Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மதீனாவில் நோன்பும் பெருநாளும்... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | May 28, 2016 | ,


இஸ்லாமிய ஆண்டின் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சஊதி அரேபியாவின் பல இடங்களில் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்த  எனக்கு, மதீனாவின் நான்காண்டுப் பணியின்போது கிடைத்த ரமளான் நோன்பும் பெருநாளும் என் வாழ்வில் மறக்க முடியா நினைவுகளைப் பதித்துள்ளன.  அந்த நினைவலைகளின் ஒரு சிறிய பிரதிபலிப்பே இக்கட்டுரை.

“மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர, மற்றப் பள்ளிகளில் தொழுவதைவிட எனது இந்த மஸ்ஜிதில் தொழுதால், ஆயிரம் மடங்கு கூடுதலாக நன்மை கிடைக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: சஹீஹுல் புகாரீ)

இம்மை-மறுமைக்கான பொன்னான வாய்ப்பு, எனக்கு மதீனாவில் பணியாற்றக் கிடைத்ததாகும்.  அதிலும் குறிப்பாக, புனித ரமளானில் கழித்த நாட்கள் - குறிப்பாக மஸ்ஜிதுன் நபவீயில் கழித்தவை - அவற்றின் மேன்மையைச் சொல்லால் வடிக்க முடியாது!   ‘ரவ்ளத்துல் முஷர்ரஃபா’வும் ‘ஜன்னத்துல் பகீஉ’ எனும் பொது மண்ணறையும் அவற்றின் புனிதத்துவத்தால் கண்களைப் பனிக்கச் செய்யும்!   ‘உஹ்து’ மலை, ‘கந்தக்’ பகுதி, ‘மஸ்ஜிது குபா’, ‘மஸ்ஜிது கிப்லத்தைன்’ முதலான இடங்கள் நபி வரலாற்றைப் பசுமையாக மனத்தில் பதிய வைக்கும். 


மதீனத்து மக்களுள் பெரும்பாலாரின் நளினத் தன்மை குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.  ஹரமை கண்ணியப் படுத்துவதும், அதில் இபாதத்துகளில் ஈடுபடுவதும், அதில் நோன்பு துறப்பதும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதும் ஆகியவற்றில் மதீனாவாசிகளுக்கு நிகர் அவர்களேதாம் என்பது மிகைக் கூற்றன்று!

ரமளானின் ‘அஸ்ர்’ தொழுகை முடிந்தவுடன் ‘மஸ்ஜிதுன் நபவீ’ கலைகட்டத் துவங்கிவிடும்!  எதற்காக?  நோன்பு துறக்கும் ஏற்பாட்டிற்காக!  ஒவ்வொரு குடும்பமும் செல்வந்தர்களும் வணிகர்களும் போட்டியிட்டுக்கொண்டு மஸ்ஜிதுக்குள் இடத்தைப் பிடித்து, ‘சுஃப்ரா’ விரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.  அவை அவர்களுக்காகவா?  இல்லை.  நோன்பாளி விருந்தினர்களுக்காக! 

அண்மையில் விரிவு படுத்திக் கட்டப்பெற்ற உள் பள்ளி, வெளிப் பள்ளி முழுவதும் உணவு விரிப்பால் நிறைந்து, வெள்ளைக் கோடு போட்டது போல் இருக்கும்.  நோன்பு துறப்பதற்கான பண்டங்களுள் ஒன்றுகூட ‘ஹரம்’ நிர்வாகத்திலிருந்து இருக்காது!  எல்லாம் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலிருந்து கொண்டுவந்த பண்டங்களேயாகும்!  பெரும்பாலும் மதீனத்தில் விளைந்த பேரீத்தம் பழங்களும் ரொட்டிகளும் தயிரும் அதனோடு சேர்த்துண்ணத் தக்க ஒரு விதமான ருசிப் பொடியும், ஜம்ஜம் தண்ணீரும்தான் நோன்பு துறக்கும் உணவுகள்.  நாம் உளூச் செய்துவிட்டுப் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பே - வெளியில் நடந்து வந்துகொண்டிருக்கும்போதே - நம்மை அன்புடன் எதிர்கொண்டு அழைப்பதற்காக இளைஞர்களும் இல்லப் பணியாளர்களும் வெளியில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.  அவர்களுள் யாராவது நம் கையைப் பிடித்துவிட்டால், அவர்களிடமிருந்து தப்புவது கடினம்.  நம்மை அன்புடன் அழைத்துக்கொண்டு, பள்ளிவாசலுக்குள் நீண்ட தூரம் கூட்டிச் செல்வார்கள்.  அவர்களுக்குரிய இடத்தில் கொண்டுபோய் அமர்த்திவிட்டு மீண்டும் ‘ஆள் பிடிக்க’ விரைந்துவிடுவார்கள்!  சில வேளைகளில், இரண்டுபேர் நம் கையைப் பிடித்துவிடுவார்கள்.  அப்போது அங்கே நடப்பது அன்பு இழுபறிதான்!

மதீனத்துச் செல்வந்தர்கள் சிலர் பிரியாணி, ‘கப்ஸா’ சோறு முதலியவற்றைப் பள்ளிவாசலுக்கு வெளியில் வைத்து, ‘சபீல்.. சபீல்’ என்று கூப்பிட்டு வினியோகம் செய்வார்கள்.  அவற்றைப் பெற்று நோன்பு துறந்து மகிழக் கூட்டம் ஒரு பக்கம் அலைமோதும்.  தயிர், ஜூஸ் முதலியவையும் பங்கிடப்படும்.  இவற்றையெல்லாம் பள்ளிக்கு வெளியில்தான் வைத்துச் சாப்பிட முடியும்.

இனி, நாம் உள்ளே என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.  வெள்ளைப் ‘ப்லாஸ்ட்டிக்’ விரிப்பில் எதிரெதிராக ஒழுங்கான வரிசையில் நோன்பாளிகள் அமர்ந்திருப்பர். அவர்களுக்கு முன் ரொட்டி (bread), தயிர், பேரீத்தம்பழம், தண்ணீர் எல்லாம் தாராளமாக வைக்கப்பட்டிருக்கும்.  ‘அதான்’ சொல்லும் நேரம் நெருங்க நெருங்க துஆவும் இஸ்திகுஃபாரும் மஸ்ஜிதை ஆட்கொள்ளும்.  ‘அதான்’(பாங்கு) தொடங்கியவுடன் நோன்பு துறப்பதும் தொடங்கிவிடும்.

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள். ஒன்று, அவர் நோன்பு துறக்கும்போது.  மற்றொன்று, அவர் தன் இரட்சகனை (மறுமையில்) சந்திக்கும்போது” என்ற நபிமொழியின் முழுப் பொருளையும் அங்குதான் நாம் பார்க்கலாம்.  அத்துணை மகிழ்ச்சி!  பரக்கத்தான மதீனத்துப் பேரீத்தம் பழமும் மக்கத்து ‘ஜம்ஜம்’ தண்ணீரும் கொண்டு நோன்பு துறப்பது பேரருளல்லவா?  பெருமகிழ்ச்சிக்கு உரியதல்லவா?

ஐந்தாறு நிமிடங்களில் நோன்பு துறப்பு முடிந்து, அனைவரும் தொழுகைக்கு ஆயத்தமாகிவிடுவார்கள்.  எஞ்சிய உணவுப் பொருள்களையும் ‘சுஃப்ரா’வையும் ஓரிரு நிமிடங்களில் அகற்றிவிடுவார்கள் மதீனாவாசிகளின் பணியாட்கள்!  உணவுப் பொருட்கள் சிந்துமா?  ஊஹூம்.  அந்தப் பேச்சுக்கே இடமில்லை!  அதுதான் அங்கே காணப்படும் ‘பியூட்டி’ என்று கூறலாம்.

நோன்பாளிகளின் தாகத்தை தீர்க்க, ரமளான் மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 150 டேங்கர் லாரிகளில் மக்காவிலிருந்து ‘ஜம்ஜம்’ தண்ணீர் 400 கிலோ மீட்டர் தொலைவுள்ள மதீனாவுக்குக் கொண்டு வரப்படுகின்றன எனக் கேள்விப்படுகிறோம்!  நம் கண்கள் வியப்பால் விரிகின்றன.

 மதீனாவில் உள்ள மற்ற பள்ளிகளில் தொழுவதைவிட மக்கள், குறிப்பாக வெளி நாட்டுக்காரர்கள், ‘மஸ்ஜிதுன் நபவீ’யில்தான் ‘தராவீஹ்’ தொழ விரும்பித் தொலைவிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள்.  நம் நாட்டுப் பள்ளிகளில் ‘ஹாஃபிளு’கள் தராவீஹில் குர்ஆன் ஓதுகிறோம் என்று, ‘ஓடுகிறார்கள்’. மதீனாவில் மற்ற ‘வக்து’களைவிடத் துரிதமாக ஓதத்தான் செய்கிறார்கள்; ஆனால், ஓதும் அழகும் அமைதியான ஓசை நயமும், கேட்போர் மனங்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

‘தராவீஹ்’ அல்லாமல், ரமளானின் பிந்திய பத்து நாட்களில் ‘கியாமுல் லைல்’ எனும் இரவுத் தொழுகையும் நடைபெறும்.  நடு இரவு ஒன்றரை மணிக்குத் துவங்கும் இத்தொழுகைக்காகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக ‘மஸ்ஜிதுன் நபவீ’க்கு வந்து தொழுவார்கள். 

புனித ரமளான் முடிந்து, ‘ஷவ்வால்’ முதல் நாளாகிய நோன்புப் பெருநாள் அறிவிப்பாகி, மதீனா முழுவதும் பேரொளியும் பெருமகிழ்வும் பொங்கும்.  நாங்கள் பெருநாள் ‘சுப்ஹு’க்கு முன் குளித்துவிட்டு, ஹரமுக்குச் செல்வோம்.  ‘சுப்ஹு’த் தொழுகை முடிந்த பின்னர் இருந்த இடத்தை விட்டு நகர்ந்தால், மீண்டும் அந்த இடம் கிடைக்காது!  அதனால், அந்த இடத்திலேயே அம்ர்ந்துவிடுவோம், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் பெருநாள் தொழுகையை எதிர்பார்த்து!  மதீனாவாசிகளும் தம் வெள்ளுடை அணிந்த ‘வில்தான்’களோடு (சிறுவர்களோடு) வந்து குழுமிவிடுவார்கள்.

ஒரு பெருநாளன்று என்னருகில் தொழுது அமர்ந்திருந்த அரபித் தந்தையர் தம் பிள்ளைகளை முடுக்கிவிட்டார்கள்.  அப்பிஞ்சுகளும் ஆர்வத்துடன் எழுந்து, அருகில் இருந்தோர் அனைவருக்கும் பேரீத்தம் பழத்தையும் ‘கஹ்வா’வையும் பகிர்ந்தளிப்பதில் பம்பரமாகச் சுழன்றார்கள்.  அதனைக் கண்டபோது, எனக்குக் கீழ்க்காணும் இறைவசனங்கள் நினைவுக்கு வந்தன:

و يطوف عليهم غلمان لهم كانهم لولو مكنون (الطور – ٥٢
يطوف عليهم ولدان مخلدون  بأكواب واباريق وكأس من معين (الواقعة -  ٥٦

எனது நாவு இந்த இறைவசனங்களை அசை போட்டது.  அந்த மகிழ்ச்சிக்குரிய இளங்காலைப் பொழுதில், ஆனந்தத்தால் என் கண்கள் பனித்தன!  

சுமார் ஆறரை மணிக்கெல்லாம் அறிவிப்புச் செய்யப்பட்டது.  அதன் பின் பெருநாள் தொழுகை தொடங்கிற்று.  அதனைத் தொடர்ந்து அருமையான, உருக்கமான ‘குத்பா’ தொடங்கிற்று.  இமாம் அவர்களின் கணீரென்ற கம்பீரமான குரலில் அமைந்த அந்த ‘குத்பா’, இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் கடமைகளின் சாரமாக அமைந்தது.  ‘குத்பா’ முடிந்த பின், அறிமுகமானவர்களும் அறிமுகமில்லாதவர்களும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொண்டனர்.  

பள்ளியை விட்டு வெளியில் வந்தவர்களை, “ஜியாரா..! ஜியாரா..!” என்று அரபி ‘டாக்ஸி’ ஓட்டுநர்கள் அழைத்தார்கள்.  அவர்களுடன் சென்றால், குறுகிய நேரத்தில் ஒருசில இடங்களை மட்டுமே காட்டுவர்.  மதீனாவில் அனுபவமுள்ள நம்மவர்களோடு, செலவைப் பாராமல், ‘உஹ்து’ மலை, அகழ்ப்போர் நடந்த இடம், மஸ்ஜிது ‘கிப்லத்தைன்’, ‘குபா’ மஸ்ஜிது, மஸ்ஜிது ‘ஜும்ஆ’ ஆகிய மதீனாவின் புனித இடங்கள் தவிர, அதிலிருந்து 200 மைல் தொலைவிலுள்ள ‘பத்ர்’ போர் நடந்த இடத்துக்கும் சென்று வரலாம்.                              
   
இப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள உண்மை!  

அதிரை அஹ்மது

20 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒவ்வொரு வரியையும் வாசிக்க வாசிக்க கண்கள் உணர்ச்சியால் பனித்தன !

ஜஸாக்கல்லாஹ் மாமா !

//இப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள உண்மை! //

இன்ஷா அல்லாஹ்... நிச்சயம் நிறைவேற்றுவோம்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நன்மையான நினைவலைகள். ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்து, மதீனாவில் தங்கி நீங்கள் பெற்ற பேறை நாங்களும் அடைய நாயன் நாடி வைப்பானாக ஆமீன்.

Noor Mohamed said...

இக்கட்டுரையைப் படித்து என் வாழ்நாளிலும் மறக்கமுடியாத நினைவுகளை நினைக்கு கொண்டு வந்து விட்டார்கள் அஹமத் காக்கா அவர்கள்.

1986-1988 ஆண்டுகளில் மதீனாவில் பணிபுரிந்த எனக்கு நோன்பின் காலங்களில் பகுதி அளவே மஸ்ஜித் நபவியில் பலன் பெரும் பாக்கியம் கிட்டின. காரணம்-மஸ்ஜித் நபவியிலுருந்து 15 கி.மீ. தூரத்திலிலுள்ள கம்பெனியில் பணி புரிந்ததால் முழுமையாக ரமழான் மாதத்தின் பலன் கிடக்கவில்லை.

இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் முழுப் பயனும் பெற வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

crown said...

நம் நாட்டுப் பள்ளிகளில் ‘ஹாஃபிளு’கள் தராவீஹில் குர்ஆன் ஓதுகிறோம் என்று, ‘ஓடுகிறார்கள்’. மதீனாவில் மற்ற ‘வக்து’களைவிடத் துரிதமாக ஓதத்தான் செய்கிறார்கள்; ஆனால், ஓதும் அழகும் அமைதியான ஓசை நயமும், கேட்போர் மனங்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.பதிவு செய்யவேண்டிய , தொழவைப்பவர்கள் மனதில் பதிய வேண்டிய வார்த்தைகள்.

crown said...

மனிதர் புனிதர் (ஸல்)அவர்கள் வாழ்ந்த பகுதியை கையைப்பிடித்து எல்லாவற்றையும் விளக்கி ,சுட்டி காட்டியதுபோல் இருக்கிறது. கை லேச கசிவது போல் பிரமையா? சாட்சா என் கை விரல் பிடித்து சென்றதாக ஒரு கற்பனை கலந்த பிரமை! அவ்வளவும் அழகாக, அளவாக சொல்லியவிதம் அருமையிலும் அருமை! அல்ஹம்துலில்லாஹ் எல்லோருக்கும் இந்த இடம் சென்று பயன் பெரும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள்வானாக. ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்.....அஹ‌மது சாச்சா அவர்கள் தன் மதீனத்து அனுபவத்தை அழகுற, உணர்வுப்பூர்வமாக இங்கு விளக்கி இருக்கிறார்கள்.

அல்ஹம்துலில்லாஹ், வருடம் 1997 முதல் 2000 முடியும் வரை சுமார் நான்கு ஆண்டுகள் புனித மதீனமாநகரின் பணிபுரிய அல்லாஹ் எனக்கு தவ்ஃபீக் செய்தான். மேலே சாச்சா சொல்லும் ஒவ்வொரு விசயத்தையும் நானும் அனுபவித்து இருக்கிறேன். மொழியறிவு அதிகம் இல்லாமல் ஆரம்ப காலத்தில் ஒரு பேரீத்தம்பழ ஏற்றுமதி/இறக்குமதி கம்பெனியில் பணிபுரிந்து பல கஷ்டங்களுக்கிடையே (வேலைப்பளு, குறைந்த ஊதியம்) மதீன மாநகரின் அமைதியும், புனிதமும் என்னை ஆட்கொண்டுவிட்டதால் ஊருக்கு கம்பெனியின் இரண்டாண்டுகால தவணை முடிந்து விடுமுறை வந்தும் என்னால் எளிதில் அங்கிருந்து நகர முடியவில்லை. கிட்டத்தட்ட 45 மாதங்கள் தொடர்ந்து அங்கு பணிபுரிந்த பின்னரே பாச‌முள்ள‌ ஈன்றெடுத்த‌ தாயை ஏதோ சூழ்நிலையால் பிரிய‌மின்றி வேத‌னையுட‌ன் ம‌தீன‌ மாந‌க‌ரை விட்டு க‌ண்ணீருட‌ன் பிரிய‌ நேர்ந்த‌து என‌க்கும்.

இன்று ம‌தீன‌ மாந‌க‌ரிலிருந்து வெகுதூர‌ம் (த‌ம்மாம்) ப‌ணிபுரிந்து வந்தாலும் எப்பொழுதெல்லாம் புனித உம்ரா ப‌ய‌ண‌த்தின் போது ம‌தீன‌ மாந‌க‌ர‌ம் செல்ல‌ வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த‌ சொற்ப‌ ம‌ணித்துளிக‌ளில் ப‌ழைய‌ நினைவுகள் பல பல‌ வ‌ந்து என்னை அந்த‌ க‌ண்க‌ளுக்குப்புல‌ப்ப‌டாத உள்ள‌ அன்பால் திக்குமுக்காட‌ச்செய்து விடும். அங்கிருந்து ந‌க‌ரும் ச‌ம‌ய‌ம் என் க‌ண்க‌ளில் என் தாயை விட்டு வெகுதூர‌ம் செல்ல ஆயத்தமாகி திரும்பி வ‌ந்து பார்க்க வாய்ப்பு கிடைக்குமோ என்ற‌ ஏக்க‌த்தில் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் துளிக‌ளுட‌ன் பிரியா விடை பெற‌ வைக்கும். அந்த‌ வேத‌னையான‌ சூழ்நிலை ஒவ்வொரு முறையும் ஏற்ப‌டும் என‌க்கு.

சில‌ வேளை வெள்ளிக்கிழமை விடுமுறையில் ம‌தீன‌ மாந‌க‌ரை தனிமையில் கால் ந‌டையாக‌ சுற்றி வ‌ருவேன்.

நான் ப‌ணிபுரிந்த‌ அந்த‌ பேரீத்த‌ம்ப‌ழ‌ க‌ம்பெனி புனித‌ ஹ‌ர‌ம் ஷ‌ரீஃபிலிருந்து உஹ‌த் ம‌லை எவ்வ‌ள‌வு தூர‌மோ அதே தூர‌ம் உஹ‌த் ம‌லையிலிருந்து என் நிறுவ‌ன‌த்திற்கு. நான் வேலை செய்த‌ நிறுவ‌ன‌த்தை சுற்றி பேரித்த மர தோட்ட‌ங்க‌ளும், கீரைக‌ள் ப‌யிர் செய்யும் வ‌ய‌ல்வெளிக‌ளும் இருக்கும். ந‌ம் ஊரில் ஓடுவ‌து போல் காலை வேளைக‌ளில் த‌ண்ணீர் ப‌ம்பு செட்க‌ளும் அருகிலுள்ள‌ தோட்ட‌ங்க‌ளில் ஓடிக்கொண்டிருக்கும். இர‌வில் ந‌டுவில் கம்பீர‌மாய் காட்சி த‌ரும் அந்த‌ உஹ‌த் ம‌லையைத்தாண்டி புனித‌ ஹ‌ர‌ம் ஷரீஃப் இருக்கும் அந்த‌ ப‌க்க‌ம் வானுய‌ற அதிக சக்தி வாய்ந்த மின் விள‌க்குக‌ளின் வெளிச்ச‌ம் பீறிட்டுச்செல்லும். தூர‌த்திலிருந்து பார்க்கும் எம‌க்கு வானிலிருந்து புனித‌ ஹ‌ர‌ம் ஷரீஃப் நோக்கி இறைய‌ருளே இற‌ங்குவ‌து போன்று காட்சிய‌ளிக்கும்.

இன்னும் ப‌ல‌, ப‌ல‌ நினைவுக‌ள் என்னை க‌ட‌ந்த‌ அந்த‌ வ‌ருட‌ங்க‌ளுக்கே இழுத்துச்செல்கிற‌து சாச்சாவின் இக்க‌ட்டுரை மூல‌ம்.

ம‌தீன‌ மாந‌க‌ரிலிருந்து புனித‌ ப‌த்ர் யுத்த‌க்க‌ள‌ம் 120 கி.மீ. தூர‌ம் தான் சாச்சா குறிப்பிட்ட‌து போல் 200 மைல்கள் அல்ல‌. சாச்சா ச‌ப‌ ம‌ஸ்ஜித் (ஏழு ப‌ள்ளிக‌ள்) ப‌ற்றி குறிப்பிட‌ வில்லை. ம‌வுண்ட் அயிர் (அயிர் ம‌லை) ப‌ற்றி ந‌பி (ஸ‌ல்..) அவ‌ர்க‌ளின் ஹ‌தீஸ் இருப்ப‌தாக‌ கேள்விப்ப‌ட்டிருக்கிறேன். சாச்சாவுக்கு தெரிந்தால் விள‌க்க‌வும்.

பெருநாள் அதிகாலை புனித‌ ஹ‌ர‌ம் ஷ‌ரீஃப்பே மக்கள் பூசி வரும் உயர் ரக வாசனை திரவியங்களால் க‌ம‌க‌ம‌க்கும். அங்குள்ள‌ ஒரு ர‌ம்மிய‌மான‌ சூழ்நிலையும், அழகிய‌ தக்பீர் முழக்கமும் எம்மை இறைவ‌னுக்கு ச‌மீப‌த்தில் கொண்டு போய் சேர்க்கும்.

யா அல்லாஹ்! இந்த‌ பாக்கிய‌ங்க‌ளைக்காண‌ யார்யாரெல்லாம் பிரிய‌ப்ப‌ட்டு து'ஆச்செய்கிறார்க‌ளோ, ந‌ல்ல‌ ஹாஜ‌த்து வைத்திருக்கிறார்க‌ளோ அவ‌ர்க‌ளின் அனைத்து ஹாஜ‌த்துக்க‌ளையும் நிறைவேற்றுவாயாக‌!!! ஆமீன்...

யா அல்லாஹ்! இந்த‌ புனித‌ ர‌ம‌ளானின் ப‌ர‌க்க‌த்தால் சிரியாவில் வாழும் அஹ்லே சுன்ன‌த்வ‌ல் ஜ‌மாத்தை பேணும் அனைத்து முஸ்லிம்க‌ளையும், ப‌ர்மாவில் துய‌ருற்றிருக்கும் அனைத்து முஸ்லிம்க‌ளையும் பாதுகாப்பாயாக!!! பாதுகாப்பாயாக!!! பாதுகாப்பாயாக‌!!! ஆமீன் யார‌ப்ப‌ல் ஆல‌மீன்.

ந‌ல்ல‌ ப‌ல‌ நினைவ‌லைக‌ளை இங்கு கொண்டு வ‌ந்து சேர்க்க‌ உத‌விய‌ அஹ‌ம‌து சாச்சாவிற்கு என் இனிய சலாமும், வாழ்த்துக்க‌ளும், துஆவும்.

ர‌ம‌ழான் க‌றீம்!!! ர‌ம‌ழான் முபார‌க்!!!

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அல்லாஹ் அருளால் சில‌ அர‌பிக‌ளின் குர‌ல் வ‌ள‌ம் திருக்குர்'ஆனை நோன்பு கால‌ த‌ராவீஹ் தொழுகையில் ஓதும் பொழுது முப்ப‌து ஜுஸ்வையும் ஒரே இர‌வில் ஓதி முடித்தாலும் ந‌ம‌க்கு கால் வ‌லிக்காது. அப்ப‌டி ஒரு அமைதி, ர‌ம்மிய‌ம், ம‌ன‌க்க‌ட்டுப்பாடு. அந்த‌ குர‌லுக்கு அல்லாஹ் கொடுத்த‌ பாக்கிய‌ம்.......மாஷா அல்லாஹ்.....நோன்பிற்கேயுரிய‌ ம‌க‌த்துவ‌ம்.....

இப்னு அப்துல் ரஜாக் said...

அஹமது சாச்சாவின் அனுபவக் கட்டுரையும்,சகோ நெயனாவின் அனுபவமும் எங்கள் கண்கள் முன்னே அந்த நபிப் பள்ளியை கொண்டு வந்து நிறுத்துகிறது.உலக முஸ்லிம்கள் யாவருக்கும் - மக்கா,மதீனா,பைத்துல் முக்கத்தஸ் செல்ல,அல்லாஹ் அருள் செய்வானாக - ஆமீன்

அப்துல்மாலிக் said...

நிச்சயம் அனுபவமுள்ள அனுபவித்த பதிவு இது, நானும் இதை அனுபவித்திருக்கேன் அல்ஹம்துலில்லஹ் அந்த ஆசையை நிறைவேற்றிய வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
//ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று,// நோன்பில் உம்ரா செய்யும்போதுள்ள பேரானந்தம் எப்பாவும் இருக்காது,
'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)

//பெருநாள் ‘சுப்ஹு’க்கு முன் குளித்துவிட்டு, ஹரமுக்குச் செல்வோம். ‘சுப்ஹு’த் தொழுகை முடிந்த பின்னர் இருந்த இடத்தை விட்டு நகர்ந்தால், மீண்டும் அந்த இடம் கிடைக்காது// நாங்கள் மக்கா ஹரமுக்கு அதிகாலை 2.30 மணிக்கே சென்று அமர்ந்துவிட்டோம்....

Yasir said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை...அஹமது காக்கா அவர்களின் ஒவ்வொருவரியும் உள்ளத்தில் ஒரு உணர்ச்சி பிளம்பினை உண்டாக்கியது என்றால் அது மிகை அல்ல...அல்லாஹ் எங்களுக்கும் இப்பாக்கியத்தை தருவானாக ஆமீன்

சகோ.நெய்னாவின் கூடுதல் தகவல்களும் இப்புனித பூமியை காணவேண்டுல் என்ற ஆவலை தூண்டிவிட்டது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பெரும்பாலும் சவுதி அரபிகள் தன் வாழ்நாட்களில் செல்வ செழிப்பில் பெரும்பகுதியை ஆடம்பரமாக கழித்து விட்டு இறுதியில் செட்லாக செலக்ட் செய்யும் இடம் புனித மதீன மாநகரமே.

எப்படி அங்கு நன்மைகள் செய்தால் குவியல் நன்மையும், அதே வேளை தீமைகள் செய்தால் அதே குவியல் தீமைகளுக்கான கூலியும் கிடைக்கும். எனவே இங்கு தங்கி இருப்பவர்கள் கடைசி வரை இறையச்சத்துடனும், உள்ளத்தூய்மையுடன் இருக்க வேண்டும். அல்லது உலக ஆசாபாசங்களால் தவறுகள் ஏதேனும் செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பின், உரியவர்கள் அங்கிருந்து வேறிடம் சென்று விடுவது நல்லது.

தமிழ் மக்களில் பலபேர் வெள்ளிக்கிழமை விடுமுறையில் கூட அக்கம்பக்கத்து ஜும்மாப்பள்ளியில் தொழுது விட்டு புனித ஹரம் ஷரீஃப் வராமல் ரூமில் முடங்கிக்கொள்கின்றர்.

எதுவுமே தூர‌மாக‌, தூர‌மாக அத‌ன் ம‌கிமையும், ம‌க‌த்துவ‌மும் விள‌ங்க‌ முடிகிற‌து.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அஸ்ஸலமுஅலைக்கும் இந்த கட்டுரையை படிக்கும்
பொழுது கண்களிள் கண்ணீர் ததும்பியது நான்
உம்ரா செய்து இருந்தாலும் ரமலான் மாதத்தில்
செய்யவில்லையே என்ற ஏக்கம் கண்கள் கலங்கு
கிறது மைத்துனர் நெய்னாவின் அனுபவங்களும்
சொல்லப்பட வேன்டியவைகள் தாம்

உங்கள் இருவருக்கும் எனது சலாம்

sabeer.abushahruk said...

மக்காவில் உம்ரா நிறைவேற்றும்போது ஏற்படும் பரபரப்பு சலசலப்பு ஆர்ப்பாட்டம் எல்லாம் சட்டென வடிந்துபோகும் மதீனாவுக்குள் நுழையும்போது. அமைதி மேவும்.

குறீபாக நாங்கள் காரில் உம்ரா செல்லும்போதெல்லாம் உம்ரா முடிந்ததும் மதினா முனவ்வராவில் சுபுஹு தொழுவதுபோலவே மக்காவிலிருந்து புறப்படுவோம்.

அப்படி சுபுஹு நேரத்தில் மதினாவைக்காணும்போது மனத்தைக் கொள்ளை கொள்ளும் அதன் அழகும் அமைதியும்.

அஹ்மது காக்கா, கிரவுன் சொன்னதுபோல விரலைப் பிடித்துக்கொண்டு உடன் வந்தது போல இருந்தது கர்டுரை எழுதப்பட்ட பாணி.

அல்லாஹ் ஆதிக் ஆஃபியா காக்கா.

sabeer.abushahruk said...

நோன்பு துறப்பதைப் பற்றியும் எழுதியிருப்பதால் கீழ்கண்டது பதிவுக்குத் தொடர்புள்ளதுதான்.

சத்யமார்க்கம் தளத்தில் வெளியான "முதல் மிடறு!" அதிரை நிருபர் வாசகர்களுக்காக கீழே.

நீ தந்த உணவைக்கொண்டே
நோன்பை நான் முடித்துக்கொள்ள
பேரீத்தம் பழத்திற்குள்
பெரும் பலத்தைப் பொதித்து வைத்தாய்
இறைவா...

முதல் மிடறு தண்ணீரில்
உடல் குளிரக் கண்டேன்
உதிரத்தில் உற்சாகம்
ஊற்றெடுக்கக் கண்டேன்

உள்நாக்கு நனையும்போது
உயிர் மீளக் கண்டேன்
குளிர்நீர் உடலுக்குள்ளே
குடல் வரைந்து செல்லக் கண்டேன்

நட்டநடு நண்பகலில்
வெட்டவெளிப் பணிக்களத்தில்
தகிக்கின்றக் கதிரவனால்
தேகத்திரவம் தீர்ந்துபோகும்

வெயில் சுட்டு உடல் காய
குளித்து வந்த தோரணையில்
கொப்பளிக்கும் வியர்வை
குடல் சுருங்கிக் காய்ந்துபோகும்

உப்புறையும் உடைகளிலே
உலர்ந்துபோகும் உதடுகளும்
பேச்சும் பிறழ்ந்து வரும்
நாக்கு ஒட்டும் மேலண்ணம்

உட்கார உடல் வலிக்கும்
கண்பார்வை காட்சி மங்கும்
வார்த்தையொன்றும் வாய்பேச
வருவதில்லை தாகத்தால்

ஆனால், அதிசயம்!
உன்மறையைக் கையேந்த
உறுத்தாது ஒரு வலியும்
நோன்பு வைத்த நெஞ்சுக்கு
நின்மறையில் நிழலிருக்கும்

நாக்குப் பிறழாது
நல்மறையை நானோத
உரக்க ஓதுகையில்
செவிக்கும் தேன் இறைவேதம்

கண்ணாடிக் குப்பிகளில்
குடிப்பதற்குக் கனிரசமும்
கழுவிவைத்த குவளைகளில்
கற்கண்டாய்ச் சாறிருக்கும்

எதையுமே நாடாது
இதயமே உன் தஞ்சம்
அறிவித்த நேரம்வரை
காத்திருக்கும் என் களைப்பு

முதல் மிடறு நீர்தன்னில்
புலன்கள் திறந்துகொள்ளும்
புது ரத்தம் பாய்ந்ததுபோல்
பார்வையும் துலங்கிவிடும்

முதல் மிடறு தண்ணீரில்
முடிச்சு ஒன்று அவிழ்ந்து வரும்
உயிர் சுரக்கும் உதிரத்தில்
ஈமானும் திடமாகும்

முதல் மிடறு தண்ணீரில்
நோன்பைப் புரிய வைத்தாய்
இறைவா
முடித்துவைத்த நோன்பில் நின்
முழுக்கருணை காட்டித் தந்தாய்

தணியாத தாகத்தினின்றும்
தரணியைக் காப்பாற்று
இறைவா...
ஒவ்வொரு மிடறு நீரையும்
உவப்போடு தந்துதவு!

ஸபீர் அஹ்மத் (அபு ஷாருக்)

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்,
ரமழான் - நோன்பு நேரத்தில்,நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த மதீனாமாநரின் அனுபவ கட்டுரையெழுதி இறையுணர்வை இன்னும் தூண்டிய அகமது சாச்சாவிற்கு நன்றிகள்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

//முதல் மிடறு தண்ணீரில்
உடல் குளிரக் கண்டேன்
உதிரத்தில் உற்சாகம்
ஊற்றெடுக்கக் கண்டேன்//
அனுபவப்பூர்வமான வரிகள்
கவிக்காக்கா அருமை!

Unknown said...

அதிரையில் ஒரு தஃவா சென்டர்?
http://adiraipost.blogspot.in/2012/07/blog-post_31.html

Haja Mohideen said...

தங்களுடைய அனுபவத்தில் சிறந்தது, எங்களுடன் பகிர்ந்துக்கொண்டது. எங்களுக்கு உம்ராவை செய்யவேண்டும் குறிப்பாக நோன்பு நேரத்தில் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவித்தது. அல்ஹம்துலில்லாஹ் இந்த எண்ணம் தோன்றியவர்க்கும்,எண்ணத்தை தோற்றுவித்தவர்க்கும் அல்லாஹ் இந்தமாதத்தில் செய்த உம்ராவுடைய நன்மையாக தந்தருள்வானாக! ஆமின்.

sabeer.abushahruk said...

எம் எஸ் எம்மிடம் மதினா வாழ்க்கையைப் பற்றி ஒரு தனிப் பதிவுக்கான நினைவலைகள் இருக்கும்போலிருக்கிறதே!!!

நோன்பில் எம் எஸ் எம்., அலாவுதீனின் புது பதிவு இல்லாதது ஒரு குறையாக இருக்கிறதே.

குறை நீங்குமா?

KALAM SHAICK ABDUL KADER said...

பசிதுறக்கும் நோன்பைத் துறக்க
ருசிமிகுந்த நீரும் கிடைக்க
கவிசிறக்கும் வார்த்தை யெழிலை
கவிபடைக்கும் வேந்தர் யெழுத

மறையோசைக் கேட்ட வண்ணம்
இறையோனை வாழ்த்தும் எண்ணம்
குறைகூறா ஆசான் எண்ணம்
நிறைவேற வேண்டி இன்னும்!

மதினா காணும் மாண்பினை
....மதிநா புகழும் நோன்பிலே
பதிவாய்த் தந்த பாங்கினைப்
....படித்த எனக்கும் வேண்டினன்
இதுபோல் பேறு நாடியே
....இறையும் அரு்ள வேண்டிநற்
கதியை அடைய தூண்டிய
....காக்கா ஆயுளும் நீள்கவே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு