"இறந்து போனவர்களின் நற்செயல்களைப் பற்றியே நினைவுகூருங்கள்" என்ற கருத்துப்பட நபிமொழியொன்று உண்டு. நல்லதுபற்றிப் பேசுவதால், நன்மையின் பக்கம் நாட்டம் உண்டாகின்றது. தீமையைப்பற்றிப் பேசுவதால், சில வேளை தீமையின் பக்கம்கூட நம் கவனம் செல்லக் கூடும். எனவே, நன்மைகளை நினைவுகூர்வதே நமக்கு நன்மை பயக்கும். இவ்வடிப்படையில், எனது வாழ்க்கையில் சந்தித்த நல்லவர்களைப்பற்றி அதிரை வரலாற்றில் பதிவு செய்து வைப்பது நலம் என்ற நோக்கில், மிகச்சிலரைப்பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்களை மட்டும் பதிவு செய்ய விழைகின்றேன்.
இத்தொகுப்பைப் படிக்கும் வாசகர்களுக்கு, இவர்களைவிட இன்னும் பலரும் நினைவில் நிழலாடலாம். அவ்வாறு இருந்தால், அவர்களைப்பற்றிக் கட்டாயம் பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கோருகின்றேன். இதில் இடம் பெறாதவர்கள் கெட்டவர்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். நினைவாற்றல் குறைந்த எனது சிற்றறிவில் நிலைத்திருப்பவர்கள் பற்றிய தொகுப்பே இது.
மர்ஹூம் அப்துஸ்ஸலாம் ஹாஜியார் கடல்கரைத் தெரு
நான் இவர்களைச் சந்தித்தபோது, நன்கு பழுத்த பழம் போன்று, வயதான நிலையில் இருந்தார்கள். அப்போதும், உள்ளூரில் நடந்தே வியாபாரம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களின் வணிகப் பொருள்கள்: தொப்பி, மிஸ்வாக், அத்தர், சுர்மா போன்றவை. பொருள்களின் அடக்க விலையை முதலில் சொல்லி, இலாபமாகத் தமக்கு நாலணாவைச் சேர்த்துத் தருமாறு வாங்குபவர்களிடம் சொல்லிவிடுவார்கள். இப்பெரியார், நம் தஸ்தகீர் சகோதரர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத் தக்கது!
மர்ஹூம் அஹ்மது தம்பி கடல்கரைத் தெரு
இவர்களை, 'தூண்டிமுள் யாவாரி' என்றுதான் மக்கள் அழைப்பர். இவர்களின் சம்பாத்தியம், தூண்டிமுள் விற்பது. அதிரையை ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்று, அங்கெல்லாம் வாழ்ந்த மீனவச் சமுதாயத்திடம் தூண்டிமுள் விற்பார்கள். இவர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும்போதும், உள்ளூரில் இருக்கும்போதும், எப்பொழுதுமே இஸ்லாமியப் பிரச்சாரம்தான் செய்துகொண்டிருப்பார்கள். ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால், அந்தக் 'கம்பார்ட்மென்டில்' இருப்பவர்களோடு மிகத் தோழமையுடன் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிடுவார்கள். இதுவன்றி, உள்ளூரிலும் அவ்வப்போது பள்ளிவாசல்களில், யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல், தமக்குத் தெரிந்தபடி 'பயான்' செய்வார்கள். இவர்களின் அணுகுமுறை, சிலருக்குப் பிடிக்காது. என்றாலும், அத்தகையவர்களிடமும் அன்புடன் நெருங்கிப் பழகுவார்கள். ஊரிலும் வெளியூர்களிலும் தம்மிடம் தம் வணிகப் பையை எப்போதும் வைத்திருப்பார்கள். இவர்கள், 'புஷ்ரா ஹஜ் சர்வீஸ்' உரிமையாளர் அப்துர்ரஸ்ஸாக் ஹாஜியாரின் தாய்மாமாவார்கள்.
இதே தெருவில், 'அபூசாலிஹ்' என்ற இன்னொருவரும் இருந்தார்கள். இவர்களை அத்தெருவாசிகள், 'அபுசாலி மாமா' என்று அன்போடு அழைப்பார்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு உடையவர்; துணிச்சலானவர். இவர்களைப்பற்றிக் கூடுதலாக எனக்குத் தெரியாது. மொத்தத்தில், நல்ல மனிதர்களுள் இவரும் ஒருவர்.
மர்ஹூம் அப்துஹை சின்ன நெசவுத் தெரு
கடைதெருவில் நாட்டு மருந்துக் கடை நடத்தி, மக்களுக்கு மருத்துவப் பணி செய்த ஆள் இவர்கள் ஒருவர்தான். இவர்களின் உறவினர் ஒருவர் மூலம் நான் கேட்ட செய்தி: இவர்களின் மரணப் படுக்கையின்போது, வீட்டுப் பெண்களைத் தமக்கு 'யாசீன்' ஓதும்படிக் கேட்டார்களாம். அதன்படி, அவர்கள் ஓதி முடித்தபோது, 'போதும்' என்பது போல் கையால் சைகை காட்டி, வானத்தின் பக்கம் ஒரு விரலை உயர்த்தியபின், இவர்களின் உயிர் பிரிந்ததாம்!
மர்ஹூம் மீராசாஹிப் மேலத்தெரு
இவர்களைச் சிறுவர் சிறுமியர், 'மிட்டாய் மீராசா' என்றே அழைப்பர். காரணம், இவர்களின் தோளில் கனத்த பை ஒன்று தொங்கும். அதில் நிறைய மிட்டாய் இருக்கும். அந்த மிட்டாய்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து,"சொல்லுங்கள், லாயிலாஹ இல்லல்லாஹ்!" என்று கூறிக்கொண்டே போவார்கள். இவர்கள் ஓட்டிக்கொண்டு வரும் சைக்கிளில் ஒரு வேட்டைத் துப்பாக்கி தொங்கும். ராணுவ வீரர் போன்ற உடை அணிந்திருப்பார்கள். முன்பு ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். இவர்களின் உறவினர்கள் ஒரத்தநாட்டிலும் இருப்பதாகக் கேள்வி. இவர்கள் மேலத்தெரு ஜின்னா, மலக்கா மஜீத் ஆகியோரின் தந்தை ஆவார்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது அலிய் ஆலிம் (பாகவிய்) நடுத்தெரு
குர்ஆனை முறையாகத் 'தஜ்வீது' சட்டப்படி மனனம் செய்த 'ஹாஃபிஸ்'. இரு அரபிக் கல்லூரிகளில் பயின்று, மார்க்கச் சட்டங்களில் தேர்வு பெற்ற 'ஆலிம்'. அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்று ஊருக்கு வந்த தொடக்க காலங்களில், புரட்சிகரமாக மார்க்கச் சட்டங்களை மக்களுக்குத் தம் செயல்பாடுகளால் எடுத்துரைத்து, உண்மையை உணர்த்திய அறிஞர். அதற்கு ஓர் உதாரணம்: நாட்டு நடைமுறையில் உள்ள ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின் ஓதும் கூட்டு துஆ தொழுகையில் உள்ளதன்று என்பதை உணர்த்த, தாம் இமாமாக நின்று தொழவைத்த தொழுகை ஒன்றில் 'சலாம்' கூறித் தொழுகையை முடித்தவுடன் அவர்கள் எழுந்துவிட்டதை நான் கண்டுள்ளேன். ஆண் மக்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் பெண் மக்களுக்கே வீட்டையும் சொத்தையும் கொடுக்கும் ஊர்ப் பழக்கத்தை வன்மையாகச் சாடியவர்கள் இவ்வறிஞர். 'அலி' என்று தமது பெயர் அனர்த்தப்படாமல் இருக்க, உச்சரிப்புச் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, 'அலி' என்பதை, 'அலிய்' என்று எழுதி மாற்றம் வருத்திய மனிதர் இவர். சில காலம், நமதூர் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் 'தீனியாத்' ஆசிரியராகப் பணியாற்றிச் சேவை செய்துள்ளார்கள். அதனால், இந்தத் தலைமுறை மாணவர்களுள் பலருக்கு மிகவும் அறிமுகமானவர்கள் இந்த 'அலியாலிம்சா'. கொள்கை விஷயத்தில் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் 'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்ற மறைவற்ற பேச்சு (Frank talk) பலருக்குப் பிடிக்கும். குறிப்பாகத் தம்பி ஜமீலுக்கு. "அலிய் ஆலிம்சா, 'மப்ரூக் கார்கோ' உரிமையாளர் அப்துல் கரீமின் பாசமிகு தந்தையாவார்"
மர்ஹூம் ஷரஃபுத்தீன் ஹாஜியார் தட்டாரத் தெரு
'ஒற்றுமைச் சகோதரர்கள்' என்ற பெயருக்குச் சொந்தமானவர்கள், இவர்களும் இவர்களின் தம்பி (மர்ஹூம்) அப்துல்ஹாதி அவர்களுமாவர். அண்ணனும் தம்பியும், சொல்லி வைத்தாற்போன்று, அடுத்தடுத்துச் சில நாட்களில் இறந்தனர். பணக்காரராக இருந்தும், சிறிதளவும் பெருமையில்லாத அற்புத மனிதர்! கொழும்பில் இருந்த 'ஏ.எஸ்.எம். ஹாஜியார் & சன்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமைப் பங்குதாரராக இருந்த இவர்களிடம் பணி புரிந்த ஒருவர் சொன்ன தகவல் ஒன்று: கம்பெனியில் வேலை செய்த பணியாளர்களுள் எவரேனும் தவறு செய்தால், அதை இவர்கள் திருத்தும் பாணியே வேறு. "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்கமாட்டார்களாம். "தம்பி இப்படிச் செய்திருக்கலாமே?" என்று கேட்டு, தவறிழைத்தவர் தன் தவற்றை உணரும்படிச் செய்வார்களாம்!
மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் ஆஸ்பத்திரித் தெரு
இவர் காலத்தில் இருந்த ஊர்த் தலைவர்களுள் இவர் குறிப்பிடத் தக்கவர். ஏன்? இவர்களின் வீடு இருக்கும் ஆஸ்பத்திரித் தெரு முனையிலிருந்து நடுத்தெருவின் கடைசியிலிருக்கும் மரைக்கா பள்ளிக்கு நடந்தே வந்து, தம் நண்பர்களுடன் அமர்ந்து, தம் விவேகமான கருத்தாடல்களால், அவர்களைச் செவிமடுக்கச் செய்பவர். சிக்கலான சமூகப் பிரச்சினைகளுக்குத் தமது 'இராஜ தந்திரமான' ஆலோசனைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்க உதவிய முதிர்ந்த அறிவாளி. மத்தியஸ்தம் செய்வதில் நுணுக்கமானவர். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார்.
மர்ஹூம் அப்துர்ரஹீம் கீழத்தெரு
கடைத்தெருவில் வியாபாரியாக இருந்தாலும், கடமையான தொழுகையை, அதனதன் நேரத்தில், பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவந்த நல்ல மனிதர். நம் 'கணினிச் செம்மல்' தம்பி ஜமீலின் பெரிய வாப்பா.
மர்ஹூம் சோமப்பா நடுத்தெரு
'சோமப்பா' என்றவுடன், இன்றுகூட, எங்களுக்கு அவித்த கொண்டைக் கடலைதான் நினைவுக்கு வருகின்றது! 'சேகு முஹம்மது அப்பா' என்ற இயற்பெயர்தான், 'சோமப்பா' எனச் சுருங்கிவிட்டது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மரைக்கா பள்ளியை நோக்கி வந்து, 'பாங்கு' மேடைக்குப் போய், 'சலவாத்' ஓதத் தொடங்கிவிடுவார்கள். பகல் வேளைகளில், வீட்டிலிருந்து கொண்டைக் கடலையை அவித்துக்கொண்டு கிளம்பி, தாம் செல்லும் வழியிலிருக்கும் வீடுகளுக்கும் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து, பாசத்தைப் பொழிவார்கள். இவர்களின் சந்ததிகள் (சின்னமச்சி வீடு) வளமாக வாழ்வதற்கு, இப்பெரியாரின் துஆவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
மர்ஹூம் அல்ஹாஜ் அப்துஷ்ஷகூர் ஆலிம் தட்டாரத் தெரு
நாங்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களாக இருந்த காலங்களில் எங்களுக்கு மார்க்க வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள். 'அப்துஷ்ஷுக்கூர் ஹாஜியார்' என்றே பிரபலமான இவ்வறிஞர், தேர்ந்த மார்க்க அறிஞர் (ஆலிம்) என்பது பலருக்குத் தெரியாது! தாய்மொழியான தமிழைத் தவிர, ஆங்கிலம், அரபி, உர்தூ முதலிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 'தப்லீக்' என்ற தீனுடைய உழைப்பில், உண்மையிலேயே 'உழைத்தவர்' என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர். உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று தீனுடைய உழைப்பைச் செய்தவர். தனிமையில் இவர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்குப் பல முறை கிட்டியது. அந்நேரங்களில் இவ்வறிஞரின் வழிகாட்டல்கள் எனக்குப் பயனுள்ளவையாக இருந்துள்ளன. பேணுதல், ஈடுபாடு என்பவற்றை இவர்களிடம் நான் நேரில் கண்டுள்ளேன்: கற்றுள்ளேன்.
என் நினைவில் வந்தவர்களைத் தொகுத்தேன். இதில், உண்மையாளராகவும், உழைப்பாளராகவும், எளிமையாளராகவும், உண்மையுரைப்பதில் துணிச்சலானவராகவும், சேவையாளராகவும், அன்பாளராகவும், செழுமையிலும் செம்மையாளராகவும், நுண்ணிய அறிவாளராகவும், வணக்கவாளியாகவும், சிறார்களிடம் அன்பு பாராட்டுபவராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் இருந்தவர்களைப் பற்றிய சிறு சிறு அறிமுகத் தகவல்களைத் தந்துள்ளேன். நம் வாசகர்கள் தம் பெற்றோர் அல்லது பெரியோர் மூலம் அறிந்த நல்லவர்களைப் பற்றியும் பின்னூட்டம் இடுங்களேன், பார்ப்போம். அத்தகையவர்கள் மறைந்த மாண்பாளர்களாக இருக்கட்டும்.
- அதிரை அஹ்மது
00 91 98 94 98 92 30
32 Responses So Far:
உங்களால் மட்டுமே இதனையும் இதற்குமேலும் தொகுக்க முடியும், இங்கே தொகுத்தவர்களால்லாமல் இன்னுமிருப்பவர்களை இங்கே பதிந்தால் அடுத்தப் பதிவுக்கும் வரும் என்ற நம்பிக்கையில் இன்ஷா அல்லாஹ் என்னறிவுக்கு எட்டியதை சொல்ல முயற்சிக்கிறேன்.
அதிரை அஹ்மது(மாமா) சீறப்பான முயற்சி தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்.
ஜனாப் மர்ஹூம் அப்பாஸ் ஹாஜியார் (புதுமனைத் தெரு) இளைய சமுதாயத்தின் உள்ளங்களின் நீங்கா இடம் பெற்றவர்கள், இளைஞர்களை இளைஞர்களாக நடத்துபவர்கள் இவர்களின் பேராற்றல் அன்பாலும் அதட்டலாலும் அப்படியே இளையவர்களை கட்டிப் போடும் அழகே தனிதான், நல்ல வழிகாட்டி, மேல் படிப்புக்கு என்று யார் சென்னை சென்றாலும் அவர்களுக்கு முன்னின்று எல்லாவகை உதவிகள் செய்வதிலும் தங்குமிடமும் கொடுப்பார்கள். இவர்களைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் இன்னும் நீளும் இன்ஷா அல்லாஹ் இன்னும் மனம் வென்றவர்கள் தொடரும்...
அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சாவிடம் இது பற்றி பேசியப்பின் பதிகிறேன்.விடுபட்டவர்களை பற்றியும் கேட்டேன் அதற்கு கருதில் சொல்லுங்கள் என்றார்கள் ஆனால் அப்படி நான் வக்காலத்து வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.பெரியவங்களை பற்றி அரிய தந்ததற்கு சாச்சாவிற்கு நன்றி!.
அதிரைப் பெருமக்களின் வாழ்க்கைத் தரம் உயர சில நல்லவர்களும் தங்களை அறியாமலே சயநலம் கானாமல் ஏணியாக இருந்து மேலேற்றி விட்டவர்களும் நிறைய இருக்கிறார்கள் அவர்களைப் பற்றியும் கட்டாயம் இங்கே பதிய வேண்டும்.
எத்தனையோ பெரியவர்களை பள்ளிகளிலும், கேள்விப்பட்டும் அறிந்திருக்கிறோம், நம் ஊரில் இருந்த நல்ல மனிதர்களை சேகரித்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள், இன்னும் எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்து நல்லது மட்டுமே செய்து மறைந்திருக்கிறார்கள், அண்ணார்களின் ஆத்மா இறைவனடி சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.
இது இளைய சந்ததினருக்கு ஒரு பாடமாகவே அமையுமென்றும், அவர்களை பற்றி தெரிந்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு
தொடருங்கள்..
மர்ஹூம் அஹ்மது தம்பி கடல்கரைத் தெரு--தூண்டி முள் ஆலிம்சா பற்றி எழுதிய அகமது காக்காவிற்க்கு நன்றி...நான் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம் அவர்களிடம் இருந்து தான் - 1 ரூபாய் 25 ஜந்து பைசா...சிறிய வயதில் அவர்கள் வீட்டில் மணி கோர்க்க சென்றபோது கிடைத்தது...வேலையும் கொடுத்து ..மார்க்க அறிவையும் போதித்தார்கள்..அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானக....
'அலியாலிம்சா' அவர்களை போன்ற தைரியசாலியை நான் கண்டதில்லை..ஒரு தடவை கடற்கரைப்பள்ளிக்கு வந்து...கந்தூரிதான் எடுப்பதுதான் தாங்களுடைய தார்மீக கடமை ( அந்த மடையர்களுக்கு ஹஜ்ஜைவிட இது தான் பெரிதாக தெரிந்தது.இப்போழுது அந்த நிலமை மாறி விட்டது )என்று கொண்டாடுபவர்களின் மத்தியில் நீங்கள் செய்வது அனாச்சாரம் மார்க்கத்துக்கு எதிரானது என்று கூறிய வார்த்தைகள் இன்றும் என் கண் முன் உள்ளது
பதிந்தவற்றில் கடைசி இருவரும் எங்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இன்னொரு முக்கியமான செய்தி:
மர்ஹூம் அல்ஹாஜ் அப்துஷ்ஷகூர் ஆலிம் அவர்கள் இறந்த தினத்தன்று கண்ட மக்களின் கூட்டத்தை இதுவரை(28 வருடங்களாக) நான் கண்டதில்லை.
அதேபோல் அவர்களின் உடல் இன்றும் மண்ணில் மக்கிப் போகவில்லை, அவர்களின் உடலை என் தம்பி சில காலங்களுக்கு(2 வருடம்) முன் கண்டு இருக்கிறான்
குறிப்பு : அவர்கள் இறந்து கிட்டதட்ட 10-15 வருடம் இருக்குமென நினைக்கிறேன்
அப்புறம் சோமப்பாவை பற்றி நிறைய இருக்கிறது, ஆனால் பின்னூட்டத்தில் எப்படி விளக்குவதென்று தெரியவில்லை
அவர்களை நினைவுக்கூர்ந்த அஹ்மது மாமா அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
அஹ்மத் காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நீங்கள் மேலும் மேலும் நலமாக இருக்க என் துஆ.
பிரார்த்திப்பது யாராயிருந்தால் என்ன; ப்ரார்த்தனைதான் முக்கியம். (எனினும், தம்மாமில் உங்களைக் கண்ட பலரில் நானும் ஒருவன். நினைவில் வைத்துக்கொளுமளவிற்கு பரிச்சயமில்லைதான்)
காத்திருப்புகளுக்கான மொத்த அர்த்தம் உங்கள் ஆக்கம். நம் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை வாசிக்க வாசிக்க மெய் சிலிர்த்தது பொய்யல்ல.
புலனுக்குப் புலப்படாத உணர்வொண்று கட்டுரையயை படிக்கும்போது என்னுள் நிலவியது, காரணம் நீங்கள் குறிப்பிடும் நல்லவர்களின் தனித்தண்மையும் வாழ்ந்த விதமுமா அல்லது அதை நீங்கள் சொன்ன விதமா (style of narration)என்று பிடிபடவில்லை.
சரி, எங்களில் பலர் விமானம் ஏறவும், ஊரில் ஒண்ணுக்கும் உதவாமல் போக இருந்த எங்களைப் போன்ற பலரை வெளிநாட்டில் உழைத்து குடும்பங்களை காக்கவும் காரணமான எங்கள் MB மாமா பற்றி ஏன் எழுதவில்லை?
உங்களுக்குத் தெரியவில்லை எனில் ஊரைக் கேளுங்கள்.
நான் தொடர்பான ஒரு நிகழ்வைச்சொல்லி விடுகிறேன். மும்பையில் வெளிநாடு போக முயன்ற காலங்களில் (1984) "நீ படிச்சவன்டா . சொந்த முயற்சியிலேயே போயிடலாம்"னு உசுப்பேத்திவிட்டதால MB மாமாட்ட கொடுக்காமல் ஒரு கள்ள நிறுவனத்திடம் கொடுத்து மாட்டி..மாமா எந்த கைமாறும் எதிர்பாராமல் passportஐ வாங்கித்தந்தார்கள். அதுமுதல், எங்கள் இருவருக்கிடையே உறுதியான ஒரு அன்புப் பிணைப்பு நிலவியது. அவர்களுக்கும் தாங்கள் குறிப்பிட்ட மற்றும் விடுபட்ட நல்ல மனிதர்களுக்கும் சுவணம் வேண்டி இறைஞ்சுகிறேன்.
இப்பதிவைப் படித்தபோது முதலில் கொஞ்சம்போல் சினவயப்பட்டேன்! பணியழுத்தம் காரணமாக உடனே கருத்துச் சொல்லாமல் சென்றுவிட்டேன்.
சினத்தின் காரணம்: தமிழகத்திலுள்ள சாதி, மதம், வட்டம், மாவட்டம், வர்க்கம், தெரு ஆகிய அனைத்துக்கும் பொதுவானவரும் - அனைவரும் இன்றும் நன்றியுடன் நினைவுகூரும் எம் எம்பிஎம் காக்காவின் பெயர் இல்லாமல் 'அதிரை வரலாறு ...' எவ்வாறு தொடங்கி எவ்வாறு முடிய முடியும்?
பிஸ்மியும் ஆமீனும் இல்லாத அல்ஃபாதிஹாவா?
பின்னர் வந்து பார்த்தபோது தம்பி சபீர் கொஞ்சம்போல் என் சினம் தணித்திருந்தார். அவருக்கு நன்றி!
இப்பதிவில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிப்பதிவுக்கு உரியவர்கள்தாம்; அதில் ஐயமில்லை. குறிப்பாக, 'ஆலிம்' எனும் சொல்லுக்கு அடையாள மனிதராக வாழ்ந்து மறைந்த, அதிரையின் ஒரே ஆலிமாக நான் கண்ட அலிய் ஆலிம் அவர்களைப் பற்றி எழுதுவதற்கு நல்லவை நிறைய உண்டு.
சில தகவல் பிழைகள்:
'அபுசாலிஹ் மாமா' என இங்குப் பிழையாகக் குறிப்பிடப்படுவர் எனக்கு மாமாவான கேப்பிஎம் முஹம்மது ஸாலிஹ் அவர்களாவார். அற்புதமான காரீ அவர். ரமளானின் ஹிஸ்பில் அவரது கிராஅத் தனியாகத் தெரியும். அதிகமான பொழுதைப் பள்ளியில் கழித்தவர்.
எங்கள் தெருவில் 'அபுஸாலிஹ்' என்பவர் ஒருவர் இருந்தார். அவரைத் தொப்பி இல்லாமலும் நான் பார்த்ததில்லை; பள்ளிக்குள்ளும் பார்த்ததில்லை.
என் பாட்டனாருக்கு என் தந்தைதாம் மூத்த மகன். இப்பதிவில் 'அப்துர்ரஹீம்' எனக் குறிப்பிடப் பட்டிருப்பவர் எங்கள் சின்னவாப்பா. பிள்ளைகள் இல்லாத அவருக்கு நாங்களே பிள்ளைகள். பாசத்தைப் பிள்ளைகள்மீது பொழிந்தவர். பழைய துலுக்காப் பள்ளியின் தூண் ஒன்றில் அவருடைய மிஸ்வாக் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். அவர் தொழுதுவிட்டு வரும்வரை ரொம்பச் சின்ன வயதில் நான் சாய்ந்து கொண்டு காத்திருக்கும் அந்தத் தூண்தான் மிஸ்வாக் அடையாளம். எங்களுக்குச் சின்னவாப்பாதான் செல்ல வாப்பா. அவர் வாழ்கிறார் - என் மகனின் பெயரில்.
கூடுதல் தகவல்:
தூண்டி முள்ளு ஆலிம்சாவுக்கு 'ஒலகமேடை பயான்' என்ற செல்லப் பெயரும் இருந்தது. உண்மையான தாயீ அவர்.
Bro. அதிரை அஹ்மது
உங்கள் தொகுப்பு பாராட்டுக்குறியது. நீங்கள் சொன்ன சிலரை நான் பார்த்து இருக்கிறேன்.கமெண்ட்ஸ் எழுதுபவர்களும் சிலரைப்பற்றி குறிப்பிடலாம்.
பெரும் மதிப்பை பெற்ற எங்கள் அலிய் ஆலீம் அவர்களோடு எனக்கிருந்த நெருக்கமான நிஜத்தின் நினைவுகள், இதுநாள் எனக்கு யாருமே தாய் வழி தந்தை வழி மூததையர்களின் தோன்றல் வழிமுறைகளை சொல்லி தந்தது இல்லை அவர்கள் ஓவ்வொரு முறையும் அவர்களோடு சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நினைவு படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் போல் என் நினைவுக்கு தெரிந்து இதுவரை சொல்லிக் காட்டியதில்லை.
என்ன முறை சொல்லி கூப்பிட வேண்டுமென்றும் பழக்கப் படுத்தி வந்தார்கள்.
அன்பின் ஜமீல் காக்கா, தேனீபோல் சுறு சுறுப்பான்வங்களை ச்ஃபீர் காக்கா தேனாக ஞாபகப் படுத்தியதை தாங்கள் அழுத்தமாக அங்கீகாரம் கொடுத்திருக்கிறீர்கள், எல்லாம் வல்லாஹ் அவர்களின் ஆகிரத் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக !
சகோ. அஹ்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றியும்! வாழத்துக்களும்!
/// sabeer சொன்னது… சரி, எங்களில் பலர் விமானம் ஏறவும், ஊரில் ஒண்ணுக்கும் உதவாமல் போக இருந்த எங்களைப் போன்ற பலரை வெளிநாட்டில் உழைத்து குடும்பங்களை காக்கவும் காரணமான எங்கள் MB மாமா பற்றி ஏன் எழுதவில்லை? ///
சகோ.சபீர் சொன்னவுடன் எனக்கு MB மாமாவைப்பற்றி ஞாபகம் வருகிறது. கண்டிப்பாக இதை நான் இங்கு பதிய வேண்டும். என் உம்மம்மாவின் உதவியால் முதலில் அவர்களை சந்தித்தேன். பாம்பே புறப்பட்டு வா ஏற்பாடு செய்வோம் என்று சொன்னார்கள். 1980 அல்லது 1981 வருடம் என்று நினைக்கிறேன். பாம்பே சென்றபிறகு என்னையும் மற்றும் சில சகோதரர்களையும் ஒவ்வொரு ஏஜென்டிடமும் நேர்காணலுக்கு அழைத்து செல்வார்கள். அந்த வயதிலும் நடையே ஓட்டமாகத்தான் இருக்கும். எப்பொழுதும் புன்சிரிப்புடன்தான் இருப்பார்கள்.
நான் செலவுக்கு கொண்டு சென்ற பணம் கரைந்து விட்டது. (சாப்பாட்டுக்கு மட்டும் தனியாக பணம் இருந்த நிலையில்) நான் தங்கியிருந்த இடத்திற்கு வாடகை கொடுக்க பணம் இல்லை. என்னோடு இருந்த சகோதரர்கள் MB மாமாவிடம் என்னுடைய நிலைமையை எடுத்து சொன்னவுடன். MB மாமா அவர்கள் தங்கியிருந்த அறையில் என்னையும் தங்கிக்கொள்ள அனுமதி கொடுத்தார்கள். அது ஒன்றும் பெரிய அறை கிடையாது. ஏற்கனவே அவர்களின் உறவின் முறையில் ஒரு கேரள சகோதரர் அங்கு தங்கியிருந்தார். ஒரு மாதம் காலம் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
அறைதான் சிறிதே தவிர MB மாமாவின் உள்ளம் பெரிது (இளகிய மனது). அவர்களால் நிறைய பேர் பலன் அடைந்திருக்கிறார்கள். வல்ல அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தை தந்தருள் புரியட்டும். மேலும் சென்றுபோன நல்லடியார்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் சொர்க்கத்தை வழங்கி அருள் புரியட்டும்.
(என்னால் சவூதிக்கு செல்ல முடியவில்லை. ஏஜெண்டிற்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற்று ஊர் வந்து அல்லாஹ்வின் அருளால் என் சகோதரரரின் உதவியால் அமீரகத்திற்கு வந்துவிட்டேன்).
இன்னொரு மலரும் நினைவுகள்: சகோ. ஜாகிரும், சகோ. சபீரும்தான் என்னை சென்னை செண்டரலில் பாம்பே ரயிலில் வழி அனுப்பி வைத்தவர்கள். சகோ. ஜாகிர் எனக்காக டிபன் வாங்கி திரும்பி வருவதற்குள் ரயில் புறப்பட சகோ. ஜாகிர் ஓடி வந்து கொடுக்க நான் வாங்குவதற்கு முயற்சி செய்து தவறி டிபன் கீழே விழுந்து விட்டது.(இந்த நிகழ்வை அப்படியே உங்கள் மனதில் ஓட விட்டுப்பாருங்கள்).
பல சூழ்நிலையால் இன்னும் வெளியிடப்படாத அதிரை வரலாறு என்ற புத்தகத்தில் முதல் பாடமாக வெளிவர வேண்டிய பொக்கிஷ தகவல்களாக நம்மவர்கள் பற்றிய இச்செய்திகளை கருதுகிறேன். நம் ஊர் பெரும் மாமேதைகளும், மார்க்க அறிஞர் பெருமக்களும், செல்வச்சீமான்களும், கொடை வள்ளல்களும், அன்பிற்கினியவர்களும் வாழ்ந்து சென்ற பூமி என்று நினைக்கும் பொழுது உள்ளம் பெருமிதம் கொள்கிறது. இறைவனுக்கே நன்றி செலுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்....
Good to remind ourselves of our elders and their great work to the community. Being grown outside of Adirai most of my adult and childhood life, I couldn't recognize most of the names mentioned in the article except few I know off. Br Ahmed, great work.
Me being in Dallas Texas, almost 1000 miles away from Adirai makkal in US (i.e. California or New York), my only contact with Adirai makkal is telephone and Internet. For rest of us also being living outside of India, sometimes we tend not knowing even our own families and relatives and sometimes we even forget their faces. I really appreciate if someone takes a interest and publish some of our elder photos and also I would like to see photo of our active Adirai brothers who participate in this and other forums.
So far in my life, I just met Jameel kakka once in Sharjah couple of yrs ago and I'm afraid that I lost his facial memory, again after 4 or 5 yrs I met Br Tajudeen in August in Dubai and its been years I had met Br Naina Thambi or Jamal from Hospital street and so on.
Talk to you later... Dawood, US
அன்புச் சகோதரர்
crown சொன்னது…
'அலி' என்பதை, 'அலிய்' என்று எழுதி மாற்றம் வருத்திய மனிதர் இவர். சில காலம், நமதூர் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் 'தீனியாத்' ஆசிரியராகப் பணியாற்றிச் சேவை செய்துள்ளார்கள். அதனால், இந்தத் தலைமுறை மாணவர்களுள் பலருக்கு மிகவும் அறிமுகமானவர்கள் இந்த 'அலியாலிம்சா'. கொள்கை விஷயத்தில் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் 'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்ற மறைவற்ற பேச்சு (Frank talk) பலருக்குப் பிடிக்கும். குறிப்பாகத் தம்பி ஜமீலுக்கு. "அலிய் ஆலிம்சா, 'மப்ரூக் கார்கோ' உரிமையாளர் அப்துல் கரீமின் பாசமிகு தந்தையாவார்"
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அலிய் என்று என்னிடமும் சொல்லி காட்டியது பசுமையாக உள்ளது.மேலும் இவர்களே என் மானசீக குருவாகவும் இருந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு வயதானவுடன் சிலகாலம் மறதி ஏற்பட்டவுடன் அவர்களிடமே சென்று நான் சொன்னேன் உங்களுக்கு மறதி அதிகம் ஆகிவிடுகிறது ஆகவே இனி உங்களிடம் எந்த சந்தேகத்திற்கும் விளக்கம் கேட்ட மாட்டேன்னு சொன்னேன் சிரித்துக்கொண்டே சரி மருமகனாரே என்றார்கள்.அவர்களின் மகனார் சகோ.அப்துல் கரீம் எமக்கு உடன் பிறவா சகோதரரே என்றென்றும்.
Tuesday, October 19, 2010 12:57:00 PM
அஸ்ஸலாமு அழைக்கும்.
அஹ்மத் காக்கா தங்களின் ஆக்கம் அருமை மேலும் விடு பட்ட நல்லோர்களை பற்றியும் தொடராக எழுதுங்களேன்
Dawood சொன்னது…
So far in my life, I just met Jameel kakka once in Sharjah couple of yrs ago and I'm afraid that I lost his facial memory, again after 4 or 5 yrs I met Br Tajudeen in August in Dubai and its been years I had met Br Naina Thambi.... //
Assalaamu Alaikkum (warh)
Dear Bro.Sheik Dawood:
Thank you for your comments. Once I visit to blogger (site) side as a default typescript turning to tamil typing :) ஏன்னா பழக்க தோஷம் அப்படியாயிடுச்சு... தொடர்ந்து அதிரைநிருபரோடு உலாவாருங்கள் சொந்தங்களோடு அருகிலிருந்து நேசம் பேசும் உணர்வு நிச்சயம் கிடைக்கும்...
மர்ஹூம் அஹ்மது தம்பி என்ற அவர்களின் பெயர் இன்றுதான் எனக்கு தெரிய வந்தது .நாங்கள் எல்லாம் அவர்களை தூண்டி முள் ஆலிம்சா என்று அழைத்து அவர்களின் பெயர் மறந்து விட்டது.
தூண்டி முள் ஆலிம்சா எங்கு சென்றாலும் தோள்களிலும் இரு பைகள் தொங்கி கொண்டிருக்கும்.
அவர்களின் கடைசி காலங்களில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி இருந்தார்கள் அவர்களின் மனைவி முடியாத நிலையில் இருந்த போது மனைவின் அணைத்து தேவை களையும் மனம் கோனது செய்து வந்தார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த பதிவை கண்டதும் சாச்சவுக்கு போன் போட்டு கேட்டேன் சில குறிபிட்ட தலைகள் விட்டுவிட்டது(என் சொந்தகாரர்கள்)அது ஏன் என்று வினவினேன் காரணம் அவரைப்பற்றி என்னை விட சாச்சா நன்கு அறிந்திருப்பார்கள் சாச்சா சொன்னார்கள் இதேயே கருத்தா வெளியிடுங்களேன்னு என் முதல் கருத்தும் கூட நான் சொன்னேன் வக்காலத்து வாங்க மாட்டேன்னு.சாச்சாவும் அதுனாலேயே அவரின் உடன் பிறந்தவர் எல்லாரலும் அன்பாய் அழைக்கப்படுபவர் (MB மாமா) அவர்களைப்பற்றி எழுதாமால் பிறர் சொல்ல விட்டுவிட்டார்கள்.
அஹமது மாமா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.,
உங்கள் உடல்நிலையைகூட பொருட்படுத்தாமல், வாழ்ந்து காட்டிய முன்னோர்களில் நல்ல மனிதர்களின் ஒருசிலரை எங்களோடு உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்: உங்கள் உடல்நிலையை அல்லாஹ் சீராக மேலும் போதிய நேரமும் கிடைத்தால், விடுப்பட்டவர்களை தொடராக தொய்வின்றி தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் புத்தகமாக முடிக்க வாய்ப்புகள் அதிகம்.
அதில் குறிப்பாகா அலிய் ஆலிம் அவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டை கடக்கும் பொழுது எங்கள் வீட்டில் ரேடியோ சத்தம் கேட்டு விட்டது போலும் உடனே குடையில் தன் முகத்தை மறைத்தவாரு (இதுநாள் வரை பெண்கள்தான் ஆண்களை பார்க்க வெட்கப் படுவதை பார்த்து இருக்கின்றோம் ஆனால் அலிய் ஆலிம் மேலும் அவர்களின் மாமனார் அபூபக்கர் ஆலிம் போன்றோர் மாற்று பெண்களை பார்க்க அஞ்சுபவர்கள்), எங்கள் பெரியம்மாவின் பெயர்சொல்லி இது பாக்கர் ஆலிம் (மர்கூம் M.B.முஹம்மத்,M.B அஹம்மத் ஆகியோரின் தந்தையர்) வாழ்ந்த வீடு இங்கே எப்படி செய்த்தானின் சத்தம்" என்று தம் குரலை உயர்த்தி அச்சுரித்தி கூரினார்கள், இவர்கள் போன்றோகள்களின் சொல்கேட்டதால் என்னவோ எங்கள் குடும்பத்த்தில் அனேகர்கள் வீட்டில் இதுநாட்கள் வரை தொ(ல்)லைகாட்சி பொட்டியை அனுமதிப்பது இல்லை நான் சிரியவனாக இருக்கும்பொழுதே எங்கள் வீட்டின் பழுதடைந்த ரேடியோ பெட்டி உமர்தம்பி மாமா அவர்களின் பழுதுபார்க்கும் பனியிடத்திற்க்கும், பப்பரிசி கடைக்கும் அலைந்து கடைசியில் ஜப்பான் காரன் என்ற பழைய சாமான் வாங்குபவனிடம் ஒருசில நடக்கடலைக்காக பண்டமாற்று செய்யப்பட்டது.
நடையில் எந்திரத்திர்க்கு மறுபெயர்தான் M.B.மாமா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் முஹம்மது மாமா ஒருமுறை எனது முழு ஆண்டு விடுமுறையில் இரண்டு மாதம் அவர்களுடன் பாம்பேயில் தங்க நேரிட்டது, அப்பொழுது அவர்களுடன் அடிக்கடி சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்ப செல்ல நேரிடும் அப்பொழுது ஏர்போட் வரி ரூ500 என்று நினைக்கிண்றேன் இதைப்பற்றி அனேகர்களுக்கு தெறியும், சிலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை கடைசியில் பணத்திற்கு எங்கே போவது? மாமா அவர்களின் சொந்த பணம்தான் பழியாகும்,
இந்த சூத்திரத்தை அறிந்த சிலர் மாமாவிடம் லாவகமாக கையேந்துவார்கள் . மாமாவிடம் "என்னிடம் ஏர்போட் வரிகட்ட காசு இல்லை நான் பேனவுடன் அனுப்பி வைக்கின்றேன்" என்று வரியை வாங்குவார்கள் பிறகு சில நிமிடங்களில் சபுராளியை பயண அனுப்பவரும் அவர்களின் உறவினரிடத்தில் மாமா அவர்களுக்கு தெறியாமல் அவர்களின் இந்த மிச்சப்படுத்திய (ஏமாத்திய) பணத்த இரகசியாமா ஊருக்கு அனுப்பி வைப்பார்கள் அல்லது சாமான் வாங்கி ஊருக்கு கொண்டுப் போகச்சொல்வார்கள். மாமா அவர்கள் கொண்டு சென்ற பல ஆயிரங்கள் அவர்களின் இலகிய மனதால் கொடைத்தன்மையால் சிலமணித்தியலத்தில் பாக்கட் காலியாகி திரும்பி வரும் டாக்சி காரனுக்குக்கூட கரீம் பாய் சாய் வாலா அக்கவுன்ட்டில் பட்டுவாடா செய்யப்படும். இவை இரண்டு மாதம் மட்டும் நான் கண்ட காட்சிகளில் ஒருசில, மேலும் பல சம்பவங்கள் பதிய வாய்ப்புகள் கிடத்தால் பதியிவேன். இதை ஒருமுறை நானும் எந்து நன்பன் நிஜார் அஹமதுவும் சில சம்பவங்களை நெய்னா தம்பியிடம் வேடிக்க்கையாக கூறியிருக்கின்றோம்.
நம்மூர்சுற்றிவுள்ள ஊர்காரர்கள்மட்டுமல்ல இராமநாடு முதல் திருநெல்வேலி , வேலுர் வரை அனேக ஏழை கிராமங்கள் ஜமீல் மாமா சொல்வதுபோல் "சாதிமதம்" பார்க்காமல் அல்லாஹ் மாமாவின் மூலம் உதவி செய்தான் என்பதுதான் உண்மை.
இதை அழகிய பொக்கிஷம் என சொல்லலாம் ............
உயர்ந்த மனிதர்களை பற்றி
உயர் நோக்குடன் எழுதப்பட்ட
உயர்தரமான கட்டுரை ...
நிச்சயமாக படிபவரின் மனதை கொள்ளை கொள்ளும் கட்டுரை ...
அஹ்மத் காக்காவுக்கு பாராட்டுகள் , அதீத முயற்சி மேலும் தொடர்ந்திட வேண்டுகிறேன். எங்கள் பெரிய வாப்பா அப்துல்ஹை அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. எங்கள் குடும்பத்தினருக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.
அப்பாஸ் ஹாஜியார் அவர்களைப் பற்றி தனியாக ஒரு பதிவை காக்கா தர வேண்டும். அவர்களின் உயர்ந்த குணத்திற்கு ஒரு உதாரணம், நான் சென்னை புதுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன் அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான நிர்வாகத்தினர் ஒதுக்கீடு அனுமதிக்கான நேர்காணல் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது, எதேச்சையாக அங்கு சென்ற நான் வரிசையில் அப்பாஸ் ஹாஜியரும் அவருடன் ஒரு மாற்று மத சகோதரரும் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்களிடம் சென்று விசாரித்தபோது அந்த சகோதரர் காலஞ்சென்ற ஏ. ஆர் . மாரிமுத்து (பட்டுக்கோட்டை முன்னாள் எம். எல். ஏ ) அவர்களின் மருமகன் என்றும் , அவரின் சேர்க்கைக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்கள் அதற்கு நான் உள்ளே ஆபிஸில் இருப்பது உங்கள் நண்பர்தானே (அப்போது கல்லூரியின் நிர்வாகத்தில் நமதூர் தங்க மகன் ஏ . ஜே . அப்துல் ரஜாக் காக்கா இருந்தார்கள் ) நீங்கள் ஏன் வரிசையில் நிற்க வேண்டும் என்று கேட்ட எனக்கு , நம்ம ஆளுக்கு நமதண்டா மரியாதையை தரவேண்டும் என்று சொன்னார்கள். ஒரு கணம் நான் திகைத்துப் போய்விட்டேன். இன்னும் அந்த நிகழ்வு என் மனதை விட்டு அகலவில்லை.
அடுத்து அலிய் ஆலிம் அவர்களைப் பற்றி என்னுடைய கருத்து , அவர்கள் மட்டும் நமதூர் மற்ற ஆலிம்களை போல் கொஞ்சம் வசதி உள்ளவர்களாய் இருந்திருந்தால், நமதூரில் இன்றளவும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் அநியாயத்திற்கும் , அனாச்சாரங்களுக்கும் அப்போதே சாவு மணி அடித்துருப்பார்கள். இருந்தாலும் அவர்களின் சக்திக்கு மீறி செயலாற்றினார்கள் என்பதை மறுக்க இயலாது. ஸுபுஹ் தொழுகைக்கு இளைஞ்கர்கள் வருவதில்லை. அட்டாச் பாத்ரூம் வைத்து வீடு காட்டுங்கள் என்று அப்போதே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஷரஃபுத்தீன் நூஹு
1 925 548 3696
எனக்கு தெறிந்தவரை அதிரையின் ஆலிமாக நான் கண்ட ஆலிம் அபூபக்கர் ஆலிம் 'அதிகமான உதாரணங்கள் உண்டு அதில் சில, வசீலா தேடுவது தர்காவிற்குப்போவது போன்றவற்றை எதிர்த்த முதல் ஆலிம் என்றுக்கூட சொல்லலாம் 'இலங்கையில் அரபிக்கல்லுரியில் ஆசிரியராக பணிபுறிந்தபோது வசீலாவைப்பற்றி அதிகம் பேசிவந்தார்கள் பின் அங்குள்ள உலமாக்கல் மத்தியில் பொரும்பிரச்சனையாக ஆகி கடைசியில் பணியிலிருந்து நீக்கபட்டு பின் வியாபாரியாக இருந்து கடைசியில் அதிரை ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியில் ஆசிரியராக இருந்து மரணித்தார்கள் நல்ல அரபிப்புலமைவாய்ந்த அறிஞர் 'இலங்கை அரபிக்கல்லூரியில் ஆசிரியராக இருந்துவரும் அப்துல்லா ஆலிம் அவர்களின் தந்தையும் அலிய் ஆலிம் அவர்களின் மாமனாரும் ஆவார்கள், அவர்களை சுவணத்தின் மேலான சுவணமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவணத்தில் நுலையச்செய்வானாக ஆமீன்
யாருமே எதிர்ப்பார்த்திராத இந்த அற்புதமான கட்டுரையை நம் பார்வைக்கு எழுதி தந்த அன்பு அதிரை அஹ்மது அவர்களுக்கு மிக்க நன்றி. எமக்கு தெரிந்து இணையத்தில் இப்படி பல அதிரை காலம் சென்ற நல்ல பெரியவர்கள் பற்றி ஒரே பதிவில் வருவது இது தான் முதல் முறை என்று நினைக்கிறோம். இப்பதிவை அதிரையில் உள்ள பள்ளி பாட புத்தகத்தில் பதியப்பட வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.
இது போன்று தொடராக வந்தால் நிச்சயம் நம் வருங்களால சமுதாயத்திற்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும். இன்னும் எத்தனையோ சுயநலம் விரும்பாத நல்ல உள்ளங்கள் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். அன்னவர்கள் அனைவரின் மறு உலக வாழ்வுக்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
அன்பர்களே! இன்னும் நல்லவர்கள் பலரைப்பற்றி எழுதுமாறு பரிந்துரை வழங்கியுள்ளீர்கள். வாசகர்களாகிய நீங்கள் பின்னூட்டமிடுவதே போதும் என்று எண்ணுகின்றேன். குறிப்பாக, என் சாச்சா மகன் அப்பாஸ் காக்கா அவர்களைப்பற்றியும், என் உடன்பிறந்த காக்கா எம்.பி. முஹம்மத் (எம்பி மாமா) அவர்களைப்பற்றியும் நானே எழுதுவது, எனக்குச் சரியாகப் படவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.
அதிரை அஹ்மது சொன்னது…
என் உடன்பிறந்த காக்கா எம்.பி. முஹம்மத் (எம்பி மாமா) அவர்களைப்பற்றியும் நானே எழுதுவது, எனக்குச் சரியாகப் படவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.
எம்பி மாமா பற்றி நீங்கள் எழுதினால் தான் அவர்களை பற்றிய நிறைய நல்ல விசங்கள் வெளி உலகிற்கு தெரிய வரும் காரணம் நீங்கள் அவரின் சகோதரர் என்பதால் அவர்களை பற்றி மிக நுனுக்கமாக அறிந்து வைத்து இருப்பீர்கள்
இது போன்றோரின் நல் விசங்களை படிக்கும் எம் போன்றோர் வாழ்கையில் பின்பட்ற ஏதுவாக இருக்கும்
இந்த அற்புதமான பதிப்பை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது எங்கள் காக்கா ஒன்றைச் சொன்னார்கள் மர்ஹும் அப்பாஸ் ஹாஜியார் அவர்கள் காக்காவை பாண்டிச்சேரிக்கு "photo typesetting" படிப்பில் சேர்த்து விட அப்பாஸ் ஹாஜியாரின் மிக நெருங்கிய நட்பு மர்ஹூம் சாஹுல் ஹமீத் (crownனுடைய பெரியப்பா) அவர்களோடு சென்றிருக்கிறார்கள் அங்கே பலதரப்பட்ட பேச்சுகள் வரும்போது மாற்று மதத்தவர்கள் மட்டுமே இருந்த இடத்தில் மாற்றுமதத்தவர் ஒருவர் அன்றைய பிரச்சினையாக இருந்த "சல்மான் ருஷ்டி"க்கு ஆயத்துல்லா கொமைனி அவர்களின் தீர்ப்பு பற்றி காட்டமாக பேசிக் கொண்டிருந்த அந்தச் சூழலில் தன் கருத்தில் நிலையாக "கொமைனியின்" தீர்ப்பு சரிதான் என்றும் சொல்லி தனது தனித் தன்மையை அங்கேயும் நிலை நிறுத்தியிருக்கிறார்கள், எதனையும் நேருக்கு நேர் சந்திக்கும் திரானிதான் இவர்களின் சிறப்பே...
அஸ்ஸலாமு அலைக்கும்.என்னமோ போங்க எல்லா வற்றிலும் நாங்கள் பின்னியிருப்பதாக(எங்கள் பின்னனி) வரும் நல் செய்திகளுக்கு அல்லாஹுக்கே நன்றி சொல்லனும்.
உணர்வுகளால் பின்னப்பட்ட இந்த அழகிய பொக்கிஷத்தை எப்போதும் அதிரை நிருபரில் உலா வருபவர்களின்
பார்வையில் தென்படுமாறு வைத்தால் நல்லது என நினைகிறேன் ....காரணம்
இது கட்டுரைமட்டுமல்ல ......
நல்லது நினைக்க ,நல்லது செய்ய தூண்டும் self motivating படைப்பு ......
ஒரு தலைமுறையின் அழகிய வரலாறு ....
ஒற்றுமையை ஓங்க செய்யும் வீரியம்மிக்க வார்ப்பு ......
நாம் எத்தனையோ ஆக்கங்களை இணையத தளங்களில் படித்திருக்கிறோம் ..
ஆனால் இது தந்த நல்பாதிப்பு போல் எதுவும் பாதித்ததாக எனக்கு தெரியவில்லை இது நமதூரை சார்ந்ததாக இருந்தாலும் பொதுவில் அனைவரையும் கவரும் காவியம் .............
நல்லவர்களின் நற் பண்புகளை நலமாக எடுத்து சொன்ன
காக்கா அதிரை அஹமது அவர்களுக்கு
நன்றி
"மொய்னப்பா" சற்று முந்தைய தலைமுறையினர்க்கு நன்கு பரிட்சையமான பெயர்.
மொய்னப்பா என்று பெயரை கேட்டாலே மழை பைத்தே நியாபகம் வரும் என்று கூறிய பெரியவர்கள் ஏராளம். மைக் அவ்வளவாக பயன்படுத்தப்படாத அந்த காலத்தில் மொய்னப்பா அவர்கள் மழை பைத் ஓதினால் கடைத்தெரு வரை கேட்குமாம். அவர்கள் ஓதி மழை வராமல் இருந்ததில்லையாம்.
உறவினர்கள் அனைவர் வீட்டிற்கும் சாச்சி, மாமி, பெரியப்பா என்று இனம் பந்தத்தோடு அடிக்கடி விஜயம் செய்வார்களாம்.
மொய்னப்பா அவர்களிடம் நகைச்சுவை உணர்வு அபரிதமாக இருந்ததாம். ஒரு சான்று " மோர் காரி மோரு மோரு என்று குறிக்கொண்டு வர அதற்கு அப்பா அவர்கள் 'இப்ப முடியாது புள்ள வாய் வேக்காலமா இருக்கிறது' என்றார்களாம்.
மக்தும் நெய்னா என்ற அவர்களை முதலில் அப்பா ஆக்கியது நான்தான். இரண்டாவது பேரன் ம்சம்/மு.செ.மு நெய்னா என்பது பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.
Post a Comment