:::: தொடர் : 10 ::::
தமது பிரச்சாரத்தால் மக்கத்து மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வெற்றி காண முடியாத நிலையில், அண்ணல் நபியவர்கள் அடுத்துள்ள தாயிஃப் நகருக்குச் செல்கிறார்கள். ‘பனூ தகீஃப்’ பெருங்குலத்தின் வசிப்பிடம் அதுதான். அவர்களாவது தம் தூதுச் செய்தியைக் கேட்டு, மக்கத்துக் குறைஷியருக்கு உணர்த்தட்டும் என்பதே அண்ணல் நபியின் ஆவலாக இருந்தது.
ஆனால் அவர்களோ, குறைஷிகளைவிட மிக மோசமானவர்களாக இருந்தனர்! தமது பாரம்பரியத்துக்கு முரணாக நடந்துகொண்டனர்! புதிதாக வரும் விருந்தினர்களை உபசரிக்கும் அவர்களின் நற்பழக்கத்திற்கு மாற்றமாக, நபியிடம் ஈவிரக்கமின்றி நடந்துகொண்டனர்!
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் வளர்ப்பு மகன் ஜெய்த் இப்னு ஹாரிதாவை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு தாயிஃபுக்குச் சென்றார்கள். ‘பனூ தகீஃப்’ குலத் தலைவர்கள் மூவரைச் சந்தித்து, இறைவன் தமக்குத் தந்த தூதுச் செய்தியை அவர்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். அவர்களாவது கேட்கட்டுமே என்ற ஆதங்கம். மக்காவிலிருந்து மலை ஏறி வந்த முஹம்மத் (ஸல்) அவர்களை, குறைந்த பட்சம், கண்ணியப் படுத்தலாமே என்ற உணர்வின்றியும், தமது குலத்திற்கே இழிவை உண்டாக்கும் விதத்திலும், முரட்டுத் தனமாக நடந்துகொண்டனர்! இது வரலாற்றுப் பக்கங்களில், இறுதி நாள்வரை பதியப்பட்ட ஒன்றாகிவிட்டது.
பல ஆண்டுகளின் பின் முஸ்லிம்கள் தாயிஃப் நகரத்தை வென்றெடுத்தபோது, ‘தகீஃப்’ கிளையினர் வெட்கித் தலை குனிந்தவர்களாக நபியவர்களின் முன் நின்றார்கள். தோல்வியில் துவண்டவர்களாக, தம் செல்வங்கள் அனைத்தையும் இழந்து, கேவலப்பட்டு நின்றார்கள். தன் தூதர்களை வதை செய்தவர்களை இதுபோல் அல்லாஹ் தண்டிக்காமல் விடமாட்டான்.
நபியவர்கள் தம்மை இழிவு படுத்தித் துரத்திய தாயிஃபின் மூன்று சகோதரர்களை மீண்டும் சந்திக்க விழைந்தார்கள். அவர்களுள் இருவர் நபியைச் சந்தித்தார்கள். மூன்றாமவர் சந்திக்க மறுத்துவிட்டார். முதலாமவர் சொன்னார்: “உண்மையிலேயே அல்லாஹ் உம்மைத் தூதராக அனுப்பியிருந்தால், நான் மக்கத்துக் கஅபாவின் போர்வையைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவேன்.”
இரண்டாமவர் சொன்னார்: “நபியாக அனுப்புவதற்கு உம்மைவிட உம்முடைய அல்லாஹ்வுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா?”
மூன்றாமவன், நபியவர்களைச் சந்திக்கக் கூட மறுத்து, “நான் உம்முடன் பேசத் தகுதியற்றவன். காரணம், உண்மையில் நீர் நபியாக இருந்தால், உம்முடன் நான் பேசுவதற்குத் தகுதியற்றவன். அவ்வாறன்றி, நீர் நபியாக இல்லாமல் பொய்யராக இருந்தால், பொய்யர்களை நான் சந்திக்க மாட்டேன்” என்று ஏளனமாகக் கூறியனுப்பினான்.
தமது முயற்சியில் ஏமாற்றமே ஏற்பட்டதை உணர்ந்த பெருமானார் (ஸல்), இறுதியாக ஒன்றைக் கூறினார்கள்: “எனது வேண்டுகோளை நீங்கள் ஏற்காவிட்டாலும், நமது இந்த உரையாடல் நமக்குள்ளேயே இருக்கட்டும். வேறு எவரிடமும் சொல்லாதீர்கள்.”
உடன்படுவார்களா அந்த உன்மத்தர்கள்? அடுத்த நிமிடமே தம் பணியாளர்களிடமும் அடிமைகளிடமும் ஊதிவிட்டார்கள். அந்தக் கூலிப்படைக்குக் கிடைத்தது நல்வாய்ப்பு. நபியை நையப் புடைத்துவிட்டார்கள், சொல்லடியாலும் கல்லடியாலும்! தாயிஃபின் எல்லைவரை விரட்டிக்கொண்டு வந்து, மக்காவுக்குச் செல்லும் பாதையில் விரைந்து திரும்பிப் போக வைத்தார்கள்!
நினைத்துப் பாருங்கள்! மக்காவின் செல்வாக்கு மிக்கக் குறைஷிக் குடும்பத்துச் செல்வரான முஹம்மதை இத்துணை வேதனைப் படுத்தலாமா? மனிதாபிமானம் செத்துப் போய்விட்டது! வணங்குதற்குத் தகுதியான ஒருவன் அல்லாஹ் மட்டுமே என்ற செய்தியைத்தான் அவர்களிடம் சொல்லி, அவர்களை நரக நெருப்பை விட்டுக் காப்பாற்ற வந்தவரை அடித்துத் துரத்தச் செய்தார்கள் அந்த மாபாதகர்கள்!
சுவனத்தையும் புவனத்தையும் படைத்த இரட்சகன் இக்கொடுமையைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்! இருப்பினும், இது போன்ற சோதனைகள் தன் அன்பு அடியாருக்கு - இறுதித் தூதருக்கு நிகழும் என்பது அவனுடைய ஏற்பாடு! இந்த ஏற்பாடு, உலகம் உள்ளளவும் வரும் மனிதச் சமுதாயத்திற்கு அந்த இறைத்தூதர் மூலம் கிடைக்கும் பாடம் என்பதைப் பறைசாற்றுவதற்காக. இது, பொறுப்பற்று வாழ்ந்த ஒரு சமுதாயம், நேர்மைக்கு முன்பாக, நீதிக்குப் புறம்பாக எதையெல்லாம் கட்டவிழ்த்து விடும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக! பொறுப்பைச் சுமந்த தலைவர், இது போன்ற சோதனைகள் ஏற்படும்போது, எஃகு போன்ற இதயத்துடன் பொறுமை காக்கவேண்டும் என்பதை விளக்குவதற்காக! நபி வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு ஏற்படும் சோதனையும் வேதனையும் குறைந்தவையே என்ற பாடம் புகட்டுவதற்காக இறைவன் ஏற்படுத்திய உண்மை நிகழ்வு இது!
முடிவில், முஹம்மத் (ஸல்) அவர்களும் ஜைதும், மக்கத்துத் தலைவர்கள் இருவருக்குச் சொந்தமான திராட்சைப் பழத் தோட்டம் ஒன்றில் புகுந்து அடைக்கலமானார்கள். அந்த நேரத்தில், தோட்டச் சொந்தக்காரர்கள் அங்கே வந்திருந்தனர். இறைத்தூதரின் பரிதாப நிலையைக் கண்டு, தம் அடிமையான அத்தாஸ் என்ற கிருஸ்தவரிடம் கொஞ்சம் திராட்சையும் தண்ணீரும் கொடுத்தனுப்பினார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும், முஹம்மது தமது எதிரி என்று. எனினும், அரபுகளின் விருந்தோம்பல் பண்பை நிலைநாட்டுவதற்காகவே அவ்வாறு செய்தார்கள்.
அடிமை அத்தாஸ் கொண்டுவந்த திராட்சைக் குலையைப் பெற்றவுடன், ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறிப் பழத்தைத் தின்னத் தொடங்கினார்கள் அந்த மக்கத்து மாணிக்கம். அத்தாஸுக்கோ வியப்பு! ‘இந்தப் பகுதி மக்கள் அவ்வாறு மொழிவதைக் கண்டதில்லையே?’ என்று வியந்து விளக்கம் கேட்டு நின்றார் அத்தாஸ். “நீ எந்த நாட்டவன்? உன் மார்க்கம் எது?” என்று கேட்டார்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள். “இராக்கில் உள்ள ‘நைனவா’ என்ற ஊரைச் சேர்ந்த கிருஸ்தவன் நான்” என்று விடையளித்தார் அந்த அடிமை.
“அப்படியானால், எனக்கு முன் வந்து சென்ற இறைத்தூதரும் என் சகோதரருமான யூனுஸ் பின் மத்தாவின் ஊரைச் சேர்ந்தவனா?” இது நபியவர்களின் கேள்வி.
“யூனுஸ் பின் மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வியந்து கேட்டார் அத்தாஸ்.
“அவர் என் சகோதரத் தூதர். அவரும் நபி, நானும் நபி என்ற முறையில், அவர் எனக்குச் சகோதரர்தானே?” என்று விடையளித்தார்கள் முஹம்மத் (ஸல்).
இறைவன், தான் நாடியவர்களை நேர்வழியில் நடாத்துகின்றான். உண்மையை நேர்மையுடன் ஏற்றுக்கொண்டவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதி இதுதான். இதை நபியவர்களின் வாயிலாகக் கேட்டவுடன், அத்தாஸ் குணிந்து, நபியவர்களின் கை, கால், நெற்றி ஆகியவற்றை முத்தமிட்டார். இந்த நிகழ்வைப் பார்த்துவிட்டான் அத்தாஸின் எஜமான். தன் சகோதரனிடம், “இதோ பார்! அந்த ஆள், நம் அடிமையையும் கெடுத்துவிட்டான்; இவன் முஹம்மதின் புதிய மதத்தில் இணைந்துவிட்டான்!” என்றான்.
அத்தாஸ் தன் எஜமானர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் கேட்டார்கள்: “நீ ஏன் அந்த ஆளின் கைகளையும் கால்களையும் தலையையும் முத்தமிட்டாய்?”
“இந்த நிலப் பரப்பில் அவரைவிடச் சிறந்தவர்கள் வேறு யாருமில்லை. நபி ஒருவரைத் தவிர வேறு யாரும் சொல்லாத செய்தியை அவர் சொன்னார். அதனால்தான் முத்தமிட்டேன்” என்று அந்த அடிமை மறுமொழி பகர்ந்தார்.
தம் குரலைக் கடுமையாக்கிக்கொண்டு அந்த எஜமானர்கள், “அட பைத்தியக்காரா! உனது மார்க்கம், அவருடைய மார்க்கத்தைவிட உயர்ந்தது என்பது தெரியாதா உனக்கு? அந்த ஆள் உன்னைக் கெடுத்துவிடாமல் இருக்கட்டும்” என எச்சரித்தனர். வியப்பிற்குரியது என்னவென்றால், அந்த இணை வைப்பாளர்களுக்குக் கிருஸ்தவ மதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில், தம் அடிமையை அவனது மார்க்கத்தை விட்டு மாறாமல் இருக்கும்படி அறிவுறுத்தினர்! அவர் இஸ்லாத்தைத் தழுவாமல் இருக்கட்டும் என்றும் அறிவுறுத்தினர்.
விரோத மனப்பான்மை என்பது, அனைத்து நன்மைகளையும் மறக்கடித்துவிடுகின்றது. காரணம், தாம் எதிர்க்கக்கூடியவரின் வாய்மொழியாக அது வருகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அப்போதைய நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! தாயிஃப் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பதில் அவர்களுக்குப் பெரும் தோல்விதான். மக்காவிலாவது அவர்கள் சில நல்ல உள்ளங்களை வென்றெடுத்திருந்தார்கள். இப்போது தாயிஃபில் கல்லடியும் சொல்லடியும் கிடைத்த நிலையில், அன்னாரின் மனோநிலை எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கும்? அந்தத் தருணத்திலும், தமது தலையைத் தரையில் வைத்து, இறைவனிடம் இறைஞ்சியுள்ளார்கள்! அந்த இறைஞ்சல், நபி வரலாற்றில் மாறாத பதிவாக இடம்பெற்றுள்ளதல்லவா?
அது, இதுதான்: “யா அல்லாஹ்! இந்த மக்களுக்கு நீ அருளிய உண்மை மார்க்கத்தை எடுத்துரைப்பதில் என்னிடம் இருக்கும் இயலாமையை, போதிய அறிவின்மையை, நான் இவர்களால் மிகவும் கேவலப் படுத்தப்பட்டதை உன்னிடம் முறைப்பாடு செய்கின்றேன். அருளாளர்களுக்கெல்லாம் மேலான அருளாளனே! என்னுடையவும், என்னைப் போன்ற பலருடையவும் இரட்சகனே! நீ எவர்களிடத்தில் என்னை ஒப்படைத்துள்ளாய்? வெறுப்புடன் எதிர்கொள்ளும் கூட்டத்தினரிடமா? அல்லது, என் மீது ஆளுகை செலுத்தும் உன் எதிரியிடமா? என் மீது நீ வெறுப்படையாமல் இருக்கும்வரை, எனக்குக் கவலையில்லை. உன் பரந்த ஆதரவு எனக்கு ஆறுதல் தரக்கூடியதாகும். உனது ஒளிரும் முகத்தின் மீது ஆதரவு வைத்து, உன்னிடம் அடைக்கலம் தேடுகின்றேன். அதன் மூலம் பாவமென்னும் இருள் நீங்கி, ஒளி பரவுகின்றது. இந்த நம்பிக்கை இல்லாவிட்டால், உனது கோபத்துக்கும் வெறுப்புக்கும் நான் ஆளாகிவிடுவேன். உனது மகிழ்வும் ஆறுதலும் எனக்குத் தேவை. உனது வலிமையைவிடவும் வேறு வலிமை ஒன்றும் கிடையாது.”
அல்லாஹ் தன் அருமைத் தூதரின் இறைஞ்சலைச் செவிமடுத்தான். அதையடுத்துத் தன் வானவர் தலைவரான ஜிப்ரீலை நபியின் உதவிக்காக அனுப்பினான். நபியவர்களிடம் மலைகளுக்கு அதிபதியான இன்னொரு வானவருடன் ஜிப்ரீல் வந்தார். ஜிப்ரீல் பேசினார்: “நபியே! அல்லாஹ் உங்கள் இறைஞ்சலைச் செவிமடுத்தான். இந்த வானவரை உங்களின் ஏவலுக்காகக் காத்திருக்குமாறு என்னுடன் அழைத்துவரப் பணித்தான். நீங்கள் ஆணையிட்டால், உங்களின் ஆணையை நிறைவேற்றுவார் இவர்.”
இதையடுத்து, உடன்வந்த அமரர் பேசினார்: “இறைத்தூதர் அவர்களே! நான் மலைகளுக்கெல்லாம் அதிபதியாவேன். உங்கள் இரட்சகன் அல்லாஹ் என்னை உங்களின் கட்டளைக்காகக் காத்திருக்குமாறு அனுப்பிவைத்துள்ளான். ஆணையிடுங்கள்! தாயிஃபின் இரு பக்கங்களிலும் இருக்கும் இந்த இரண்டு மலைகளையும் ஒன்றோடொன்று மோதச் செய்து, உங்களைப் புண் படுத்திய இந்த மக்களை நசுக்கிவிடக் கட்டளையிடுங்கள். அதனால் அவர்கள் இப்புவியிலிருந்து அழிந்துவிடுவார்கள்.”
“மக்களை அழிப்பதற்காக என்னுடைய இரட்சகன் என்னை உலகிற்கு அனுப்பவில்லை. மாறாக, அவனை மகிழ்வுறச் செய்வதன் பக்கம் அவர்களை அழைப்பு விடுக்கத்தான் என்னை அனுப்பினான். ஒரு வேளை, இந்த மக்கள் எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இவர்களின் சந்ததிகளாவது ஏற்றுக்கொள்வார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” என்று கருணை நபியவர்கள் மறுமொழி கூறினார்கள். இவர்தான், இந்த இரக்கமும் கருணையும் உள்ள தூதர்தான், அனைத்துலகுக்கும் அரிய முன்மாதிரியானவர்.
மேற்காணும் நிகழ்வில் நமக்குப் பல படிப்பினைகள் உள்ளன. இறைத்தூதர் மீது அவர்களின் தோழர்களுக்கு இருந்த பற்றும் பாசமும் நமக்குக் கிடைக்கும் பாடங்களுள் ஒன்றாகும். நபியின் மீது கல்லடிகள் வந்து விழுந்தபோது, அவர்களை நாலா பக்கங்களிலும் கேடயம் போல் தடுத்துப் பாதுகாத்த ஜெய்து இப்னு ஹாரிதா (ரலி) அவர்களின் நபிப் பற்று!. ரசூலுல்லாஹ்வின் மீது ஒரு கல்லும் படாமல், அனைத்தையும் தம் உடலில் பெற்றுக்கொண்டார் அவர்! பத்ரு, உஹதுப் போர்களின்போது, அம்புகள் நபியின் உடலில் தாக்காமல் இருக்க, அண்ணலாரின் தோழர்கள் தடுப்புகளாக நின்றார்கள். அபூ தல்ஹா அல்-அன்சாரி என்ற தோழர், போரில் நபியை நோக்கி எறியப்பட்ட அம்புகளைத் தமது வலக்கையால் தடுத்து, அந்தக் கையானது பலவாறு சிதைக்கப்பட்டதை மகிழ்வுடன் ஏற்றுள்ளார்கள்! இத்தனை விழுப்புண்களுடன் இவர் எப்படித் தொடர்ந்து போராடினார் என்று மக்கள் வியக்கும் அளவுக்கு அவரின் வீரமும் தியாகமும் இருந்தன அல்லவா?
இன்றும், அது போன்ற நபித்துவப் பாதுகாப்பை நாமும் செய்ய முடியும்! எப்படி? அன்னாரின் ‘சுன்னா’ என்னும் நபிவழியைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம் பெரும் பேற்றை நாமும் அடையலாம். அபூ முஸ்லிம் அல்-கவ்லானி (ரஹ்) என்ற பெரியார் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அன்னாரின் தோழர்கள் மட்டும் பிரியத்துடன் வைத்துக்கொள்ள நாம் அனுமதிப்போம் என்று அவர்கள் நினைத்தார்களா? இறைத்தூதரின் மேன்மைக்காக, அவர்களுடன் நாமும் போட்டியிடுவோம். அந்தப் பேற்றில் நாமும் நமது பங்கை எடுத்துக்கொள்வோம்.”
இன்று நாம் அவர்களின் ‘சுன்னா’ என்ற நபிவழியைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களைப் பெருமைப் படுத்துகின்றோம். அந்த சுன்னாவை எதிர்ப்பவர்களுக்கு வாயாப்புக் கொடுக்கிறோம். நபிப் பற்றுக்கு நாம் செய்யும் எந்தச் செயலும், ஜைது பின் ஹாரிதா அல்லது அபூ தல்ஹா போன்றவர்களின் தியாகத்திற்குச் சமமாகாது. எனினும், அல்லாஹ் தனது மகத்துவத்தாலும் பேரருளினாலும், நமது நபி நேசத்திற்காகச் சிறந்த வெகுமதிகளைத் தருவான் என்று ஆதரவு வைப்போம்.
‘சுன்னா’வின்படி நடப்பதை விடுத்து, ‘அஹாதீஸ்’ என்னும் நபிமொழிகளை விமரிசனம் செய்து, அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் இருப்பது, தாயிஃப் நகரத்து மக்கள் செய்த கொடிய செயலுக்கு ஒப்பாகிவிடும்! இல்லை, அதைவிட மோசமாக்கிவிடும். நாம் யாரைச் சார்ந்து நிற்பது? ‘சஹாபா’ என்ற நபித்தோழர்களையா? அல்லது இறைமறுப்பாளர்களையா? அல்லது ‘முனாஃபிக்’ என்ற நயவஞ்சகர்களையா? சொர்க்கவாசிகளையா? நரகவாதிகளையா?
தாயிஃபில் நபியவர்களின் ‘துஆ’ என்னும் இறைவேட்டலை நோக்கும்போது, அது அன்னாரின் பலவீனம் அல்லது ஆதரவின்மையை நமக்குச் சுட்டிக் காண்பிப்பதைப் பார்க்க முடிகின்றது. தம்மை எதிர்த்தவர்களையும் ஏசியவர்களையும் அவர்கள் சாபமிடவில்லை. தம் போதனைகளை ஏற்காதவர்களை மோசமாகத் திட்டியதுமில்லை. தமது பலவீனத்தை வெளிப்படுத்தி, தமக்கு ஆற்றலையும் இறையுதவியையும்தான் அல்லாஹ்விடம் கேட்டார்கள். எதுவரை அல்லாஹ்வின் அருள் அவர்களுக்கு இருக்குமோ, அதுவரை உலக மக்களின் எதிர்வாதத்தைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை எனக் கூறுகின்றார்கள். அல்லாஹ்வின் பொருத்தம் இல்லாவிட்டால், அந்த இரட்சகன் அவரைப் பொருந்திக்கொள்ளும்வரை, அவன் வகுத்துக் கொடுத்த கடமைகளைச் செய்துகொண்டே இருப்பார்கள்.
ஒருவர் தனது நல்ல குறிக்கோளில் முனைப்புடன் இருந்து செயலாற்றும்போது, அவருக்கு ஆதரவு கிட்டாமல், எதிர்ப்பு மட்டுமே எதிர்நோக்கி வந்துகொண்டிருந்தால், அது மிக மோசமான சூழலை உருவாக்கும் அல்லவா? அத்தகைய ஆதரவின்மையும் எதிர்ப்பும், வேண்டாத மோதல்களையும் உளப் போராட்டத்தையும் உருவாக்கும் அல்லவா? ஒருவர் முனைப்புடன் எந்த மக்களிடம் தன் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்கின்றாரோ, அந்த மக்களை ஏற்கச் செய்வதில் தோல்வியைத் தழுவினால், செயல்பாட்டில் பின்னடைவு ஏற்படத்தான் செய்யும். ஆனால், தலைவருக்குத் தான் செய்யும் இறைப்பணியில் தளராத நம்பிக்கையும், நேர்மைக்குக் கிடைக்கும் இறுதி வெற்றியும் உறுதியாக இருக்கும்போது ஏற்படும் எதிர்ப்புச் சூழல்தான் அவருக்குச் சோதனைக் களமாகும். அந்தச் சூழலில்தான், தனக்குப் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் தருமாறு, அப்பொறுப்பைத் தந்த இறைவனின் உதவியை நாடி இறைஞ்சல் வேண்டும்.
தாயிஃப் நிகழ்வைப் பொருத்தவரை, நபியவர்களுக்கு அது ஒரு பின்னடைவில்லை; நம்பிக்கை இழப்புமன்று. மாறாக, நபி (ஸல்) அவர்களுக்குப் புத்துணர்ச்சியையும் மீள்பார்வையையும் ஏற்படுத்திற்று. ஆனால், அந்த நிகழ்வின் பின்னர், சூழ்நிலை மேலும் மோசமானதாயிற்று. அண்ணலாருக்கு ஆதரவாகவும் அரவணைப்பாகவும் இருந்த அபூதாலிபும், அருமை மனைவி கதீஜாவும் அடுத்தடுத்து இறந்துவிட்ட அவல நிலை! அவர்களின் பிரச்சாரப் பணி, அவர்களின் நண்பர்கள், மக்காவாகிய பிறந்தகத்தில் அவர்களின் வாழ்க்கை, ஆகியவற்றுக்குப் பெரிய கேள்விக் குறியாக மாறிற்று. எனினும், எல்லாப் பாதகமான சூழல்களையும் தாண்டி, நபியவர்கள் இறை மார்க்கத்தை எடுத்துரைக்கும் பணியை மட்டும் தொய்வின்றித் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். பலதெய்வக் கொள்கையில் மூழ்கிப் போனவர்களுக்கும், தமது இறைநெறிச் செய்தியைச் செவி மடுக்காமல் ஒதுங்கி நின்றோருக்கும், தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதில் அவர்கள் எப்போதும் எந்தக் குறைவும் வைக்கவில்லை; நம்பிக்கை இழந்து மனத் தளர்வும் கொள்ளவில்லை.
தாயிஃப் நகரத்தில் வைத்துக் கேட்ட அந்த இறைவேட்டல், ஒரு கூட்டத்தையோ, ஒரு சமூகத்தையோ வழி நடாத்த விழையும் அனைவருக்கும் ஓர் ஒப்பற்ற படிப்பினையாகும்; வழிகாட்டல் ஆகும். நபியவர்களை வதை செய்து விரட்டியடித்த தாயிஃப் மக்களை நபியவர்கள் சபிக்கவில்லை! மாறாக, தமது தூய பணியில் தமக்கு இன்னும் வலுவான ஆற்றலைத் தருமாறு இறைஞ்சினார்கள். உள்ளத்து உணர்வுகளை வலிமைப் படுத்தி, தம் இறைவனை மகிழ்விக்கும்வரை, அப்பணியில் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். தளராத ஊக்கத்தையும், எப்படிப்பட்ட எதிர்ப்பையும் முறியடித்து முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலையும் வேண்டினார்கள். இந்தப் பக்குவம்தான், ஒரு சமூகத்தை வழி நடத்த விழையும் இன்றையத் தலைவர்களுக்கும் தேவையான ஒரு முன்மாதிரியாகும். வழியில் தடைக் கற்கள் குவிந்தாலும், அதைவிடக் கூடுதலாகத் தமது பொறுப்பை உணர்ந்து, புத்துணர்வுடன் செயல்படும் தன்மையும் இன்றையத் தலைமைக்கும் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை எடுத்துக் காட்டினார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.
நீங்கள் உண்மையை மெதுவாக எடுத்துரைக்கும்போது உண்டாகும் சிறு எதிர்ப்பு, உங்கள் செயல்பாடு சரியில்லை என்பதற்குச் சான்றாகிறது. உண்மையை உரத்துக் கூறும்போதுதான் எதிர்ப்பும் வலுக்கும். எதிர்ப்பின் அடியானது உங்கள் முதுகந்தண்டை ஒடிக்காமல் இருந்தால், உங்கள் வலிமை கூடுகின்றது என்பதற்கான அடையாளமாகும்.
மக்கள் தமது செயல்பாட்டில் தோல்வியைச் சந்திக்கும்போது ஏற்படும் நிலைகளில் கீழ்க்காணும் மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன:
- தனிமை. கடல் அலைகள் போன்ற வெறுப்பும் எதிர்ப்பும், இயல்பாக ஒருவரைச் செயலிழக்கச் செய்யும்!
- மனச் சோர்வு. வசைமொழிகளாலும் தாக்குதல்களாலும் தளர்ந்து போய், தனிமைச் சூழலை நாடுதல்.
- நோக்கத்தை மறந்துபோதல். தலைமைத்துவத்தை மறந்து, திசையறியாமல் தட்டுத் தடுமாறி நிற்றல்.
- அழிக்கப் படுவோம் என்ற அச்சம். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எவருடைய பின்னாலும் மறைந்து நிற்றல்.
இது போன்ற தருணங்களில்தான், நாம் எதிரிகளால் முற்றுகை இடப்பட்டுள்ளோம் என்ற நிலையில், நமது பேச்சிலும் எழுத்திலும் செயல்பாட்டிலும் முஸ்லிம் சமுதாயம் அடங்கிக் கிடக்கின்றது. எதிரிகளால் முற்றுகை இடப்பட்டவர்கள் இரண்டு விதங்களில் இயங்குகின்றனர்: ஒன்று, தாழ்மைப்பட்டுத் தம்மையே குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். அல்லது, எதிரிகளைக் கண்டு, என்ன செய்வதென்றே அறியாமல், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய படுநாசச் சூழலில் எவ்வாறு உயிர் வாழ்வது என்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன:
நம்பிக்கையை இழக்காமல், முரட்டுச் சூழலை எதிர்கொள்வது.
என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஆய்ந்து, அந்தக் குழப்பத்திலிருந்து விடுபடும் வழிகளைக் கண்டுபிடிப்பது.
கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் சிறைக் கைதிகளின் நிலைகளைப் பற்றிய ஆய்வு செய்தபோது, கற்பனையாக அவர்களுக்குச் சொல்லப்பட்ட ஆசை வார்த்தைகளால் கவரப்பட்டு, போரில் தம் உயிரை இழக்காமல் தப்பித்தவர்களே அவர்கள் என்பது நிரூபணமாயிற்று. சிக்கலான போர் நேரத்தில் அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தனிப்படை ஒன்று தயாராயிருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லப்படவில்லை. அல்லது, ஒரு தெய்வீக மீட்பர் வருவார் என்பதும் சொல்லப்படவில்லை. அவர்களைப் பிடித்து வைத்திருக்கும் எதிரிப் படையினர் மனம் மாறி, அவர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வர் என்பதையும், அவர்கள் கற்பனை செய்தும் பார்க்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், அவர்கள் தம்மைத் தாமே முட்டாள்களாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தமக்குள்ளே சொல்லிக்கொள்வார்கள்: “நாங்கள் படுபயங்கரமான ஆபத்தில் உள்ளோம். நாம் பிழைப்பது சந்தேகம். இந்த இந்தக் காரணங்களால்தான் நாம் இங்கே அடைபட்டுள்ளோம்; இன்னின்ன காரணங்களால்தான் நாம் எதிரிகளால் கொலையும் செய்யப்படுவோம்.” அவர்கள் எதைப் பற்றியும் முறையீடு செய்வதில்லை; அவர்களைப் பிடித்து வைத்திருப்போரிடம் தம் குறைகளைச் சொல்வதில்லை. தம்மைத் தாமே நொந்துகொண்டும் சபித்துக்கொண்டும் இருப்பார்கள்.
அதிரை அஹ்மது
1 Responses So Far:
//இன்றும், அது போன்ற நபித்துவப் பாதுகாப்பை நாமும் செய்ய முடியும்! எப்படி? அன்னாரின் ‘சுன்னா’ என்னும் நபிவழியைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம் பெரும் பேற்றை நாமும் அடையலாம்.//
இன்ஷா அல்லாஹ் அதற்குண்டானத் தகுதியான ஈமனையும் இக்லாஸையும் அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாகவும், ஆமீன்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
Post a Comment