Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தூதுச் செய்தியின் மீது உறுதியான நம்பிக்கை 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2015 | ,

::::: தொடர் - 12 :::::

பெருமானார் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரையில், தமக்கு இறைச் செய்தி வந்துகொண்டிருந்ததை உறுதியாக நம்பினார்கள்.  அதில் உண்மை இருந்ததை உணர்ந்தார்கள்.  தமக்குத் தூதுச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்த அல்லாஹ்வை முழுமையாக நம்பினார்கள்.  அந்தத் தூதுச் செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்கவேண்டும் என்ற தமது கடமையை உணர்ந்தார்கள். 

இதோ, நான் சொல்லப் போகும் நிகழ்வை உங்கள் உள்ளங்களில் படம் பிடித்துப் பாருங்கள்:

ஒரு நாள், அண்ணலார் (ஸல்) அவர்கள் கஅபாவின் அருகில் இருக்கும் ‘சஃபா’ மலை மீது ஏறி, சூழ இருந்த மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், “வா ஸபாஹா!” என்று உரக்கக் கூவினார்கள்.  இதைக் கேட்ட மக்கள், அருகில் இருக்கும் கஅபாவிலிருந்தும் கடை வீதியிலிருந்தும் வந்து அந்த மலையடிவாரத்தில் ஒன்றுகூடினார்கள்.  யாரேனும் அவ்வாறு கூவும்போது மக்கத்து மக்கள் விரைந்து வந்து, அவர் கூற விரும்பும் செய்தியைக் கேட்பது அன்றைய வழக்கம் என்பதால் மட்டுமில்லை;  கூவியவர் உண்மையாளரும் நம்பிக்கைக்குரியவருமான முஹம்மத் (ஸல்) அவர்கள் (அஸ்ஸாதிகுல் அமீன்) என்பதால்.  இந்தப் பட்டம், அவர்களின் இளமை முதல் மக்கத்துக் குறைஷிகள் தம் செல்லப் பிள்ளைக்குக் கொடுத்திருந்ததாகும்.  எனவே, அத்தகையவர் அவ்வாறு கூவினார் என்றால், அது முக்கியமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.  அப்படி வந்தவர்கள் அனைவரும் அம்மலை அடிவாரத்தில் வந்து கூடினார்கள்.  

இன்றைக்கு நாம் ஹஜ் அல்லது உம்ராவுக்காக மக்காவுக்குச் சென்று ‘சஃயி’ என்னும் வணக்கக் கிரியையை நிறைவேற்றத் தொடங்கும்போது இந்த வரலாற்று நிகழ்வை அசை போட்டுப் பார்க்கவேண்டும்.  அன்று முஹம்மத் (ஸல்) அவர்கள் உரத்துக் குரல் கொடுத்து, மக்களை ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த அதே இடம்தான் இது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

தமது குரலைச் செவிமடுத்து வந்து கூடிய மக்களிடம் இவ்வாறு கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்:

“மக்களே!  இந்த மலைக்குப் பின்னால் உங்களைத் தாக்குவதற்காகப் படை ஒன்று அணிவகுத்து நிற்கின்றது என்று நான் சொன்னால், என்னை நம்புவீர்களா?”

“நீங்கள் ஒருபோதும் பொய் சொல்லியவரில்லை; அதனால், கட்டாயம் நம்புவோம்” என்றனர் அம்மக்கள்.

“அது போன்றே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதை விடுத்துப் பல தெய்வ வணக்கத்தில் நீங்கள் மூழ்கியிருந்தால், மறுமையில் உங்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்ற எச்சரிக்கையை அவர்கள் முன் எடுத்துவைத்தார்கள்.

உடனே, அம்மக்களுள் நபியின் நெருங்கிய உறவினனான அபூலஹப் என்பவன், “இதைச் சொல்லவா நீ எங்களை ஒன்றுகூட்டினாய்?  நீ நாசமாய்ப் போகக் கடவாய்!” என்று சாபமும் கோபமும் ஒன்றிணையக் குரல் கொடுத்தான்!  தன் இரு கைகளால் மண்ணை அள்ளி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது எறிந்தான்!

அபூலஹபைப் பொறுத்தவரை, மறுமையைப் பற்றிப் பேசுவது வீணான செயலே.  அது, அவனுடைய வணிகத்தை விட்டு வெளியில் வரச் சொல்லும்படியான இழப்பிற்குரிய ஒன்றாகும்.  அவனைப் போன்றவர்கள் இந்த உலகைப் பற்றிப் பேசுவதில் மணிக் கணக்காக ஈடுபடுவார்கள். ஆனால், மறுமை பற்றிப் பேசுவது, அவர்களுக்கு வீணான செயலாகும்.  இந்த வகையில்தான், அபூலஹபு தன் சகோதரரின் மகனை வசைமாரி பொழிந்தான்.  ஆனால், வசைமொழியை எதிர்கொண்டவரோ, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.  தன்னுடைய தூதரை இன்னொருவன் திட்டியதை அல்லாஹ் வெறுத்தான்.  ஆகவே, அவனைக் கீழ்க்காணும் இறைவசனங்களால் அல்லாஹ் சபித்தான்:

“அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்!  அவனும் நாசமாகட்டும்!  அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.  விரைவில் அவன் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் புகுவான்.  விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான் (இருக்கும்.  அதனால், அவளும் அழிவாள்.)” (111:1-3)

குர்ஆனிய வசனங்கள் அல்லாஹ்வால் அருளப்பெற்றவை என்பதற்குரிய சான்றுகளுள் இந்த அத்தியாயமும் ஒன்றாகும்.  ஏனெனில், அபூலஹபு இறைமறுப்பிலேயே செத்தொழிவான் என்று இந்த இறைவசனம் முன்னதாகவே உறுதிப் படுத்திவிட்டது!

குர்ஆனைப் பொய்ப்படுத்த அவன் விரும்பியிருந்தால், ஒப்புக்காகவேனும் இஸ்லாத்தைத் தழுவிவிட்டு, பின்னர் இறைமறுப்பாளனாக மாறியிருக்கலாம் அல்லவா? சில ஆண்டுகளின் பின், கொடிய நோயொன்றினால் அவன் பாதிக்கப்பட்டுத் தனியனாகச் செத்தான்.  அவனுடைய பிணத்தை எடுத்து அடக்கம் செய்ய ஒருவரும் முன்வரவில்லை.  காரணம், அது அத்துணை நாற்றமெடுத்துப் போயிருந்தது!  இறுதியாக, அவனுடைய மகன்கள் அந்தப் பிணத்தைத் தொடுவதற்கும் அஞ்சி, நீண்ட கம்புகளைக் கொண்டு தள்ளிக்கொண்டு போய், ஒரு பள்ளத்தில் வீழ்த்தினார்கள்!  பின்னர் அதன் மீது கற்களை வீசி மூடினார்கள்.  அபூலஹபு தன் சொந்த மக்களால் கற்கள் வீசப்பட்டுக் கேவலமடைந்தான்.  மேலும், மறுமையில் நரகத்திலும் வேதனையை நுகர்வான்.

இந்த வரலாற்று நிகழ்விலிருந்து நமக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பாடம் என்ன தெரியுமா?  தலைவருக்குத் தன்னம்பிக்கை என்பதுதான் மிக இன்றியமையாதது.  அவருடைய நோக்கத்தில், அவருடைய செயல்பாட்டில், செயல்படுத்தும் முறையில், தன்னைப் பார்த்துப் பின்பற்றுவோர் செயல்படுத்திப் பயன் பெறுவார் என்ற நம்பிக்கையில் எல்லாம் அந்த உறுதிப்பாடு பிரதிபலிக்க வேண்டும்.  தலைவர் தனது நோக்கில் சிறிதேனும் நம்பிக்கை இழந்தால், அவருடைய தலைமைத்துவம் வலுவிழந்துவிடும்!

மக்கள் தம் தலைவர்களைப் பல காரணங்களுக்காகப் பின்பற்றுகின்றனர். சிலர், அவர் கொண்டுவந்த செய்திக்காக; இன்னும் சிலர், அவருடைய வலிமைக்காக;  வேறு சிலர், தலைவரிடம் இருக்கும் சில சிறப்புத் தன்மைகளுக்காகப் பின்பற்றுகின்றனர்.  

தலைவர் தனது நோக்கில் உறுதியாக நின்றால், அவரைப் பின்பற்றுவோரும் நிறைந்து, அவருடன் நிலைத்து நிற்பார்கள். இப்படியே மக்கள் கூட்டம் பல்கிப் பெருகும்.  கொள்கையில் உறுதிப்பாடும் விட்டுக் கொடுக்காத தன்மையும்தான் தலைவரின் தகுதிக்குக் கட்டியம் கூறும் குறிப்பிடத் தக்க தன்மையாகும்.

அண்ணலாரின் 23 ஆண்டு கால நபித்துவத்தின்போது, அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளால் அவர்கள் தமது உறுதியில் தளர்ந்து போனார்கள் என்ற ஒரு சின்னஞ்சிறிய நிகழ்வைக்கூட எடுத்துக் காட்டாக  ஒருவராலும் கூற முடியாது!  இது ஒன்றே அவர்களின் இறைத்தூது அற்புதமான ஒன்று என்பதற்கான எடுத்துக் காட்டாகும். அந்தத் தூதுச் செய்தியும், அதனுடன் இணைந்த அவர்களின் இயல்பான நற்குணங்களும் அழகிய நடைமுறைகளும் அப்பழுக்கற்ற தன்மைகளும் மிகப்பெரும் அறிவும் சிறப்பான தீர்வுகளும் ஈடிணையற்ற இரக்க குணமும் அன்னாரை மனிதப் புனிதராக இலங்கச் செய்தன என்று கூறின், அது மிகைக் கூற்றாகாது.  

பெரும்பாலான மக்கள் அவர்களின் தூதுச் செய்தியை நம்பினார்கள் என்றால், அதன் உண்மையைப் புரிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் அன்று;  மாறாக, அன்னாரின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு, ‘முஹம்மது (ஸல்)  கூறினார்கள் என்றால், அது உண்மையாகத்தான் இருக்கும்’ என்ற நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இயல்பான நற்குணம், அன்னார் கொண்டுவந்த இறைச் செய்தியை மக்கள் தயங்காது ஏற்கத் துணை நின்றது என்பதுவே மாறாத உண்மையாகும்.

அதிரை அஹ்மது

4 Responses So Far:

sabeer.abushahruk said...

எம்பெருமான் முஹம்மது(ஸல்) அவர்களின் மார்க்க ரீதியான போதனைகளைத்தான் காஃபிர்கள் ஏற்க மறுக்கிறார்கள்; தலைமைத்துவ வழிகாட்டுதல்களையாவது படித்துப் பின்பற்றினால் நல்ல தலைவர்கள் என்று பெயர் வாங்கி மக்கள் மனத்திலும் வரலாற்றிலும் நிலைக்கலாம்.

நல்ல புத்தகம் வாசிக்கத்தரும் காக்கா அவர்களுக்கு, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Shameed said...

நல்ல புத்தகம் வாசிக்கத்தரும் காக்கா அவர்களுக்கு, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sheikdawoodmohamedfarook said...

இதுபோன்றநல்லபுத்தகங்களை வாசிப்பதால்அறிவும்ஒழுக்கமும் விரிவாகும்.இங்கே பெரும்செல்வந்தர்களும்பலபள்ளிகளும்கல்லூரியும் இருந்தபோதிலும்ஒருநூலகம் நிறுவும் எண்ணம் இன்னும்யாருக்கும்வரவில்லைஎன்பதுஒருவேதனை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு