Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2015 | , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி ஒன்று.
அன்பானவர்களே!

முகமன் கூறி மகிழ்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. இதற்கு முன் இதே தலைப்பில் பல அரசியல் நிகழ்கால சம்பவங்கள் ஆகியவற்றை விளக்கமாகவும் விமர்சனமாகவும் எழுதிக் கொண்டிருந்தோம். மோதலோடு காதல் கொண்ட சோதரர்களுடன் ஏற்பட்ட ஒரு துரதிஷ்டவசமான கருத்து மோதல் எல்லாம் அந்த எழுத்துத் தொடருக்கு இடையிலே ஏற்பட்ட எங்களால் மறக்க இயலாத சம்பவம். 

இப்போது நாட்டில், வளமும் பொருளாதார வளர்ச்சியும் வளர்ந்திருக்கிறதோ இல்லையோ நகைச்சுவை உணர்வு வளர்ந்திருப்பதைப்  பார்க்கலாம். நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்திருப்பவர்களிடமும் அவர்களைச் சார்ந்தோர்களிடமும் இந்த நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருப்பதை பலரின் பேச்சுக்கள் மூலம் நாம் அன்றாடம் அறியலாம். அந்த வகையில் இந்தத் தொடர், பத்திரிகை இலக்கணத்தில் Satire என்று சொல்லப்படும் முறையில், அதாவது தமிழில் அங்கதம் என்கிற இலக்கண வகையில் பகிரப்படுமென்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறோம். நையாண்டி கலந்த விமர்சனங்கள் மற்றும் விளக்கங்கள் நிறையவே இருக்குமென்று சொல்லலாம். ஆனால் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தோண்டிப் பார்ப்போமே தவிர, நோண்டிப் பார்க்க மாட்டோம். யார் மனமும் புண்படாமல் நடப்புகளை நகைச்சுவையுடன் சொல்வதே எமது நோக்கம். சிரிப்பு வந்தால் சிரிக்கலாம்; சிந்திக்கத் தெரிந்தால் சிந்திக்கலாம்; வழக்கம்போல் நிந்திப்பவர்கள் நிந்திக்கலாம். புழுதிவாரித் தூற்றினாலும் ஏற்றதொரு கருத்தை எடுத்தியம்புவோம். 

இந்த வாரம், ஜனநாயகம் என்கிற ஒரு உயர்ந்த கோட்பாடு படும் நாய்படாத பாட்டைப் பற்றிப் பார்க்கலாம். 

இப்போது நாட்டில் - அதுவும் தமிழ்நாட்டில் அடிபட்டு, பின்புறத்தைத் தடவிக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிற ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன் ஜனநாயகம்தான். அண்மையில் திருவரங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிகம் அடிபட்ட ஜீவன் அது. ஜனநாயகத்தை, ஆளுக்கொரு தடிகொண்டு அவரவர் சக்திக்கேற்ப கதறக் கதற அடித்தவர்கள் மாநிலத்தை ஆளும் கட்சியினர் மட்டுமல்ல; மாநிலத்தை ஆண்ட கட்சியினரும் மத்தியில் ஆளும் கட்சியினரும்தான். 

ஜனநாயக முறையில் நடைபெற்ற இடைத்தேர்தல் என்பது பெயரளவுக்குத்தான். ஆனால் ஜனநாயகத்துக்கு விரோதமான அத்தனை செயல்களும் அங்கே அரங்கேறின . முதலாவது அந்த இடைத் தேர்தல், ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுத்த தொகுதியில் அந்த மாநில முதல்வரின் மீது பதினெட்டு ஆண்டுகள் வழக்கு நடைபெற்று அதில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதால் நடைபெற்ற தேர்தல்தான் திருவரங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

உண்மையான ஜனநாயகத்தை செயல்பட விட்டிருந்தால் நியாயமாக இந்தத் தேர்தலின் தீர்ப்பு எப்படி வந்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வந்துள்ளது? இப்போது வென்று இருப்பவர் முன்னாள் முதல்வர் பெற்ற வாக்குகளைவிட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்று இருக்கிறாரே! அப்படியானால் முன்னாள் முதல்வரை விட இப்போது வென்று இருப்பவர் பெரிய படிப்பாளியா? திறமைசாலியா? மக்கள் செல்வாக்குப் பெற்றவரா? நிர்வாகம் தெரிந்தவரா? அனுபவசாலியா? இருபத்தெட்டு வேட்பாளர்களைத் தோற்கடித்து , வென்றவர் வளர்மதிதானே தவிர, அவ்வளவாக மதி  வளர்ந்தவரல்ல. 

அது போகட்டும் . வென்ற கட்சி மட்டுமென்ன தனது நான்காண்டு கால மாநில ஆட்சியில் மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்குவோம் என்ற தனது தேர்தல் கால கோஷத்தை செயல்படுத்திய கட்சியா? 

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் மதுக்கடைகள் . மதுக் கடைகளின் வாசலில் பட்டப்பகலில் மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மண்ணின் மைந்தர்கள் ,

கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளைகள் இவற்றின் மூலம் இமாலயத்தின் கின்ஜன் ஜங்கா உயரத்துக்கு ஊழல் முறைகேடுகள் , 

அன்றாடம் கொலை, கொள்ளைகள், கற்பழிப்பு, முதியோர்களை கன்னி வைத்துக் கொலை செய்யும் கூட்டங்களின் வளர்ச்சி, சங்கிலித் தொடர் சங்கிலி பறிப்பு நிகழ்வுகள் , 

78 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலுத்த வேண்டிய வரலாற்றில் இடம்பெறும் கடன் சுமைகள்,

அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பந்தாடப்பட்டு பயமுறுத்தப்பட்டு நிர்வாகத்தில் நீதி செலுத்த முடியாத நிலைகள், 

இரண்டாயிரம் ஆரம்பப்பள்ளிகளை மூடிய நிகழ்வுகள் காரணமாக தனியாருடைய கல்விக் கொள்ளைக்கு கதவைத் திறந்துவிட்ட காட்சிகள், 

எதிர்க்கட்சிகளை சட்டமன்றத்தில் பேசவிடாமல் முடக்கிப் போடுவது , சீண்டி விடுவது  அல்லது வெளியேற்றும் வேடிக்கைகள்,

மக்கள் மன்றத்தில் , எதிர்க் கட்சிகள் ஆளும்கட்சியை விமர்சித்துப் பேசினால் புற்றீசல் போல புறப்பட்டுவரும் அவதூறு வழக்குகள், 

முந்தைய திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே, ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூல்நிலையத்தை முடக்கிப் போட்டத்துடன், அந்த நூல் நிலையத்தில்       சேகரிக்கப்பட்டிருந்த கிடைப்பதற்கரிய சொத்துக்களான நூல்களைத் தூக்கிப் பரண் மேல் போட்டது, 

அதே போல மக்களின் பலகோடி ரூபாயில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை முடக்கிப் போட்டது, 

செம்மொழிப் பூங்காவை செயலிழக்க வைத்ததுடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் கை வைத்து மக்களைத் திண்டாட வைத்தது, 

காலில் விழும் கலாச்சாரம், தனிமனித வழிபாடு, நீதிமன்றம் தண்டித்தவரின் உருவப்படத்தை அரசு அலுவலகங்களிலும் அரசு விழாக்களில் வரும் ஊர்திகளிலும் தைரியமாக வைத்து, மரபுகளை மண்ணைத் தோண்டிப் புதைத்தது, 

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்திவைத்து அனாதைகளான முதியோர்களை பிச்சைக்காரர்களாக அலையவிட்டது, 

மின்சாரவெட்டு காரணமாக சிறு குறுந்தொழில்களின் முடக்கம், பெருந்தொழில்கள் எதுவும் தொடங்காமை, இயங்கிக் கொண்டிருக்கும் நோக்கியா முதலிய தொழில்களும் மூடப்பட்டதை பார்த்தும் வாயை மூடிக் கொண்டிருந்தது, 

சத்துணவில் பல்சுவை உணவு தருகிறோம் என்று அதற்காக ஒதுக்கிய 103 கோடி ரூபாய் என்கிற முழுப் பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்ட மாயம், 

சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டுகளில் கூட கடந்த இரண்டு வருடங்களாக உள்தாள் மட்டுமே ஒட்டப்படும் நிர்வாகக் குறைபாடுகள், 

கிட்டத்தட்ட 127733 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 110 விதியின் கீழ் நற்பணி அறிவிப்புகளை மட்டும் கரவொலிகளுக்கு இடையே அறிவித்துவிட்டு பிறகு அவற்றைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விட்டுவைத்து இருப்பது, 

தயாராக இருக்கும் மெட்ரோ இரயில் திட்டத்தை பெங்களூரில் விழுந்த இடி காரணமாக, இன்னும் தொடங்கி வைக்காமலிருப்பது,  

போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய நிலுவைத்தொகை, PF, பணிக்கொடை போன்றவற்றைத் தராமல் இன்னும் நிறுத்தி வைத்திருப்பது, 

இப்படி இந்தக் குறைகளின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் பிரச்னை இல்லாத மாவட்டங்களே இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் மற்றும் அணுஉலை பிரச்னை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு பிரச்னை, இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் பிரச்னை, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ பிரச்னை, மதுரையில் கிரேனைடு பிரச்னை, சென்னை மற்றும் இதர மாநகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை என தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா- அரசு இயந்திரம் இயங்குகிறதா? முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வியை நடுநிலையாளர்களின் மத்தியில் கிளப்பி விட்டு விட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், திருவரங்கம் இடைத்தேர்தல் வெற்றி, இந்த ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் என்று அமைச்சரவை மட்டுமல்ல ஆளுநர் உரையும் சொந்தம் கொண்டாடுவதைப் பார்க்கும் போது, ‘சிரிப்புத்தான் வருகுதைய்யா உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதைய்யா’    என்றுதான் பாடத் தோன்றுகிறது. 

நாம் மேலே பட்டியலிட்ட இந்த ஆட்சியின் குறைபாடுகள் அனைத்தையும் மக்கள் அறியாமலா வாக்களித்தார்கள்? இல்லை. அறிந்து இருக்கிறார்கள்; பொது இடங்களில் இவை பற்றி விவாதித்தார்கள்; ஆட்சியின் குறைகள் அனைத்தையும் விமர்சித்தார்கள். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் ஒரு சர்வரோக நிவாரணி இருக்கிறது. அந்த நிவாரணி, பாதாளம் வரை பாயும்; பத்தும் செய்யும். அவலமான ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ள வெற்றி மனப்பூர்வமானதா ? பணப் பூர்வமானதா?

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பது எல்லா இடைத்தேர்தல்களிலும் நிருபிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரம் , பணப்பட்டுவாடா , அமைச்சர்களின் தலையீடுகள் ஆகிய அத்துமீறல்களின் முன் நீதியும் நியாயமும் மனசாட்சியும் மண்டியிட்டு ஜனநாயகத்தை மரணப்படுக்கையில் தள்ளிவிட்டன. 

மக்கள் நினைப்பதை செய்வதுதான் ஜனநாயகம். மக்கள் விருப்பத்தை வாக்குச் சீட்டுகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள உதவும் கருவிதான் ஜனநாயகம். ஆனால் இந்த வலிமை வாய்ந்த ஜனநாயகம் இன்று, தன்னலவாதிகளின் அத்துமீறல் அரசியலால், ஒரு குவாட்டர் சாராயத்துக்கும் ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் போன் ரீசார்ஜுக்கும் சாப்பாட்டு டோக்கனுக்கும் விற்கப்படுகிறது. 

ஆளும் கட்சியினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள் என்று அவர்களை விரல் நீட்டிக் குற்றம் சொல்லும் தகுதி எதிர்க் கட்சியான திமுகவுக்காவது இருக்கிறதா என்று ஆராய்ந்தால் இந்தத் திட்டத்தை திருமங்கலத்தில் தொடங்கிவைத்தவர்களே அவர்கள்தான் என்கிற கசப்பான உண்மை நமக்கு நினைவுக்கு வருகிறது. இரசாயனத்துக்கும் பெளதீகத்துக்கும் பார்முலா படித்துப் பழக்கப்பட்டவர்கள், திருமங்கலம் பார்முலா என்ற இடைத் தேர்தல் பார்முலா அறிமுகமானபோது அதிர்ந்தார்கள். இப்படிப்பட்ட அரசியல் அத்துமீறலை அறிமுகப்படுத்திய திமுக பாய்ந்த எட்டு அடியை இன்று அதிமுக பதினாறு அடி பாய்கிறது. இதைக் குற்றம் சொல்லும் தகுதி திமுகவுக்கு இருக்கிறதா? இன்று ஆட்சிக் கட்டிலில் திமுக இருந்தாலும் , இதே கதைதான் நடக்கும்; அப்போது அதிமுக அதை எதிர்க்கும். நடிகர்கள்தான் வேறு; ஆனால் கதை ஒன்றுதான். 

மத்தியில் ஆளும் கட்சியாகிவிட்டோம் என்கிற ஒரே மமதையில் திராவிடக் கட்சிகளுக்கு நாங்கள்தான் மாற்று என்று மார்தட்டி சவுண்ட் விட்ட பாஜக வினரும் ஜாமீன் இழந்தார்கள். ஆனால் அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார். எச்சங்களையும் உண்மையான மிச்சங்களையும் அவர்கள் பார்க்கப்பழகிக் கொள்ள வேண்டும் என்பது ஒரு புறம்; தமிழ்நாடு என்றைக்கும் பெரியாரின் விழுதுகள் விழுந்த பூமி என்பதையும் அவர்கள் முதலில் உணரவேண்டும்.  

“நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்! – உங்கள் 

ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ! “ என்று கண்ணதாசன் கேட்டது இவர்கள் அனைவரையும்தான். 

நாடு போகும் போக்கில், ஜனநாயகம்படும்பாட்டில் இன்னொரு முறை கண்ணதாசனைத்தான் துணைக்கு அழைக்க வேண்டி இருக்கிறது. 

“கற்பாம் ! மானமாம்! கண்ணகியாம் ! சீதையாம் ! 
கடைத்தெருவில் விற்குதடா! ஐயோ பாவம்! 
காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம் ! ” 

உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் , ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியால் பாடப்பட்ட தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை விலைபோகும் நிலைக்குத் தள்ளிய அத்தனை பேரும் குற்றவாளிகளே!. 

உயர்ந்த சிந்தனைகள், உரத்த கோட்பாடுகள், உயர்ந்த நிலையிலான அரசியல் நிர்ணய முறைகள் உதவாக்கரைகளின் கரங்களில் மாட்டிக் கொண்டு தங்களது மூச்சை விடும் நாளை எதிர் நோக்கிக் கிடக்கின்றன. 

இதற்கு என்னதான் முடிவு? யார்தான் இந்த இக்கட்டிலிருந்து ஜனநாயகத்தை மீட்க முடியும்? விடை ? 

வெகுதூரத்திலாவது ஏதாவது ஒரு சிறு புள்ளியாகவாவது மாற்று அரசியல் என்கிற வெளிச்சம் தெரிகிறதா? தென்படுகிறதா? தேடுவோம்! இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

18 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ அலைக்கு முஸ்ஸலாம் காக்காக்கள்

நல்ல அரசியல் பார்வை!

18 ஆண்டுகள் வழக்கினை இழுத்தடித்ததால் மக்கள் குற்றத்தையே மறந்து இலவசங்களால் மயங்கி இருக்கலாம்.

குற்றம் பெற்ற கட்சியை இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தடைச்சட்டம் வகுக்கப்பட்டிருந்தால் ஜனநாயகமும் தீர்ப்பும் கொஞ்சமாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

sheikdawoodmohamedfarook said...

அன்று1967சென்னைமாஹாணேத்தின்தேர்தல்முடிவுஅறிவிக்கப்பட்டபோது ''விருதுநகர்தொகுதியில்போட்டியிட்டபெருந்தலைவர்கர்மவீரர்காமராஜர் ஊர்பேர் தெரியாதமாணவர்தலைவன்சீனிவாசனிடம் தோல்விகண்டார்'' என்றுஇலங்கைவானொலிதமிழ்பகுதிசெய்திவாசித்தது. சி.சுப்பிரமணியம்,பக்தவத்சலம்,தன்சொந்தவீட்டுக்குதென்னங்கீற்றுகூட போடமுடியாமல்மந்திரிபதவியில்இருந்தகக்கன்முதலானோர்தோல்வி என்னும்கொடியகரங்களில்சிக்கி துண்டை உதறி தோளில் போட்டு ஆட்சியிலிருந்துவெளிஏறினார்கள்.அப்பொழுதுபக்தவத்சலம்சொன்னது ''தமிழ்நாட்டில்நச்சுகிருமிபரவிவிட்டது''.அதுஇன்னும்உண்மைபடுகிறது. இனிஅந்தகிருமியைஅழிக்கமனிதனால்முடியாது.ஏனெனில்மனிதனேநச்சுகிரிமியாகமாறிவிட்டான்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்காமார்களே,

ஒரு காலமிருந்தது. அக்காலத்தில் அரசியல் என்பது மக்களுக்காக மக்களின் அன்றாட பிரச்னைகளுக்குத் தீர்வு காண என்று வழக்கிருந்தது. அரசியல் ஸ்திரத்தன்மை, ஜனநாயக தர்மம், அரசியல் நாகரிகம் போன்றவை பேணப்பட்டு மக்கள் நிம்மதியாக தத்தம் பணிகளில் மூழ்கிப் போயினர்.

இக்காலத்திலோ, ஊடகத் தொடர்பில் ஒருநாள் இல்லாவிட்டாலும் நாட்டு நடப்பு தலைகீழாய்ப் போனதைக் கவனிக்காமல் "என்னது, காந்தியை சுட்டுட்டானுகளா?" என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.

இத்தொடர் அதிரை நிருபர் வாசகர்களை அரசியல் அப்டேட் செய்து வைக்கும் என்பதில் ஐயமில்லை.

இதோ நான் முன் வரிசையில்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காஸ்.

sabeer.abushahruk said...

காக்காஸ்,

இரு டவுட்டு.

ஶ்ரீரங்கத்து தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக சொல்லி வந்தது,"தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒரு மாற்று சக்தியாகப் பார்க்கிறார்கள்".

டெபாஸிட்கூட கிடைக்காத நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் த 'சவுண்ட'ர்ராஜன், "நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்" என்று பல்டி அடிக்கிறாங்களே.

அப்ப இவிங்க காட்ன "மாற்று சக்தி" பூதம் பாட்டில்குள்ள போய்டுச்சா?

அரசியல்ல இதுலாம்....

sabeer.abushahruk said...

அப்புறம்,

தந்தி ட்டிவி பாண்டே 'ஆயுத எழுத்தில்' பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படவே இல்லை என்று கேடி ராகவன் மனம் குளிர சொல்லி வாய் மூடல, இலங்கை ராணுவம் மீனவர்களைத் தாக்கிட்டாங்க.

இப்ப என்னா சொல்லுவார் இந்த பிஜேபி பினாமி செய்தியாளர்?

Iqbal M. Salih said...

வெகுதூரத்தில் டெல்லியில் சிறு புள்ளி தெரிகின்றது. அது நிஜமான வெளிச்சமா இல்லையா என்பது கொஞ்ச நாள் போனால் தெரிந்து விடும். இதற்கிடையில் நீங்கள் இருவரும் வெளுத்து வாங்குங்கள்!
We like your good team work and both of your satirical and ironical criticisms!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கங்கைய புனிதமாக்குறாய்ங்களோ இல்லையோ....

உங்கள் இருவரின் துவைத்தெடுக்கும் அலசலால் தமிழக அரசியல் கறை எங்கள் மனதில் படிந்ததை வெளுத்து வாங்குகிறது...

அரசியல் கறைமீது உங்கள் இருவரின் பார்வை அருமை !

ZAKIR HUSSAIN said...

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் உங்களைப்போல் சிந்திக்கும் வர்க்கம்...மற்றொரு பக்கம் "அம்மா" படத்தை சட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்துப்பார்த்து பிறகு அழும் ரோபோத்தனம். ....

எங்கு போகிறது இந்த தமிழ்நாடு. ??

ZAKIR HUSSAIN said...


//இரண்டாயிரம் ஆரம்பப்பள்ளிகளை மூடிய நிகழ்வுகள் காரணமாக தனியாருடைய கல்விக் கொள்ளைக்கு கதவைத் திறந்துவிட்ட காட்சிகள், //

இது 2 வரியில் எழுதப்பட்ட சாதாரண வரியல்ல...

வருங்காலத்து சாமானிய தமிழர்களின் கல்வியில் மண்ணை அள்ளிப்போட்ட உண்மை.


ZAKIR HUSSAIN said...

நீங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களை "வெறும்" குற்றமாக மட்டும் பார்க்கிறீர்கள்.

நான் அதை ஒரு பிசினஸ் ஆக பார்க்கிறேன்.

உதாரணம்.

குற்றம் ; கொலை

கொலைகாரனைத்தேட பணம்....தேடிய பிறகு சட்ட நுனுக்கத்தில் தப்பிக்க வைக்க பணம்.

குற்றம் ; கற்பழிப்பு.

குற்றவாளி வசதியானவனாக இருந்தால் ஒரு பெரிய டீல்...குரூப் ஆக ஈடுபட்டிருந்தால் இன்னும் பெரிய டீல்...மொத்தத்தில் விசாரிக்கும் அதிகாரிகள் காட்டில் பணமழை.


குற்றம் ; முதியோர்களை கன்னி வைத்துக் கொலை செய்யும் கூட்டங்களின் வளர்ச்சி, சங்கிலித் தொடர் சங்கிலி பறிப்பு நிகழ்வுகள் ,

குற்றவாளியை நெருங்க லஞ்சம் ....பொருள்களை கைப்பற்றிய பிறகு அதை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க ஒரு பெர்சன்டேஜ் கமிஷன்.

இதையெல்லாம் மீறி நீதி / நேர்மை என்று கடமையில் ஈடுபட யாருமே முன்வருவது குறைந்து போய்விட்டது.

இன்னும் 'உண்மை / நேர்மை / ஞாயம் எல்லாம் வழக்கொழிந்து போகும். பணம் மட்டுமே பிரதான நோக்கத்து மனித மூளை பழகிப்போகும் '

Ebrahim Ansari said...

முகமன் கூறிய அனைவருக்கும் வ அலைக்குமுஸ் சலாம்.
முதலில் முதல் வரிசையில் அமர்ந்து இருக்கும் தம்பி கவிஞர் சபீர் :
//ஶ்ரீரங்கத்து தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக சொல்லி வந்தது, "தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒரு மாற்று சக்தியாகப் பார்க்கிறார்கள்". //
தம்பி! தவறாகப் புரிந்து கொண்டு கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். பாஜகவை Alternative சக்தியாக மக்கள் பார்ப்பதாக பாஜக சொன்னதாக நீங்கள் நினைத்து இருகிறீர்கள். அப்படியல்ல பாஜக சொன்னது Exchange என்ற அர்த்தத்தில். ஆமாம் நீங்கள் கொண்டு வரும் திர்ஹம் மற்றும் வெளிநாட்டுக் கரன்சிகளை மாற்றித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றுதான் பாஜக சொன்னது. தவற்காகப் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் ஒரு பொதுத்தளத்தில் ஒரு வளர்ச்சியின் நாயகன் பிரதமராக பதவி வகிக்கும் கட்சியை கலங்கப் படுத்தி இருக்கிறீர்கள். சிபிஐ இப்போது எங்கள் கையில் என்பதை மறந்துவிட்டீர்களா?
அடுத்து ,
//இப்ப என்னா சொல்லுவார் இந்த பிஜேபி பினாமி செய்தியாளர்?//
அவர் பினாமி என்ற உங்கள் கூற்றை ஒருக்காலும் ஒப்புக் கொள்ள இயலாது. அவர் இடம் ஆதாரபூர்வமான ஆர் எஸ் எஸ் அட்டை இருப்பதை அவர் போட்டு இருக்கும் ஓவர் கோட் மறைத்து இருக்கலாம். அதற்காக பினாமி என்றெல்லாம் கூறி அவரது மதிப்பைக் குறைத்தால் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை நடவடிக்கையிலிருந்து நீக்கிவைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தம்பி இக்பால்! தாங்கள் அடிக்கடி தலை காட்டுவது பற்றி மகிழ்ச்சி.
தம்பி ஜாகிர்!
// எங்கு போகிறது இந்த தமிழ்நாடு. ??//
சுடு காட்டுக்கு என்று நாங்கள் சொல்வோமென்று எதிர்பார்க்கிறீர்களா? மாட்டோம். யாருமே உண்மையைச் சொல்வதில்லை என்று சத்தியம் செய்துவிட்ட நிலையில் நாங்கள் மட்டும் சொல்ல வேண்டுமா? இந்த விளையாட்டுக்கு நாங்க வரலே.

sabeer.abushahruk said...

காக்கா,

ஹாஹ்ஹாஹ்ஹா

ஐ ரியல்லி எஞ்ஜாய்ட் யுர் ரெஸ்பான்ஸ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா... ப.ஜ.க.கிட்டே சொந்த கருத்துகள் நெறைய இருக்கு... தொட்டில் பழக்கம் அவய்ங்க சுடுகாடு வரைக்கும்... :)

Shameed said...

//வென்றவர் வளர்மதிதானே தவிர, அவ்வளவாக மதி வளர்ந்தவரல்ல. //

ஆகா கலைகட்ட தொடங்கிவிட்டது
நேற்று ! இன்று ! நாளை !

Ebrahim Ansari said...

இன்டர்நெட் எனது நெட்டை கழற்றி விடுவதால் தொடர்ந்து பதில் அளிக்க இயலவில்லை.

அதற்காக அனைவரும் மன்னிக்கவும்.

நான் பதவிக்கு வந்தவுடன் கொலைகாரர்கள் கொள்ளைக் காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள் என்ற தாயை மன்னிக்கவில்லையா?
நான் ஆட்சிக்கு வந்தால் வானில் மின்வெட்டு இருக்குமே தவிர வாழ்வில் மின்வெட்டு இருக்காது என்ற தாயை மன்னிக்கவில்லையா?

அதுபோல நினைத்துக் கொள்ளுங்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டின் பெயரை தமாஷ்நாடு என்று மாற்ற வேண்டி வரும்.

அடுத்து தமிழக சட்டமன்றத்தில் சந்திக்கலாமா? இன்ஷா அல்லாஹ்,

Ebrahim Ansari said...

தம்பி அபு இபு

//காக்கா... ப.ஜ.க.கிட்டே சொந்த கருத்துகள் நெறைய இருக்கு... தொட்டில் பழக்கம் அவய்ங்க சுடுகாடு வரைக்கும்... :)//

டில்லியில் கிடைத்த பரிசுகள் காரணமாக சொந்தக் கருத்துக்கள் இப்போது வருவது இல்லை. மாறாக நரேந்திர மோடி சமத்துவம் சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறார் .

கவனித்தீர்களா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///அதுபோல நினைத்துக் கொள்ளுங்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டின் பெயரை தமாஷ்நாடு என்று மாற்ற வேண்டி வரும்.

அடுத்து தமிழக சட்டமன்றத்தில் சந்திக்கலாமா? இன்ஷா அல்லாஹ்,//

haa haa haa haa

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//டில்லியில் கிடைத்த பரிசுகள் காரணமாக சொந்தக் கருத்துக்கள் இப்போது வருவது இல்லை. மாறாக நரேந்திர மோடி சமத்துவம் சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறார் .

கவனித்தீர்களா? //

சூட்டு - போர்வை தேடிகிட்டு இருக்காராம்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு