Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தனித் தன்மை 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 20, 2015 | , ,

:::: தொடர் - 11 ::::

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் இஸ்லாமிய வாழ்க்கையின் அளவுகோல் ஐவேளைத் தொழுகையாகும்.  இது, அவர்களின் வாழ்வைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் கருவியாகும்.  எந்த ஒரு தேவைக்கும் அவர்கள் தொழுகையின் பக்கமே திரும்புவர்.  தொழுகைதான் அவர்களின் இரட்சகநிடமிருந்து நிம்மதியைப் பெறும் கருவியாகவும், வலிமைக்கு வலுவேற்றுவதாகவும்,  அவர்களுக்கு நிம்மதியைப் பெற்றுத் தருவதாகவும் இருந்தது.  தொழுகை அழைப்பின் நேரம் வரும்போது, பிலால் பின் ரபாஹ் (ரலி) அவர்களை விளித்து, “அரிஹ்னா பிஹா யா பிலால்!” (தொழுகை அழைப்பின் மூலம் எமக்கு மகிழ்வைத் தருவீராக பிலாலே!) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

தொழுகையின் மூலமாகத்தான் தமக்குப் பின் முஸ்லிம் சமுதாயத்தை வழி நடாத்திச் செல்லவேண்டிய தலைவரைத் தேர்வு செய்தார்கள்.  இதே தொழுகையில்தான் தம் தோழர்களின் ஒற்றுமையைப் பார்த்து உளம் மகிழ்ந்தார்கள்.  கூட்டுத் தொழுகைக் காட்சிதான் இவ்வுலகை விட்டு விடை பெற்றபோது அன்னார் கண்ட இறுதிக் காட்சியாகும்.  அதனால்தான், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், இதே தொழுகையைக் கொண்டுதான் மனிதர்கள் பற்றிய அவர்களின் மதிப்பீடும் அமைந்தது.  ‘ஹதீஸ் ஜிப்ரீல்’ எனும் பிரபலமான நபிமொழியில், ‘இஹ்சான்’ என்பது பற்றிய ஜிப்ரீல் அவர்களின் கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார்கள்:

“நீங்கள் வணங்கும்போது அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று வணங்கவேண்டும்.  நீங்கள் அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும், அல்லாஹ் உங்களைப் பார்க்கிறான் என்ற நினைவுடன் வணங்குவதுதான் ‘இஹ்சான்’ ஆகும்” என்று வணக்கத்தை முற்படுத்தியே பதில் அளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தொழுகைதான் முஸ்லிமின் தன்மைக்கு உரித்தான முதல் அடையாளம் என்பதை முதன்மைப் படுத்தி, அதுவே மனித வாழ்வின் மற்ற தன்மைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் காட்டினார்கள்.  இறைவனும் இதைத் தெளிவாகக் கீழ்க்காணும் இறை வசனத்தின் மூலம் சுட்டிக் காட்டுகின்றான்:

“திண்ணமாக அல்லாஹ்வைச் சந்திப்பதையும் இறுதி நாள் உண்டென்பதையும் நம்பி, இறைவனை நினைவுகூர்ந்தும் இருக்கின்ற உங்களுக்கு இந்த இறைத்தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உண்டு” (33:21) என்ற வசனத்தில் இறைத்தூதரைப் பின்பற்றும் இன்றியமையாமை பற்றிக் கூறுகின்றான்.  இஸ்லாமிய அடிப்படைகள் முதற்கொண்டு வணக்க வழிபாடுகள் வரை, சிறந்த குணங்கள் முதல் சமூகத்தில் வைத்திருக்க வேண்டிய  தொடர்புகள் வரை, இஸ்லாமியக் கொள்கைகள் அடங்கிய ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாகும் என்பதையே மேற்கண்ட வசனம் சுட்டிக் காட்டுகின்றது.  வணக்கத்தின் மூலம் வாழ்க்கையின் முழுமை வலியுறுத்தப் பட்டாலும் கூட, மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அது பிரதிபலிக்க வேண்டும் எனும் கருத்தை உள்ளடக்கியதாகும் இந்த இறைவசனம்.

சிறந்த வாழ்க்கை என்பது, நமது வாழ்க்கை முழுவதிலும் அல்லாஹ்வின் உள்ளமையை நம்பி, அவன் நம் செயல்கள் மற்றும் நம் எண்ணங்களைப் பார்த்துக்கொண்டுள்ளான் என்றும், நமக்கு உதவி செய்வான்;  நாம் வரம்பு மீறினால், அதை மன்னிப்பான் என்றும், நம் செயல்பாடுகளுக்குத் துணை நிற்பான் என்றும் ஆதரவு வைப்பதுதான் சிறந்த வாழ்க்கை என்பதை மேற்காணும் நபிமொழி நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது.  நமது வாழ்க்கை முழுவதிலும் இதே சிந்தனையில் நிலைத்திருப்பது, நம்மால் செயல்படுத்தப்பெறும் கொடுக்கல் வாங்கல்களில் இதைச் செயல்படுத்துவது, நமது சொல்லிலும் செயலிலும் இதைப் பிரதிபலிப்பது ஆகியவை, ‘அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்;  அவனுக்கு நாம் கணக்குக் கொடுக்கவேண்டும்’ என்ற உணர்வை நம்மிடம் உண்டாக்குகின்றன.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தத் தன்மைகள் உள்ள சமுதாயத்தைத்தான் தமது வாழ்க்கையில் உருவாக்கினார்கள்.

இதுதான் நபியவர்களை மற்ற சீர்திருத்தக்காரர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.  காரணம், அவர்கள் எதைச் சொன்னார்களோ, அதைச் செயலில் காட்டினார்கள்.  அவர்களின் வாக்குக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இருக்கவில்லை.  மற்றவர்களுக்கு எதைச் சொன்னார்களோ, அதைத் தமது வாழ்க்கையில் நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள்.  இஸ்லாமியக் கொள்கைகள் வெறும் தத்துவக் குவியல்களாக இருந்ததில்லை; செயலாக்கங்களாக, நடைமுறைகளாக, கடைப்பிடிக்க இலகுவானவையாக இருந்தன.  முதலில் அண்ணலார் (ஸல்) செயல்படுத்திக் காட்டினார்கள்; அதைத் தோழர்களும் பின்பற்றினார்கள்.

இதற்கொரு சான்றாகக் கீழ்க் காணும் வரலாற்று நிகழ்வு நமது சிந்தைக்குரியதாகும்:

இறைத்தூதரின் நேசத்திற்குரியவராகவும் ஆட்சிப் பிரதிநிதியாகவும் பொறுப்பேற்றிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களின் இறப்பின்போது, அவர்களின் உடைமையாக இருந்தவை, இரண்டு மேலாடைகளும் ஒரு கோவேறு கழுதையும்தான்!  அன்னாரின் வாக்கின்படி, ஓர் உடையைக் கொண்டு அவர்களின் உடல் பொதியப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும்.  எஞ்சியுள்ள உடையும் கழுதையும் அன்னாருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்!

கலீஃபாவின் இந்த வாக்குமூலம் செயல்படுத்தப்பட்டபோது, கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பொங்கி அழுதார்கள்.  “அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓர் உயர்ந்த முன்மாதிரியைக் நடத்திக் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள்.  அந்த முன்மாதிரி, அவர்களுக்குப் பின் வரும் ஆட்சியாளரால் பின்பற்ற முடியாத நிலைக்கு ஆளாக்கும் ஒன்றாகும்.”

இன்னொரு தகவல்:  ஒவ்வொரு நாளும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் அபூபக்ர் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வெளியில் இருக்கும் ஒரு குடிசைக்குள் சென்று, அங்குச் சிறிது நேரத்தைச் செலவிட்டுப் பின்னர் வெளியில் வருவதுண்டு.  கலீஃபா அவர்களின் இறப்பிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த உமர் (ரலி) அவர்கள் தம் முன்னோடியின் இந்தச் செயலை என்னவென்று அரிய விரும்பி, அந்தக் கூடாரத்தைச் சென்றடைந்தார்கள்.

அதில் வயது முதிர்ந்த கிழவி ஒருத்தியைக் கண்டார்கள். அக்கிழவியின் பார்வை பழுதுபட்டிருந்தது.  அக்கிழவியிடம் நலம் விசாரித்தபோது, அவர் சொன்னார்:  “நான் வயது முதிர்ந்தவள்.  எனக்கு உறவினர் யாருமில்லை.  இந்தக் குடிசையில் நானும் இந்த ஆடும் மட்டும் இருக்கின்றோம்.  ஒவ்வொரு நாளும் மதீனாவிலிருந்து ஒருவர் வருவார்.  இந்தக் குடிசையைக் கூட்டிப் பெருக்கிவிட்டு எனக்கு உணவு உண்டாக்கித் தந்துவிட்டுப்  பால் கறந்து தந்துவிட்டுப் பொழுது புலர்வதற்குள் போய்விடுவார்.  இப்படி ஒருவர் தினமும் செய்து தராவிட்டால், என் பாடு அதோகதிதான்.”

“அந்த நல்லவர் யாரென்று உனக்குத் தெரியுமா பாட்டி?” என்று கேட்டார் உமர் (ரலி).

“அவர் யாரென்று எனக்குத் தெரியாது.  அவரும் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை” என்று விடையளித்தாள் அக்கிழவி.

“அவர் வேறு யாருமில்லை;  கலீஃபா அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள்தாம்” என்று கூறி, கிழவியின் வியப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

சிந்தித்துப் பாருங்கள்!  இஸ்லாமிய ஆட்சியில் இருக்கும் திக்கற்ற அநாதைக்குத் தாம் யாரென்று காட்டிக்கொள்ளாமல் பணிவிடை செய்த ஆட்சித் தலைவரைப் போல் ஒருவரை எந்தச் சமுதாயத்தில் காண முடியும்?

அதிரை அஹ்மது

3 Responses So Far:

Iqbal M. Salih said...

'அழகிய முன்மாதிரி' யாக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அணுக்கத் தோழர்களிடம் மட்டுமே அரிதான இச்செயலைக் காண முடியும்!

பயின்றும் பழகியும் வந்த 'பாசறை' அப்படியல்லவா!

sabeer.abushahruk said...

//இஸ்லாமிய ஆட்சியில் இருக்கும் திக்கற்ற அநாதைக்குத் தாம் யாரென்று காட்டிக்கொள்ளாமல் பணிவிடை செய்த ஆட்சித் தலைவரைப் போல் ஒருவரை எந்தச் சமுதாயத்தில் காண முடியும்?//

முடியவே முடியாது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு