Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்தனைத் துறை - 05 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 21, 2016 | , , ,

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் இரண்டு குழுவினராக இயங்கி வந்தனர். அவர்களில் ஒரு குழுவினர் நபிமொழிகளைத் திரட்டி, அதனை மக்களுக்கு அறிவிப்பதில் கவனம் செலுத்தினர். மற்றொரு குழுவினர் அந்த நபிமொழிகளை ஆய்வு செய்து, அதன் கருத்துகளைத் தெரிவிப்பதில்

முனைந்திருந்தனர். நபித் தோழர்களை எடுத்துக் கொண்டாலும்கூட சிலர் தம்முடைய கருத்துகளைத் தெரிவித்ததால் புகழ் பெற்றிருந்தனர்; வேறு சிலர் நபிமொழிகளை அறிவிப்பதில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். அதே நிலைதான் நபித்தோழர்களுக்கு அடுத்து வந்த தாபியீன்களிடமும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரிடமும் மார்க்கச் சட்ட வல்லுநர்களாக உருவெடுத்த இமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக் ஆகியோரிடமும் காணப்பட்டன.

நபியவர்களுக்குப் பிறகு தோழர்கள் பல்வேறு வகையான புதிய சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவானது. இறை வழிபாடுகளிலும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் எழக்கூடிய கேள்விகளும் ஐயங்களும் ஏராளம் அல்லவா? அதற்கான தெளிவை எப்படி எட்டுவது? குர்ஆனும் நபியவர்களின் பொன்மொழிகளும் அவர்களிடம் இருந்தன. அவற்றின் அடிப்படையில் அவை நேரடியாகப் பொருள் தரும் விஷயங்களில் முடிவுக்கு வருவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. அப்படி அமையாத விஷயங்களில், சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் இறை வசனங்கள், நபியவர்களின் அறிவிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து, அவ்விஷயங்களுடன் ஒப்பிட்டு, அவர்கள் ஒரு கருத்தை எட்ட வேண்டிய நிலை இருந்தது.

மார்க்கச் சட்டங்களுக்கு விளக்கம் தர இமாம் அபூஹனீஃபா கடைப்பிடித்த விதிகள், நுணுக்கங்கள், அதன் சாதக, பாதகங்கள் ஆகியவற்றின் ஆய்வை மார்க்கச் சட்டக் கலை வல்லுநர்கள், அக்கலை பயின்ற மாணவர்கள் வசம் ஒப்படைத்து விடுவோம். அபூஹனீஃபாவின் சிந்தனை முறைக்கு மிக அடிப்படையாய் அமைந்தவை என்னென்ன, அவரது வழிமுறை என்ன என்பதனை மட்டும் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

“நான் அல்லாஹ் இறக்கிய குர்ஆனைச் சார்ந்துள்ளேன். ஒரு விஷயத்தின் தெளிவுக்கு ஆதாரமான வாசகங்களைத் திருக்குர்ஆனில் காணாவிடில், அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களை நான் சார்ந்து நிற்கிறேன். அவை இரண்டிலும் எனக்கு வாசகங்கள் கிடைக்காவிட்டால், நபியவர்களின் தோழர்கள் கூறியதை ஏற்கிறேன். ஆனால் தோழர்களின் கருத்துகள் ஒன்றுக்கும் மேற்பட்டிருந்தால் அதில் ஏதாததொன்றை நான் தேர்ந்தெடுப்பேன். அதே சமயம் அவ்விஷயத்தில் மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு தோழர்களின் கருத்தை நான் நிராகரிக்க மாட்டேன். தாபியீன் அறிஞர்களான இப்ராஹீம், அல்-ஷாபீ, அல்-ஹஸன் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களும் பதில் அளித்திருக்கலாம். அவர்கள் அறிஞர்களின் மதிநுட்பத்தின்படி சட்ட விளக்கம் தரப் பாடுபடும் மக்களாக இருக்கிறார்கள். நான் என்னுடைய சொந்த கருத்துக்கு வருகிறேன்.”

குர்ஆன், ஹதீஸ், தோழர்களின் கருத்துகள் என்ற அடிப்படையில் அவரது அணுகுமுறை அமைந்திருந்தது என்பதைத்தான் அவரது கூற்று உறுதிப்படுத்துகிறது. அதற்கு அப்பாற்பட்டு இதர அறிஞர்களின் கருத்துகள் இருப்பின், அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற அவசியம் தமக்கில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்விதமாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தால், தம்முடைய கருத்துதான் சரி என்று அவர் கூறியதில்லை. மாறாக, “இது என்னுடைய கருத்து. இவ்வளவுதான் சிறப்பாக என்னால் முடிவுக்கு வரமுடியும். இதைவிடச் சிறப்பான ஒரு கருத்தை ஒருவர் கொண்டு வருவாராயின் அவரது கருத்துதான் சரி” என்றுதான் அவர் தெரிவித்திருக்கிறார்.

“அபூஹனீஃபா, தாங்கள் அளித்த இந்தத் தீர்ப்பு சரியானதே, இதில் சந்தேகமேயில்லை” என்று யாரேனும் அவரிடம் கூறினால், “அல்லாஹ்வின்மீது ஆணையாக! ஒருவேளை இது தவறான கருத்தாகக் கூட இருக்கலாம். எனக்குத் தெரியாது” என்று மட்டுமே அவரிடமிருந்து பதில் வரும்.

அபூஹனீஃபா அறிவிப்பதை அவருடைய மாணவர்கள் எழுதிவைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை அவர்களிடம், “என்னிடமிருந்து செவியுறுவதையெல்லாம் எழுதிவைத்துக் கொள்ளாதீர்கள். இன்று எனக்கு ஒரு கருத்து இருந்து நாளை நான் அதை விட்டுவிடக்கூடும். நாளை ஒரு கருத்து ஏற்பட்டு, நாளை மறுநாள் நான் அதை விட்டுவிடக்கூடும்” என்று தடுத்திருக்கிறார்.

உண்மையைத் தேடுவதில் அவருக்குக் கள்ளங் கபடமற்ற நேர்மை இருந்திருக்கிறது. வலிமையான ஆதாரத்தைக் கொண்ட ஒரு நபிமொழியின் அடிப்படையிலோ, நபித் தோழர்களின் ஃபத்வாக்களின் அடிப்படையிலோ வேறொருவர் தம் வாதத்தை முன்வைத்தால், அது சரியாக இருக்கும்பட்சத்தில் தம்முடைய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு அபூஹனீஃபா தயங்கியதே இல்லை. மேற்சொன்ன அவரது பதில்களை, கருத்துகளை நாம் மற்றொரு முறை படித்து சிந்தையில் தெளிவாகப் பதிய வைத்துக் கொண்டால் போதும். பல குழப்பங்கள் தீர்வதற்கு அவை வழி வகுக்கும்.

இமாம் அபூஹனீஃபா மிகவும் திறமையான, மதி நுட்பம் வாய்ந்த, சிறந்த அறிஞர் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை. அவரது கால கட்டத்தில் நாலாபுறமும் பல தரப்பட்ட கருத்து வேறுபாடுகள் சூழ்ந்திருந்த நிலையில், அவரது சிந்தனை வகை அந்தக் காலத்தில் புதிதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் விளங்கியது பலரிடம் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. அவரது சிந்தனை வகையில் அவரைப்போல் வலிமையுடன் யாரும் சிறந்திருக்கவில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அத்தகு சிந்தனை ஆற்றலுடன் தனிமனித சுதந்திரத்துக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் சேர்ந்துகொண்டு அவரது சிந்தனைத் துறைக்குத் தனிச்சிறப்பைத் தந்தது.

அவரது ஆய்விலும் கருத்திலும் மனிதர்களின் சுய விருப்பத்திற்கு - அந்த மனிதர் சுய புத்தியுடையவராக இருக்கும்பட்சத்தில், அது எந்தச் செயல்பாடாக இருப்பினும் - அவர் பெரும் மதிப்பு அளித்தார். தனி மனித சுதந்திரத்திற்கு அவர் அளித்த அத்தகைய அழுத்தம் பல விஷயங்களில் தெளிவாய் வெளிப்பட்டன. அவை மற்ற மார்க்க அறிஞர்களின் சிந்தனைத் துறையிலிருந்து வெகுவாக மாறுபட்டிருந்தன. இஸ்லாமியச் சட்டத்துறையில் வலுவான கட்டமைப்பையும் விவகாரங்களை வடிகட்டி ஒரு முடிவுக்கு வரும் முறையையும் அவர் ஏற்படுத்திவிட்டார் என்பதை அக்கால அறிஞர்கள் உணர்ந்தார்கள்.

இப்படியான அவரது அணுகுமுறை, ஹதீஸ்களை அதன் வார்த்தைகளின் நேரடி அர்த்தங்களை மட்டுமே எடுத்துக் கையாள்பவர்களுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. இஸ்லாத்திற்கு எதிராக, வழிகேட்டில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியிலும் அவருக்கு எந்த ஆதரவும் உருவாகவில்லை.

இவை ஒருபுறமிருக்க அவரது சிந்தனைத் துறையின் மற்றொரு பண்புக்கூறு, ஊகமாய் அமையும் கேள்விகளுக்கும் தெளிவைத் தேடுவதாக அமைந்திருந்தது. மார்க்க அறிஞர்கள் பலர், ஊகத்தின் அடிப்படையில் அமைந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தபோது, அவற்றுக்குப் பதில் அளிக்க அபூஹனீஃபா தயங்கவே இல்லை. ஊகமான சூழ்நிலைகள், எதிர்காலத்தில் பலவகையிலும் நிகழச் சாத்தியமுள்ள விஷயங்கள் ஆகியவற்றுக்கு இமாம் அபூஹனீஃபாவும் அவருடைய மாணவர்களும் தீர்வுகளைத் தேடினர். இதுவும் பலரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து கத்தாதாவுக்கும் இமாம் அபூஹனீஃபாவுக்கும் இடையே வாக்குவாதமேகூட நிகழ்ந்திருக்கிறது. கத்தாதா அபூஹனீஃபாவிடம், “இந்த சூழ்நிலை எப்பொழுதேனும் உருவாயிற்றா?” என்று ஒரு விஷயத்தைக் குறித்துக் கேட்டார்.

அதற்கு அபூஹனீஃபா, “அப்படி இதுவரை நிகழவில்லைதான். இருந்தாலும்கூட, அப்படி அது நிகழுமேயானால் நாம் தயாராக இருப்பது நல்லது” என பதில் அளித்தார். “பாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்குமுன் அவற்றை எதிர்கொள்ளவும் அதற்கான முன்னேற்பாடுகளுடனும் அறிஞர்கள் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அப்படியான சூழ்நிலை ஏற்படும்போது அதை எப்படிக் கையாள வேண்டும், அதன் பாதகங்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் இமாம் அபூஹனீஃபா.

அவர் எந்த நூல்களையும் எழுதவில்லை. சில துண்டுப் பிரசுரங்களை அவர் எழுதியதாகச் சொல்வதுண்டு. ஆனால் அவருடைய மாணவர் அபூயூஸுஃப்தான், அபூஹனீஃபாவின் கருத்துகளையும் தீர்ப்புகளையும் தொகுத்து பல நூல்களை எழுதியுள்ளார். மற்றொரு மாணவர் முஹம்மது இப்னுல் ஹஸன், அபூஹனீஃபாவின் சிந்தனை முறையைத் தொகுத்து, தொடர்புபடுத்தி ஆறு நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.

இவ்வாறாக அடுத்தடுத்த தலைமுறையினரில் அத்துறையைப் பின்பற்றிய பல அறிஞர்களாலும் இமாம் அபூஹனீஃபாவின் சிந்தனைத் துறை ஈராக்கையும் கடந்து பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது.

(தொடரும்)

நூருத்தீன்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு