அகமதாபாத் (31-08-2012): குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் ஒன்றான நரோடா பாட்டியா கலவர வழக்கில் பா.ஜனதா முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 2002 ம் ஆண்டு குஜராத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் ஒன்றாக நரோடா பாட்டியா என்ற இடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.இதில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பா.ஜனதா முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தள தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.அதே சமயம் 29 பேர்களை விடுவித்து உத்தரவிட்டது.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கான தண்டனை தீர்ப்பை வெள்ளிக்கிழமையன்று வழங்க உள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி, நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜனதா முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இவர்கள் உட்பட மற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதிரைநிருபர் குழு
நன்றி : இணையதகவல்
1 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ் அக்பர்,
அல்லாஹ் ஒரு போதும் குற்றவாளிகளை கண்டு கொள்ளாமல் விடமாட்டான்.
அதனுடைய தவணை வரும் வரை தறிகெட்ட நிலையில் குற்றவாளிகளை திரிய விடுவான் .
Post a Comment