Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று! நாளை! - தொடரிலிருந்து ரிவைண்ட் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2016 | , , , , , ,

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் மூத்தவர். அனுபவம் நிறைந்தவர், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்தவர். முக்கியமாக, அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர். அண்ணா இருந்த போதே கட்சியின் பெரிய பதவியான  பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர். இன்னொரு பக்கம், கருணாநிதிக்கும் கட்சிக்குள் நல்ல செல்வாக்கு. தட்ட வேண்டிய இடத்தில் தட்டி வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்ந்த சுறுசுறுப்பான இளைஞர். கடுமையான உழைப்பாளி. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பதில் வல்லவர். தொண்டர்கள் மத்தியில் மாவட்டமெங்கும் இணைந்து பழகி ஒட்டி உறவாடி   நன்கு அறிமுகமானவர்.


போட்டி ஏற்பட்டுவிட்டது. வாக்கெடுப்பு நடத்தவேண்டிய சூழல். திடீரென நெடுஞ்செழியன் எழுந்தார்.  ‘தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஒரு மனதாக என்னைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் தேர்தலில் நிற்பேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். எனக்குப் போட்டி ஏற்பட்டுவிட்ட நிலையில், நான் போட்டியிட விரும்பவில்லை. போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த அறையில் இருந்தும் வெளியேறிவிட்டார். கூட்டத்தில் லேசான சலசலப்புகள் ஏற்பட்டன. எனினும், முக்கியப் போட்டியாளர் விலகிக் கொண்டதால் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக கருணாநிதி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உண்மையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்தவுடனேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் அழைத்துப் பேசத் தொடங்கி விட்டார் எம்.ஜி.ஆர். பேசப்பேச பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. விளைவு, முடிவெடுக்காமல் இருந்தவர்களையும் கருணாநிதியின் பக்கம் திருப்பத் தொடங்கினார். அதை எம்.ஜி.ஆரே பின்னாளில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். 

இதுகுறித்து நாவலர் நெடுஞ்செழியன் தனது சுயசரிதையில் ‘கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்து கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறார்.

பெரிய அளவில் கருணாநிதிக்கு ஆதரவு உருவாகியிருக்கிறது என்று தெரிந்ததும் நேராக கருணாநிதியிடம் சென்று பேசினார் எம்.ஜி.ஆர். பெரும்பாலானோரின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்கவே கூடாது என்று எம்.ஜி.ஆரும் மற்ற திமுக முன்னணித் தலைவர்களும் முடிவெடுத்தனர்.   பெரியாரின் ஆதரவும் கருணாநிதிக்கே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் தொடர்ந்து முதலியார் இனத்தவர்கள் முதல்வராக வந்த நிலை மாறி ஒரு பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வரட்டுமே என்றுதான்.  பக்தவத்சலத்தை தொடர்ந்து அண்ணா அதன்பின் நெடுஞ்செழியன் என்றால் தொடர்ந்து மூன்று முதலியார்களே முதல்வராக வந்திருப்பார்கள்.  

ஆக, அடுத்த முதலமைச்சராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அந்த அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நெடுஞ்செழியன். ‘ நான் திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவேன். கலைஞர் கருணாநிதி அமைக்கப்போகும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். எப்போதும்போல் கழகத் தொண்டினை ஆற்றிக்கொண்டு வருவேன்.’ என்று சொன்னதோடு நிறுத்தாமல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தன்னுடைய அறையைக் காலி செய்யும் முயற்சியில் இறங்கினார். அதைப் பார்த்த க. ராசாராம் எம்.பி கருணாநிதிக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாகக் கோட்டைக்கு வந்த கருணாநிதி, நேரே நெடுஞ்செழியனின் அறைக்குச் சென்று அவரிடம் பேசினார். துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவை முன்னவராகவும் நீங்களே இருங்கள் என்றார். சட்டமன்றத்தில் உங்களுக்கு அடுத்த இருக்கையில் நான் அமர்கிறேன் என்று சொல்லி நெடுஞ்செழியனின் கைகளைப் பற்றிக் கொண்டார். ஆனால் நெடுஞ்செழியனோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. நான் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன்; ஒரு முடிவுக்கு வந்தால் மாறமாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அதிருப்தி காரணமாக அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் நெடுஞ்செழியன். ஆனாலும் கட்சியின் மூத்தவரான அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள விரும்பினார் கருணாநிதி. உடனடியாக என்.வி. நடராசன், ப.உ. சண்முகம், ஏ. கோவிந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று நெடுஞ்செழியனிடம் பேசினர். பெரியாரும் நெடுஞ்செழியனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாவலரும் மற்றவர்களும் கண்ணைமூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கவேண்டும் என்றார் பெரியார்.

இதனைத் தொடர்ந்து 10 பிப்ரவரி 1969 அன்று கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.  

தி மு கவின் வரலாற்றில் நெடுஞ்செழியனின் பங்கு மகத்தானது. நாடெங்கும் சுற்றிப் பேசி நடமாடும் பல்கலைக் கழகம் என்று புகழப் பட்டவர். 1953 ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் கருணாநிதி யின் பெயர் இல்லை.  

பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961 ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன். சட்டையைக் கிழித்துவிட்டு சம்பத்தைதி மு க`விலிருந்து வெளியேற்ற வேலூர் பொதுக் குழுவில் கருவியாக செயல்பட்டவர் கருணாநிதி என்கிற செய்தியும் அன்று பேசப்பட்டது. 

தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்பிய  விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது.  ‘ அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரிகள். ( சம்பத் பெரியாரின் அண்ணன் மகன்). 

அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1962 தேர்தலுக்குப் பிறகு நெடுஞ்செழியன்தான் சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  

இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலிக  முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர் வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் அண்ணாவின் சவ அடக்கம் நடக்குமுன்னே தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது மேலே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் எம்.ஜி.ஆர் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்ததும். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்ததும் பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. 

தொடர்ந்து கட்சியின்  பொதுச்செயலாளர் பதவிக்கும் இருவருக்கும்   போட்டி உண்டாகும் சூழ்நிலை  ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தலைவர் பதவி உருவாக்கப் பட்டு , திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். அண்ணா மறைந்த பிறகு அவரது எண்ணங்களுக்கு மாறான முதல் அத்து மீறல் இதுவே.  இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.

1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன்.  அத்துடன் பொதுக் கூட்டங்களில் எம் ஜி யாரை காரசாரமாகத் தாக்கிப் பேசினார். அண்ணா தி மு கவின் தேர்தல் சின்னம் இரட்டை இலை  என்று அறிவிக்கப் பட்டபோது “ இரட்டை இல்லையா? முளைத்து மூன்று இலை  கூட விடவில்லை “ என்று நையாண்டி பேசினார்.  பதிலுக்கு எம் ஜியாரும் சர்க்காரியா கமிஷனில் கொடுத்த ஊழல் பட்டியலில் ஒரு  நிறுவனத்தில் சென்னை ஜெமினி மேம்பாலம் கட்டும் ஒப்பந்தம் பெற்றுத்தர வைர நெக்லசை பரிசாகப்  பெற்றார் என்று நெடுஞ்செழியன் மீது குற்றம் சாட்டி இருந்தார். 

என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். எம்ஜியாரால்  ப. உ . சண்முகம் உட்பட்ட பல முன்னாள் தி மு கவினர் இவ்விதம் அரவணைக்கப் பட்டனர். கருணாநிதி வசம்  தி மு க  சென்று சேர்ந்துவிட இவைகள் காரணமாயின. பேராசிரியர் அன்பழகனைத்தவிர ஒட்டு மொத்த திமுகவின் முன்னணித் தலைவர்கள் எம்ஜியாரோடு ஐக்கியம் ஆயினர்.  

நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.

இங்கு எழுதப் பட முடியாத வார்த்தைகளால் ஒதுக்கப் பட்ட  அலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர் சகிப்புத்தன்மைக்குப் பெயர் போன நாவலர்.  ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில்  ஐநூறு ஓட்டுக்கள் மட்டுமே  வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார். நடமாடும் பல்கலைக் கழகம் என்று நாடறிந்த ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் அடையாளம் அலங்கோல அரசியலால் இப்படி வெளிப்பட்டது. தன்னை உணர்ந்தார். தனது பலத்தை யும் அறிந்தார். 

1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. அண்ணா, கருணாநிதி எம்ஜியார், ஜெயலலிதா என்கிற  பல முதலமைச்சர்களின் அவையில் இரண்டாம் இடம் நெடுஞ்செழியனுக்கு நிறந்தரமாகிப் போனது. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார். 

திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மனத்தாங்களில் இவர்கள் பரிமாறிக்கொண்ட நாகரிகமான அரசியல் சொல்லாடல்கள் பலருக்கு உதாரணமாகத் திகழ வேண்டியவை. ஆனாலும் ஒரு முறை நெடுஞ்செழியனைப் பற்றி கருணாநிதி “ அவர் மனைவி பேச்சைக் கேட்பவர் ” என்று சொன்னபோது அதற்கு நெடுஞ்செழியன் சொன்ன பதில் , “ ஆமாம் ! நான் மனைவி பேச்சை கேட்பவன்தான். ஏனென்றால் நான் கேட்பதற்கு மனைவி மட்டுமே எனக்கு உண்டு “ என்று சொன்னார். இந்த வார்த்தைகள்,   பல சொல்ல மறந்த கதைகளை   ‘ கனிந்த மொழியில் ‘ சொல்லாமல் சொல்லும்.   

அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும். 

பல ஆண்டுகளாக தமிழக அரசியலை உற்று நோக்கும் பலருக்கு ஒரு ஆதங்கம் இருக்கலாம். ஒரு வேளை கருணாநிதியை எம் ஜி யார் ஆதரிக்காமல் நெடுஞ்செழியனை  அன்று முதல்வராக்கி இருந்து இருந்தால் அதன் பிறகு நடைபெற்ற அதிகாரப் போட்டிகளையும்  அறிவியல் ரீதியான ஊழல்களையும்  சட்டமன்ற குடுமிப்பிடி சண்டைகளையும்  நரகல் மொழி நாடகங்களையும்  இன்று வரை அரங்கேறிக் கொண்டு இருக்கும் பகைமை அரசியலையும் தமிழகத்தின் வரலாறு பார்க்காமலேயே இருந்திருக்கக் கூடும். அதே நேரம் திமுகவினர் வர்ணித்தது போல் வெண்டைக்காயாகவும் தான் ஒரு அரசியல் அசடு என்றும்  நிருபித்த நெடுஞ்செழியனின் நிர்வாக திறமையின்மையால் கட்சியும் ஆட்சியையும் இதுவரை காணாமலும் போயிருந்து இருக்கலாம். யார் கண்டது. ?

மீண்டும்   சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்….
முத்துப் பேட்டை  P. பகுருதீன் .B.Sc;

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு