(மாற்றியோசி… மக்களே – 2)
உடை நனையக் கூடாதெனக்
குடை கொணர்வர்
மழை நாட்களில் மாந்தர்!
வாராதென நினைத்த மழை
வந்துவிட்டப் போதினிலே
எடை தாங்கும் நாற்காலி
குடை யாக்கிப் பிடிப்பர்!
மாற்றியோசி...மக்களே:
வாராதென்ப வருதலும்
வருமென்பெ வராதலும்
வாழ்க்கை நாடகத்தில்
வாடிக்கை!
தாராதது கண்டு தளராது
தாங்காது என தேங்காது
தடைகளால் இடறாது
தொடர்!!!
வைத்ததுதானே வாய்த்தது
போனதுதானே பொய்த்தது
இருப்பதுகொண்டு உருப்படு
இல்லாததெதற்கு நல்லார்க்கு?
முகக்கண்ணால் காதல்
அகக்கண்ணால் ஞானம்
இகம் காண நினக்கு
நிசக் கண்ணே நீதம்!
இருப்பது போதாதென மூச்
சிறைப்பது ஏனோ?
மாற்றியோசி...மக்களே:
இல்லாதோரிடம் இல்லாததெல்லாம்
இருக்கிறதே உன்னிடம்!
முடியாத தென் றொன்றுமில்லை
விடியாத கிழக் கெங்குமில்லை
பிரியாத வடக் கயிறுபோலே
பிரிய மேற் கொள்பிறவியிலே!
மூன்றாவது முயற்சியில்
கிடைத்துவிடும் வெற்றிக்கு
இரண்டுமுறை மட்டுமே
முயல்வது முறையுமல்ல!!!
இம்மையின் இனிமையில்
இச்சைகொண் டலைந்து
இல்லாத இன்பத்தை
இருப்பதாக நினைந்து
சொல்லவேத் தகாத
செயலெல்லாம் செய்யாது...
மாற்றியோசி...மக்களே:
பொய்மையை வீழ்த்தி
வாய்மை வெல்லு மந்த
மறுமையை நினை - அதன்
மகிமையே நிலை!!!
கரையைத் தொடும்வரைதான்
கடல்
தரையைத் தொடும்வரைதான்
மழை
அலையையும் நதியையும் நினை
அலைபாயும் மனத்திற் கது அணை
உயிரோட்டம் உளவரைதான்
வாழ்க்கை
உடல் ஊன்றி நிற்கும்வரைதான்
பயணம்
உயிர்காற்று ஓய்ந்து
உடல்கூடு வீழ்ந்துவிட்டால்
உனக்கே சொந்தமல்ல நீ
மாற்றியோசி...மக்களே:
உள்ளவரை உலகு - உயி
ருள்ளவரை உதவு
நல்லவரை நம்பியே
நகர்கின்றன நாட்கள்!!!
சபீர் அபுசாருக்
32 Responses So Far:
வாவ், THINK OF OUT THE BOX என்பதை எவ்வளவு அழகாவும்,ஆழமாகவும் சொல்லியிருக்கின்றீர்கள் கவிக்காக்கா...தன்னம்பிக்கையற்று இருக்கும் அவநம்பிக்கை கொண்ட உள்ளங்களுக்கு அருமருந்து உங்கள் இக்கவிபயாட்டிக்
//வருமென்பெ வராதலும்
வாழ்க்கை நாடகத்தில்
வாடிக்கை!// அவ்வளவுதான்
ஓஓஒ இடி சவுண்டுமா இதுல இருக்கு முன்னாடியே சொல்லக்கூடாதா ? ஆபிஸில் ...இடிச்ச இடியிலே இயக்குநர் எங்கே நான் கிழே விழுந்துட்டோனோ என்று பார்க்க வந்துட்டார்
MAN PROPOSES GOD DISPOSES.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி நிலவும். ( நன்றி கண்ணதாசா)
ONE MORE MASTER PIECE. CONGRATS.
அது என்ன ரீ ரிகார்டிங்க்? பயமுறுத்தவா?
அஸ்ஸலாமு அலைக்கும். வராதுஎன நினைக்கவில்லை! வரும் என நினைத்து அதில் நனைந்தோம் கவியின் கவிமழையில் கருத்து நீர் துளிகள் எம்மை தலைக்கு குளித்தாலும் உடலெங்கும் உணர்வு ஓட்டம். இதில் எல்லா வகையிலும் கோல் அடிக்கும் உம் கவிகால்கள். அருமை ! கவிஞரே !இப்படி வாழ்கைதத்துவம் கொட்டோ என கொட்டி ஊரேங்கும் ஒரே குளிர்.
மாற்றியோசி...மக்களே:
வாராதென்ப வருதலும்
வருமென்பெ வராதலும்
வாழ்க்கை நாடகத்தில்
வாடிக்கை!
------------------------------------------
ஆமாம் வாராது என வானிலை அறிக்கை சொல்லியும் பொய்கும் படி வரும் மழையும், வரும் என காத்திருந்து தினம் ஏமாற்றும் காவிரியும், நம் ஊர் கம்பனும். இப்படி எத்தனையோ வராதது நம் முகத்தில் கரிபூசிவிடும்.(கம்பன் வந்து அது கரி பூசினாலும் தேவலாம், நம் முகம் மலரும் ஹூம்ம்ம்ம்... எங்கே வர?).
தாராதது கண்டு தளராது
தாங்காது என தேங்காது
தடைகளால் இடறாது
தொடர்!!!
---------------------------------------
மனம் தளரும் ஆற்றாமை எதற்கு ஆறுக்கு அணைபோடுவது போல் நில்லாது தேறு! பின் வரும் தடை மீறு! ஏறு நடை போட்டு தடையின் தலைமேல் ஏறு! பின் ஆற்றாமை என்னும் தயக்கம் உடைக்கும் பெரும் ஆறு அது யாரு? நீரு( நீ)!
முடியாத தென் றொன்றுமில்லை
விடியாத கிழக் கெங்குமில்லை
பிரியாத வடக் கயிறுபோலே
பிரிய மேற் கொள்பிறவியிலே!
------------------------------------------------
வார்த்தை பின்னல் இந்த பிரியாத வடக்கயிறு ! இப்படி எல்லாதிசையிலும் பயணம் செய்யும் கவிதை எட்டு திக்கும் எட்டும்.பிரியம் மேல் கொண்டோம் உங்களிடம் பிரியாத நட்பினாலே! எத்திசையிலும் உங்களுடன் கைகோத்துவர நாங்கள் என்றும் ஆயத்தம்!
மாற்றியோசி...மக்களே:
பொய்மையை வீழ்த்தி
வாய்மை வெல்லு மந்த
மறுமையை நினை - அதன்
மகிமையே நிலை!!!
----------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! அருமையான போதனை!எல்லாஹ்புகழும் அல்லாஹுக்கே! நன்மையை ஏவி தீமையை தடுக்கும் எல்லாமுயற்சியும் நல்ல பலனை நம் எல்லாருக்கும் வழங்கும் வல்லவன் அல்லாஹ் கருனை எல்லாருக்கும் உண்டாகட்டும் அது உங்களுக்கும் உங்கள் குலம் சார்ந்தோருக்கும்.ஆமீன்.
மாற்றியோசி...மக்களே:
உள்ளவரை உலகு - உயி
ருள்ளவரை உதவு
நல்லவரை நம்பியே
நகர்கின்றன நாட்கள்!!!
----------------------------------------
ஆமாம் நல்லவரை நம்பியே நகரும் நாட்கள் அவை என்றும் வாடாது அன்பு மணம் வீசும் பூக்கள். கவிஞரே இப்படி எல்லாஹ்வின் கருனையால் உங்களின் சமூக பார்வை மேலும், மேலும் நல் செய்தியை தரட்டும் அல்லாஹ் போதுமானவன். எல்லா வார்தைகளும் அர்தம் அடங்கிய கேப்சூல் அதில் நல் மருந்து இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
அப்பாடா கிரவுன் வந்துட்டா போன கரண்ட் திடீரென்று வந்த சந்தோஷம்...நலமா கிரவுன் எங்கே இருந்தீங்க இவ்வளவு நாளா ?
Yasir சொன்னது…
அப்பாடா கிரவுன் வந்துட்டா போன கரண்ட் திடீரென்று வந்த சந்தோஷம்...நலமா கிரவுன் எங்கே இருந்தீங்க இவ்வளவு நாளா ?
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். யாசிர் நான் நலம் நீங்கள் நலமா?. நட்பிற்கு நல்ல வெளிச்சம் போடவர் நீங்கள் உங்கள் அன்பின் பவரில் என்றுமே நான் இருப்பதால் அகலாவண்ணமே இருக்கிறென். அகல்விளக்கு எறியாது போனாலும் அன்பின் வெளிச்சத்தின் நிழலில் ஒதுங்கிதான் இருக்கிறேன். பணியின் சுமையினால் பதுங்கி இருப்பது போல் ஒரு பொய்தோற்றம் அவ்வளவே!
//உயிரோட்டம் உளவரைதான்
வாழ்க்கை
உடல் ஊன்றி நிற்கும்வரைதான்
பயணம்
உயிர்காற்று ஓய்ந்து
உடல்கூடு வீழ்ந்துவிட்டால்
உனக்கே சொந்தமல்ல நீ//
//முகக்கண்ணால் காதல்
அகக்கண்ணால் ஞானம்
இகம் காண நினக்கு
நிசக் கண்ணே நீதம்!
இருப்பது போதாதென மூச்
சிறைப்பது ஏனோ?//
ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும்
ஞானமற்ற மனிதா...!
நீயும் ஒரு நாளில் நிலத்தில்
சாயும் வேளையில்
உயிரும் போய்விடும்;
பெயரும் போய்விடும்..!
உடல் முழுதும் செயலற்று
கிடக்கும்;"ஊனமுற்ற"நிலையே
கிடைக்கும்....
வேதத்தைக் காணாத கண்கள்;
ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்;
உள்ளத்தால் ஊனமுற்றவைகளே..
அகம்பாவம் நிறைந்ததால்,
அகம்- பாவத்தில் உறைந்ததால்;
சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து
சுகம் தேடவேயில்லையே...!!
கருவறையே உலகமென்று
கருதியே சயனித்திருந்தாய்,
ஓருலகில் வந்து உதிப்பாயென்று
ஒருபோதும் நினைக்காதது போலவே;
மறு உலகம் உண்டென்பதை
மறந்து விட்டாய் மனமே..!
இரணமும்; மரணமும்
இரகசியமாய்த் தான்
இறைவனும் வைத்து விட்டான்;
இரண்டையும் நோக்கியே
இரவும் பகலும் பயணிக்கின்றோம்......
இரணத்தின் முடிவு;
மரணத்தின் துவக்கம்
சென்ற நிமிடம்-
நின்று பேசியவர்கள்
சென்ற இடம் எங்கே?
சென்று பார்த்து வா;
நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க)
ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை
நன்றாக உருவமமைத்த இறைவனே
ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும்
ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான்
உண்மை இதுவென்று உணராத உள்ளமே
உண்மையிலே "ஊனமுற்றவை".........
//முடியாத தென் றொன்றுமில்லை
விடியாத கிழக் கெங்குமில்லை
பிரியாத வடக் கயிறுபோலே
பிரிய மேற் கொள்பிறவியிலே!//
நான்கு திசைகளை
நான்கு வரிக்குள்
நன்கு புகுத்திய
உன் கவித்திறன்
அற்புதம் என்பேன்
சொற்"பதம்"கண்டேன்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆஹா அரங்கில் வீரர்களுக்குப் பதிலாக வினோதமான மக்களை காணமுடிகிறது.
ஆமா காக்கா
நாற்காலியை வீட்டிருக்கு எடுத்துச் செல்ல மாற்றி யோசித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்?
//முடியாத தென் றொன்றுமில்லை
விடியாத கிழக் கெங்குமில்லை
பிரியாத வடக் கயிறுபோலே
பிரிய மேற் கொள்பிறவியிலே!//
நான்கு திசைகளை
நான்கு வரிக்குள்
நன்கு புகுத்திய
உன் கவித்திறன்
அற்புதம் என்பேன்
சொற்"பதம்"கண்டேன்!
துளி! துளி!! மழைத்துளி!!
தூறும் மழைதான் துயரம் துடைக்கும்
மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்
இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம்
அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம்
முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்
திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே
சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்
பாறை மேலே படரும் சந்தம்
உயிர்களும் மழையை உயிராய் எண்ணும்
பயிர்களும் மழையை பசியா(ற) உண்ணும்
வானம் அழுது வடித்து வழியும்
ஈனம் பொழுதில் இடிந்து ஒழியும்
நிலத்தை மழைத்துளி நெகிழ்ந்து நிறைக்கும்
நலத்தை விதைத்திட நிலமும் சிரிக்கும்
மண்ணில் மழைத்துளி மலரும் வாசனை
எண்ணி மகிழ்வதால் இனிமை வீசுமே
பஞ்சமும் நாட்டில் பரந்துள பசியும்
அஞ்சியோர் வாழ்வில் அல்லலும் மசியும்
ஆற்றின் ஓட்டம் அழகுற நண்பன்
சேற்றில் நாட்டும் செயலில் வம்பன்
கடலின் நீரால் கருவாய்ப் பிறந்தான்
திடலின் சேறால் திருவாய்ச் சிறந்தான்
பிறந்த கடலில் பின்னர் மீட்சி
சிறந்த வாழ்வியல் செப்பும் சுழற்சி
//உயிரோட்டம் உளவரைதான்
வாழ்க்கை
உடல் ஊன்றி நிற்கும்வரைதான்
பயணம்
உயிர்காற்று ஓய்ந்து
உடல்கூடு வீழ்ந்துவிட்டால்
உனக்கே சொந்தமல்ல நீ//
உயிர் உள்ள வரிகள்
பழையது!
சமீபத்திய
அடைமழை காலத்தில்
ஊர் சென்றிருந்தபோது
அம்மா அருகிருந்து
வெள்ளை அவலின்
கொழகொழ கஞ்சியில்
சில்லறை காசுகளாய்
நசுக்கிய
சோளம் கொட்டி
சிற்றகப்பை கொண்டு
உண்ணத் தந்தது
கைவிசிறி
கையிலெடுத்து
மகனுக்கு
வேர்க்காது
பார்த்துக்கொண்டது
என்
நாக்குக்குப் பரிச்சயமான
வாச மொன்று
நாசியைத் தீண்ட
பின்கட்டுத் திண்ணையில்
எட்டிப்பார்க்க...
கருப்பாய்ச் சுடுபட்ட
மண்சட்டியின்
உட்புறம்
சற்றே கருகிய
மிளகாய்ப் புளி
மசாலாவில்
ஒட்டிக்கொண்டிருந்த
நெத்திலிகளோடு
நேற்று வைத்த மீன்குழம்பும்
கெட்டித் தயிர் சேர்த்து
பிசைந்து வைத்த
பழையசோற்றோடும்
வேலைக்காரப் பெண்
உண்பதைக் கண்டு
உம்மாவை நோக்கினேன்
கண்களாலேயே
மறுத்த
உம்மாவுக்காக
அவல்கஞ்சியைத் தொடர
புத்தியில்
நெத்திலி மணத்தது!
'' மாற்றியோசி...மக்களே:
இல்லாதோரிடம் இல்லாததெல்லாம்
இருக்கிறதே உன்னிடம்! ''
மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் சபீர் காக்கா அவர்களே நாற்காலியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடுகிறார்கள்.
அத்தனையும் அர்த்தமுள்ள மாற்று யோசனைகள்.
அருமை.
//அவல்கஞ்சியைத் தொடர
புத்தியில்
நெத்திலி மணத்தது!//
இந்த வரிகளைப் படித்தபோது இதயத்தில் ஜில்லென்று ஒரு மழைச்சாரல் அடித்ததுபோல் உணர்ந்தேன். தம்பி உங்கள் கையைக்கொடுங்கள் அதில் நான் ஒரு முத்தம் இடவேண்டும்.
பழையது....என்றும் இனிக்கும் புதியது.
உன் இந்த கவிதை வரிகள் 'வைரமுத்து, மு. மேத்தா , நா.காமராசன், கவிக்கோ. பழனிபாரதி,போன்றவர்களின் வரிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லை.
ஒரு கவிதையில், பழைய நினைவுகளின் சுகத்தையும், தாய்மையின் பரிவையும் இவ்வளவு அழகாக உன்னால்தான் சொல்ல முடியும்.
மூன்றாவது முயற்சியில்
கிடைத்துவிடும் வெற்றிக்கு
இரண்டுமுறை மட்டுமே
முயல்வது முறையுமல்ல!!!
----------------------------
முயன்று களைத்தவர்களுக்கு
இந்த அற்புத வரிகள் சொல்லும்
மாற்று சிந்தனை
ரொம்ப ரொம்ப அழகு !
ரொம்ப ரொம்ப யதார்த்தம் !
சபீர் காக்காவின் கலக்கல் கவிதை !
இது விதைக்கும் நம்பிக்கை !
//கவிபயாட்டிக்//
இதைத்தான் மாற்றியோசிப்பது என்கிறேன். எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் மூலகாரணம் இடையில் ஒருவர் மாற்றியோசித்ததுதான் இல்லையா? நன்றி, யாசிர்.
//எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி நிலவும். ( நன்றி கண்ணதாசா)
ONE MORE MASTER PIECE. CONGRATS. //
நன்றி, இபுறாகீம் அன்சாரி காக்கா. ஊருக்குத் தாங்கள் சென்ற காரணமான உடல்நலத்தில் கவனம் செலுத்திவாருங்கள்.
//கம்பன் வந்து அது கரி பூசினாலும் தேவலாம், நம் முகம் மலரும் //
கரி பூசினால் முகம் மலரும் என்பது மாற்றியோசிப்பதுதான்.
நன்றி கிரவுன். யாசிர் சொன்னதுபோல நீங்கள் வாசிக்கவில்லையெனில் அது எந்த கவிதைக்கும் ஒரு பெரும் குறையாகவே தோன்றும்.
//பணியின் சுமையினால் பதுங்கி இருப்பது போல் ஒரு பொய்தோற்றம் //
அப்டீன்னா இந்தக் கவிதை தூண்டிலா? இந்தப் பொய்தோற்றம் எங்களிடையே தங்களைக் காண மெய்த்தேட்டத்தை உருவாக்கிவிடுகிறது.
கவியன்பன்:
//உயிரும் போய்விடும்;
பெயரும் போய்விடும்..!//
பெயர் போகாத அளவுக்கு, இவ்வுலகில் இனியும் பலர் நினைவில் வைத்துக்கொள்ளுமளவுக்கு ஏதாவது நல்லதைச் செய்யச் சொல்லவே மாற்றியோசிக்கச் சொன்னேன்.
//உண்மை இதுவென்று உணராத உள்ளமே
உண்மையிலே "ஊனமுற்றவை".........//
ஊனமற்ற உண்மை, கவியன்பன். வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
எல் எம் எஸ் / மாற்றியோசிக்க உங்களுக்கெல்லாம் சொல்லியாத் தரவேண்டும்? “டிஸைன்ஸ்” நீங்கள் மாற்றியோசித்ததின் விளைவே, இல்லையா? கருத்துக்கு நன்றி.
ஹமீது: நச்சென்ற விமரிசனத்துக்கு நன்றி.
அபுபக்கர் அமேஜான்: //நாற்காலியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடுகிறார்கள்.//
நாற்காலிக்காகவும் அங்குமிங்கும் ஓடுகிறார்கள். என்னத்தச் சொல்ல.
நன்றி அ.அ.
எம் ஹெச் ஜே: நன்றி, (போட்டிக் கவிதை இல்லையா? நாளாச்சே?)
ஈனா ஆனா காக்கா:
//தம்பி உங்கள் கையைக்கொடுங்கள் அதில் நான் ஒரு முத்தம் இடவேண்டும்//
இந்தாங்க காக்கா. நெத்திலி மணக்குதா? அங்கே அவல் கஞ்சிதானே?
நான் எழுதுவதையெல்லாம் நீங்கள் ரசிப்பதில் ஆச்சரியமில்லை. எழுதியது யாராயிருந்தால் என்ன காக்கா. ஒத்த ரசனை ரசிக்கத்தான் செய்யும். நன்றியும் துஆவும்.
ஜாகிர்: மெயின் புத்தகத்தை விட்டுவிட்டு இலவச இணைப்புக்கு கமென்ட்ஸா?
ஹார்மீஸ்: //இது விதைக்கும் நம்பிக்கை !//
இதுவே என் நம்பிக்கையும். நன்றி, அப்துர்ரஹ்மான்.
இன்னும் வாசித்த அனைவருக்கு என் நன்றி.
//மாற்றியோசி...மக்களே:
பொய்மையை வீழ்த்தி
வாய்மை வெல்லு மந்த
மறுமையை நினை - அதன்
மகிமையே நிலை!!!//
சபீர் காக்கா... ஒரு டவுட்டு இங்கு மந்த மறுமை என்ற வார்த்த சரியா?
மறுமையில் நிகழக்கூடியது பயங்கரங்களே என்று தானே கேள்விப் பட்டுள்ளோம்..
சும்மா சந்தேகம் தான் காக்கா...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சபீர் காக்கா...
தற்போது காய்சல் தேவலையா? how r u and ur family?
நான் இப்படி எழுதினதுனாலே எங்கூட்டுகாரவுலுக்கிட்ட இன்னிக்கு மாட்டிக்குவேன். காரணம் அடிக்கடி என் பின்னூட்டத்தை பார்த்து, எனக்கு கமென்ஸே போட தெரியாதாம், நீங்கள் என்னை பற்றி அதிரைநிருபரின் நிழல்கள் http://adirainirubar.blogspot.in/2012/03/blog-post_6220.html என்ற பதிவில் எழுதின வார்த்தை சொல்லி சொல்லி ஒரே ஓவர் நக்கல்ஸ்..
:):)
அன்பிற்குரிய அதிரை நிருபரின் அமீர் அவர்களே,
//வாய்மை வெல்லு மந்த//
வாய்மை (வெல்லும் + அந்த)
வாய்மை வெல்லு (ம்+அ) ந்த
வாய்மை வெல்லு (ம) ந்த
வாய்மை வெல்லு மந்த
மழை விட்டாலும் இடி இன்னும் விடவில்லை
(காய்ச்சல் போச்சு இருமல் இன்னும் :)
அந்தப் பதிவில் "நீங்கள் எந்தளவு பிஸியாக இருந்தீர்கள்" என்பதைச் சுட்டவே அப்படி எழுதினேன். ஹோம் மினிஸ்ட்ரி மாற்றி யோசிப்பார்கள் என்று நினைக்கவில்லை.
ட்டேக் கேர், தம்பி தாஜுதீன்.
நண்பர் ஒருவர் கேட்டார் அந்த
மந்த கேள்வியை பந்தாவாக.
நான் கவிதைல ஜீரோ
ஆனா அத எழுதுன
சபீர் காக்கா அதுல ஹீரோ
என்று கூறி கவி காக்காவிடம் கேட்டு சொல்லுகிறேன் என்று சொன்னேன். நண்பர் சொன்னார் நீனா கேட்கிறது போல் என் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று. இப்போ தான் புரியுது இது நண்பர் நமக்கு போட்ட பல்ப் என்று.
:) :)
//ஜாகிர்: மெயின் புத்தகத்தை விட்டுவிட்டு இலவச இணைப்புக்கு கமென்ட்ஸா?//
சமயத்தில் இலவச இணைப்பு மெயினை விட நன்றாக இருப்பதுதான் காரணம்.
SABEER, YOU ARE THE MOST REVERED GEM IN ADIRAI NIRUBAR'S CROWN.
MOHAMED THAMEEM
வானக்காதலன் பூமி காதலிக்கு கொடுக்கும் முத்தம் மழை...
Post a Comment