Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கூலிப்படைகள்! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2016 | , , , ,


கூலிப்படைகள்
களம் காண்கின்றன

கைக்கூலி வாங்கியே
கலைத்துப்போனவர்கள்
காணாமல் போய்விட -அல்லாஹ்வின்
மெய்க்கூலி ஒன்றே
மேன்மையென நாடும் -முஸ்லிம்
கூலிப்படைகள்
களம் காண்கின்றன

இந்தக் கூலிப்படையினர்
கடப்பாரை தரிக்காத
கரசேவகர்கள்

உடைத்தழிக்கும் கூட்டத்தவரல்லர்
உணவும் உடையும் உரையுளும்
உழைத்தளிக்கும் உறவினர்கள்

எந்தக் கொம்பனுக்கும்
பாதம் பணியாத
வேதம் அருளப்பட்ட
வீர கம்பீரக் கூட்டம்...
மனிதம் காக்க
மகளிரின்
பாதம் தாங்குகிறது

பேரிடர் நேரும்போதெல்லாம்
ஊடுருவி உதவும்
முஸ்லிம் தீவிரவாதிகள்

தன்னுயிரைத் துச்சமெனக் கொண்டு
மக்களின்
இன்னுயிர் காக்கும்
இஸ்லாமிய பயங்கரவாதிகள்

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காவிநிறம் காணாத
பேரிடர் களத்தில்
சாதிமதம் பாராமல்
சேவை செய்யும்
பிற்போக்குவாதிகள்

மதநம்பிக்கையையும்
மனிதநேயத்தையும் வைத்து
ஆடுபுலி ஆடும்
வேடதாரிகள் பார்வையில்
விசமிகள்

மறை விருத்தங்களை
மனத்தினில் கொண்டு
இறைப் பொருத்தத்தை
மட்டுமே வேண்டிடும்
கூலிப்படைகள்...
மூழ்கும் சென்னையில்
மிதவைகளாயினர்
முதுகில் சுமந்து
முகமன் கூறினர்

போரிட மட்டுமே
வாள் ஏந்திய வம்சம்
பேரிடர் மீட்கவே
தோள் தந்து தாங்கினர்

மக்கள் சேவைக்கான
மகத்தான கூலி - இவர்களுக்கு
மறுமையில் கிடைக்க
மன்றாடுவோம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

12 Responses So Far:

Ebrahim Ansari said...

நேற்றிரவு நியூஸ் செவென் தமிழ் தொலைக் காட்சியில் " அன்புப் பாலம் " என்ற தலைப்பில் கேள்விநேரம் நிகழ்ச்சியில் ஒரு அருமையான விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நியூஸ் செவென் தொலக்காட்சியின் தொகுப்பாளர்களும் , செய்தியாளர்களும் கலந்து கொண்டு வெல்ல நிவாரணப் பணிகளில் தாங்கள் பெற்ற வியக்கத் தக்க அனுபவங்களையும் நம்ப முடியாத மனிதாபிமான நிகழ்வுகள் வெளிப்பட்ட நிகழ்வுகளையும் - சில நேரங்களில் கண்களில் நீர் மல்க - விவரித்தனர்.

ஒட்டு மொத்தமாக அனைவரும் புகழ்ந்து கூறியது முஸ்லிம் தொண்டர்கள் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள் பற்றியே.

உதாரணமாக, ஜாபார்கான் பேட்டையில் வீடிழந்து கொட்டும் மழையில் வெளியேறி தண்ணீரில் தட்டுத்தடுமாறி நடந்துவந்து கொண்டிருந்தவர்களுக்கு , ஜாம் தடவிய பிரட் துண்டுகளை வழங்கிக் கொண்டே எதிரில் வந்த முஸ்லிம் குடும்பத்தினர் பற்றியதுமாகும். . செய்தி சேகரிப்பளா ரான தனக்கும் ஒரு பிரட் தரப்பட்டதாக கூறினார்.

இன்னொரு செய்தியாளர் , ஒரு நிகழ்வைக் கூறினார்கள்.

அவர்கள் ஒரு வயதான கணவன் மனைவி. வீட்டில் வேறு யாருமில்லை. பிள்ளைகள் அமெரிக்காவில் . உறவினர்கள் சற்று தூரத்தில் இருந்தார்கள். அவர்கள் வசித்தது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பை முஸ்லிம் இளைஞர்கள் தத்து எடுத்ததுபோல் பணியாற்றினார்கள். அனைவருக்கும் அசைவ உணவு - பிரியாணி தயாரித்து வழங்கப்பட்டது. நாம் குறிப்பிட்ட வயதானவர்கள் பிராமணர்கள். ஆகவே அதை அறிந்த முஸ்லிம் தோழர்கள் அவர்களுக்காக சைவ உணவு- சப்பாத்தி ஆகியவை தயாரித்து வழங்கியதுடன் அவர்கள் வழக்கமாக சாப்பிட வேண்டிய மருந்துகள் தீர்ந்து போன நிலையில் அவைகளையும் வாங்கிக் கொடுத்து அவர்களது வீட்டை சுத்தப் படுத்தியும் கவனித்துக் கொண்டார்களாம். அடுத்தநாள் அந்த வயோதிகர்களின் உறவினர்கள் அவர்களைத் தேடி வந்து தங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று அழைத்த போது அவர்களுடன் கூடச்செல்ல மறுத்து , " இதோ! எங்களது முஸ்லிம் பிள்ளைகள் எங்களை கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் வீட்டைவிட்டு வர விரும்பவில்லை " என்று சொன்னார்களாம்.

அதே போல் செய்தி நெறியாளர் திரு . செந்தில் அவர்கள் முஸ்லிம் இயக்கங்களின் மனிதாபிமானத் தொண்டுகளை பலவாறு வியந்தும் புகழ்ந்தும் பாராட்டினார். அதில் முக்கியமானது சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலுக்குள்ளே முடங்கிக் கிடந்த சகோதரர்களுக்கு தலையில் தொப்பிகளுடன் உள்ளே சென்ற முஸ்லிம்கள் சைவ உணவு தயாரித்து வழங்கியதுதான் என்று கூறினார்.

ஒரு தொலைக் காட்சி செய்தி ஊடகம் பதிவு செய்த சில செய்திகள் இவை.

மாஷா அல்லாஹ். உதவி தேவைப்படுவோர்க்கு உதவும் நிலையில் இருந்து உதவிய அந்த இளைஞர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.

//மக்கள் சேவைக்கான
மகத்தான கூலி - இவர்களுக்கு
மறுமையில் கிடைக்க
மன்றாடுவோம்! //

என்ற தம்பி கவிஞர் சபீர் அவர்களின் கவித்துவ துஆவில் அனைவரும் இணைவோமாக! .

Ebrahim Ansari said...

Ramacrshna Yess என்பவர் Nym Ray மற்றும் 3 பேர் ஆகியோருடன்.முக நூலில்
20 மணிகள் · தொகுத்தது ·
உதவுவாரில் எங்கே பார்த்தாலும்
குல்லாக்கள்... SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்...
"பாய்கள்", "முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க",
"சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க".
'தொடக்கி விட்டுவிட்டார்கள்' என்றில்லை;
'இடையில்தான் வந்தார்கள்' என்றில்லை;
'திணறி நின்றார்கள்' என்றில்லை;
'சோர்ந்து விலகிவிட்டார்கள்' என்றில்லை!
தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,
தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும், தங்களுக்கும் உணர்த்திக்கொண்டஇவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!
உடல்நலம், வீடு மறந்து - ஒருவார
ஓட்டத்திற்குப் பின்னும்
முகத்தில் அயர்ச்சியில்லை!
பேச்சில் கடுப்பில்லை!
இன்னும் ஓயந்ததாயில்லை... - இன்னும்
பெரிதாக அரவணைக்கிற திட்டங்களோடு!
இது போன்ற பேரிடரில் மக்களுக்காக
மக்கள் மத்தியில் திட்டமிட்டே கடவுள்
வைத்துவைத்த இரக்கத்தின் விதைகளின்
விஸ்வரூபங்களாக தெரிகின்றனர்!
இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது,
உங்களைத் தெரிந்துகொண்டோம்!
உள்குத்து இல்லாத ஒரு பெரிய நன்றி...
உங்களுக்கும் - உங்களை
இப்படி அனுப்பிய உங்கள் கடவுளுக்கும்!

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பேரிடர் நேரும்போதெல்லாம்
ஊடுருவி உதவும்
முஸ்லிம் தீவிரவாதிகள் !

*-*-*-*-*- இனி இதுவே தலைப்புச் செய்திக்கான இலக்கணம் -*-*-* வரும் காலங்களில் முஸ்லிம் திவிரவாதி என முடமான எந்த ஊடகமாவது தலைப்புச் செய்தியிட்டால் !

crown said...

அஸ்ஸலாமுஅலைகும்.முன்பு நான் எழுதிய சின்ன கவிதை இங்கே!
---------------------------------------------------------------
என் மார்க்கத்தின் மேல் கொண்ட பக்தி தீவிரம்,

என் இனத்தின் மேல் கொண்ட காதல் தீவிரம்,

என் உறவுகள் மேல் கொண்ட அன்பு தீவிரம்,

என் ஊரின் மேல் கொண்ட அக்கறை தீவிரம்,

என் நட்பின் மேல் கொண்ட நம்பிக்கை தீவிரம்,

மற்ற உயிரின் மேல் என் கருனை தீவிரம்,

என்னைப்பற்றி எனக்குள் ஆர்வம் தீவிரம்,

ஆம்! நான் தீவிரவாதிதான்!!!!!.

அடிப்படை அன்பு ஒன்றே வண்மம் அல்ல.

-crown

crown said...

இந்தக் கூலிப்படையினர்
கடப்பாரை தரிக்காத
கரசேவகர்கள்
-------------------------------------
காவி எண்ணம் இல்லாத வெள்ள உள்ளங்கள்!
அதனால்தான் வெள்ளத்திலும் நிறம் மாறாத வெள்ளை பூக்கள்!

crown said...

மறை விருத்தங்களை
மனத்தினில் கொண்டு
இறைப் பொருத்தத்தை
மட்டுமே வேண்டிடும்
கூலிப்படைகள்...
மூழ்கும் சென்னையில்
மிதவைகளாயினர்
முதுகில் சுமந்து
முகமன் கூறினர்
--------------------------------------
இறைப்பொருத்தமே காரணம்!மனிதம் போதித்த புனிதர்(ஸல்)வழி நடப்பதால் வந்த புத்தி!கர்ம வீரர்கள்!எம் சகோதர்கள்! இல்லம் தர மறுத்த சிலருக்கும் வெள்ளம் வந்து துன்புறுத்தும் போது உள்ளம் துடித்து உதவவந்தவர்கள்!

crown said...

போரிட மட்டுமே
வாள் ஏந்திய வம்சம்
பேரிடர் மீட்கவே
தோள் தந்து தாங்கினர்

மக்கள் சேவைக்கான
மகத்தான கூலி - இவர்களுக்கு
மறுமையில் கிடைக்க
மன்றாடுவோம்!
---------------------------------------------
இன்சா அல்லாஹ்! ஆமின் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

அதிரை.மெய்சா said...

இஸ்லாமியர்களின் உயர்ந்த உள்ளங்களை மாற்றுமத சகோதரர்கள் உணர்ந்திட இந்த இயற்கை பேரிடரான மழைவெள்ளம் வந்து மனம் உணர வைத்து இருக்கிறது. எல்லாம் இறைவன் செயல். எல்லாம் நன்மைக்கே.

அத்தோடு கூலிப் படையெனும் உனது கவிதை இச்சேவகர்களை மேலும் கைகோர்த்து நிற்க்க அன்புசெலுத்தி அரவணைக்கும் பாலமாய் அமைந்துள்ளது.அருமை.

Ebrahim Ansari said...

https://www.facebook.com/318795831612907/videos/566272843531870/?autoplay_reason=all_page_organic_allowed&video_container_type=0&app_id=2392950137

N. Fath huddeen said...

//அல்லாஹ்வின்
மெய்க்கூலி ஒன்றே
மேன்மையென நாடும் -முஸ்லிம்
கூலிப்படைகள்//

//கடப்பாரை தரிக்காத
கரசேவகர்கள்//

//உணவும் உடையும் உரையுளும்
உழைத்தளிக்கும் உறவினர்கள்//

//மனிதம் காக்க
மகளிரின் பாதம் தாங்குகிறது//

//பேரிடர் நேரும்போதெல்லாம்
ஊடுருவி உதவும்
முஸ்லிம் தீவிரவாதிகள்

தன்னுயிரைத் துச்சமெனக் கொண்டு
மக்களின்
இன்னுயிர் காக்கும்
இஸ்லாமிய பயங்கரவாதிகள்//

//சாதிமதம் பாராமல்
சேவை செய்யும்
பிற்போக்குவாதிகள்//

//ஆடுபுலி ஆடும்
வேடதாரிகள் பார்வையில்
விசமிகள்//

வரிகள் அனைத்தும் பயங்கரமாகவும் தீவிரமாகவும் இருக்கு!

கெட்டதில் ஒரு நல்லது என்பார்கள் அல்லவா?

அது இது தான் = சென்னை பெருவெள்ளம் அதில் முஸ்லிம்கள் செய்யும் நிவாரணப்
பணி. இந்த சேவைகள் "மனிதன்" என்று சொல்லும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும்
இடம் பிடித்துவிட்டது. மாஷா அல்லாஹ்.
இதுவே ஒரு நல்ல தஅவா ஆகும். இன்ஷா அல்லாஹ் இதன் வெளிப்பாடு இனிமேல் தான்
நன்றாக வெளியே வரும். வந்ததில் ஒன்று: "யூனுஸ்" என்று தமது பிறந்த
பிள்ளைக்கு பெயர் சூட்டிய ஒரு மாற்றுமத தம்பதியினர். அல்லாஹு அக்பர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.