Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைமை உருவாக்கம் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 06, 2015 | , ,

:::: தொடர் - 9  ::::

அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களின் இரண்டாண்டு காலக் கலீஃபாப் பதவிக்குப் பின்னர் இஸ்லாமியச் சமுதாயத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள்.  ஒரு நாளன்று தம் தோழர்கள் சிலரோடு ஓரிடத்திற்கு வந்தார்கள் உமர் (ரலி).  வழக்கமான இறைப் புகழுரைக்குப் பின்னர், தமது வாழ்வின் கடந்த கால நிகழ்வொன்றை நினைவுகூர்ந்தார்கள்:

“எனது இளமைப் பொழுதில் நான் என் தந்தையின் ஒட்டகங்களை மேய்க்கும் இடையனாகப் பணி புரிந்தேன்.  என் தந்தை எனக்குப் பணிச் சுமையைத் தந்து என்னைத் தொல்லைப் படுத்துவார்.  நான் அடிபணியாவிட்டால், என்னை அவர் அடிப்பார்.  என் உடையோ, முரட்டுக் கம்பளம் போன்றது.  இதோ, இன்று என்னைப் பாருங்கள்!  எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு அல்லாஹ் என்னை உயர்த்தியுள்ளான்?  எனக்கும் என் இரட்சகனான அல்லாஹ்வுக்கும் இடையில் வேறு யாருமில்லை.”

நபித்தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:  ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் மக்களை மஸ்ஜிதுக்கு அழைத்தார்கள்.  மக்கள் வந்து ஒன்றுகூடிய பின்னர், மிம்பர் எனும் பிரசங்க மேடை மீது ஏறி, மக்களைப் பார்த்துப் பேசலானார்கள்:

“ஒரு காலத்தில் நான் என் மாமிகளுள் ஒருவரின் இடையனாக வேலை பார்த்துவந்தேன்.  மாலையில் களைத்துப்போய் வீடு திரும்பும்போது, எனக்குக் கொஞ்சம் பேரீச்சம் பழம் அல்லது கோதுமைதான் கூலியாகக் கிடைக்கும்.  எனது அன்றைய நிலையோ பரிதாபமாக இருந்தது.”  இதைக் கூறிவிட்டு மிம்பரிலிருந்து இறங்கினார்கள் கலீஃபா.  இதைக் கேட்ட அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், “கலீஃபா அவர்களே!  இந்தப் பேச்சின் நோக்கம்தான் என்ன?  அனைவருக்கும் முன்னால் உங்களைத் தாழ்மைப் படுத்தினீர்கள்;  அவ்வளவுதானே?” என்று கேட்டார்கள்.

இதைக் கேட்ட கலீஃபா அவர்கள், “இல்லை, அவ்ஃபின் மகனே!  என் மனம் என்னிடம், ‘நீதான் அமீருல் மூமினீன்.  இங்கு உன்னைவிட உயர்ந்தவர் யாருள்ளார்?’ என்று கூறிற்று.  உண்மையில் நான் யார் என்று எனது மனத்திற்குப் பாடம் படித்துக் கொடுப்பதற்காகவே நான் என்னைத் தாழ்த்திக் கூறினேன்” என்றார்கள்.

உமர் (ரலி) அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது, அது அவரின் உள் மனமாக இருந்தாலும் சரியே. 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள்:  “நபித்தோழர்கள்தாம் இந்தச் சமுதாயத்தின் மிகச் சிறந்த மக்களாவர்.  மிகச் சிறந்ததும் இறையச்சத்தைக்  கொண்டதுமான இதயத்தை உடையவர்கள்.  அவர்களுக்குத்தான் ஆழமான மார்க்க அறிவு இருந்தது.  கொஞ்சம்கூடக் கற்பனை கலக்காதவர்கள்.”  இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘மிகச் சிறந்த அறிவுடையவர்கள்’ என்று சொல்லவில்லை.  மாறாக, ‘ஆழமான அறிவுடையவர்கள்’ என்றார்கள்.  இதற்குக் காரணம், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கற்றவர்கள்.

எனவே, ஹதீஸ் கலை வல்லுநர்களான புகாரீ – முஸ்லிம் ஆகியவர்களைப் போன்று ஏராளமான ஹதீஸ்களை மனப்பாடம் செய்திருக்காவிட்டாலும், அவரவர் அறிவித்த ஹதீஸ் நிகழ்வுகளின் சாட்சிகளாகவும் முன்னுதாரணங்களாகவும் திகழ்ந்தவர்கள்.  அவர்கள்தாம், உண்மையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை, செய்ததை, அனுமதித்ததைக் கண்டவர்கள்; கேட்டவர்கள்.  அருள்மறை குர்ஆன் அருளப்பட்ட சூழலைக் கண்கூடாகக் கண்டவர்கள்.  ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவில் வேத வசனங்களை நபியவர்களுக்குக் கொண்டுவந்ததை நேரில் கண்டவர்கள்; கேட்டவர்கள். எனவே, நபித்தோழர்கள் எளிமையானவர்களும் தூய்மையானவர்களுமான சமுதாயம்.  அவர்கள் கிரேக்க, பாரசீக, ரோமானிய நாகரீகங்கள் மற்றும் தத்துவங்களின் தொடர்பால் கலப்படம் செய்யப்படாதவர்கள்.  அவர்களுக்கு முன்னால் இஸ்லாம் வந்தபோது, அதில் கலப்படம் செய்யாமல், அதனை அதன் தூய வடிவில் ஏற்றுக்கொண்டார்கள்; எடுத்து நடத்தினார்கள்.   

இஸ்லாம் வருவதற்கு முன்னால், ‘ஜாஹிலிய்யா’ எனும் அவர்களின் அறியாமைக் காலத்தில், அரபுப் பாலைவனத்தின் சாதாரண மக்கள் அவர்கள். அவர்களின் மொழியோ, கவர்ச்சிகரமானதோ காரசாரமானதோ அன்று.  அவர்கள் யாத்த கவிதைகளும்கூட, சாதாரண நடையில் இருந்தன; கரடுமுரடான சொற்களால் ஆனவையாக இருக்கவில்லை.  அவர்கள் இந்துக்களைப் போல், கிரேக்கர்களைப் போல் தத்துவார்த்தங்களிலும் மூட நம்பிக்கையிலும் மூழ்கியவர்கள் அல்லர்.  அவர்கள் சிலைகளை வணங்கியபோதும், அச்சிலைகளுக்குத் தலை வணங்கினார்கள்; பலி கொடுத்தார்கள்; அவ்வளவுதான்.  அங்கே முன்னுக்குப் பின் முரணான கற்பனைக் கதைகளில்லை; அவற்றுக்குக் காரணம் கற்பிக்கும் கதைகளுமில்லை.

நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது, ஏற்கனவே அவர்களிடையே இருந்த மேற்கண்ட சாதாரணத் தன்மைகளை இஸ்லாத்திலும் கண்டு கடைப்பிடித்தார்கள்.  அதனால், அவர்கள் காரசாரமான விவாதங்களிலும், தத்துவக் கோட்பாடுகளிலும் மூழ்கவேண்டிய தேவை இருக்கவில்லை.  குர்ஆனையும் சுன்னாவையும் அவ்விரண்டின் நேரடித் தன்மையில் ஏற்றெடுத்தார்கள்;  அவர்களின் வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் பின்பற்றினார்கள்.  இறைவசனங்களின் மறைபொருள்களைத் தேடித் திரியவில்லை. தாம் செவியுற்றவற்றுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.  ஆகவேதான், அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இப்படிக் கூறினான்:

“நம் தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகின்றார்.  நம்பிக்கையாளர்களும் (அவ்வாறே நம்புகின்றனர்.  இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும்  அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர்.  ‘அவனுடைய தூதர்களுள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை காண்பிக்க மாட்டோம்.  இன்னும் செவி மடுத்தோம்; வழிப்பட்டோம்.  எங்கள் இறைவா! உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம்; நாங்கள் மீள்வதும் உன்னிடத்தில்தான்’ என்றும் கூறுகின்றார்கள்.” (2:285)

இறைவசனங்களின் மறைவான பொருளைத் தேடி, வரட்டுத் தத்துவம் பேசுபவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

“அவன்தான் இவ்வேதத்தை உம் மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன.  இவையே இவ்வேதத்தின் அடிப்படையாகும்.  மற்றவை பல பொருள் கொண்டவையாகும்.  ஆகவே, எவர்களுடைய உள்ளங்களில் சருகுதல் இருக்கின்றதோ, அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும், அவற்றில் தாம் விரும்பும் விளக்கத்தைத் தேடுவதற்காகவும், அதிலிருந்து பல பொருள்கள் உள்ளவற்றையே பின்பற்றுகின்றனர்.  அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களோ, ‘இதனையும் நாங்கள் நம்புகின்றோம்.  ஒவ்வொன்றும் எங்கள் இறைவனிடமிருந்தும் உள்ளதுதான்’ என்று கூறுவார்கள்.  அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு உபதேசம் பெற மாட்டார்கள்.” (3:7)

எந்த இறுதி நபி அவர்களுக்குக் குர்ஆன் அருளப்பட்டதோ, அந்த நபியவர்களிடமிருந்து நேரடியாகக் குர்ஆனைக் கற்றவர்கள் அந்த நபித்தோழர்கள்.  ஒவ்வொரு வசனமும் எந்தச் சூழலில், எதற்காக அருளப்பட்டது என்பதை அறிந்த முதல் சமூகத்தவர்கள் அவர்கள்தாம்.  இறைவாக்குகளின் பொருளை விளங்கியதோடு, அவை அருளப்பட்டதன் காரணத்தையும் அறிந்தவர்கள் அவர்களே.  அதனால்தான், குர்ஆன் – சுன்னாவின் நிரூபணம் என்று வரும்போது, நபித்தோழர்களின் கருத்தும் எடுத்துக்கொள்ளப் பெறுகின்றது.  மொழியறிவு என்று வரும்போதுகூட, இறைமறையின் சொல்லாடலை அவர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதுவும் கருத்தில் கொள்ளப்படுகின்றது.

எனவேதான், அவர்கள் ‘சிறந்த சமுதாயத்தில் முந்திய சமுதாயம்’ என்று புகழப்பெறு கின்றார்கள்.  இதற்குச் சான்று, “சமுதாயங்களில் சிறந்தது, என் சமுதாயம்;  அதற்குப் பிறகு, அவர்களைத் தொடர்பவர்கள்;  அதன் பின்னர், அவர்களுக்குப் பின்வருவோர்” என்ற நபிமொழியாகும்.  இதனடிப்படையில், முஸ்லிம் சமுதாயத்தின் சிறப்பு என்பது, நபியோடும் நபித்தோழர்களோடும் இணைந்திருப்பதுதான் என்பது புலனாகின்றது.  

வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்களும் கோட்பாடுகளும் மக்காவிலிருந்தோ மதீனாவிலிருந்தோ தொடங்கவில்லை.   மாறாக, இன்றைக்குப் பழக்கத்தில் இருக்கும் கோட்பாடுகளும் செயல்பாடுகளும், அவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்களும், நபித்தோழர்களின் காலத்தைக் கடந்தவையாகும்.  எகிப்து நாட்டின் ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்களாலும், இந்தியாவின் ஹிந்து மதத் தலைவர்களாலும், கற்பனை கலந்து அவரவர் மதங்களின் பிரதிபலிப்புகளாக உருவானவை.  அதற்குப் பின்னர்தான் இஸ்லாத்தில் தத்துவ விவாதங்களாக நுழைந்தன. 

நபித்தோழர்கள் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் ஆவர்.  அல்லாஹ்வின் காட்சியைக் காணும் துடிப்புள்ளவர்கள்.  மதிப்பற்ற வேலைகளிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டுத் தம் நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்கள்.  அவை மார்க்கத்தின் மதிப்பை இழக்கச் செய்து, இஸ்லாத்தின் தூய நம்பிக்கையை வலுவிழக்கச் செய்பவை. பயனற்ற கற்பனைகளின் ஒட்டுமொத்த உருக்கள் அவை.

நபித்தோழர்கள் சாதாரண மக்களும், தெளிவான மனோநிலையில் கல்வியைக் கற்க விரும்புபவர்களுமாக இருந்தனர்.  குழப்பமான விவாதங்களில் மூழ்கி, தத்துவப் பேச்சுகளை விரும்பாதவர்களுமாவர். அவர்களுக்கு விவாதம் என்பது என்னவென்றே தெரியாது. ராஜதந்திரமும் அவர்களுக்குத் தெரியாது.  உள்ளர்த்தத்தைத் தேடி அலையாமல், உள்ளதை உள்ளபடிக் காட்டும் காலக் கண்ணாடிகள் அவர்கள்.  அவர்களைப் பற்றிப் பொதுமக்கள் தெரிந்துவைத்துள்ளதற்கு மாறாக, அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுபவர்களாவர். அல்லாஹ்வை அஞ்சாமல்போய், அவனது கோபத்திற்கு ஆளாகிப் போவதைப் பற்றிக் கவலைப்பட்டவர்கள் அத்தோழர்கள்.  எதிராளர்க்கு அஞ்சாமல், அவர்கள் கண்டதையும் கேட்டதையும், மாறாமல் மறைக்காமல் மக்களுக்குக் கூறுபவர்களாக இருந்தனர்.  அந்த சஹாபாக்களின் வாழ்க்கையினைப் பற்றிப் பிடித்து நடந்து, அவர்களை உண்மையாளர்கள் என்று ஏற்றுக்கொண்டு நடப்பதில்தான் நமது வெற்றி உண்டு என்பதைப் புரிந்து நடக்கவேண்டும்.

நபித்துவக் காலத்தில் நபித்தோழர்கள் நடந்ததை முன்மாதிரியாக்கி நடப்பதில்தான் இம்மை மறுமையின் வெற்றி இருப்பதாக நாம் உணரவேண்டும்.  நீதி, அன்பு, உண்மை, ஒருவரை ஒருவர் நன்கு புரிதல் ஆகிய நற்குணங்களின் அடிப்படையிலான உலகத்தைக் காண முடியும்.  மேற்காணும் தன்மைகள் நவீன உலகில் இல்லாமல் போனதால் கொடுமை, அநீதி, பாகுபாடு, வேறுபாடு போன்ற மாறுபட்ட சூழலைத்தான் நம்மால் காண முடிகின்றது.

அதிரை அஹ்மது

2 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

தூய்மையானவர்களுமான சமுதாயம். அவர்கள் கிரேக்க, பாரசீக, ரோமானிய நாகரீகங்கள் மற்றும் தத்துவங்களின் தொடர்பால் கலப்படம் செய்யப்படாதவர்கள். அவர்களுக்கு முன்னால் இஸ்லாம் வந்தபோது, அதில் கலப்படம் செய்யாமல், அதனை அதன் தூய வடிவில் ஏற்றுக்கொண்டார்கள்; எடுத்து நடத்தினார்கள்.

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகழோடு இறைவனுக்கு இணையான வார்த்தைகளை கலக்கப்பட்ட பாடலை தூய மார்க்கத்தில் கலந்துவிட்டார்களே பி(த)த்து வாதிகள்..

sabeer.abushahruk said...

படிப்பினைகள் மிகுந்த பதிவு

நன்றி காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு