Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2016 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

பொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில் குறித்த கேள்வியை இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பில் மொழிந்து இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்களை திரட்டினோம். ஒவ்வொருவரின் பதிலிலும் தீர்க்கமான பார்வைகள் இருந்தன. அவை அனைத்துக்கூறுகளையும் அலசிய கருத்துக்களாக அமைந்தன. பொதுச்சிவில் எதிர்க்கும் அதே வேளையில் நடுநிலையுடன் இன்றைய குழப்பங்களின் காரணங்களையும் விவரித்துள்ளனர். அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

ஜெ.பானு ஹாரூன் ( வடகரை) - நாவல் எழுத்தாளர் 

இஸ்லாமியர்கள் திட்டவட்டமாக எக்காலமும் ஏற்றுக்கொள்வது ஷரியாவை மட்டுமே ! ஆடு நனைகிறதே என்று அழுது ஊளையிடாமல் கீழ் மட்டத்திலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்விக்கும் ,வேலை வாய்ப்பிற்குமான சட்டத்திருத்தங்கள் செய்யுங்கள் ; உணவுத்தேவைக்கான வழிகளை காட்டுங்கள்; தினம் இடைக்காலத்தடை போடுபவர்களுக்கு அடைக்கலமளிக்காதீர்கள்-இதுவே இஸ்லாமியர்களுக்கு அரசு செய்யும் பேருதவி

ஒருவருக்கொருவர் அநியாயம் செய்து இறைவனுக்கும் மாறு செய்து துணையை விட்டுவிட்டு ஓடி ஒளிவதை விட, உடனிருந்துகொண்டே பிடிக்காத இணையை கொடுமை படுத்தி நச்சு உணர்வுடன் நெறுக்கிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பதை விட இஸ்லாமிய சட்டப்படி செய்து கொள்ளப்படும் ''தலாக் '' -- க்கில் எவ்வித குறையுமில்லை.

மனநோய் , தாம்பத்யத்தில் ஒத்துழையாமை , குடும்பத்தில் நெருக்கமின்மை ,கடமைகளை புறக்கணித்தல் ,துணைக்கு மாறு செய்தல் ,சொத்துக்களை அபகரித்தல் ,குழந்தைகளை பிரித்துவைத்தல் போன்ற பல காரணங்கள் ! சிலவை வெளியே சொல்லாமல் பெண்களின் நலன் கருதி மறைக்கப்பட்டும் விடும் . தலாக்கினால் ஆண்களின் நடைமுறை வாழ்க்கையும் , பொது வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது . மனைவியை தவிர வேறு எந்த பெண் உறவுகளும் ஒரு ஆண்மகனுக்கு நெருக்கமான பணிவிடைகள் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை . அதனால் இன்னொரு திருமண வாழ்க்கையின் தேவையும் ஏற்படுகிறது.

வெறுமனே கேட்பவருக்கெல்லாம் ''தலாக் ''-கை அனுமதித்து விடுவதில்லை . சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைக்குரிய காரணங்கள் ,பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் , குழந்தைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்று அலசி ஆராய்ந்த பின்னரே வேறு வழியில்லாத நிலையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . தம்பதியரிடையே பிரச்சனை நிகழ்ந்தால் சமாதானம் செய்துவைக்க மற்றவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது, இணக்கம் ஏற்பட வேண்டி பொய் சொல்லவும் இச்சமயத்தில் அனுமதி அளிக்கிறது. இத்தகு கட்டங்களைத் தாண்டியே பயனற்ற நிலையில் தலாக் கொடுக்கப்பட , இஸ்லாத்தை புரியாதவர்கள் தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். 

ஹுசைனம்மா (அபுதாபி) - எழுத்தாளர், இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் எதிர்க்கப் படவேண்டியதே. அடிமை இந்தியாவில், தம்மை எதிர்ப்பதில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்தபோதும், ஷரிஆ சட்டத்திற்குத் தடையில்லை. சுதந்திர இந்தியாதான் அந்தச் சுதந்திரத்தை மறுக்கிறது.

சிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து எழும் இஸ்லாமிய சமூகம், சலசலப்பு அடங்கியதும் மீண்டும் தனது கூண்டுக்குள் பதுங்கி விடுகிறது. சிவில் சட்டத்தைவிட, நம் இஸ்லாமியச் சட்டம் சிறப்பானது என்பதை நிரூபிக்குமளவு நம் சமூகத்தின் நிலை உள்ளதா என்ற பரிசீலனையோ, உரிய நடவடிக்கைகளோ எதுவும் எடுக்காமல் அதே நிலையைத் தொடர்ந்தால், நம் உரிமைப் போராட்டம் வீழ்வதற்கு நாமே காரணமாவதைத் தடுக்க முடியாது.

தலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.

பலதார மணத்தை நபிவழியெனும் நாம், விவாகரத்தின்போது குழந்தைகளைப் பெண்களின்மீது சுமையாக்கி அவர்களின் மறுமணத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறோம்.

பர்தா அணிவதில் பெண்களுக்கு நரகத்தைச் சொல்லிப் பயமுறுத்தும் நாமேதான், நரகத்தின் அச்சமின்றி அவர்களின் சொத்துரிமையில் கைவைக்கின்றோம்.

இறைவனே வடிவமைத்துத் தந்த நம் சட்டம் எத்தனை சிறப்பானது? ஆனால், குர் ஆனில் இறைவன் முந்தைய “அஹ்லே கிதாப்” மக்களை எதற்காகச் சபித்தானே, அதே தவற்றை - சாதகமானவற்றைப் பின்பற்றுவதும், பாதகமானதை ஒதுக்குவதும், திரிப்பதும் ஆன அதே பாவத்தை அல்லவா நாம் செய்கிறோம் என்ற உண்மையை என்று உணர்வோம் நாம்?

அந்நாளில்தான் சிவில் சட்டத்தை நம்மீது திணிப்பதற்கு அஞ்சுவார்கள்!!

13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;

மலிக்கா (முத்துப்பேட்டை) - கவிதாயினி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :

பொதுசிவில் சட்டம்குறித்து காட்டுத்தீபோல் இஸ்லாமிய நெஞ்சங்களில் பற்றிக்கொண்டுள்ளது. இது ஜனநாயகநாடு/ இதில் பல்வேறு சமயத்தினர் வாழ்கிறார்கள்.  இந்தியச்சட்டத்திலும் அந்தந்த மதங்களுக்கு உண்டான தனிப்பட்ட சட்டங்களிலும் மதநம்பிகைகளிலும் அவரவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும்போது இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் அந்த உரிமையை பறிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?

அதேசமயம், இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாய் இஸ்லாமியவாதியென தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்

சரிவர அதன் சட்டங்களை புரியாது அல்லது பின்பற்றத்தெரியாது சிலபல குழப்பங்களை செய்து  அதனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை நிச்சயமாய் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் !  பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே!. 

ஷாபானு வழக்கைப்போல் மேலும் சிலர் தொடுத்த வழக்குகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பேற்காது,  பொறுப்பற்று இதுபோன்ற அநீதிகளை கண்டும் காணாமலும் விட்ட அந்தந்த மாநில மற்றும் ஊர் ஜமாத்தார்கள் , சிலபல பெரிய அறிவாளிகள் பொடுபோக்கு நிலையே இதுபோன்ற பெண்களின் அநீதிகளுக்கு காரணமாக இருக்கும். அதனை உரியமுறையில் களையெடுத்து களையவேண்டுமே தவிர எங்களின் வாழ்வியல் பாடங்களான இஸ்லாமிய சட்டமே தவறானதென்ற குற்றச்சாட்டை எப்படி ஏற்கமுடியும்? ஆனால் அதனை சரிவர நடைமுறைக்குகொண்டுவராது செயல்படுத்தாதன் விளைவே விஷ்வரூபமாய் இன்று!

மேலும் எந்த சமயத்தில்தான் இல்லை இதுபோன்ற உட்பூசல்கள் ? இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள் நாங்கள் உடன்படுகிறோம். மத உணர்வுகளில் தலையிட வேண்டாம் !

பெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி : 

பொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.

சபிதா காதர் (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் : 

பொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில்  அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன் இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே  பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு.

எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை

சித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி : 

பெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது! பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.

யாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்

பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.

இருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா?

ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”

ஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :

நாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் செய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.

இஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.

நூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.

ஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.

அதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப்புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை ! 

பர்வீன் அனஸ் (சென்னை) - Managing Director at BURAK India , Director (company) at Burak Lanka Private Limited. 

பொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.

மட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விசயம்தான் பொதுசிவில் சட்டம்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவாளித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமைகளுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?

நமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.

இந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள், ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

ஆமினா முஹம்மத்
செயலாளர் - இக்றா பயிற்சி மையம்
நிறுவனர் - இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//இந்தப் பிரச்சனையின் வீரியம்குறைந்ததும் பிரிந்து விடாமல் அனைவரும் ஓர் அணியில் நில்லுங்கள்.//சகோதரி பர்வீன் அனஸ்சொன்னது. அத்தைக்கு மீசை முலைக்கட்டும்.

Ebrahim Ansari said...

//தலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.//

அது மட்டுமல்ல, அதற்கும் மாறாக மாற்றார் கடைப்பிடிக்கும் வரதட்சணையை வீடாகவும் நகையாகவும் சீர் சீராட்டாகவும் நிலமாகவும் சொத்தாகவும் வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் பேரம் பேசி வாங்குகிறோமே. நமக்கு மார்க்கத்தைப் பற்றிப் பேச தகுதி இருக்கிறதா?

Ebrahim Ansari said...

இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், //பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள்//

ஒவ்வொரு கிராமத்திலும் வெளியே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து அல்லல்படும் பெண்களின் துயர் துடைக்க உள்ளூர் ஜமாத்துகள் நியாயமாக முன்வராதவரை இந்தப் பிரச்னைகள் மாற்றார் கைகளுக்குப் போவதை தடுக்க இயலாது.

Ebrahim Ansari said...

//பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.//

ஆம். முத்தலாக் பற்றியும் இன்னும் பெண்ணுரிமை சார்ந்த பல விஷயங்கள் பற்றி பிற மத சகோதரர்களிடம் நிலவும் தவறான புரிந்துணர்வைப் போக்கும் வகையில் அவர்களும் கலந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக பலதார மனம் பற்றி பரவலான தவறான புரிந்துணர்வு நிலவுகிறது. இந்ததவறான புரிதலை நீக்கி விளங்கச் செய்வதும் நமது கடமை.

நாம் என்ன செய்கிறோம்? நமது மக்கள் வாழும் பகுதியில் ஒரு மவுலானா அல்லது பேராசிரியரை பேசவைத்துக் கூட்டம் நடத்திக் கலைகிறோம். அவர்கள் பெரும்பாலும் நமக்குத் தெரிந்த வரலாறுகளையே சொல்கிறார்கள். நாம் மட்டும் விளங்கினால் மட்டும் போதுமா? அடுத்தவர்களும் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள வழி செய்யுங்கள். அதுவரை இவ்வாறான நச்சுக் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவர்களால் விதைக்கப்பட்டவாறே இருக்கும். வேறுபாடுகள் விஸ்வரூபம் எடுக்கும்.

சகோதரியின் இந்தப் பதிவுக்கு மிகுந்த பாராட்டுக்கள். கருத்துரைத்த சகோதரிகளுக்கும் ஜசாக்கல்லாஹ் ஹைரன்.

Ebrahim Ansari said...

முஸ்லிம்களான நாம்இந்தியாவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

திருக் குர் ஆனின் மொழிபெயர்ப்பு, நபி மொழிகள், அண்ணலார் (ஸல்) அவர்களின் வாழ்வு, ஆகியவற்றை இந்த நாட்டின் எத்தனை மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் கடமையை நிறைவேற்றி இருக்கிறோம்? இல்லை என்பதுதானே நமது பதில்?

அந்த மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இஸ்லாத்தின் உண்மைகளை அவர்களுக்கு சரியாக புரியவைத்தோமா? இல்லையே!

சரி இது ஒரு பக்கம் போகட்டும்.

நாமாவது நமது வாழ்வின் ஒவ்வொரு செயல்களையும் திருமறை, நபி மொழியின் வழியில் வார்த்து எடுத்து வாழ்கிறோமா? அப்படி செய்து இருந்தாலாவது இங்கு வாழும் கோடிக்கணக்கான மற்றவர்கள் நம்மைப் பார்த்தாவது நமது மார்க்கத்தைப் புரிந்து கொள்வார்களே! நாம் இதைச் செய்யவும் தவறி விட்டோமே!

இத்தகைய தவறுகளை நாம் செய்ததால் அதன் விளவுகளை நாம் பார்க்கிறோம். இந்தநாட்டின் பெரும்பகுதி மக்கள் இஸ்லாத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் யார்?

நாம். நாம் மட்டுமே.

( Courtesy: மெளலானா M.A. ஜமீல் அஹமத் - அழைப்புப் பணி ஏன்? எப்படி )

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு