மதிநுட்பமும் அறிவுக்கூர்மையும் நிறைந்த அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் மிகவும் உன்னிப்புடன், முழுக் கவனத்துடன் பாடம் பயில்வதே வழக்கம். தாம் சிறந்தோங்க விரும்புவது மார்க்கச் சட்டக் கலையில் என்ற தெளிவு ஏற்பட்டதும், அந்தச் சட்டங்களைப் பிறர்
கூற, கண்னை மூடிக்கொண்டு மனனம் செய்வது போன்ற தவறை அவர் செய்யவில்லை. நபிமொழிக் கலையைக் கற்பதையும், அதனுடன் சேர்த்து மார்க்கச் சட்டக் கலையைப் பயில்வதையும்தான் அவர் முக்கியமாகக் கருதினார். அவை இரண்டறக் கலந்தவை என்பது அவரது திடமான கருத்தாக இருந்தது.
அதை மிக அழகாக அவர் விவரித்திருக்கிறார். “யாரேனும் நபிமொழிகளை மட்டும் பயின்று, அதிலிருந்து மார்க்கச் சட்டங்களைப் பயிலவில்லையெனில், அவருக்கான எடுத்துக்காட்டு மருந்து விற்பனையாளரைப் போன்றது. விற்பனையாளரிடம் எல்லா மருந்துகளும் இருக்கலாம். ஆனால் அவை எந்தெந்த நோய்களுக்குப் பயன்படும் என்பது அவருக்குத் தெரியாது. மருத்துவர் வரும் வரை அவர் காத்திருக்க வேண்டும். நபிமொழிகளை மட்டுமே பயின்ற நபிமொழிக் கலை மாணவர் அந்த விற்பனையாளரைப் போன்றவரே. நடைமுறையில் அந்த நபிமொழிகளை எவ்விதம் பயன்படுத்துவது என்பதை அறிய அவர் மார்க்கச் சட்ட வல்லுநருக்காகக் காத்திருக்க வேண்டும்.”
இவ்விதமாக அவர் அவற்றினுள் மூழ்கி மூழ்கி, இமாம் அபூஹனீஃபா என்ற தகுதியை எட்டிப் பிடிக்க உதவியது. அவரது மார்க்கச் சட்டக் கருத்துகள் தனி சிந்தனைக் குழுவாக (School of thought) உருவெடுத்து வரலாறாகிப் போனது. அந்த சிந்தனை எந்த அடிப்படையில் அமைந்தது என்பதை மட்டும் பின்னர் பார்ப்போம். அதற்குமுன் -
மாணவராக இருந்து இமாமாக உயர்ந்த இமாம் அபூஹனீஃபா, தம் மாணவர்களிடம் எப்படிப் பழகினார் என்ற சுவையான நிகழ்வுகளைப் பார்த்துவிடுவோம்.
அவர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது, அவர்களுக்குப் பாடங்களை ஒப்பிப்பதைப் போலவோ, சொற்பொழிவு நிகழ்த்துவதைப் போலவோ இல்லாமல், அவரே அவர்களிடம் பாடம் பயில்வதைப் போல் அமைந்திருந்தது. ஒரு கேள்வி முன் வைக்கப்படும். அந்த கேள்விக்கான விடையை மாணவர்களுடன் விவாதிப்பார். மாணவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது ஒப்பீடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பார்கள். பலதரப்பட்ட கருத்துகளால் ஒருவரை நோக்கி ஒருவர் கூச்சலிட்டு, பெரும் களேபரமும் ஆரவாரமுமாகக்கூட இருக்கும். இறுதியில் அந்தக் கேள்வியை அல்லது பிரச்னையை அனைத்துக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்தபின், தாம் கருதிய முடிவை இமாம் அபூஹனீஃபா தெரிவிக்க, அது அனைவருக்கும் ஏற்புடையதாய் அமைந்திருக்கும்.
இவ்வகையிலான அவரது அணுகுமுறை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஏககாலத்தில் பயனுடையதாய் அமைந்திருந்தது. அதுமட்டுமின்றி, தாம் இறக்கும் வரை ஞானத்தைத் தேடி அலைந்த ஒரு மாணவராகவே அது அவரை அடையாளப்படுத்தியது.
நீ பத்துப் பேருக்குத் தீங்கு புரிந்தால், அவர்கள் உன்னுடைய தாய் தந்தையராக இருந்தாலுமேகூட, உனக்கு எதிரிகளாக உருவாகிவிடுவார்கள். ஆனால் நீ பத்துப் பேருக்கு நன்மை புரிந்தால் அவர்கள் உன்னுடைய உறவினர்களாக இல்லாதபோதும் உனக்குத் தாய், தந்தையரைப்போல் ஆகிவிடுவார்கள்...
பஸ்ரா நகரமும் கூஃபா நகரமும் மார்க்க விஷயங்களில் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தன. நாம் முன்னரே பார்த்ததுபோல் அவ்விரு நகரங்களும் வாதம், விதண்டாவாதம் என்று பெரும் களேபரத்துடன் திகழ்ந்த காலகட்டம் அது. ஆயினும், கூஃபா நகரில் வளர்ச்சி அடைந்திருந்த பயனுள்ள, சரியான மார்க்கச் சட்ட திட்டங்களையும், மார்க்க அறிஞர்களின் கருத்துகளையும் பஸ்ராவில் உள்ள மக்களுக்குக் கற்றுத் தர தம் மாணவர் யூஸுஃப் இப்னு காலித் என்பவரை அனுப்பி வைத்தார் இமாம் அபூஹனீஃபா. ‘சென்று வா; வென்று வா’ என்று சம்பிரதாயமாக அந்த மாணவரை வழியனுப்பாமல் சில அறிவுரைகளை வழங்கினார் அவர்.
ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட அந்த அறிவுரையானது, கொஞ்சமும் நமத்துப் போகாமல், இன்றும் புத்தம் புதிதாய், நமக்கு மிகவும் அவசியமாய் இருப்பது பெரும் ஆச்சரியம். படித்துச் சிந்திப்பது நமக்குள் அறம் வளர்க்க உதவும்.
“நீ பத்துப் பேருக்குத் தீங்கு புரிந்தால், அவர்கள் உன்னுடைய தாய் தந்தையராக இருந்தாலுமேகூட, உனக்கு எதிரிகளாக உருவாகிவிடுவார்கள். ஆனால் நீ பத்துப் பேருக்கு நன்மை புரிந்தால் அவர்கள் உன்னுடைய உறவினர்களாக இல்லாதபோதும் உனக்குத் தாய், தந்தையரைப்போல் ஆகிவிடுவார்கள்.
“நீ பஸ்ராவுக்குச் சென்று அதன் மக்களை எதிர்த்தாலோ, அவர்களைவிட உன்னை நீ உயர்த்திப் பேசினாலோ, அவர்கள் மத்தியில் உனது அறிவைத் தம்பட்டம் அடித்தாலோ, அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டாலோ, நீ அவர்களை விலக்குவாய்; அவர்கள் உன்னை விலக்குவார்கள். நீ அவர்களைச் சாபமிடுவாய்; அவர்கள் உன்னைச் சாபமிடுவார்கள். அவர்கள் வழிகெட்டுப் போனவர்கள் என்று நீ நினைப்பாய்; நீ வழிகெட்டுப் போனவன், மார்க்கத்தில் புதிதாய் விஷயங்களைச் சேர்ப்பவன் என்று அவர்கள் உன்னை நினைப்பார்கள். உனக்கும் எனக்கும் இழிவு வந்து தானாய் இணையும். நீ அவர்களிடமிருந்து ஓட வேண்டியிருக்கும். இது சரியான முறையன்று. தன்னிடம் இணக்கமாய்ப் பழகாதவர்களிடம் தானும் இணக்கமாய்ப் பழகாமல் இருப்பது விவேகமான மனிதனுக்கு உரியதன்று. அல்லாஹ்வே அவனுக்கு வழிகாட்ட வேண்டும். “நீ பஸ்ராவுக்குச் சென்றால், மக்கள் உன்னை வரவேற்பார்கள், சந்திப்பார்கள், உனக்குரிய மரியாதையை அளிப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவரவருக்குரிய தகுதியில் உன் மனத்தில் நிறுத்தி வை. மதிப்புக்குரிய மனிதர்களுக்கு மதிப்பளி. அறிவார்ந்த மக்களை உயர்வாய்க் கருது. அவர்களுடைய ஆசிரியர்களிடம் மரியாதை கொள். இளையவர்களிடம் அன்பு செலுத்து; பொது மக்களிடம் நெருங்கிப் பழகு. இறைபக்தி இல்லாதவர்களையும் அன்பாய் நடத்து. ஆனால் சான்றோரைச் சார்ந்து இரு.
“அதிகாரிகளையும் அதிகாரத்தையும் அசட்டை செய்ய வேண்டாம். எவரையும் தாழ்வாகக் கருதவேண்டாம். உன்னுடைய நற்பண்புகளில் தரம் தாழ்ந்துவிடாதே. உன்னுடைய இரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதே; எவரையும் சோதித்துப் பார்க்காமல் நம்பிவிடாதே. தரம் தாழ்ந்தவர்களைச் சார்ந்துவிடாதே. நீ எதை வெளிப்படையாய் நிராகரிக்கிறாயோ அதை உனக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளாதே. முட்டாள்களுடன் மனம் திறந்து பேசுவதில் எச்சரிக்கையாக இருக்கவும். அடக்கம், பொறுமை, உளவலிமை, நற்பண்பு, சுயகட்டுப்பாடு ஆகியவை உன்னிடம் இருக்க வேண்டும்.
“உனது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள், சிறப்பான வாகனத்தை உபயோகிக்கவும். உனது உணவைப் பகிர்ந்துகொள். ஏனெனில் கஞ்சன் மேலோங்குவதில்லை. மக்களுள் சிறந்தவர்களை உனக்கு நம்பகமானவர்களாக ஆக்கிக்கொள். அநீதியை நீ அறிந்துவிட்டால், உடனே அதைச் சீர்படுத்து. நேர்மையைக் கண்டுவிட்டால் அதன்மீது உனது கவனத்தை அதிகப்படுத்து. “உன்னை வந்து சந்திப்பவர்கள், சந்திக்காதவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கானவற்றை அவர்கள் சார்பாகச் செய்து கொடு. உனக்கு நல்லவர்களோ, கெட்டவர்களோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீ நல்லதையே நாடு. மன்னிக்கும் குணத்தை மேற்கொள்; நன்மையை ஏவு. உனக்குச் சம்பந்தமில்லாததைப் புறக்கணி. உனக்குக் கேடு விளைவிப்பவற்றை எல்லாம் நீ விட்டுவிடு. மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் விரைவாகச் செயல்படு. உன்னுடைய சகோதரர்கள் உடல் நலமின்றி இருந்தால், நீ சென்று சந்தி; அல்லது உன் பணியாட்களை அனுப்பியாவது விசாரி. தொடர்ந்து சில நாள்களாக யாரேனும் தென்படாமல் இருப்பின் அவர்களைப் பற்றி விசாரி. அவர்கள் யாரேனும் உன்னிடமிருந்து விலக நினைத்தாலும் நீ அவர்களிடமிருந்து விலக நினைக்காதே. “உன்னால் இயன்ற அளவு மக்களிடம் அன்பு செலுத்து. கண்டிக்கத்தக்க மக்களாகவே இருப்பினும் அவர்களை முகமன் கூறி வரவேற்பளி. கூட்டங்களிலோ, பள்ளிவாசலிலோ மற்றவர்களைச் சந்திக்கும்போது, உனது கருத்துக்கு மாற்றமாய் கேள்விகள், பிரச்னைகள் விவாதிக்கப்படும்போது, முந்திக் கொண்டு சென்று உனது முரண்பாட்டைத் தெரிவிக்காதே. உன்னிடம் கேட்கப்பட்டால், உனக்கு என்ன தெரியுமோ அதை மக்களிடம் தெரிவித்து, ‘மற்றொரு கருத்து இப்படி இப்படி உள்ளது, அதற்கான ஆதாரங்கள் இன்னின்ன’ என்று கூறு. அவர்கள் உன்னைச் செவிமடுத்தால், உனது மதிப்பையும் உனது அறிவின் மதிப்பையும் உணர்ந்து கொள்வார்கள். ‘இது யாருடைய கருத்து?’ என்று அவர்கள் கேட்டால், ‘மார்க்க வல்லுநர் ஒருவருடையது’ என்று மட்டும் பதில் அளித்துவிடு.
“அவ்வப்போது உன்னை வந்துச் சந்திப்பவர்களுக்கு அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உனது அறிவிலிருந்து சிலவற்றைக் கற்பி. அவர்களிடம் நட்புடனும் நகைச்சுவையுடனும் உரையாடவும். அவர்களது தேவைகளைக் கவனிக்கவும். சில வேளைகளில் அவர்களுக்கு உணவளிக்கவும். அவர்களது மதிப்பை அங்கீகரித்து அவர்களது குறைபாடுகளை புறக்கணித்துவிடு. அவர்களிடம் அன்புடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்துகொள்ளவும். அவர்களிடம் எரிச்சலோ, கோபமோ அடைய வேண்டாம். சுமக்க இயலாத சுமையை அவர்கள்மீது செலுத்த வேண்டாம்.”
நற்பண்பு, மக்கள் நலன், மக்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் பக்குவம் போன்றவையெல்லாம் இல்லாமல் இத்தகைய நற்போதனைகள் அளிப்பது ஒருவருக்குச் சாத்தியமா என்ன? அவை தளும்ப தளும்ப நிரம்பியிருந்தன ஆசிரியர் இமாம் அபூஹனீஃபாவிடம்.
(தொடரும்)
நூருத்தீன்
1 Responses So Far:
//அவர்களுடிய மதிப்பை அங்கீகரித்துகுறைபாடுகளை புறக்கணித்துவிடு//நல்ல பயன்தரும் போதனை.ஆனால் இன்றைய மார்க்க மேதைகளோ தினை அளவு குறை கண்டாலும் பனை அளவு தூக்கிகொண்டு தாஸ்பூஸ் என்று பாய்கிறார்கள்.
Post a Comment