தமிழ்
மண்ணில் கவியரங்குகள் அறவே நடைபெறாத காலம் அது!
சுமார் 1950களில் என்று சொல்லலாம்.
இந்தியாவின் வட பகுதியிலும், ஹைதராபாத் பெங்களூர் போன்ற உர்தூ பேசும் தென்பகுதிகளிலும்,
‘முஷாயிரா’க்கள் எனும் உர்தூக் கவியரங்குகள் பல்லாண்டுகளாக வழக்கமாக நடைபெற்று
வந்துள்ளன. அம்மரபைப் பின்பற்றி, தமிழைத்
தாய்மொழியாகவும், உர்துவைப் பேச்சுமொழியாகவும் கொண்டுள்ள தமிழகத்தின் வட
ஆர்க்காட்டு முஸ்லிம்களும் ‘முஷாயிரா’க்கள் நடத்திவந்தனர். அந்தக் காலகட்டத்தில்தான் ‘இறையருள் கவிமணி’
அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியை
மேற்கொண்டார்கள்.
‘கருவிலே
திருவான’ கவிஞர் அல்லவா? ‘இந்த முறையைத்
தமிழ் கூறும் நல்லுலகிலும் அறிமுகப் படுத்தினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றவே,
தமிழ்நாட்டில் தமிழ்க் கவியரங்கிற்கு வித்திட்டுவிட்டார் நம் பேராசிரியர். பெரிய அளவிலான மாநாடுகளின் கவியரங்கத் தலைமைப்
பொறுப்பு, பேராசிரியருக்கு வழங்கப்பட்டது.
அப்பொறுப்பினைத் திறம்பட நிறைவேற்றி, 1990வரை கவியரங்கத் தலைமைக்கு
‘இறையருள் கவிமணி’யே தகுமானவர் என்ற நிலை நீடித்தது. அன்னாரின் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு, ‘தலைப் பா’ எனும் பெயரில் நூலுருவில் வந்துள்ளது. அதில் மூழ்கி எடுத்த முத்துகளே பின்வரும் கருத்துக்
கோவை.
இறையச்சமும்
இறைநினைவும் இன்றி வாழும் மக்களைப் பற்றி எண்ணிக் கவலைப்பட்ட இறையருள் கவிமணியார்,
“கலியாட்டே மிகுந்தின்று காவலனை மறந்துள்ளோம்
புலிவாழும் குகைகளிலே பூனைகளாய்க்
கிடக்கின்றோம்”
என்று
சலித்துப் பாடுகின்றார். அந்த
இழிநிலையினைப் போக்க வழி வகுத்துத் தருகின்றார் பின்வரும் அடிகளில்:
“இதயந்
திறந்து இறைவனை வேண்டுவோம்!
அனைத்துப்
புகழும் அல்லாஹ் வுக்கே
அனைத்தையும்
காக்கும் ஆண்டவன் ஒருவன்
அவனையே
நாடினால் அனைத்துமே பெறலாம்
அவனையே
மாற்றினால் நம்மையே மாற்றுவோம்!”
இக்கவியடிகளுள்
இறுதி அடியைக் கவனியுங்கள். அதில் ஓர்
இலக்கிய நயம் பொதிந்துள்ளது. ‘அவனையே’ என்பதை, ‘அவனை+ஏ’ எனப் பிரித்து,
‘அவனை ஏமாற்றினால்’ என்றும், ‘நம்மையே’ என்பதை, ‘நம்மை+ஏ’ எனப் பிரித்து, ‘நம்மை
ஏமாற்றினால்’ என்றும் இலக்கிய நயம்பட
விரித்துரைக்கும் தனித் திறன் பேராசிரியருக்குக் கைவந்த கலையாகும்.
மக்களுக்கு
நீதியைக் கற்பிப்பதில் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இருக்கும் வீரியத்தைவிடக்
கவிதைகளின் வீரியம் கூடுதலானது என்பதை இலக்கிய வல்லார் இயம்புவர். இவ்வுண்மை, சங்கப் பாடல்கள் மூலமும் நம்
சமகாலப் பாடல்கள் மூலமும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும். ‘இறையருள் கவிமணி’ அவர்களின் நிறையருள்
கவியடிகளில் இது போன்று அறவுரைக் கவிகளாகப் பதிவாகியுள்ளதை நாம் காணலாம்.
“நம்நிழலை நாம்தொடர்ந்தால் நாமதனைப் பிடிக்கமாட்டோம்
நம்போக்கில் நாம்நடந்தால் நிழல்நம்மைத்
தொடர்ந்துவரும்.”
எத்துணை
அற்புதமான அறிவுரை!
நபிவழியை
நம் வாழ்க்கை நெறியாகக் கொள்வதன் தேவையை இனிமையுறப் பாடுவார் இறையருட்கவிமணியார்:
“‘நானாடி’
எனநவின்ற நபிகள்பிரான் நல்லுரைமுன்
தீனாடி
நின்றிடுவோர் திகழழகை நோக்கிடுவோம்
ஊனோடும்
உயிரோடும் உலகோடும் உறவாடும்
தேனோடும்
உரையாடும் திருநபியின் மொழிகற்போம்
வளங்காணும்
வாழ்வினிக்க வள்ளல்நபி வழிநிற்போம்
உளம்வாழும்
நிலைகாண உயர்மறையின் நெறிச்செல்வோம்”
திருமறை
நெறி முறையையும் திருநபி வழிமுறையையும் கற்று, அவற்றின்படி நிற்றலின் தேவையைப்
பாடும் முறை, படித்துப் பின்பற்றத் தக்கது.
(நானாடி = நான் + ஆடி = நான் கண்ணாடி, தீனாடி = தீன் + நாடி = மார்க்கத்தை
நாடி, தேனோடும் = தேன் + ஓடும்)
நபியவர்களின்
ஒப்பற்ற மேன்மைத் தன்மையினை விளக்க, கீழ்க்காணும் இரண்டடிகளில் இலகுவாகப்
பாடுகின்றார்:
“மானிடரின் உயர்வுக்கு மாநபியே
சான்றாவார்
மானிடரின்
இழிநிலைக்கு நாமின்று சான்றாவோம்.”
நமது
அழுகிய குணங்களால் நம் இழிநிலையும், நபியவர்களின் அழகிய குணங்களால் அவர்களின் உயர்
நிலையும் ஒப்பு நோக்கிப் பாடுவது நம் சிந்தனைக்கு உரியவையாகும். இன்னும் இரண்டு வரிகளும் நம் சிந்தனைக்குரியவை:
“நற்குனத்தின்
நாயகராம் நன்னபியார் பிறந்திலரேல்
கற்சிலைசெய்
சிற்பிகளால் கல்மலைகள் மறைந்திருக்கும்.”
அன்று
மக்காவில் இருந்த சிலை வணக்கம் மறைந்து போனதற்குக் காரணம், மாநபி (ஸல்) அவர்கள்
பிறந்ததுதான் என்பதை இலக்கிய நயத்துடன் பாடும் விதம் படித்து மகிழத் தக்கது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பிறந்திருக்காவிட்டால், மக்கத்து மலைகளெல்லாம் கற்சிலைகள் செய்வதற்காக உடைபட்டுச்
சிலைகளாகச் செதுக்கப்பட்டிருக்குமாம்! எத்துணை
அழகிய கற்பனை!
இது
போன்ற கற்பனை வளத்தினை வேறொரு கருத்தில் கவியரங்கில் பாடுகின்றார்
பேராசிரியர். அது, பெருமானார் அவர்களை
அருமைத் தோழர்கள் பின்பற்றிய விதம்
பற்றிக் கூறுவதாகும்.
“ஊசியைத் தொடரும் நூலினைப் போன்று
காசிம்
நபியைக் கருத்துடன் தொடர்ந்தனர்”
என்று
அழகாகப் பாடுகின்றார். இவ்வரிகளைப் படிக்கும்போது,
நமக்கும் அந்த நபியவர்கள்தாம் வழிகாட்டி; நாமும் அவர்களின் அடியொட்டியே
வாழவேண்டும் என்ற இன்னுரையை வழங்குகின்றார் ‘இறையருட்கவிமணி’.
இனி,
பேராசிரியரின் கவியரங்கப் பாடல்கள் செய்த சிந்தனைப் புரட்சி, கல்விச் சிந்தனை,
கவிதை பற்றிய கருத்து, இஸ்லாமிய விழுமிய உணர்வு முதலானவற்றைப் பற்றி அடுத்த
பதிவில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.
அதிரை அஹ்மது
13 Responses So Far:
உயர் தரமான வகுப்பில் இருக்கும் உணர்வு !
இறையருட் கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களைப் பற்றி எங்கள் வீட்டில் பெரியவர்கள் அனைவரும் விவாதிக்கும்போது பூரிப்படைவார்கள்... அந்த அளவுக்கு நெருக்கமாக அவர்களின் குடும்பாத்தாரோடு இருந்தார்கள்...
தேனுண்ட நாவினைப் போல் தித்திப்பு இப்பதிப்பு
தீனுண்ட வாழ்வினை யால் வெற்றிக்கு வழியுண்டு
தானுண்டு வினையுண்டு என்று மட்டு மில்லாது
யான்பெற்ற ஈமானை யாவருக்கும் சொல்கிறது.
(ச்சும்மா ட்ரை பண்ணேன்)
பிரமிக்க வைக்கிறது புலமையும் மொழியை விரல் நுணியில் வைத்து வித்தை காட்டிய திறனும்
//(ச்சும்மா ட்ரை பண்ணேன்)//
நீங்க சொன்ன மாதிரி என்னோட சின்ன வயசுல, எங்க பெரியம்மா இறையருட் கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் கவிதைகளை வாசித்து ரசிக்கும் போது ஏதோ அவர்கள் மொழியில் பாடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியதை மறுக்கவியலாது, அதே நேரத்தில் நாளாடைவில் அவர்களின் புத்தகங்களை வீட்டில் அடுக்கி வைத்திருக்கும் SKMH மாமா அவர்களின் லைப்ரரியில் எடுத்து படிக்கும்போது ஏற்பட்ட ஈர்ப்பு நினைவை விட்டு அகலாத சுகந்தமே !
ஐயா !
கவிதை ஓர் இஸ்லாமிய பார்வையைப் பற்றி சில நண்பர்கள் தனி மின்னாடலில் கருத்துப் பரிமாற்றம் செய்தார்கள் அவர்களின் அங்கே வந்து சொல்லுங்க(டா)ப்பா என்றால்... அதற்கென்று புலமை வேண்டும் அங்கே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களோடு நம் கருத்துக்கள் தகுதியுடையதாகுமா என்ற அச்சமே... என்றனர் !! :)
அப்போ மரபென்றால் மரப்பு போட்டுவிட்டுதான் ஜம்ப் செய்து வாசிப்பேன்... இப்போ அப்படியெல்லாம் இல்லைங்க எல்லாமே... இனிக்கிறது !
//“‘நானாடி’ எனநவின்ற நபிகள்பிரான் நல்லுரைமுன்
தீனாடி நின்றிடுவோர் திகழழகை நோக்கிடுவோம்
ஊனோடும் உயிரோடும் உலகோடும் உறவாடும்
தேனோடும் உரையாடும் திருநபியின் மொழிகற்போம்
வளங்காணும் வாழ்வினிக்க வள்ளல்நபி வழிநிற்போம்
உளம்வாழும் நிலைகாண உயர்மறையின் நெறிச்செல்வோம்”//
எத்தனை கவிஞரும் எத்தனை அறிஞரும் அண்ணலின் எழிலை எண்ணி
....எழுதியும் பாடியும் ஏத்திய பின்னரும் இன்னுமும் போதா தென்பேன்
அத்தனை எழில்மிகு நபிகளார் வழியினை மரபெனும் செய்யுட் பாவில்
.. அழகுடன் இறையருட் கவிமணி அலகிடும் கொச்சகக் கலிப்பா காணீர்
முத்தென தேடியே மூழ்கிய புலவரும் முதிர்ந்தபல் கோடி முத்தை
...மொண்டெமக் களித்ததால் விளைந்ததோர் களிப்பினில் மிதந்துன திறமை போற்றி
இத்தினம் தன்னிலிவ் வெளியனேன் இயற்றிடும் சிறியதோர் செய்யுள் என்னும்
....இம்மலர் இகழ்ந்திடா(து) ஏற்றென வேண்டினன் என்னரும் யாப்பின் ஆசான்!
//அப்போ மரபென்றால் மரப்பு போட்டுவிட்டுதான் ஜம்ப் செய்து வாசிப்பேன்... இப்போ அப்படியெல்லாம் இல்லைங்க எல்லாமே... இனிக்கிறது ! //
அன்புடன் வரவேற்கின்றோம்!
//ச்சும்மா ட்ரை பண்ணேன்//ட்ரை பண்ணுங்க சார்!
தெரியும்; ஆனா தெரியாது
புரியும்; ஆனா புரியாது
விளையாடாதீங்கோ கவிவேந்தே!
எல்லாம் அறிந்தும் ஒதுங்க வேண்டா. ஓடி வாருங்கள்; கை தூக்கி விடக் காத்திருக்கின்றார்கள், யாப்பிலக்கண ஆசான் அவர்கள்; கை தட்டக் காத்திருக்கின்றேன், கற்றுக்குட்டி கலாம்!
எல்லாம் இன்ப மயம்- இனிய மயம் - இந்த இணைய மயம்.
-இறையருள் கவிமணி
- அதிரை அஹமது காக்கா
- கவிஞர் சபீர்
- கவியன்பன் கலாம்
- அபூ இப்ராஹீம்
எல்லாம் சேர்ந்து கலக்குறீங்களே ஒரு கலப்பான கலக்கு. மாஷா அல்லாஹ்.
//எல்லாம் சேர்ந்து கலக்குறீங்களே ஒரு கலப்பான கலக்கு. மாஷா அல்லாஹ்.// ஜஸாக்கல்லாஹ் கைரன்
எம்மண்ணின் மைந்தனதனால் மகிழ்வுற்றேன்
எல்லாம் வல்லான் அவர்கருளிடனே என பிரார்தித்தேன்
அதிகமறிமுகமில்லை என்றாலும் நினைவுற்றேன்
அவர் குலத்துப் பெண் என்மனைவி என நிறைவுற்றேன்....
//எம்மண்ணின் மைந்தனதனால் மகிழ்வுற்றேன்
எல்லாம் வல்லான் அவர்கருளிடனே என பிரார்தித்தேன்
அதிகமறிமுகமில்லை என்றாலும் நினைவுற்றேன்
அவர் குலத்துப் பெண் என்மனைவி என நிறைவுற்றேன்....//
கவிமலர் தேன்சுவை நாடும் மூத்த சகோதரர் இ.அ. காக்கா!
நெய்தின் பண்டமாய் செய்னுதீன் வந்து கலக்கி விட்டதும் கவனிக்க.
அதிரை நிருபரைப் படித்தேன் தலைப்பாவின் விமர்சனம் உங்கள் கை வண்ணத்தில் ஒளி வீசுகிறது. கபூர் சாஹிபின் கவிதைகளுக்கு மெருகேற்றியுள்ளீர்கள்
“நம்நிழலை நாம்தொடர்ந்தால் நாமதனைப் பிடிக்கமாட்டோம்
நம்போக்கில் நாம்நடந்தால் நிழல்நம்மைத் தொடர்ந்துவரும்.”
எத்துணை அற்புதமான அறிவுரை!
மாஷா அல்லாஹ்! மிகவும் ரசித்தேன்.
- டாக்டர் அஹ்மது பாகவி
”தலைப்பால்” போல இத்தலைப்பா மிகவும் கெட்டியாகவும் சுவையாகவும் இருப்பதாகவும்; “தலைப்பாகை” போல கம்பீரமாக இருப்பதாகவும் எண்ணுகின்றேன்.
இறையருட்கவிமணி அவர்களின் சொல் விளையாட்டுகளில் சில:
Isha, Subhu,Luhar,Asar, Mahrib = ISALAM
மதிநாவால் வென்ற மதினாநாதர்
“கவிமணி” என்கின்றார்கL ஆனால் கவிஞர்கட்கு NO MOENEY
பசித்திருந்து
தனித்திருந்து
விழித்திருந்து
=
ப த வி
நீடூரின் வாசலில் நெய் இருந்தது (நீடூர் நெய்வாசல் என்பது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஊர்)
திருமுல்லை வாசல் (சீர்காழிக்கு அருகில் உள்ள ஊர்) வந்தால் இங்கு வாசலில் முல்லை இருந்தது
MUSLIMS BY CHOICE
MUSLIMS BY CHANCE
இப்படிப் பற்பல சிலேடை, நகைச்சுவை கலந்த சொல்விளையாட்டை இரசிப்பதற்காக அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வேன்
Post a Comment