அந்த
மறக்கமுடியாத அனுபவம் நடந்த வருடம் யுவ
வருடம் [ஆங்கிலம் 1995]. வருடங்கள் 'மல்லாக்க" படுத்து ஒடி விட்டாலும் இன்னும்
ஞாபகத்தில் அந்த சம்பவங்கள் இன்னும் புல் முளைத்திருக்கிறது. [பசுமையாக
இருக்கிறது என்பது ஒல்ட் ஸ்டைல்] எங்கள்
நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்த மடத்தனமான முடிவால் 500 பேரை சென்னைக்கு செமினாருக்கு அழைத்து செல்ல
ஏர் இந்தியாவை திரைவு செய்தார்கள்.
எனக்கு கிடைத்த
டிக்கட் நான் ஒரு போட்டியில் வென்றதால் நான் ரொம்ப பேசாமல் பின்தொடர
வேண்டியிருந்தது. நானும் 7 வருடம்
ஊர்போகாமல் இங்கு வெட்டிகிழித்ததால் ஆசையில் ஊர்போக நினைத்தேன்.
அப்போது இங்கு [
கோலாலம்பூரில் ] பழைய ஏர்போர்ட் இருந்தது. இப்போது உள்ள புதிய ஏர்போர்ட் அப்போது
இல்லை.
அப்போதைக்கு
எங்கள் வீட்டில் இருந்து ஏர்போர்ட் போக 15 நிமிடம் போதும் [இப்போது உள்ள
ஏர்போர்ட் போகும்போது 'கட்டுச்சோறுடன்
இரால் மொச்சைக்கொட்டை ஆனமும் " இருந்தால் தேவலாம் என்கிற மாதிரி அவ்வளவு
தூரம்.]
Subang Airport- [OLD AIRPORT] இப்போது இந்த ஏர்போர்ட் தரைமட்டமாக உடைத்துவிட்டார்கள்
KUALA LUMPUR INTERNATIONAL AIRPORT [KLIA] New Airport
இரவு 9 மணிக்கு விமானம் என்பதாலும் குரூப் செக்-இன்
என்பதாலும் 5 மணிக்கே ஏர்போர்ட் வந்துவிடவும் என ட்ராவல்
ஏஜன்சி ஆள் சொன்னபோது ஏதோ ரைட் பிரதர்ஸ் இப்போதுதான் இந்த விமானத்தை கண்டு
பிடித்திருக்கிறார்கள் இதை விட்டால் வேறு விமானமே உலகத்தில் இல்லை என்ற மாதிரி
இருந்தது. செக்-இன்
முடிந்து காத்திருக்கும் இடத்தில் நாங்கள் எல்லோரும் காத்திருந்தோம். 9 மணிக்கு வர
வேண்டிய விமானம் கொஞ்சம் லேட், ஆஸ்திரேலியாவிலிருந்து வரும்போது லேட், சிங்கப்பூரிலிரிந்து இன்னும் புறப்படவில்லை என்று ஏர் -இந்தியா ஆட்கள்
காரணங்களை அடுக்கிகொண்டே போனார்கள். இரவு 12 மணி வரை வராததால் 'சரி வீட்டுக்கு போகிறோம் விமானம் வந்த பிறகு சொல்லுங்கள்' என்றதற்கும், ‘இமிகிரேசன் உங்கள்
பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்து விட்டதால் நீங்கள் வெளியேர முடியாது என்று கதை
அளந்தார்கள். நாங்கள் என்ன கேனயனா?..எங்கள் இமிகிரேசனில் நாங்களே பேசிக்கொள்கிறோம்
என்று என்னுடன் வந்தவர்கள் கொதித்து விட்டார்கள். ஏர்-இந்தியாவை சேர்ந்தவர்கள்
என்னிடம் ' சார் கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்' என்றவுடன் "ஏன் ...இமிகிரேசன் ஸ்டாம்ப் என்ன வெங்களத்திலும்
பித்தளையிலும் உருக்கியா பாஸ்போர்ட்டில்
ஸ்டாம்ப் செய்திருக்கிறார்கள். இல்லை இது என்ன ஆயுள் தண்டனையா என கேட்டவுடன் , அப்போது காணாமல் போன ஏர்-இந்தியா ஆட்களை இந்த 17 வருடமாக இன்னும்
பார்க்கவில்லை.
எல்லோரும் பசி ,
பசி என்று கதறியதால்
ட்ராவல் ஏஜன்சி காரனின் கருணையில் ஆளுக்கு ஒரு டோக்கன் மாதிரி கொடுத்து சாப்பிட
சொன்னார்கள். போய் பார்த்தால் அகதிகளை பார்க்கிற மாதிரி நம்மை பார்த்து டோக்கனை
வாங்கி கொண்டு 1 டோனட் , ஒரு காப்பி , ஒரு வர பிஸ்கட் போட்டார்கள் [கொடுத்தார்கள்
என்பது அதீத மரியாதை ]
அதை வாங்கி
வைத்து கொண்டு ஒருத்தன் ரொம்ப நேரம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவுடன் எதை முதலில்
சாப்பிடுவது என கேட்டவுடன் எனக்கு தோன்றியது இது என்ன சரஸ்வதி சபதமா 'கல்வியா செல்வமா வீரமா" நு "சாய்ஸ்
பாட்டுப்பாட"....இந்த மூன்றையும் சாப்பிட்டால்தான் உனக்கு பசி அடங்கும்
ஏனெனில் இப்போது இரவு மணி 1:00 என்றவுடன்,
அவன் பிறந்ததிலிருந்து
சாப்பிட்ட அத்தனை நல்ல உணவுகளையும் சொல்லி சாவு ஒப்பாரி மாதிரி பாடி அழுதுவிட்டான். அவனைப் பார்த்தால் கார்ட்டூன் படத்தில் சண்டை வந்தாலும் கண்ணை மூடிக்கொள்ளும் பயந்த சுபாவம் உள்ளவன் மாதிரி தெரிந்தது.
எல்லோரும் பல
கதைகளை பேசி பிறகு எங்கள் கண் முன்னாலேயே சூரியனும் உதித்து நேற்று இரவு வர
வேண்டிய விமானம் அடுத்த நாள் காலை 9:30 க்கு கோலாலம்பூர் வந்தது. பிறகு நாங்கள் புறப்பட்டு சென்னை சென்றோம்
_______________________________________________________________________.
இடைவேளை
Meenambakkam [Old] Airport
என்னோடு
வந்தவர்களில் 90 % சென்னைக்கு
முதன்முதலாக வருபவர்கள். எனவே யாரோ ஒரு நாதாரி நான் சென்னையில் படித்தேன் என்ற
உண்மையை சொல்ல நான் தங்கியிருந்த சிந்தூரி ஹோட்டலுக்கு [க்ரீம்ஸ் ரோடு- அப்போலோ
பக்கத்தில்] எனக்கு டெலிபோன் போட்டு எக்சேஞ் ரேட் கேட்பதிலிருந்து எந்த
பாத்ரூமில் ஒன்னுக்கு போகலாம் என்பது வரை அத்தனை பேரும் எனக்கு டெலிபோன் போட்டே சாகடித்து விட்டார்கள்.
இதில் கொடுமை
என்னவென்றால் சிலருக்கு ப்ரசிடன்ட் ஹோட்டல் , சிலருக்கு இன்னொரு ஹோட்டல் என்று பிரிந்திருக்க ஞாயமான அளவுக்கான ஆட்கள்
நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தங்களை மாற்றி கொடுக்க சொல்ல ட்ராவல் ஏஜன்சிக்காரன்
'நிறுத்த
சொல்லுங்க... எல்லோரையும் நிறுத்த சொல்லுங்க" என்று மணிரத்னம் மாதிரி என்னிடம்
கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.
இதெல்லாம் ஜூஜுபி
மேட்டரானாலும், க்ளைமாக்ஸ்தான்
ஒரு திரைப்படத்தின் க்ளைமாக்ஸை விட பெரியது. நாங்கள் மலேசியாவுக்கு செல்லும்
ஏர்-இந்தியா விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது. இது ஏர்-இந்தியா தானா என்ற
சந்தேகம் இருந்தது. இருப்பினும் விமானம் பறக்கும்போது வெளியே போர்டு
போட்டிருக்கிறதா என்று பார்க்க இது என்ன பாய்ன்ட் டு பாய்ன்ட் பஸ்ஸா என்று எந்த
முயற்சியும் எடுக்க வில்லை. விமான பணிப்பெண்கள் எல்லாம் ஹிந்தி சீரியலில் அம்மா
வேடத்தில் நடிக்கும் ஆட்கள் மாதிரி இருந்ததால் காதோரத்தில் நரைத்த ஆண்கள் கூட ஆன்டி... ஆன்டி என்றழைத்தார்கள். ஏர்-இந்தியா
விமானப் பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்கும் பழக்கத்தை வெகு நாட்களுக்கு முன் கைவிட்ட
மாதிரி தெரிந்தது.
சரியாக 1 1/2 மணிநேரம் பயணித்த விமானத்தில் உள் விளக்குகள் லேசாக மங்கத்தொடங்கியது. பிறகு மொத்தமாக இருட்டானது. மழைகாலத்து சேற்றில் டைனமோ வைத்த சைக்கிள் ஒட்டும்போது விட்டு விட்டு வரும் வெளிச்சம் மாதிரி "அப்பப்ப" வெளிச்சம் வந்து போனபோது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற மாதிரி. ஒருபக்க எஞ்சினில் உள்ள ஜென்ரேட்டர் வேலை செய்ய வில்லை என்பதை ஏதோ பொண்ணு பார்க்க போன இடத்தில் கேசரிக்கு முந்திரிபருப்பு சரியாக வறுக்கவில்லை என்பது மாதிரி கேப்டன் சொன்னவுடன் ஆழ்ந்த சயனத்தில் இருந்த பயணிகள் விழித்து என்னிடம் கேட்டனர். [வந்த கடுப்பில் ஏன்டா நானா ஜென்ரேட்டரை பிடித்து ஆஃப் செய்தேன்னு கேட்கலாம் போல் இருந்தது] இதில் சிலர் ஏரோநாட்டிகள் எஞ்ஜினியர் கேள்வியெல்லாம் கேட்டனர்.
அவையாவன: "இந்த விமானம் என்ன ரகம்? எந்தனை எஞ்சினில் இயங்குகிறது? எத்தனை பவர் சப்ளை சோர்ஸ் ?"
நல்ல வேலையாக
தற்போது விமானம் ஸ்டேன்ட்பை பவர் சோர்சில் இயங்குகிறது இதுவும் அப்பீட்
ஆகிவிட்டால் நாம் கடலில் லேன்ட் ஆக 45 நிமிடம்தான்
என்று சொன்னால் நிறைய பேருக்கு "சங்கேமுழங்கு" பாட்டு
ரீ-ரிக்கார்டிங்கில் ஒலிக்கும் என்பதால் நான்
மெளன விரதம் இருந்துவிட்டேன்.
விமானம்
திரும்பவும் 1 1/2 மணி நேரம் பறந்து சென்னையில் [புறப்பட்ட
இடத்துக்கு] வந்து சேர்ந்தது. விமானத்தில் எலக்ட்ரிக் வேலை செய்ய வில்லை எனவே
ஏர்கண்டிசனும் படுத்து விட்டது இந்த லட்சனத்தில் 3 மணி நேரத்து
மேலாக பயணிகளை கீழே இறங்க விடாமல் ரிப்பேர் பார்க்கிறேன் என்று தொடர்ந்தாற்போல்
ஏதோ மட்டையடித்தார்கள். இந்நேரத்துக்கு
சண்டி மாட்டுக்கு மூக்கில் மூக்குப்பொடி போட்டாவது குடியானவன் மாட்டை கிளப்பி
இருப்பான். ஏர் இந்தியா எஞ்ஜினை மாட்டுடன் ஒப்பிட்டால் மாடு கோவிச்சுக்கும்.
வெயிட்டிங்
ஏரியாவில் உட்காருங்கள் என்று இன்னும் 4 மணி நேரம் காக்க
வைத்து கடைசியாக பம்பாயிலிருந்து வேறு விமானம் நாளைக்கு வரும் அதில் அனுப்புகிறோம்
என்று ஹோட்டல் தருகிறோம் என்று சொன்னார்கள். பிறகு ஒரு வேனில் மூட்டை அடைப்பதுபோல்
அடைத்து ஹோட்டலுக்கு அனுப்பினார்கள்.
2 பேர் தங்கும் ஹோட்டலில் 6 பேர் தங்கினோம். நான் தரையில் படுத்து
தூங்கினேன் [ஒரு தலையனை விரிப்பு கூட கிடையாது] அடுத்த நாள் வழக்கம்போல் காலை 9 மணிக்கு ஏர்போர்ட் வர சொன்னவர்கள் மாலை 3 மணிக்கு வேன் அனுப்பி இரவு 8 மணிக்கு புறப்பட்டு மலேசியா வந்து சேர இரவு 2.00 ஆனது.
இதில் கொடுமை
என்னவென்றால் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியாவதால் முன்னாடியே இந்திய ரூபாயை
செலவளித்து விட்டார்கள். ஏர்-இந்தியாவும் சாப்பாட்டுக்கு என்று எதுவும்
செய்யவில்லை.
விமானம்
கோலாலம்பூரில் தரையிறங்கியதும் ஒருவர் சொன்னது...' விமானம் நிற்கும்
முன் கதவை திறந்து குதிக்க வேண்டும் போல் உள்ளது’.
ZAKIR HUSSAIN
…………………………………………………………………………………………………………
N.B: என்னதான் இருந்தாலும் ஏர்-இந்தியாவை இப்படி
குறை சொல்லக்கூடாது என்று எழுத நினைக்கும் "தேசபக்தர்களுக்கு" . நான்
எழுதிய நிகழ்வு 1995 ல் நடந்தது.
இந்த லின்க்கை
படித்து பாருங்கள் http://tamil.oneindia.in/news/2012/08/13/tamilnadu-air-india-passengers-stranded-at-chennai-airport-159529.html
இது 3 நாளைக்கு முன் நடந்தது . உண்மையில் இந்த ஆக்கம் பாதியில் எழுதிமுடித்த
நிலையில் வந்த செய்தி . பொதுவாக நம்மடவர்கள் சொல்வது ' நம் நாட்டு மக்கள் தொகை அதிகம் ,
மற்ற நாடுடன் ஒப்பிட
முடியாது... பிறகு ஏன் "நாசாவில் அதிகம் இந்தியர்கள்- மைக்ரோசாஃப்டில்
இந்தியர்கள்- வான சாஸ்திரத்தில் முன்னேடி இந்தியர்கள் "என்று இ-மெயில்
அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.?....
நாம்
எப்போது திருந்துவோம்???? !!!!
21 Responses So Far:
வரிக்கு வரி வாசித்துக் கொண்டிருக்கும்போதே சிரிப்பை அடக்க முடியவில்லை.
அற்புதமான எழுத்தாற்றல் நண்பருக்கு, சூப்பர் ரைட்டிங் ஸ்டைல்.
சரியாகச் சொன்னீர்கள் இது ஒரு வெங்கயா லாரிதான்.
இதேபோல் அவதிகள் நானும் பட்டிருக்கிறேன்.
நன்றி
சு.வெங்கி
ஓமான்
ஏ(மாந்த)ர் இந்தியாவே !
//இந்த லட்சனத்தில் 3 மணி நேரத்து மேலாக பயணிகளை கீழே இறங்க விடாமல் ரிப்பேர் பார்க்கிறேன் என்று தொடர்ந்தாற்போல் ஏதோ மட்டையடித்தார்கள். இந்நேரத்துக்கு சண்டி மாட்டுக்கு மூக்கில் மூக்குப்பொடி போட்டாவது குடியானவன் மாட்டை கிளப்பி இருப்பான். ஏர் இந்தியா எஞ்ஜினை மாட்டுடன் ஒப்பிட்டால் மாடு கோவிச்சுக்கும்.//
ஆமாம் ஆமாம் காக்கா...
என்னோட பாஸ்ஸுக்கு ஒரு டிக்கெட் இதிலே ஒரு டிக்கெட் கிடைக்குமான்னு கேட்ட்சு சொல்லுங்க காக்கா...
எதுக்கெடுத்தாலும் பர பர பற பற ன்னுகிட்டு ! :)
சரியான வெங்காய வெடி சிரிப்பு காக்கா......
வெங்காய லாரிலே ஏரி ரொம்பதான் காயப்பட்டுண்டீங்க போல...வரிக்குவரி நகைச்சுவை,கலாய்ப்பு,நக்கல்...அசத்தல் காக்கா ஆக்கம் எப்பொழுதும் அசர வைக்கும் ஆக்கங்கள்தான்
குசும்பா எழுதுவதற்க்கு படிக்க மலேசியாவில் யுனிவேர்சிட்டி எதுவும் உண்டா ??
அன்பு தம்பி ஜாகிர்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
மல்லாக்கப்படுத்து,
புல் முளைத்திருக்கிறது,
கட்டுச்சோறு இறால் மொச்சைக்கொட்டை,
ரைட் பிரதர்ஸ்,
இமிகிரேஷன் ஸ்டாம்ப் வெங்களத்தில்,
கல்வியா செல்வமா வீரமா,
ஒன்னுக்குபோகலாம் என்பதுவரை,
ஹிந்தி சீரியல் அம்மா,
கேசரிக்கு முந்திரிபருப்பு,
மாடு கோவிச்சுக்கும்,
கதவைத் திறந்து குதிக்க.
ஒரு ஆக்கத்தில் இத்தனை சுவையான மசாலா போட்டு எழுத உன்னால்தான் முடியும் தம்பி.
ஒரே ஒரு கேள்வி ஏர் இந்தியாவை மாட்டுக்கு ஒப்பிட்டால் மாடு கோவிச்சுக்கும் சரி அப்ப வெங்காயலாரி மட்டும் என்ன இளக்கமா? மட்டமா?
இபுராஹீம் அன்சாரி
Often we are hearing this kind of shame occurrence by Air India the second shame is Air India Staff rallying strike for Salary high. 3rd shame is Aeronautic engineers’ self-surprise as they are also one of the uppermost aeronautic engineers in the world. Eventually those unwanted events push the main hero (flight) into pit. What is the use of this? Here I can’t recognize Mr. Zahir’s title as an Onion Lorry, but can match with the comment of Ibrahim Ansari kaka’s wagon. Better any well-organized private sector can bring these kind of wagon into an international standard flights. Government must obey with public’s desire this regard. Very funny and awareness article by Mr. Zaheer .We expect many attractive tutelages from your diary in future.
Abdul Razik
Dubai
நம்ம குரூப்லேயே மொதமொத ஏரோப்ளான் ஏறினது நீயிதான். தென்காசிக்குப் போயிட்டு வர்ர மாதிரியே பொசுக்கு பொசுக்குன்னு போயிட்டு வருவே.
இப்புடி போட்டு நக்கலடிச்சா நாளைப்பின்னைக்கு இவிங்க பொழப்பு நடத்தறதா இல்லையா?
மீ கோரிங்கும் நெத்திலிக்கருவாட்டு சோறும் துண்ணுப்போட்டு மஹாதிர் மாதிரி சூப்பர் தலைவரின் நிழல்ல சொகுசா வாழ்ந்த மலேயாக்காரவகளுக்கு வாழ்க்கைன்னா இன்னா, கஷ்ட்டநஷடம்னா இன்னானு யார்யா சொல்லித்தரது ஹாங்?
ஒனக்கே இப்பத்திக்கு எத்தனை தடவ மலேசியன் ஏர்லைன்ஸுலேயோ சியாவுலேயே பறந்திருப்பே. ஒன்னயாவது ஞாபகம் வச்சிக்கிறமாதிரி நடந்து= ஐ மீன் - பறந்திருக்காய்ங்களா?
நாங்க ஒரு மொறைதான் பறக்க வச்சாலும் எப்படி பரபரக்க வச்சோம் பாத்தியா? இப்பவும் ஞாபகம் வச்சு எழுதிறியா இல்லியா? வரலாறு படச்சோமா இல்லியா?
வரலாறு முக்கியம் அமைச்சரே.
வெங்காய லாரியாம்ல? வுட்டா உங்கூர்ல இறக்கி, கிலோ என்ன வெலைன்னும் கேட்டு வைப்பியலோ?
// ஏர் இந்தியா எஞ்ஜினை மாட்டுடன் ஒப்பிட்டால் மாடு கோவிச்சுக்கும்.//
இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஆமா.
-தேசபக்தன்.
//தேசபக்தன்.//என்ன கவிக்காவே...சுதந்திர தினம் தேத்த முடிஞ்சுபோச்சு..இன்னுமா கொடியேத்தின ஃபீலீங்...அதான் ஒரு ரவுடிக்கவிதை போட்டு நம்ம வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்தீட்டிங்களே
அசத்தும் அருமைத் தமிழ் நடை!
அவமான ஏர் இந்தியாவும்
அழகான எழுத்தோவியமும்
சலாம் சகோ.ஜாகிர் ஹுசைன்... செமை பதிவு..! கலக்கல் ஸ்டைலில் அளித்துள்ளீர்கள்..! ஏற இந்தியா நிறுத்த மாட்டாங்களா...? நிறுத்தவே மாட்டாங்களா...... அவங்க ப்ளைட் செர்வீசை..... நிரந்தரமாக..? :-)))
ஏர் இந்தியா பற்றி அதை உபயோகித்த அனைவருக்குமே தெரியும். இதுவரை அது சரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது. சரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது. பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம். திடீரென்று ரூட் மாத்தி விடுவது,திடீர் ரத்து(விமானக்கோளாறு அல்லது மினிஸ்டர் மகளுக்காக வெல்லாம்..!)என இதுவும் அடிக்கடி நடப்பதுதான்.
சென்ற வருஷம் Saudi Arabia- தமாமில் சுமார் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை Air india விமானத்தில் சீட் இல்லை!!! காரணம் : சென்னையிலிருந்து வந்தது சிறிய விமானம்???
பல முறை பல நாட்கள் விமானிகள் திடீர் வேலை நிறுத்தம்... விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடுதல்... சரியான உபசரிப்பு இல்லாமை... வயதான ஏர் ஹோஸ்டஸ்(?) என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது.
இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவை எல்லாமும் ஒன்றுமே இல்லை...
ஆனால்...
ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது...
அதை சகித்துக்கொள்ளவே முடியாது...
கை மீறி போய் விட்ட அதை...
அந்த விமானிகள் நினைத்தால் மட்டுமே சரி செய்ய முடியும்...
அது என்ன...?
அண்மையில் ஜாகிர் அதிரை வந்திருந்தபோது, சபீர் வீட்டில் வைத்துச் சொன்னது இப்போது நினைவுக்கு வருகின்றது:
"ச்சீ ... ஏர் இன்டியாவா? எனக்கு ஒரு அனுபவம் இருக்குது. அது போதும். பாருங்க, விரைவில் ஒரு பதிவு போட்டு கிளிகிளிண்டு கிழிக்கிறேன்" என்று சொன்னதை இப்போது நிறைவேற்றிவிட்டார் ஜாகிர்.
எனக்கும் ஒரே ஒரு அனுபவம்தான். எனது 30 வருட சஊதி வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் ஏர் இந்தியாவில் பயணம் செய்துள்ளேன். அதுவும் சீச்சீ அனுபவம்தான்!
அது.................
விமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)
கொடுமை...
அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று நன்கு அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா?இரவாய் இருந்தால் பரவாயில்லை. விடியறகாலைதானே...
அக்டோபர் 21, 2009 அன்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு கிளம்பத் தயாராக இருந்த ஏர் இந்தியாவின் போயிங் 777-200. இந்த விமானம் மிகவும் மதிப்பு வாய்ந்த பெருமைக்குரிய விமானமாகக் கருதப்பட்டு வந்தது. காரணம் இதுவரை ஒருநாள் கூட இந்த விமானம் தாமதமாகக் கிளம்பியதே இல்லையாம்.(அட அதிசயமே!!!)
மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு எங்கும் நிற்காமல் செல்லும் 'நான் - ஸ்டாப்' விமானம் இது. 11 வெவ்வேறு 'டைம் ஸோன்'களை ஒரே மூச்சில் கடந்து செல்லும் இந்த விமானம், பயணிகளுக்காகக் கூட 5 நிமிடம் தாமதித்ததில்லையாம். இதனால் எப்போதும் இந்த விமானத்தில் இடம் பிடிக்க, இந்திய - வெளிநாட்டுப் பயணிகள் பெரிதும் விரும்புவார்களாம்.
ஆனால் முதல்முறையாக தனது விமானியால் தாமதத்துக்குள்ளாகியிருக்கிறது இந்த விமானம். இந்த குடிபோதை கமாண்டரின் பெயரை ஏர் இந்தியா வெளியிடவில்லை.
45 நிமிட தாமததுக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி ராமலிங்கம் வந்த பிறகு கிளம்பிச் சென்றதாம்.
இந்தியாவில் விமானிகள் குடித்துவிட்டு விமானத்துக்குள் ஏறக் கூடாது என்பது விதி. அதற்காகவே குடிபோதை அறியும் டெஸ்ட் வைக்கிறார்கள். (இதை பறப்பதற்கு முன்னர்தான் வைக்கிறார்கள். பறந்துவிட்டு வரும்போது வைப்பது கிடையாது இல்லையா? அதனால், பறக்கும் பொழுது குடிக்கிறார்கள்.)
இந்த டெஸ்டில் முதல்முறை மாட்டுபவர்களை எச்சரித்துவிடும் ஏர் இந்தியா, மறுமுறை மாட்டினால் சஸ்பெண்ட் செய்கிறது.
ஆனால் கடுமையான தண்டனை என்று எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பல நேரங்களில் குடிபோதையில் பைலட்டுகள் தூங்கிவிட, ஹைதராபாத்தில் கிளம்பி மும்பையில் இறங்க வேண்டிய விமானம் மும்பையை தாண்டி... பாகிஸ்தானின் கராச்சி வரை பறந்து... "இவ்வவளவு நேரம் ஆகியும் எதுக்கு இன்னும் மும்பை வரலை...?" என்ற நல்ல யோசனை (?!?!)தோணவே...U-turn போட்டு திரும்பிய கூத்தெல்லாம் நடந்திருக்கிறது.
:-)))) (?????!!!!!)
நல்லவேளை.. அத்துமீறி அவர்கலின் வானில் பறந்ததால் 'பச்சை சண்டாளர்கள்' அவசரப்பட்டு நம் விமானத்தை சுட்டுத்தல்லாமல் விட்டார்களே... அதுவரை அல்ஹம்துலில்லாஹ்...! தப்பித்தோம்..!
இன்னொரு முறை... ஒரு பைலட் போதையில் மல்லார இன்னொரு பைலட் .... ஆட்டோ பைலட்டில் விமானத்தை போட்டு பூட்டிவிட்டு... போதையில் பாத்ரூம் சென்றுவிட... விமானம் ஏர் பாக்கெட்டில் மாட்டி.. அப்படியே கீழே செங்குத்தாக தேங்காய் போல விழ.... பைலட் பாத்ரூமில் நிலை தடுமாறி விழுந்ததால்... அவர் விபரீதத்தை புரிந்து கொண்டு வேகமாக ஓடி வந்து பைலட் அறைக்கு சென்று விமானத்தை மீண்டும் உயரே தூக்கும்போது.. அரபிக்கடலுக்கு உள்ளே செல்ல மிக மிக அருகே சென்று விட்டதாம் அந்த துபாய் - கொச்சி air india விமானம் .... !
இப்படி air india பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன..!
நண்பர் வெங்கி அவர்களுக்கு நன்றி. உங்களைப்போன்றவர்களின் உற்ச்காக வார்த்தை இன்னும் நல்ல ஆக்கங்களுக்கு உதவியாக இருக்கும்.
யாசிர்...எழுதவதற்கு [ நகைச்சுவையாக ] நான் கற்றுக்கொள்ள உதவியவர்கள் சபீர்/சாகுல்/ முஹம்மது அலி / இர்ஃபான் அலி போன்ற நண்பர்கள்தான். நாங்கள் பேச ஆரம்பித்தால் சமயங்களில் எத்தனை மணி நேரம் என்று கணக்கில்லாமல் போகும். இதில் என்ன அதிசயம் என்றால் அடுத்த நாள் சந்திக்கும்போதும் கொஞ்சம் கூட சோம்பேறித்தனம் இல்லாமல் , நேற்றுதான் இவ்வளவு பேசி இருக்கோமே என்ற சுரணையே இல்லாமல் மெயின்ரோட்டில் சிட்டுகுருவி லேகியம் விற்பவன் மாதிரி ஃப்ரெஸ்ஸா பேச ஆரம்பிச்சுடுவோம்.
To brother இபுராஹீம் அன்சாரி,
//ஒரே ஒரு கேள்வி ஏர் இந்தியாவை மாட்டுக்கு ஒப்பிட்டால் மாடு கோவிச்சுக்கும் சரி அப்ப வெங்காயலாரி மட்டும் என்ன இளக்கமா? மட்டமா?//
நான் என்னதான் மாஞ்சி மாஞ்சி எழுதினாலும் ஒறே கேள்வியில் சுளீர் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதனால் பொள்ளாச்சி , திருச்சி , பெல்லாரி லாரி உரிமையாளர் சங்கங்கள் உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகளாம்.
To Brother Abdul Razick
ஏர் இந்தியா தனியார் மயமாகளாம் இன்னும் 30 வருடங்களுக்கு பிறகு. இப்போது உள்ள அரசியல்வாதிகள் சுரண்ட கிடைத்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் தர மாட்டார்கள்.
To brother MHJ / Harmy ...thanx to your comments [ write more ]
To Brother புதுசுரபி / ஜலீல் ..ஏன் உங்கள் கருத்துகள் பதியப்படாமல் இருக்கிறது.?
To Brother Adirai Ahamed...உங்கள் ஞாபக சக்தியை பற்றி ஆச்சர்யமாக நானும் அபு இப்ராஹிமும் பேசிக்கொண்டோம்.
சகோதரர் முஹம்மது ஆஷிக் ...உங்கள் வலைத்தளம் வரும் வாசகர்களில் நானும் ஒருவன்.
நீங்களும் ஏர் இந்தியாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் மாதிரி தெரிகிறது. நீங்கள் எழுதியிருக்கும் விளக்கமே ஒரு ஆர்டிக்கிள் அளவுக்கு இருக்கிறது என்றால். ஆர்டிக்கிள் எழுதினால் பல எபிசோட் போகும்போல் தெரிகிறது.
எதோ நான் மட்டும் குறை சொல்கிரேன் என்ற எண்ணம் எனக்கு வராமல் பார்த்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
To Sabeer..பொதுவாக யாரையும் தாக்கி எழுத மாட்டேன் என்பது உனக்கு தெரியும். ஏர் இந்தியாவில் பாதிக்கப்பட்ட நான் எழுத காரணம்,. வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் வெயிலிலும், குளிரிலும் உயிரைக்கொடுத்து உழைத்த காசில் ஏதோ கொஞ்சம் தேச பக்தி யிருப்பதால் ஏர் இந்தியாவில் டிக்கட் வாங்கும் நல்ல விசயத்தை ஏர் இந்தியா விமான நிறுவனமோ அல்லது விமான நிலையத்தில் பேக் தூக்கும் கூலித்தொழிலாளியோ கொஞ்சம் கூட முக்கியத்துவம் தருவதில்லை. அயர்ன் கலையாத மஞ்சள் சில்க்கில் துணி உடுத்தும் வட இந்தியர்கள் எக்கனாமி கிளாசில் போனாலும் மதிக்கும் இவர்கள் தமிழர்கள் ஃபர்ஸ்ட் கிளாசில் போனாலும் மதிப்பதில்லை. இந்த விசயங்கலும் ...எப்போதும் எருமை மாட்டில் மழை பெய்தது மாதிரி விமான நிறுவனம் நடத்தும் அட்டிட்யூட்ம் தான் நான் எழுதக்காரணம்
Thanx to everybody if missed to thank you.
அஸ்ஸலாமு அலைக்கும். வழக்கம் போல் அருமையான ஆக்கம். கிரேசிமோகன் எழுதியது மாதிரி இருந்தது.முதலில் கருத்திட்டவர் சு.வெங்கி ஆனால் பணிச்சுமையால் இருதியாக சுனங்கி (சகோ.வெங்கி மன்னிக்கவும்)கருத்திடுகிறேன் . இதற்காக எனக்கு தயவு செய்து ஏர் இந்தியா டிக்கெட் இலவசமாககூட அனுப்பிவிட வேண்டாம்.அட்வான்ஸ் பெருனாள் வாழ்துக்கள்.
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…
முதல்முறையாக தனது விமானியால் தாமதத்துக்குள்ளாகியிருக்கிறது இந்த விமானம். இந்த குடிபோதை கமாண்டரின் பெயரை ஏர் இந்தியா வெளியிடவில்லை.
45 நிமிட தாமததுக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி ராமலிங்கம் வந்த பிறகு கிளம்பிச் சென்றதாம்.
------------------------------------------------
மானம் கப்பல் ஏறும்னு சொல்வாங்க இங்கே மானம் வி"மானம்" ஏறி இருக்கு.
நிறைய பார்த்தாச்சு ஜாஹிராக்கா, இதுக்கு மேலே அந்த ஏர்லைன்ஸை கும்மினால் நமக்குதான் அவமானம், லூசுலே விடுங்க..
Post a Comment