Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நம்மூரில் காணாமல் போன பழக்க,வழக்கங்கள். 13

அதிரைநிருபர் | October 18, 2010 | , , ,


உலகை நவீன தொழில் நுட்பமயம் ஆட்டிப்படைத்து ஆட்சி செலுத்தி வருவதை நாம் அறிவோம். அதன் தாக்கம் பெருநகரங்கள் முதற்கொண்டு, சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் படிப்படியே சென்றடைவதை நாம் பல விசயங்களில் பார்த்து வருகிறோம். அதன் சாரமாக நம்மூரில் காணாமல் போன சில பழக்க, வழக்கங்களை இங்கு முடிந்த வரை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தலாம் என்று விரும்புகிறேன்.


1. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் பள்ளிகளின் பாங்கு கொடுத்த பின் அடிக்கப்படும் நஹராக்களின் ஒலி இன்று பெரும்பாண்மையான பள்ளிகளில் 'இன்வெண்ட்டர்' வந்த பிறகு கேட்க முடியவில்லை.

2. வீட்டின் பல விசேச தருணங்களில் மற்றும் சம்மந்தி வீட்டாரை சந்தோசப்படுத்த வீட்டிலேயே ஆள் வைத்து அல்லது ஆள் வைக்காம‌ல் மாவு இடித்து சுட்டுத்த‌ர‌ப்ப‌டும் பூவ‌டை, நானா ஹ‌த்த‌ம், அரிய‌த‌ர‌ம், குழ‌ல் ப‌ணியான், பூவந்தி, முட்டாசு, மைசூர் பாக்கு, வெங்காய‌ப்பணியான், சாதா ஹ‌ல்வா, பீட்ரூட் ஹ‌ல்வா போன்ற‌வைக‌ள் இன்றும் வீடுக‌ளில் உண்டாக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌வா என்று தெரிய‌வில்லை. (பெண் வீட்டாரை வ‌த‌க்காம‌ல் இப்ப‌ழ‌க்க‌த்தை விட்டு விட்டோம் என்று அறிய‌ப்ப‌ட்டால் மிக‌ ச‌ந்தோச‌ம் தான். அத‌ற்காக‌ ந‌ம் எல்லோரையும் ப‌ட்டினி போட்டு விடாதீர்க‌ள் என்று யாரும் கேட்க‌ மாட்டீர்க‌ளே?)

3. சிறுவ‌ர்க‌ளாக‌ இருந்த‌ நாம் விளையாடி க‌ழித்த‌ ப‌ளிங்கு, ப‌ட்ட‌ம், ப‌ம்ப‌ர‌ம், பேபே, தொட்டு விளையாட்டு, க‌ண்டு விளையாட்டு, தேர்த‌ல் வாக்கெடுப்பு, க‌யிறு ர‌யில் வ‌ண்டி, நொங்கு கோம்பை வ‌ண்டி, ட‌ய‌ர் வ‌ண்டி, அட்ட‌பில்லு போன்ற‌ விளையாட்டுக்க‌ள் பெரும்பாலும் ஒழிந்து விட்ட‌ன‌. எல்லாம் க‌ம்ப்யூட்ட‌ர், செல்போன் ம‌ய‌மாகி விட்ட‌ன‌.

4. க‌லியாண‌ம் முடிந்து ஒரு வார‌ம் அல்ல‌து ப‌த்து நாட்க‌ள் மாப்பிள்ளையுட‌ன் கூட‌ வ‌ந்து மூன்று வேளையும் ஒரு க‌ட்டு க‌ட்டிவிட்டு (சாப்பாடு) பெண் வீட்டாரின் மறைமுக வதுவாப்பேரு (பத்வா)எடுத்துச்செல்லும் மாப்பிள்ளை தோழ‌ன்மார்க‌ள் சாப்பாடு இன்று ஓரிரு நாட்க‌ளிலே முடிந்து விடுவ‌து ஒரு ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான். அல்ஹ‌ம்துலில்லாஹ்.. முற்றிலும் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று.

5. பெரிய‌வ‌ர் முத‌ல் சிறிய‌வ‌ர் வ‌ரை ந‌ம‌தூர் குள‌ங்க‌ளில் குளிப்ப‌து, கும்மாள‌ம் அடிப்ப‌து குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌து.

6. ஒன்றுமேயறியாத ப‌டித்துக்கொண்டிருக்கும் சிறுவ‌ர்க‌ளைப்பிடித்து அவ‌ர்க‌ளுக்கு வ‌ருங்கால‌த்தில் திரும‌ண‌ம் முடிக்க‌ இருக்கும் பெண்ணை முடிவு(அசைன்) செய்து 'நிக்காஹ்' என்னும் திரும‌ண‌ முன் உறுதி ஒப்ப‌ந்த‌ம் செய்து வைப்ப‌து இப்பொழுது குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன்.

7. சிறுவ‌ர்க‌ளுக்கு 'சுன்ன‌த்' செய்ய‌வ‌த‌ற்கு முன் வீட்டில் வ‌ச‌தி வாய்ப்புக‌ள் இருக்கிற‌தோ இல்லையோ அல‌ங்கார‌ வாக‌ன‌ ப‌வ‌னி தெருதோறும் பைத்துச‌பா இசை முழ‌ங்க‌ வ‌ருவ‌து இப்பொழுது முற்றிலும் குறைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான் மாஷா அல்லாஹ்.

8. வீடுகளின் முற்றத்தில் உரலை வைத்து நான்கு புற‌மும் புட‌வையை சுவ‌ராக‌ எழுப்பி ந‌டுவில் சிறுவ‌ர்க‌ளை உட்கார‌ வைத்து அவ‌ர்க‌ள் க‌த‌ற‌, க‌த‌ற‌ நாசுவ‌னை வைத்து 'சுன்னத்' செய்யும் முறை இப்பொழுது முற்றிலும் இல்லை என‌ க‌ருதுகிறேன்.

9. புதிய‌தாக‌ வெளிநாடு ப‌ய‌ண‌ம் செய்ய‌ இருக்கும் ந‌ப‌ர்க‌ளின் வீட்டில் ச‌ல‌வாத்நாரியா ஓதி நார்சா கொடுக்கும் வ‌ழ‌க்க‌ம் நின்று போய் விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். (வீட்டுக்கு வ‌ருகிற‌வ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ மூக்குபிடிக்க‌ உண்டு செல்வார்க‌ள். பாவ‌ம் ச‌புராளி சைத்தான் கோளாறு உள்ள‌வ‌ன் போல் காட்சி த‌ருவான்).

10. இக்கால பெண்கள் அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொழுது விளையாடிக்களித்த கலச்சிக்காய், சில்கோடு, பல்லாங்குழி, புளியங்கொட்டை, கொலெகொலெயா மந்திரிக்கா நரிநரியா சுத்திவா விளையாட்டுக்கள் எல்லாம் கண்மாசியா (முற்றிலும்) காணாமல் போய் விட்டது இக்கால சிறுவர், சிறுமியரிடம்.

11. நமது வீட்டில், குடும்பத்தில், தெருவில் யாரேனும் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டால் நமதூர் ரயிலடி (ரயில்வே ஸ்டேசன்) வரை ஆண்களும், பெண்களும் புடைசூழ வந்து ஹாஜிகளுக்கு மாலை அணிவித்து பைத்து ஓதி புனித பயணத்தை சிறப்புடன் இறைவன் கிருபையில் முடித்து வீடு வந்து சேர து'ஆச்செய்து அனுப்பியது இப்பொழுது இருக்கிறதா? அல்லது இல்லாமல் போய் விட்டதா? தெரியவில்லை. (எப்படி இருக்கும்? கம்பன் எக்ஸ்பிரஸ் தான் கண்மாசியாக்காணாமல் போய் விட்டதே....)

12. இப்பொழுது நமதூரில் மாணவ, மாணவியர் எல்லாம் வண்ண,வண்ண சீருடை அணிந்து பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது. நாம் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை கலர் வேட்டியும், பதினொன்றாம் வகுப்பிலிருந்து வெள்ளை வேட்டியும் உடுத்தி வர பள்ளி நிர்வாகமே அனுமதித்திருந்தது. அதை இப்பொழுது நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது. (இப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றிருக்கும் நம்மூர்க்காரர்களின் பள்ளிப்பருவ புகைப்படங்களை குடியுரிமை வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள் பார்க்க‌ வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கப்பட்ட அக்குடியுரிமையை அவர்கள் திரும்பப்பெற்றுக்கொண்டாலும் பெறலாம். அவ்வளவு அழகாகவும், நாகரீகமாகவும் இருக்கும். (சிலர் பழைய ஊதா தொப்பியுடனும் காட்சியளிப்பர்).

13. வீட்டினருக்கு தெரியாமல் கள்ளத்தனமாக‌ பார்த்துவந்த‌ (ஜெக்கரியா, நியூ சினிமா திரையரங்குகள்) சினிமாவும், குடித்த ஒட்டு பீடியும் பெரும்பாவமாக கருதப்பட்ட காலம் அது. தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும் வீட்டை சைத்தான் குடிவந்த வீடாக பேசப்பட்ட நேரம் அது. அக்காலத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றோ எல்லை மீறிய பாவங்கள் பரவலாக நடந்துவருவதை காணாமல் இருக்க முடியவில்லை.

14. வீட்டில் நடை பெற இருக்கும் கலியாண வைபவங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டின் பெரியவர்கள் ஒன்று கூடி (டீ, மிக்ஸர், பனியான் துணையுடன்)பத்திரிக்கைகள் எழுதி முதலில் அயல்நாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு, பிறகு உள்ளூர் உற்றார், சுற்றத்தாருக்கு அனுப்பப்படும். இக்காலத்தில் அவைகளெல்லாம் குறைந்து அல்லது மறைந்து வாய்க்கூப்பாடு, டெலிபோன் கூப்பாடு, ஈமெயில் கூப்பாடு, சாட்டிங் கூப்பாடு, இன்டர்நெட் கூப்பாடு என்று பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இதை தொழிலாக செய்து வந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. எப்படி குதிரை வண்டிகளெல்லாம் ஆட்டோக்களாக பரிணாம வளர்ச்சி பெற்றதோ அது போல் தான் இதுவும்.

15. அன்று வீடுதோறும் தண்ணீர் நிறம்பிய கிணறுகள் இருந்தன‌. இன்று அவைகளெல்லாம் மறைந்து ஆழ்குழாய்க்கிணறுகளாக வந்து நம் வீட்டை ஆட்சி செய்வதுடன் குளங்களின் தண்ணீர் இருப்புக்கும் வேட்டு வைக்கிறது. அன்று கிணற்றில் பயன்படுத்தப்பட்ட வாளியும், கயிறும் அதன் இரும்பு சக்கரமும் விரைவில் அழிந்துபோன பொருட்களின் வரிசையில் அருங்காட்சியகத்தில் காணப்படலாம்.

16. ஒரு காலத்தில் நமக்கு வரும் சளித்தொல்லை, இருமல், காய்ச்சல், ஜலதோசங்களெல்லாம் ஆஸ்பத்திரி சென்று ஒரு ஊசி போட்டு வந்தால் அவை நம்மை விட்டு காணாமல் போய் விடும். ஆனால் இன்றோ எத்தனை ஊசி போட்டு வந்தாலும், மருந்து மாத்திரைகள் தின்றாலும் அவைகள் நம் அன்றாட வாழ்வில் தொட்டு விளையாட்டு விளையாண்டு வருகின்றன. (இக்கால மருந்துக்கு வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என சொல்ல வந்தேன்).

17. அன்றாட சமையலுக்காக நம் வீட்டில் பயன்படுத்தப்பட்ட அலாயத்திக்காட்டு விறகுகளும், சைக்கிளின் பின் கேரியரில் கட்டி வாங்கி வந்த விறகுகடை சவுக்கு விறகுகளும் இன்று கலியாண வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மாறிப்போனது. குறிப்பாக அலயாத்திக்காட்டு விறகுகள் இன்று அடியோடு இல்லாமல் போய்விட்டதாக கூறலாம். அன்று ஆடம்பரப்பொருட்களின் வரிசையில் பவனி வந்த கேஸ் அடுப்புகள் இன்று இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம்.

18. அன்று டி.வி.எஸ். 50 (மொபெட்) வைத்திருந்தாலே பணக்காரர்களின் வரிசையில் வலம் வந்தவர்கள் இன்று இன்னோவா இல்லை ஃபர்ச்சூனர் வைத்திருந்தால் மட்டுமே ஏதோ உப்புக்கு சப்பானி போல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பணங்காசுகள் பெருகி அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது என சொல்ல வந்தேன்...

19. ஒரு காலத்தில் நமதூர் ஜாவியாவில் பயான் முடிந்து இறுதியில் கொடுக்கப்படும் நார்சா சோறு ஆரம்ப காலத்தில் மண் சட்டியிலும், பிற‌கு சில்வர் கிண்ணத்திலும் இறுதியில் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்தது போல் இன்னும் பல பழைய பழக்க,வழக்கங்கள் நாகரீக உலகை காரணம் காட்டி நம்மைவிட்டு நலுவிச்சென்றுவிட்டன.

20. ஒரு காலத்தில் ட்ரங்கால் புக் பண்ணி டெலிபோனுக்காக காத்துக்கிடந்த நாம் இன்று எல்லோரின் கைககளிலும் செல்போன் துள்ளி விளையாடுவதை தவிர்க்க முடியவில்லை.

21. அன்புக்கடிதங்களும், ஆசை வாழ்த்துக்களும், மணியார்டருகளும் கொண்டு வந்து நம் வீட்டில் கொடுத்துச்சென்ற தபால்காரர்கள் இன்று இருக்கலாம். ஆனால் அப்பழக்க,வழக்கங்களெல்லாம் மலையேறி சென்று விட்டதாக அடித்தும் கூறலாம் அடிக்காமலும் கூறலாம். இதில் தோனா.கானா முறையும் அடங்கும்.

இன்னும் நம்மிடம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த எத்தனையோ பழக்க,வழக்கங்கள் விஞ்ஞான மாற்றத்தை காரணம் காட்டி இன்று நம்மிடமிருந்து பிரியா விடைபெற்று சென்று விட்டன. அதில் சில எனக்கு ஞாபகம் உள்ளதை மேலே வரிசைப்படுத்தியுள்ளேன். மேற்கண்டவற்றில் யாரையும் புண்படுத்த வேண்டுமென்றோ அல்லது உட்கருத்து ஏதேனும் வைத்தோ எதுவும் எழுதப்படவில்லை.

இஸ்லாத்திற்கு முரணான‌ பல தீய பழக்க,வழக்கங்கள் நாளடைவில் நம்மை விட்டு காணாமல் போயிருந்தால் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சந்தோசப்பட வேண்டியது தான்.

விடுபட்ட பழக்க,வழக்கங்களையும், உங்கள் மேலான கருத்துக்களையும் இங்கு பின்னூட்டமாக இட்டு தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பழைய ஞாபகங்களை ஓரளவு மறக்காமல் இங்கு வழங்க பேருதவி புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று அவனிடம் பிரார்த்தித்தவனாக இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

வஸ்ஸலாம்.

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது

13 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.முன்பு(சென்றவருடம் நான் எழுதிய கவிதையை இங்கே பதிகிறேன்.கடந்த காலம் கடந்தாலும் நினைவுகள் நம்முடனே தங்கிவிடுகிறது. நைனா மீண்டும் ஒரு அருமை யான நினைவுருத்தல்.அருமை.)
இழந்த சில இனிமைகள்


அதிகாலை இறைவணக்கத்தின் பின்
நண்பர் குழாம் சூழ காதூரம் கடந்து,
கீத்து கொட்டைகையின் கீழ் இயங்கும்-
அந்த தேனீர் கடை தனில் சிற்றூண்டியும்,
சிருகுவளையில் தேனீரும்குடித்தகாலம்.
ஒவ்வொரு நண்பரிடமும்,
வகை வகையாய்வார்த்தை ஜாலம் செய்து
வண்டிப்பேட்டையெனும் சிறு வணிக பகுதி கடந்து-
பெறு வெளி விளையாட்டு திடல் அடைந்து,
உடல் வேர்க்கவேங்கைபோலும்,
செம்மான் போன்றும்,
சிறு வெண் முயல் போன்றும் ,
களிப்புடனும்,துடிப்புடனும்,
ஆர்பறிக்கும் கடல் அலைப்போன்றும்...
இன்ன பிறசெயல் செய்து.
விளையாடிய அந்ததருனங்கள்.
இது போல எத்தனை மகிழ்வுதந்த
நிகழ்வுகள் கால சக்கரத்தில் சுழன்று,
அரைப்பட்டாலும் ....
இன்றும் நிழலாக நெஞ்சத்தில் ஊசலாடும்.
இன்று இழந்து தவிக்க வைக்கும் அன்னாள் இன்பம்
மீண்டும் எனைத்தேடி வருமோ?

Abu Khadijah said...

//மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் பள்ளிகளின் பாங்கு கொடுத்த பின் அடிக்கப்படும் நஹராக்களின் ஒலி இன்று பெரும்பாண்மையான பள்ளிகளில் 'இன்வெண்ட்டர்' வந்த பிறகு கேட்க முடியவில்லை.//

நஹராக்களை எடுத்ததற்கு வேறு காரணங்கள் உள்ளன என்பதை நான் கேள்விப்பட்டேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) தொகுத்து தந்த typical அதிரைப்பட்டினம் வழக்கங்கள் நாலடைவில் மங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இளையவர்களிடம் எழுந்த விழிப்புனர்வும் முக்கிய கரணியே ! ஆனால் வீட்டுக்குள் நடக்கு வினைதேடும் விளையாட்டுகள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது இலைமறை காயாக.

ஜாஹிர் காக்கா முந்தைய பதிவின் கருத்திட்டது போல், கண்களில் பட்ட இடமெல்லாம் கட்டம் கட்டம் போட்டு கட்டிடமாக மாறுவதும், மணையாளுக்கு மனைகளாவதும் அதிரையின் நேற்றிலிருந்து தொடர்ந்து வரும் தொ(ல்)லை நோக்கு ??? பார்வையே :)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர் நெய்னா முகம்மது, பழைய நினைவுகளை தன் பாணியில் அப்படியே நம் கண் முன் நிறுத்தி நம் மனதை பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லவைப்பதே மிகப் பெரிய திறமை. வாழ்த்துக்கள் சகோதரரே.

இளைய சமுதாயத்திடம் ஏற்பட்ட மார்க்க தெளிவும், எழுச்சியும் பொதுவாக திறந்துகிடந்த பல மூடநம்பிக்கைகள், பித் அத்கள் மூடப்பட்டுள்ளது.

நல்ல விசயங்களை தற்காத்து, இன்னும் நிறைய மூட நம்பிக்கைகள், பித் அத்கள் நம் மக்களின் மனதிலிருந்து மறக்கடிக்கப்பட வேண்டும். நம்மை போன்றவர்கள் அதிகமதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பழைய நினைவுகள் (நல்லவை, கெட்டவை) ஞாபகப்படுத்தியிருப்பதிலிருந்து நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு வழியாக இருக்கிறது என்று கருதுகிறேன்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அப்துல்மாலிக் said...

குறிப்பிட்ட அதிகப்படியாக மூடபழக்கங்களை அடிப்படையாக கொண்டதுதான் அதை தூரவீசியதில் இளைஞர்களின் பின்நவீனத்துவம்தான். மீதமுள்ளவைகள் டெக்னாலஜியின் முன்னேற்றத்தால் பிந்தள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும் சிறுவயதில் விளையாடிய கிட்டிபில், பேந்தா, சில்லுக்கோடு இவையெல்லாம் இல்லாமல் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு வேட்டுவைத்ததாகவே நினைக்க தோன்றுகிறது

அருமை நெய்னா

sabeer.abushahruk said...

சகோ. MSM, உங்கள் memory எத்தனை GB? மாஷா அல்லாஹ். வாப்புச்சாட்ட சொல்லி மொளகா சுத்திப் போடுங்க(இந்தப் பழக்கமும் போச்சி?)

Black & white காலங்கள் எங்களுக்கும்தான் நினைவிருக்கு ஆனா உங்களைப்போல சுவாரஸ்யமாக சொல்லத்தெரியாது. நீங்க சொல்றது உம்மா மடில படுத்து கதைக் கேட்கிறமாதிரி ரொம்ப சுகமா இருக்கு. அடிக்கடி சொல்லுங்க ப்ளீஸ்.

crown, உங்கள் flash back ம் cute

ZAKIR HUSSAIN said...

Bro.MSM, நீங்கள் ஒரு அருங்காட்சியகம் [ மியூஸியம்] யாரும் இனிமேல் நம் ஊரின் பழைய விசயங்களை வினவினால் நிச்சயமாக் உங்களிடம் அனுப்பி வைக்கலாம்.

//இக்கால மருந்துக்கு வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என சொல்ல வந்தேன்)//.

இதற்க்கு காரணம் நமது இம்யுனிட்டி பவரும் குறைந்து வருவது காரணம்.வைரஸும் , பாக்டீரியாவும் 'முண்டா' தட்டி முன்னேருவதுபோல் மனித உயிர்களிடம் அந்த முன்னேற்றம் இல்லை பாச்சை மருந்து..நாளடைவில் பாச்சா பலிக்காமல் போய்விடுவது மாதிரிதான்...மருந்து அப்படியே இருக்கும். பாச்சையின் ஜெனடிக் மாற்றம் மருந்துக்கு டாட்டா சொல்லிவிடும்.இன்னும் 20 வருடத்தில் மனிதனின் இம்யூனிட்டி சன் டி வி யில் வரும் காம்பயர்கள் சொல்லும் அறிவுரை மாதிரி கவனிக்கப்படாமல் போகும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு நேரத்தில் நம்மவர் மரணித்த பொழுது முறையே குளிப்பாட்டி, கஃபனிட்டு மய்யித்தை சந்தாக்கில் வைத்து கப்ருஸ்தான் (மய்யத்தாங்கரை) எவ்வளவு தூரமிருந்தாலும் இனி சுமக்க வாய்ப்பு எங்கிருக்கிறது? என்ற ஏக்கத்தில் அவரவர் தோளில் மாறி,மாறி தூக்கி வந்து கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இன்றோ கப்ரஸ்தான் கொஞ்சம் தூரமாக இருப்பின் உடனே ஆம்புலன்ஸ் (அவசர ஊர்தி) உதவியை நாட வேண்டி இருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே மாறித்தான்னு போச்சுன்னு சொல்லிடலாம்னு இருக்க முடியலையே!

பாங்கு சொல்லும் மோதினாருக்கு டிப்பனில் பால் கொடுத்து அனுப்புவாங்களே அவ்வழக்கம் இன்னும் இருக்கா ?

உச்சந் தலையில சுக்கு பொடியாக்கி தேயு தேயுன்னு தேய்ப்பாங்களே இன்னும் இருக்கா ?

மொட்டை மாடியில் கவுந்த குடையில்லாத வீடுகளின் எண்ணிக்கை குறைவே..

Saleem said...

தனக்கே உரிய பாணியில் மச்சான் ஒரு கலக்கு கலகிட்டார்!!!

Yasir said...

சூப்பர் சகோ.நெய்னா...GITEX busy-யினால் அதிகமாக கருத்து எழுத முடியவில்லை...முடிச்சிட்டு வர்றேன்

Shameed said...

sabeer சொன்னது… சகோ. MSM, உங்கள் memory எத்தனை GB? மாஷா அல்லாஹ். வாப்புச்சாட்ட சொல்லி மொளகா சுத்திப் போடுங்க(இந்தப் பழக்கமும் போச்சி?)


MSM எத்தனை GB என்பதை கணக்கு போடா ஆரபிச்சு கடைசி வரை கண்டு பிடிக்க முடியல்ல

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு