Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

‘முனைவர்’ வேண்டாம்! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2016 | , , , ,

சில மாதங்களுக்கு முன், பொது முகநூலில் நான் பதிவு ஒன்றை இட்டிருந்தேன். அதன் சுருக்கம் இதுதான்: 

பல்கலைக் கழகங்களில் முதுகலைப் படிப்புகளுக்குப் பின் ஆய்வு செய்து பெறும் Ph.D. பட்டத்திற்கு இணையான தமிழ்ச் சொல் ‘முனைவர்’ என வழங்கப்பெற்று வருகின்றது. இதுபற்றிப் பலவாறு நான் சிந்தித்ததுண்டு. இறுதியில், தமிழகராதியை எடுத்துப் பார்த்தபோது, ‘முனைவர்’ என்ற சொல்லுக்கு, ‘பகைவர்’, ‘முனிவர்’, ‘அருகன்’, ‘கடவுள்’, ‘பித்தன்’ என்றெல்லாம் பொருத்தமற்ற பொருள்கள் இடம்பெற்றுள்ளதைக் கண்டு வியப்பும் வெறுப்பும் அடைந்தேன்.

அதனடிப்படையில் முகநூல் அன்பர்களைச் சிந்திக்கச் செய்ய முடிவு செய்து, அந்தப் பதிவை இட்டிருந்தேன். என் முகநூல் தொடர்பு வட்டம் சிறியது. அதனால், சிலரே தம் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். ஆனால், எனது இணைப்பிலுள்ள ஒருவர் தனது பரந்த முகநூல் அன்பர் பட்டியலைச் சென்றடையுமாறு அதனைத் தன் முகநூலில் மறு பதிவிட்டிருந்தார்.

அப்போதுதான், மிகப்பலர் அது பற்றிய தம் கருத்துகளைப் பதித்திருந்தனர். அதைக் காண எனக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்பர்கள் இட்ட கருத்தாடல்களுள் ‘ஆய்வறிஞர்’ எனும் சொல் மிகப் பொருத்தமாக இருந்தது. என்ன செய்வது?

இந்நிலையில் ஒரு நாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஒய்வு பெற்ற பேராசிரியரும், ‘அந்த’ப் பட்டத்தைப் பெற்றவருமான கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களிடம், அவர்களின் வீட்டுக்குச் சென்று, இது பற்றி உரையாடல் செய்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஒய்வு பெற்றுச் சென்ற பேராசிரியர் ஒருவர்தான் ‘முனைவர்’ என்ற சொல்லைப் பரிந்துரை செய்தார் என்ற தகவலைக் கூறினார்.

அதையடுத்து, பொருத்தமென்று நான் முடிவு செய்த ‘ஆய்வறிஞர்’ என்ற சொல்லைப் பற்றிப் பேராசிரியரிடம் கூறினேன். “ஊம்.... அதைவிட இது பொருத்தமாகத்தான் இருக்கிறது” என்று என் கருத்துடன் இயைந்தார்!

‘முனைவர்’ எனும் சொல் வேண்டாம்; ‘ஆய்வறிஞர்’ என்பதே மிகப் பொருத்தமானது என்று நான் பரிந்துரை செய்தால், கல்வியாளர்கள் ஏற்பார்களா? அவர்கள் சரியெனக் கருதி, “ஆம்” என்றால், அடி விழுமோ? மறுத்து, “இல்லை” என்றால், இடி விழுமோ? எனக்குத் தெரியாது!

தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் சிந்திக்கட்டும்!

அதிரை அஹ்மத்

4 Responses So Far:

Ebrahim Ansari said...

ஆய்வறிஞர் என்ற வார்த்தை முனைவர் என்பதைவிட விளக்கமான பொருளைத் தருகிறது என்பது என் கருத்து.

எங்கள் காக்காவா? கொக்கா?

sheikdawoodmohamedfarook said...

ஆய்வு அறிஞர் என்பதே பொருத்தமான சொல்லாக தெரிகிறது

sabeer.abushahruk said...

அற்புதம் !

இப்படி ஒழுங்குப்படுத்த வேண்டியவை பல தற்காலத் தமிழ் மொழியில் உள.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

'ஆய்வறிஞர்' அழகிய பட்டம் (ஆய்ந்த அறிஞர் எனும் அர்த்தம் கொடுக்கும்பட்சத்தில்)

Muhammadh said...

ஆய்வறிஞர் என்பது பொருத்தமாக தெரிகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு