உம்மா உன் வாசம்!

உன் - உயிரைப் பிரித் தெனை
உலகம் கொணர்ந்தாய்...
உதிரம் திறித் தெனக்கு
உணவாய் புகட்டினாய்!

உன் தாலாட்டு
எனக்கு ஆத்திச்சூடி,
உன் கதைப் பாட்டு
நான் கற்ற தர்மம்!

உண்டு கொழுத்தது
கண்டு களித்தாய் - நான்
உட்கொண்ட உணவில்...
உன் பசி மறந்தாய்!

புடவை வாங்காமல் எனக்கு
புத்தகம் வாங்கினாய்...
புடவைக்குள் போர்த்தி
பொத்திப்பொத்தி வளர்த்தாய்!

உதயமுடன் எழுந்து...
உணவு உண்டாக்கி...
உலகத் தேவை யுணர்ந்து-
உழைத்து ஓடாகி ...
உறங்கும் போது
உன் வியர்வையில் தோய்ந்த
உடையால் போர்த்துவாய்...

உயர் அத்தரினும் சுகந்தமன்றோ
உம்மா உன் வாசம்!

-- சபீர்

19 கருத்துகள்

crown சொன்னது…

(காக்காவுக்காக நான் தொடர்கிறேன்).
உலகைவிட விலைமிக்கதல்லவா நீகொண்ட பாசம்.
எல்லாம் செய்தாயே உனக்கு என்னால் என்ன கைமாறு செய்யமுடியும்?
உனக்கு இணையா நான் மறு உயிர் கான்பேனா?
உனக்குத்தர என்னிடம் உயிரைத்தவிர வேறுஏதும் இல்லை.
இந்த வுயிருக்கும் நான் சொந்தம் கிடையாது-
அதுவும் அல்லாஹ் உன்மூலம் எனக்கு தந்தது.
ஒன்று நான் சத்தியம் செய்கிறேன் ,அது நீ என்னை சிறுவையதில் பார்த்து கொண்டதுபோல் நானும் உன்னை பார்த்து கொள்வேன் அதுமட்டுமே என்னால் முடிந்தது...
இப்படிக்கு,
உன்..உன் அன்பு(வளர்ந்த)குழந்தை .
---------------------------------------------------------------------
பிழை இருப்பின் காக்கா மன்னிப்பீர்களா?

crown சொன்னது…

உன் வியர்வையில் தோய்ந்த
உடையால் போர்த்துவாய்...

உயர் அத்தரினும் சுகந்தமன்றோ
உம்மா உன் வாசம்!
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மனம் கவர்ந்தது!!!(மணம்)

Shameed சொன்னது…

உதிரம் திறித் தெனக்கு
உணவாய் புகட்டினாய்!

உண்டு கொழுத்தது
கண்டு களித்தாய் - நான்
உட்கொண்ட உணவில்...
உன் பசி மறந்தாய்!

அது எப்படி இது போன்ற வார்த்தைகள் உங்கள் கவிதையில் அருவியாய் கொட்டுகின்றது

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா !

//உண்டு கொழுத்தது
கண்டு களித்தாய் - நான்
உட்கொண்ட உணவில்...
உன் பசி மறந்தாய்!//

என்றுமே நம் உம்மாவையும் இப்படித்தான் கண்டிருக்கிறோம் அனுபவத்திருக்கிறோம் நம் பிள்ளைகளுக்கு உம்மாவாக இருப்பவளையும் கண்டும் கொண்டிருக்கிறோம் !

இங்கே செம்மொழியில் "அம்மா" அம்மாதான்னு சொல்லிட்டா அரசியலாயிடும் (ஏன்னா "மம்மி ரிட்டர்ன்ஸ்"ன்னு மாநாடு நடந்துச்சாம் சமீபத்தில) அதனால என்னோட அதிரைப்பட்டினத்தின் அற்புத வழக்கு மொழி "உம்மா" உம்மாதான் அவங்களோடா "உம்ம்ம்வாவுக்கு" (மழலையில் நனைந்த முத்தங்கள்) நிகர் எங்கே இவ்வுலகில் கிடைக்கும்?!!

அ(உ)ம்மாவை வைப் பற்றி அகரவரிசையில் கவிகிறுக்கல் செய்தேன் இது 15 வருடங்களிருக்கலாம் :) அன்றும் அம்மா வென்றுதான் வரிகளை கோர்த்தேன்.

அழகிய அம்மா
ஆழ்ந்து யோசிக்கிறாள்
இரவுகளில் தூக்கமிழந்தவள்
ஈராமான இதயமுடன்
உறவுகளோடு ஒன்றியிருப்பவள்
ஊரார்க்கு முன்னுதாரணம்
எதனையும் தாங்கிடுவாள்
ஏனோ வெளிக்காட்டமாட்டாள்
ஐயம் போக்கிடுவாள்
ஒற்றுமையின் மறுபதிப்பு
ஓடித்தான் வந்திடுவாள்
எங்கெல்லாம் உதவிடலாமென்று...
----

இது இப்போ வாசித்தா கொள்ளைப் புறத்தில் காயும் துணிபோல்தான் தெரியும் ஏன்னா மேலே தலைவாசலில் தோரனம் கட்டியிருக்கும் கவிக் காக்காவின் கவிதை மிளிர்வதனாலே !

Yasir சொன்னது…

உம்மா என்ற ஒரு மாபெரும் சக்தியை-தியாகத்தின் உருவத்தை..எழுதி பெருமை சேர்த்த சபீர் காக்காவுக்கும்....அதை பின் தொடர்ந்து பின்னுட்டதில் எழுதிய சகோ.கிரவுன் & சகோ.அபுஇபுராஹிம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்---தாயின் காலடியில் தான் சொர்க்கம் என்ற நபி மொழிக்கு ஏற்ப தாயை போற்றுவோம்...அவர்களுக்கு நம் பட்ட கடனை முழுமையாக செலுத்த முடியாவிட்டாலும்..முடிந்த வரை செலுத்துவோம்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

தன் பிள்ளை நல்லவனோ கெட்டவனோ, பிள்ளைகளின் மீது ஏற்படும் தாயின் பாசம் என்றும் நிறந்தரம்.

//உண்டு கொழுத்தது
கண்டு களித்தாய் - நான்
உட்கொண்ட உணவில்...
உன் பசி மறந்தாய்!//

ஒவ்வொருத்தரின் மனசாட்சி இங்கு பேசுகிறது.

அருமை சபீர் காக்கா.

இத்தருணத்தில், அனைவரும் தம் பெற்றோர்களுக்காக செய்யும் ஒரே கைமாறு. அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்துக்கொண்டே இருக்கா வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.

Shameed சொன்னது…

தாஜுதீன் சொன்னது…
இத்தருணத்தில், அனைவரும் தம் பெற்றோர்களுக்காக செய்யும் ஒரே கைமாறு. அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்துக்கொண்டே இருக்கா வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.


இது தான் என்னால் செய்ய முடிந்தது

அலாவுதீன்.S. சொன்னது…

அதிரை கவி சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
********************************************************************************************
தாயின் தியாகத்திற்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை!
********************************************************************************************

================================================================

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன்: 31:14)

’’என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! ’’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன்: 17:23)

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக! (அல்குர்ஆன்: 17:24)

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! (அல்குர்ஆன்: 31:15)

================================================================ வாழ்த்துக்கள் சகோதரரே!

அலாவுதீன்.S. சொன்னது…

தாயின் தியாகத்திற்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை!

அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்: சொர்க்கம் செல்லாதவன் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 4628)

'முதிய வயதுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ இருந்தும், சொர்க்கம் நுழைய முடியாமல் போன மனிதர் நாசமாகட்டுமாக! நாசமாகட்டுமாக! நாசமாகட்டுமாக!' என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள். (முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'யா ரஸூலுல்லாஹ்! என்னுடைய நல்ல உறவுக்கு மக்களில் அதிக தகுதியுள்ளவர் யார்?' என்று கேட்டார். 'உன்னுடைய தாய்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். 'பின்னர் யார்?' என்று அவர் (மீண்டும்) கேட்டார். 'உன்னுடைய தாய்' என்று நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) பதில் அளித்தார்கள். 'பின்னர் யார்?' என்று (மீண்டும்) கேட்டார். 'உன்னுடைய தாய்' என்று (மீண்டும்) பதில் அளித்தார்கள். 'பின்னர் யார்?' என்று (நான்காவதாக) கேட்டார். 'பின்னர் உன்னுடைய தந்தை' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)அவர்கள்.( புகாரி, முஸ்லிம்.)

முஆவியா இப்னு ஜாஹிமா (ரலி)அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி)

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ)

குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் உபகாரம் புரிந்தால் முதுமைப் பருவத்தில் உங்களுடைய குழந்கைள் உங்களுக்கு உபகாரம் புரிவார்கள்.( அபூஹூரைரா (ரலி)அவர்கள். (ஹாகிம்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அன்புச் சகோதரர் அலாவுதீன் தங்களின் மற்றொரு ஆக்கமாக வரவேண்டிய தக்க நேரத்தில் தகுந்த இடத்தில் எடுத்து வைத்திருக்கிறீர்கள்... உங்களின் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணியைத் தொடருங்கள் அல்லாஹ் அதன் பலனை உங்களுக்கும் நம் யாவருக்கும் தருவானாக இன்ஷா அல்லாஹ்... !

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

உண்டு கொழுத்தது
கண்டு களித்தாய் - நான்
உட்கொண்ட உணவில்...
உன் பசி மறந்தாய்!

excellent

sabeer.abushahruk சொன்னது…

தம்பி crown
//நீ என்னை சிறுவையதில் பார்த்து கொண்டதுபோல் நானும் உன்னை பார்த்து கொள்வேன் அதுமட்டுமே என்னால் முடிந்தது...// 

இதைச் செய்யும் வாய்ப்பு உள்ளவர் கொடுத்து வைத்தவர்.

உண்மையைச் சொன்னால், உங்கள் மனம் கவர்ந்த வரிகள்தான் நான் சொல்ல வந்தது. (like Sabeer...like crown... ) மற்றவை எல்லாம் அலங்காரம்.

ஷாகுல், 
சத்தான வார்த்தைகள் என அடையாலம் காண ஒரு பிரத்யேக ரசனை வேண்டும். உஙகளைப்போன்ற உயரிய ரசனை கொண்டவர்களால் பாராட்டப்படுவது சுகம்.

அபு இபுறாகீம், 
தலைவாசல் தோரணங்கள் விஷேச காலங்களுக்கு மட்டும்தான். கொல்லைப் புறத்தில் காயும் துணிதான் 15 வருடங்கள்கூட மாறாத பழக்கமாயிருக்கும்...அம்மாவின் நினைவைப் போல.

yasir, 
தாய்மையின் தனி மற்றும் தூய (unique & genuine)தண்மைகளை சொல்லத் தலைப்பட்டு தோற்ற கவிகளும் எழுத்தாளர்களும் ஏராளம். தாய்மையின் அன்பு, பாசம், கருணை, தாய்மடி என எல்லாம் சொல்லி முடிக்க யாராலும் முடியாது. அம்மாவின் வாசம் மட்டுமே சொல்லத் தலைப்பட்டு ஒரு துளியோடு தடுமாறி நின்று விட்டேன். 

தாய்மை யொன்றே
தூய்மை யானது!

தாஜுதீன், 
வழக்கம்போல வார்த்தை ஜாலங்களை நாங்கள் செய்ய, நீங்கள் //இத்தருணத்தில், அனைவரும் தம் பெற்றோர்களுக்காக செய்யும் ஒரே கைமாறு. அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.// 
என காரியத்தில் கண்ணாயிருப்பது அழகு!

வாக்கியங்களுக்கு punctuation  போல கவிதைக்கு உங்கள் துஆ முழுமை தருகிறது!

ஷாகுல், 

//இது தான் என்னால் செய்ய முடிந்தது//
இதுதான் எல்லோரும் செய்ய வேண்டியதும்கூட.

அலாவுதீன், 
அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லாதது ஒன்றுமில்லை. தாய்மையின் உயர்வு குறித்து நம் மார்க்கம்போல வேறு எந்த மதமும் சொன்னதில்லை. அல்குர்ஆன் 
கவிதை நயத்துக்கு ஈடாக வேறாரும் புணைய முடியாது.

நம் மார்க்கம் நமக்கு சிறு பிராயத்தில் கற்றுத்தந்தவையே நம் சொல்லிலும் செயலிலும் எழுத்திலும் பிரதிபலிக்கின்றன.
நீ தொடுத்த மாலைக்கு நன்றி.

சகோதரி பாத்திமா ஜொஹ்ரா, 
பாராட்டியதற்கு நன்றி.

crown சொன்னது…

உண்மையைச் சொன்னால், உங்கள் மனம் கவர்ந்த வரிகள்தான் நான் சொல்ல வந்தது. (like Sabeer...like crown... ) மற்றவை எல்லாம் அலங்காரம்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.எண்ணங்கள் ஒன்றாகிப்போன பின் செய்யும் செயலிலும் அதன் சாடை வரத்தான் செய்யும்.ஆச்சரியம் என்னவென்றால் ஆற்றல் பெற்ற நீங்களும்,சக்தியற்ற நானும் சார்ந்திருக்கும் சிந்தனை ஒன்றியிருக்க ,மனதுக்குள் ஒருவித மகிழ்சி துள்ளி ஓடுது.

jalal சொன்னது…

அதிரை அதிவீர கவி சபீர்
மனம் வீசுகிறது கவிதை
மனம் வருடி செல்கிறது கவிதையின் வரிகள்
உன் கவிதை உண்டு கண் மூடினேன்
உனர்ந்தேன் உம்மாவின் வாசம்
வழித்தேன்... உம்மாவின் நினைவுகள்

sabeer.abushahruk சொன்னது…

ஜலால்,
அந்த ஊர் வரைக்கும் உம்மாவை நினைவு படுத்தியது என் முயற்ச்சிக்கு வெற்றிதான்.
நன்றி.
(ஷாகுல், ஏற்கனவே அலாவுதீன்..இப்ப உங்க ஹாஜியும் வந்தாச்சி. இனி உபரியான இரவுத் தொழுகையையும் கட்டாயமாத் தொழச்சொல்லி நம்ம மடியைப் புடிக்கப் போறாங்க. அவிங்க ரெடி.. நாம ரெடியா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அவிங்க ரெடி.. நாம ரெடியா?//

என்றுமே நா(மு)ம் ரெடிதான் :)

Shameed சொன்னது…

sabeer சொன்னது…
ஜலால்,
அந்த ஊர் வரைக்கும் உம்மாவை நினைவு படுத்தியது என் முயற்ச்சிக்கு வெற்றிதான்.
நன்றி.
(ஷாகுல், ஏற்கனவே அலாவுதீன்..இப்ப உங்க ஹாஜியும் வந்தாச்சி. இனி உபரியான இரவுத் தொழுகையையும் கட்டாயமாத் தொழச்சொல்லி நம்ம மடியைப் புடிக்கப் போறாங்க. அவிங்க ரெடி.. நாம ரெடியா?

எங்க சரக்கை (ஜலால்)எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த சகோ சபீர் அவர்களுக்கு நன்றி

(குறிப்பு ஜலாலை நான் செல்லமா சரக்கு என்று தான் விழிப்பேன் அவரும் என்னை சரக்கு என்றுதான் விழிப்பார்.சபீர் எங்கள் இருவரையும் சரக்குகளா என்று விழிப்பார்)

Shameed சொன்னது…

sabeer சொன்னது…
(ஷாகுல், ஏற்கனவே அலாவுதீன்..இப்ப உங்க ஹாஜியும் வந்தாச்சி. இனி உபரியான இரவுத் தொழுகையையும் கட்டாயமாத் தொழச்சொல்லி நம்ம மடியைப் புடிக்கப் போறாங்க. அவிங்க ரெடி.. நாம ரெடியா?

நாம எப்போவே ரெடி ஆய்ட்டோம்

Riyaz Ahamed சொன்னது…

சபீர், உம்மா இதை சொல்லும்போதே எத்தனை பிள்ளைகளுக்கு உம்மாவின் மேல் பாசம் இருக்குமோ இல்லையோ எல்லா உம்மாவுக்கும் தான் பிள்ளைமீது அளவு கடந்த பாசம் இருக்கும் உங்களுடைய கவிதை பாசம், நண்பர்களின் விமர்சன பாசம் அணைத்து என் மனதை மிகவும் நெகிழ (சரியான வார்த்தை கிடைகலே ) வைத்துவிட்டது