Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) 5

அதிரைநிருபர் பதிப்பகம் | February 12, 2015 | , ,

நபி மணியும் நகைச்சுவையும் தொடர்: 2


அன்னை ஆயிஷா  சித்தீக்கா (ரலி)

ஒற்றை வார்த்தையில் உடனே உதிர்ந்த பதில்! “ஆயிஷா”

அடுத்தார்ப்போல்.....ஆண்களில்?

தயங்காமல் வந்தது அடுத்த பதில்! "அவரின் தந்தை"

அண்ணல் நபி (ஸல்) யிடம் கேள்வி கேட்டு நின்ற அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அயர்ந்து போனார்!

அல்லாஹ்வின் தூதர், தன் பெயரைச் சொல்லமாட்டார்களா என்ற நப்பாசை அவருக்கு!

'தாத்துஸ் ஸுலாஸில்' என்ற ஒரு போர்ப் படைக்குத் தலைமை தாங்கி நிற்கும் வெறும் தளபதியாகிய தானும் அதே சமயத்தில் அல்லாஹ்வின் தூதருடைய இனிய நெஞ்சத்தில் தமக்கும் முன்னால் தனியிடம் பெற்று வீற்றிருப்பவர்களும் சமமல்ல! என்பது அப்போதுதான் அவருக்கு பலமாக உரைத்தது! (1)

கேள்வி என்னவென்றால் "மனிதர்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர் யார்?" அல்லாஹ்வின் மீது ஆணையாக, முதல் முக்கியத்துவம் பெற்றவராக பெண்ணினத்தின் பேரரசி, கற்புநெறியில் பனியின் வெண்மையும் தூய்மையும் கொண்ட மாதரசி" நம் அன்னை  ஆயிஷா (ரலி)" ஆகவே இருந்தார்கள்!

"உணவுகளிலேயே ஸரீத் என்னும் உணவு சிறந்து விளங்குவதைபோல, பெண்களில் ஆயிஷா சிறந்து விளங்குகிறார்" என்று செம்மல்  நபி (ஸல்) அவர்கள், இவரைச்  சிறப்பித்துக் கூறினார்கள்.  (2)

"நான் உன்னைக் கனவில் கண்டேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத்துணியால் போர்த்திக் கொண்டு வந்து இவர்தான் உன் மனைவி என்றார். முகத்தின் துணியை அகற்றிப் பார்த்தேன். அப்போது நீயாக இருந்தாய்! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்திருந்தால் அப்படியே நடக்கும் என்று கூறிக்கொண்டேன்" என்று ஏந்தல் நபியவர்கள் என்னிடம் கூறினார்கள். (3)

அறிவில் ஒளிவீசும் நம் அன்னை அவர்கள் அதில் ஒரு மாணிக்கமாகச்  சிறு வயதிலேயே மின்னத் தொடங்கி விட்டார்கள். நம் அன்னை அவர்களின் அதீதமான ஞாபக சக்தியாலும் புத்திக் கூர்மையாலும் எந்தவொரு சிறு சம்பவத்தையும் உடனே நினைவுக்குக் கொண்டு வந்து தெளிவாக விளக்கும் தன்மையைப்  பெற்றிருந்தார்கள்.

'நபிமொழித் துறை' என்பது அண்ணலாருடன் கொண்டிருந்த நெருக்கமான பரிச்சயத்தைக் கொண்டுதான் தீர்மானிக்கப் படுகின்றது. அல்லாஹ்வின் தூதரோடு யார் யார் அந்த அளவிற்கு நெருக்கமும் அண்மையும் கொண்டிருந்தார்களோ அவர்கள் மட்டுமே அதில் சிறந்து விளங்க முடியும். இதனாற்றான் இவர்கள் மூலம் நமக்கு 2210 நபிமொழிகள் கிட்டியுள்ளன. அவை அனைத்தும் முக்கியமான மார்க்க சட்டதிட்டங்கள் பற்றியவை ஆகும். எனவேதான் அவனியெங்கும் புகழ் நிறைந்த அஹ்மது  நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் ஹுமைரா (ஆயிஷா) விடமிருந்து மார்க்கத்தின் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அருளினார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் புத்தி சாதுர்யமான அதே சமயத்தில் நகைச்சுவை நல்கும் ஒரு பதிலை நாம்  பார்ப்போம்:

அண்ணல் பெருமான் நபி (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று பலமாக அடித்ததால், எனது அலமாரியின்  திரை அகன்றது. நான் விளையாடும் பொம்மைகள் தெரிந்தன!

அண்ணலார் அவர்கள்: "இவை என்ன ஆயிஷா?" என்று கேட்டார்கள்.

"என் விளையாட்டு பொம்மைகள்" என்றேன்.
"அதன் நடுவே இருப்பது என்ன?" என வினவினார்கள்.

"அது ஒரு குதிரை" என்றேன்.

"அதன் மீது இருப்பது என்ன?" என்றார்கள்.

நான் "இரு இறக்கைகள்" என்றேன்.

"ஓஹோ. குதிரைக்கு எங்காவது இறக்கைகள் இருக்குமா?" என்று கேட்டார்கள்.

அதற்கு "ஓ, இருக்குமே! சுலைமான் நபி அவர்களின் குதிரைக்கு இறக்கைகள் இருந்ததே!" என்று நான் தயங்காமல் பதில் சொன்னபோது,

அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! என் பதில் கேட்டு கடைவாய்ப்  பற்கள்  தெரியுமளவிற்குச்  சிரித்தார்கள்" (4)

இந்நிகழ்வில் அன்னை  ஆயிஷா (ரலி) அவர்களின் சமயோசிதமான புத்திசாலித்தனமும் மார்க்க அறிவும் விஷயத்தை உடனுக்குடன் புரிந்துகொள்ளும் பக்குவமும் பளிச்சிடுகின்றதல்லவா?

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விரைந்து வளரும் தன்மையுடைய பெண்களுள் ஒருவர். ஒன்பது வயதானபோதே ஒரு பெரிய பெண்மணியைப் போன்ற உருவத்திற்கு வந்துவிட்டார்கள்!

ஹிஜ்ரீ முதலாண்டு ஷவ்வால் மாதம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இனிய இல்லறத்தைத் துவக்கினார்கள் .

ஒருமுறை மாமதீனாவின் ஒளிசேர் மணியான மண்குடிலில் வாழ்ந்த மன்னர் நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் செருப்புத் தைத்துக் கொண்டிருக்க, சங்கை மிகுந்த புனிதமான மங்கையர் திலகம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஓர் ஆடையை ராட்டினத்தில் நெய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபித்துவ ஒளி மிகுந்த நாயகத்தின் உடலில் இருந்து வியர்வை பூத்துக் கொண்டிருந்தது. உகப்பான உண்மைத் தூதரின்  முகரேகைகள் ஒளியால் இலங்கிக்கொண்டிருந்தன! இந்த அதிசய நிகழ்வைக் கண்டு திடுக்கிட்டுப் போன அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், தன் அன்புக் கணவரின் எழில் முகம்  அதை அப்படியே உற்று நோக்கினார். அது ஜெக ஜோதியாய் ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது!

ராட்டை சுற்றிடும் சப்தம் திடீரென்று நின்றதும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களை ஏறிட்டுப் பார்த்து, 'என்ன காரணம்' என்று வினவ, வைத்த கண் வாங்காது தம்  அன்புக் கணவரையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் "யூஸுஃப் நபியின் அழகை இமை கொட்டாது பார்த்துப் பழமென எண்ணிக் கை விரல்களைக்  கத்தியால் நறுக்கிக் கொண்ட மிஸ்ர் நாட்டின் அரம்பையர், தங்களின் முக அழகை இப்போது காணின், அவர்களின் விரல்களை அல்ல, தங்கள் இதயத்தையே கத்தியால் வெட்டிக் கொள்வார்கள்” என்று பொருள்படும் கவிதை அமுதமாய் அவர்கள் வாயிலிருந்தும் வெளிவந்தது!

இன்னும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, கவிவேந்தர் அபூகபீர் ஹுதலி தங்களை இப்போது சந்திப்பின்,

"அவரது முக ரேகைகளை நீங்கள் நோக்கினால், அவை ஆங்கே வானத்திலே மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பறித்து வந்து அவரின்  நிலவு முகத்தில் தோரணங்களாய் கட்டித் தொங்கவிட்டிருப்பதைப்  போன்று இலங்கி  ஒளிர்வதைக் காணலாம்"

என்ற பிரசித்தி பெற்ற அவரின் கவி வரிகளுக்கு, பிறர் எவரையும்விட நீங்களே முற்றிலும் பொருத்தமானவர் என சத்தியம் செய்வார் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னும் வியப்பு மாறாமல் பேரழகர் பெருமானாரையே பார்த்து ரசித்து நின்றார்கள்! (5)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி மகன் உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்ற நிலையில், தம் துணைவியருள் ஒருவரை முத்தமிடுவார்கள்" என்று சொல்லிவிட்டு என் சின்னம்மா  அவர்கள் சிரித்தார்கள் என்றார். (6)

இல்லறச்சோலையில் கணவன்-மனைவியின் கடமைகளும் உரிமைகளும் அத்துடன் அண்ணல் நபியின் இனிய இல்லற வாழ்வு, அல்லாஹ்வின் தூதருடைய தனிப்பட்ட நெறிமிகுந்த வாழ்வொழுங்குகள், அண்ணலின் தனிச்சிறப்பான தஹஜ்ஜத் தொழுகைகள் போன்றவை பற்றிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பிரசித்திப் பெற்ற ஹதீஸ்கள்  சிறப்பிற்குரியனவாகும்.

மேலும், உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள், ஹலால்-ஹராம், அறிவுப் புலமை, கவிதை, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் 'என் சிற்றன்னை ஆயிஷா முதஹ்ஹரா அவர்களை விடச்  சிறந்தவர் ஒருவரை நான் கண்டதில்லை' என்கின்றார். (7)

நான் மணிமொழி பேசும் மாண்பு நபி (ஸல்) அவர்களோடு ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது நான் சிறியவளாக, சதைப்பற்று அதிகமில்லாதவளாக, கனத்த உடம்பு இல்லாதவளாக இருந்தேன். அப்போது மக்கள், "வாருங்கள். ஓட்டப்பந்தயம் வைக்கலாம்" என்றழைத்தனர். அனைவரும் ஓடினர்.

நபி (ஸல்) என்னை அழைத்து, "நம் இருவருக்கும் பந்தயம் வைக்கலாம்" என்றார்கள். அவர்களோடு ஓடினேன். பந்தயத்தில் நான் அவர்களை முந்திவிட்டேன். நபி (ஸல்) அவர்கள், அமைதியானார்கள். பின்னர், சில காலத்தில் எனக்கு சதை போட்டு உடல் கொஞ்சம் கனத்துவிட்டது.

நடந்த பந்தய நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன். இன்னொரு பயணத்தில் மக்கள் ஓடினர். அண்ணல் நபி (ஸல்) என்னை அழைத்து, "உன்னோடு ஓடுகிறேன்" என்றார்கள். எனவே, நான் அவர்களோடு ஓட்டப் பந்தயத்தில் ஓடினேன். ஆனால் , இந்தமுறை என்னை முந்திவிட்டு, வையகம் போற்றிடும் வள்ளல் நபியவர்கள் வான்மதிபோல் பிரகாசமாய்ச் சிரித்தார்கள். "இது, அதற்கு முன்னால் உன்னிடம் தோற்றதற்குச்  சரியாகிவிட்டது" என்றார்கள்.

நினைவெல்லாம் தேடும் நம் நெஞ்சிலே வாழ்கின்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். ஒரு பெருநாளின் போது , சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து மஸ்ஜித் நபவீயின் எல்லையில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்க விரும்புவதை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னை அவர்களுக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படும் அளவில் என்னை நிற்க வைத்தார்கள். பிறகு, அவர்களை நோக்கி, "‘அர்பித்தா’வின் மக்களே, உங்கள் விளையாட்டைத் தொடருங்கள்" என்றார்கள். நான் பார்த்து சலித்தபோது "உனக்கு பார்த்தது போதுமா?" என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். "அப்படியானால் சரி. உள்ளே போ" என்று கூறினார்கள். (8)

நம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மறைவிற்குப்பின், அன்னை ஸவ்தா (ரலி) அவர்களையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்து இருந்தார்கள். இரு அன்னையரும் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் கேளிக்கை செய்தும் சிரித்து மகிழ்வார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்றைய தினம் 'ஹரீராஹ்' என்ற ஒரு சிறப்பான உணவை வீட்டில் தயாரித்து இருந்தார்கள். நபிகளாருக்கு பரிமாறும் சமயத்தில் அன்னை ஸவ்தா அவர்களையும் உண்ண அழைத்தார்கள். ஆனால், அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள், தனக்கு வேண்டாம் என மறுத்துக் கொண்டிருந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோ அப்போது மிகவும் இளமைத் துடிப்புள்ள  சிறுமியாக  இருந்ததால், தாம்  செய்த அந்த சிறப்பான உணவை கண்டிப்பாகச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடித்து, வலுக்கட்டாயமாக அன்னை ஸவ்தாவின் வாயில் ஊட்டிவிட முனைந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் முயற்சியில் விளைவு என்னவாயிற்று  என்றால், அன்னை ஸவ்தா அவர்கள், வேண்டாம் என்று தலையை வேகமாக ஆட்டி மறுத்துகொண்டிருக்கும் நிலையில் வாயை நோக்கித் திணிக்கப்பட்ட உணவு திசைமாறி முகம் முழுதும் பூசப்பட்டுவிட்டது.

இந்தக் கேளிக்கையான நிகழ்ச்சி இரு அன்னையரையும் பார்த்துகொண்டிருந்த அண்ணலாருக்கு அன்னை ஸவ்தாவின் 'உணவுமுகம்' பெரிய சிரிப்பைக் கொண்டுவந்து சேர்த்தது!

உடனே, அண்ணலார் பாய்ந்து போய் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இரு கைகளையும் முதுகுப் பக்கம் நின்று பிடித்துக் கொண்டார்கள். சீக்கிரம் வா ஸவ்தா! இப்போது உன் முறை. இப்போது ஆயிஷாவின் முகத்தில் நீ பூசிவிடு! என்று அன்னை ஸவ்தாவுக்கும் வாய்ப்பளித்தார்கள். சற்று நேரத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் முகம் 'உணவுமுகமாக' மாறவே மீண்டும் மனைவியைப் பார்த்து நகைக்கத் தொடங்கிவிட்டார்கள் நபிகளார் அவர்கள்.

இவ்வாறு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வாழ்வு, மாறா அன்பின் பிறப்பிடமான மகிமை  நபி (ஸல்) அவர்களோடு மிக்க மகிழ்வுடன் இருந்தது. மிகச் சிறப்பாகவும் இருந்தது!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், தங்களின் தனிச்சிறப்புப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

நான் ஒருத்தியே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மணமுடித்ததில் கன்னிப் பெண்ணாவேன். என் பெற்றோரைவிட, வேறு யார் பெற்றோரும் இஸ்லாத்திற்காக 'ஹிஜ்ரத்' செய்யவில்லை. என்மீது அவதூறு சுமத்தப்பட்டபோது, என் தூய்மையை அல்லாஹ் (ஜல்) வஹீ மூலம் அறிவித்தான். (9)

என்னை மணமுடிக்குமுன் நான் அல்லாஹ்வின் தூதருக்குக் கனவில் காட்டப் பட்டேன். நானும் அண்ணல் நபியவர்களும் ஒரே தொட்டியில் குளித்துள்ளோம்.

நபிகளார் தொழும்போது அவர்கள் மனைவியரில் என்னை மட்டுமே உறங்க அனுமதித்தனர். என்னுடன் தங்கும்போது அண்ணல் நபியவர்களுக்கு வஹீ வருவது வழக்கமாக இருந்தது. என் நெஞ்சில் தலைவைத்தே அண்ணலார் உயிர் நீத்தனர்.

அன்று அவர்கள் என்னுடன் வாழும் தவணை நாளாகவே இருந்தது. அவர்கள் என்னுடைய இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

நம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறங்கிக் கொண்டிருந்தபோது, தமது படுக்கையில் சிரிக்கலானார்கள். பின்னர் விழித்தெழுந்தபோது நான், 'அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் உறங்கும்போது ஏன் சிரித்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு முத்திரைத்தூதர்  அவர்கள் 'என் சமூகத்தினர் சிலர் இறையில்லம் ஹரமில் தஞ்சம் புகுந்துள்ள குறைஷியரில் ஒருவருக்காக, இறையில்லம் நோக்கி படையெடுத்து வருவார்கள். அவர்கள் 'பைதா' எனும் சமவெளியை அடையும்போது பூமிக்குள் புதைந்து போவார்கள்.

புதைந்த அவர்கள் பிற்பாடு பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாக எழுப்பப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப அல்லாஹ் (ஜல்) மறுமையில் அவர்களை எழுப்புவான். இந்தக் காட்சியைக் கண்டுதான் நான் சிரித்தேன் என்றார்கள்.

நான், "அல்லாஹ்வின் நபியே! பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாக வந்திருக்கும் நிலையில், அவர்களின் எண்ணங்களுக்கேற்ப மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் எவ்வாறு மறுமையில் எழுப்புவான்?" என்று கேட்டேன்.

அதற்கு வையகம் போற்றும் அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் "பார்வையாளர்கள், வழிப்போக்கர்கள், நிர்ப்பந்தமாக அழைத்து வரப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் சாலையில் திரண்டிருப்பர். அவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அழிந்து போவர். பின்னர், அவர்கள் அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப எழுப்பப் படுவார்கள்." என்று பதிலளித்தார்கள். (10)

ஒருமுறை ஒருசிலர் அன்னையை சந்திக்க வந்தனர். உம்முல் முஃமினீன் அவர்களே, அண்ணலாரின் பண்பு நலன்களைப்பற்றி சற்று எங்களுக்குச் சொல்லுங்களேன் என்றார்கள்.

"நீங்கள் குர்ஆனை வாசிப்பதில்லையா? குர்ஆன் தான் மாசிலா மாமணியான மாண்பு நபியின்  ஒட்டுமொத்தப் பண்பு நலனாகத்திகழ்ந்தது' என்று பதிலளித்தார்கள்.

வேகவேகமாகக் குர்ஆனை வாசித்து முடித்துவிடுவதுதான் சிறந்தது. நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது என்று சிலர் ஒரே இரவில் குர்ஆனை  ஓதி முடிக்கிறார்களே அன்னையே! என்ற கேள்விக்கு;

"அவர்கள் ஓதுவதும் ஒன்றுதான். ஓதாமல் இருப்பதும் ஒன்றுதான்!" இரவு முழுவதும் சாந்திநபி (ஸல்) அவர்கள்  நின்று தொழுது இருக்கிறார்கள். பார்த்தால், அல் பகரா, அந் நிஸா, ஆலு இம்ரான் அத்தியாயங்களைத் தவிர வேறு எதையும் ஓதி இருக்க மாட்டார்கள். நற்செய்தி தாங்கிய வசனங்கள் வந்தால் திரும்பத் திரும்ப அதனையே ஓதுவார்கள். அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். இறைவேதனை, இறை சாபம் சுமந்த வசனங்களைக் கண்டால் இறைவனிடம் பாதுகாவல் தேடுவார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள் (11)

இறைவேதத்திற்கு உரை அளிக்கக்கூடிய தகுதியும் இறைத்தூதரின் நடைமுறையை விளக்கும் ஆற்றலும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களைப் போதிக்கும் தீர்க்கமான அறிவும் பெற்ற திறமையாளராய் மிளிர்ந்த ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணலாரின் மறைவுக்குப் பிறகு மீதி 46 ஆண்டுகள் மக்களுக்கு மார்க்க வழிகாட்டுதலிலேயே கழித்து அவர்தம் 67ஆம் வயதில் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

(ஆனால், அந்நாளில் தன் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும் அவன் உன் மீது திருப்தி அடைந்த நிலையிலும் நீ மீளுவாயாக! நீ என் நல்லடியார்களுள் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (அல் குர் ஆன் 89:27)

o o o 0 o o o

ஆதாரங்கள்:
(1) புகாரி 3662
(2) மனாகிப் ஆயிஷா
(3) புகாரி 5125
(4) அபூதாவூத் 4284
(5) தஹ்தீப் தாரிக் திமிஷ்க்
(6) புகாரி 1928
(7) முஸ்தத்ரக் ஹாக்கிம்
(8) புகாரி 950
(9) அல்-குர்ஆன் 24:4-26
(10) முஸ்னத் அஹ்மத் 23595
(11) முஸ்னத் அஹ்மத்

இக்பால் M.ஸாலிஹ்

5 Responses So Far:

sabeer.abushahruk said...

இக்பால்,

ஓரளவு அறிந்தத் தகவல்களைப் பேரழகு படுத்துகிறாய் உன் பூவழகு எழுத்தாலே. கலிஃபோர்னியக் காற்று உன் கனிமொழித் தோரணையில் கைவைத்துவிடவில்லை என்பது ஆறுதலாயிருக்கிறது.

மீள்பதிவு என்றார்கள்; இதுவோ இரண்டாம் பதிப்பாக மெருகேற்றப்பட்டிருப்பதுபோல் ஜொலிக்கிறதே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பு கவிக் காக்கா:

இது மீள்பதிவாக இருக்காது, மெருகேற்றப்பட்டு அழகிய தமிழில் மெல்லிய இழையோடு புன்னகை இதயத்தில் ஏற்படுத்தும் பரவசத் தொடர் இன்ஷா அல்லாஹ் !

Anonymous said...

கண்மணி நபி ஸல்.. அவர்கள் தமது மனைவியரிடையே வைத்திருந்த அளப்பரிய காதலின் சிறுதுளியைச் சொல்லும் இப்பதிவு, ,மனைவியை நேசிக்கும் காதலர்களுக்கு உண்மையான பரிசு!

(இக்பால் காக்காவின் வாலன்டைன் டே ஸ்பெஷல் பதிவா? ;)

N.>ஜமாலுத்தீன்

Iqbal M. Salih said...

இன்ஷா அல்லாஹ், இயன்றவரை திருத்தம் செய்து அனுப்ப இருக்கிறேன் சபீர்.
தம்பி அபுஇபுறாஹீம் அவர்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

சகோ.அதிரைக்காரனின் பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி! தங்களின் 'எது பெண்ணுரிமை' போன்ற எக்ஸ்ப்ரஸ் எழுத்துகளை எங்களால் மீண்டும் காணமுடியவில்லயே ஏன்? முன்பு அ.நி.யில் 'ஈன்றபொழுதினும் பெரிதுவக்கும்' படங்களுடன் அருமையாக இருந்தது! மறுபடியும் அதுபோல் நிறைய எழுதுங்கள் தம்பி.

பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ் said...

சமரசம் என்னும் மாத இதழில் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றினை கவிதை நடையில் நான் எழுதி இரண்டு ஆண்டுகளாக தொடராக வெளிவந்த ' வையகம் போற்றும் நாயகம்' என்னும் தொடரினை அமோசான் கிண்டில் இணைய தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது

இதை பகிர்ந்து இம்மின்னூலை பிரபலப் படுத்த உதவுங்கள்.

இஸ்லாமியர்கள் மட்டும் படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இந்நூலுக்கு இல்லை.

தமிழின் மாட்சியும், நுட்பத்தையும் சுவைக்க விரும்பும் எவரும் இந்நூலைப் படிக்கலாம். படித்து களிக்கலாம்.

இதி எதை டைப் செய்து அமோசான் கிண்டிலில் தேடினாலும் இந்த மின்னூல் முதலில் வந்து நிற்கும் : Tamil islamic Book, Tamil Islamic poetry, Nabigal nayagam, வையகம் போற்றும் நாயகம், நபிகள் நாயகம் .

அல்லது இந்த லிங்கில் வேண்டுமானாலும் செல்லலாம்.

மின்னூலை அமோசான் கிண்டிலில் படிக்க லிங்கை இந்த பதிவில் இணைத்திருக்கிறேன்.

- பா. சுப்ரமண்யம்..

https://www.amazon.in/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-ebook/dp/B07QHJQX41/ref=sr_1_fkmrnull_1?keywords=tamil+islamic+poetry&qid=1554702380&s=books&sr=1-1-fkmrnull&fbclid=IwAR07AWjJc2ir6-PoN5MAM6mUJsKOrpCTzKxKCjnfmDDJElsmpCzYdaT9fac

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு