிடவில்லையா?

sheikdawoodmohamedfarook said...

/யாரும் இதற்க்குபோலிதொப்பி போட்டுவிடவில்லையா?// சமிபத்தில்ரெண்டு பெருநாள் வந்ததால் தொப்பி விலை கூடிபோச்சு!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு