Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 025 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 04, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

பெற்றோரை நோவினை செய்தல், உறவினரை வெறுத்தல் கூடாது!

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். (அல்குர்ஆன் : 47: 22,23)

''என்னைத் தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! 

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!(அல்குர்ஆன் : 17:23,24)

''பெரும் பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி!'' என்று கூறினோம். அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினைப்படுத்துதல், என்று கூறிவிட்டு, சாய்ந்து இருந்த அவர்கள், (நிமிர்ந்து)உட்கார்ந்து, ''அறிந்து கொள்ளுங்கள். பொய் சொல்வது, பொய் சாட்சி கூறுவது'' என்று கூறிக்கொண்டே இருந்தார்கள். ''அவர்கள் அமைதி அடைய மாட்டார்களா? என்று நாங்கள் கூறும் அளவுக்கு நபி(ஸல்) சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா என்ற நுபய்உ இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 336)

''ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஒருவன் தன் பெற்றோரைத் திட்டவும் செய்வானா?' என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். ''ஆம்! ஒருவன், இன்னொருவனின் தந்தையைத் திட்டுவான். அவன், இவனது தந்தையைத் திட்டுவான். இவன் அவனது தாயைத் திட்டுவான். அவன் இவனது தாயைத் திட்டுவான் (இது பெற்றோரைத் திட்டியதாக அமையும்)''என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 338)

''உறவைத் துண்டிப்பவன், சொர்க்கத்தில் நுழையமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் என்ற ஜுபைர் இப்னு முத்இம்;(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 339)

"தாய்மார்களை நோவினை செய்வதையும், தனது கடமைகளை செய்யாதிருப்பதையும், தனக்கு உரிமை இல்லாதைத் தேடுவதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து உள்ளான். மேலும், ''இப்படி இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது'' எனக் கூறுவதையும், அதிகக் கேள்வி கேட்பதையும் பொருளை வீணாக்குவதையும் அல்லாஹ் வெறுக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஈஸா என்ற முஅய்ரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 340)

தாய், தந்தை, உறவினர்களின் நண்பர்கள், மனைவியின் தோழியர், மற்ற மதிப்புக்குரியவர்களுக்கு நன்மை செய்தல்!

''ஒரு மனிதன், தன் தந்தையின் நன்பரை ஆதரிப்பது நன்மைகளில் மிகப் பெரும் நன்மையாகும்'' என, நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 341)

கதீஜா(ரலி) அவர்கள் மீது நான் பொறாமை கொண்டது போல், நபி(ஸல்) அவர்களின் எந்த மனைவி மீதும் நான் பொறாமை கெண்டதில்லை. அவர்களை நான் பார்த்ததே இல்லை. எனினும் அவர்களைப் பற்றித்தான் நபி(ஸல்) அவர்கள் அதிகம் நினைவு கூர்வார்கள். ஆட்டை அறுக்கும் போதெல்லாம் அதை துண்டு துண்டாகப் பிரிப்பார்கள். பின்பு அதை கதீஜா(ரலி) அவர்களின் தோழிகளுக்காக அனுப்பி வைத்தார்கள். ''கதீஜா (ரலி) அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு எவரும் இல்லையா?'' என நான் கேட்ட போதெல்லாம், நிச்சயமாக கதீஜா இப்படி இருந்தார், இப்படி இருந்தார் அவர் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தையினைக் கொடுத்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 344)

நல்லோர்களை சந்தித்தல், அவர்களுடன் பழகுதல்! 

ஒரு மனிதர், வேறு ஊரில் உள்ள தன் சகோதரரைச் சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் பாதையில் வானவர் ஒருவரை அல்லாஹ் நிறுத்தினான். அவரிடம் அவர் வந்த போது ''எங்கே செல்கிறீர்?'' என வானவர் கேட்டார். '' இந்த ஊரில் உள்ள என் சகோதரனைச் சந்திக்கச் செல்கிறேன்'' என்றார். ''அவரிடம் நீ பயன்படுத்தத்தக்க அருட்கொடை எதுவும் அவனிடம் உனக்காக உள்ளதா?'' என்று கேட்டார். ''இல்லை, அல்லாஹ்வின் விஷயத்தில் அவரை நான் நேசிக்கிறேன்'' என்றார். அப்போது வானவர், '' நான் உன்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதராவேன். நிச்சயமாக அல்லாஹ், அவன் விஷயமாக சகோதரரை நீ நேசிப்பது போல் உம்மை நேசிக்கிறான் என்றார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 361)

"நல்லவனுடன் உட்கார்ந்திருப்பவன், கெட்டவனுடன் உட்கார்ந்திருப்பவன் இந்த இருவருக்கும் உதாரணம் என்பது, கஸ்தூரி வைத்திருப்பவன் மற்றும் இரும்பு உலையில் ஊதுபவன் போன்றதாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன், உமக்கு அதைத்தருவான். அல்லது அவனிடம் நீ நல்ல வாடையைப் பெற்றுக் கொள்ளலாம். இரும்பு உலையை ஊதுபவன், உன் ஆடையை கரித்து விடுவான் அல்லது அவனிடம் கெட்ட வாடையை நீ அடையலாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 363)

"ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் செய்யப் படுகிறாள். அவளின் சொத்துக்காக, அவளின் குடும்பத்திற்காக, அவளின் அழகுக்காக, அவளின் மார்க்கப் பற்றுக்காக (திருமணம் செய்யப்படுகிறாள்). நீ மார்க்கப் பற்றுள்ளவளை உன் கரம் கைப்பற்றுவது மூலம் வெற்றி பெறுவீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 364)

''மூஃமினைத் தவிர வேறு எவரையும் நீ தோழமை கொள்ள வேண்டாம். உனது உணவை இறையச்சம் உள்ளவரைத் தவிர எவரும் உண்ண வேண்டாம்;'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 366)

''ஒருவன், அவனது நண்பனின் மார்க்கத்தில் உள்ளான். எனவே நண்பராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதை உங்களில் ஒருவர் சிந்திக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்    (அபூதாவூது, திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 367)

''மனிதன் அவன் விரும்புகின்றவனுடன் தான் (மறுமையில்) இருப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 368)

''ஒரு கிராமக் காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் ''மறுமை நாள் எப்போது?'' என்று கேட்டார். அதற்கு, ''நீ என்ன தயார் செய்து வைத்துள்ளாய்?'' என நபி (ஸல்) திருப்பிக் கேட்டார்கள். ''அல்லாஹ்வை அவனது தூதரை விரும்பியது தான்'' என்று கூறினார். ''நீ, விரும்பியவருடன் இருப்பாய்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 369)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு