Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 18 5

அதிரைநிருபர் பதிப்பகம் | March 12, 2016 | ,


இஸ்லாம் ஒட்டு மொத்தமாக குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளுக்கு எதிரானது என்று கண்ணை மூடிக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்கும் சகோதரர்களுக்கு விளக்கம் தரும் பொறுப்பு அழைப்பாளர்களுக்கு இருக்கிறது. அத்தகையோருக்கு இஸ்லாம் ஒரு நடைமுறைக்கு ஏற்றதாகவும் அறிவியல் பூர்வமாகவும் சிந்திக்கிறது- செயல்படுகிறது என்று எடுத்துக் காட்டுகளுடன் இன்முகத்துடன் எடுத்துச் சொல்லுங்கள்.

இவைகளே அவைகள் .

முதலாவதாக கர்ப்பமடைந்த ஒரு தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என ஒரு மருத்துவர் பரிந்துரைத்தால், குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளலாம். 

''உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள்' (2:195)

“மேலும் உங்களை, நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கிறான்.” (4:29)

என்றெல்லாம் இறைவன் அறிவுறுத்துகிறான். 

அடுத்து, தனது குழந்தைகளுக்காக மார்க்கரீதியில் தடுக்கப்பட்ட காரியத்தையோ அல்லது பாவச்செயலையோ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.

“உங்கள் வாழ்க்கையில் எந்த சிரமத்தையும் உண்டுபண்ண அல்லாஹ் விரும்பவில்லை” (5:6)

என்று அல்லாஹ் உறுதியளிக்கிறான்.

பிறக்கவிருக்கும் அல்லது ஏற்கனவே பிறந்து வளர்ந்துகொண்டிருக்கும் தங்களது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு அல்லாஹ் அறிய நியாயமான காரணங்கள் இருப்பினும் குடும்பக்கட்டுப்பாட்டை செய்துகொள்ள அனுமதியுண்டு.

உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'ஒருமுறை ஒருவர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்' என்றார். 'அதற்கு நபிகளார் 'ஏன் அப்படிச் செய்கின்றீர்?' என்று வினவ அதற்கு அம்மனிதர் “ நான் எனது இருக்கும் குழந்தைகளையிட்டு அஞ்சுகின்றேன்' என்றார். அதற்கு நபிகளார் 'அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்' (அதாவது இத்தகைய தனி மனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது. அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்.” 

“அஸ்ல்“ எனப்படும் தாம்பத்ய வாழ்வின் முறை , பெருமானார் ( ஸல்) அவர்களின் காலத்திலேயே குடும்பக் கட்டுப்பாட்டுக்குரிய ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நபித்தோழர்கள் இம்முறையைக் கையாண்டனர் என ஜாபிர் ( ரலி ) அவர்களின் அறிவிப்பின் மூலம் புஹாரி மற்றும் முஸ்லிம் நூல்களின் மூலம் அறிகிறோம். “ அஸ்ல் “ எனப்படும் செய்கை ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் உயிரணுக்களுடன் சேர்ந்துவிடாமல் தன்னிச்சையாக தடுத்துக் கொள்வதாகும் . 

அப்படியானால் இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாட்டை மறுக்கிறதா என்பதை விமர்சிப்போர் விளங்கிக் கொள்ள வேண்டும். 

பால்குடிக்கும் குழந்தை தங்களது காக்கும் கரங்களில் இருக்கும் நிலையில் மீண்டும் கருத்தரிக்கும் எண்ணத்தில் மனைவியுடன் சேர்வதும் தடுக்கப்பட்டு இருந்தது. இந்த தடை அப்போதும் இருந்தது; இப்போதும் இருக்கிறது. அப்படியானால் இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்க்கிறது என்று உள்நோக்கம் கற்பிப்போர் இன்னும் கண்ணை மூடிக் கொண்டு காரண காரியங்களை அலசாமலும் அறியாமலும் சொல்லிக் கொண்டு இருக்கலாமா? 

குடும்பக்கட்டுப் பாடு பற்றி இஸ்லாம் சொல்வதை , வழக்கம்போல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாலேயே குடும்பக் கட்டுப்பாடு பற்றி இஸ்லாத்தின் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகிறது. 

இஸ்லாம் சொல்வதெல்லாம் ஒரு கருவை, இறைவனால் அதற்கு உயிர்க் காற்று ஊதப்பட்டபின்பு அழிக்கும் உரிமை மக்களிடம் இல்லை என்பது தான். 

அதுவே தடுக்கப்பட்ட ஹராம் என்று சொல்கிறோம். அது கொலைக்கு சமமானது. அந்தக் கொலையை தாய் தந்தையரே செய்ய உடன்பட வேண்டாமே என்பதே நமது நிலை. 

அதே நேரம் அந்தக் கரு உருவாகி வளர்ந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுமானால் இரண்டில் ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை துரதிஷ்டவசமாக ஏற்பட்டால் பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும், ஏற்கனவே இருக்கும் குழந்தைகளின் பராமரிப்பை அனுசரித்து கருவில் உருவான குழந்தையை அழிக்க அனுமதி உண்டு என அறிஞர்கள் கூறுகிறார்கள். 

இஸ்லாம் நடைமுறைக்கேற்ற குடும்பக் கட்டுப்பாட்டுக் போதித்து வழிகாட்டும் மார்க்கம் என்பதை இவற்றால் அறியலாம்.

“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும் “. என்று திருமறையின் (17 : 31) கூறுகிறது. 

"பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது’’ ( 11:6) 

என்றும் 

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் அவனே உணவு வழங்குகிறான்” (30:40) என்கிற திருமறையின் வசனங்கள், மனித இனத்துக்கு இறைவன் தருகின்ற உத்திரவாதங்கள் ஆகும். 

படைப்பவனும் அவனே! பரிபாலிப்பவனும் அவனே! உணவளிப்பவனும் அவனே!. என்ற இறைநம்பிக்கையின் வெளிப்பாடாக இவை பரிணமிக்கின்றன. 

“திண்ணமாக நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்து இருக்கிறோம். மேலும் படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவராக இல்லை. இன்னும் வானிலிருந்து சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம்.' என்ற வசனங்கள் அடங்கிய அல் முமிநூன் ( 23) அத்தியாயத்தின் 17- 20 வசனங்கள் இறைவனின் ஆற்றலைப் பற்றியும் அவனது திட்டங்களைப் பற்றியும் நாம் ஆழ்ந்து சிந்தித்தால் தனது படைப்பினங்களைப் பற்றி இறைவன் அறியாதவனாகவோ அசட்டை செய்பவனாகவோ இல்லை என்பதாகவும் படைத்தபின் பரிபாலனம் செய்யாமல் கைவிட்டுவிடமாட்டான் என்றும் நம்மை ஆழ்ந்து சிந்தித்து நம்பிக்கை கொள்ள  வைக்கிறது. ஒரு இறைநம்பிக்கையாளன், இறைவனின் இந்த உத்திரவாதத்தை உதறிவிட முடியாது. 

உருவான கருவை இறைவன் அனுமதித்த காரணமின்றிக் கலைப்பவர்கள் தங்களின் ஈமானையும் இறையச்சத்தையும் கலைத்துக் கொள்கிறார்கள் என்றே கூறவேண்டும். படைப்பதும் பராமரிப்பதும் பாதுகாபப்தும் இறைவனின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இறைவனின் அதிகாரங்களில் அவனது கட்டளைகளுக்கு எதிராக அத்துமீறி கை வைக்க எவருக்கும் உரிமை இல்லை என்பதே எமது நிலை. 

குழந்தை உருவாகி நூற்று இருபது நாட்களை கடந்து விட்ட பிறகு கருக்கலைப்புச் செய்தால் அப்போது ஒரு மனித உயிரை கொன்ற பாவம் ஏற்படும். அநியாயமாக ஒரு மனித உயிரைக் கொல்வதை பெரும்பாவம் என்று மார்க்கம் எச்சரிக்கின்றது.

குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள். 

உலகில் வாழும் உயிரைக் கொல்வது எவ்வாறு குற்றபிரிவு தண்டனைப் பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமோ அதேபோல் வயிற்றில் உருவான பச்சிளம் குழந்தையைக் கொள்வதும் குற்றத்துக்கான தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல இறைவனின் பார்வையில் பாவமும் கூட. இது வெறும் பாவம் அல்ல பெரும்பாவம். 

இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன.” அல்குர்ஆன் (6 : 137)

“அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. “ அல்குர்ஆன் (6 : 140)

''வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (நபியே! இவர்களிடம் ) கூறுவீராக! அது, ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். அல்குர்ஆன் (6 : 151)

அறியாமையின் காரணமாக இளமையில் செய்யும் எண்ணற்றதவறுகள் பலரை தேவைப்படும் நேரத்தில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள இயலாத உடல் நிலைமைக்கு தள்ளிவிடுகின்றன. 

இன்றுள்ள அவசர வாழ்க்கை மற்றும் உலகமயமாக்கலின் வளர்ச்சியால் கலப்படம் நிறைந்த உணவுகளை உன்ன நேரிட்டு ஆண்மையும் தாய்மையும் அடிபட்டுப் போய்விடுகின்றன என்று அறிவியல் எடுத்துக் காட்டுகிறது; ஆன்றோர்கள் சொல்கிறார்கள்.

பிறக்கும் குழந்தைகள் உள்ளுறை மற்றும் வெளியுறை உறுப்புக் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. கேள்விப்படாத பெயர்களுடன் புதிது புதிதாக வியாதிகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. 

இப்போது குழந்தை வேண்டாம் இன்னும் சற்றுக் காலம் போகட்டும் அதுவரை வாழ்வை அனுபவிப்போம் என்று குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடும் பலர், காலத்தை தவறவிட்ட காரணத்தால் காலத்துக்கும் மலட்டுப் பட்டம் சூட்டப்பட்டு மகளிர் நல மருத்துவர்களிடம் உயிரணு சோதனைகளின் கவுண்டிங்க் ரிப்போர்டுகளை கைகளில் தாங்கி காத்துக் கிடக்கும் காட்சிகளைக் கண்டு வருகிறோம். 

குழந்தைப் பேறு இல்லாமல் ஆலமரத்தையும் அரச மரத்தையும் சுற்றி வரும் ஜோடிகளும், துணிகளை தொட்டியாக மரங்களில் கட்டிக் கதறும் காட்சிகளும் நமது கண்களுக்குத் தப்பவில்லை. 

அல்லாஹ் தர நினைப்பதை தடுக்கும் தகுதி தனி மனிதனுக்கு இல்லை என்பதையே இவை நிரூபிக்கின்றன. எதை யாருக்கு எப்போது எப்படித்தருவது என்பதை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் ஒருவனே என்பதையும் அந்த உயிர்களைப் பிறக்கவிடாமல் தடுக்கும் அறிவியல் முறைகளைத தேர்ந்தெடுக்கும் மனிதன் , பின்னாளில் தனக்குத் தேவைப்படும்போது அவ்வாறு உருவாக்கிக் கொள்ள வல்லமை படைத்தவனா என்பதையும் சிந்திக்கவேண்டும். 

படைக்கத் தகுதியற்ற மனிதன் , படைப்பவன் படைத்ததை அழிக்க மட்டும் எவ்வாறு தகுதி பெறுவான் என்பதே எமது நிலை என்பதை எடுத்துரைக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம். 

“இறைவா! நாங்கள் உன்னையே வணங்குகிறோம்!. உன்னிடத்தே நல்லுதவி தேடுகிறோம் . நீ எங்களுக்கு நேரான பாதையைக் காட்டி அருள்வாயாக!" என்கிற திருமறையின் தோற்றுவாயில் நாம் வைக்கும் கோரிக்கைகளை ஏற்று நமக்கும் நமது பிறந்த மற்றும் பிறக்க இருக்கும் சந்ததிகளுக்கும் நல் அருள் புரிவானாக! ஆமீன். 

இஸ்லாத்தின் மீது அறிவியல் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவோரை காரண காரியங்களுடன் எதிர்கொள்ளவேண்டிய கடப்பாடு அழைப்புப் பணியாளர்களைச் சார்ந்தது ஆகும். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

இபுராஹிம் அன்சாரி

5 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

ஆதாரபூர்வமான குறிப்புகளை குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து எடுத்தாண்டு குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான இஸ்லாத்தின் நிலைபாட்டை விளக்கியிருக்கும் பாங்கு வாழ்த்தத்தக்கது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sheikdawoodmohamedfarook said...

குடும்பக்கட்டுப்பாடு பற்றி இஸ்லாத்தின் நிலையை சான்றுகளோடு விளக்கும் முறை அருமை.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர சபீர் ,

வா அலைக்குமுஸ் சலாம். ஜசாக்கல்லாஹ் ஹைரன் .

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

அருமையான ஆக்கம், ஜஸக்கல்லாஹ் ஹைரா..

இந்த பதிவை ஜும்மாக்களின் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்ய வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதரணமாக நடந்தேரிவது, சிசு கொலை. நவீண தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து, வயிற்றில் உள்ள குழந்தைக்கு அந்த பாதிப்பு இந்த பாதிப்பு என்று மருத்துவர்களே, கருவை கலைக்க பரிந்துரைக்கும் காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

//உருவான கருவை இறைவன் அனுமதித்த காரணமின்றிக் கலைப்பவர்கள் தங்களின் ஈமானையும் இறையச்சத்தையும் கலைத்துக் கொள்கிறார்கள் என்றே கூறவேண்டும். படைப்பதும் பராமரிப்பதும் பாதுகாபப்தும் இறைவனின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இறைவனின் அதிகாரங்களில் அவனது கட்டளைகளுக்கு எதிராக அத்துமீறி கை வைக்க எவருக்கும் உரிமை இல்லை என்பதே எமது நிலை.

குழந்தை உருவாகி நூற்று இருபது நாட்களை கடந்து விட்ட பிறகு கருக்கலைப்புச் செய்தால் அப்போது ஒரு மனித உயிரை கொன்ற பாவம் ஏற்படும். அநியாயமாக ஒரு மனித உயிரைக் கொல்வதை பெரும்பாவம் என்று மார்க்கம் எச்சரிக்கின்றது.//


அல்லாஹ் நம் சமூகத்தை பாதுகப்பானாக..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

படைக்க தகுதியற்ற மனிதன்,
படைத்தவன் படைத்ததை அழிக்கமட்டும் அழிக்க எப்படி தகுதியானாக முடியும்?

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உணவளிப்பவன் அல்லாஹ்,
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நோயிருந்தால் அதை குணப்படுத்துபவன் அல்லாஹ்..

மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை நம்புவதில் உள்ள ஆர்வத்தைவிட,
நம் மக்கள் படைப்பினங்களை படைத்துக்கொண்டிருக்கும் அல்லாஹ்வை நம்புவதில் இல்லை என்பது வேதனையிலும் வேதனை..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு