Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள்! - குறுந்தொடர் - 1 24

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2012 | , ,


அதிரைநிருபர் வலைத்தளம் வாயிலாக உறவாடும் உறவுகள் பற்றிய சுருக்கமான என் கருத்துகளை வைக்க ஆவலுடன் தொடர்கிறேன்..

என்னுள் எழுந்த எண்ன ஓட்டங்களும் கருத்துகளும் ஒரு வரியெனில் அதிரை உறவுகள் நீங்கள் கூறும் / கூறப் போகும் கருத்துகள் ஏராளமிருக்குமென என நம்புகிறேன். 

உறவுகள் பலவிதம், தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாயின் உடன்பிறப்புகள் தந்தையின் உடன்பிறப்புகள் அவர்கள் வழிச்சொந்தம் என்று. அனைத்து உறவுகளையும் அலசிப்பார்த்து விடுவோமா.?

இவைகள் நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதுகிறேன்.    பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக நீங்களும் கருத்துக்களை தொடருங்கள்.  நமது உறவுகள் எப்படி இருந்தது, அவைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். எந்த உறவுகள் நமது அணுகுமுறையால் எவ்வாறெல்லாம் மேம்படும் என்பதையும் விவாதிப்போம். இதில் வாசிப்பவர்களில் உங்களனைவரின் பங்களிப்பே கூடுதலாக இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இறைவன் படைத்த படைப்புகளிலே மேலான படைப்பு மனித இனம்தான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு காணப்படும் மனித இனம் பெற்றுள்ள ஆறாம் அறிவான பகுத்தறிவு மிக நுணுக்கமானது. இதன் தேவைகள் உடல் சம்மந்தமானது கிடையாது. உள்ளம் பற்றிய தேவைகள் உடையது. நம் உள்ளத்திற்கு, விருப்பு, வெறுப்பு, அன்பு, நேசம் காட்டுதல், நேசம் பெறுதல், ஆவல், என மனதின் தேவைகள் சூழ்நிலைகேற்ப மாறுபடும். இந்த உணர்வுகள் மனித அரும்புகளின் வளர்ச்சிக்கு காலத்திற்கு ஏற்றார் போல் தேவை படுவதுதான் கால வினோதம். 

உறவுகள் ஒவ்வொன்றாக பார்ப்போம்...

தாய்-மகன் உறவு.... 

குடும்ப தலைவி தனது தாம்பத்திய வாழ்வின் வெற்றியாக கருதும் தாய் என்ற அற்புதமான பதவி அந்த தாய் என்ற பேரினை கொடுத்த பிள்ளை(கள்) மேல் காட்டும் பாசம், பரிவு அன்பின் வெளிப்பாடு அளவிட முடியாதது. முதல் மூன்று வயதில் அவர்களின் அன்பு அளவிட முடியாத அன்பு. அந்த அன்பின் வெளிப்பாட்டை மழலையர்களாக இருக்கும் பிள்ளைகள் அறிந்திட முடியாதது என்பது மனோதத்துவ நிபுணர்களின்  கருத்து. பிள்ளைகள் அந்த தருணத்தில் எல்லா தேவைகளையும் தாயிடமே கேட்கும். தாயின் அரவணைப்பே அந்த குழந்தையின் உறவுப்பாலம்.

மூன்று வயது கடந்த பிள்ளை தனது சுய தேவைகளை கேட்க ஆரம்பிக்கிறது. ஆனால், என் பிள்ளைக்கு இந்த உணவுதான் பிடிக்கும். இந்த ஆடை உடுத்திப் பார்க்கனும், என்று தனது ஆவலையே பூர்த்தி செய்கிறாள். அது இயற்கையான அன்பு, பள்ளி கூடங்களில் சேர்ப்பது கூட அவளது தேர்வாகவே இருக்கும். இப்படியாக தாயின் பாசம் சற்றும் குறையாமல் மகன் வாலிபனாகிய பின்பும் தனது மகனுக்கு வாழ்க்கை துணை தனது தரப்பு தேர்வாகவே இருக்க வேண்டும் என இருப்பதும் அதில் பிடிவாதமாக இருப்பதும் உண்டு. இது தாயின் நிலை.

மகனோ, ஐந்து வயது வரை தாயே உலகம். எதுவானாலும் தாய்தான். ஐந்து வயது தாண்டிய பின் பள்ளிகூட வாழ்க்கை துவங்குகிறது .அங்கு புது உறவுகள் பிறக்கிறது அங்கே நண்பன், ஆசிரியர் போன்ற புது உறவு. அங்கும் விருப்பு, வெறுப்பு போன்ற புது உணர்வுகள் பிறக்கிறது கற்கும் இடம் என்பதால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதுப்புது கருத்துக்களை அந்த மழலை உள்ளம் நுகர ஆரம்பிக்கிறது. ஐந்து வயது வரை நமது வீடு, நம் சொந்தம், என்ற சொல்லே மேலோங்கி இருக்கும். பள்ளிக்கூடம் சென்ற பின் தன்னை தாயிடமிருந்து தன்னை பிரித்து காட்டும் விதமாக எங்கள் பள்ளி   எங்கள் ஆசிரியர். எனது நண்பன். எனது புத்தகம் என்று தன்னை பிரித்து காட்டுவான் அப்படி கூறும் போது அதனை தாய் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாள். மாறாக மகிழ்ச்சியால் உள்ளம் பூரிப்பாள்

நாம், நம், என்ற சொல் என், எனது, என்று மாறியது என்பது உணர்வுகளின் வேறுபாடு என்பதை அத்தருணத்தில் தாய் உணர்வதில்லை முற்றிலும் தனது  பிள்ளை என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். வளர்ந்து வாலிப பருவம் ஆன பின்பு கூட உறவு விட்டு போக கூடாது. நான் கூறும் இடத்தில் தான் நீ  மணமுடிக்க வேண்டும் என்று கூறும்போது  நடக்கும் போராட்டம் மிக குறைவு என்றாலும் 95% திருமணங்கள் நன்மையாகவே வெற்றிகரமாகவே அமைகின்றன. என்றாலும் 5 சதவிகித திருமணங்கள் தோல்வியையே தழுவுகின்றன. தோல்வி கண்டவர்கள் தாய் மீது கோபம் கொள்ளாமல் தாயிடமே தஞ்சம் கொள்வது தான் வினோதம். அதே நேரத்தில் தாய் சொல்படி மணமுடித்து வாழ்வில் வென்றவர்கள் தாயை மறந்து தனது வழியை பார்த்து கொண்டு செல்வதுதான் வினோதம்..!

(இன்ஷா அல்லாஹ்... தாய் மகள் உறவு பற்றி அடுத்த தொடரில்.... )
அதிரை சித்தீக்

24 Responses So Far:

Abdul Razik said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் சித்தீக் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

தொடக்கமே நிமிர்ந்து உட்காரவைத்துள்ளது இந்த தொடர். தாயில் இருந்து ஆரம்பித்து இருக்கிறீர்கள். இது பல அனுபவங்களின் தொகுப்பாக அமையும் என கருதுகிறேன். ஆசைப்படுகிறேன்.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

தேவைப்பட்டால் மீண்டும் தலைகாட்டுவேன். இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உறவுகள் ஓராயிரம் அதில் உயிரோடு உரசும் உறவுகள் ஏற்படுத்தும் தாக்கம் மிக முக்கியமே !

தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

Noor Mohamed said...

அருமையான ஆக்கம். தொடருங்கள். ஆரம்பத் தொடரின் ஆதி வாக்கியம்;

//அதே நேரத்தில் தாய் சொல்படி மணமுடித்து வாழ்வில் வென்றவர்கள் தாயை மறந்து தனது வழியை பார்த்து கொண்டு செல்வதுதான் வினோதம்..!//

பெரும்பாலோர் வாழ்வு இவ்வாறே அமைகின்றன. இதில் தங்களின் தொடர்ச்சியை அடுத்த தொடரில் ஆவலுடன் எதிர்பாக்கிறோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆதாம் ஏவாள்

ஆரம்பித்த உறவுகள்

சாத்தான் புகுந்து

சாய்த்தான்; அதனால் - பிரிவுகள்

அண்டை வீட்டோடும்

அண்டை நாட்டோடும்

சண்டை போட்டே

மண்டை ஓட்டை

மலிவாக்கினோம்....

உறவு ஓர் அதிசய மரம்:

உள்ளன்பே அதன் உரம்;

உதவும் கரம் தான் உண்டு

அதனைத் தாங்கும் தண்டு;

அன்பு ஊற்று தான்

இன்பக் காற்று தரும் இலைகள்;

உறவுக்கு மறுபெயர் "கிளைகள்"

உட்காரட்டும் பாசப்பறவைகள்....

உணர்வு தான் ஆணி வேர்;

உணவு அதற்கு உளமார மன்னிக்கும் நற்குணமே

சட்டை பையில் பணமிருந்தால்

சட்டென ஒட்டும் உறவுகள்;

சற்றே நிலை மாறினால்

சட்டை செய்யாது திசை மாறும் பறவைகள்

விலா எலும்பின்

விலாசம் காண

விவாக உறவுகள்

உயிர் காக்கும்

உண்மைத் தோழமை

உயிருள்ள வரை மறவா உறவு

தொப்புள் கொடியாய்த்

தொடரும் இரத்த உறவு

ஆயிரம் உறவுகளிருந்தாலும்

தாயும்-தந்தையும் தன்னேரில்லா உறவு

கற்ற கல்வி

உற்ற நண்பனாய் உதவும் உறவு

நற்செயல்கள் என்னும் உறவே நம்மோடு

நடந்து வரும் இடுகாடு

இவ்வுறவைப் பேண

இறுதிவரைப் போராடு

எல்லா உறவுகளும்

நில்லா உலகோடு நின்றுவிடும்;

எல்லாம் வல்ல இறைவனிடம்

எல்லா நேரமும் அடியான் கொண்ட "உறவு"

எல்லா துன்பங்களையும் வென்றுவிடும்!!!!

எல்லா உறவுகளயும் பேணுவோம்

எல்லார்க்கும்- இறையோனுக்கும்

பகைவனான சாத்தானைப்

பகைத்திடுவோம்; அதனால்

கலகமே இல்லாத

உலகமேக் காணுவோம்........................!!!!!!!!!!!!!

sabeer.abushahruk said...

சகோ சித்திக் அவர்களின் உறவுகளைப் பற்றிய அலசல் ஒரு நல்ல முயற்சி.

எல்லா உறவுகளும் எக்குத்தப்பாய்ப் பிசகிப்போய் கிடக்கும் இக்காலக்கட்டதில் சற்றேனும் மாசுபடாமல் நிற்பது தாய்மை தொடர்பான உறவுகள்தான்.

அதிலும் குறிப்பாக அம்மா-மகன் உறவு!

//தோல்வி கண்டவர்கள் தாய் மீது கோபம் கொள்ளாமல் தாயிடமே தஞ்சம் கொள்வது தான் வினோதம்//

அது வினோதம் அல்ல தலைவா, வாழ்க்கையின் தாத்பரியம். ஸ்வாசத்தைவிட விருப்பமானது உம்மாவின் வாசம்.

உம்மா உன் வாசம்!

உன் -
உயிரைப் பிரித் தெனை
உலகம் கொணர்ந்தாய்...
உதிரம் திறித் தெனக்கு
உணவாய் புகட்டினாய்!

உன் தாலாட்டு 
எனக்கு ஆத்திச்சூடி,
உன் கதைப் பாட்டு
நான் கற்ற தர்மம்!

உண்டு கொழுத்தது
கண்டு களித்தாய்  - நான்
உட்கொண்ட உணவில்...
உன் பசி மறந்தாய்!

புடவை வாங்காமல் எனக்கு
புத்தகம் வாங்கினாய்...
புடவைக்குள் போர்த்தி 
பொத்திப்பொத்தி வளர்த்தாய்!

உதயமுடன் எழுந்து...
உணவு உண்டாக்கி...
உலகத் தேவை யுணர்ந்து-
உழைத்து ஓடாகி ...
உறங்கும் போது
உன் வியர்வையில் தோய்ந்த
உடையால் போர்த்துவாய்...
... ... ...
உயர் அத்தரினும் சுகந்தமன்றோ
உம்மா உன் வாசம்!

Unknown said...

இருளில் மூழ்கிய அதிரை;பதில் சொல்லாத மின்வாரியம்!
http://adiraipost.blogspot.in/2012/08/blog-post_9.html

Ebrahim Ansari said...

//உன் -
உயிரைப் பிரித் தெனை
உலகம் கொணர்ந்தாய்...
உதிரம் திறித் தெனக்கு
உணவாய் புகட்டினாய்!//

//உண்டு கொழுத்தது
கண்டு களித்தாய் - நான்
உட்கொண்ட உணவில்...
உன் பசி மறந்தாய்!//

வெறும் வார்த்தை ஜாலமல்ல வாழ்க்கையை வடித்தெடுத்த வரிகள்.

சகோதரர் சித்தீக் கோடு போட்டால் எம் கவியோ ரோடு போடுகிறார்.

Ebrahim Ansari said...

//அண்டை வீட்டோடும்

அண்டை நாட்டோடும்

சண்டை போட்டே

மண்டை ஓட்டை

மலிவாக்கினோம்....//

கவியன்பர் தரும் காட்சி.

கீழே உள்ளவை காதில் விழுந்து இதயம் நுழைந்த சில வரிகள்.

உறவுகளாலே உறவுகளாலே
உலகம் நடக்கின்றதே!
உயிர் வந்தாலும் உயிர் போனாலும்
உறவே வருகின்றதே.

ஏணியாவதும் உறவுதான்- காலை
இடறிவிடுவதும் உறவுதான்
வேருக்கு நீர் உறவுதான் -அதை
வெட்டி விடுவதும் உறவுதான்

Aboobakkar, Can. said...

அருமையான ஆக்கம் சித்திக் அவர்களே தொடரட்டும் உஙகள் பனி.உறவுகள் அல்லாஹ்வால் எற்படுத்தபடுபவை.அதை மனிதன் பிரிக்க முற்படும் போது கேடு தான் மிஞ்சும்.

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
crown said...

உறவுக்கு மறுபெயர் "கிளைகள்"
-----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவியன்பன் அவர்களே மேற்கண்டவரி அப்பாடா! அருமையோ அருமை! இந்த வரி போதும் நம்மை உலுப்பிஎடுக்க!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"நல்லா இருந்த குடும்பத்தெ சில (ஆண்/பெண்) நாதாரிகள் நார், நாரா கிழிச்சிடுறாங்க"

அது ஓர் அழகிய கனாக்காலம் போல் இருக்கும் எத்தனையோ நல்ல குடும்பங்களில் சில ஆணவ/அதிகார/பகுத்தறிவில்லாத/சுயநலமிக்க/கள்ளம் கபடம் நிறைந்த/கெட்ட எண்ணம் கொண்ட/மார்க்க தெளிவில்லாத/உலக பேராசை கொண்ட ஆண்களும், பெண்களும் சேர்ந்து கூட்டு சதியோ அல்லது தனிப்பட்ட சதியோ செய்து எத்தனையோ குடும்பங்களுக்கு வேட்டு வைத்து இன்று வெளியில் இருந்து மவுனமாய் வேடிக்கை பார்க்கின்றனர். அவர்களின் வேடிக்கை நிரந்தரமல்ல. காரணம் உலக உருண்டையின் சுழலில் அவர்கள் குடும்பமும் மற்றக்குடும்பங்களால் வேடிக்கை பார்த்து கை தட்டி சிரிக்கும் நிகழ்வுகளும் இறைவன் நாட்டத்தில் நடந்து விடாமலில்லை.

இத‌னால் க‌லியாண‌மே முடிக்காம‌ல் விவாக‌ர‌த்து கோரும் ச‌ம்ப‌ங்க‌ளும், ந‌ல்ல‌ நிலையில் க‌ண‌வ‌ன் வைத்திருந்தும் இன்னொருவ‌னுட‌ன் த‌ட்டுக்கெட்டு ஓடும் ச‌ம்ப‌ங்க‌ளும் அவ்வ‌ப்பொழுது ந‌ட‌ந்தேறி விடுங்கின்ற‌ன‌.

ந‌ம் ஊர் ம‌க்க‌ளின் உல‌க‌ம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இன்னும் அண்டார்ட்டிக்கா வ‌ரை கூட‌ விசால‌மாகி விட்ட‌து என‌லாம். ஆனால் அன்று ஓட்டு வீட்டினுள் வெயிலின் வெளிச்ச‌க்கீற்று ஊடுருவி வீட்டை வேவு பார்க்கும் அந்த‌க்கால‌ ம‌க்க‌ளின் நல்ல எண்ண‌ ஓட்ட‌ங்க‌ளும், குடும்ப‌ பிணைப்பும், பொங்கும் பாச‌மும், நேச‌மும் இன்றில்லாம‌ல் போய் எல்லாம் வெளிப்ப‌க‌ட்டு வேச‌மாகிப்போன‌து இன்றைய‌ கால‌த்தில்.

வாழ்ந்தால் பேசும், தாழ்ந்தால் ஏசும் ஒரு வாயில்லா ஜீவ‌னாகிப்போன‌து ந‌ம் ஊரின் இன்றைய‌ கால‌ ச‌மூக‌/குடும்ப‌ நீதி.....

"வாழ்வில் என்ன‌ ந‌ட‌ந்தாலும், எதை இழந்தாலும் துவ‌ண்டு போய் விட‌ மாட்டேன். கார‌ண‌ம் நான் நூறு வெற்றிக‌ளைக்க‌ண்டு க‌ழித்த‌வ‌ன‌ல்ல‌ன். ஆயிர‌ம் தோல்விக‌ளை அன்று முத‌ல் இன்று வ‌ரை சந்தித்து வ‌ருப‌வ‌ன்" என‌ ம‌ன‌தை த‌ன‌க்குத்தானே தேற்றிக்கொண்டு எஞ்சியிருக்கும் கால‌த்திற்காக‌ இறைவ‌னின் இரையை (ரிஜ்க்) தேடி ஓட‌ வேண்டியுள்ள‌து. நம் ஓட்ட‌ங்க‌ள் தொட‌ர்கின்ற‌ன‌ உட‌லில் உயிரோட்ட‌ம் இருக்கும் வ‌ரை.

க‌ட்டுரையாள‌ரிட‌மிருந்து இது போன்ற‌ ந‌ல்ல‌ ப‌க்குவ‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளை நிறைய‌ எதிர்பார்க்கிறேன்.

வ‌ஸ்ஸ‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ந‌ம்ம‌ ஊரில் சில‌ ஆண்கள்/பெண்கள் இருக்கிறார்க‌ள். பெத்த‌ உம்மா வீட்டிற்கும் பிர‌யோஜ‌ன‌ம் இல்லை. புகுந்த‌ மாமியார் வீட்டிற்கும் பிர‌யோஜ‌ன‌ம் இல்லை. தான்தோன்றித்த‌ன‌மாக‌ காட்டாற்று வெள்ள‌ம் போல் த‌ற்காலிக‌ ச‌ந்தோச‌த்தில் க‌ரைபுர‌ண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன அவர்களின் வாழ்க்கை. ஆனால் அத‌ன் முடிவு எங்கோ ஓரிட‌த்தில் ச‌ங்க‌மித்தே ஆக‌ வேண்டியுள்ள‌து. மரணத்திற்கும் நமக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறது சில மனித வர்க்கம்.

ஏதோ உண்மையான‌ சில‌ உற‌வுக‌ளால் உல‌க‌ம் இன்று சிக்க‌லின்றி உருண்டோடச்செய்து கொண்டிருக்கிறான் இறைவ‌ன்.

இறைவ‌னின் த‌ண்டிக்கும் க‌திர‌ருவாள் உல‌கிலேயே ந‌ல்ல‌ அறுவ‌டையை செய்து கொண்டுதான் இருக்கிற‌து. ந‌ம‌க்குத்தான் இவை அக‌க்க‌ண்க‌ளுக்கு தெரிவ‌தில்லை/புரிவ‌தில்லை.

Unknown said...

சிந்தையை கிளரும் அழுத்தமான தொடர் .....ஆழமாக படரும் அதன் விழுதுகள்.

''புடவை வாங்காமல் எனக்கு
புத்தகம் வாங்கினாய்...
புடவைக்குள் போர்த்தி
பொத்திப்பொத்தி வளர்த்தாய்!''

சபீர்காக்காவின் அமுத வரிகளில் தாய்ப்பால் மனம் !!!!!!!

Unknown said...

நற்செயல்கள் என்னும் உறவே நம்மோடு
நடந்து வரும் இடுகாடு
இவ்வுறவைப் பேண
இறுதிவரைப் போராடு
எல்லா உறவுகளும்
நில்லா உலகோடு நின்றுவிடும்;
எல்லாம் வல்ல இறைவனிடம்
எல்லா நேரமும் அடியான் கொண்ட "உறவு"
எல்லா துன்பங்களையும் வென்றுவிடும்

------------------------------------------------

கலாம் காக்காவின் சிறந்த சிந்தனை

இப்னு அப்துல் ரஜாக் said...

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்ற நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழி போற்றி நடந்தால்,வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ் என்பதை சித்திக் காக்கா கட்டுரை மூலம் உணர முடியும்.வாழ்த்துக்கள் காக்கா.

A special thanks to Kalam kakka for his wonderful thought.

அதிரை சித்திக் said...

சின்னஞ்சிறு வயதில் தாய் ஆசையாய் .
கொடுக்கும் தின்படத்தை வைத்துகொண்டு
தாயிடம் சொல்வான் மகன் இது எனக்கு மட்டும் தான்
இதைகேட்கும் தாய் உனக்கு மட்டும் தாண்டா செல்லம்
இதே வார்த்தை 35 வயதை கடந்து நன்கு சம்பாதித்து வந்து
கார் பங்களா வங்கி இவைகள் எனக்கும் என் மனைவி மக்களுக்கு
மட்டும் தான் என சொன்னால் அந்த போக்கை வாய் கிழவி
என்ன சொல்வாள் ...? நல்லா இரு ராசா ..என்பாள் .
ஊர் என்ன சொல்லும் ...இப்படி பட்ட மகன் உறவு பற்றி ..
சொல்லுங்களேன் ...
அதிரை நிருபர் பெற்ற வாசகர்கள் நன்மக்கள் ..
தாயை தாலாட்டும் நன் மக்கள் ..
உறவுகளை பற்றி நான் எழுத மறந்த கருத்துக்களை
நீங்களும் தொடரலாம் ...
ஐந்து ஆறு ஆண் பிள்ளை பெற்ற தாய்
வயதான காலத்தில் ஒவ்வொரு மகனும்
அவன் தருவான் என்று மற்றவனும்
மற்றவன் தருவான் என்று இன்னொருவனும்
அலைக்கழிக்கும் சம்பவமும் சில இடங்களில்
நடைபெறுவது உண்டு ..சொல்லுங்கள் சில சம்பவங்களை ...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உறவுகள் பற்றி தொடர வந்த உறவுக்கார கட்டுரையாளரை வரவேற்கிறேன்.
முதலில் தாயின் பாசத்தையும் சில மகன்கள் காலப்போக்கில் காட்டும் துவேசத்தையும் பற்றி நடைமுறையில் நடப்பதை அப்படியே எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்
தொடருங்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஜாஹிர்காக்கா,இபுறாகிம் அன்சாரி காக்கா ஆகியோரின் ஆக்கத்திற்கு பெரும்பாலும் நான் கருத்திடுவதில்லை. அதுபோல் அஹமது சாச்சாவின் ஆக்கம் பெரும்பாலனவைக்கு நான் கருத்திடுவதில்லை இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் . இவர்கள் எழுதும் ஆக்கங்களுக்கு கருத்துஎழுதும் அளவிற்கு என்னிடம் அறிவும் இருப்பதில்லை, விசயமும் இல்லை. அதுபோல்தான் சகோ.சித்திக்கின் இந்த ஆக்கம்.வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களில் கருத்திடும் அளவிற்க்கு என் அறிவை வளர்த்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அன்னிய தேசத்தில் கை நிறய சம்பாதித்து ஜகாதிர்கு தயாராகும் சிலரின்(அல்லாகாப்பாற்றுவானாக) தாய் தந்தையர்கள் அது வாங்கும் நிலையில். அப்படிபட்ட பிள்ளைகளை அல்லா ஹிதாயத் கொடுப்பனாக அப்படிப்பட்டவர்களை தள்ளிவிட்டு சரியக நடப்பவர்கள் பக்கம்வருவோம் நம்மிடம் இருக்கும் சொத்திர்க்கு கொடுக்கும் ஜக்காத்தை தாய் தந்தையரிடம் கொடுத்து கொடுப்பதே சிறப்பு நம் சொத்தின்மீது கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நாம் எப்படி பேனுகிரோமோ நம் தாய் தந்தையரின் சொத்தனா நாம் இருக்கையில் அந்தசொத்திர்க்கு உன்டான் ஜகாத்தை தாய் தந்தையர் கொடுப்பதுதானே சிறப்பு
அடுத்த விசயம் நாம் ஊருக்கு அனுப்பி கொடுக்கப்படும் ஜக்காத் மனைவியாலோ பெற்றோர்க்ளாளோ மார்க்கசட்டப்படி
கொடுக்கப்படுவது இல்லை பெருனால் உடுப்பு செல்வுகளோடும் பெருனால் காசுக்ளோடும்
கலந்து விடுகிறது பேனச்சொல்லவேண்டும் அல்லது
அவர்களுக்கு தெரியாமல் கூடுதலாக நாமும் தனியாக கொடுக்க வேண்டும்

Yasir said...

சீர்கெட்டு வரும் உறவுகளை சீர் தூக்கி பார்க்கும் தொடர்....தொடருங்கள் காக்கா...இன்றைய சூழ்நிலைக்கு அவசியமானப் பதிவு

அதிரை சித்திக் said...

அதிரை நிருபர் வலை தளத்தின் அன்பு உறவுகள்
தந்த கருத்துக்கள் இன்னுன் அதிகமாக வர வேண்டும்
உலகின் ஒரு மூளையில்..ஊசி முனை அளவு பார்வைதான்
என் கருத்து ..மகன் தாய்க்கு ஆற்றும் சேவை இன்னும் எப்படி இருக்க
வேண்டும் என்பதை .ஒவ்வொரு உறவுகளாக தனி தனியாக
தொடரின் முடிவி தீர்வு பகுதியில் வளக்கலாம் என் உள்ளேன் ..
சகோ .அப்துல் ராசிக் அவர்கள் வருகைக்கு நன்றி ..
அன்சாரி காக்கா அவர்களின் நுண்ணிய ஆய்வுக்கு
எனது எழுத்து வந்துல்லை எண்ணி பூரிப்பு அடைகிறேன் ..
அபு இப்ராஹீம் சொல்வது போல் உறவுகளின் உரசல்
பல விளைவுகளை தரும் ..நூர் முகமது காக்கா தங்களின்
மேலான கருத்து கட்டுரைக்கு வலு சேர்க்கிறது ..
தம்பி அர.அல..தங்களின் கருத்து எப்போதும் ஹதீஸை
ஒட்டி இருக்கும் நல்ல நெறியாளரின் தன்மை வரவேற்கிறேன் ..
கவி. அன்பு சகோ சபீர் காக்கா அவர்களின் கவி ..
தேன்...கவி யன்பர் கலாம் காக்கா ..கவி மழை..
இருவரின் கவிகள் எனக்கு பல வகையான
ஆக்கங்கள் எழுத தூண்டும் கருக்கள் தருகின்றன
சகோ.அபூபக்கர் .கனடா .தங்களின் து ஆ .மனமார்ந்த நன்றி
அன்பு சொந்தம் .நெய்நாவின் கருத்து ஆழ்கடல் முத்து ..
இன்னும் பல் அழுத்த மான கருத்தை தாருங்கள் ..
அல்லாஹ் நாடினால் புத்தகமாக வெளியிட பட்டால் உங்கள் கருத்தும்
இடம் பெறும்.மகனார் அப்துல் ரஹ்மான் இருவரி என்றாலும்
வைர வரிகள் ..அன்பு சொந்தம் ஜகபர் சாதிக் தொடரை வரவேற்றது
மனதிற்கு மகிழ்ச்சி ..முத்தாய்பாய் நண்பன் சபீர் தந்த தவழ மனதை வருந்த வைத்தது
அனைவரின் வருகைக்கு நன்றி ..தொடர்வோம்

அதிரை சித்திக் said...

சிறப்பு வருகை தஸ்தகீர்....
தம்பி யாசிர் வருகை நல் வரவாகுக

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு