Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எந்தப் பாதை உங்கள் பாதை? 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 19, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

யாரோ ஒருவர் போட்ட ஒரே பாதையில் காலம் காலமாக பயணம் செய்வதைவிட அதனினும் சிறந்த வேறு ஒரு பாதையை அமைக்கும் மனிதனையே இந்த உலகம் போற்றுகிறது. எந்தப்  பாதையை நீங்கள் பார்த்தாலும் அதை போட்டவரின் அடையாளத்தை அதில் காணலாம். உங்கள் அடையாளத்தை காட்டும் பாதை ஒன்றை நீங்களும் போடலாமே!”


மேற்கண்ட வரிகள் சென்ற நூற்றாண்டின் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிறந்த கவிஞரான அந்தோனியோ மச்சாதோ(Antonio Machado) என்பவர் எழுதிய ஒரு கவிதையின் சாரம்.

நம் நாடு சுதந்திரம்  பெறுவதற்கு முன் மூன்றே மூன்று ஆரம்பப்  பள்ளிகள்  மட்டுமே நமது ஊரில் இருந்தன . அவை 

1.     இந்து மாணவர் ஆரம்ப பாட சாலை 
2.     பெண்கள் ஆரம்ப பாட சாலை 
3.     தட்டாரத் தெருவில் இருந்த முஸ்லீம் ஆண்கள் ஆரம்ப பாட சாலை.

இவற்றுள்  இரண்டில் ஒன்றைத்தான்  மாணவர்கள் தேர்ந்தெடுத்துப்  படித்தார்கள். இந்தப்  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படிக்க முடியும். உயர்நிலைப்  படிப்பு படிக்க விரும்பினால் நம் ஊருக்கு தெற்கே ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரமுள்ள ராஜாமடம் சென்று அங்குள்ள உயர் நிலை பள்ளியில்தான் படிக்க வேண்டும். இப்பொழுது போல் பேருந்து வசதி இல்லாத காலம். அதிகாலையில் பகல் சாப்பாட்டை டிபன் பாக்சில் எடுத்துக்கொண்டு சில மாணவர்கள் நடந்தே சென்று படித்தார்கள். பகல் சாப்பாடு என்பது இன்று போல் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் இரட்டை முட்டை போட்ட லாப்பையோ, பாம்பே டோஸ்டோ, சிக்கன் பர்கரோ , சேமியா பிரியாணியோ, வெஜிடபிள் பிரியாணியோ அல்ல. பெரும்பாலும் நீர்ச்சோறு அல்லது பழைய சோறு என்று அழைக்கப்படும் சாப்பாடும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது நாலு பச்சை வெங்காயம்தான்.

உயர் கல்வி பெற முடியாத மற்ற மாணவர்கள் கடிதம் எழுதவும் கை எழுத்து போடவும் தெரிந்தால் போதும் என்ற மன நிறைவோடு கல்விக்கு ஒரு முழுக்கு போட்டார்கள். இவர்களுக்கு கடிதம் எழுத கொஞ்சம் தெரியுமே தவிர. ஆங்கில எழுத்தில் அட்ரஸ் எழுதத்  தெரியாது. தமிழே அரைகுறையாக எழுதுவார்கள். ‘ஆண்டவன் துணை செய்வானாகவும்’ என்று எழுதத் தெரியாமல் ‘ஆண்டவன் தூணை செய்வானாகவும்’ என்று  எழுதிய சம்பவங்களும் நடந்தன.   ஐந்தாம் வகுப்பு வரை A B C  என்று தொடங்கும் ஆங்கில அகர வரிசை எழுத்துக்கள் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் உயர் நிலைப்  பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த பின்தான் A B C  யை காணும் பாக்கியம் மாணவர்களுக்குக் கிட்டியது. இப்படி அடிப்படையில் உயர் கல்வி பெறமுடியாத சூழ்நிலைதான் மூட்டை தூக்கிகளாகவும், எடுபிடி வேலை செய்பவர்களாகவும், சமையல்காரர்களாகவும் பிழைப்பு நடத்த மலேயா, சிங்கப்பூர் என்று கடல் கடந்து செல்லக் காரணமானது.

ராஜாமடம் என்ற ஊரையும் அதிராம்பட்டினத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அதிராம்பட்டினத்தின் ஒரு தெருவுக்குக்  கூட ராஜாமடம் ஈடாகாது. ஆனால் அந்த ஊரில் உயர்நிலைப்  பள்ளி இருந்தது. அந்தப் பள்ளி பனை மரம் போன்றோ அரளிச்  செடி போன்றோ  தானாக முளைக்கவில்லை. கல்வியின் அவசியத்தை உணர்ந்த சிலர் அங்கே வசித்து வந்தார்கள். அவர்கள் அரசின் கதவை தட்டினார்கள்; கதவு திறந்தது;. கேட்டார்கள்; கிடைத்தது.

அன்றைய சூழலில் கல்வியின் மகிமை அறியாதிருந்த நம்மூர் பெரும் தலைகள் கேட்கவில்லை; அதனால் கிடைக்க வில்லை. அதிராம்பட்டினத்தின் வாசிகளான நாம் “ஐந்தே போதும் ஐந்துக்கு மேல் வேண்டவே வேண்டாம்” என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டே காலம் கடத்தினோம். பெண்களுக்கு அதுவும் கிடையாது.

எல்லோரும் படித்து முன்னுக்கு வந்தால் நம் V I P அந்தஸ்து போய்விடும் என்ற பயம் ஒரு பக்கம், சபை கூடி “நாயம்” பேசி பரம்பரை பரம்பரையாக நாட்டாமைப்  பட்டத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகுமோ என்ற அச்சத்தால் தற்காப்பு நடவடிக்கையாக உயர் கல்விக்கு வழி காணாமல் இருந்தார்கள்.

ஆனால் “எதற்கும் ஒரு காலமுண்டு பொறுத்திரு மகனே”” என்று விஸ்வநாதன் தன் குரலில் பாடிய பாடலை நீங்கள் கேட்டிருக்க கூடும்.

ஆம்! அந்தப் பொறுமையின்  விடியல் 25.06.1949   ல் உதித்தது ஒரு வேர் கொண்ட உதய சூரியன்; அதிரை மண்ணில் அது பதித்தது தன் வேர்களை. அந்த நாள் அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் உயர் நிலை பள்ளியின் பிறந்த நாளாகும். இந்தக் கல்விக் குழந்தையை கரங்களில் ஏந்தி தொட்டிலில் இட்டவர் கண்ணியம் மிக்க காயிதே மில்லத் ஜனாப் முகமது  இஸ்மாயில் சாகிப்  அவர்களாவார்கள்.   அது வேரோடும் கிளையோடும் விழுதோடும் கூடிய ஆலமரம் போல வளர்ந்தது.


அதைத் தொடர்ந்து மற்றும்மொரு நல்ல மரம் நடப்பட்டது. அதுதான் காதர் முகைதீன் கல்லூரியாகும். நட்ட மரங்கள் இரண்டுமே நல்ல மரங்கள். பூத்தன , காய்த்தன , கனிந்தன . இந்தப் பழத் தோட்டத்தை மேலும் சிறப்பாக்க  பெண்களுக்கான தனி மேல்  நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. மாஷா அல்லாஹ்.  

ஆயிரம் ஆயிரம் பறவைகள் வந்து தன் கல்விப்  பசி போக்க கனியுண்டு களித்தன . இளைப்பாற வந்தவர்களுக்கு  நிழல் கொடுத்தது. அது நடு ஊரில் பழுத்த நல்ல மரமாக எல்லோர்க்கும் கல்வி எனும் கனி கொடுத்தது. ஆனாலும் வெளியூர் பறவைகள் இந்த மரங்களில் வந்து தங்கி கல்விப் பழம் கொத்திப் பயன் அடைந்ததைப் போல் உள்ளூர்ப் பறவைகள் தேடி வரவில்லை.  


மர்ஹூம் காதர் முகைதீன் அப்பாவின் நன்கொடையை குடத்திலிட்ட விளக்காகவே வைக்காமல் குன்றில் இட்ட தீபமாக மாற்றி பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர் மாணவியரின் கல்விக் கண்கள் திறக்க வழி செய்த மர்ஹூம்  S.M.S சேக் ஜலாலுதீன் அவர்களை நாம் மறக்க முடியாது. அல்லாஹ் அவர்களுக்குத்  தன்னிடம் உள்ள நல்லிடத்தை கொடுக்க துஆ செய்வோமாக. காலம் இதை மறந்து விடாது. இது காலம்  காலந்தோறும் பேசப்படும் காதர் முகைதீன் அப்பா விட்டுச்சென்ற அடையாளங்கள். அதற்கு மெருகூட்டி அதை நடு ஊரில் பழுத்த நல்ல மரமாக்கிய மர்ஹூம் S.M.S  சேக் ஜலாலுதீன் அவர்களின் அடையாளங்கள்.

அரசாங்கம் கை கொடுக்காத அதிராம்பட்டினத்துக்கு தனது  வள்ளல்  சிந்தனையால் கல்வி வளம் கொடுத்த மர்ஹூம் காதர் முகைதீன் அப்பா அவர்களின் திரண்ட சொத்தும், மர்ஹூம் சேக் ஜலாலுதீன் அவர்களின் சலிக்காத  உழைப்பும் கல்விக்காகக்  கை கொடுத்தாலும் உள்ளூர்வாசிகள் எந்த அளவுக்கு அவர்களின் மடிகளில் தானாக கனிந்து விழுந்த பழத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்கள் என்பது கேள்விக்குறியே. உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டதும், அதில் சேர்ந்து படிப்பதற்கு உள்ளூரில் அவ்வளவு ஆர்வம்  காட்டப்படவில்லை. எனது இளமைப் பருவத்தில் ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு பெற்றதும் நானும் எனது நண்பர்களும் ஆறாம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து படிப்பதற்காக முயற்சி  செய்தபோது எங்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக,  ‘என்ன ஹை ஸ்கூலா ? போய் இங்க்லீஷ் படிக்கப் போறியலோ? படிச்சு பெரிய கலெக்டர் ஆயிடுவியலோ?’ என்றெல்லாம் சில பெரிசுகள் நையாண்டி செய்தன. அதில் ஒருவர் எங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதற்கு நான் சொன்ன பதிலும் எனது நினைவுப் பதிவேடுகளில் இன்னும் உள்ளன. 

சின்னப் புளிய மரம். இது கடற்கரைத் தெருவின்  போதி மரம்  அல்ல. வம்பு பேசுவோர் வலிய வந்து கூடும் மடம். மலேசியாவிலிருந்து விடுமுறையில் வருபவர்கள்  கூடி தாயக்கட்டை, ஆடுபுலி ஆட ஒன்று கூடும் இடம். அத்துடன் அடுத்தவன் வீட்டில் அம்மி நகருதா ஆட்டுக்கல் நகருதா என்ற  ஊர் ‘பசாது’ களுக்கும் அங்குக்  குறைவு இருக்காது.

அன்றொருநாள் நானும் என்னுடன் புதிதாக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவர்களும் ஒன்றாக பள்ளிக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தோம். (அன்றெல்லாம் ஹீரோ ஹோண்டா பைக்கும் இல்லை; அதை வாங்கித்தர அன்றைய வாப்பாமார்களுக்கு வசதியும் இல்லை). அப்படிப் போய்க் கொண்டு இருக்கும்போது  தெருவின் முக்கியஸ்தர் எங்களைத் தடுத்து நையாண்டித் தொனியில், “ நீ யார் மவன்டா? எத்தனாவது படிக்கிறே? “     என்று கேட்டார். என் நண்பர்கள் பதில் சொன்னார்கள். நானும் சொன்னேன். “ அது சரி இங்க்லீஷ் படிக்கிறியளே! பலாச்சுளைக்கு இங்க்லீஷில் எப்புடிச்  சொல்லணும்? தெரியுமா?” என்று கேட்டார். உண்மையில் எங்களில் யாருக்கும் இதற்கு விடை தெரியாது. எனது நண்பர்கள் தெரியாது தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். கேலிச் சிரிப்புடன் அவர் என்னிடமும் கேட்டார். ஏற்கனவே பள்ளிக்கு நேரமாகிவிட்டது . இந்த வெட்டிக்குளத்துக்கு   அருகில் வெட்டியாக உட்கார்ந்து கொண்டு  எங்களை வேதனைப் படுத்தும் அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு நோஸ்கட் கொடுக்க வேண்டுமென்று எண்ணி  நான் பதில் சொன்னேன். “ பலாச்சுளைக்கு இங்க்லீஷ் என்னன்னு  நான் லண்டனுக்குப் போயி,  பலா  பழம் வியாபாரம் செய்யும் போது பலா பழத்திற்கு இங்கிலிஷில் எப்படி சொல்வதென்று தெரிந்து கொள்கிறேன். 

இப்போ நாங்க ஸ்கூலுக்குப்  போகனும்  “ என்று அந்தப் பாழாப் போனவரிடம் சொல்லிவிட்டு விறு விறு என்று நடையைக் கட்டினேன்.     இது பற்றி அவர் என் மாமா இடம்  புகார் செய்ததாக பின்பு கேள்விப்பட்டேன். இப்படியெல்லாம் படிப்புக்குத் தடை செய்பவர்கள் இருந்தார்கள். இதற்குக் காரணம் அடிப்படையில் நமது ஊரார் சாய்ந்தால் சாயுற பக்கக் கொள்கைகளையும், செக்குமாடு சித்தாந்தத்தையும் கடைப்பிடித்து வந்ததே. புகைவண்டி நிலையத்தையே நமதூருக்குள் வேண்டாம் தூரமாகப் போகட்டும் என்று ஊரைவிட்டு தூரமாக  ஒதுக்கியவர்களாயிற்றே . ஆரம்பத்தில் இன்றுள்ள வண்டிப் பேட்டையில்தான் நமதூரின் ரயில் நிலையம் அமைய இருந்ததாம்.     

பிற்காலங்களில் கூட நமது ஊர்க்  கல்லூரியில் இருந்த பட்டப் படிப்புகளின் பாடப்பிரிவுகளையே சென்னை, திருச்சி போன்ற  வெளியூர்க் கல்லூரிகளில் சேர்ந்து படித்த நம்மூர்வாசிகளின் பிள்ளைகள் ஏராளம். அதற்கு சொல்லப்பட்ட காரணம் அதிராம்பட்டினத்தில் படித்தால் இங்க்லீஷ் டெவலப் ஆகாது என்பதே. ஆனால் உற்று நோக்கினால் அதிரையிலே பிறந்து அதிரையிலேயே படித்து வளர்ந்தவர்கள்தான் பேராசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பரிணமித்தார்கள். வெளியூர்க் கல்லூரிகளில் போய் படித்தவர்கள் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.

இன்றைக்கு நமதூரில் பெண்களுக்கிடையில் நல்ல கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. பல பெண்கள் நமது கல்லூரியிலும், பள்ளிகளிலும் படித்து வருகிறார்கள். வள்ளல் காதர் முகைதீன் அப்பா அவர்கள் போட்ட கல்விப்  பாதையே இதற்குக் காரணம்.  இதேபோல் திருச்சியில் மர்ஹூம் ஜமால் முகமது அவர்களும் உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர் அப்பா அவர்களும் மேல்விஷாரத்தில் வள்ளல் அப்துல் ரஹீம் அவர்களும் தங்கள் தாங்கள் ஊர்களின்  கல்விப் பாதையை கருணை உள்ளத்துடன் போட்டு இந்த சமுதாயத்துக்கு நல்வழி காட்டினார்கள். இந்த மேன்மையான மக்களுக்காக நாம் து ஆச்செய்வோம்.   

அதுபோல் நீங்களும் ஒரு நல்ல பாதை போட்டு அதில் உங்களின் அடையாளத்தை பதிக்க வேண்டும் என்ற வேட்கையில் நான் ஸ்பெயின் நாட்டு கவிஞர் அந்தோனியோ மச்சாதொவின் கவிதை வரிகளை ஆரம்பத்தில் எடுத்து காட்டினேன். உங்களுக்குப்  பின் உங்கள் அடையாளத்தை உலகில் பதிக்க நீங்கள் ஒரு பாதை போட வேண்டும். 

எந்தப் பாதை உங்கள் பாதை?. 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

முகமது பாரூக்

24 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

வருக வருக...!

தங்களைப் போன்றவர்களின் அனுபவங்களே சிறந்த படிப்பினைகள்.

முதல் பதிவிலேயேத் தங்களின் எழுத்து தனி ஆவர்த்தனம் செய்கிறது.

இன்னும், தங்களின் மலேசிய அனுபவங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உங்களின் வரவு நல்வரவாகட்டும் !

மற்றுமொரு அசத்தல் ட்ராக்கில் எழுத்துப் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது !

பாதையைத் தேர்ந்தெடுக்க போட்டிருக்கும் விதை அருமை...

பாலம் கட்ட கம்பி கட்டியிருக்கிறீர்கள், ஆரம்ப முதல் பாராவும் நிறைவில் வைத்திருக்கும் முத்திரை அருமையோ அருமை !

Iqbal M. Salih said...

எடுத்த எடுப்பிலேயே, நன்மைகளில்
மிகச்சிறந்த நன்மையாகிய
ஸதக்கத்துல் ஜாரியாவைப் பற்றி
துவங்கி இருக்கிறீர்கள்.

மாஷா அல்லாஹ்!

மென்மேலும், தங்களின் பதிப்புத்
துறையிலிருந்தும் பயனான விஷயங்கள்
நிறைய எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்
இன்ஷா அல்லாஹ்!

KALAM SHAICK ABDUL KADER said...

//A B C என்று தொடங்கும் ஆங்கில அகர வரிசை எழுத்துக்கள் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது. //

//இப்படி அடிப்படையில் உயர் கல்வி பெறமுடியாத சூழ்நிலைதான் மூட்டை தூக்கிகளாகவும், எடுபிடி வேலை செய்பவர்களாகவும், சமையல்காரர்களாகவும் பிழைப்பு நடத்த மலேயா, சிங்கப்பூர் என்று கடல் கடந்து செல்லக் காரணமானது.//

//அதிரையிலே பிறந்து அதிரையிலேயே படித்து வளர்ந்தவர்கள்தான் பேராசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பரிணமித்தார்கள். வெளியூர்க் கல்லூரிகளில் போய் படித்தவர்கள் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.//
மனத்தினில் ஆழமாய்ப் பதிந்து, கண்களில் நீரை வரவழைத்த வரிகளின் வலிகள், எம் முன்னோர்களின் வாழ்கைப் பயணத்துடன், நம்முடைய இக்கால வாழ்க்கைப் பயணத்தை ஒப்பிட வைத்தன. மேலும், தங்களின் எழுத்தோவியம் கவித்துவம் நிரம்பி அழகிய வர்ணணைகளுடன் வாசிக்கவும் நேசிக்கவும் வைத்தது என்பதை மறக்காமல் ஈண்டுப் பதிவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

தங்களின் முழு விவரம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

Unknown said...

//மேல்விஷாரத்தில் வள்ளல் அப்துல் ரஹீம் அவர்களும்//

அப்துல் ரஹீமில்லை. அப்துல் ஹகீம்.


//தங்களின் முழு விவரம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்//

புகைப்பட வித்தகர் ஹமீதின் வாப்பா.

மொத்தத்தில், பயனுள்ள நினைவேந்தல்; நன்றிக் கடன் இந்த எழுத்தோவியம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

மக்கள் பயன் பெற உழைத்த அந்த நன் மக்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

Shameed said...

மக்கள் படித்து பயன் பெற உழைத்தவர்களை பற்றிய ஒரு நல்ல நினைவு கூறல்

அதிரை சித்திக் said...

மக்கள் பயன் பெற உழைத்த அந்த நன் மக்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

Unknown said...

Assalamu Alaikkum,

Thanks for reflecting similar vibration of my thoughts.
"அதிராம்பட்டினத்தில் படித்தால் இங்க்லீஷ் டெவலப் ஆகாது என்பதே. ஆனால் உற்று நோக்கினால் அதிரையிலே பிறந்து அதிரையிலேயே படித்து வளர்ந்தவர்கள்தான் பேராசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பரிணமித்தார்கள். வெளியூர்க் கல்லூரிகளில் போய் படித்தவர்கள் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை."

Alhamdulillah, I have studied in Adirampattinam, from 1st standard to M.Sc. Computer Science, studied well, scored higher marks/rank than Tiruchirappali College students.

Wherever students study they have to have interest and involvement, then there will be real benefit of education. And education never stops after the college in this information technology era.

I pray wholeheartedly for philanthropist families of Khadir Mohideen Group of Institutions for sustained blessings from God Almighty here and hereafter.

Thanks a lot for the brother Mohamed Farook, for sharing the chronological pictures of our level of education, educational institutions in Adirampattinam.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஹ்லன் வ ஸஹ்லன்

புள்ளையோட தமிழ் நடை வாப்பாவின் பாதை என்பது இப்ப தான் தெரியுது.

அதிரையின் ஆரம்ப கல்வி பற்றிய அரிய சுவையான தகவல்கள்.

ஜஷாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

இன்சா அல்லாஹ் அடிக்கடி வாங்க!

Unknown said...

சபாஷ் சகோ முகமது பாரூக்,

அன்று கண்ட அதிரைக்கும் இன்று காணும் அதிரைக்கும் உள்ள வளர்ச்சியில் உங்களைப் போன்றவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

அதிரை வீதிகளில் சேடைக்குப் பஞ்சமில்லை. எல்லாத்துக்கும் ஒரு நக்கல்தான். படிக்கப் போறவனை படிக்க விடாமல் அடிக்கும் நக்கல் அங்கே தாங்க முடியாததாய் ஒரு காலத்தில் இருந்தது.

அன்றைய நாட்களில் என் இளவயதில் அதே வயது ஒத்த பையன்கள்கூட படிப்பைக் கடுமையாக நக்கல் அடிப்பார்கள்.

இனிமேல் இந்த ஊருக்கே வரக்கூடாது என்று நினைத்த நாட்களும் உண்டு.

ஆனால் இன்று எத்தனை எத்தனை கல்விமான்கள்? எத்தனை எத்தனை பேராசிரியர்கள்? எத்தனை பண்பாடான பேச்சு?

ஆட்டைக் கழுதையாக்கினவன் அதிராமடத்தான் என்பார்கள் அன்று. இப்போது ஆட்டையும் அறிவுடையதாய் ஆக்கிப் பார்க்கும் பார்வை உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது.

எல்லாவற்றுக்குமே காரணம் கல்விதான் என்பதை இத்தனை அழகாய் எவராலும் சொல்லமுடியாது சகோ முகமது பாருக்

வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மூத்தோர் வாக்கு அமிர்தம் என்பார்கள். உங்களின் எழுத்து அதை மெய்ப்பித்து இருக்கிறது. மிகச்சிறு வயதிலேயே நீங்கள் பள்ளிக் கூடத்தில் படிக்கிற காலங்களில் நோட்டு புத்தகங்களின் கடைசிப் பக்கங்களில் கவிதைகளை எழுதி வைத்திருப்பதைப் படித்து ரசித்து இருக்கிறேன்.

உங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தால் சிரிப்புக்கும் சிந்தனைக்கும் பஞ்சமிருக்காது. நேரம் போவதும் தெரியாது. நீங்கள் எழுதி , உங்கள் வீட்டின் மேல்மாடியில் போட்டு வைத்திருக்கும் கட்டுரைக் கட்டுக்களை கீழே இறக்கி , இங்கே பதிய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

எனது ஒவ்வொரு எழுத்தும் உங்களுக்கு நன்றி கூறிக்கொண்டே இருக்கும் . காரணம் தெருவில் போய் கைகளில் மணலை அள்ளி வரச்செய்து அதில் என் விரலைப் பிடித்து ஆனா ஆவன்னாவுக்கு வளைத்து ஏற்றபடி எழுதச்சொல்லித் தந்தவர்கள் நீங்கள்.

பள்ளி- பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டால் தண்டனையாக உங்களிடம் சின்ன வயதில் நான் வாங்கிய அடி, ஐம்பத்து ஒன்பது அகவை ஆனாலும் இன்னும் எனக்கு மறக்கவில்லை. ஏதாவது சேட்டை செய்தால் " மச்சான் வீட்டில் இருக்கிறார்களா?" என்று கேட்டுக்கொண்டும், உங்களின் காலணி நடை வாசலில் கிடக்கிறதா என்று பார்த்துக்கொண்டும் பூனை மாதிரி வீட்டுக்குள் வருவதும் மறக்கவே முடியவில்லை. எனது முதல் ஆசிரியர் நீங்களே.

தங்களை அனைவருடனும் சேர்ந்து வரவேற்கிறேன். தம்பி கவிஞர் சபீர் அவர்கள் கூறுவது போல் தங்களின் மலேசிய அனுபங்களை அள்ளித் தரவேண்டும் அத்துடன் நீண்ட காலம் நூல் வெளியீடு, பாடபுத்தக விற்பனை என்று அனுபவப்பட்ட தங்களின் அனுபவப் பக்கங்களை எங்களுக்கும் விரித்து வைக்க வேண்டுமென்றும் கோருகிறேன்.

இறைவன் தங்களுக்கு நல்ல சுகத்தையும், நீண்ட ஆயுளையும் தந்து எங்களை வழி நடத்த வேண்டுமென்று து ஆச செய்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

எனக்கு உங்கள் கை பிடித்து நடந்து வந்த உணர்வுதான் எப்போதும் போல்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அந்தக்காலத்தின் நடப்புகளை சொல்லி இருந்தாலும் நல்ல அழகான எழுத்து நடை. தொடருங்கள் காக்கா....

முதன்முதலில் 1989, 1990களில் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக சீருடை அறிமுகப்படுத்தப்பட்ட சமீப காலத்தில் கூட அதை தெருவில் அணிந்து பள்ளிக்கு வர வெட்கப்பட்டு (வழியில் யாரும் பெரலி,கிரலி பண்ணிடுவாங்களோண்டு பயந்துக்கிட்டு) ஒரு பையில் சீருடைப்பேண்ட்டை மடித்து வைத்துக்கொண்டு கைலியோடு வந்து வரும் வழியில் டேட் கடை என்று அழைக்கப்படும் அந்த டீக்கடையில் கைலியை கழற்றி அந்த பேண்ட்டை வேண்டாவெறுப்பாக போட்டுச்சென்ற மாணவர்கள் பலர்.

உலக தமிழினத்தலைவர் என்று சொல்லும் டாக்டர் கலைஞர் கூட அவரின் பாஸ்ப்போட்டில் தமிழில் கையெழுத்திட்டிருக்கமாட்டார். ஆனால் ந‌ம்மூரில் சரிவர படிக்காமல் பார்க்க செக்கச்செவேண்டு மட்டும் இருக்கும் எத்தனையோ இளைஞ‌ர்க‌ள் கூட‌ த‌ன் பாஸ்ப்போர்ட்டில் த‌மிழில் தான் கையெழுத்திட்டிருந்த‌ன‌ர் அந்த‌ வேளையில். அந்த‌ நேர‌த்துலெ இங்கிலீஸ்லெ கையெழுத்துப்போட்டால் குண்ட‌ர் சட்ட‌மும் பாயாது, போலீசும் புடிக்காது. போட‌த்தெரியாதுங்க‌......

இப்ப‌ உள்ள‌ விழிப்புண‌ர்வும், ஆர்வ‌மும் அன்றிருந்திருந்தால் இந்நேர‌ம் ந‌ம்மூரில் எவ்ளோவ் க‌ல‌க்ட்ட‌ர், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், சிற‌ப்பு ம‌ருத்துவ‌ர்க‌ள், பேராசிரிய‌ர்க‌ள், அர‌சிய‌லை ஆட்டுவிக்கிம் ஆட்சியாள‌ர்கள், விஞ்ஞானிகள் எக்க‌ச்ச‌க்க‌மா உருவாகி இருப்பார்க‌ள் இல்லையா?

Thameem said...

நான் பள்ளிகளிலும் , கல்லுரிலும் படித்த ஆங்கில இலக்கணத்தைவிட என் தகப்பனாரிடம் கற்றுக்கொண்ட இலக்கணம் அதிகம்.

பொதுவாக எல்லா அறிஞர்களையும் கேட்டால் புத்தகம் எனது நண்பன் என்பார்கள். ஆனால் புத்தகங்களை கேட்டால் மதிப்பிற்குரிய முகமது பாருக் தான் எனது நண்பன் என்று சொல்லும்.




அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஸதக்கத்துல் ஜாரியாவான
கல்விப் பணிக்கு செல்வங்களையும்,
நேரங்களையும் தந்த அவர்களுக்கு
வல்ல அல்லாஹ் நல்ல பதவி வழங்கி
நல்லருள் புரியட்டும்!

மாஷா அல்லாஹ்!
அழகிய மலரும் நினைவுகள்!
அழகிய எழுத்து நடை!
தொடர்ந்து எழுதுங்கள்!
வாழ்த்துக்கள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் மூத்த சகோதரர் பாரூக் காக்கா அவர்களின் ஆக்கம் என்னைப் போன்றவர்களுக்கு ஆறுதல் ஊக்கம். நான் ஆறுதல் என்று சொன்னதற்கான காரணம் எந்தப் பாதை என் பாதை என்ற பதிலுடன் விரைவில் ஒரு தனிப் பதிவாக எழுத எண்ணியுள்ளேன்.

//பிற்காலங்களில் கூட நமது ஊர்க் கல்லூரியில் இருந்த பட்டப் படிப்புகளின் பாடப்பிரிவுகளையே சென்னை, திருச்சி போன்ற வெளியூர்க் கல்லூரிகளில் சேர்ந்து படித்த நம்மூர்வாசிகளின் பிள்ளைகள் ஏராளம். அதற்கு சொல்லப்பட்ட காரணம் அதிராம்பட்டினத்தில் படித்தால் இங்க்லீஷ் டெவலப் ஆகாது என்பதே. ஆனால் உற்று நோக்கினால் அதிரையிலே பிறந்து அதிரையிலேயே படித்து வளர்ந்தவர்கள்தான் பேராசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பரிணமித்தார்கள். வெளியூர்க் கல்லூரிகளில் போய் படித்தவர்கள் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.//

100% உண்மை...

வெளியூர் பள்ளி கல்லூரிகளில் சாதித்தவர்களைவிட உள்ளூர் பள்ளி கல்லூரில் படித்து சாதித்தவர்களே அதிகம். நண்பன் அஹமது அமீன் (B. Ahamed Ameen), என் பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்.

KALAM SHAICK ABDUL KADER said...

//நீங்கள் பள்ளிக் கூடத்தில் படிக்கிற காலங்களில் நோட்டு புத்தகங்களின் கடைசிப் பக்கங்களில் கவிதைகளை எழுதி வைத்திருப்பதைப் படித்து ரசித்து இருக்கிறேன்...//

தங்களின் எழுத்தோவியம், கவித்துவத் தூரிகையால் வரையப்பட்டதைக் கண்டு, அடியேன் கணித்தேன், தாங்கள் ஒரு கவிஞராக- மூப்புக் கவிஞராக இருந்திருக்க வேண்டும் என்று. டாக்டர் இப்ராஹிம் காக்கா அவர்கள் உண்மையை உலகுக்கு அறிவித்தமைக்கு மிக்க நன்றி- ஜஸாக்கல்லாஹ் கைரன்.
எங்களை வழிநடத்திச் செல்லவும், எங்கள் கவிதைகளில் பிழைத் திருத்தம் செய்து தரவும் எங்கட்கு மற்றுமோர் ஆசான் கிட்டியது அதிரை நிருபர்த் தேடிக் கொடுத்த செல்வமாய்க் கருதி அவர்கட்கும் எங்களின் நன்றி-ஜஸாக்கல்லாஹ் கைரன்.

தோண்டத் தோண்ட இப்படிப்பட்ட அறிவுச்சுரங்கங்கள் இன்னும் எத்தனை உளவோ?
அன்புச் சகோ. அஹ்மத் அமீன் கருத்துரைக்கு இன்னும் எத்தனையோ பேர்க்ளைச் சான்றுகளாகக் கூறலாம். அடியேனுக்கும் 1 ஆம் வகுப்பு முதல் புகுமுக வகுப்பு வரை, அதிரைப்பட்டினத்தில் படித்த அடிப்படைக் கல்விதான் ஆதாரம் என்பேன். புகுமுக வகுப்பில் (`1974 ) புதிதாக வணிக இயல் பாடம் தொடங்கியதால் பி.காம் பட்டப்படிப்பு அத்தருணத்தில் இல்லாமல் இருந்ததாலும், என் வாப்பா அவர்களின் வணிகம் திருவாரூரில் இருந்ததாலும் என் பட்டப்படிப்பை-வணிக இயல்-பி.காம்- திருவாரூரில் படிக்க வேண்டியாதாகி விட்டது. இப்பொழுது நம் அதிரைப்பட்டினத்தின் கா/மு.கல்லூரியில் எம்.காம். வகுப்பு இருப்பது அறிந்து நம் காலத்தில் இல்லாமல் போனாலும், இப்பொழுதுள்ள அதிரையர்கள் பயன்பட முடியும் என்று நம்புகிறேன். ஆனால், இக்கட்டுரை ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்ட வண்ணம், நம் அதிரையர்கட்கு இக்கல்வி மரத்தின் கனிகளைப் புசிக்க விரும்பாமல் வெளியூரகட்குச் சென்று பணத்தையும் நேரத்தையும் வீணாக்குவது மட்டுமல்லாமல், வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பதையும் விட்டு விட்டனர் என்பது மறுக்க-மறக்க-மறைக்க முடியாத பேருண்மை ஆகும்.

Unknown said...

அன்பும் பண்பும் கொண்ட அருமை உள்ளங்களே! அஸ்ஸலாமு அலைக்கும். நான் எதிர்பாராத நிலையில் வரவேற்று மயிலிறகு விசிறிகொண்டு என்னை நீங்கள் 'தாக்கிய' தாக்கு என் கண்ணில் ( அந்த காலத்து) காவிரி பொங்கி வழிந்தது . உங்கள் பாராட்டுகளும் வரவேற்பும் '75' வயது குழந்தைக்கு நீங்கள் ஊட்டிய தாய்பால் என்பதற்கு அப்பாலும் உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று திகைக்கிறேன். இருந்தாலும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம் அஸ்ஸலாமு அலைக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம்...

//நீங்கள் 'தாக்கிய' தாக்கு என் கண்ணில் ( அந்த காலத்து) காவிரி பொங்கி வழிந்தது .///

ஹா ஹா ! அந்த(காலத்து) காவேரிக்கு பட்டு உடுத்தி பவனி வரச் செய்வதிலும் நீங்களே வல்லவர்(கள்) என்பது உங்களின் 7(க்கும்).5(க்கும்) நடுவில் நீங்கள் பெரிய புள்ளி வைத்திருக்கிறீர்கள் ! :)

விரைவில் மற்றுமொரு பதிவில் இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் வாருங்கள் ! :)

Anonymous said...

ஜஷாக்கல்லாஹ் ஹைர் காக்கா,
தொடர்ந்து எழுதுங்கள்!

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!!
எனது அன்பு சிறிய தந்தையே!!!
எப்போது எல்லாம் உங்களுடன் பேசுவேனோ அப்போதெல்லாம் என் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். உங்களுடைய மாற்றி யோசிக்கும் மனப்பாங்கும், முற்போக்கு எண்ணங்களும், சமகாலத்தவர்களை விட எதிர்கால உலகம் பற்றிய உங்களின் முன்னறிவும் என்னைப் பல சந்தற்ப்பங்களில் வியக்க வைத்துள்ளது..
தாங்கள் ஒரு சிறந்த பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியும். சிறந்த படைப்பாளி என்பது இதன் மூலம் எல்லோருக்கும் அறிய வரும்போது எங்களுக்கெல்லாம் ஆனந்தமாக உள்ளது.
Please share your experience and your rational views about our community and the customs we are blindly following. The eloquent and lucid style of your writing is really amazing. I know that you never compromise yourself to any wrong doing.
May Allah Bless you and enable you to contribute more and more to enlighten the youth of this forum.
Jazaakkallahu Khairan.
Wassalam
N.A.Shahul Hameed

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு மேதை கண்ட பாதையில் அவர்களின் பிள்ளைகள் நடப்பதே முதல் வெற்றி! பின் அதை மற்றவரையும் தொற்றி தொடருவது இறைவனின் வரம்.அனுபவத்தின் பிரதிபலிப்பு இந்த ஆக்கம்! அதில் சமுதாயத்தின் மேல் கொண்ட ஏக்கம் அதிகமாய் இருப்பதால்... மெல்ல குளிர்கிறது படிக்கும் தோறும். இன்னும் எழுதனும் இந்த பாருக்கு என்பதை பாரூக்காக்காவிடம் வேண்டுது மனம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு